kamaladevi599.jpg - 16.73 Kbமாலையானாலே என்ன அடைமழை இது ! என்று சிங்கப்பூரர்களில் பலரும் சலித்துக் கொள்ளுமளவுக்கு இன்று நிலைமை  இல்லை.. கருத்த மேகங்களின் சில்லென்று குளிர்ந்த காற்று, ,எப்போது வேண்டுமானாலும் பெய்து விடுவோம் ,என்று பயம் காட்டும் கண்ணாமூச்சி ஆட்டம் இன்று காணாமல் போயிருந்தது. உண்மையிலேயே வானம் பொய்த்துவிட்டது. தினமும் சோவென்று கொட்டிகொண்டிருக்கும்  டிசம்பர் மாதத்து அடைமழை போன இடம் தெரியவில்லை.  பளீரென்ற மஞ்சள் தகடாய் வானம் அழகு காட்டிக்கொண்டிருந்தது.

அடுத்தமாதம் இமயமலைக்குப் போகும் ஒரு குழுவோடு பயணம் என்பதால், தினமும் நடைப்பயிற்சிக்கு இப்பொழுதே பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. டெல்லிவரை விமானம், அடுத்து, வாகனப்பயணம் தான் என்றாலும் ஆங்காங்கே சிறுசிறு மலைகள்,குன்றுகளின் மேலுள்ள கடவுள்கள   தரிசிக்க  இந்நடைப்பயிற்சி அத்தியாவசியம் என்று ஏற்பாட்டாளர் வலியுறுத்தியிராவிட்டால்,  ஒருபோதும்   இந்த அப்பியாசத்துக்கு ராஜசேகர் முன் வந்திருக்க மாட்டான். புக்கித்தீமா  காட்டில் நடைப்பயிற்சி தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது.ஆனால் இன்றைய நடையின் சுகம் இதுவரை அவன் அனுபவித்தறியாதது  .
     
நடக்க நடக்க அவ்வளவு சுகமாக இருந்தது. காற்று என்னமோ கட்டின மனைவியாய், அவனைத் தழுவித் தழுவி மிருதுவாய் உடலுக்குள் ஊடுருவிய சுகத்துக்கு  மனசெல்லாம் பஞ்சுப்பட்டாய் பறந்து கொண்டிருந்தது? இரண்டு கைகளையும் நீட்டியபடியே காற்றை  நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.பரவசத்தில் கிளுகிளுவென்று நெஞ்சின் ரோமக்கால் கூட  சிலிர்த்துப்போனது.காற்றுக்கு ஏது வேலி? காற்றை  கட்டியணைக்க முடியுமா என்றெல்லாம் அவனால் யோசிக்க முடியவில்லை.  காற்று அவனது அனைத்து உணர்வுகளையும் அப்படிக் கவ்வி பிடித்திருந்தது.

சாரலும் தூறலும், மழையுமில்லாமல், இந்தா அனுபவி, என்று இயற்கையே அவனைக் கைபிடித்துப் போய்க் கொஞ்சுவதாய்ப் புளகாங்கிதத்தில் நடந்து கொண்டிருந்தவன்  டபாலென்று எதன் மீதோ இடித்துக்கொண்டு அப்படியே நெட்டுக்குத்தாய் கீழே சரிந்தான் . கால் முட்டி சிரைத்துவிட்டது. ஒருவினாடிக்கு  எதுவுமே புரியவில்லை.என்னாயிற்று ?, என்று கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தால் முத்து முத்தாய் ஆங்காங்கே  சிறு சிறு குன்றுகள்.
   
