நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் தலைசிறந்த பழம்பெருங் காப்பியங்களாய்த் திகழ்கின்றன. வால்மீகி என்னும் முனிவர் இராமாயணத்தை வடமொழியில் எழுதியுள்ளார். இதைத் தழுவிக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தியான கம்பர் 'கம்பராமாயணம்' என்ற நூலைத் தமிழில் யாத்துள்ளார். 'கல்விச் சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று பாரதியார் சிறப்பித்துக் கூறியுள்ளார். கம்பராமாயணத்தில்  ஆறு காண்டங்கள், 112 படலங்கள், 10,569 பாடல்கள் உள்ளன. ஆறு காண்டங்களோடு தெய்வப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்த்துக் காண்டங்கள் ஒருமித்து ஏழாகின்றன. இனி, கம்பராமாயணம் பேசும் மகளிர் பெருமை பற்றிக் காண்போம்.

பட்டத்தரசிகள்

கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவரும் கோசல நாட்டின் தசரத மன்னனின் பட்டத்தரசிகளாவர். இவர்களுக்கு மகப்பேறு இல்லாதலால் தசரத மன்னன் கவலையுற்றான். இதையறிந்த கலைக்கோட்டு முனிவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஒரு கிண்ணத்தில் அமிர்தத்தை மன்னரிடம் கொடுத்துத் தேவியர்களக்குக் கொடுக்கும்படி பணித்தார். தசரத மன்னன் தன் மனைவியர் மூவருக்கும் அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்து, கிண்ணத்தில் ஒட்டியிருந்த அமிர்தத்தைச் சுமந்திரைக்கு மீண்டும் கொடுத்தான். மூவரும் கர்ப்பமுற்று, கோசலை- இராமன் என்ற குழந்தையையும், கைகேயி- பரதன் என்ற குழந்தையையும், சுமத்திரை- இலக்குவன், சத்துருக்கன் என்ற இரு குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

கைகேயி

கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவரசிகளும் தத்தமக்குப் பிறந்த இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன் ஆகிய நான்கு அரச குழந்தைகளையும் தமது குழந்தைகளாகக் கருதிப் பேதம் காட்டாது சீராட்டிப் பாராட்டி அரச குமாரர்களாக வளர்த்து வந்தனர். அரச குமாரர்கள் எல்லாக் கலைகளையும் கற்று முடித்திருந்தனர். இராமனுக்கு முடி சூட்டப்போவதாகத் தசரத மன்னன் பணித்தான். அதை யானை ஏறி முரசு அறிவித்து நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் சந்தோசப்பட்டு நாட்டை அலங்கரித்தனர். இதையறிந்த கைகேயியின் தாதியான மந்தரையெனும் கூனி விரும்பாதவளாய்ச் சூழ்ச்சி தீட்டத் தொடங்கினாள்.

'இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்

துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்.' ---- (1445)

கூனியானவள் கைகேயியை நாடி 'அரசியே! நாளை இராமன் முடிசூடி மன்னனாகப் போகிறான். அப்பொழுது பரதன் நிலை என்ன? உன் நிலை என்ன? இனிப் பரதன் நாட்டை ஆள முடியுமா? நீங்கள் இருவரும் காடேக வேண்டியதுதான். இனி உனக்குப் பொருளுமில்லைப் புகழுமில்லை. நான் கூறுவதைக் கேட்டால் பரதனைக் கோசல நாட்டுக்கு அரசனாக்குவேன். இதுதான் எனது திட்டம். முன்னொருநாள் மன்னன் உனக்கு இரு வரங்களைத் தந்தான். ஒரு வரத்தால் உன் மகனை மன்னனாக்கு. மறு வரத்தால் இராமனைக் காட்டிற்கு அனுப்பி அங்கே பதினான்கு ஆண்டுகள் வாழச் செய்.' என்றுரைத்தாள்.

'இரு வரத்தினில் ஒன்றினால் அரசுகொண்டு;  இராமன்

பெருவனத்திடை ஏழ்இரு பருவங்கள் பெயர்ந்து

திரிதரச் செய்தி ஒன்றினால்; செழுநிலம் எல்லாம்

ஒருவழிப்படும் உன்மகற்கு; உபாயம் ஈது என்றாள்.' ---- (1488)

கூனி கூற்றால் மனம் திரிந்தனள் கைகேயி. கூனிக்கு மாணிக்க மாலையும், நிதியமும் பரிசளித்தாள். 'நான் இந்த இரு வரங்களையும் பெறுவேன். அல்லது மன்னன்முன் உயிர் துறப்பேன். நீ சென்றுவா!.' என்றாள் கைகேயி.

கூனி போனபின் கைகேயி தன் செயற்கை அலங்காரங்களைச் சிதைக்கத் தொடங்கினாள். தான் அணிந்திருந்த பூமாலையைத் தரையில் வீசினாள்; மேகலை, கிண்கிணிச் சிலம்பு, கைவளையல் ஆகியவற்றையும் கழற்றி எறிந்தாள்;  நெற்றிக் குங்குமத்தையும் அழித்தாள்;  தலைவிரி கோலமாய்த் தரையில் உருண்டு புரண்டு படுத்தாள்.

'வளைதுறந்தாள் மதியினில் மறுத்துடைப்பாள் போல்

அளகவாள்நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள்.' --- (1492)

மன்னன் கைகேயி அரண்மனைக்கு வந்தான். அவள் கிடந்த கோலம் கண்ட மன்னன் மதி கலங்கினான். 'அரசி கைகேயியே! நடந்தது என்ன? உன்னை யார் எதிர்த்தார்? அவரை மண்ணில் மாய்த்து விடுவேன். சொல்.' என்றான் மன்னன். 'என்மீது இன்னும் இரக்கம் இருந்தால், அன்று நீங்கள் தருவதாகக் கூறிய இரு வரங்களையும் தந்துதவுங்கள்.' என்றாள் கைகேயி. இது ஒரு சிறு விடயம் என்று நினைத்து மன்னன் சிரித்துக்கொண்டு 'அந்த இரு வரங்களையும் இன்றே தருவேன். இது இராமன் மீது ஆணை!' என்றான். அதற்குக் கைகேயி 'இரு வரங்களில் ஒன்றால் என் மகன் பரதன் நாடாள வேண்டும். மறு வரத்தால் சீதையின் கணவன் (இராமன்) காடாள வேண்டும்.' என்று கூறினாள். 

'ஏயவரங்கள் இரண்டின் ஒன்றினால் என்

சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்

போய் வனம் ஆள்வது' எனப் புகன்று நின்றாள்

தீயவை யாவையினும் சிறந்த தீ யாள்.   --------  (1504)

கைகேயி கொட்டிய நஞ்சு வார்த்தைகளால் உடல் வெந்து தரையில் வீழ்ந்தான் மன்னன். இவளைக் கெஞ்சிப் பார்ப்போமென்று எழுந்த மன்னன் அவள் காலைப் பிடித்து விம்மி அழுது பார்த்தும் அவள் ஒன்றுக்கும் மசியமாட்டாளென நினைத்து 'உனக்கு இரண்டு வரமும் தந்தேன், நான் வானுலகம் போவேன், நீயும் உன் மகனும் எல்லாப் பழியையும் ஏற்கவும்.' என்று கூறி மூர்ச்சையானான்.

'ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள

மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வேன்!

