முதற்குறிப்பு: அளவெட்டி, வீரகத்திக்கும் தெய்வானைக்கும் ஏழு பிள்ளைகள். அவர்களுக்கு முதற்பிள்ளை பெண்! தம்பதியினரின் நிறைவுக் குழந்தையும் புதல்வியே ஆனாள்! இடையில் ஐவர், ஆண்பிள்ளைகள். 'பஞ்ச பாண்டவர்' என்று ஊரில்  அவர்களைச் சொன்னார்கள். நாகமுத்து என்னும் முதற்பிள்ளையின் இளைய மகனாக வந்துதித்தவர் பெயர்: அருணாசலம். இளைய மகளான விசாலாட்சியின் மூத்த மைந்தன், வாமதேவன். அருணாசலமும் வாமதேவனும் ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி. அருணாசலத்துக்கு இரண்டு பிள்ளைகள்: மூத்தவள் பெண்.(சியாமளா) அடுத்து ஆண்.(இரவி) அவ்வாறே வாமதேவனுக்கும். மூத்தவள் தமிழினி என்றானவள். வலவன், இளையவன். அஃதோர் ஒற்றுமை. ஆலமரத்துக்கும் அப்பாலான பெரிய மரம், வீரகத்தி குடும்பம். அக்குடும்பத்தினர் முழுமையாக வாழ்ந்த இடம்: அளவெட்டி வடக்கில் இலகடி என்னும் குறிச்சி. இனித் தொடருங்கள்.    
   
வாமதேவுச் சித்தப்பா என்றால் எனக்கு இரண்டு விசயங்கள் நினைவுக்கு வருகின்றன. 1964, 65ஆம் ஆண்டுகளில் நாங்கள் அளவெட்டி, இலகடியில் வசிக்கிறோம். எனக்கு நாலைந்து வயது. வாமதேவுச் சித்தப்பா வீட்டையும் எங்களது வீட்டையும் ஒரே வேலியே பிரிக்கிறது. அவர்களும் நாங்களும் புழங்குகின்ற பொதுக்கிணறு நாம்பிரான் கோயிலடியில். சித்தப்பா கொழும்பிலோ எங்கேயோ வேலை. விடுமுறைக்கு வீடு வந்தால் காலையிலேயே பொதுக்கிணற்றில் குளித்துவிடுவார். அதற்குமுதல் குளிப்பதற்காக அவர் செய்கின்ற சடங்கு பெரிது. அதிலொன்று பல்லுத் தேய்த்தல்.

அப்போதெல்லாம் நாங்கள் அடுப்புக்கரியில் பல்லுத் தேய்த்தோம். அது பின்னர் உமிக்கரியானது. அதுவும் பிறகு உப்புடன் அரைத்த உமிக்கரி! கோபால் பற்பொடிக்கு வரவே ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. எனது பதினேழு வயதின்பிறகே பற்பசையில் நான் பல்லுத் தேய்த்தேன். 'பல்லுத் தேய்த்தேன்' என்று சொல்வது தமிழுக்கு அழகல்ல; 'பிரஷ்' பண்ணினேன்! ஆனால், எனது நாலைந்து வயதிலேயே சித்தப்பா, பற்பசையில் 'பிரஷ்' பண்ணுவதை நான் பார்த்தேன். பற்பசை என்றால் அப்போது 'சிக்னல்' (Signal) என்ற பற்பசைதான் பிரசித்தம். ஆனால் சித்தப்பா பயன்படுத்தியது, 'போர்ஹான்ஸ்' (Forhans) பற்பசையை. அதனைத்தான் பல்வைத்தியர்கள் சிபாரிசு செய்ததாகச் சித்தப்பா எனக்குப் பெருமையுடன் சொன்னார். அப்படிச் சொன்னபோது அவரது பற்கள் மிக வெண்மையாக இருந்தன.  நான், அவர் 'பிரஷ்' பண்ணுவதை 'ஆ'வென்று வாயை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அதனைச் சொன்னார்.

நான் பற்பசையில் 'பிரஷ்' பண்ணுவதை முதலில் கண்டதே அவரிடம்தான். 'கொளகொள'வென்று வாயில் வெண்மையாக நுரை! வாய்க்குள் பல்லு இருப்பதும் தெரியாது; பல்துலக்கி (Brush - பிரஷ்) இருப்பதும் தெரியாது! வாய் நிரம்ப வெண்ணுரை! பளிச்சென்று, வேலிக்கரையோரம் சிவப்பு நிலத்தில் துப்புவார். சிவப்புநிலத்தில் வெண்ணுரைக் குவியல்!

மினைக்கெட வேண்டாம், இரண்டாவது விசயம்: அவர் அநேகமாக அளவெட்டிக்கு வருவது, இலந்தை பழுத்து மணம் வீசுகின்ற சிவராத்திரிக் காலங்களில். அம்மாள் கோயில் திருவிழாக் காலங்களிலும் வருவார் என நினைக்கிறேன், ஞாபகமில்லை. நித்திரை முழித்து, விரதம் பிடிப்பதற்காக அவர் வருவதில்லை. சிவராத்திரிக்கு ஒரு விழா, அளவெட்டியில் இலகடியில் சீனங்கலட்டிப் பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது. சிவராத்திரிக்கு விடியவிடிய, முழித்துமுழித்துப் பார்க்க அந்த விழாவினை சிவநீர்க்கலைமன்றம் நிகழ்த்துகிறது. சிவநீர்க்கலைமன்றம், அப்போது இலகடியில் இருந்த இளைஞர்களால் தொடங்கப்பெற்றது. எப்போது தொடங்கப்பெற்றது, யார்யார் அதில் இருந்தார்கள் என்ற விபரம் எதுவும் எனக்குத் தெரியாது. அப்போது நான் சிறுவன், மிகமிகச் சிறுவன், சின்னப்பயல்!

பிறகு நான் கேள்விப்பட்டேன்: அப்புலிங்கமாமா, வாமதேவுச் சித்தப்பா, தவராசத்தான்.. என்று இலகடியில் இருந்த இளைஞர்கள் பலர் அதனைத் தொடங்கியதாக. அயலில் இருந்த வேறு பல இளைஞர்களும் அதனை ஆதரித்ததாக. (இளைஞர்கள் என்று ஆண்களை மாத்திரம் குறிக்கவில்லை என்பதனைக் கவனத்தில் கொள்க.) 'சிவநீர்' என்று ஏன் பெயர் வந்தது? அப்புலிங்கமாமாதான் அதன் நிறுவனர் என்று சொன்ன சின்னக்கிளிமாமா, அதற்கான காரணத்தைச் சொன்னார்: 'அப்பு' என்றால் நீர்; 'லிங்கம்' என்றால் சிவம்! ஆகவே 'அப்புலிங்கம்' என்றால் 'சிவநீர்'! கணக்குச் சரியல்லவா?

