தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னால் மீண்டும் வேலைக்கு சென்று, வழக்கம் போல் சாமுடன் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை.  மாதத்தில் முதலாவது செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டத்திற்கு வருவார்கள். என்பதால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் வழக்கத்தை விட இறுக்கமான தன்மை தெரியும். வேலை செய்பவர்களின் மனங்களில் பதற்றம்,அவர்கள் நடக்கும் வேகம் வழக்திலும் அதிகமாக இருப்பதில் தெரிந்து கொள்ள முடிந்தது. நாய் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அரைக்கால்சட்டையும் நீல பெனியனும் அணிந்து கொண்டு கரகரத்த குரலில் கட்டளைகளை இட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வேலை செய்யும் ஜோனும் மாவினும் சிரித்தபடியே தங்கள் வழக்கமான விடயங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். பூனைப்பகுதியில் கெதர் வழக்கத்திலும் பார்க்க  அந்த பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தார். அங்குள்ள  பரிசோதனை மேசையை முகம் தெரிவது போல் துடைத்து வைத்திருந்தார்கள். கிருமிநாசினி கலந்த நறுமணம் அந்த இடத்தில் நிறைந்து இருந்தது.

பூனை, நாய் பகுதியை பராமரிப்பவர்கள் வழக்கத்திலும் பார்க்க பதற்றமாக இருப்பதற்கு காரணம் அந்தப் பகுதிகள் நிர்வாக உறுப்பினர்களின் சுற்றுலா மையங்களாகும். பிணிக்கும், வைத்தியத்திற்கு கொண்டு வந்த மிருகங்கள் வழக்கம்போல் தங்களின்  இருப்பை வெளிக்காட்டியபடி சீறுவதும் குரைப்பதுவுமாக இருப்பதால்தான் அது மிருக வைத்தியசாலை என்பது தெரிந்தது. அவைகளுக்கு மனிதர்கள்போல் பாவனை செய்யத் தெரியாது. பெரும்பாலான உறுப்பினர்கள் மதியத்திற்கு வந்து வைத்தியசாலையை சுற்றி பார்த்தே களைத்து விடுவார்கள். அவர்கள் வந்ததும் வழக்கமாக தன் அறையில் அடைகாக்கும் செயலாளர் தனது  வயிற்றை தூக்கிக் கொண்டு உற்சாகமாக ஓடியாடி வேலை செய்வது போல் காட்டிக்கொண்டு திரிவது பார்பதற்கு நாடகமாகத் தெரியும். அந்த செவ்வாய்கிழமை வைத்தியசாலையின் பரபரப்பு சிலோமோசனில் நடைபெறும் நாடகம்போல் காணப்படும். வழமையாக நிர்வாகக் குழுக் கூட்டம் மணி  இரண்டில் இருந்து நாலு மணிவரை நடைபெறும். அன்று மதியம் இரண்டு மணியில் இருந்து மூன்று மணிவரையும் நடந்த கூட்டத்தில் டொக்டர் காலோஸ் சேரத்தின் ராஜினாமாக் கடிதத்தை ஏற்பது பற்றிப் பேசப்பட்டது. இரண்டு கிழமையாகியும் தனது முடிவை காலோஸ் மறுபரிசீலனை செய்யாததால் நிர்வாகக்குழுவிற்கு வேறு வழி  இருக்கவில்லை.

திருமதி ஓச்சாட்  இந்தப் பிரச்சனைக்கு காரணம் நீர்தான் என செயற்குழுவின் காரியதரிசியான ரொன் ஜொய்சை நோக்கி சொல்லத் தவறவில்லை. இந்த நிலையில் வெளியில் இருந்து ஒருவரைத்  தலைமை வைத்தியராக நியமிப்பது  சுலபமான விடயமில்லை என்பதால் குழுத்தலைவர்  திரு லோட்டன் யாரை சிபார்சு செய்கிறீர் என ரோன்னிடம் கேட்டபோது ‘ரிமதி பத்ததோலியஸ்தான் சீனியர். அவரை நாங்கள் கேட்போம்’ எனச் சொல்லப்பட்டது. கூட்டத்தின் இடைவேளையில்ரொன்ஜொய்ஸ் , ரிமதி  பத்ததோலியஸ்சை தனது அறைக்கு அழைத்து ‘உம்மைத்தான் நான் தலைமை வைத்தியர் பதவிக்கு சிபார்சு கூறியுள்ளேன்’ என்றார்

‘நான் இன்னும் ஆறுமாதங்களில் எனது கிளினிக்கை தொடங்க போகிறேன். இந்த வேலையை என்னால் ஏற்க முடியாது. ’எனக் கூறி தனது தோளை அசைத்தான் ரிமதி.

‘நான் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறுகிறேன். அது வரையும் வைத்தியசாலையை பிரச்சனை எதுவும் இல்லாமல் நடத்த விரும்புகிறேன்.’

‘இந்த வைத்தியசாலையில் உள்ள சிக்கல்களை சீர்படுத்தி சுமுக நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒருவருடமாவது செல்லும்.’ என சிரித்தபடி மொட்டையான தலையை தடவினான்

அவனது வார்தைதைகளில் குத்தலாக வந்த நகைச்சுவையை சட்டை செய்யாமல் ரொன் ஜொய் மேலும் தொடர்ந்து ‘நாங்கள் வெளியில் இருந்கு வேலையை விளம்பரப்படுத்தி அவர்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்முகப் பரீட்சை நடத்தி ஒருவரை உள்வாங்குவதற்கு ஆறுமாதங்கள் வேண்டும். அது வரையும் வைத்தியசாலையை பார்த்துக்கொண்டால் போதும். உமக்கு அதிக வேலையிராது என நினைக்கிறேன்.’

‘அப்படி என்றால் நான் தற்காலிகமாக பதவியை எடுக்கிறேன்’

ரிமதி பத்ததோலியஸ்சின் மனதுக்குள் இந்த வைத்தியசாலையில் குறைந்த பட்சமாக இங்குள்ள களைகள் நீக்குவதற்காகவாவது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும் என்பது  இப்பொழுது தீர்மானமாக இருந்தது.