வசைவெள்ளம்

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றாள்.' ---- (1538)

கைகேயியும் உறங்கி விட்டாள். நடந்தவை ஒன்றும் எவருக்கும் தெரியாது. விடிந்ததும் முடிசூட்டு விழாவுக்கு அரசர், அந்தணர் முனிவர் ஆகியோர் வரத் தொடங்கினர். வசிட்ட முனிவரும் வந்து விட்டார். சுப நேரம் வந்ததும் மன்னரை அழைத்து வருவதற்காக முதன் மந்திரி சுமந்திரன் கைகேயி அரண்மனைக்குச் சென்றார். மன்னனை அவனால் காணமுடியவில்லை. கைகேயி வந்து 'இராமனை அழைத்து வருக!' என்று சுமந்திரனுக்கு ஆணையிட்டாள். கைகேயி அரண்மனைக்கு வந்த இராமனிடம் 'உன் தந்தை சொன்னது ஒன்றுண்டு. அதை நான் இப்போது உனக்குச் சொல்வேன் கேட்பாயாக! -கடல்சூழ்ந்த உலகம் எல்லாம் பரதனே ஆளப் போகிறான்- நீ  கானகம் போய்த் தவம் செய்து, புண்ணிய நதிகளில் நீராடி, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வா- என்று அரசன் கூறினான்.' என்றாள்.

'ஆழிசூள் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்

தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம்மேற் கொண்டு

பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி

ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன் என்றான்.' ---- (1601)

இதைக் கேட்ட இராமன் பெரு மகழ்ச்சியடைந்து 'தாயே! மன்னன் கூறாவிட்டாலும் நும்பணி மறுப்பேனோ? என் தம்பி பரதன் பெறும் செல்வமெல்லாம் நான் பெற்ற செல்வமாகும். இச் செய்தியைத் தலைமேற் கொண்டேன். கானகம் செல்ல விடையும் பெற்றேன்.' என்றான்.

'மன்னவன் பணிஅன்று ஆகில்  நும்பணி மறுப்பெனோ என்

பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ

என்இதின் உறுதி? அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்

மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்.' --- (1604)

இதன்பின் கைகேயியை வணங்கினான். தந்தை இருப்பதான திசையைத் தலைதாழ்த்தி வணங்கினான். கோசலையின் அரண்மனைக்குச் சென்று தாயை வணங்கி 'உன் அன்பு மகன், என் தம்பி பரதனே முடிசூட இருக்கிறான். நான் பதினான்கு ஆண்டு கானம் சென்று தவமிருந்து திரும்புவேன். இது மன்னன் ஆணையாகும்.' என்று கூறினான். இதைக் கேட்ட கோசலை மயங்கி விழுந்து அழுதாள். பின் எழுந்து கைகேயி அரண்மனை சென்று மன்னன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு குமுறி அழுதாள். வசிட்ட முனிவர் வந்து கைகேயியிடம் இணக்கம் கதைத்தும் அவள் ஒன்றுக்கும் இணங்கவில்லை. மன்னனை முனிவன் தன் கையால் எழுப்பச் செய்தான். இராமன் காடு செல்லக் கைகேயி தானே கட்டளையிட்டு விட்டாள் என்பதை முனிவன் மூலம் அறிந்து கொண்டான் மன்னன். முனிவனை அழைத்து 'இவள் என் தாரம் அல்லள், இவளைத் துறந்தேன், மன்னனாக வரும் பரதனும் என் மகன் அல்லன், அவனும் ஆகான் என் உரிமைக்கு. இது என் ஆணை.' என்றான் மன்னன். இலக்குவனும் இராமருடன் காடேகச் சம்மதித்தாள் சுமித்திரை.

இராமனும், இலக்குவனும் மரவுரி தரித்தனர். இராமன் சீதையிருக்கும் மாளிகைக்குச் சென்றான். மரவுரி தரித்து வரும் இராமனைக் கண்டு சீதை கலங்கினாள். நடந்தவற்றை அறிந்த சீதை தானும் மரவுரி அணிந்து காட்டுக்கு வருவதாகக் கூறி இராமன் கையைப் பற்றி நின்றாள்.  அறம், ஒழுக்கம், பாசம், கருணை, வாய்மை, வில்லு ஆகிய துணையுடன் இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் சுமந்திரன் தேரில் ஏறி இரவோடு இரவாகக் கானகம் புகுந்தனர்.

'தையல்தன் கற்பும்தன் தகவும் தம்பியும்

மையறு கருணையும் உணர்வும் வாய்மையும்

செய்யதன் வில்லுமே சேமமாகக் கொண்டு

ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே.' ------ (1886)

அவர்கள் மூவரையும் அனுப்பிவிட்டுச் சுமந்திரன் அயோத்தியை அடைந்தான். தேர் வந்ததென அனைவரும் பேசியதால், இராமன் வந்து விட்டான் என மன்னன் மயக்கம் தீர்ந்து சுமந்திரனை அழைத்து இராமன் வந்தானா? என்று கேட்டான். அதற்குச் சுமந்திரன் 'இராமனும், சீதையும், இலக்குவனும் காடேகி விட்டனர்.' என்றுரைக்கத் தசரதன் ஆவி பிரிந்து விட்டது. 

'வேய்உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்

போயினான் என்றான்  என்ற போழ்தத்தே ஆவி போனான்.' --- (1898)

கோசலை, சுமித்திரை ஆகிய இருவரும் அழுது புலம்பி வெம்பினர். கைகேயியும் வஞ்சத்தால் வாழ்வெல்லாம் தொலைந்ததே என்று வயிற்றில் அடித்து அழுதாள். பரதன் வரும்வரை தைலத்தில் அரசன் உடலை வைத்திருந்தனர். பரதனை வரச் சொல்லிக் கேகய நாட்டுக்கு ஓலை அனுப்பினான் சுமந்திரன். பரதனும் கோசல நாட்டுக்கு வந்து விட்டான். தந்தையின் கடன் செய்யப் பரதன் அமர்ந்த பொழுது முனிவன் வந்து 'உன் தாயை மனைவி இல்லை என்றும், உன்னை மகனில்லை என்றும் உன் தந்தை துறந்து விட்டான். எனவே நீ அவருக்குக் கடன் செய்ய முடியாது.' என்று கூறினான். எனவே சத்துருக்கனைக் கொண்டு தசரதனின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தனர். பரதன் முடிசூடி நாடாள மறுத்துவிட்டான். அவன் காடேகி இராமனைக் கண்டு, நடந்தவை கூறி இருவரும் விழுந்து அழுது புலம்பி ஓய்ந்து, வேறு வழி இல்லாது 'இராமனின் பாதுகை இரண்டுடன;; நாடு திரும்பி – 'தலைவன் பாதுகைகளே இனி நாடாளும்' என்றிருந்தான்.

சீதை

மிதிலை மாநகரத்தின் சனக மன்னன் மகளான சீதை கன்னி மாடத்தில் தோழியர் சகிதம் நின்றாள். அதே சமயம் சனக மன்னனைக் காண விசுவாமித்திர முனிவர் இராமன், இலக்குவனுடன் சென்று கொண்டிருக்கையில், இராமன் மாடத்தில் நின்ற சீதையைப் பார்க்க, சீதையும் இராமரைப் பார்க்க, இருவரும் காதல் வயப்பட்டனர். சனக மன்னன் விசுவாமித்திரருடன் இராமன், இலக்குவன் ஆகியோரை வரவேற்று மாளிகையில் தங்கச் செய்தான். அங்கிருந்த கோதம முனிவனின் மகனான சதானந்த முனிவருக்கு விசுவாமித்திரர் இராமனை அறிமுகம் செய்து வைக்கையில் 'இவனே தாடகையை வதம் செய்தான்;  என் வேள்வியைக் காத்தான்;  உன் அன்னையின் சாபத்தை நீக்கி அவளை உன் தந்தையுடன் சேர்த்து வைத்தான்.' என்று புகழ்ந்துரைத்தார். சனகர், அவையிலிருக்கும் இராமர், இலக்குவனைப் பார்த்து இவர்கள் யாரென விசுவாமித்திரரைக் கேட்க அவர் 'இவர்கள் உன் விருந்தினராகவும், நீ செய்யும் யாகத்தைக் காணவும், நீ வைத்திருக்கும் சிவதனுசுவையும் பார்க்கவும் வந்தனர். மேலும் இவர்கள் தசரத மன்னனின் புதல்வர்கள் ஆவா;; சீதைக்காக வில் நாணை ஏற்றக்  கூடியவர்கள்.' என்றுரைத்தார். சனக மன்னன் சந்தோசமடைந்து, வில்லைக் கொண்டு வரும்படி பணிக்க வில்லும் வந்தடைந்தது. விசுவாமித்திரர் இராமனை நோக்கினார். இராமன் வில்லை எடுத்தான்;  நாண் பூட்ட வளைத்ததை எவரும் கண்டிலர்; ஆனால் வில் ஒடிந்த ஓசை யாவர்க்கும் கேட்டது.

'தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்

மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்

கடுப்பினில் யாரும் அறிந்திலர்;  கையால்

எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்.' ---- (699)

பணிப்பெண் மூலம் வில்லை எடுத்து உடைத்தவன் தசரதன் மகன் இராமன் என்றும், தம்பியோடு முனிவன் பின் நம் நகருக்கு வந்தவனென்றும், நடந்தவற்றை அறிந்து கொண்டாள் சீதை. விசுவாமித்திரர் சொற்படி சனக மன்னன் தசரதனுக்குத் திருமணம் பற்றிய தூதை அனுப்பினான். சனக மன்னனின் தூதுவர் தசரத மன்னனின் ஓலையைக் கொண்டு வந்தனர். அதைப் படித்த சனக மன்னன் திருமணச் செய்தியை முரசறைந்து கூறச் செய்தான். தசரதன் படைகளுடனும், அரசகுடும்பத்தினருடனும் மிதிலை நோக்கி வர சனகன் அரச மரியாதையுடன் தசரதனை வரவேற்று மாளிகைகளில் தங்கிட இடமளித்தான்.

திருமண மண்டபத்தில் தசரதன் முதலியோர் கூடியிருந்தனர். வசிட்ட முனிவனே மணவேள்வி செய்ய முன்வந்தான். இராமனும் சீதையும் மணத்தவிசு ஏறி அமர்ந்தனர். மணவேள்வி மந்திரம் மூன்று முறை முழங்கச் சீதையின் கையை இராமன் பற்றி மணவேள்வித் தீயை வலம் வந்து வணங்கினர். சீதையைக் கைப்பிடித்து மாளிகை ஒன்றில் இராமன் புகுந்தான். திருமணம் முடிந்து சில நாட்களில் யாவரும் அயோத்தி சென்றனர். இராமனுக்கு முடிசூட்டுவது தடைபட்டதிலிருந்து இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும்; காடேகி, அதனால் தசரதன் உயிர் பிரிந்து, தசரதனின் இறுதிக் கிரிகைகள் முடிவேறியவரை மேற்காட்டிய 'கைகேயி' என்ற பகுதியில் கண்டோம்.

பதினான்கு ஆண்டுகள் வனம் சென்ற இராமன் கடைசி ஓராண்டுக் காலமே சீதையைப் பிரிந்து தேடியதும், இராவணனை அழித்ததும் ஆகும். எஞ்சிய பதின்மூன்றாண்டுகளும் வனத்தில் முனிவர்களுக்குப் பாதுகாப்பாயிருந்ததே ஆகும். அகத்திய முனிவரைத் தரிசித்து ஆசியும் பெற்றனர் மூவரும். அகத்தியன் பஞ்சவடியின் சிறப்பைக் கூறி மூவரையும் அங்கு தங்கும்படியும் கூறினார். பஞ்சவடிக்குச் சென்றவர்கள் சடாயுவைக் கண்டனர். சடாயு 'நான் தசரத மன்னனின் நண்பன். கழுகின் மன்னன். சம்பாதி என் அண்ணன். நான் உங்கள் மூவரையும் காத்து நிற்பேன்.' என்று கூறினான்.

கோதாவரி ஆற்றங்கரையில் பஞ்சவடி அருகில் இலக்குவன் அமைத்த தவச் சாலையில் இராமன் சீதை இருந்தனர். ஒரு காரணத்தால் அந்த வனப்பகுதியில் தனித்து வாழ்பவள் சூர்ப்பணகை. அவள் இராமன் இருக்கும் இடம் நாடிச் சென்றாள். அவன் அழகில் மயங்கி நின்றாள். திருமகள் மந்திரத்தை ஓதித் தன் உருவைத் திருமகள் போல மாற்றிக்கொண்டாள். அவள் அழகைக் கண்ட இராமன் திகைத்துப்போனான். 'உன் வரவு நல்லதாகட்டும்! நீ யார்? உன் நகரம் எது? உன் பெயர் என்ன? உறவினர் யார்?' என்று கேட்டான். 'நான் விச்சிரவசுவின் புதல்வி- குபேரனின் தங்கை- இராவணன் பின் பிறந்தவள்- என் பெயர் கமலவல்லி- நான் ஒரு கன்னி.' என்றாள் சூர்ப்பணகை. இதைக் கேட்டு இராமன் ஐயுற்றான். 'என்னிடம் வந்த காரியம் என்ன? சொல்!' என்றான் இராமன். 'நான் கொண்ட காதலை நானே சொல்வது குலமகளிர்க்கு அழகல்ல. என்னைக் காப்பாயாக!' என்று கூறினாள் சூர்ப்பணகை. இதைக் கேட்டதும் 'இவள் நாணமற்றவள், ஐயத்துக்குரியவள், இழிகுலத்தவள், நல்லவளில்லை' என்று இராமன் உணர்ந்தான்.

'நாண்இலள் ஐயள் நொய்யள்

நுல்லளும் அல்லள் என்றான்.' ------- (2777)

அதே நேரத்தில் தவச்சாலையை விட்டு வெளியே வந்தாள் சீதை. சீதையை அரக்கியும் கண்டாள் என்பதைக் கம்பன் பாடல் கூறும் பாங்கிது.

'மீன்சுடர் விண்ணும் மண்ணும்

விரிந்தபோர் அரக்கர் என்னும்

கான்சுட முளைத்த கற்பின்

கனலியைக் கண்ணின் கண்டாள்.' ------  (2789)

சீதை, இராமன் அருகில் சென்றபோது 'அரக்கியே நடுவில் வந்த நீ யார்?' என்று சீதையைச் சூர்ப்பணகை அதட்டினாள். மேலும் இங்கிருப்பது சரிவராது என்று கருதிய இராமன் சீதையை அழைத்துக் கொண்டு தவச் சாலைக்குச் சென்று விட்டான். 'அவள் இருக்கும் வரை என்னை விரும்பமாட்டான்- அவளைக் கவர்ந்து செல்வேன்.' என்று சூர்ப்பணகை திட்டம் போட்டாள். காலை வழிபாட்டிற்காக வெளியே போகும் இராமனைப் பார்த்தாள்- சீதை தனித்திருப்பாள் எனறெண்ணி அவளை நெருங்கும் பொழுது அங்குள்ள சோலையிலிருந்த இலக்குவன் கண்டான். 'நில்லடி!' என்று ஓடி வந்து அவளைப் பிடித்து இழுத்தான். அவள் தப்பி ஓடும் பொழுது, அவளை விடாது பிடித்து அவளின் மூக்கும், காதும், முலைக்காம்பும் அறுத்து, ஓடடி என்று கலைத்து விட்டான் இலக்குவன்.

அறுபட்ட அவயவங்களுடள் தன் சகோதரனான கரன் என்பவன் காலடியில் விழுந்து நடந்தவற்றைக் கூறினாள் சூர்ப்பணகை. கரன் தன் படையுடன் சென்று இராமருடன் யுத்தம் புரிந்து மாண்டான். அதே கோலத்துடன் தன் அண்ணனான இராவணன் காலில் விழுந்து அழுது நடந்தனவற்றுடன், இராமன்- இலக்குவன் பற்றியும், சீதையின் அழகு பற்றி- தேர் போன்ற இடை-  செம்பொன் மார்பு- பாட்டுமொழி- தேன்மலர்க் கூந்தல்- பஞ்சுபோன்ற அடிகள்- பவளம் போல் விரல்கள்- தங்கம் போன்ற முகம்- பெரிய கண்கள்- நாளையே  நீ போய்க் காணப்போகிறாயே!- என்று கூறிக்கொண்டே நின்றாள்.