சிவநீர்க்கலைமன்றம் நிகழ்த்துகிற சிவராத்திரிக் கலைவிழாவில் பாட்டு, நடனம், நாடகம், ஒற்றை நாடகம்... என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான முன் ஆயத்தங்கள் செய்ய இரண்டு மாதங்கள் வேண்டும் என்று நாதமணியண்ணர் சொல்கிறார். ஆனால் ஒருமாதம்தான் எப்படியோ கிடைக்கிறது. ஏனென்றால் தைப்பொங்கல் முடிந்தபின்னரே எதனையும் செய்யலாம். கார்த்திகைவரை மழை பொழிந்து, மார்கழியிலும் எப்படியோ தூறிக்கிடக்கிறது. அல்லது சிணுங்கவாவது செய்கிறது. மழையினால் வானத்திலுள்ள தூசி, புழுதி கரைந்து தைப்பொங்கலன்றுதான் பளிச்சென்று சூரியன்! அதன்பிறகுதான் சிவராத்திரிக்கு ஆயத்தம்!

கியூட்ரெக்ஸ், லிப்ஸ்டிக், பொண்ட்ஸ் பவுடர், குட்டிக்குரா பவுடர், சாந்துப்பொட்டு, அத்தர்... இவற்றின் மணங்கள் வீசியபடிதான் கலைவிழாவுக்கான ஒத்திகைகள் நடைபெறுகின்றன. ஒத்திகைகள் நடக்கிற இடங்கள்: வாத்தியாரப்பு வீடு, பெரியத்தையின் மேல்வீடு, குஞ்சாச்சி வீடு. ஆனால் முக்கியமான முன் ஆயத்தம், கடையப்பு வீட்டில் நடைபெறுகிறது. ஆண்கள்தான் பெண் வேடமணிகிறார்கள். அதிலும் சின்னக்கிளிமாமா, பெண்வேடமணிந்து "ஆடாமல் ஆடுகிறேன்.. பாடாமல் பாடுகிறேன்..." என்று ஆடினால் உருகாதார் யார்? அந்த வயதில் அது சின்னக்கிளிமாமா என்று நான் அடையாளம் கண்டிருக்கமாடடேன். ஒத்திகை பார்த்தததனால் மாத்திரமே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அதுமாத்திரமல்ல, பெண்களுக்கான முடிமயிரைத் தயாரிப்பதில் சின்னக்கிளிமாமாதான் முன்னுக்கு நிற்கிறார். இவருக்கு உதவியாக நாதமணியண்ணர், கலாண்ணர், குமாரத்தான்... இவர்கள் கீரிமலைக்குப் போய் கற்றாழை வெட்டி வருகிறார்கள்.

   "பக்கத்துவீட்டு பருவ மைச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்..." என்று நாதமணியண்ணை பாடியபடி கொண்டுவந்த கற்றாழைகள் வெய்யிலில் காய்கின்றன, நிறைய நாட்களாகக் காய்கின்றன. பிறகு உடுப்புத் தோய்க்கிற கல்லில் அடித்து அடித்துத் துவைக்கிறார், சின்னக்கிளிமாமா. நீண்ட நீண்ட தும்பாக வருகின்றன, கற்றாழைகள். கறுப்புமையில் அவற்றைத் தோய்த்துத் தோய்த்து எடுத்துக் காயவைக்கிறார். காய்ந்தபின்னர் மீண்டும் கறுப்புமையில் தோய்ந்து காய்கின்றன கற்றாழைத் தும்புகள்.

   ஒருகிழமையில்லை, நீண்ட கூந்தல்! முடிமயிர் தயாராகிவிட்டது. சின்னக்கிளிமாமா அதனைத் தலையில் வைத்துப் பார்க்கிறார்... கழுத்தை வெட்டி, தலையில் நடனம் ஆடிப் பார்க்கிறார்... "கோடிக்கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்... கொஞ்சும் சலங்கை கலீர்கலீர் என ஆடவந்த தெய்வம்..." என்று மெல்லப் பாடி ஆடுகிறார்... காதில் ஒரு சிமிக்கி அணிந்தால் சரி! அழகி!  குண்டி நீளத்திற்கு நீண்ட கூந்தல்!

   அப்படி நீளக்கூந்தல் வைத்தபடிதான் சின்னப்பிள்ளைகளான பேபியக்காவும் (சூரியர்களா - சென்னை சூர்யா மருத்துவமனை உரிமையாளர்) பபாக்காவும் (சந்திரகலா) டான்ஸ் ஆடினார்கள். "கொஞ்சிக் கொஞ்சிப்பேச மதி மயங்கும் வஞ்சகரின் உலகம்..." என்று குஞ்சத்தாச்சியும் வசந்தாத்தாச்சியும் பாடிய பாட்டுக்குத்தான் அவர்களுடைய ஆட்டம்!

   "யார் என்ன சொன்னாலும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்.." என்று தியாகேஸ்வரத்தான் தாடியும் ஒட்டி, தனி ஒருவனாய் 'சோக்கிரட்டீஸ்' நாடகம் நடிப்பார். அதை நாடகம் என்று சொல்ல இயலுமோ தெரியாது. ஏனென்றால் அவர் மாத்திரம்தான் மேடையிலை. 'தனி நடிப்பு' என்று சொன்னார்கள்.  நடிப்பிலை அவர் விண்ணன்தான். அதுவும் சிவாஜி மாதிரி நடிக்க அவர் ஒருத்தர்தான் இருக்கிறார். 'நிர்மலா' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் தெரிவு செய்யப்பட்டு, பிறகு வேறை ஒருத்தர் நடித்தார். 'வெண்சங்கு' திரைப்படத்துக்கும் அவர் கதாநாயகனாக நடிக்கப் போயிருக்கிறார். இதிலெல்லாம் நடித்திருந்தால் 'ஈழத்துச் சிவாஜி' அவர்தான்.  அவர் அளவெட்டி; எனக்கு அத்தான்! பிறகென்ன?

௦௦௦௦௦

   நாகலிங்க அண்ணாவியார் இருந்த இடம்தான் குரும்பகலட்டி. அண்ணாவியார் என்றால் வேறு யார், கூத்துப் பழக்குகிறவர். அவரது கூத்தில் 'காத்தவராயன் கூத்து'தான் அப்பாவை ஓடியோடிப் பார்க்கவைக்கிறது. அப்படி அப்பா கூத்துப் பார்க்கிறபோது அம்மாள் கோயில் இருக்கவில்லை. அந்த இடத்தில் காத்தவராயன் கோயில்தான் இருந்தது. வேள்விக்கூட நடந்தது என்று அப்பா சொன்னார். காத்தவராயன் கோயிலில் காத்தான் கூத்து அல்லால் வேறு எது நடக்கும்? சிதம்பரப்பிள்ளையப்பாதான் உடுக்கு அடிக்கிறார். உடுக்கு அடித்தால் உரு ஆடாமல் என்ன செய்யமுடியும்? போதாதற்கு ஐயாத்துரையப்புவின் கரகாட்டம்! இரண்டும் அம்மாளுக்குப் பிடித்தமானது அல்லவோ!


   ஆனால் நாகலிங்க அண்ணாவியார் பிறகொரு பிழை விட்டுவிட்டார். அவர் காத்தான் கூத்து ஆட விரும்பவில்லை. அவர் விரும்பவில்லை என்றல்ல, சனங்கள் விரும்பவில்லை. 'சின்னமேளம்' என்கின்ற சதிர் ஆட்டம் வந்தால்தான் அம்மாள்கோயில் இரவுத் திருவிழாவுக்குச் சனம் நிரம்பி வழியுது.

