டொமினிக் ஜீவாஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இன்று ,85 வயதினைக் கடந்த நிலையிலும், உற்சாகம் குறையாமல் இலக்கியப் பணியாற்றும் அவரது விடா முயற்சியும், சுறுசுறுப்பும் அனைவரையும் வியப்படைய வைப்பன. தீண்டாமைக் கொடுமைக்கெதிராக அடங்கி, ஒடுங்கிச் சோர்ந்து விடாமல், அதன் நச்சுக்கரங்களின் தீண்டுதல்களைக் கண்டு அஞ்சி விடாமல், அத்தீண்டுதல்களையெல்லாம் சவால்களாக ஏற்றுக்கொண்டு, இத்தனை வருடங்களாக 'மல்லிகை' என்னும் மாத இதழினைக் கொண்டு வரும் அவரது ஆற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடும். 'மல்லிகை'யையும் ஜீவாவையும் பிரிக்க முடியாது. 'மல்லிகை ஜீவா' என்று அழைக்கப்படுவது அவரது இலக்கியப் பங்களிப்பினை நன்கு புலப்படுத்தும். 'மல்லிகை' சஞ்சிகை பல இளம் எழுத்தாளர்களுக்குக் கை கொடுத்திருக்கின்றது; இன்றும் அவ்விதமே ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களை, ஆர்வலர்களை, புரவலர்களை அட்டைப்பட நாயகர்களாக்கிப் பெருமைப்பட்டிருக்கின்றது.

நான் சிறுவனாக யாழ் நகரில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல முறை டொமினிக் ஜீவா அவர்களைக் கண்டிருக்கின்றேன். யாழ் பஸ் நிலையத்தில் அமைந்திருந்த பூபாலசிங்கம் கடையில் நூல்கள் வாங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் வெள்ளை வேட்டியும் , 'நாஷனலுமான' ஆடை அலங்காரத்தில், 'மல்லிகை'யுடன் அவரைக் கண்டிருக்கின்றேன். அன்றைய காலகட்டத்தில் 'சிரித்திரன்', 'மல்லிகை', போன்ற ஈழத்துச் சஞ்சிகைகளை நான் ஒழுங்காக வாங்குவதுண்டு. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளை நான் முதன் முதலில் வாசித்தது 'மல்லிகை'யில்தான். 'பிராங்பேர்ட் இரவு' என்றொரு கவிதையென்று நினைக்கின்றேன். அதன் மூலம்தான் அவரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது. அப்பொழுது 'மல்லிகை' காரியாலயம் யாழ் ராஜா திரையரங்கிற்கருகில் கஸ்தூரியார் வீதியிலிருந்து கே.கே.எஸ்.வீதி வரை செல்லும் 'புகழ்'பெற்ற ஒழுங்கையில்தான் அமைந்திருந்தது. அதன் வழியாகச் செல்லும் சமயங்களிலெல்லாம் , மல்லிகை காரியாலயத்தைத் தாண்டிச் செல்லும் போதெல்லாம், அவரைப் பார்த்திருக்கின்றேன். அவரையும், கூடவே அச்சுத் தொழிலாளியொருவரையும் அடிக்கடி கண்டிருக்கின்றேன். ஒருமுறை எதற்காகவோ அவ்வழியால் செல்லும்போது, நானும் என் நண்பரொருவரும் மல்லிகைக் காரியாலயத்தில் நுழைந்து, அவருடனும், அச்சகத் தொழிலாளியுடனும் சில நிமிடங்கள் கதைத்திருக்கின்றோம். எதற்காகச் சென்றோம் என்பது சரியாக ஞாபகத்திலில்லை. ஆனால் அப்பொழுதெல்லாம் , அவரைக் காணும் தருணங்களிலெல்லாம், தனியொரு மனிதராக, சளைக்காமல் அவராற்றும் இலக்கியப்பணி கண்டு ஆச்சரியமும், பெருமையும் அடைந்திருக்கின்றேன். இன்றும், இத்தனை வருடங்கள் கடந்த நிலையிலும், அதே உற்சாகத்துடன் அவர் இலக்கியப்பணி ஆற்றிவருவது பிரமிப்பினைத்தான் ஏற்படுத்துகிறது. தனி மனிதரொருவரும் ஓரமைப்பாக இயக்கமாக ஆற்றலுடன் திகழ முடியுமென்பதற்கு டொமினிக் ஜீவாவும், அவரது 'மல்லிகை'யும் ஓர் எடுத்துக்காட்டு. அவரது இலக்கியப் பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் எப்பொழுதும் பெருமையுடன் நினைவுகூரப்படும்.


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து ...

டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா (பி. ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது 'தண்ணீரும் கண்ணீரும்' சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புக்கள்:
தண்ணீரும் கண்ணீரும் (சிறுகதைகள், 1960)
பாதுகை (சிறுகதைகள், 1962)
சாலையின் திருப்பம் (சிறுகதைகள், 1967)
வாழ்வின் தரிசனங்கள் (சிறுகதைகள்)
டொமினிக் ஜீவா சிறுகதைகள் (சிறுகதைகள்)

கட்டுரைத் தொகுப்புக்கள்:
அனுபவ முத்திரைகள்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
அச்சுத்தாளினூடாக ஒர் அனுபவ பயணம்
நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

மொழிபெயர்ப்பு நூல்:
UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு:கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)

ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்:
டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004) 


 நூலகம் தளத்தில் ஜீவாவின் நூல்கள் சில..

1. பாதுகை  2. தலைப்பூக்கள் 3. நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் (தொகுத்தவர்: டொமினிக் ஜீவா) 4. கருத்துக்கோவை 5.  முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்  


டொமினிக் ஜீவாவின் 85 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ....

- லெனின் மதிவானம் -

ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக திகழ்கின்ற தோழர் டொமினிக் ஜீவாவின் 85 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முச்சந்தி இலக்கிய வட்ட நண்பர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மல்லிகை என்ற முற்போக்கு சஞ்சிகையை வெற்றி கரமாக நடத்திவருவதுடன், முற்போக்கு மார்க்சிய உணவுக் கொண்ட பல தளிர்கள் கிளையாவதற்கும் வேர்கொள்வதற்கும் தூண்டுதலாக இருந்து வருபவர் டொமினிக் ஜீவா. எமது யாசிப்பு அவர் தொடந்து இந்த மானுட அணி சார்ந்து காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.