ரோன்னோடு உள்ளே சென்ற ரிமதி பத்ததோலியஸ் அங்குள்ளவர்களிடம் ‘நான் இங்க வேலை செய்வதனானால் நீங்கள் சில உதவிகள் செய்யவேண்டும்.’

‘என்ன உதவியை செய்ய வேண்டும் என விரும்புகிறீரகள்;’ என்றார் குழுவின் தலைவரான திரு லோட்டன்.

புதிய தலைமை வைத்தியருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு முழு நிர்வாக குழுவும் ஆவலாக இருந்ததை அவர்களது பிரகாசமான முகங்களில் தெரிந்தது.

‘நான் ஒரு வருடமாக இந்த வைத்தியசாலையில் வேலை செய்வதால் இங்கு பல விடயங்களை அவதானித்து வருகிறேன். இந்த வைத்தியசாலையை போல் அவுஸ்திரேலியாவில் ஒரு உன்னதமான நோக்கத்துடன் அமைக்கப்பட்ட வைத்தியசாலை வேறு எதுவுமில்லை. கொள்கை ரீதியிலும் அமைப்பு நீதியிலும் மிகச் சிறந்தது. நான் வேலை செய்யக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பம் எனது வாழ்க்கையில் ஒரு வரப்பிரசாதம். இங்கு  ஒரு வருடத்தில் கிடைத்த அனுபவம் மற்ற இடங்களில் ஐந்து வருடங்கள் வேலை செய்திருந்தாலும் கிடைத்திராது. இங்கு வேலை செய்பவர்களில் ஏராளமானவர்கள் அர்ப்பணிப்போடு தங்கள் வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் பணத்துக்காக செய்வது போல் எனக்குத் தெரியவில்லை. ஆத்மார்த்தமாக மனநிறைவோடு தங்கள் வேலைகளை நிறைவேற்றுகிறார்கள்.  இந்த நிலையில் ஒரு சிலர்  பழக் கூடையில் உள்ள அழுகிய அப்பிள்போல் மற்றவர்களையும் பழுதாக்கும் நிலை இருக்கிறது. அந்த அழுகிய ஒரு சில அப்பிள்களை எடுத்து விட விரும்புகிறேன். அதற்கான குறைந்த பட்சமான உதவியை நீங்கள் செய்ய வேண்டும்.’

‘நீங்கள் எவரையாவது குறித்து சொல்கிறீர்களா?’

‘தற்பொழுது வேலை செய்யும் வைத்தியரில் இலங்கையில் இருந்து வந்த  சிவா சுந்தரம்பிள்ளை இந்த வேலையை செய்வதற்கு சரியான ஆளில்லை. அவரது  தொழில், தகுதி,  வேலை செய்யும் விதம் என்பவற்றில் எனக்கு சந்தேகம் உண்டு. மதிய வேளையில் மது குடித்து விட்டு வருகிறார். அவர்; மட்டும் மதுச்சாலைக்கு போனாலும் பரவாயில்லை. தன்னோடு வேலை செய்பவர்களையும் கொண்டு செல்கிறார். மெல்பேனில் உள்ள கீழ்த்தரமான கிளப்புகளுக்கு செல்கிறார். .அங்கே போவது அவரது தனிப்பட்ட விவகாரம். ஆனால் வேலை நேரத்தில் மது அருந்திவிட்டு வேலை செய்வது இந்த வைத்தியசாலைக்கு நல்லது அல்ல. பொது மக்களுடன் வேலை செய்யும் இந்த உன்னதமான தொழிலுக்கு ஏற்றதல்ல. இவ்வளவு காலமும் காலோஸ் அவரது நண்பனானதால் இங்கு வேலை செய்யும் போது அவரது தவறுகளை பொறுத்துக் கொண்டிருந்தார். அவரை வேலையில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும்.

‘ஒருவரை இலகுவில் வேலையில் இருந்து நிறுத்த முடியாது. அதுவும் எச்சரிக்கையொன்றை செய்யாமல் வெளியேற்ற முடியாது’ என்றார் லோட்டன்.

‘ பெரிய தவறுகள் செய்தால் உடனடியாக வெளியேற்ற முடியும். சட்டத்தில் இடம் உள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை ஒரு எலும்பு சத்திர சிகிச்சை செய்துள்ளார் .அந்த எக்ஸ்ரேயை நீங்களே பாருங்கள். அந்த நாயின் எலும்பு குணமடையாது. நிச்சயமாக குடித்து விட்டுத்தான் இந்த ஒப்பரேசனை செய்திருப்பார் எனக் கருதுகிறேன் என தயாராக வைத்திருந்த ரோசியின் எக்ஸ்ரேயை காட்டியபோது பலருக்கு அதன் தாற்பரியம் விளங்காவிட்டாலும் இந்த மனிதர் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வைத்துக் கொணடுதான் சொல்லுகிறார் என நினைத்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

‘எவ்வளவு காலம் சிவா சுந்தரம்பிள்ளை இங்கு வேலை செய்கிறார்’ மீண்டும் திரு லோட்டன்.

‘ஒரு வருடமும் கூட ஆகவில்லை’

‘இது மிருக வைத்தியர் சம்பந்தப்பட்ட விடமாதலால் நாங்கள் தலையிட முடியாது.
அவரை வேலையில் இருந்து நீக்கும்  முடிவை நீர் எடுத்தால் அதில் நாம் தலையிடமாட்டோம்.

அப்படித்தானே ரொன் ’எனக் கூறியபோது ரொன் ஜொய்ஸ் தலையசைத்தார்.

இந்தப் வாக்கியம் மூலம் நிர்வாகக் குழுவினர் தலைமை வைத்தியரின் முடிவினால் ஏற்படும் எதிர்கால பிரச்சினைகளில் இருந்து தாங்கள் விலகிக் கொண்டதோடு ‘நீ எடுக்கும் முடிவின் விளைவுகளுக்கு நீயே பொறுப்பாளி’ என மறைமுகமாக சொல்லியது அவசரத்தில் பழிவாங்கும் உணர்வில் இருந்த ரிமதி பத்ததோலியஸ்க்கு புரிந்திருக்கவில்லை.