   அதனால் அண்ணாவியார் என்ன செய்தாரென்றால், தமிழ்நாட்டுக்கு வள்ளம் ஏறினார். தஞ்சாவூர், கும்பகோணம்.... என்று மேய்ந்தார். அங்கு சதிர் ஆட அழகான பெண்கள் இருந்தனர். அவர்கள் தாசிகுலம் என்றும் அப்பா சொன்னார். ஒரு சோடி அழகான பெண்களை அண்ணாவியார் அழைத்து வந்தார். 'விலாசினி செற்' என்கிற மாதிரி ஒரு பெயர் வைத்து, ஊரூராகக் கோயில் திருவிழாக்களுக்குக் கூட்டிப் போனார். சின்னமேளம் என்றால் அவருடைய 'செற்றுக்கு' யாழ் குடாநாடெங்கும் பெரும் 'கிராக்கி' இருந்தது.  அதன்பிறகு அவர் ஏன் கூத்துக் கட்டப் போகிறார்? 'காத்தான் கூத்து' அதன்பிறகு நாகலிங்க அண்ணாவியாரால் நடத்தப்பட்டதே இல்லை!

௦௦௦௦௦

   நாகலிங்க அண்ணாவியாரின் பேரன் முறையானவர், வடிவேல். உருவமும் அச்சு அசல் அவரேதான். படச்சட்ட மேடையில் வடிவேல், நகைச்சுவை நடிப்பால் மேடையையே ஆக்கிரமிப்பார். இவர் 'இன்ன' நாடகமன்றத்துக்குத்தான் சொந்தமானவரென்று இல்லை! யார் கூப்பிட்டாலும் நகைச்சுவை நடிகராக மேடையில் ஏறுவார். நாடகம் பார்க்கும் சனங்களின் சிரிப்புக்குப் பஞ்சமில்லை.   வடிவேலண்ணரின் 'மறுத்தான்' நாடகங்களை யார் பார்த்தார்களோ தெரியாது, நான் பார்த்தேன். அப்போது சுண்டுக்குளி யாழ் கலாமன்றத்தின் 'அடங்காப்பிடாரி' நாடகம் யாழ் குடாநாடெங்கும் இரசிகர்களால் வெகுவாக இரசிக்கப்ப ட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கண்டது என்று சொன்னாலும் பிழையில்லை. அதில் வரும் "சவுக்காரக்காரி என் காலடியில் வந்து விழ..." என்ற மந்திரத்தை அப்போது உச்சரியாதோர் வெகு சிலர்.

   வடிவேலண்ணரின் 'மறுத்தான்' நாடகம் அதற்கும் வந்தது. 'அடங்காப்பிடாரி' என்றால் அதற்கு 'மறுத்தான்' ஆக 'அடங்காப்பிடாரியை அடக்குவேன்' என்ற நாடகத்தை எழுதித் தயாரித்து நடித்தார். 'அடங்காப்பிடாரி' நாடகத்துக்குச் சற்றும் குறைவில்லாத சிரிப்பை இந்த நாடகமும் தந்தது.

   அரியாலை திடீர் நாடகமன்றம் 'வெளிக்கிடடி விசுவமடுவுக்கு' என்ற நாடகத்தைத் தயாரித்து வழங்கியிருந்தது. அந்நாடகமும் ஆயிரம் மேடையாவது கண்டிருக்கும். அதற்கும் வடிவேலண்ணரின் 'மறுத்தான்' நாடகம் இருந்தது: 'போவியோடி விசுவமடுவுக்கு'

   திரைப்படத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவ்வாறு 'மயங்குகிறாள் ஒரு மாது' திரைப்படம் வெற்றிகரமாக யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் ஓடிய சமயம், வடிவேலண்ணரின் 'மறுத்தான்' நாடகம்: 'மடக்குகிறாள் ஒரு மாது' 

௦௦௦௦௦

   வடிவேலண்ணர் போன்று நகைச்சுவை நடிகர்களுக்கு அளவெட்டியில் பஞ்சமில்லை. பாலச்சந்திரன், திருநாவுக்கரசு, தங்கரத்தினம்...  

   அப்போது 'புளுகர் பொன்னையா', 'புரோக்கர் கந்தையா' போன்ற 'ஒருவகை' நாடகம் நடந்துவந்த சமயம், அளவெட்டியிலிருந்தும் அவ்வாறான ஒரு நாடகம் வந்திருந்தது: 'அப்பலோ ஆறுமுகம்' என்பது அதன் பெயர். அது முன்னர் 'ஆல்ரவுண்டர் ஆறுமுகம்' என்றும் பெயர் பெற்றிருந்தது. பாலச்சந்திரன் அதனை எழுதித் தயாரித்து நடித்திருந்தார். அப்போது எழுதித் தயாரிப்பவர்கள்தான் கதாநாயகனாக நடிப்பார்கள் என்பது பொதுவிதி. இயக்குனர் என்கின்ற பெயரில் நாடகத்தைப் 'பழக்குவது'ம் அவர்களேதான். இந்த விதிக்குப் பாலச்சந்திரன் மாறா என்ன?

   "பார்வதி கொஞ்சம் என்னைப்பார் இஞ்சை இஞ்சை இஞ்சை
   பார்வதி கொஞ்சம் என்னைப்பார்
   பால் பழம் தருவியா பட்டினி போட்டுக் கொல்வியா..."

என்றொரு பாடல், 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அமைந்த மல்லாரி மெட்டில் இருந்த பாடல். பாலச்சந்திரன்தான் பாடுவார். மனைவியாகத் தங்கரத்தினம். (குஞ்சன் மாமா) அவர் மீசையை மழிக்க வெட்கப்பட்டு, மீசை இருந்த இடத்தில் 'பிளாஸ்ரர்' ஒட்டிவைத்து, 'ஏதோ காயம்' என்று சமாளிப்பார்.      

   'ஆயிரத்தெட்டு' பாலச்சந்திரன்கள் நமதூரில் இருப்பதனால் இவர் பற்றிய சிறுகுறிப்பு: அளவெட்டி வடக்கில் வசித்த சின்னராசா என்கின்ற நாயன வித்துவானின் மூத்த மைந்தன் இவர்.  

௦௦௦௦௦

   யாழ் குடாநாட்டில் அதிக தடவைகள் மேடையேறிய நாடகங்கள் என்று பல இருக்கின்றன. காங்கேசன்துறை வசந்தகானசபா வழங்கும் வி.வி.வைரமுத்துவின் 'அரிச்சந்திர மயானகாண்டம்' நாடகம் ஆயிரம் தடவைகளுக்குமேல் மேடையேறியது என்று துண்டுப் பிரசுரத்தில் (Notice) அச்சடித்திருப்பார்கள். எங்களது அம்மாள் கோயில் நான்காம் திருவிழாவில் நானே அந்நாடகத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது வெறும் படச்சடட மேடை நாடகமல்ல; இசைநாடகம். அப்பா அதனைக் 'கூத்து' என்கிறார். 'கூத்து' என்றால் 'குதித்து ஆடுதல்' இந்நாடகத்தில் 'குதித்து ஆட' ஒன்றுமில்லை. ஒரே பாட்டு. அதனால் இசை நாடகம் என்பது பொருத்தமே.

