நேற்று,  நவம்பர் 19,  எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றியவர்கள், சிறப்புப் பிரதிகள் பெற்று நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள், வருகை தந்தவர்கள்  இவர்கள். இவர்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.  இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார் நண்பர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அவருக்கும் நிகழ்வுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய தேடகம் அமைப்புக்கும் மனங்கனிந்த நன்றி. கூடவே நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நிகழ்வுக் காணொளியை ஒளிப்பதிவு செய்தமைக்கும், புகைப்படங்கள் எடுத்ததற்கும்  தடயம் நிறுவனத்துக்கும், அதன் ஸதாபகர் கிருபா கந்தையாவுக்கும், நிகழ்வைப் புகைப்படங்களில் ஆவணப்பதிவாக்கிய நண்பர் அலெக்ஸுக்கும் நன்றி. அழைப்பையேற்று வருகை தந்த அனைவருக்கும் மீண்டும் என்  மனம் நிறைந்த நன்றி.

நிகழ்வில் நூல்கள் பற்றிய அறிமுக உரையினை ஆற்றியவர்கள்:

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் சிறுகதை, கவிதை, திறனாய்வு  மற்றும் இதழியல் என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து  பட்டது. இலங்கையில் வெளியான முக்கியமான  சிற்றிதழ்களில் ஒன்று 'பூரணி' . அதன் இணையாசிரியர்களில் ஒருவர். ஆங்கிலப் புலமை மிக்கவர்.  நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கின்றார்.  . சின்னுவ அச்சிப்பேயின்  புகழ்பெற்ற நாவலான Things Fall Apart நாவலை  'சிதைவுகள்' என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்.  இன்னுமொரு நாவலான  'No Longer at Ease' 'வீழ்ச்சி' என்னும் பெயரில் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்  'இரவில் நான் உன் குதிரை'  , 'ஆடும் குதிரை'  என்னும் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.   மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவலை ஆங்கிலத்தில் 'A Separate Home' என்னும் பெயரில் மொழிபெயர்த்திருக்கின்றார். 'தாய்வீடு' பத்திரிகையில் தொடர்ச்சியாக இவரது  மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளிவருகின்றன.  உள்ளோலி என்னும் கவிதைத்தொகுப்பும், தியானம் என்னும் சிறுகதைத்தொகுப்பும் வெளியான ஏனைய நூல்கள்.

*** இவர் உடல் நிலை காரணமாக நிகழ்வுக்கு வர முடியவில்லை. இவர் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றி எழுதிய விமர்சனக் குறிப்பினை நிகழ்வுக்குத்  தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார்.


எழுத்தாளர் அருண்மொழிவர்மன்

எழுத்தாளர் அருண்மொழிவர்மன் (சுதர்சன்ஸ்ரீநிவாசன்) முக்கியமான கனடியத்தமிழ் எழுத்தாளர்.  அண்மையில் வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்த  'தாயகக் கனவுகள்'  ஈழப்போராட்டம், அது பற்றிய நூல்கள்,  அவை பற்றிய வாசிப்பு அனுபவங்களை உள்ளடக்கிய   இவரது கட்டுரைகளின் தொகுப்பு. தொடர்ச்சியாகப் பல்வேறு புகலிட, தாயகப்  பத்திரிகைகள், சஞ்சிகைகளில்  இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 'சுயமரியாதை, சமத்துவம் என்பதே சமூகநீதிக்கான பயணம் என்கிற பயணத்தில்..' என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவரும் இவரது 'அருண்மொழிவர்மன் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவு முக்கியமான வலைப்பதிவுகளில் ஒன்று.


