'தேடகம் சிவம்' 'நெல்லியடி சிவம்' என்றறியப்பட்ட சமூக, அரசியற் செயற்பாட்டாளர் கணேசமூர்த்தி சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் ஏப்ரில் 27.  இவரது மறைவு எதிர்பாராதது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் இவரது மறைவுக்கு ஒரு காரணம் என்று அறிகின்றேன்.

'தேடகம்' அமைப்பினை நிறுவியவர்களில் ஒருவர். அதன் சஞ்சிகையான 'தேடல்' சஞ்சிகையின் ஆசிரியராகவுமிருந்தவர். மாற்றுக்கருத்துகளின் அவசியத்தை நன்குணர்ந்து செயற்பட்டவர். இலங்கையில் இருந்த காலத்திலேயே சமூக, அரசியற் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.  மார்க்சியவாதியான இவர் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.

இவரைப்பற்றி நினைத்ததும் எனக்கு நினைவுக்கு வரும் நிகழ்வுகளில் ஒன்று எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கனடா விஜயம். டொரோண்டோ பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த அந்நிகழ்வில் சுந்தர ராமசாமியின் மு.தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி'யில் அவர் தெரிவித்த கருத்துகள் சம்பந்தமாகவும், சு.ரா.வின் மு.த பற்றிய பாரதியாருடன் ஒப்பிட்ட கருத்து பற்றியும் நான் எழுப்பிய கேள்வியினைத் தொடர்ந்து வெடித்த தர்க்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்று தர்க்கித்தவர்.

உரையாடுகையில் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி, மெல்லுய புன்னகையுடன், மெல்லிய கரகரத்த குரலில்  இவர் உரையாடும் பாங்கு இன்னும் என் உள்ளத்தில் படம் விரிக்கிறது.  

சிலரது மறைவு எதிர்பாராத தருணங்களில் நடந்து  விடுகின்றது. இவரது மறைவும் அத்தகையது.

இருப்பினும் இவரது சமூக, அரசியற் செயற்பாடுகள் மற்றும் இதழியற் செயற்பாடுகள் முக்கியமானவை. கனடாத் தமிழ் இலக்கியத்தில் 'தேடல்' சஞ்சிகையின் பங்களிப்பு முக்கியமானது, 'தேடகம்' அமைப்பினரின் பங்களிப்பு கலை, இலக்கிய மற்றும் சமூக,அரசியற் செயற்பாடுகளில் முக்கியமானது. இவர் இவற்றினூடு  செயற்பட்டிருக்கின்றார். அவ்வகையில் இவரது பங்களிப்பு முக்கியமானது.  வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.