'தோளையே சொல்லுகேனோ? சுடர்முகத்து உலவுகின்ற

வாளையே சொல்லுகேனோ? அல்லவை வழுத்து கேனோ?

மீளவும் திகைப்பதல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்

நாளையே காண்டி அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னோ.' --- (3139)

'உடனே சீதையைப் போய்ப் பார்!' என்று உந்தியது அவன் மனசு. இராவணனின் மாமனான மாரீசன் இராமன் வதியும் வனத்தில் தவம் மேற்கொண்டிருந்தான். அவனிடம் இராவணன் வந்து நடந்தவற்றை எல்லாம் கூறிப் பொன் போன்ற மானாகச் சென்று சீதையை மயக்கும்படி கேட்டான். மலர் பறிக்க வந்த சீதை மானைக் கண்டு ஆசைகொண்டு அதைப் பிடித்துத் தரும்படி இராமனைக் கேட்டாள். இராமரும் மானைத் துரத்திச் சென்று ஓர் அம்பு எய்ய மானான மாரீசன் இராமன் குரலில் 'இலக்குமணா! சீதா!' என்று கூவி, மாரீசனாக உருவெடுத்து இறந்தான். இராமன் குரல் கேட்டுச் சீதை 'என் வாழ்வு முடிந்தது' என்று புலம்பி அழுதாள். 'உன் அண்ணன் அபயக்குரல் கேட்டும் ஓடோடிச் சென்று பார்க்காமல் இங்கு நிற்கிறாயே! உடன் ஆங்கே செல;;. அல்லது நான் தீயில் விழுந்து மடிவேன்.' என்று கூறவும் இலக்குவன் இராமனைத் தேடிச் சென்று விட்டான். சீதை தனித்திருக்கையில் இராவணன் சந்நியாசி வேடம் தாங்கி வந்தான். சந்நியாசியைக் கண்ட சீதை 'வருக! என்று  வரவேற்றாள். இருவரும் சிறு நேரம் உiuயாடினர். உரையாடல் மாறுபட்டுச் சென்றது.

பிரம்மா தனக்கிட்ட சாபத்தை எண்ணிப் பயந்து சீதையைத் தொடுவதற்கு அஞ்சித் தன் தோள் வலிமையால் பூமியைப் பர்ணசாலையோடு அகழ்ந்தெடுத்துத் தன் தேரில் வைத்து விண்வழியாகச் செல்கையில் சடாயு எதிர்கொண்டு இராவணன் முடிகளைக் கீழே தள்ளி விழுத்தி, வீணைக் கொடியை ஒடித்து, அவன் அம்புகளைத் தடுத்து, குண்டலங்களைப் பறித்து, முத்து மாலைகளை அறுத்து, நாணையும் வில்லையும் உடைத்து, அவன் மார்பிலும் தோளிலும் சிறகால் அடிக்க இராவணன் முடிசாய்ந்து கீழே விழுந்தான். அதன்பின் அரக்கன் எழுந்து சிவன் கொடுத்த வாளால் சடாயுவின் சிறகை வெட்டச் சடாயு கீழே விழுந்து மயங்கினான். இதைக் கண்ட இராவணன் தேரிலிருந்த தவச்சாலையைச் சீதையோடு எடுத்துத் தன் தோள் மீது வைத்துக் கொண்டு விண்வெளியே பறந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான். இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடித் திரிகையில் குற்றுயிராய்க் கிடக்கும் சடாயுவைக் கண்டனர். சடாயு நடந்தவற்றை இராம இலக்குவர்க்குக் கூறியபின் இறந்து போனான். சடாயுவை அடக்கம் செய்து வைத்தனர் இராம இலக்குவர்.

இராம இலக்குவர் சீதையைத் தேடிக்கொண்டு போகையில் சுக்ரீவன், அனுமன் ஆகியோரின் நட்பும;; கணக்கிலடங்காத படை உதவிகளும் கிடைத்தன. நாலா பக்கமும் படை வீரர்கள் சென்று சீதையைத் தேடினர். அனுமன் மகேந்திர மலையிலிருந்து தாவி இலங்கைக்குச் சென்று ஊரெல்லாம் சீதையைத் தேடித்திரிந்தான். இராவணன் மாளிகைக்கு அருகிலுள்ள அசோக மரச் சோலையை அடைந்து ஒரு மரத்தின்மேல் ஏறி அமர்ந்திருந்து நாலா பக்கமும் பார்த்தான் அனுமன்.

அரக்கியர் பலர் சூழ்ந்திருக்க நடுவில் ஓர் அழகிய பெண் சோகத்துடன் இருப்பதைக் கண்டான். இராமன் கூறிய அடையாளங்களைப் பொருத்திப் பார்த்து இவள்தான் சீதை என்றுணர்ந்தான். அங்கே வீடணன் மகள் திரிசடை என்பவள் சீதைக்குத் தோழியாக இருந்தாள். அப்பொழுது இராவணன் சீதையிடம் வந்து தன் ஆசையைத் தெரிவிக்கச் சீதை சொற்களால் சுட்டெரித்ததையும், இராவணன் சீதையைவிட்டு அகன்றதையும் அனுமன் கண்டான். அந்நிலையில் அனுமன் சீதையின் அருகில் சென்று 'உலகத் தலைவனான இராமனின் தூதுவன் நான். இதோ இராமன் தந்துவிட்ட கணையாழி' என்று பணிந்து நின்றான். நடந்தவை யாவையும் அனுமன் சீதைக்குக் கூறினான். 'இச் சூடாமணியை என் நாயகனிடம் கொடுப்பாய்!' என்று கூற அனுமனும் சீதையை வணங்கிப் பெற்றுக்கொண்டான்.

அதன்பின் அனுமன் அசோக வனத்தின் மரங்கள், கற்பகச் சோலை, வாவி, மண்டபம் ஆகியவற்றை அழித்தான்;  எதிர்த்து வந்த அரக்கர்களைக் கொன்றான்;  மேலும் பல படைத் தலைவர்களைக் கொன்று குவித்தான். பின், இராவணன் மகன் இந்திரசித்து அனுமனைப் பிடித்து இராவணன் முன் நிறுத்தி அவன் வால் முழுவதும் பந்தம் சுற்றித் தீ வைக்க, அனுமன் பறந்து திரிந்து இலங்கையை எரித்து, அங்கு நடந்தன எல்லாம் எடுத்துக் கூறி, சீதை கொடுத்த சூடாமணியை இராமனிடம் கொடுத்தான்.

இராமன், இலக்குவன், சுக்ரீவன், அங்கதன், அனுமன், வானரச் சேனைகள் ஆகியோர் இலங்கைக்குப் போகும் கடற்கரையை அடைந்தனர். இராவணனின் தம்பியாகிய வீடணன் தன் தமையனுடன் கருத்துப் பரிமாறலில் முரண்பட்டு இராமனிடம் சரணடைந்தான். இராமன் 'இலங்கையின் அரண்- அரக்கர் வலிமை- சேனையின் தொகை- வேறு இயல்புகள்- ஆகியவற்றைக் கூறுவாய்!' என்று கேட்டு அறிந்து கொண்டான். கடலில் பாலம் கட்டி யாவரும் மறு கரையை அடைந்தனர். வாலி மகன் அங்கதன் இராவணனிடம் தூது சென்று சமரசமின்றிப் போர் புரியப் பறையறைந்து தெரிவிக்கப்பட்டது. போர் தொடங்கியது. பிணக்குவியலும் வளரத் தொடங்கியது. இறுதியாக இராமனின் பிரம்மாஸ்திரத்தால் இராவணன் உயிர் துறந்தான்.

'முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள்

எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத்

திக்கோடு உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில்

புக்குஓடி உயிர்பருகிப் புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி.' ---- (9899)

இராவணனின் இறுதிக் கடனை வீடணன் செய்தான். இராமன் ஆணைப்படி இலக்குவன் வீடணனுக்கு முடிசூட்டி இலங்கை வேந்தனாக்கினான். இராமன் வீடணனை அழைத்துச் சீதையைக் கூட்டிவருமாறு பணித்தான். சீதை வந்ததும் இராமன் அவளின் கற்பில் சந்தேகங் கொண்டான். உடனே சீதை இலக்குவனை அழைத்துத் தீயமைக்கும்படி கேட்டு, அதில் விழுந்து தன் கற்பை நிலைநாட்டினாள். வானரப் படை, வீடணன் படை, இராம இலக்குவர் சீதை முதலிய அனைவரும் விமானத்தில் ஏறி அயோத்திக்கு வந்தனர். அரச ஒழுங்குகளுடன் இராமனுக்கு வசிட்டன் திருமுடி சூட்டி மன்னனாக்கினான்.

'அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற

விரைசெறி குழலிஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.' --- (10,327)

வீடணன் மற்றைய அனைவரும் இராமன், சீதை, பரதன், இலக்குவன், சத்துருக்கன், வசிட்டன், தாய்மார் மூவர் ஆகியோரிடம்  விடைபெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறி இலங்கை சென்றனர். இராமன் தம்பியரோடு நீதி தவறாது அரசாட்சி செய்து வந்தான்.

இராமனும் சீதையும் மிகுந்த சந்தோசத்தடன் இன்பமாகக் காலத்தைக் கழித்தனர். சீதையும் கருவுற்றிருந்தாள். இராமன் ஒற்றர்களை அழைத்து 'மக்கள் பேசும் நன்மை தீமைகளைக் கூச்சப்படாது என்னிடம் கூறுவீர்!' என்றான். ஒற்றர்கள் இராமனை வணங்கி 'இராமன் தன் மனைவியான சீதையை இராவணன் பன்னிரண்டு மாதங்கள் இலங்கைச் சிறையில் வைத்திருந்தான். அவளை இராமன் இன்று தாரமாய் ஏற்றுக் குடும்பம் நடாத்துகின்றான். என்று பேசுகின்றனர்.' எனக் கூறிச் சென்றனர். இதைக் கேட்ட இராமன் இலக்குவனை நோக்கி 'சீதையைக் காட்டில் கொண்டு சென்று வால்மீகியின் ஆசிரமத்தில் விட்டு வருவாய். சீதையும் காட்டிற்குச் செல்ல விரும்பியுள்ளாள்.' என்றான். சுமந்திரன் கொண்டு வந்த தேரில் இலக்குவனோடு காடு சென்றாள் சீதை. அங்கே இலக்குவன் சீதைக்கு நடந்தவை எல்லாம் சொல்லச் சீதை கலங்கித் துடித்துப் பதைபதைத்து அழுது புரண்டாள். பின் யாவும் விதிப் பயன் என்றிருந்தாள். வால்மீகி சீதையிடம் 'நீ எங்களுடன் இந்த ஆசிரமத்தில் இருக்கலாம்' என்றுரைக்க அவளும் ஆறுதலடைந்து ஆசிரமத்தில் தங்கி;யிருந்தாள்.

சில மாதங்களின்பின் சீதைக்கு பிரசவ நோய் ஏற்பட்டு இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அக் குழந்தைகளுக்கு 'குச', 'லவன்' எனப் பெயரிடப்பட்டது. வால்மீகி குச, லவன் ஆகிய இருவருக்கும் எல்லாக் கலைகளையும் கற்பித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இராமன் அசுவமேத யாகம் செய்வித்தான். இதில் முனிவர்கள், பல தேச மன்னர்கள், குறுநில மன்னர், மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த யாகம் பற்றி அறிந்த வால்மீகி முனிவர் குசலவர்களை அழைத்து 'நீங்கள் இராமனுடைய யாக சாலை அணுகி, சீதையின் புதல்வர்கள் என யாருக்கும் தெரியாதபடி இராமனின் காவியத்தைச் சொல்வீர்களாக!' என்றார்.

குசலவர்கள் முனிவர்களின் மக்களைப் போன்று வேடம் தரித்துக் கையில் யாழுடன் யாகசாலை சென்று பாடி இசைத்தனர். இவர்கள் உருவத்தால் இராமனை ஒத்திருக்கின்றனர் என்றும் கதைத்தனர். செய்தியறிந்த இராமன் அவர்களை அழைக்க, அவர்களும் இராமன் முன் இராம காவியத்தை யாழினால் இசைத்துப் பாடினர். தங்கள் பெயர் குசலவர்கள் என்றும், காவிய வரலாற்றைச் சொல்லித் தந்தவா வால்மீகி முனிவர் என்றும் கூறினர். 'நாங்கள் தினம் தினம் வந்து பாடுவோம்.' என்று கூறி விடைபெற்று வால்மீகி ஆசிரமம் சென்றனர். இவர்கள் சீதையின் பிள்ளைகளென ஒருநாள் இராமன் அறிந்து அவர்களை அழைத்துத் தழுவிக் கொண்டான்.

பின்னொருநாள் வால்மீகி முனிவருக்குத் தூதுவரை அனுப்பித் தன் மனைவி சீதையை அழைத்து வருக எனத் தெரிவித்தான். மறுநாள் வால்மீகி முனிவர் சீதையுடன் இராமன் அரண்மனை வந்தடைந்தார். முனிவரை விழுந்து வணங்கிய இராமன் 'மீண்டும் ஒரு முறை சீதை தீயில் விழுந்து தன் கற்பைக் காட்ட வேண்டும்.' என்றான். இதைக் கேட்ட முனிவர் திகைத்தார். சீதை 'என் கணவர் என்னைச் சந்தேகிக்கும்போது என்னிடம் கற்பு இருந்து பயனென்ன? நான் செய்வதைக் காண்பீர்!' என்று கூறி இராமன் காலடியில் வீழ்ந்து வணங்கி 'பூமாதே! எனக்கு உன்னிடம் வர இப்பூமியில் ஒரு வழி தருவாய்.' எனக் கூறினாள். உடனே சீதையின் முன்னால் அரசவையில், நிலம் பிளந்தது. அதிலிருந்து பூமாது தோன்றிச் சீதையின் இரு தோள்களையும் இறுகக் கட்டியவாறு அந்த நிலத்தின் பிளப்பின் வழியாக இருவரும் உள்ளே சென்றனர். அவர்கள் உட்புகுந்ததும் நிலம் முன்பிருந்த பழைய நிலையை அடைந்தது.