   "அப்பா புலந்திரனே அருமைக் கண்மணியே
   இப்பாரில் பாவி ஆனேன் எடா, மகனே..."

   என்று வி.வி.வைரமுத்து, அரிச்சந்திரனாக நின்று சுடலையில் பாடும்போது, நானே மனம் கசிந்து அழுதிருக்கிறேன். அவ்வாறெனில் இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்குமேல் மேடையேறாமல் எப்படி இருக்கமுடியும்?

   வி.வி.வைரமுத்து, 'சம்பூர்ண அரிச்சந்திரா' என்ற இசைநாடகத்தையும் படைத்திருந்தார். ஆனால் 'அரிச்சந்திர மயானகாண்டம்' அளவு இந்நாடகம் மேடையேறியதில்லை. 'அரிச்சந்திர மயானகாண்டம்' நாடகம் என்றால் நாலாம் திருவிழாவில் சனக்கூட்டமும் அதிகம்தான். லாம்பு, பாய்... சகிதம் கீரிமலையிலிருந்தும் சனம் திரள்கிறது. சீனியாச்சி, சின்னகப்பேத்தி... ஆகியோரும் கீரிமலையிலிருந்து வந்தாலும் லாம்பு, பாய்.. அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. அவர்கள் அம்மாவிடம் புட்டு வாங்கித் தின்றுவிட்டு, தலைவாசலில் படுத்துவிட்டு, சாமம்போல 'அரிச்சந்திர மயானகாண்டம்' பார்க்கப் போகிறார்கள்.

   சிவன், பிள்ளையார், அம்மன், முருகன்... போன்ற பெருந்தெய்வக் கோயில்களில் கூத்து (அப்படித்தான் அப்பா சொல்கிறார்)  நடைபெறுவதில்லை. தவில் - நாயனக் கச்சேரி, சதுர்க் கச்சேரி (சின்னமேளம்), இசைக்குழு (கோஷ்டி)... ஆகியன நடைபெறுவதற்குத்தான் பெருஞ்சாதிக்காரர் அனுமதி தருகிறார்கள். ஆனால் அம்மாள் கோயிலின் நாலாம் திருவிழா பெரும் விதிவிலக்கு. குடாநாட்டில் வேறெங்கும் இப்படி நிகழுமா என்பது சந்தேகமே. அதாவது பெருந்தெய்வ வழிபாட்டுக் கோயில் திருவிழாக்களில் இப்படி நிகழ்ந்ததாக நான் அறியவில்லை.

   காரணம் என்ன, அம்மாள் கோயில் ஆதியில் காத்தவராயர் கோயிலாக இருந்தமைதான் காரணமோ? காத்தவராயர், சிறுதெய்வ வழிபாட்டுக்கு உரியவர்தானே?

   ஆனால் 1971ஆம் ஆண்டு (என நினைக்கிறேன். அல்லது 1970ஆ?) ஆணி மாதத்தில் வந்த அம்மாள்கோயில் திருவிழாவில் மூன்றாம் திருவிழாக்காரரும் கூத்துப் போடவேண்டுமென உறுதியாக நின்றார்கள். யாரும் சம்மதிக்கவில்லை. எனவே அவர்கள் மூன்றாம் திருவிழாவன்று அம்மாள் கோயிலுக்கு அயலில் உள்ள காணியில் கூத்துப் போட்டார்கள். ஆனால் அது வி.வி.வைரமுத்துவின் கூத்து அல்ல! காரைநகரிலிருந்து வந்த குழுவினர் 'பூதத்தம்பி' என்ற இசைநாடகத்தை நிகழ்த்தினார். இந்நாடகத்தில் யானை என்ற உருவம்கூட வந்தது. அதுதான் எனக்குப் பெரிய விசயம்.

   இவ்வாறு நடப்பதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்? அரசியல்! அரசியல்தான் காரணம்! விரிவஞ்சி அதனைத் தவிர்க்கிறேன். விபரம் அறிய விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

௦௦௦௦௦

   அப்போது 'அடங்காப்பிடாரி' நாடகமும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடை கண்டது. சுண்டிக்குளி யாழ் கலாமன்றம் வழங்கிய நாடகம் அது. அரியாலை திடீர் நாடகமன்றம் வழங்கிய 'வெளிக்கிடடி விசுவமடுவுக்கு', 'தம்பி கொழும்பிலை' ஆகிய நாடகங்களும் நூற்றுக்கணக்கான மேடை ஏறின.

   இந்தச் சமயத்தில்தான் ஐநூறு தடவைகளுக்கு மேல் மேடையேறிய நாடகம் ஒன்று அளவெட்டியிலிருந்து அரங்கேறியது. அது: அளவெட்டி பாரதி கலாமன்றம் வழங்கிய 'வடக்கும் தெற்கும்' என்ற நாடகம். முற்றிலும் சினிமாப்பாணியில் அமைந்த முதல் நாடகம் என்றும் இதனைக் கூறலாம். எழுத்தோட்டம்போல (Title Card) நடிகர்கள் அறிமுகமாவார்கள். நாயகனும் வில்லனும் வாளை உருவும்போது, 'இடைவேளை' என்ற எழுத்துக்களுடன் மட்டையொன்று விரியும். தீப்பந்தச் சண்டைக்காட்சிகள் யாவும் சினிமாப்பாணியில், படச்சட்ட மேடையில் அமைந்தன. படச்சடட மேடையில் ஒரு சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வே பலருக்கும் எழுந்தன. அதனால்தான் அது ஐநூறு தடவைகளுக்குமேல் மேடையேறியது.

   இது சரித்திர நாடகம் என்று சொன்னாலும் ஒருவகையில் அரசியல் நாடகமே. அதுவும் இலங்கை அரசியலைக் குறியீடாகக் கொண்ட ஒரு நாடகம். ஒரு நாட்டில் வடக்கு என்றும் தெற்கு என்றும் மக்கள் பிரிந்து நிற்கிறார்கள். இவ்வாறு பிரித்து வைப்பது ஒரு சாராரின் சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியை வென்று இரு பக்கத்து மக்களையும் ஒன்றிணைப்பதே நாயகனின் பணி. இப்போது இதன் அரசியல் புரியும் என நினைக்கிறேன். தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி, சூழ்ச்சியால் பிரித்து வைக்கிறது. அச்சூழ்ச்சியை முறியடித்து ஒரு கட்சி அவர்களை ஒன்றிணைக்கிறது. அந்தக் கட்சி எது? மொஸ்கோ சார்புக் கொம்மியூனிஸ்ற் கட்சியே அது. ஏனென்றால் இக்கதையை எழுதியவர், தோழர் வ.பொன்னம்பலம் என்று அறியப்படுகிறார். அவர் மொஸ்கோ சார்புக் கொம்மியூனிஸ்ற் கட்சியைச் சேர்ந்தவரே.

