அன்புக்கோர் அம்பி என அனைவராலும் விதந்து சொல்லப்பட்ட கவிஞர் அம்பி அவர்கள் நேற்று  ( 27  ஆம் திகதி ) இரவு அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்துவிட்டார். தன்னைப்பற்றிய  பசுமையான நினைவுகளை எமக்குத் தந்துவிட்டு,  விடைபெற்றிருக்கும்  கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில்  வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி  பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர்,  விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார்.  கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று  அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம்,  சிறுகதை, கட்டுரை, விமர்சனம்,  ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.

ஏறினால் கட்டில் இறங்கினால் சக்கர நாற்காலி.  இதுவே அவரது பல வருட வாழ்க்கையாகியிருந்தபோதிலும்,   தனது முதிய வயதிலும்  மெய்நிகர் அரங்குகளில் தோன்றி கருத்துரைத்தார். அம்பி  எமது   அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின்  ஸ்தாபக  உறுப்பினர்.  அத்துடன் இச்சங்கத்தின் மதிப்பார்ந்த காப்பாளராகவும் இருந்தவர்.

அம்பிக்கு  2004ஆம்   ஆண்டு  75  வயது  பிறந்தபொழுது  அதனை  பவளவிழாவாக  நாம் கன்பரா மாநிலத்தில்    கொண்டாடினோம்.  அவருக்கு 90 வயது பிறந்ததும்   சிட்னியில் கலை, இலக்கிய அன்பர்கள் இணைந்து  2019  இல்  பெருவிழா எடுத்தனர். குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும் வளம் சேர்த்துள்ள அம்பியின் குழந்தைகளுக்கான கொஞ்சும் தமிழ் நூல் குறிப்பிடத்தகுந்தது.  குழந்தைகளை  நாம்  என்றென்றும்  கொஞ்சிக் கொஞ்சித்தான் வளர்க்கின்றோம்.  

 ” உலகில்  நல்லவைகள்  யாவும்  குழந்தைகளுக்கே” என்று  பல்லாண்டு காலத்திற்கு முன்னரே சோவியத்  ருஷ்யாவின்  சிற்பி  மேதை  லெனின்  தெரிவித்தார். எழுதுவதற்கு  மிகவும்  சிரமமான  இலக்கியம்   எதுவென்று   கேட்டால், குழந்தை   இலக்கியம்தான்  படைப்பதற்கு  சிரமமானது எனச்சொல்வார்கள்.   அதில்   உண்மை   இருக்கிறது. குழந்தைகளின்   உளவியலைப்புரிந்துகொண்டால்தான் அது சாத்தியம்.
குழந்தை  இலக்கியங்களை  ஊக்குவித்து  வளர்ப்பதற்காக யுனெஸ்கோ   முதற்கொண்டு  பல  உலக  அமைப்புகள்  அன்று  முதல் தீவிரமாக   இயங்கிவருகின்றன.

கவிஞர்  அம்பி,  தமது  ஆசிரியப்பணிக்    காலத்திலேயே குழந்தை இலக்கியம்   படைத்தவர்.   கொழும்பில்  கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில்   பாட  நூலாசிரியராகவும் பணியாற்றியவர்.   அவருக்கிருந்த  அனுபவத் தேர்ச்சியினால் சிட்னியில்   தமிழ்ப்பாட  நூல்கள்  தயாரிக்கும்  குழுவிலும் அங்கம்வகித்தார்.

எமது   தமிழ்க் குழந்தைகளுக்காக    அரைநூற்றாண்டுக்கு  வருமுன்னர்  மெல்பனில்  மாவை  நித்தியானந்தன்  பாரதி பள்ளியை  தொடக்கியபொழுது  அங்கு  வந்து  அதனை     முறைப்படி ஆரம்பித்துவைத்தவரும்   அம்பிதான்.   

அம்பி   அவர்களை  ஈழத்தின்  தேசிகவிநாயகம் பிள்ளை   என்று தமிழ்நாட்டில்   முன்னர்  வெளியான  கோமல்  சாமிநாதனின் சுபமங்களா   இதழ்  வர்ணித்திருக்கிறது.

கவிஞர் அம்பி  எழுதிய  கவிதைக்கு  சென்னையில்  நடந்த உலகத்தமிழராய்ச்சி  மாநாட்டில்  தங்கப்பதக்கமும்  கிடைத்துள்ளது.  அதனை வழங்கியவர் மக்கள் திலகம் எம். ஜி.ஆர்.  இன்றும் மானிப்பாயில் விளங்கும் கிறீன் மருத்துவமனையை ஸ்தாபித்த,அமெரிக்க   மருத்துவ  பாதிரியார்  டொக்டர்  கிறீன்  பற்றிய   ஆராய்ச்சி  நூலை   எழுதியமைக்காக  இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தால்  பாராட்டி  கொளரவிக்கப்பட்டவர் அம்பி. இலங்கை அரசு கிறீன் நினைவு அஞ்சல் தலை வெளியிடவும்  அம்பி காரணமாக விளங்கியவர்.

பன்னூலாசிரியர்   அம்பியின் யாழ் பாடி  கவிதை  நாடகத்தை அண்ணாவியார்   இளையபத்மநாதன்  கூத்தாக    அரங்காற்றுகை  செய்துள்ளார்.   அத்துடன் அம்பியின்  நள – தமயந்தி நாட்டிய நாடகத்தை நடன நர்த்தகி கார்த்திகா கணேசர் கொழும்பில் அரங்கேற்றியுள்ளார்.

மகாகவிபாரதி  எழுதிய  பல  குழந்தை  இலக்கியப்பாடல்கள்  இன்றும்  எமக்கு உவகையூட்டுகின்றன.  அவற்றில்   இடம்பெறும்  எளிமையான வார்த்தைக்கோவைகள்தான்  அதற்கு   முக்கிய  காரணம். அதுபோன்று  கவிஞர்  அம்பியும்  எமது  குழந்தைகளுக்காக எளியசொற்களையே  பயன்படுத்தினார். கொஞ்சும் தமிழின்  அழகும்   அச்சிடப்பட்டிருக்கும்  நேர்த்தியும் குறிப்பிடத்தகுந்தது.

கண்ணைக்கவர்தல்,  கருத்தை  கவர்தல்,  மனதில்  பதிதல், அதனால் நினைவில்  நிற்றல்  முதலான  அம்சங்கள்தான்  குழந்தை இலக்கியத்தின்  சிறப்பு. கொஞ்சும் தமிழ்  –  தமிழ்நாட்டில்  மித்ர  பதிப்பகத்தினால் அழகாக   அச்சிடப்பட்டிருக்கிறது.   தமிழகத்தின்  ஓவியர்களை  மித்ர பதிப்பகத்தின்  எஸ்.பொ.  தக்கமுறையில்  இந்நூலுக்காக பயன்படுத்தியுள்ளார். அம்பி,  தமது 90 வயதிற்குப்பின்னர்  எழுதி முடித்த தொடர் : சொல்லாத கதைகள்.  தற்போது அமேசன் கிண்டிலில் மின்னூலாக படிக்கக் கிடைக்கிறது.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி தனது 95 ஆவது பிறந்த தினத்தை சிட்னியில் தமது இல்லத்தில், மக்கள், மருமக்கள் மற்றும் பேரக்குழந்தைகள் சகிதம் அமைதியாக கொண்டாடினார்.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து விடைபெற்றிருக்கும் அம்பி அவர்களுக்கு சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றோம். அம்பியின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது துணைவியார், மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.