கற்புக்கரசியான சீதை அரச குலத்தில் பிறந்து, வீரம் நிறைந்த இராமனை மணந்து, கோசல நாட்டுக்கு இராமனுடன் சென்று, கோசலை- கைகேயி- சுமத்திரை ஆகிய மூவரசிகளின் மருமகளாய்த் திகழ்ந்து, கைகேயி மாமியின் வஞ்சனையால் பதின்மூன்று ஆண்டுகள் இராமனுடன் வனவாசம் புரிந்து, ஓர் ஆண்டு இராவணன் சிறையில் அமர்ந்து, அதன்பின் மீட்கப்பட்டு இராமனுடன் கோசல நாடேகி, மன்னன் இராமனின் அரசியாகி, மக்கள் தீயுரையாலும், இராமன் ஆணையாலும் சீதை, வால்மீகி முனிவர் வதியும் காடேகி, ஆங்கே குச, லவன் ஆகிய இரு குழந்தைகளைப் பெற்றெடுத்து, இராமன் அழைப்பின்படி வால்மீகி முனிவருடன் சீதை, இராமன் அரண்மனை சென்று, மீண்டும் ஒருமுறை தீயிற் புகுந்து சீதையின் கற்பை நிரூபிக்கும்படி இராமன் கேட்கச் சீதை அதற்கு உடன்படாது மறுத்துரைத்து, இராமனை வணங்கி விட்டு, பூமாதேவியை நினைந்து 'நான் உன்னுடன் வர இந்த நிலத்தில் ஒரு வழி அமைத்துத் தா!' என்று கேட்க நிலத்தில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்து பூமாது தோன்றிச் சீதையின் கைகளைப் பற்றிக் கொண்டு அந்தப் பிளப்பினூடே இருவரும் உள்ளே சென்றதும் அப்பிளவு மூடிக் கொண்டது. இவ்வாறான ஒரு நீண்ட பயணத்தைச் சிறப்புடன் முடித்துக் கொண்ட சீதை ஒரு தெய்வமாகினாள்.

தாரை

'பஞ்ச கன்னியர்' என்று கூறப்படும் அகலிகை, திரௌபதி, சீதை அல்லது குந்தி, தாரை, மண்டோதரி ஆகியோர் கற்புக்கரசிகளாவர். அவர்களை மானிடப் பெண்களாகிய குந்தி, சீதை, திரௌபதி, அகலிகை என்றும், அரக்கப் பெண்ணாகிய மண்டோதரி என்றும், குரங்கினப் பெண்ணாகிய தாரை என்றும் மூவகையாக வகுத்துப் பார்க்கலாம். மேலும;, அகலிகை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய பெண்கள் கம்பராமாயணத்திலும், குந்தி, திரௌபதி ஆகிய பெண்கள் மகாபதரத்திலும் நடைபோடுகின்றதையும் காண்கின்றோம். தாரை என்பவள் குரங்கின மருத்துவரான சுசேனாவின் மகளாவாள். கிட்கிந்தை நாட்டுக் குரங்கினத்தின் மன்னனான வாலி, தாரையை மணம் புரிந்து கொண்டான். அதனால் தாரை கிட்கிந்தையின் இராணியானாள்.

வாலியின் சகோதரன் சுக்ரீவன் ஆவான். சுக்ரீவன் மனைவி உருமை ஆவாள். அண்ணனாகிய வாலி, தம்பியாகிய சுக்ரீவனைத் துன்புறுத்தி அவன் மனைவி உருமையைக் கவர்ந்து கொண்டு, சுக்ரீவனை நாட்டிலிருந்து கலைத்து விட்டான். இதை அறிந்த அனுமன் காட்டில் வதியும் இராமனுக்குக் கூறி உதவி கேட்டான். இராமனின் உதவியுடன் சுக்ரீவன் வாலியோடு சமர் தொடுத்தான். இதை அறிந்த தாரை வாலியைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஓடோடி வந்தாள். அப்பொழுது வாலியின் கண்களிலிருந்து எழுந்த தீயானது தாரையின் கூந்தலைக் கருக்கியது. இதைக் கம்பன் பாவிலமைத்த பாங்கிது.

'ஆயிடைத் தாரை என்று அமிழ்தின் தோன்றிய

வேயிடைத் தோளினாள் இடைவி லக்கினாள்

வாயிடைப் புகைவர வாவிகண் வரும்

தீ யிடைத் தன்நெடும் கூந்தல் தீகின்றாள்.' ------- (3956)

தாரை தன் கூந்தல் கருகி விட்டதே என்று கூடக் கவலைப்படவில்லை. தன் கணவனைக் காக்க வேண்டுமென்ற உந்தலால் மீண்டும் வாலியைத் தடுக்க முன் வந்தாள். ஆனால் வாலி 'என்னைத் தடுத்து நிறுத்தாதே! அவன் வலிமையைக் கலக்கிப் பாற்கடல் கடைந்ததுபோல் அவன் உயிர் பறித்து வருவேன்.' என்றான்.

'விலக்கலை விடுவிடு விளிந்துளான் உரம்

கலக்கிஅக் கடல்கடைந்து அமுது கண்டுஎன

உலக்கஇன் உயிர்குடித்து ஒல்லை மீள்குவல்

மலைக்குல மயில்என மடந்தை கூறுவாள்.' ------  (3957)

'முன்பே உன்னிடம் தோற்று ஓடியவன். இப்பொழுது அவனுக்கு எங்கிருந்து வலிமை வந்தது? அவன் பின்னால் ஒரு பெரும் துணை உள்ளது. அதை வைத்துக் கொண்டு இப்பொழுது போர் புரிய வந்துள்ளான். இதை நீ அறியவில்லையே கணவ!' என்றாள் தாரை.

'பெற்றிலன் பெருந்திறல்  பெயர்த்தும் போர்செயற்கு

உற்றது நெடுந்துணை உடைமையால் என்றாள்.'  --------  (3958)

இதைக் கேட்ட வாலி 'மூன்றுலகமும்; ஒன்றுபட்டு வந்தாலும் என்னை யாராலும் வெல்ல முடியாது. தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய முடியாத பொழுது நான் அதைத் தயிர் போலக் கடைந்து அமிர்தம் எடுத்த ஆற்றலை மறந்து விட்டாயோ தாரை! என்னை எதிர்க்கும் எதிரியின் ஆற்றலில் பாதி என்னை வந்து சேரும் என்ற வரத்தையும் மறந்தாயோ பெண்ணே!' என்று தாரைக்குக் கூறினான்.

'தயிர்எனக் கடைந்து அவர்க்கு அமுதம்தந்தது

மயில்இயல் குயில்மொழி! முறக்கல் ஆவதோ?' ------  (3961)

இதற்கும் தாரை அமைதி பெறாது 'இராமன் என்பவன் உன் உயிர் பறிக்க வந்துள்ளதாக என் உற்ற நண்பிகள் கூறினர்' என்றாள்

'அன்னது கேட்டவள் அரச! ஆயவற்கு

இன்னுயிர் நட்புஅமைந்து இராமன் என்பவன்

உன்உயிர் கோடலுக்கு உடன்வந்தான் எனத்

துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள்.'  --------  (3964)

இச் செய்தியை வாலி நம்பவில்லை. அவள் கூற்றின் உண்மையை உணரும் நிலையிலும் வாலி இல்லை. இராமனில் அவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தான் வாலி. 'இதனால் இராமன் பெறும் நன்மைதான் என்ன?' என்று தாரையைப் பார்த்துக் கேட்டான். அறத்தின் நெறியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இராமனுக்குப் பொருந்தாததெல்லாம் பேசியுள்ளாய். 'பிழைத்தனை பாவி! உன் பெண்மையால்' என்றும் கடிந்து நின்றான்.

'உழைத்தவல் இருவினைக்கு ஊறு காண்கிலாது

அழைத்தயர் உலகினுக்கு அறத்தின் ஆறுஎலாம்

இழைத்தவற்கு இயல்பல இயம்பி என்செய்தாய்?

பிழைத்தனை பாவி! உன் பெண்மையால் என்றான்.'  -------  (3965)

இத்துடன் வாலி நிற்கவில்லை. மேலும் பேசுகிறான். 'இராமனுக்கு வந்த அரசைத் தன் தம்பிக்குக் கொடுத்து விட்டுக் காடேகிய சிறப்பினை நீ அறியாயோ? உலகை அழிக்கும் வில்லுடையோன் குரங்குகளுடன் போரிடுவானா? நடுநிலையான இராமன், நானும் என் தம்பியும் புரியும் போரில் இடைவந்து அம்பு எய்வானா? சற்று நில் தாரை!. இதோ என் தம்பி உயிர் குடித்து வருவேன்.' என்று கடிந்துரைத்துச் சென்று விட்டான்.