எதிரே தெரிந்த குன்றின் இடைவழி நின்ற குட்டிப்பாறையின் மீதுதான் இடித்துக் கொண்டு  விழுந்திருக்கிறான்.  மெய்ம்மறந்து அப்புறமும் இப்புறமுமாய்ப் பார்த்துக்கொண்டு வந்ததில் கண்ணுக்கு முன்னால் நின்ற இந்தக் குட்டிப்பாறையை ,எப்படிப் பார்க்காமல் போனோம் ?அட, தலை குப்புற விழுந்த பிறகே  காட்சி மண்டலம் பிடிபட்டது.ஏனென்றால் எதிரே கண்டது வெட்டவெளியல்ல.
ஒருவாறு சமாளித்து எழுந்தவனுக்குக் காணக்காண சங்கு குளிர்ந்து போனது
       
இடது பக்கம் முழுவதும் நீண்ட நெடிய மூங்கில் மரங்கள். அந்தப் பக்கம் கொத்து கொத்தாய் காய்த்து நிற்கும்  சீத்தாப் பழங்கள்,ஆனால் மேபில் மர இலைகளைப்   போல் நிறம் கொண்ட  மரம் அது. சற்று தூரத்தில் ,குண்டு குண்டாய்க் கண்ணாடித் துண்டுபோல் வித்தியாசமாகத்  தொங்கும் மரங்கள். வலதுபக்கம் முழுவதும்   சீராக இல்லாமல், ஒரே காட்டுக்குலைவாய் நின்ற   மரங்கள், !!!!    அட, !  இந்த ஒரு மரம் மட்டும், ம் ,ம் ,இது , என்ன பெயர், எங்கோ  படித்திருக்கிறோமே,அல்லது இணையத்தில் பார்த்திருக்கிறோமே, என்று நினைவு வந்தாலும் பெயர் ஞாபகத்தில்  வரவில்லை. ஆனால், பழுத்த பழங்களைப் பார்த்த மாத்திரத்தில் பசி வந்துவிட்டது. சட்டென்று ஒரு  கிளையை வளைத்துப், பழத்தைப் பறிக்கப்போன நேரத்தில், ,”  வேண்டாம், பறிக்கவேண்டாம்,அதைப் பறிக்கும் உரிமை உங்களுக்கில்லை. ”என்ற குரல் கேட்டுத் திரும்பினால்,  ஒரு பெண்.அதுவும்   கையெட்டும் தூரத்திலிருந்து  வந்து  கொண்டிருந்தாள்.

ஆச்சரியமாகப் போய் விட்டது. திடீரென்று இவள் எங்கிருந்து  முளைத்தாள்?

அவன் மனதைப் படித்தவள் போல்,  ’ இப்ப கொஞ்ச நாளா இங்க காட்டுக்குள்ள தான்  இருக்கேன்.

” ஊருக்குள்ள எங்கே என்னை  வாழவிட்டீங்க  ?ஆரம்பத்தில் நான் ஷெண்டொன் வேயில் தான் வாழ்ந்து கிட்டிருந்தேன்.அதற்குள் காட்டை அழிக்கிறேன், நாட்டைச் சீர்படுத்துகிறேன்னு  சொல்லிப் புகலிடம் தேடி ஓட வைத்தவர்கள் தானே ? இங்கும் நிம்மதியாக வாழ விட மாட்டீங்களா?”

’ ஓஹோ, அப்ப ஊருக்குள்ளிருந்து தான் இங்கு வந்தாளோ???எந்த வட்டாரமயிருக்கும் ??

ஆனால் என்ன அதிகாரம் இது ??

ராஜசேகருக்குக் கோபம் வந்துவிட்டது.ஒரு பழம் பறிக்கப்போனதுக்கு இவ்வளவு கதையா? இந்த மரம் என்னமோ இவளுக்குச் சொந்தம் போல் பேசுகிறாளே!.கொஞ்சம் இவளோடு விளையாடிப் பார்த்தால் என்ன ?

ஆமாம்!!! உன் பெயர் என்ன ?

’”முல்லை’”, என்றபோது தான்  என்ன பெருமிதம். ஒரு பெயரைச் சொல்வதற்கு இவ்வளவு பெருமையா??