வெறுப்புடன் கோபமும் ஒன்றாகும்போது   மனிதமனம் தனது எதிராளியை பழி வாங்க துடிக்கிறது. சந்தர்பம் கிடைக்கும் போது அதை செய்து தனது மனத்தை சாந்தப்படுத்தத் துடிக்கிறது.  நவீனகாலத்தில் வேலை இடங்களில் சட்டங்கள் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு தண்டனை வழி முறைகளை  வகுத்து எழுதி தனி நபர் செயல்களை மட்டுப்படுத்துகிறது. இப்படியான சட்டத்தின் தொழில்பாடு மெதுவாக இருப்பதால் பலர் காத்திருக்காது தண்டனையை தங்கள் கைகளில் எடுத்து விடுகிறார்கள்.

ரிமதி பத்ததோலியஸ் சுந்தரம்பிள்ளை மேல் ஏற்பட்ட தனது கோபத்தை தீர்ப்பதற்கு இந்தப் பதவி பயன்படுகிறது என்பது அவருக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது அதை விட வைத்தியசாலையின் நன்மையும் இதில் கலந்து இருக்கிறது எனும் உணர்வு மனத்தில் அந்த  பழிவாங்கலை  அவனது  மனச்சாட்சியில் நியாயப்படுத்த முடிகிறது.

தலைமை வைத்தியராக அவரது நியமனம் உறுதி செய்யப்பட்டு, அந்த கடிதத்தில் செயல்குழு செயலாளர் ரொன் ஜொய்ஸின் ஒப்பமிட்டு  ரிமதி பத்ததோலியஸின் கையில் கொடுத்தார்கள்.இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு கடிதத்தைப் வலது கையால் புன்னகை கலந்த முகத்துடன் பெற்றுக் கொண்டதும், ரிமதி பத்ததோலியஸ்சுக்கு ஆனந்தம் தங்கவில்லை. இவ்வளவு விரைவில் தன் எதிரிகளைப் பழி வாங்குவதற்குச் சந்தர்பம் கூடி வரும் என நினைத்திருக்கவில்லை.காலோஸை தலைமைப் பதவியில் இருந்து இறக்குவதற்கு மட்டும் ரீவனுடைய உதவியைக் கேட்டிருந்தான். ஆரம்பத்தில் அது புஷ்வாணமாகியதால் விரக்தியடைந்து  இந்த வைத்தியசாலையை விட்டு விரைவாக விலகினால் நல்லது. இந்த இடம் நமக்கு பொருத்தமானது அல்ல என சோர்ந்து இருந்தவனுக்கு   இப்பொழுது காலோஸ் பதவி இராஜினாமா செய்ததால்  தனக்கு அந்தப் பதவி மரத்தில் கனிந்து கையில் விழுந்ததுபோல் கிடைத்திருப்பதே இரட்டை அதிஸ்டம். அதை விட சிவாவை வைத்தியசாலையை விட்டு அனுப்புவதன் மூலம் மேலும் காலோசுக்குப் பாடம் படிப்பித்து இந்த ரிமதி பத்ததோலியஸ் யார் என நிருபித்து விட்டுத்தான் இந்த வைத்தியசாலையில் இருந்து விலகுவேன். சிவாவின் துரதிஸ்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அந்த சம்பவம் நடநது விட்டது. இந்த விடயத்தை எனக்கு விளக்கமாக சொன்ன ரீவனை தலைமை நேர்சாக்கி விடவேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு   பல் வைத்திய அறையில் நாயோன்றின பல்லை சுத்தப்படுத்திய சுந்தரம்பிள்ளையிடம் சென்று “சிவா ,இன்று நான் உம்மிடம் பேச வேண்டும். நான் செயலாளர் அறையில் இருப்பேன்.’ என வார்த்தைகளை அதிகார தொனியில் உச்சரித்து விட்டு அந்த இடத்தை விலகிச் செல்ல முயன்றபோது ‘ரிம் எதை சொல்ல வேண்டுமானாலும் இங்கே சொல்லாம்.எதுவானாலும் சாம் அறிந்து கொள்வதில் எனக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.’ என்றான் சுந்தரம்பிள்ளை.

‘இந்த வைத்தியசாலையில் உமக்கு ஒரு மாதம் மட்டும்தான் வேலை. அதற்கு பின்பு வேறு இடத்தில் வேலை தேடவேண்டி வரும்’

முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னாலும் ஏளனம் தொனிப்பதை சுந்தரம்பிள்ளையால் புரிந்து கொண்டான். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளித்தபடி ‘யார் இந்த முடிவை எடுத்தது? என்ன காரணம்?’

‘நிர்வாகக் குழுவுடன் ஆலோசித்து நான் இந்த முடிவை எடுத்தேன். என்னைத்தான் இப்பொழுது தலைமை வைத்தியராக நியமித்துள்ளார்கள். நான் சில முடிவுகளை எடுத்து இந்த வைத்தியசாலையை நல்ல நிலைக்குக் கொண்டு வர நினைத்துள்ளேன். காரணத்தை தெரியப்படுத்த அவசியம் இல்லை’

‘ரிம் உமது நியமனத்துக்கு எனது வாழ்த்துகள். அதே போல் உமக்கு கிடைத்திருக்கும் அதிகாரத்தைப்  பயன்படுத்தி எடுத்த  முதலாவது முடிவுக்கு எனது நன்றிகள்’ வெளியால் சாதாரணமாக சொன்னாலும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்

அவரசப்படுவதோ ஆத்திரப்படுவதற்கோ இங்கு நேரமில்லை. விரைவில்  அடுத்த விடயத்தை எப்படி செய்யவேண்டும் செய்யவேண்டும் என மனத்தில் நினைத்தபடி தனது வேலையை செய்து கொண்டிருந்தான்.

பக்கத்தில நின்ற சாம் அதிர்ச்சியில சில நிமிடம் பேசவில்லை. அதன் பின் ‘பாஸ்ரட் எதற்காக பழி வாங்குகிறான். உம்மோடு என்ன பிரச்சனை? நான் நினைக்கிறேன் முதுகெலும்பு முறிந்த நாயை  கருணைக்கொலை செய்ததற்காக இருக்குமா? வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாதே?