'தம்பியர் அல்லது தனக்கு வேறுஉயிர்

இம்பரில் இலதுஎன எண்ணி ஏய்ந்தவன்

எம்பியும் யானும்உற்று எதிர்ந்த போரினில்

அம்புஇடை தொடுக்குமோ அருளின் ஆழியான்.' ------- (3969)

வாலியும் சுக்ரீவனும் எதிர்கொண்டனர். வாலி சுக்ரீவனை மேலே தூக்கி நிலத்தில் மோதிக் கொல்ல எத்தனித்தான். அதேநேரம் இராமன் ஓர் அம்பை நாணில் ஏற்றி வாலியின் மார்பில் பதிக்க அவன் நிலத்தில் வீழ்ந்து இறந்தான். இதையறிந்த தாரை அவன் மேனிமேல் விழுந்து, அழுது, புரண்டாள். வாலியின் ஈமக் கடன்கள் முறைப்படி நடந்தேறியன. சுக்ரீவன் முடிசூடி மன்னனானான். தாரை கைம்மை பூண்டாள். வாலியின் மகன் அங்கதன் இளவரசனானான். சுக்ரீவன் தாரையைத் தாயாக மதித்து, அவள் அறிவுரை கேட்டுச் சிறப்புடன் ஆட்சி செய்தான். தாரை பாரில் சிறந்த கற்புக்கரசி ஆனாள்.

அகலிகை

விசுவாமித்திர முனிவன், இராமன், இலக்குவன் ஆகிய மூவரும் மிதிலையில் சனக மன்னன் வேள்வியைக் காணச் சென்றனர். சோணை நதி, கங்கை ஆறு ஆகிய இரண்டையும் கடந்து சென்று மிதிலை நாட்டை அடைந்தனர். நகரத்தின் எல்லையில் அகலிகை தன் கணவனால் சாபம் பெற்றுக் கல்லாகக் கிடந்த மேட்டைக் கண்டனர். இராமன் அந்த மேட்டைத் தாண்டும் போது அவனின் சில கால்த் தூசிகள் அந்தக் கல்லில் பட்டதும் ஓர் அழகிய பெண் எழுந்து ஒருபுறம் ஒதுங்கி நின்றாள்.

'கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்துகள் கதுவ

உண்ட பேதைமை மயக்குஅற வேறுபட்டு உருவம்

கொண்டு மெய்உணர்பவன் கழல் கூடியது ஒப்ப

பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான்.' ----- (465)

அப்போது இராமன் விசுவாமித்திரரிடம் 'ஐயனே! என்ன அதிசயம்! தாயையொத்தவளுக்கு நேர்ந்தது என்ன? சொல்லுவீர் முனிவ!' என்று கேட்டான். விசுவாமித்திரர் இராமனுக்கு அகலிகை பற்றி விவரமாக எடுத்துக் கூறினார். 

இவள் தவத்தில் சிறந்த கோதம முனிவரின் மனைவியாவாள். இவள் பெயர் அகலிகை என்பர். இவள் அழகில் தேவேந்திரன் மயங்கித் துன்புற்று வாடினான். அன்றொருநாள் முனிவன் போல் பொய்வேடம் தாங்கி- விடிந்து விட்டதைக் காட்டச் சேவல் போலக் கூவினான் இந்திரன். முனிவன் விடிந்து விட்டது என்று எண்ணிப் பூசைக்குப் போய்விட்டான். முனிவன் வேடத்தில் இந்திரன் ஆசிரமத்துள் புகுந்தான். அதை அகலிகை அறியாது, தன் கணவன்தான் என்றிருந்தாள். உள்ளே சென்ற இந்திரன் அகலிகையுடன் கூடி இருவரும் ஒன்றுபட்டு இன்பம் அனுபவித்தனர். புணர்ச்சியில் புதியதொரு வேறுபாட்டினை உணர்ந்த அகலிகை, இவன் தன் கணவனல்லன் என்றும் இவன் இந்திரனே என்றும் உணர்ந்து கொண்டாள். உணர்ந்திருந்தும் அதைத் தவிர்க்காது, தன்னை மறந்து தளர்ந்திருந்தாள். வெளியில் சென்ற முனிவன் இன்னும் விடியவில்லை என்பதை அறிகுறிகளால் உணர்ந்து ஆசிரமத்தை அடைந்தான்.

'புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்

ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்

தக்கது அன்று என்னஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா

முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்.' ----- (470)

முனிவன் ஆசிரமத்துள் நுழைந்த போது கலைந்த ஆடையுடன் அகலிகை எழுந்து நின்றாள். இந்திரன் அவதிப்பட்டு எழுந்து ஒரு பூனை வடிவெடுத்துத் தப்பி ஓட முயன்றான். அதுகண்ட முனிவன் 'இந்திரா நில்!' என்றார். இந்திரன் நடுநடுங்கி நிற்கையில் 'நீ பெண்ணின் மர்மக்குறிக்கு ஆசைப்பட்டாய். எனவே உனக்கு ஆயிரம் குறிகள் உன் உடம்பில் உண்டாகட்டும்' எனச் சபித்தார். உடனே அவன் மேனி முழுவதும் ஆயிரம் குறிகள் தோன்றின.  இந்திரன் நாணிக் கோணிக் கொண்டு தன் இருப்பிடம் சென்றான்.

மாற்றான் என்று தெரிந்த பிறகும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்த அகலிகைக்கு 'கல்லாகக்' கடவாய் என்று சாபம் கொடுத்தான் முனிவன். செய்குற்றம் பொறுத்தருளி, பாவத்திற்கும் விமோசனம் அருள வேண்டுமென்று அகலிகை கேட்க, 'தசரதன் மகன் இராமன் என்பவனின் கால்தூசி படக் கல்உருவம் மாறிப் பெண் உருவம் பெறுவாய்!' என்றான் முனிவன்.

'பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்

அழல்தரும்; கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன

தழைத்து வண்டுஇமிரும் தண்தார்த் தசரத ராமன் என்பான்

கழல்துகள் கதுவ இந்தக் கல்உருத் தவிர்தி என்றான்.' ------ (474)

இப்படியான சாபமும் விமோசனமும் கொடுக்கும்போது அயோத்தியில் இராமன் அவதரிக்கவில்லை.  அவ்வாறிருந்தும் தசரதன்  மகனாகிய இராமன்  என்று  கூறியது இம் முனிவன் முக்காலத்தையும் முழுமையாக அறிந்திருந்தான் என்பதைக் காட்டுகின்றது. அகலிகை வரலாற்றைக் கூறிய விசுவாமித்திர முனிவன் 'இராமா! உன் கைவண்ணம் தாடகையை வென்ற போது அங்குக் கண்டேன். உன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்.' என்று புகழ்ந்து பாராட்டினான்.

'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனிஇந்த உலகிற்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்றுஓர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?

மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே! உன்

கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்.' ---- (475)

தனக்குச் சாப நீக்கம் அருளிய இராமனை, அகலிகை வீழ்ந்து வணங்கினாள். கோதம  முனிவன்  இருக்கும்  இடத்துக்கு  அகலிகையுடன்  யாவரும்  சென்றனர்.

'இராமன் கால்தூசி பட்டுத்தான் கல்லான இவள் பெண்ணானாள். தானாக இவள் வெளியே சென்று தவறிழைக்கவில்லை. நெஞ்சினால் பிழைப்பு இல்லாதவள். இவளைத் தாங்கள் மீண்டும் மனைவியா ஏற்க வேண்டும்.' என்று வேண்டினார் விசுவாமித்திரர். அதைக் கோதம முனிவரும் ஏற்றக் கொண்டார்.