சமூக, அரசியற் செயற்பாட்டாளர்  முருகுப்பிள்ளை

இலங்கைத்தமிழர் போராட்ட வரலாற்றில் எண்பதுகளில் இளைஞர்கள் பலர் ஆயுதமேந்திப்போராட்டத்தில் இணைந்தனர். அவர்களில் ஒருவர் இவர். யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்தில் இளமானிப் பட்டம் பெற்றவர். தற்போது தகவற் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகின்றார். சமூக, அரசியற் செயற்பாட்டாளரான இவரது இயற்பெயர் ஈஸ்வரமூர்த்தி. இலக்கியம், சமூகம், இலங்கைத்தமிழர், உபகண்ட மற்றும் சர்வதேச அரசியல் பற்றி இவர் எழுதும் கட்டுரைகள், முகநூற் பதிவுகள் முக்கியமானவை.  இவரது முகநூற் பதிவுகள் ஊடகங்கள் பலவற்றில் மீள்பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தான் கூறும் விடயத்தில் ஆழ்ந்த அறிவும், தெளிவான பார்வையும்  மிக்கவர் என்பதை இவரது எழுத்துகள் புலப்படுத்தும். முரண்பட்ட கருத்துகளையும் இவருடன் நட்புரீதியாகத் தர்க்கிக்கலாம்.



நிகழ்வில் சிறப்புப் பிரதிகள் பெற்றவர்கள்:

1. தேவகாந்தன்

எழுத்தாளர் தேவகாந்தன்  இலங்கையில் இருந்த காலகட்டத்தில் எழுதத்தொடங்கி , புகலிடத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.  இலங்கை, இந்தியா, புகலிடத் தமிழ் ஊடகங்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இவரது மகா நாவலான 'கனவுச்சிறை' , ஐந்து பாகங்களை உள்ளடக்கியது.  அதன் இரு  பாகங்கள் அண்மையில் ஆங்கிலத்தில் 'நேட்ரா ரொட்ரிகோ'வால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானதுடன் , பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது.

நாவல், சிறுகதை, இலக்கியத் திறனாய்வு , இதழியல்,  திரைப்படம், தொலைக்காட்சி என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது.  இதுவரை 17 நாவல்கள், 4 சிறுகதைத்தொகுப்புகள் உட்படப் பல நூல்கள் வெளிவந்துள்ளன.  இலக்கு என்னும் சஞ்சிகையை நடத்தியவர். கூர் என்னும்  இலக்கிய ஆண்டிதழை வெளியிட்டவர். பதிவுகள் இணைய இதழின் ஆரம்பத்திலிருந்து அதில் எழுதி  வரும் எழுத்தாளர்களில் ஒருவர்.  'பதிவுகள்' இணைய இதழில் இவரது 'வடலி'அமைப்பாக வெளியான 'கலிங்கு' நாவல் தொடராக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, தமிழ் நாட்டு தமிழ் வளர்ச்சித்துறை விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது, தமிழர் தகவல் விருது, கனடாத் தமிழ் எழுத்தாளர் இணைய விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர். தேவகாந்தன் பழகுவதற்கு இனிய நண்பர்களில் ஒருவர்.

2. கணபதிப்பிள்ளை  வித்தியானந்தன்

நான்  மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தில் இதழாசிரியர் குழுத் தலைவராக விருந்தபோது மலர்க்குழுவில் இருந்தவர்களில் ஒருவர் நண்பர் கணபதிப்பிள்ளை வித்தியானந்தன்.பொறியியலாளர்.  அதற்கடுத்த வருடம் 81/82 காலத்துக்கான தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இயங்கியவர். அக்காலகட்டத்தில் தமிழ்ச்சங்கத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்தியவர்.