‘இல்லை சாம்,  இவன் அதற்காக எதுவும் செய்யவில்லை. அந்த நாயை பார்த்திருந்தால் வேறு வைத்தியரும் அதே முடிவைத்தானே எடுத்திருப்பார். அவனுக்கு நான் ஒரு பொருட்டல்ல.. காலோஸைப் பழி வாங்க என்னை கருவியாக பாவிக்கிறான்.’

‘அப்படியானால் இவனை தட்டி வைக்கவேண்டும்’

‘இவனது நாகரிகமான வழியில்தான் நாம் செயல்படவேண்டும். இரத்தம் காயம் என்பது அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றதல்ல. நான் உடனே நிர்வாக குழு உறுப்பினர்ளை சந்திக்க வேண்டும்’.

சாமோடு பேசிய, போது நிர்வாக குழுவினரோடு என்ன பேசுவது என மனத்தில் நினைத்தபடி  செய்து கொண்டிருந்த நாயின்  பல்லை சுத்தம் பண்ணி முடித்ததும் நேரடியாக நிர்வாக குழு கூட்டத்து அறைக்கு சென்ற போது பெரும்பாலான உறுப்பினர்கள் வீடு  சென்று விட்டார்கள். திருமதி ஓச்சட் மற்றும் மூன்று நிர்வாக குழுவை சேர்ந்த பெண்கள் கேக் தின்றுகொண்டு  தேனீரை அருந்தியபடி இருந்தனர்.

எல்லோரும் எழுபது வயதைக்கடந்தவர்கள். கூட்டம் முடிந்தாலும் அவசரமாக வீடு போய் என்ன செய்யப்போகிறார்கள்? சாவகாசமாக குடும்ப விடயங்களையும் பேரப்பிள்ளைகளின் குறும்புகளையும் தங்களது பேச்சில் கேக்கோடு சேர்த்து பரிமாறிக் கொண்டிருந்தார்கள். பாதி திறந்திருந்த கதவின் ஊடாக அந்த நிர்வாக கூட்டம் நடந்த அறைக்குள் பச்சை சேர்ஜரி கவுணுடன்  பரபரக்க  சென்று சுந்தரம்பிள்ளை ‘இடையூறுக்கு மன்னிக்கவேண்டும். அவசரமாக உங்களிடம் பேசவேண்டும்’என மூச்சிரைத்தபடி கூறியதும்  திருமதி ஓச்சட் கனிவான  சிரிப்புடன் ‘நீங்கள் யார் என எங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே? அறிமுகம் செய்த பின்பு நாம் பேசுவோமே’ என்றார்.

அவர் சொன்ன விதம் சுந்தரம்பிள்ளையையும் அமைதிப்படுத்தியது. மற்ற பெண்களும் தேநீரை வைத்து விட்டு பேசுவதற்கு தயாராக முகத்தைத் திருப்பினார்கள்.

‘ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நீங்கள் என்னைத்தான் வேலையில் இருந்து விலத்தினீர்கள். இந்த வைத்தியசாலையில் கிட்டத்தட்ட ஒருவருடங்களாக வேலை செய்து வரும் டொக்டர் சிவா சுந்தரம்பிள்ளை.’

‘நாங்கள் உங்களை விலத்தவில்லை. அதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை. அதை செய்யக்கூடிய ஒரே ஒரு மனிதர்  டொக்டர் ரிமதி பத்ததோலியஸ் மட்டுமே.’

‘ரிம் உங்களால் நியமிக்கப்பட்டவர். அவர் தனக்கு கொடுத்த அதிகாரத்தை என்னை வேலையில் இருந்து நிறுத்துவதற்கு பயன் படுத்தியுள்ளார். இது ஒரு தனிபட்ட குரோதத்தால் நடந்த பழிவாங்கல். இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமானது டொக்டர் காலோஸ்க்கு எதிராக நடந்த கையெழுத்து வேட்டையில் நான் கையெழுத்து போடாதது மட்டுமல்ல அவரோடு நண்பனாகப் பழகினேன். அதை விட சமீபத்தில் டொக்டர் ரிமதி பத்ததோலியஸ்  நாயொன்றுக்கு கால்கள் இரண்டையும் ஒப்பரேசன் செய்தார்.  ஏற்கனவே அந்த நாய்க்கு   முதுகு முறிந்திருந்தது என இரண்டு நாட்களின் பின் என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படியான பல விடயங்களால் ரிம்முக்கு என்னில் மனக்குரோதம் ஏற்பட்டுள்ளது. இப்படித் தனிப்பட்ட குரோதத்தால் இந்த வேலையில் இருந்து நான் நிறுத்தப்பட்டேன். செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களால்  என்னைப் பற்றி செயலாளர் ரொன் ஜோய்சிடம் ஏதாவது புகார் கொடுக்கப்பட்டதா? சக வேலையாட்களிடம் தவறாக நடந்திருக்கிறேனா?  எனது வேலையில் தவறு என யாராவது எனக்கு எச்சரிக்கை செய்தார்களா? நானும் ரிம்மும் ஒரே வயதுக்காரர். ஒரேகாலத்தில் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள். எனது வேலையில் தவறு காண்பதற்கு எங்களிலும் பார்க்க சீனியரான ஒருவரை நீங்கள் நியமித்து எனது வேலையில் தவறு கண்டால் நான் வேலையை விட்டு உடனே இராஜினாமா செய்யத் தயார்’

சுந்தரம்பிள்ளை சொல்ல நினைத்த விடயங்களை இடைவெளி இல்லாமல் சொன்னபோது எந்தக் குறுக்கீடும் இருக்கவில்லை. அவதானமாக நால்வரும் கேட்டனர். ஆறுதலாகவும் அமைதியாகவும் திருமதி ஓச்சட்டிடம் இருந்து பதில் வந்தது.