”காடு பொதுச்சொத்து.,யாருக்கும் இந்தப் பழங்களைப் பறிக்க உரிமையுண்டு,”

”காடு பொதுச்சொத்தாக இருக்கலாம். ஆனால் காட்டில் வாழும் இந்த மரங்கள் வெறும் மரங்களல்ல.ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு.,நாங்கள்தான் இந்த இயற்கையோடு சுவாசித்து, இயற்கையோடு  இயைந்து  இந்த உயிர்களிடம் பேசி வாழ்ந்து வருபவர்கள்.ஒவ்வொரு  மரத்துக்கும் பெயர் உண்டு.. இவளுக்கு அடுத்து நிற்கும் அந்த அடிபெருத்த வேர்களுடனும் பெருங்கிளைகளுடனும் அண்ணாந்து நின்று  ,மாசாத்துவனாய் பார்க்கும் அவன் தான் இவளின் ஆருயிர் துணைவன், ..இப்படி பெற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் குழந்தையைப் பறிக்கப்போவது தப்பு.’நீட்டி முழக்கி அவள் பேசுவதைப்பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது

”அப்படியானால் சந்தைக்கு வரும் பழ வியாபாரிகள் பழங்களை  விற்பது எப்படி?

”அதுதான் சொன்னேனே, கனிந்து பழுத்து,அவர்களே ஒப்பினால் தான்  நாம் பறிக்கலாம்.?

”இது வேலைக்கு ஆகாது, “ என்று எரிச்சல் பட்ட அதே நேரத்தில், ,  எங்கோ, நீர் வீழ்ச்சியின் ஓசை அவன் கவனத்தைக் கலைக்க,, ராஜசேகர் சுற்றுமுற்றும் பார்த்தான்.

எங்கோ அருகாமையில் தான் துல்லியமாய் நீர் விழும் ஓசை. இந்த வாயாடியோடு பேசிக்கொண்டிருக்கும் வெட்டிவேலையே விட, அங்காவது போய்ப்பார்க்கலாம் என, விடுவிடுவென்று வேகம் வேகமாய் நடந்தான்.

என்ன ஒரு விசித்திரம்.

கோணலான இரு மலைவாயிலில் இருந்து சலசலவென்று மென்மையான ஓசையில் நீர் விழுந்து கொண்டிருந்தது.சினிமாவில் எல்லாம் ஹோவென்ற பேரிரைச்சலோடு மட்டுமே நீர் வீழ்ச்சியைப் பார்த்துப் பழகியவனுக்கு  கண்கொள்ளா இந்தக் காட்சியினின்று விடுபட முடியவில்லை. பளிங்குத்தகடாய் நீரோட்டமும்,கீழே சல்லிசு சல்லிசாய் வெண் மணலும் மனசை விட்டகல்வேனா என்றது. அப்படியே ஒரு வாய் நீரை அள்ளிப் பருகும் ஆசையில், கீழே குனிய,முகம் கண்ணாடி போல் நீரில்  தகதகத்தது., மகிழ்ச்சியோடு திண்ணென்ற நீரை இரண்டு கைகளாலும் வாரி வாரிக் குடித்தான்.

’கந்தகம் கலந்த நீர்,  உடம்புக்கு ரொம்பவும் நல்லதுதான், ஆனால் இப்படி அதீதமாகக் குடிக்கக் கூடாது’.

அசரீரியாய் மீண்டும் அதே குரல். இப்பொழுது அவனுக்குக் கோபம் அசாத்யமாய் வந்துவிட்டது. என்னமோ இந்தக்காடே இவளுக்குச் சொந்தம்போல்,என்ன ஒரு அராஜகம்  , அல்லது அதிகாரம், !!

, போடி, கழுதை, என்பதுபோல் ஒரு முறை முறைத்துவிட்டுத், திரும்பியும் பாராமல்

நடந்து விட்டான். சில நிமிஷங்கள் கழித்துத் திரும்பினால்,அட, அவளைக்காணோம்.

