கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா இந்து ஐயப்பன் ஆலய அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையாளர்கள் கலந்து கொள்ளமுடியும்.

காலை 10 மணிக்குத் தொடங்கி மலை 5 மணிவரையும் இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. உங்களுக்கு வசதியான நேரம் நீங்கள் வந்து பார்வையிடவோ, நூல்களை வாங்கிச் செல்லவோ முடியும். கனடாவில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் படைப்புக்களைக் காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும்  முன்வந்திருக்கிறார்கள். இதுவரை கனடாவில் உள்ள பிரபலமான 32 நூலாசிரியர்கள் தங்கள் நூல்களைக் காட்சிப்படுத்த முன்வந்திருக்கிறார்கள்.

ரொறன்ரோவில் முதன் முதலாக நடைபெற இருக்கும் இதுபோன்ற புத்தகக் கண்காட்சியில் கனடா எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், மஞ்சரிகள் என்று பல விதமான இலக்கிய ஆக்கங்களும் இடம் பெற இருக்கின்றன. இதைவிட சிறுவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்குமான நூல்களும், பயிற்சி மலர்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

செல்போனுடன் மட்டுமே நேரத்தைச் செலவிடும் பிள்ளைகளுக்கு இவற்றை வாங்கிக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம். அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் வங்கிச் சென்று அவர்கள் கண்ணில் படும்படியாக அவற்றை வையுங்கள். சந்தர்ப்பத்தைப் பெற்றோர்களாகிய நீங்களே ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அவர்களாகவே ஒருநாள் இந்தப் புத்தகங்களைத் தாங்களாகவே எடுத்துப் பார்ப்பார்கள். பொது அறிவை விருத்தி செய்யவும், எமது வரலாற்றைப் புரிந்து கொள்ளவும், எங்கள் மொழி இந்த மண்ணில் நிலைத்து நிற்கவும் இது போன்ற நூல்கள் இளைய தலைமுறையினருக்குப் பெரிதும் உதவியாக அமையும்.  

மேலும் இந்த நிகழ்வின் போது சில எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியிடவும், அறிமுகம் செய்யவும் இருக்கிறார்கள். அந்த நிகழ்வுகளிலும் நீங்கள் கலந்து கொள்ளலாம். சுமார் 34 இளைய தலைமுறையினர் பங்குபற்றும் பட்டிமன்றம், நடனம், உரைகள், திருக்குறள் சார்ந்த உரைகள் போன்ற நிகழ்வுகளையும் நீங்கள் கண்டு களிக்கலாம். உங்கள் அபிமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள் போன்றவர்களையும் இந்த நிகழ்வில் நேரடியாகச் சந்தித்து உரையாட, இந்த நிகழ்வு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது.

எனவே சிறுவர்களையும், இளைய தலைமுறையினரையும் ஆசிரியரிகளும், பெற்றோர்களுமாகிய நீங்கள் இந்த நிகழ்விற்கு அழைத்து வந்து அவர்களும் கனடியத் தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள வழிவகை செய்வது, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நன்மை தருவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும் இந்தப் படைப்பிலக்கியக் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.