௦௦௦௦௦

   பெரியவிளான் இலங்கேஸ்வரி இளைஞர் நாடகமண்றம் என்ற ஓர் அமைப்பு, குடாநாடெங்கும் சமூக நாடகங்களை மேடையேற்றித் திரிந்தது. நல்லசூடு, சரியா தப்பா, வேலை வணங்குவதே வேலை... என்று அவ்வமைப்பின் நாடகங்கள். சமூக சீர்திருத்த நாடகம் என்றும் அதனைச் சொன்னார்கள். மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள் அவை.

   பின்னர் அவ்வமைப்பு 'மின்னல்' என்றொரு நாடகத்தைத் தயாரித்தது. இந்நாடகத்தில் ஒரு புதுமை: இரண்டு மேடையில் அந்நாடகம் நடைபெறும். இரண்டு மேடைகளும் அருகருகே அமைந்திருக்கும். ஒருமேடையில் ஒரு காட்சி நடைபெறும்போது மற்றைய மேடையில் அடுத்த காட்சிக்கான ஆயத்தங்களைச் செய்வார்கள். 'ராஜமைந்தன்' என்றொரு சரித்திர நாடகத்தையும் அவர்கள் தயாரித்தார்கள்.
   இவர்களது அனைத்து நாடகங்களிலும் மூவர், முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். சி.ரி.மகான், நாகேஸ்வரன், சிவராசா.. இவர்களில் சிவராசா(அண்ணை) எங்களது வீட்டுக்குப் பக்கத்து வீடு. ஒவ்வொருநாளும் அவரது தோட்டத்திலிருக்கிற அட்டாளையிலிருந்து அவரது நாடக அனுபவங்களைக் கேட்பேன். நாடக வசனங்களைப் பேசச்சொல்லிக் கேட்பேன். ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் வசனங்களை, பக்கத்தில் இருக்கிற என் வீடு போகும்வரை நானும் பேசிப் பார்ப்பேன். என்னால் பேசிவிட முடியாது. ஆனாலும் முயல்வேன்.... அது வேறு கதை.

   அனைத்து நாடகங்களிலும் சிவராசண்ணை வில்லனாகவே நடித்தார். கதாநாயகன் வேறுயார்? கதை, வசனம் எழுதி நாடகத்தைப் 'பழக்குகிற' சி.ரி.மகான்தான்! கதாநாயகி: நாகேஸ்வரன். மற்றவர்களுக்குத்தான் அவர் நாகேஸ்வரன். என்னைப் பொறுத்து அவர்: நடிகை பதமினி! அவ்வளவு அழகு; அவ்வளவு கவர்ச்சி. இப்போதும் "முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே..." பாடலைக் கேட்டால் நாகேஸ்வரன் அண்ணர்தான் - இல்லை - 'பதமினி'தான் என்னைக் கொன்று போடுவார்.

   அந்த உடல், எப்படிப் பெண்ணுடல் ஆகியதோ என்கின்ற ஆச்சரியம் இன்றளவும் என்னிடம் இருக்கிறது. அதுதான் அவருக்கு எமனும் ஆகியதோ? அப்போது நான் சின்னப்பிள்ளை, என்றாலும் சிலவற்றைப் புரிய முயன்றேன்: அந்தப் 'பெண்ணுடல்' தந்த உபாதை, அவரைத் தன்னைத்தானே மரித்துக்கொள்ளும்படி ஆக்கிவிட்டது.  ஒன்றைச் சொல்லவில்லையே, அளவெட்டி தந்த மகத்தான நாடகக் கலைஞர்களில் நாகேஸ்வரன் ஒருவர்!

௦௦௦௦௦

   தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கு, அளவெட்டி தந்த ஆற்றுகையாளர்களும் படைப்பாளர்களும் கல்வியியலாளர்களும் விளையாட்டு வீரர்களும் அதிகம். 'மகாஜனா தந்த மும்மணிகள்' என்று கனக செந்திநாதன் அவர்கள் குறிப்பிட்ட மூவரும் அளவெட்டியைச் சேர்ந்தவர்களே. அ.செ.முருகானந்தம், மஹாகவி (து.உருத்திரமூர்த்தி), அ.ந.கந்தசாமி என்ற மூவருமே அம்மும்மணிகள். இவர்களில் அ.செ.மு. ஏதும் நாடகம் எழுதியதாக நான் அறியவில்லை.

   மஹாகவி, ஈழத்துத் தமிழ் நாடகத்துறையில் ஆற்றிய பங்கு பெரிது. 'பாநாடகம்' என்பதில் முதல்வராக அவரே திகழ்கிறார். ஒருவகையில் பார்த்தால், தமிழின் நவீனத்துவமான பாநாடகத்தின் முதல்வரும் அவரே. 'முற்றிற்று', 'கோடை', 'புதியதொரு வீடு' என்று மூன்று முக்கிய பாநாடகங்களை அவரே யாத்தார். இவற்றுள் 'கோடை', 'புதியதொரு வீடு' ஆகிய பாநாடகங்களை அ.தாஸீசியஸ் அவர்கள் நெறியாள்கை செய்து அவைக்காற்றினார். அரங்க உணர்வுடனும் கவிதைச் சுவையுடனும் அரங்காற்றப்பட்ட இப்பாநாடகங்கள் தமிழுக்கே வளம் சேர்த்தன.

   "சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் போன்ற அவரது காவியங்களையும் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று போன்ற அவரது கவிதை நாடகங்களையும் பார்க்கும்போது, தன்னைச் சுற்றியுள்ள கிராமிய சமூகத்தையும் தனிமனிதர்களையும், அவரவரின் இயல்பும் முரண்பாடும் மாறுதலும் தேடுதலும் புலப்படும்படி அவர் எவ்வாறு சிருஷ்டித்துள்ளார் என்பது விளங்கும்..." என்கிறார் கவிஞர் சண்முகம் சிவலிங்கம்.  

   மற்றையவர் அ.ந.கந்தசாமி அவர்கள். "இவர் 'கடைசி ஆசை', 'அமர வாழ்வு' போன்ற குறுநாடகங்கள் எழுதியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. ஆயினும் 1967இல் கொழும்பில் நான்கு தடவைகள் மேடையேற்றப்பட்டு, பலத்த வாதப்பிரதிவாதங்களை ஈழத்து இலக்கிய உலகில் எழுப்பிய 'மதமாற்றம்' எனும் நாடகம், அவரது காத்திரமான பங்களிப்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கும். "இதுவே தமிழில் இதுவரை எழுதப்படட நாடகங்களில் ஆகச்சிறந்தது..." என்று கலாநிதி கைலாசபதி அவர்கள் குறிப்பிடுவார். கலாநிதி சிவத்தம்பி அவர்கள் முதலில் இந்நாடகத்தை நெறிப்படுத்தியிருந்தாலும் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில் வெளியானபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் கொழும்பில் பல தடவைகள் மேடையேறியது..." (நன்றி: வ.ந.கிரிதரன், 'பதிவுகள்' இணைய ஆசிரியர்)
   'மதமாற்றம்', வானொலி நாடகமாக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

   'மகாஜனா தந்த மும்மணிகள்' என்போரில் நான்காவது 'மணி'யாக யாவராலும் கருதப்படுபவர், கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை அவர்கள். மரபுக்கவிதைகளே இவரது பலம் என்பார்கள். ஆனால் தேர்ந்த நாடக ஆசிரியராக அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நாடகநூல்: 'பாரதம் தந்த பரிசு'. மாகாபாரதக் கதைகளை அடிப்படையாகக்கொண்ட ஐந்து நாடகங்கள் இந்நூலில் இருக்கின்றன. நாடகநூல் எழுதவேண்டும் என்று இதனை எழுதியவரல்லர், கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை. அவர் கற்பித்த பாடசாலையான தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் மாணவர்களுக்குப் 'பழக்க' என்று எழுதிய நாடகங்கள் இவை. இந்நாடகங்கள் தொடர்ந்து ஐந்து வருடங்களாக அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றன. இதனை மிகப்பெரும் சாதனையாகவே கருதவேண்டும். 