இப்பொழுது திடீரென்று கால்கள் சொத சொதவென்று ஈர மண்ணில் அகப்பட்டுக் கொண்டது. ட்ரேக் ஷூ முழுக்க , நனைந்து , என்ன கிரகாச்சாரம் என்ற கடுப்பில் சுற்றுமுற்றும் தண்ணீரைத் தேட, சுருக்கென்று காலில் ஏதோ குத்திவிட்டது. விருவிரென்று வலி அப்படியே தொடை வரை ஏற, தடுமாறிப் போய்க் கீழே விழப்போனவனை,,

”இந்தப் பக்கம் இப்படி வாங்க !!  என்றழைத்த மனிதரின் குரலில் செலுத்தப்பட்டவனாய்த் திரும்பினான். ஆனால்  நடக்க முடியவில்லை. அந்த மனிதர்   ஓடி  வந்து தாங்கிப் பிடித்துக்கொண்டார் .  ராஜசேகரை அருகே இருந்த ஒரு குட்டிச் சாக்குக் கல்லில் உட்கார வைத்து விட்டு,விடுவிடுவென்று அருகே இருந்த ஏதோ இலைகளைக் கொண்டு வந்து, அடிப்பாகத்திலும் மேல்பாதத்திலும் அமுக்கிப் பிழிந்து நன்றாய் உருவிவிடக் கொஞ்சம் கொஞ்சமாய் வலி குறைந்தது.

’ இது தொப்புலான் புழு. பழக்கமில்லாதவங்கலுக்கு இது கடிச்சா இப்படித்தான் விர்ருனு ஏறும்.எங்களுக்கு பழகிடிச்சு,என்று சிரித்த மனிதருக்கு மேல் வரிசையில் பல்லே இல்லை. கீழ் வரிசையில் மட்டுமே மூன்றோ, நான்கோ பற்கள் தெரிந்தது.

ராஜசேகர் வியந்து போய்ப் பார்த்தான்.அரையில் பெமுடா போல் ஏதோ அணிந்து, மேலே வெற்றுடம்பாய்ச் சகதியில் நின்றுகொண்டிருந்த மனிதர் மீண்டும் சிரித்தார்.

”கம்பத்து வீடுங்கல்லாம் போயி அடுக்கு மாடி வீடுங்க வந்தவுடனேயே , நான் இங்கே வந்துடேன் ,   இங்க பயிர் பச்சங்களைப் பயிரிட்டு, நிம்மதியா வாழ்ந்து கிட்டிருக்கேன். எம்புள்ளங்கல்லாம் இன்னும் பீஷான்லதான், இருக்காங்க,

‘அப்படியா, ஆனா, பீஷான் பார்க்கில உங்க காட்டிலேருந்து ஓடிவந்த ஒரு பன்றி போலீஸ்காரரையே இடித்துத் தள்ளி விட்டதே, இபொழுது இந்த காட்டு ஜீவராசிகளாலே நாட்டில் எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது ??

‘அதுங்க என்னச் செய்யும் ?அப்பப்ப  அதுங்களுக்கும் ஒரு வெளிக்காத்துப் பட ஆசை யிருக்காதாக்கும்!!!மனுசங்களுக்கு  மட்டும் தான் சுதந்தரம்  தேவையா ?

பன்றிக்கூட்டம் மட்டுமில்லை, போனவாரம் புக்கிட் பாத்தோக்கில  ஒரே எலிக்கூட்டமா வந்து எறங்கியிருக்கு, பிறகு மனுஷங்களுக்கு மட்டும் என்ன பாதுகாப்பு/??  காட்டில இருக்கவேண்டியதுங்க காட்டிலதானே இருக்கணும் ????

’ அது அவுங்க குத்தமில்லையே ??? கட்டடம் கட்டறேன்னும் கடலைக்கூட  இறைச்சு இறைச்சு நண்டு, நத்து, எல்லாத்தையும் ஒழிச்சுக்கட்டிட்டீங்களே !!!!அந்தக் கொடுமைக்கு முன்னே இதெல்லாம் ஒரு விசயமாக்கும் !!!!!

சரிதான், என்ன ஒரு வியாக்கியானம் , என்று கனன்று கொண்டு வந்தது ராஜசேகருக்கு.