77 இனக்கலவரத்தையடுத்து அகதிகளாக வடகிழக்கின் எல்லைப்புறங்களில் ஆயிரக்கணக்கான மலையகத்தமிழ் அகதிகளில் குடியேற்றப்பட்டார்கள். அவ்விதம் குடியேற்றப்பட்ட திட்டங்களில் ஒன்று நாவலர் பண்ணைத் திட்டம். அம்மக்களுக்கு காட்டினூடு பாதை அமைத்தல், கிணறு வெட்டிக் கொடுத்தல் போன்ற திட்டங்களை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கம் முன்னெடுத்தது. மாணவர்கள் அத்திட்டத்தில் இணைந்து பணியாற்றினார்கள்.  காந்தியம் அமைப்பு மூலம் முன்னெடுக்கப்பட்ட  அத்திட்டத்திற்கு இவர் தலைமையில் இயங்கிய தமிழ்ச் சங்கம் ஆற்றிய பங்களிப்பு அக்காலகட்டத்தில் முக்கியமானது. சமூக,அரசியற் பிரக்ஞை மிக்கவர் நண்பர் வித்தியானந்தன்.

3. கனகசபாபதி பிறேமச்சந்திரா

என் யாழ் இந்துக் கல்லூரி காலத்திலிருந்து அறிமுகமான நண்பர் கனகசபாபதி பிறேமச்சந்திரா.  பொறியியலாளர். நண்பர் வித்தியானந்தனுடன் இணைந்த மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.  நாவலர் பண்ணைத் திட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன்  செயற்பட்டவர்.  மொறட்டுவைத்  தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு மலரான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்தவர்.

தொடர்ந்தும் அவ்விதமாகச் சமூகச் செயற்பாட்டாளராக இயங்கி வருபவர்.  பெருந்தொற்றுக் காலகட்டத்தில் 1971 -1977 காலகட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த  மாணவர்களால் உருவாக்கப்பட்டுத் தற்போது இலங்கையில் பல்வேறு சமூக,சூழல் மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களை 'ஓராயம்' செயற்படுத்தி வருகிறது. அதன்  உப தலைவராகச் செயற்பட்டு வருபவர். தலைவராக நண்பர் பரம்சோதி  தயாநிதி செயற்பட்டு வருகின்றார். மிகவும் நேர்த்தியாக, மிகுந்த கட்டுப்பாட்டுடன் தன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர்.

4. குரு அரவிந்தன்  (குருநாதபிள்ளை அரவிந்தன்)

சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, திரைக்கதை, நாடகம், ஒலிப்புத்தகம் என இவரது கலை, இலக்கிய உலகுப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. இலங்கை, இந்தியா, புகலிடத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்களில்  இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  யுகமாயினி , கலைமகள் சஞ்சிகை நடத்திய குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். தமிழர் தகவல், கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் ஆகியவற்றின் விருதுகளைப் பெற்றவர். 

புகலிடத்தில் சிறுவர் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.  அவ்வகையில் சிறுவர்களுக்காக இவர் எழுதிய மேடை நாடகங்கள் முக்கியமானவை.  பதிவுகள் சஞ்சிகையின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் எழுதி வருபவர். பழகுவதற்கு இனிய நண்பர்.

5. எல்லாளன் ராஜசிங்கம்

கனடாவில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை நட்பைப்பேணி வரும் நண்பர் சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைச்  செயற்பாட்டாளரான எல்லாளன் ராஜசிங்கம், எண்பதுகளில் பல்வேறு அமைப்புகளில் இணைந்து தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் ஒருவர். 

தன் கடந்த கால அமைப்பு சார்ந்த செயற்பாடுகளை 'ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்' என்னும் தன் நூலில் ஆவணப்படுத்தியவர். அமைப்பிலிருந்து விலகிய காலகட்டத்தில் அவ்வித நிலையில் நிராதரவாகத் தவித்த பெண் போராளிகளைப் பத்திரமாக வீடு திரும்ப உதவியவர். இன்றும் முன்னாட் சக போராளிகளின் போராட்ட அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் உறுதுணையாகவிருப்பவர்.  முன்னாட் போராளிகள் தம் அனுபவங்களை ஆவணப்படுத்து வேண்டுமென்று நம்புபவர்.

