எமது இனிய நண்பர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் திடீரென எம்மைவிட்டுச் சென்ற 14ஆம் திகதி யூன் மாதம் 2021 அன்று பிரிந்து விட்டார். கோவிட்-19 காலச் சூழ்நிலையில் நேரடியான தொடர்புகள் அற்ற நிலையில் அவரது திடீர் மறைவு கனடிய தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இந்தக் குறுகிய காலத்தில் இவரைப் போன்ற மூத்த தலைமுறைத் தமிழ் உணர்வாளர்கள் பலரை நாம் இழந்திருக்கின்றோம். இந்த மண்ணில் தமிழ் மொழியும், எமது பண்பாடும் நிலைத்து நிற்கப் பாடுபட்டவர்களில் நண்பர் கலாநிதி வசந்தகுமார் அவர்களுக்கும் பெரியதொரு பங்குண்டு. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக எங்களைப் போலவே அவரும் கனடிய மண்ணில் எம்மினத்தின், எமது மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
‘வானவில்’ என்ற நிகழ்ச்சிகள் மூலம்தான் இவர் எனக்கு முதலில் அறிமுகமானார். 90 களின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் எமது மொழி மற்றும் பாரம்பரியத்தைப் பேணக்கூடிய வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் வருடம் தோறும் நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது. ஒன்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை பழைய மணவர்களின் ‘வானவில்’ கலை நிகழ்ச்சி, மற்றது நான் கல்வி கற்ற மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ‘முத்தமிழ் விழா’ நிகழ்ச்சி. குறிப்பாக நாடக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் பழைய மணவர்களின் நிகழ்ச்சிகளாக இவை இரண்டும் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பல தடவைகள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய நிகழ்வுகளிலும், ஸ்ரீமதி நிராசந்துரு அவர்களின் நடனக்கல்லூரி பட்டமளிப்பு நிகழ்வுகளிலும் சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன். ஒருமுறை நூல் வெளியீட்டு நிகழ்வின் போதும், என்னை அழைத்துச் சபையோருக்கு அறிமுகம் செய்து, முதற்பிரதி வாங்கவைத்துக் கௌரவித்திருந்தார்.
1950 ஆம் ஆண்டு பிறந்த இவர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்வி கற்கும் போதே சிறந்த பொறியியல் மாணவனாக விளங்கினார். கல்வியில் மட்டுமல்ல, பேச்சுப் போட்டி, நாடகம், சாரணர், விளையாட்டுத்துறை போன்ற துறைகளிலும் தனது ஆளுமையைக் காட்டினார். இலங்கை மின்சார சபையில் கடமையாற்றிய இவர் லண்டனில் சில காலம் வசித்தபின் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். கனடாவில் கொம்பியூட்ரெக் கல்லூரியை ஆரம்பித்து அத்துறையில் பல மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். கனடிய வர்த்தக சம்மேளனத்திலும் அங்கத்தவராக இருந்து சமூகத் தொண்டற்றினார். இவரது இழப்பு எமது சமூகத்திற்கு முக்கியமாகக் கனடா தமிழ் சமூகத்திற்குப் பெரியதொரு இழப்பாகும்.
‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாக்குக்கிணங்க, இவரது பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் நாங்களும் அவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு, அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!
குரு அரவிந்தன்.
தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.