௦௦௦௦௦

   அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' வானொலி நாடகமாகவும் ஆனமைபற்றி மேலே ஒரு பந்திக்கு முன்னர் குறிப்பிட்டேன். ஆனால் வானொலிக்கெனவே நாடகம் எழுதி, அதுவும் மிகப்பெயர் பெற்ற நாடகமாக அமைந்து, பல்லோராலும் பாராட்டப்பட்ட ஒருவர் அளவெட்டியில் வாழ்ந்தார். அவர் பெயர்: ஞானசக்தி கந்தையா. அப்போது ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 9:30மணிக்கு இலங்கை வானொலி, தமிழ்ச்சேவை ஒன்று, ஒரு நாடகத்தைத் தயாரித்து வழங்குவதுண்டு. மாதத்திற்கு ஒரு சனிக்கிழமை இரவாவது ஞானசக்தி கந்தையாவின் நாடகம் ஒலிபரப்பாவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். நாடக ஒலிபரப்புக் குறித்து முன்னரே அறிவித்தல் வந்துவிடும். அன்று பின்னேரமே மகிழ்ச்சி ததும்பி நிற்க எங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

   ஞானசக்தி கந்தையாவின் நாடகப் பிரதிகள், அநேகமாக உளவியல் சிக்கல்களை அடிநாதமாகக்கொண்டு அமைகின்றன. காதலினால், காதல் தோல்வியினால், வேலையின்மையினால், தாழ்வுச் சிக்கலினால், திருமணம் ஆகாமையினால்... என்று இன்னோரன்ன சிக்கல்கள் இப்பிரதியில் அலசப்படுகின்றன. நறுக்குத் தெறித்தாற்போன்ற கூர்மையான வசனங்கள் இப்பிரதியின் பலம். ஞானசக்தி கந்தையா, பெண்ணாக இருந்தபோதிலும் அவரது பிரதியின் நாயகர் அநேகமாக ஆணாக அமைந்துவிடுவர். ஓர் ஆணாக நின்ற அப்பாத்திரப் படைப்பு வலு சக்தி மிகுந்ததாக அமைந்துவிடும். அப்போதில் வானொலி நாடகங்களில் ஞானசக்தி கந்தையாவின் பிரதியின் வலுவினை வேறு யாரின் பிரதியிலும் நான் உணரவில்லை.

   அவரது நாடகப் பிரதியிலிருந்து:

   "ஏன் உந்தத் தாடியை வளர்க்கிறாய்..."
   "நானென்ன தண்ணி ஊத்தியா வளர்க்கிறன்... அது தானா வளருது..."

௦௦௦௦௦  

அளவெட்டிக்கு நவீன நாடகத்தின் கூறுகளைக் கொண்டு வந்தவர் என்று என் நினைவுக்கு எட்டியவகையில் ஒருவரைக் குறிப்பிடுவேன். அவர்: க.ஆதவன். இவரை யாவரும் அறிவோமென்றாலும் ஆதாரத்திற்காக ஒன்று: மரபுவழி நாடகம் யாத்த கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை அவர்களின் மைந்தன் இவர்.

   அளவெட்டி வடக்கில் குறிப்பிட்ட சில இளைஞர்களைக்கொண்டு (அதில் நானுமொருவன்) 'சுமைகள்' என்ற நாடகத்தைப் 'பழக்கியிருந்தார்'. (பழக்கியிருந்தார் என்பதனை அரங்கு பற்றி எனக்கு ஏற்படட தெளிவிலிருந்துதான் குறிப்பிடுகிறேன்) இந்நாடகத்தில் நவீன நாடகத்தின் சில கூறுகள் அமைந்திருக்கின்றன என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும். 1978இல் இந்நாடகம் சில இடங்களில் மேடையேற்றப்பட்டது.
   இக்காலத்திற்குச் சற்றுப் பிறகாக, அளவெட்டியிலிருந்து வெளிக்கிட்ட இருவர் ஈழத்துத் தமிழின் முக்கிய நவீன நாடகங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தனர். அவ்விருவர்: ஜெயக்குமார், அமரநாதன். நாடக அரங்கக்கல்லூரி தயாரித்த நாடகங்களிலேயே இவ்விருவரும் நடித்திருந்தனர். அ.தார்சிஸீயஸ் பிரதி எழுதி, நெறியாள்கை செய்திருந்த 'பொறுத்தது போதும்' நாடகத்தில் தனது சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார், ஜெயக்குமார் அவர்கள். ஜெயக்குமார் இந்நாடகத்தில் பங்கேற்றது அளவெட்டிக்குப் பெருமை என அவ்வாலிப காலத்தில் நான் நினைத்தேன்.

   மௌனகுரு எழுதி, நெறியாள்கை செய்திருந்த 'சங்காரம்' நாடகமும் ஜெயக்குமார் அவர்களுக்கு அரங்காட இடம் கொடுத்தது. அதேசமயம் அமரநாதன் என்ற அளவெட்டி இளைஞனும் இந்நாடகத்தில் பங்கேற்றார். அப்போது இருவரைக் கண்டும் மெச்சினேன் நான்!

   முழுமையான நவீன நாடகங்களில் இவ்விருவர்!

௦௦௦௦௦

   அளவெட்டியிலிருந்து, 1980இல் நானும் இன்னும் சில நண்பர்களும் நாடக, அரங்கக் கல்லூரிக்குச் சென்றோம். நாடக,  அரங்கக் கல்லூரி என்பது நாடகத்துக்கும் (Drama) அரங்கத்துக்கும் (Theatre) பயிற்சிப் பட்டறை (Work Shop) நடைபெறும் இடம். பயிற்சிப் பட்டறை நடைபெற்ற இடம்: கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம். ஒவ்வொரு ஞாயிறும் காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை பயிற்சி நடைபெறும்.

   பயிற்சி தந்தவர்கள் இலேசானவர்கள் அல்லர். குழந்தை ம.சண்முகலிங்கம், அ.தார்சீஸியஸ், சி.மௌனகுரு, வி.எம்.குகராஜா...

   மூச்சுப் பயிற்சியிலிருந்து உணர்வு வெளிப்பாடுகள் வரை, உடல் பயிற்சியிலிருந்து அரங்க உணர்வுகள் வரை, பிரதி வாசிப்புப் பயிற்சியிலிருந்து உடல்மொழி வெளிப்பாடு வரை, குரலின் ஏற்ற இறக்கப் பயிற்சியிலிருந்து முகபாவனை வரை...