‘உங்களது வார்த்தையில் உள்ள விடயங்கள் எங்களுக்கு புரிகிறது. டொக்டர் ரிமதி  பத்ததோலியஸ் தனது முடிவை எம்மில் திணித்து விட்டார். எதற்கும் கவலைபடவேண்டாம். நாங்கள் முடிந்தவரை இதை மீண்டும் பரிசீலிக்கிறோம்.’ என திருமதி ஒச்சாட்டால் உறுதியளிக்கப்பட்டது

சுந்தரம்பிள்ளைக்கு அந்த வார்த்தைகள்  ஆறுதலாக இருந்தாலும் முற்றான திருப்தியை அளிக்கவில்லை. இந்தச் சதியில் ரொன் ஜொய்வுக்கும் பங்கு இருக்க வேண்டுமென்ற சந்தேகம் தட்டியதும் அவரை நேரடியாக சந்தித் விரும்பிய சுந்தரம்பிள்ளை ரோன் ஜொய்சிடம் சென்றபோது  அவரது அறைக்கதவு பாதி திறந்திருந்தது. உள்ளே கதவைத் தட்டாமல் நுளைந்தபோது  நிர்வாக குழு கூட்டத்தில் முடிவுகளை எழுதியதால் ஏற்பட்டகளைப்பில் தனது கதிரையில் கண்களை மூடிக்கொண்டு பின்னோக்கி சாய்ந்தபடி கோழித் தூக்கத்தில் இருந்த மனிதர் அரக்கப் பரக்க விழித்தார்.  கையில் இருந்த பந்தை எதிர்பார்க்காமல் ஒருவரின் முகத்தில் விட்டு எறிவது போல் ‘என்னை வேலையில் இருந்து தூக்கியதாக ரிமதி பத்ததோலியஸ் மூலம் அறிந்தேன். நான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு நியமனம் உங்களது கையெழுத்துடன்  கடிதமாக எனக்கு கிடைத்தது. அதே போல் வேலையை விட்டு தூக்கும் கடிதத்தை நீங்கள்தான் தரவேண்டும். நான் எனது வக்கீல் மூலம் எதுவித முன்னெச்சரிக்கையும் தராமல் வேலையில் இருந்து விலக்கியதாக உங்கள் மீதும் வைத்தியசாலை மீதும்  வழக்கு தொடரவிருக்கிறேன்.’

தூக்கத்தில் எழுப்பி, கன்னத்தில் அடித்தது போன்று இருந்த வார்த்தைகளால் மனிதர் கலங்கி நெஞ்சை பிடித்துக்கொண்டு ‘எனக்குக் கொஞ்ச அவகாசம் தாருங்கள். ரிம்மிடம் பேசவேண்டும்’ என சொல்லியபடி எழுந்தார்.

‘உங்களுக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறேன்.  எனக்கு ரிம் எந்த அவகாசமும் தரவில்லை. எனக்கு கடிதம் நாளை தர வேண்டும். இல்லாவிடில் வைத்தியசாலையின் பெயரோடு உங்களதும் ரிம்மினதும் பெயரைப் போட்டு வழக்குத் தொடர்வேன்.’ என கதவை அடித்து மூடிவிட்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறினான்.

சிறிது துாரத்தில்  நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி நடந்த போது மேற்கு நோக்கி பார்த்தபோது உச்சிவானம் மாலை வெயிலில் அதிக மேகங்களற்று நிர்மலமாக இருந்தது.தொடுவானப் பகுதி மட்டும் கருமேகங்கள் நிறைந்து அவற்றின் ஓரங்கள் சென்னிறமாக காட்சியளித்தன. கார் நிறுத்தும் இடத்தில் இரண்டு பெரிய மாடிக் கட்டிடங்களுக்கு இடையே நின்ற யுகலிக்கப்ட்டஸ் மரக்  கிளைகள் சூரியனை மறைத்து கொண்டு அந்த இடத்திற்கு நிழல் கொடுத்து நின்றன.மற்றய இடங்கள் மாலைவெயிலில் குளிக்கும் போது எப்படி இந்த இடத்தை யுகலிக்கப்ட்டஸ் தனது ஆட்சியால் நிழல்  கொடுத்திருக்கிறது?

அந்த மரம் உயர்நத கட்டிடங்களின் இடைவெளியில் வளந்து இருக்கிறது. இந்தக் காட்சியை எப்படி இந்த ஒரு வருடமாக தவறவிட்டேன் என நினைத்தடி காருக்குள் அமர்ந்தான்.

ரிம்மினால் ஏற்பட்ட கொதிப்பு மனத்தின் அடங்க இந்த சிந்தனை உதவியது.


இந்த அவசரமான வேலை நீக்கல் விடயம் பற்றிக் கேள்விப்பட்டதும் பலரும் நிர்வாகத்தில் அதிருப்தி அடைந்தார்கள். அவர்களது கருத்து சிவா ஓபரேசனில் தவறாக செய்ததா  இல்லையா என்பது அல்ல. ஒருவரை வேலையில் இருந்து நிறுத்துவதற்கு முன்பாக எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும். அது இல்லாமல் திடீரென வேலை நிறுத்துவது சரியானது அல்ல. அவுஸ்திரேலிய சட்டத்திற்கு புறம்பானது என்ற ரீதியில் இருந்தது. இதற்கு அப்பால் இப்படியான விடயம் யாருக்கும் நடக்கலாம் என்ற பயத்தையும் உருவாக்கியதால் சுந்தரம்பிள்ளையின்பால் அனுதாப அலை உருவாகியது. அதை வார்த்தைகளால் தெரிவித்தனர் பலர். போலின் கண்ணீரை உகுத்தபடி  தனது ஆறுதலைத் தெரிவித்தாள். சாம் ஆத்திரத்தில் குமுறினான். அன்ரு தனக்கே உரிய நக்கலினூடாக தனது மலத்தில் ரிம் காலை வைத்ததாக சொல்லிவிட்டுச் சென்றான்.இப்படியான அனுதாபங்கள் சிறிது ஆறுதலை அளித்த போதும் அவமானத்தைக் கொடுத்தது.

ரிம் கொடுத்த ஒரு மாதம் சுந்தரம்பிள்ளைக்கு சில உண்மைகளைப் புரியவைத்தது. பலரது நிலைப்பாடுகள் நட்புக்கள் தெரியவந்தது. ஒரு மாதத்தில் இந்த இடத்தை விட்டு போகவேண்டும் என்பது வேதனையை அளித்தது. சிலர் சுந்தரம்பிள்ளைக்கு ஆதரவுக் கடிதம் எழுதி நிர்வாக குழுவிடம் கொடுத்தார்கள். வைத்தியர்கள் மத்தியில் இந்த விடயத்தைப் பேசுவதற்கு காலோஸ் சேரத்தால் நாள் குறிக்கப்பட்டது. அத்துடன் அந்தக் கூட்டத்திற்கு ரிமதி  பத்ததோலியஸ் சமூகமளிக்கும்படி கேட்கப்பட்டது. காலோஸ் மேல் அதிருப்தியான வைத்தியர்கள் வெளிப்படையாக இந்த விடயம் தங்களுக்கு அப்பாற்பட்டது மற்றும் தேவையற்றது என்றதுடன் கூட்டுச் சேராத கொள்கையை எடுத்தனர். வைத்தியசாலை இரண்டாகப் பிரிந்து இயங்கியது.