6. கனகசபை குருபரன்

நண்பர் கனகசபை குருபரன் என் யாழ் இந்துக்கால நண்பர்களில் ஒருவர்.  பொறியியலாளர். சமூக, சூழலியல் சார்ந்த செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். தற்போது ஓராயம் அமைப்பின் வெகுசனத்தொடர்பு அதிகாரிகளில் ஒருவராகச் செயற்பட்டு வரும் இவர் ஓராயம் அமைப்பினூடு தாயகத்தில் முன்னெடுத்த மரம் நாட்டும் திட்டங்கள் சூழலில் சார்ந்து முக்கியமானவை. சூழலியல் பேனூவதில் போதிய விழிப்புணர்வு இல்லையென்று வருந்தும் இவர் அதற்காகத் தன்னால் முடிந்தவரையில் செயற்பட்டு வருகின்றார்.

7. பேரா சவுந்தரநாதன்

கனடாவில் எண்பதுகளில் அறிமுகமாகி இன்று வரை தொடரும் நட்பு எங்களுடையது. சமூக, அரசியற் செயற்பாடுகளில் பங்களித்து வருபவர். தமிழர்கள் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த எண்பதுகளில் ஐரோப்பாவில் இவர் தனது சமூக, அரசியற் செயற்பாடுகள் காரணமாகப் பல்வகைச் சிரமங்களையும் அனுபவித்தவர். பழகுவதற்கு இனிய, நட்பை மதிக்கும்  நண்பர்.

8.  எஸ்.கே.விக்னேஸ்வரன்   (*** இவர் தவிர்க்க முடியாத காரணங்களினால் நிகழ்வுக்கு வரமுடியாமல் போய்விட்டது.)

நண்பர் பிறேமச்சந்திரா ஆசிரியராகவிருந்து வெளியிட்ட நுட்பம் சஞ்சிகையில் வெளியான எனது 'பாரதியார் கருத்துமுதல்வாதியா அல்லது பொருள்முதல்வாதியா' என்னும் கட்டுரை மூலம் நண்பராக அறிமுகமானவர் நண்பர் எஸ்.கே.விக்கினேஸ்வரன்.  பின்னர் மொறட்டுவைப் பல்கலைககழகத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த 'நாவலர் பண்ணை'த் திட்டத்தில் இருவரும் பல தடவைகள் சென்று பங்களித்திருக்கின்றோம். 

பல தடவைகள் பல்வேறு உலக இலக்கியப் படைப்புகள் பற்றி  உரையாடியிருக்கின்றோம். சிறுகதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு , ஊடகத்துறை என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர்.  இவரது மொழிபெயர்ப்பில்  டொக்டர் ஹெய்ம் ஜி இனோட்  எழுதிய குழந்தை உளவியல் சம்பந்தமான நூல் தமிழில் 'குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே' என்னும் தலைப்பில்  'மூன்றாவது மனிதன்' பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது படைப்புகள் பல இன்னும் நூலுருப்பெறவில்லை. எதிர்காலத்தில் அவை நூலுருப்பெறுவது  அவசியம்.  சரிநிகர் ஆசிரியர் குழுவில் இருந்தவர்.  

9. லெஸ்லி ரவிச்சந்திரா

இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை படித்தவர். தற்போதும் அத்துறையில் பணியாற்றுகின்றார். மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நாடகவியலாளர் பாலேந்திராவின் 'யுகதர்மம்' மேடையேறியபோது அதில் வரும் வியாபாரி பாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். இன்றுவரை அந்நாளில் அந்நாடகத்தைப் பார்த்தவர்கள் இவரது நடிப்பைக் குறிப்பிட்டு மெச்சாமல் போவதில்லை.  சிறந்த நடிகர். நல்ல மனிதர். இனிய நண்பர்.

* புகைப்படங்கள்  - நன்றி கிருபா கந்தையா, அலெக்ஸ்

நிகழ்வுப் புகைப்படங்கள்: கிருபா கந்தையாவின் முகநூற் பக்கம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.