   அளவெட்டியிலிருந்து கோண்டாவிலுக்குப் போக எட்டு மைலுக்குக் குறைவு இருக்காது. எனவே போய்வர சுமார் பதினாறு மைல்கள். காலைநேர இதத்துக்குச் சைக்கிள் உழக்கக் களைப்புத் தெரியவில்லை. மதிய நேரத்துக்கு, பயிற்சி பெற்ற களைப்பும் கன்னத்தைத் தீய்த்துவிட்ட வெய்யிலும் வயிற்றைக் குடைகின்ற பசியும்... 'ஏன்தான் வந்தோமோ' என்று இருக்கும்.

   ஆனாலும் நாடகம், அரங்கு.. முதலானவற்றில் சிறப்பான பயிற்சி பெற்றோம். மாத்திரமல்ல, விழிப்புணர்வுடன் அரங்கையும்  நாடகத்தையும் அணுகக் கற்றுக் கொண்டோம். நாடகம் வேறு; அரங்கு வேறு என்று புரிந்துகொண்டோம்.ஆயினும்  நாடகமும் அரங்கும் ஒருசேரும் இடம் எது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறவில்லை. மேலாக, நாடகத்துடன் அரங்கு சரிவிகிதத்தில் இணைகின்றபோதுதான்அது 'நிகழ்த்துகலை' ஆகிறது என்ற உண்மையையும் தெரிந்துகொண்டோம். அவைக்கு ஆற்றப்படும் கலைகளில் (அவைக்காற்றுக்கலை - Performing Art) நாடகம் முதன்மையானது என்பதை புரிந்துகொண்டபோது ஒரு பெருமை எங்களுக்குக் கிடைத்தது.

   அளவெட்டியிலிருந்து நாங்கள் ஒன்றிரண்டு பேர் இவ்வாறு சிந்திக்கக் கற்றுக்கொண்டோம் என்பது பெருமையல்லால் வேறென்ன? நாடகத்திற்கு அளவெட்டியிலிருந்து கிடைத்த பங்களிப்பல்லவா இது!

௦௦௦௦௦

   எண்பதுகளின் தொடக்கம்: ஈழத்தமிழர், அரசியலில் வெவ்வேறு பரிமாணங்களைக் காணுகின்ற காலம். தேர்தல் அரசியலிலிருந்து விலகி, ஆயுத அரசியல் பரிணமிக்கின்றது. எங்கள் வயதில் அதில் ஈடுபடுகின்றோம். அதற்காக ஆயுதம் தூக்கினோம் என்றல்ல. அந்தப் போராட்ட வழிமுறையை ஆதரித்தோம்.

   அதன் ஓர் அங்கமாக எமது கலை, இலக்கியச் செயற்பாடுகள் அமைகின்றன. அந்நேரத்தில் 'புதுசு' என்றொரு சஞ்சிகையையும் வெளியிட்டிருந்தோம். இப்போது ஓர் அரசியல் பேசவேண்டியிருக்கிறது. 1977 பொதுத்தேர்தலில் 'தமிழீழத்துக்கான ஆணை' என்று போட்டியிட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, பெருவெற்றியீட்டியிருந்தது. ஆனால் அதே கட்சி, 1981இல் 'மாவட்ட அபிவிருத்தி சபை' என்பதற்கான தேர்தலில் ஈடுபடுகிறது.

   அதன் போலித்தன்மையை அங்கதச் சுவையுடன்(Satire) நாடகப் பிரதியாக எழுதினார், மாவை நித்தியானந்தன் அவர்கள். இந்நாடகத்தின் பெயர்: 'திருவிழா'

   அதனை அளவெட்டி ஞாயிறு படைப்பாளிகள் வட்டம், தயாரித்து மேடையேற்றித் திரிந்தது. பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியா காந்தீயம், பாவற்குளம், கிளிநொச்சி மே தினம் (1983)... என்று முப்பது மேடையேற்றங்களைத் 'திருவிழா' நாடகம் கண்டது. அங்கதச் சுவையுடன் கூடிய ஓர் அரசியல் நாடகம், இவ்வாறான வரவேற்பைப் பெற்றது பெரிய விடயமாகவே கருத வேண்டும். ஆயினும் சில இடங்களில் இந்நாடகம் கல்லெறி படத்தையும் குறிப்பிடவேண்டும். அதுவும்கூட இந்நாடகத்தின் வெற்றி!

   "பெரிய தேர்தல் சிறிய தேர்தல்
   குட்டித் தேர்தல் குஞ்சுத் தேர்தல்
   ஒன்று முடிய இன்னொன்று
   எந்த நாளும் திருவிழாதான்..."

   வீதிநாடகமாக, 'திருவிழா' அமைந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். 1983 மே தினத்தன்று, கிளிநொச்சி றொட்ரிக்கோ மைதானத்தில் மேதின நிகழ்வாக 'திருவிழா' நாடகமும் மேடையேற்றப்படவிருந்தது. கிளிநொச்சி காவல்துறை அதற்கு அனுமதிக்கவில்லை. உடனேயே அவ்விடத்தில் வ ட்டமாக மக்களைக் கூட்டி, நாடகத்தை நிகழ்த்தினோம். ஈழத்தமிழர் அரங்கில் முதலாவது வீதிநாடகமாக அவ்வாறே 'திருவிழா' அமைந்தது. ஆனால் 'திருவிழா' வீதி நாடகமேயல்ல, அது தற்செயல்!

   'திருவிழா'வினைத் தொடர்ந்து, அளவெட்டி ஞாயிறு படைப்பாளிகள் வட்டம் தயாரித்த இன்னொரு நாடகம்: 'உதாரணம் கல்கத்தா'. கிருஷன் சந்தர் எழுதிய வங்காளக் குறுநாவலை, செ.கதிர்காமநாதன், 'நான் சாகமாட்டேன்' என்று மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பாடுபொருளாகக் கொண்ட குறுநாவல் இது. இதனைக் கருவாகக் கொண்டு இளவாலை விஜயேந்திரன் எழுதிய நாடகப் பிரதியே 'உதாரணம் கல்கத்தா'

   "வீடு நெடும் தூரம் தூரமிருந்திங்கே
   பசியடக்க வந்தோம் கல்கத்தா
   கல்கத்தா ஓ.. கல்கத்தா
   வழிநெடுக நூறு சடலமிருந்தாலும்
   கடந்தபடி வந்தோம் கல்கத்தா
   கல்கத்தா ஓ.. கல்கத்தா"

   இந்நாடகமும் பேராதனைப் பல்கலைக்கழகம்... முதலான இடங்களில் மேடையேறியது.  

௦௦௦௦௦

   1985 மே மாதத்தில் ஒரு நாடகம் மேடையேறுகிறது. யாழ் குடாநாடெங்கும் பேரதிர்வு. சென்ற இடமெங்கும் அலைஅலையெனத் திரள்கின்றனர் இரசிகர்கள். ஒரு காட்சி மேடையேறச் சென்ற நாடகம், திரண்ட இரசிகர்களால் இரு மேடையேற்றம் ஆகிறது. இரண்டு காட்சிகள் மாத்திரமே என்று சென்ற இடத்தில் மூன்று காட்சிகளை வேண்டி நிற்கின்றனர் இரசிகர்கள். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, இளவாலை சென்ற்.ஹென்றிஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்ற்.பற்றிக்ஸ் கல்லூரி.. என்றானவற்றில் மூன்று காட்சிகள். அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் இரண்டு காட்சிகள். உடனேயே அளவெட்டியின் சின்னப்ப பள்ளிக்கூடமான சீனங்கலட்டி ஞானோதயா வித்தியாசாலையில்கூட ஒரு காட்சி...