பல  நம்பிக்கையூட்டும்  அறிகுறிகள் வைத்தியசாலையில் தென்பட்டாலும் சுந்தரம்பிள்ளை அமைதியற்ற நிலையில் இருந்தான்.


வேலை நீக்கம் விடயமாக மெல்பேனில் உள்ள  ஒரு வழக்கறிஞரைப் பார்த்துச் சுந்தரம்பிள்ளை பேசிய போது அவர் ‘இந்த வேலை நீக்கம் தவறானது. திடீரென நிர்வாகத்தால் முடிவு எடுக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறது. இதில் இனவாதமும் கலந்திருக்கிறது என்பது நீர் சொல்லும் கதைகளில் இருந்து தெரிகிறது. சகல இன மத பால் வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரையும் சமமாக வேலைத்தலத்தில் நடத்தவேண்டும் என்ற சட்டத்தைக்கூட மீறி இருக்கிறார்கள். இப்படியான சட்டமீறலை அனுமதிக்க முடியாது. உமது நிலையில் இருந்தால் நான் வேலைக்கு செல்லாமல் இந்த வைத்தியசாலை மீது தவறாக வேலை நீக்கியதற்காக தண்டனைப் பணத்தை கேட்டு வழக்கைப் போட்டு விட்டு அந்தப் பணத்தில் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிப்பேன். இந்த வழக்கை நான் பணம் இல்லாமல் எடுத்து  நடத்த நான் தயார். நீர் வழக்கு வென்ற பின்பு அதைக் கொடுத்தால் போதும்’ என்றார்.

வழக்கறிஞரினது  வார்தைகள் உறுதியாக  வெளிவந்த போது முகத்தில் சீரியஸ் தெரிந்தது. மனத்தில் அப்படிச் செய்து பார்போம் என்ற நினைவு சில கண நேரத்தில் வந்து போனாலும் அதைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றத்தில் காணிவிடயமாக பத்துவருடங்கள் சுந்தரம்பிள்ளையின் தந்தையார் இழுபட்டது, கடைசியில் தோற்றது  நினைவுக்கு எச்சரிக்கையாக வந்தது.

‘இந்த விடயத்தை நான் ஆற அமரச் சிந்திக்க வேண்டும். போர்க் காரணங்களால் இலங்கையில் தொலைத்த எனது வாழ்க்கையை இந்த நாட்டுக்கு வந்து தொடங்குவதற்காக இந்த வேலையில் சேர்ந்தேன். என்னை வேலையில் இருந்து நீக்கிய ரிமதி பத்ததோலியஸ் மீதுதான்  கோபம் உள்ளது. ஆனால் வழக்கை வைத்தியசாலையின் மேல்தான் நான் வழக்கு தொடரமுடியும்.  வைத்தியசாலை மீது எதுவித காழ்ப்புணர்வும் எனக்கு  இல்லாததோடு மதிப்பும் மரியாதையும் உள்ளதால் வழக்கு தொடர தற்போது  விரும்பவில்லை.  மேலும் இது சம்பந்தமாக யோசிப்பதற்கு எனக்கு காலம் தேவை’ எனக் கூறினார்.

‘உமது சிந்தனையில் நியாயம் உள்ளது. இந்த நிலையில் வேலையை திரும்ப பெற நீர் முயலுவதானால்  நான் தரும் கடிதத்தை நிர்வாக குழுவிடம் கொடுத்து பதிலைத் தரும்படி கேளும். இதன்மூலம் வைத்தியசாலை நிருவாகம் உமது விடயத்தை சீரியசாக எடுத்துக்கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளது.’ எனக் கூறி தந்த கடிதத்தில் வேலை நீக்கம் வாயாலே செய்தது. சட்ட ரீதியாக ஏற்க முடியாது. அதை எழுத்தில் தரும்படி எழுதப்பட்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் வேலை தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரின் கடிதத்தை ரொன் ஜொய்சிடம் கொடுப்பதற்கு அவரது அறைக்கு சென்ற போது கதவு மூடி இருந்தது. கதவைத் தட்டி செல்லும் மரியாதையைத் தவிர்த்து மூடியிருந்த கதவைத் தள்ளியபோது கோப்பைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதர் நிமிர்ந்து நாற்காலியில் உட்கார்ந்து சிறிது கோபத்துடன் பார்த்தார். அதை அலட்சியப்படுத்திவிட்டு  கடிதத்தை அவர் கையில் கொடுக்காமல் சிறிது சத்தத்துடன் அவரது மேசையில் வைத்தபோது ‘இது என்ன.  என்ன’ என்று பதற்றத்துடன் நாற்காலியை விட்டு அவர் எழுந்தபோது  அவரது தொப்பை சிறிது தாமதமாக அசைந்தது. ‘படித்து பாரும்’என அவமரிதையான  தொனியில் சொல்லி விட்டு வெளியே வந்த போது ஏற்கனவே வேலையில் இருந்து நீஙக்கப்பட்டு விட்டாகியது. இனி இவருக்கு என்ன மரியாதை என்ற எணணம் சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் இருந்தது. வழமையான நாகரீகமாக நடக்கும் தன்மைக்கு மாறாக நடந்தது அந்தரமாக இருந்தது. ஆனாலும்  ரிமதிக்கு இந்த வேலையைக் கொடுத்த முழுப் பொறுப்பும் ரொன் ஜொய்ஸ்க்குதான்  சேருமென்ற தகவல் ஏற்கனவே நிர்வாக குழு அங்கத்தினர் மூலம் காலோஸ்சுக்குக்  கசிந்து விட்டது. ஏற்கனவே ரொன் மேல் இருந்த வெறுப்பு பலமடங்காக பெருகி இருந்ததால் தனது நடத்தைக்கு நியாயமானது என்ற எண்ணமும் ஏற்பட்டது.