‘உன்பேரென்னப்பா ’

’மருதவேலுங்க ! இங்க பயிர் பச்சகளைப் பயிரிட்டு, அதுங்களோட பேசிச் சிரிச்சு சந்தோசமா காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன்,, இந்தாங்க, இதச் சாப்பிட்டுப் பாருங்க!!!

இவனோடு பேசிக்கொண்டே, அருகிலிருந்த ஒரு குட்டைச்செடியிலிருந்து எதையோ பறித்துக்கொடுத்தார்.

என்ன இது ,,. கச்சான்போல் இருக்கிறதே ,,.ஆனல் இனிப்பாயிருந்தது. கடுக் முடுக்கென்று கடித்துச் சாப்பிட்டவனுக்கு மருதனிடம் பேசவேண்டும் போலிருந்தது.ஆனால் மருதவேலோ அருகிலிருந்த மரங்களுக்கு, உரம்போல் கருப்பாய் எதையோ கொத்திப் போட்டுக் கொண்டிருந்தார்.

 ‘என்னாப் பாக்குறீங்க ? இதுதான், வேம்பு, அது முள்ளி,அதோ, அந்தால நிக்குது பாருங்க,   அதுதான் கொயினா மரம்,  என்ன, என்ன ?? கடுமையான வியாதிக்கெல்லாம் அருமருந்தாகப் பயன்படுத்தப் படும் கொயினா மரமா??   இவனது பரபரப்பையே காதில் வாங்காதவனாய் மருதன் பாட்டுக்கு வேலையில் மும்முரமாயிருக்க, தூரத்தே தெரிந்த மரத்திலிருந்து பறந்துகொண்டிருந்த பறவைகள் கூட்டம் கண்களை அப்படிக் கவர்ந்தது .

அழுக்கு ஷூவைக் கழுவத் தண்ணீர் தேடி அலைய வேண்டியே இருக்கவில்லை.கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே, சிறு குளம் தெரிந்தது. தாமரைப்பூக்கள் குளம் நிறைய அலுங்காமல் குலுங்காமல்  ,பூத்து நின்ற அழகினைப் பருகினபடியே, ஓரத்தில் நின்று ஷூவைக் கழுவிக் கொண்டான். சிரிதுதூரம் கூட நடக்கவில்லை.  திடீரென்று ஏனோ தாகம் அப்படி வாட்டியது. இப்படி ஒரு தாகத்தை அவன் வாழ்நாளில் உணர்ந்ததில்லை.மீண்டும் ,மீண்டும் தாகம் தான் .அப்படி வாட்டியது.  ஒருசொட்டுத் தண்ணீர் கிடைக்காதா, என்று  பரிதவித்துப் போனான்.

நடந்து நடந்து  எங்கே  வந்திருக்கிறான்? குருவிகளின் கீச்சிடலோ, கூட்டைத்தேடிபோகும் பறவைகளின் ஆரவாரமோ எதுவுமே இல்லை. அப்படி மொட்டைப் பாலைவனமாக இருந்தது.எங்கு பார்த்தாலும் ஒரே பாலைவனம்போல் பூமி வரண்டு கிடந்தது. ஒரு புல் பூண்டு, மரம், மட்டை ,மருந்துக்குக்கூட இல்லை.

தொண்டை வரண்டு எங்கே போய் தண்ணீர் தேடுவது,என்ற அலமலப்பில்,நடந்துகொண்டே வந்தவன் திடீரென்று மன்மத மிழற்றலில்  குரல்கள் கேட்க, ஆவலும் கவலையுமாய்ச் சுற்றுமுற்றும் பார்க்க, புதர் போலிருந்த இடத்திலிருந்து தான் சப்தம்,!!.

சற்றுக் கவனித்துக் கேட்டதில்.... எங்கோ கேட்ட  குரல் போலிருக்கிறதே!!!!!

மரத்தின் பின்னாலிருந்து, இடுப்புத் துணியைச் சீராக்கிக்கொண்டு,முதலில்  வெளியே வந்தவன் ஒரு முரட்டு ஆள். பார்வையிலேயே ஒரு பாட்டாளி எனத் தோற்றமே சொல்லியது.