'அஞ்சன வண்ணத் தான்தன் அடித்துகள் கதுவா முன்னம்

வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தாள் ஆகிநின்றாள்

நெஞ்சினாள் பிழைப்பு இலாளை நீஅழைத் திடுக என்ன

கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான்.' ---- (478)

அப்போது கோதமரை வலம் வந்து வணங்கினாள் அகலிகை. விசுவாமித்திரர் அகலிகையின் கரங்களைப் பிடித்துக் கோதமர் கரங்களில் கொடுத்தார். இவ்வண்ணம் அகலிகை பஞ்ச கன்னியர்களில் ஒருத்தி ஆனாள்.

மண்டோதரி

'முக்கோடி வாழ்நாள், முயன்றுடைய பெருந் தவம், 'எக்கோடி யாராலும் வெல்லப்படாய்' என்று முன்பு பிரமன் கொடுத்த வரம், எட்டுத் திசைகளையும் உலகம் முழுவதையும் போர் புரிந்து வென்ற தோள்.' ஆகியவற்றின் உறவினனான இலங்கை வேந்தன் இராவணனின் மனைவிதான் மண்டோதரி ஆவாள். அவள் அரக்க மன்னன் தேவதச்சன் மயனின் மகளும் தானவர் இனத்தவளுமாவாள். அழகு, கடமை, கண்ணியம், நேர்மை யாவும் அவளுடன் தஞ்சம் அடைந்துள்ளன. இராவணன்- மண்டோதரி ஆகியவர்களுக்கு இந்திரசித்து, அதிகாயன், அக்ககுமாரன், தேவராந்தகன், திரிசிதன், நராந்தகன் ஆகிய அறுவரும் வீரதீரம் நிறைந்த அரச குமாரர்களாவர்.

தேவர்கூட இராவணனை அணுகமுடியாதவாறு அவன் இலங்காபுரியை ஆண்டு வந்தான். அவ்வாறான வீரங்கொண்டவன் இலங்கை வேந்தன். இவன் வலிமைக்கு அஞ்சி, ஒதுங்கி, ஏவற்பணி புரிந்து நிற்பர் விண்ணவர். இவ்வண்ணமே இராவணன் மனைவி மண்டோதரிக்கும் தேவருலக நடனமாதராகிய அரம்பை, மேனகை, திலோத்தமை, ஊர்வசி ஆகிய நால்வரும் பிறரும், அவளின் கால்களை வருடி, சாமரம் வீசி, யாழ் இன்னிசை மீட்டி, கற்பக மலர் மணம் வீசச் செய்து, தொடர் பணியாற்றி வந்தனர்.

இராவணன் சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையில் சிறை வைத்தான். இதனால் மண்டோதரி மனமுடைந்து கலங்கினாள். இராவணனை அணுகி 'மன்னவ! பெண் பாவம் பொல்லாதது!. பெண் பழி உன்னை வந்து சூழும்! இராமன் ஆற்றல் அறியாயோ? அவன் ஒரு தெய்வப்பிறவி அல்லவா? அவனுடன் மோதுவதைத் தவிர்த்துக் கொள். இன்னும் சீதைப்பிராட்டி ஒரு கற்புக்கரசி. அவள் ஒரு காலமும் உன்னை விருப்பமாட்டாள். எனவே ஐயனே! சீதையைக் கொண்டுபோய் இராமனிடம் விட்டு வருவாயாக! இதை நான் உனக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும், எனக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்.' என்று அறநெறி கூறினாள். இராவணன் இதைக் கருத்திலெடுக்கவில்லை. அவன் காமவாயிலில் சீதையை எண்ணி நின்றான். சீதை ஒருநாள் தன்னுடன் இணங்கி வருவாள் என்று பித்தம் பிடித்துத் திரிந்தான்.

இராமன்- இராவணன் போர் மூண்டது. அப்போரில் இராவணன் உட்பட யாவரும் இறந்து பேயினர். இராவணன் இறந்தான் என்பதை அறிந்த அவன் மனைவி மண்டோதரி தலைவிரி கோலமாய்ப் பல்லாயிரம் அரக்கிமார் தன்னைத் தொடர்ந்துவர ஓடிவந்து கதறி அழுது தன் கணவன் உடல் மீது விழுந்தாள். ‘என் வேந்தனுக்கு முன்பே சுமங்கலியாக இறக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்த கருத்து மாறிப்போய் அவனுக்குப் பின்னேயோ இறப்பது? உன் முடித்தலைகள் தரையில் முகம் பதிய முன்னாy; விழுந்ததே? நிலங்களில் அவை பட்டு அலையலாமோ? இராவணனார் கொடுத்த பரிசு இப்படியானதே! அம்மா!' என்று மண்டோதரி புலம்பினாள்.

'அன்னையோ அன்னையோ ஆ! கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்  பின்னையோ இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்தி லேனோ?

முன்னையோ விழுந்ததுவும் முடித்தலையோ? படித்தஅலைய முகங்கள் தானோ?

என்னையோ என்னையோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம்.' ---- (9939)

'இராமன்  என்ற ஒருவன் அம்பு,   வெள் எருக்கை மாலை அணிந்த சிவபிரான் எழுந்தருளி இருக்கும் கைலை மலையைப் பெயர்த்தெடுத்த உன் உடம்பு முழுவதையும் சிறு இடமும்  விடாது உயிர் இருக்கும் இடத்தைத் தேடித் துளைத்த தன்மையோ இது? அல்லது தேன் சிந்தும் மலர் அணிந்த சீதையை மனத்தில் மறைத்து வைத்த காதல் மறைந்திருக்கும் இடந்தேடி உடல் புகுந்து தடவியதோ இது?'  என்று மண்டோதரி மேலும் புலம்பினாள்.

'வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி மேலும் கீழும்

எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும் இடன் நாடி இழைத்தவாறோ?

கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்

உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?' --- (9940)

'முக் கடவுளர்களை விட, தேவர்களை விட, யானைகளை விட வலிமை பெற்ற என் மன்னனே! உனக்கு என்றும் சாவில்லை என்று எண்ணியிருந்தேனே! உன்னை அழிக்க ஒரு மனிதன் இருப்பான் என்று நான் எண்ணவில்லையே! நீ போனபின்  நான் ஏன் உயிர் வாழவேண்டும்?' என்று சொல்லிச் சொல்லிப் புலம்பி, இராவணனின் மார்பைத் தன் கைகளால் தழுவித் தழுவிப் பெருமூச்சு விட்டு உயிர் நீத்தாள் உத்தமி மண்டோதரி.

நிறைவுரை

இதில் கோசலை> கைகேயி> சுமத்திரை> சீதை> கூனி> தாரை> அகலிகை> மண்டோதரி> சூர்ப்பணகை> திரிசடை> உருமை ஆகிய மகளிர் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அவர்களில் கைகேயி> கூனி> சூர்ப்பணக> ஆகிய மூவரும் அரசுக்கு எதிராகச் செயற்பட்டனர். கைகேயி> கூனி ஆகிய இருவரின் சூழ்ச்சிச் செயலால் தசரத மன்னன் மாண்டான். சூர்ப்பணகையின் செயலால் இராவணன் மடிந்தான்.  பஞ்ச கன்னியர்களில் ஒருத்தியாய் 'தலைக் கற்பில்' நின்று> தன் கணவன் இராவணன் இறந்துபட்டான் என்பதை அறிந்து> அவனுடன் தானும் உயிர் நீத்து> பிறர்க்குணர்த்திய 'மூதானந்தம்' (ஒன்றுபட்ட அன்பினால் வந்த சாக்காடு) என்ற பேரின்பத்தில் இன்றும் மூழ்கி; நிற்பவள் மண்டோதரி ஆவாள்.

இராமன;>; போரில் இராவணனை வென்று> சீதையை மீட்டு> அறவழி நின்று> மனுநீதி தவறாது அரசாட்சி புரிந்து வந்தான். மக்களும் இராமனைப் போற்றினர்;  வாழ்த்தினர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R