   அந்நாடகம்: 'மண் சுமந்த மேனியர்'

   இந்நாடகத்தின் மூலக்கதையை நான் (இரவி அருணாசலம்) எழுதினேன். பிரதி: குழந்தை ம.சண்முகலிங்கம். இசை: இசைவாணர் எம்.கண்ணன். நெறியாள்கை க.சிதம்பரநாதன். யாழ்.பல்கலைக்கழகக் கலாசாரக் குழு தயாரித்த நாடகம் இது.

   நாற்பதிற்கு மேற்பட்டோர் பங்குபெற்ற இந்நாடகம், நெகிழ்வுத்தன்மை கொண்ட அரங்காக இருந்தது. இவர்இவர் இன்னின்ன பாத்திரம் ஏற்றார்கள் என்றில்லை. தர்மராக நடித்தவர், உரைஞர் ஆக மாறுவார். குழுவாகப் (Chorus ) பாடியோரும் பாத்திரங்களாக மாறியிருந்தனர். நேரடி (Straight) நாடகமாகவோ மோடிப்படுத்தப்பட்ட (Stylised) நாடகமாகவோ அமையாது, இரண்டும் இணைந்த புதுமையான நாடகமாக அமைந்தது. இன்னும் சொன்னால் மக்களை இலகுவாகச் சென்றடையும் வடிவம் இதன் சிறப்பு. அதனால்தான் திரண்டு திரண்டு மக்கள் வந்தனர். 'மக்கள் அரங்கு' என்று இதனைச் சொல்வார்கள்.

   'மண் சுமந்த மேனியர்'இன் பின், ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு, மேலும் செழுமை பெற்றது மாத்திரமல்ல; ஈழத்துத் தமிழ் நாடக அரங்கின் திருப்புமுனையாகவும் இது அமைந்தது. இந்நாடகத்தில் அளவெட்டியைச் சேர்ந்த கலைஞர் இருவர் முக்கிய பாத்திரத்தில் தோன்றினர். ஒருவர்: ஞானசேகரன். இந்நாடகத்தின் தலையாய பாத்திரமான கிழவர் பாத்திரத்தை இவர் ஏற்றார். மற்றையவர்: இரவி அருணாசலம். இவர் உரைஞர் (Narrator) பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

   பிரதியை, குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதியிருந்தாலும் நாடகத்தின் இறுதியில் மக்களை எழுச்சியூட்டும் பாடல், அதனை கவிஞர் சேரன் (இவரும் அளவெட்டி) எழுதியிருந்தார்.

   "எத்தனை காலங்கள் இப்படிப் போயின
   நீங்கள் எழுந்திருங்கள்
   எங்கள் நிலத்தினில் எங்கள் பலத்தினில்
   தங்கி நிற்போம் நாங்கள்
   பொங்கிவரும் நதிவெள்ளமெனப் புயல்
   வேகமுடன் எழுக
   சிந்திய செங்குருதித் துளியோடு நீர்
   போரிடவே வருக"

   'மண் சுமந்த மேனியர்' அரங்க நிகழ்வுடன் 'இந்த மண்ணும் எங்கள் நாட்களும்' எனும் கவிதாநிகழ்வும் ஊர்தோறும் மேடையேறியது. முன்னர் கவியரங்கம் எனும் நிகழ்வு நடந்தது. ஒருவர், தன் கவிதையை அரங்கில் வாசிப்பது, கவியரங்கு என்றானது. கவிதாநிகழ்வு என்பது, பலரது கவிதையைப் பலர் மாறிமாறி வாசிப்பது, அல்லது ஒருவரது கவிதையையே பலர் மாறிமாறி வாசிப்பது என்பதாகும். இந்தவகையில் ஓர் அரங்கத்தன்மை அதற்கு உண்டானது.

   பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு, 1982ஆம் ஆண்டில் ஒருநாள் இக்கவிதாநிகழ்வு  நிகழ்ந்தது. இக்கவிதாநிகழ்வில் பங்கேற்றியோர்: எம்.ஏ.நுஹ்மான், என்.சண்முகலிங்கன், ஆதவன் (அளவெட்டி), சேரன் (அளவெட்டி) ஆகியோர். யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில், பாரதியார் பாடல்களைத் தொகுத்து இக்கவிதாநிகழ்வு அரங்கேறியது.

   இந்த வடிவத்தையே சற்று மாற்றி, க.சிதம்பரநாதன் நெறியாள்கையில் 'இந்த மண்ணும் எங்கள் நாட்களும்' கவிதா நிகழ்வு உருவானது. சுமார் முப்பதுபேர் வரையில் பங்கேற்றார்கள். இது மிகச்சிறந்த நிகழ்த்துகலை ஆனது. கவிதைகளை மாறிமாறி வாசித்தல் என்றல்ல; கவிதைகளின் பொருளை நிகழ்த்திக் காட்டினார்கள். தேவையேற்படும்போது, பாடல்களினூடாக இசையினூடாக உணர்வுப் பெருக்கேற்பட்டது. மக்கள் இதனுடன் ஒன்றிப்போனார்கள். அழுதார்கள், ஆவேசப்படடார்கள்..

   சிதம்பரநாதனின் கற்பனைவளமே இதன் காடசி வடிவமாயிற்று. இசைவான எம்.கண்ணன் அற்புதமாக இசையூட்டினார். பிரதியைத் தொகுத்தவர் வகுத்தவரும், நம்மூர் சேரன் அவர்கள். இக்கவிதாநிகழ்வு, சேரன் யாத்த பாடல்களினாலும் நிறைவாய் அமைந்தது.

   "காலம் மாறும் காலம் மாறும்
   காற்றில் உதிரும் பூக்களின் மீதொரு பாடல்
   காலம் மாறும் காலம் மாறும்
   துயரம் படிந்த முகங்களை இனி நாம் வேண்டோம்
   காலம் மாறும் காலம் மாறும்"

பிற்குறிப்பு: 'அளவெட்டியின் நாடகர்' என்னால் எழுதித் தரத்தக்கன இவையே. அத்தனையும் ஞாபகக் குறிப்புகள். ஆய்வு செய்தோ நூலகம் சென்றோ நூல்கள் வாசித்தோ, எழுதப்பட்டன அல்ல. அதனால் பல தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. பலர் விடுபட்டுப் போயிருக்கலாம். எதுவும் வேண்டுமென்று செய்ததல்ல. ஏதும் தவறுகள் இருப்பின், குறைகள் இருப்பின் அதனால் யாரும் நொந்தால் நான் பொறுப்பேற்று மன்னிப்புக் கோருகிறேன்.

மீண்டும் வாமதேவுச் சித்தப்பாவுக்கு என் இறுதி வணக்கம். இதை எழுதத் தூண்டிய தங்கை தமிழினிக்கு என் அன்பு.  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.