முறுக்கித்தெரிந்த புஜங்களும்,  புடைத்துத் தெறித்த அங்கமுமாய் வெளியே வந்தவனைப் பார்த்து ஒன்றும் தோன்றவில்லை.ஆனால் உடையைத் திருத்திக் கொண்டே, அவனுக்குப் பின்னால் கொஞ்சலாக எழுந்து வந்தவளைப் பார்த்துத் தான் அதிர்ச்சியாகப் போய் விட்டது. முல்லை..
மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறிக்கப்போனதுக்கு அந்தப்பேச்சு பேசினவள் ,

இப்பொழுது இது என்ன ?.  இது மட்டும் தப்பில்லையோ ?,

நிச்சயமாக இவன் அவளின் கொண்டவனாக இருக்கவே முடியாது. கள்ளச்சிரிப்புடன்

நடந்து போகிறவளிடம் சுள்ளென்று கேட்டாலென்ன என்றிருந்தது.

அதற்குத்தேவையே இல்லை, என்பதுபோல் உடன் படுத்தெழுந்தவன் சடாரென்று போய் அருகிலிருந்த ஓடையில் குதித்துக் குளிக்கத் தொடங்கினான். மனதுக்குள் குமிழ் குமிழாய் நகை புரண்டு வந்தது  ராஜ சேகருக்கு. களவொழுக்கம் என்பது குறிஞ்சி நிலத்துக்கே உரியதாயிற்றே ???ஆனால் அதற்கு இந்த பாலை தானா இவர்களுக்கு     கிடைத்த்து ????     லேசாகக் குளிர் காற்று சருமத்தைத் தீண்ட,நேரம் அந்தி மயங்கிவிட்டதே அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது. ஆனால் தாகமோ விடாப்பிடியாக , தொண்டைக்குள் நாடி நரம்பையெல்லாம் சுருட்டிக் கொண்டிருந்தது. தடதடவென்று பின்னாலிருந்து  ஒடி வந்த மருதன் , ’ தண்ணி குடுக்க மறந்து  போயிட்டேன். இந்தாங்க, அம்புட்டும் குடிச்சுக் கிடுங்க  இது வாச்சிக்கடலை, சாப்ட்டா, தாகம் அப்படித்தான்  புடுங்கி எடுத்துடும்’’.

மடமடவென்று குடுவையிலிருந்த நீர் அத்தனையையும் அப்படியே வயிற்றுக்கு கொட்டிக் கொண்ட பிறகே சுவாஸம் சீரானது. தண்ணீர் கொடுத்த வேகத்திலேயே திரும்பியும் பாராமல் போய்விட்டான் .இப்பொழுதுதான் எப்படித் திரும்பிப் போவது  எனும் பிரச்சினை பூதாகாரமாய் எதிரே நின்றது.
சில அடிகள் நடக்கத் தொடங்க, மாலை நேரத்துப் புள்ளினங்கள், கூட்டம் கூட்டமாய் விர்ரென்று பறந்துசெல்வதில் எந்த ரம்யமும் தெரியவில்லை.

அடுத்த கணம்   ராஜசேகர் , அய்யோ என்று சர்வாங்கமும் நடுங்க,அப்படியே நின்று விட்டான். நிமிடங்கள் பலவாகியும் கண்களைத் திறக்கவே முடியவில்லை.ஆனால்  ஏதோ சக்தி,ஆட்டுவிக்க,குருநாமம் ஜெபித்துக் கொண்டே மெல்ல , அதிலும் அரைக் கண்ணால் மட்டுமே பார்த்தான்,  அது அப்படியே சடை சடையாய் முடியை விரித்துப் போட்டுக்கொண்டு திடுதண்டியாகவே நின்று கொண்டிருந்தது. இப்பொழுது கண்களை முழுதாகவே விரியத் திறந்து விட்டான்.

சே.!  வெட்கமாகப்போய் விட்டது.