காலை ரவுண்டைச் செய்வதற்கு நாய்களின் கூட்டுக்குச் சுந்தரம்பிள்ளை சென்றபோது அந்த அவசர சிகிச்சைப் பிரிவில்  திறந்திருந்த கூட்டினுள் ஒரு பெரிய பெண் ரொட்வீலர் நாய் இறந்தது போல அசைவுகள் அற்று  கூட்டுக்குள் கிடந்தது. அந்த இடத்தில் நாய்களின் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் தனது வெள்ளை ரீ சேட்டும் காக்கி அரை கால்சட்டையுடன் உரத்த குரலில் ‘இரவு ஆபிரேசன் செய்த நாய் இறக்கும் தறுவாயில் இருக்கிறது. இன்னும் ஒரு வைத்தியர்களும அதைக் கவனிக்க வில்லை’ என தனது கட்டையான குரலில் மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டு நின்றார். சுந்தரம்பிள்ளைக்கு  மேவிசின் மேல் மதிப்பு உண்டு. கட்டையான குரலில் மற்றவர்களை அதட்டி வேலை வாங்கினாலும் எவரிலும் குறை சொல்வதோ பாரபட்சம் பார்ப்பதும் கிடையாது.
வேலை முடிந்ததும் அந்த கட்டையான குரல் கூட அதிரசம் போல் இனிமையாகிவிடும்.

அருகில் சென்று பார்த்த போது நாலு கால்களையும் நீட்டியபடி கிடந்த அந்த நாற்பது கிலோ ரொட்வீலரின் சுவாசம், மெதுவாக நெஞ்சாம் கூடு அசைந்து கடைசி நிமிடத்திற்காக காத்திருப்பது  போல் இருந்தது. உடலைத் தொட்ட போது பனிக்கட்டியை தொட்டது போல் விரல் நுனிகள் விறைத்தன. உதட்டைப் பிரித்து முரசைப் பார்த்த போது  இரத்த ஓட்டம் அற்று வெளுத்து  இருந்ததும் நாக்கு நீலம்பாரித்து  தெரிந்தது. வாழ்வின் கடைசி நிமிடங்களில் உயிர் உடலில் இருந்து விடைபெற கையை அசைத்துக் கொண்டு நிற்பதைப் புரிந்து கொண்டதும், அந்த நாயை தூக்கிக் கொண்டு சேலையினையும் ஒட்சிசனையும் கொடுத்த அதை உயிர் பிழைக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  அந்த நாயை சாமுடன் ரொலியில் கொண்டு வந்து ஆபரேசன்  தியேட்டரில் அரைமணி நேரம் ஒட்சிசன் கொடுத்த பின்புதான் அதற்கு சிறிது இதயம் பலமாக அடித்தது. இரத்த ஓட்டம் சீராகியது. சுவாசம் ஓழுங்காகியது.  அப்படி இருந்தும் முன் முன்காலில் உள்ள சுருங்கிய  நாளத்திற்குள் கதீற்றரறை ஏற்ற முடியவில்லை. அதனால் தோலை சிறிது வெட்டி இரத்த  நாளத்தை  புதையல் தேடுவது போல் தேட வேண்டியதாக இருந்தது. அப்பொழுது சாம் ரிம்மை தூசணத்தால் ஏசியபடி ‘இப்படி பொறுப்பில்லாமல் செய்திருக்கிறான். மற்றவர்களது தவறுகளைத் தேடியலைபவன் தனது விடயங்களை சரியாகச் செய்யவேண்டும்.’ என்றான். சுந்தரம்பிள்ளை எதுவும் பேசவில்லை. மேலும் பேசும் மனநினையில் இல்லை. ரொட்வீலர் நாயின் உயிரை பிடித்து வடக்கு  நோக்கிய அதன் பயணத்தை தடுத்து  நிறுத்த வேண்டும் என்பதே இப்பொழுது ஒரே நோக்கம்.  ஏதாவது பிழை நடந்தால் முதலில் வைத்தியசாலைதான் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பது அதன் பின்புதான் மற்றவை.

இரத்த நாளத்தைிற்க்குள் கதீட்ரரை செலுத்தி சேலையின் ஓடத் தொடங்கியதும் நிலமை சீரடைந்தது மட்டுமல்ல மெதுவாகக் கண் இமைகளை அசைத்தது. சுந்தரம்பிள்ளை இனிப் பயமில்லை என ஆறுதலடைந்து சாமிடம் இருந்த அதனது மருத்துவ ரெக்கோட்டை பார்த்த போது சீழ் பிடித்த கருப்பையை முதல் நாள் இரவு எமேஜன்சியாக ரிமதி பாத்ததோலியஸ் வெட்டி அகற்றி இருக்கிறான். ஆனால் அந்த நாய்க்கு சேலையினோ அல்லது வலியைப் போக்கும் மருந்தோ கொடுக்கவில்லை. நடு இரவில் வந்ததால் அவசரத்தில் இந்த ஆபரேசனைச் செய்து விட்டு வீடு சென்றிருக்கிறான்.  வைத்திய சாலையில் சில வியாதிகளை எப்படி கையாள வேண்டும் என்று அமைப்பு விதிப்படி நடக்கவில்லை.

மிருக வைத்தியத்துறை ஆரம்பத்தில் இராணுவத்தின் தேவைகள் சார்ந்தாக இருந்தது. சண்டைக்குப் பாவிக்கப்படும் குதிரைகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு  வைத்தியம் செய்வதற்குத் தொடங்கியது. ஆனாலும் இதற்காக தனிப்பட்ட பயிற்சி துறையாக ஆரம்பிக்கபடவில்லை. தலைமுறை தலைமுறையான அனுபவம் கொண்டவர்கள் மருத்துவத்தில் ஈடுபட்டார்கள். ஐரோப்பாவில் ஜிப்சிகள் மத்தியில் குதிரை மருத்துவர்கள் பலர் இருந்ததாக சரித்திரம் சொல்லுகிறது. ஐரோப்பிய பெருநிலப்பிரதேசத்தில் நாடோடிகளாக பல நூற்றண்டுகள் குதிரைகள் இழுக்கும் கரவன்களில் இவர்கள் செல்வதால் குதிரைகளுடன் அன்னியோன்னியமாக வாழ்ந்தார்கள். இவர்களில் பலர் குதிரைகளை பழக்குபவர்களாகவும் வைத்தியம் செய்பவர்களாகவும்  இருந்தனர்.

