'ஈழத்துக் கலை இலக்கியத்துறையில் நன்கறியப்பட்டவரான 'பல்துறைக் கலைஞர்" கோவிலூர் செல்வராஜன் இன்று உலகறிந்த தமிழ்க் கலைஞராக விளங்குகிறார். அவரது பொன்விழா சிறப்பு மலரில் உலகெங்குமுள்ள எம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்களின் கட்டுரைகள்,  வாழ்த்துகள் நிரம்பியுள்ளன. எல்லோருக்கும் அறிமுகமான,  பிடித்தமான படைப்பாளியாக அவர் விளங்குகிறார். வானொலிக் கலைஞராகஇ எழுத்தாளராக,  பாடலாசிரியராகப்,  பாடகராக,  நடிகராக அவர் பணி தொடர்கிறது. இன்று அவரது பொன்விழா பாரிஸ் மாநகரில் நடைபெறுவதும்,  அவரது நூல்கள் இங்கு வெளியிடுப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. நூல்களை அச்சிட்டு வெளியிடுவதும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இன்று மிகவும் செலவுகரமான விடயமாகவுள்ளது."

இவ்வாறு,  பாரிஸ் புறநகர் 'பொண்டி" (Bondy) தமிழ்ச்சோலை அரங்கில் அக்டோபர் 29 -ம் திகதி (29 - 10 - 2023) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற 'பல்துறைக் கலைஞர்" கோவிலூர் செல்வராஜனின் பொன்விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டார்.

இளங்கோவன் மேலும் பேசுகையில்,  'எழுபதுகளில் இலங்கை வானொலிக் கலைஞர்கள் மக்கள் மத்தியில் நட்சத்திரக் கலைஞர்களாக மதிக்கப்பட்டார்கள். தமிழகத்திலும் அவர்கள் நன்கறியப்பட்டவர்களாக விளங்கினார்கள். அக்காலத்தில் வானொலியில் வந்த மெல்லிசைப்பாடல்கள்,  ஈழத்துப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பொப்பிசைப் பாடல்கள் நாடு முழுவதும் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலத்தில் தான் கோவிலூர் செல்வராஜன் வானொலி நிலையத்தில் பணியாற்றத் தொடங்கினார். மெல்லிசைப் பாடல்களை எழுதியும்இ பாடியும்,  நாடகங்களில் நடித்தும் பாராட்டுப் பெற்றார். வானொலி நிலையத்தில் இணைவதற்கு முன்பாக,  மெய்கண்டான் நிறுவனம் வெளியிட்ட கலாவல்லி,  நட்சத்திரமாமா ஆகிய சஞ்சிகைகளின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது சிறுகதைகள் பலவும் பத்திரிகைகளில் பிரசுரமாகின. மூன்று நாவல்களையும் எழுதியுள்ளார். சிறுகதைத் தொகுதிகள்,  கவிதைத் தொகுதி,  கட்டுரைத் தொகுதி,  தாயக உணர்வுப் பாடல் தொகுப்பு,  மெல்லிசைப் பாடல் தொகுப்பு,  பக்திப் பாடல் தொகுப்பு என்பனவற்றை வெளியிட்டுள்ளார். பாடல்களை எழுதிப் பாடி,  இறுவட்டுகளாகவும் வெளியிட்டுள்ளார். இவரது 'விடியாத இரவுகள்" என்ற சிறுகதைத் தொகுதி தமிழகத்தில் விருதும் பெற்றுள்ளது. தமிழகத்தில்,  அன்றைய முன்னணிச் சினிமாக் கலைஞர்களையும் பேட்டி கண்டு வானொலிக்கு வழங்கியுள்ளார். எம்மவர் வாழும் பல நாடுகளிலும் இவருக்கு விருதுகள் அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது" என்றார்.

'நல்லது நடக்கட்டும்" (சிறுகதைத் தொகுதி), கிழக்கிலங்கையில் மறைந்த இலக்கிய ஆளுமைகள், பொன்விழாச் சிறப்பு மலர் ஆகிய மூன்று நூல்கள் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.

'நல்லது நடக்கட்டும்" சிறுகதைத் தொகுதி குறித்து இலக்கிய ஆர்வலர் தனம் பாலசிங்கம் பேசுகையில், 'கொரோனாக் காலத்து நிலமைகளை நூலாசிரியர் ஒவ்வொரு கதைகளிலும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

'கிழக்கிலங்கையில் மறைந்த இலக்கிய ஆளுமைகள்" நூல் குறித்து ஒலிபரப்பாளர் நவாஜோதி பேசுகையில்,  நூலில் குறிப்பிட்ட ஆளுமைகள் சிலரைத் தான் நேரடியாகச் சந்தித்த,  பழகிய அனுபவங்களையும்,  அவர்களது ஆற்றல்கள் குறித்தும் புதிய பல தகவல்களையும் தெரிவித்தார்.

நூலாசிரியருக்குப் பலரும் பொன்னாடை போர்த்திப் பொன்விழா வாழ்த்துத் தெரிவித்தனர். ஸ்ரீ பாரதி அச்சக அதிபர் இரா. ஸ்ரீதரன்,  ஆசிரியர் த. பரமேஸ்வரன்,  எழுத்தாளர் சு. கருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் அரங்கில் வாசித்தளிக்கப்பட்டது.

விழா நாயகன் கோவிலூர் செல்வராஜன் ஏற்புரை வழங்கினார். விழா செல்வி. தியா ஜெகதீஸ்வரனின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகி,  ஊடகவியலாளர் எஸ். கே. ராஜெனின் நன்றியுரையுடன் இனிதே முடிந்தது.

இங்கு வெளியிடப்பட்ட மூன்று நூல்களும் அண்மையில் மட்டக்களப்பு,  திருக்கோவில்,  கொழும்பு,  நோர்வே,  இலண்டன்,  ஜேர்மனி ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.