ஹாவென்று இருட்டில் நின்று கொண்டிருந்தது ஒரு  தடிமாட்டு மரம்.  பயம் முழுசாக விலகவில்லை. .மரத்தில் ஏதாவது போமோ , எனும் பேய் குடி கொண்டிருக்குமோ, இல்லையென்றால் இப்படி நிற்குமா ?

  ‘””கொப்பும் கிளையுமாய் ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தால் அதற்கும்  சந்தேகமா ?? இதனால் தான் நீங்களெல்லாம் இப்படி இருக்கிறீர்கள் !!!. வயதானால் வீட்டில் பெரியவர்களை வைத்துப் பார்க்கப் பிடிக்காமல், கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டு விடுவதால் தான்,  காட்டில் வாழும் இந்த அன்பான பெரியவரைப் பார்த்து இப்படி பயப்படுகிறீர்கள் .!!!!!  அசரீரிக்குரல் ’, வேறு யார்  ?முல்லை தான்,,     ‘ இந்த சடாமுடி மரம்தான் -- பெரியவரா ? சிரிப்பு வந்துவிட்டது ராஜசேகருக்கு.,

’”எப்படி திரும்பிப் போவது என்பதுதான் பிரச்சினை என்றால் நான் உதவுகிறேன், ஆனால் போகும் போது எனக்கு ஒரு பரிசு தந்துவிட்டுப்போகவேண்டும் . இருக்கும்  நிலைமையில் எப்படியாவது திரும்பினால் போதும் என்பதால் , அவள் கோரிக்கையை சிரசாய் ஏற்றுக்கொண்டான் ராஜசேகர். இப்படித்திரும்பி, அப்படி வளைந்து, இப்படி, இப்படி ,என்றெல்லாம் வழிகாட்டியாய் நடந்துகொண்டே,  ஒரு குடோன் மலைக்கு முன்னால் போய் நிறுத்தி, பின் மீண்டும் நடந்து,

தூரத்தே தெரிந்த ஒரு செம்மண்சாலை  பக்கமாய்  கொண்டு விட்டாள் ..அவளுக்கே மூச்சு வாங்கியது,.செங்குத்தான அந்த உச்சியிலிருந்து விடுவிடுவென்று நடக்கதொடங்கியபோது ' பரிசு, எங்கே? '  என்று அசரீரியாய்,  பின்னாலிருந்து கேட்டவளிடம் ‘கிட்டே வா ’என்றழைத்தான்.

வந்தாளோ இல்லையோசடாரென்று திருப்பி அப்படியே இறுக்கி மாரோடணைத்து பளிச்சென்று ஒரு முத்தம் கொடுத்தான்.அவ்வளவு தான் , அடுத்தகணம் இடி இறங்கியது. கன்னம் அதிர்ந்து கண்ணுக்குள் மின்னல் பறந்தது.

’காட்டுக்குள்ள உள்ள பொண்ணுங்கன்னா அவ்வளவு  இளக்காரமா ????

எரிமலையாய் வெடித்துவிட்டு கண் சிமிட்டும் நேரத்துக்குள் காணாமல் போனாள்.

வீடு திரும்பி பல நாட்களுக்கு ராஜசேகருக்கு அவளை மறக்கவே முடியவில்லை.

அவன் அப்படி ஒரு முத்தத்தை பிறகு எந்த பெண்ணுக்குமே கொடுக்கவில்லை.மறந்தும்  பிறகு புக்கித்தீமா காட்டுக்கு அவன் போகவுமில்லை. ஆனாலும் அவனுக்குப் புரியவே புரியாத புதிர், அந்த கட்டானைவிட தான் எந்தவிதத்தில் குறைந்துபோனோம்  ??

ஏன்  அவள்  அப்படி அறைந்தாள் ,என்பது எவ்வளவு யோசித்தும் அவனுக்குப் புரியவே இல்லை . ஆனால், சிங்கப்பூரின் இயற்கை  மட்டும் ஐந்திணைகளிலும்  நின்று அவனை முறைத்துக்கொண்டே இருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R