பதினேழாம் நூற்றாண்டில் ரிண்டபெஸ்ட் என்ற வைரஸ் நோய் மனிதர்களுக்கு பிளேக் நோய்க்கு  ஒப்பாக  பல மில்லியன்கள் மாடுகள் ஐரோப்பாவில் அழிந்தது. பிரான்சில் இந்த வியாதி கொள்ளை நோயாக கால்நடைகளை அழித்தது. பால், இறைச்சிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பஞ்சம், பட்டினி வந்தபோது போப்பாண்டவரின் தனிப்பட்ட வைத்தியரின் ஆலோசனைப்படி  கால்நடைகளின் நடமாட்டத்தை தடை செய்தும் நோயுற்ற மிருகங்களை கொலை செய்தும் இந்த கொள்ளை நோயின் பரம்பல் வேகம் குறைக்கப்பட்டது. ஆனாலும் இந்த நோயை முற்றாக ஒழிக்க முடியவில்லை. இந்தக் காரணத்தால் புதிதாக இந்த நோயை ஆராய்வதற்கும் புதிய விஞ்ஞானத்துறையாக அங்கீகரிக்கப்பட்டு  மிருக  வைத்தியத்துறை  லுயி மன்னனால் பிரான்சில் அங்கீகரிக்க்கப்பட்டது. அதன் பின் பலநாடுகள் பிரான்சைப் பின்பற்றின.

இரண்டு நூற்றாண்டுகளாக பூரணமான விஞ்ஞான துறையாக வளர்ந்த போது மனிதருக்கு உணவு  அளிக்கும் மாடு, பன்றி, செம்மறி என்ற மிருகங்களையும் இராணுவ உபயோகத்திற்கான குதிரைகளின் நோய்கள் என்பவைதான் முதலாம் உலகப் போர்வரையும் முக்கியப்படுத்தப்பட்டன. குதிரைகளின் முக்கியத்துவம் மோட்டர் வாகனங்களாலும் டிரக்ரர்களின் வருகையின் மூலமும் அருகிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின் மேற்கு நாடுகளில் மனிதர்களின் செல்லப்பிராணிகளான நாய் பூனை என்பனவற்றின் வைத்தியம்  முக்கியத்துவப்பட்டது. குதிரைகள் ஓட்டப்பந்தயத்தில் மட்டும் பங்குபற்றுவையாக மாறிவிட்டன.

தற்பொழுது மிருகவைத்தியர்களில் எழுபது வீதமானவர்கள் அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகளின் வியாதியைத் தீர்ப்பதில் ஈடுபடுகிறார்கள். அவற்றிற்கான நோய்களை கண்டறியும் ஆராய்ச்சிகளில் மிருகவைத்திய பல்கலைக்கழகங்கள் ஈடுபடுகின்றன. ஆரம்ப காலத்தில் மனிதர்களின் மருந்துகளை மிருகங்களின் உடலில் செலுத்தி ஆராய்ந்தார்கள். அதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள்தான் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பயன்பட்டன. . இப்பொழுது பெரும்பாலான ஆராய்வுகள், அந்தந்த மிருகங்களுக்காக பிரத்தியேகமாக செய்யப்படுகின்றன. தற்போது மிருகங்களின் நலன் பற்றிய விடயங்களில் மக்கள் விழிப்புணர்வு அடைவதால் மிருகங்களை விஞ்ஞான  ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவது, குரூரமான விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் பல புதிய  சட்டங்கள் உருவாக்கி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சில நோய்களை இப்படித்தான் அணுக வேண்டும் என விதிகள் உள்ளது. மிருகங்களின் வலியை முடிந்த அளவு சத்திர சிகிச்சையின் பின் குறைக்கவேண்டும்.  வலியைக் குறைத்தல் மனிதாபிமானமானது மட்டுமல்ல நோய் விரைவில் தீர வழி வகுக்கிறது. மனிதரை விட மிருகங்கள் வலியில் துன்பப்படும்போது பொறுத்துக் கொள்ளாமல் சத்திர சிகிச்சை செய்த இடத்தை கடித்துக் குதறிவிடும். வலி ஏற்படும்போது உடலில் சில இரசாயனப்பொருட்கள் சுரந்து இரத்தத்தை மற்றப் பகுதியில் இருந்து மூளைக்கு அனுப்பி மூளையை பாதுகாக்கும்.; இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இதனாலே காயம்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டம் குறைந்து வெளிறிய தோற்றத்தை முரசு, நாக்கில் பார்க்கலாம். இதற்காக இரத்த ஓட்டத்தை கூட்ட சேலையின் என்ற இரத்தத்திற்கு சமமான உப்பு கலந்த திரவம் இரத்தக் குளாய்களில் செலுத்தப்படும்.

இந்த ரொட்வீலர் நாய்க்கு  ரிமதி பாத்ததோலியஸ் ஆபிரசனுக்கு முன்பாகவோ பின்பாகவோ  வலி தீர்க்க  மருந்து கொடுக்கவில்லை. அத்தோடு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த சேலையினும் ஏற்றாமல் ஆபிரேசனை செய்திருக்கிறார். இந்த நோயைத் தீர்க்க எப்படி அணுகுவது என வைத்தியத்தில் கொடுக்கப்பட்ட விதிகளை மீறியது சுந்தரம்பிள்ளைக்கு ஆச்சரியமானது. அதற்கு ஒரே விளக்கம் களைப்பால் வரும் கவனக்குறைவு.   இரவுக்கு பின்னால் பல மணி நேரம் வேலை செய்யும் போது நடந்திருகிறது. இந்த ரொட்வீலர் நாய் இறந்திருந்தால் இந்த காரணங்களை நாயின் உரிமையாளரால் ஏற்றுக் கொள்ளமுடியுமா?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R