சேக்ஸ்பியர்இம்முறை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. ரிஷியின் நீள் கவிதை: குழந்தை கை மாயக்கோல்!
2. முனைவர் இர.மணிமேகலை கவிதைகள்: சமச்சீர், அகம், நானேயாகிப்போனவள், காலம்.
3. நேதாஜி: இப்போதெல்லாம், நாம் காந்தியவாதிகள்
4. மெய்யன் நடராஜ்: உதவாத உறவுகள்
5. வாணமதி: புரியாத மனிதர்கள்
6. ராஜகவி ராகுல்: 1,2,3, நீயெனும் பலூனும் நானெனும் மூச்சும்
7. மட்டுவில் ஞானக்குமாரன்: தமிழினி
8. கிரிகாசன் கவிதைகள்
9. ஆர்.பாலகிருஷ்ணன் - ஶ்ரீரங்கம்

ரிஷியின் நீள்கவிதை: குழந்தை கை மாயக்கோல்!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

’குச்சி ஐஸ்’ வேண்டுமென்று கேட்டு பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை
கொஞ்சம் அங்கேயிங்கே அலைந்துவாங்கித்தந்து
சமாதானப்படுத்திவிடமுடியும்.
“பிச்சுத்தா மேலே தொங்கும் நட்சத்திரங்களை”, என்று கேட்டால்
என்ன செய்வது….?
எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்க
கையிலுள்ள மாயக்கோல் கொண்டு
கண் துஞ்சாமல் இரவு முழுக்க விண்ணைத் தாண்டி யேகு மந்த
எழுத்தேணியைக் கட்டமைத்துக்கொண்டது குழந்தை.

அடங்காத் தாகத்துடன் தட்டுத்தடுமாறி யேறத் தொடங்கியது
அவ்வப்போது மூச்சு முட்டியது;
அங்கேயிங்கே மோதிக் காயம்பட்டது.
கீழே போய்க்கொண்டிருந்தவர்கள் அண்ணாந்துபார்த்து அங்கலாய்த்தார்கள்
அத்தனை ‘கொழுப்பு’ உடம்புக்கு ஆகாதென்று.
தங்களுக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால் கண்டித்தார்கள்.
கெக்கெலித்தார்கள், கல்லெறிந்தார்கள்,
பின் வழி போனார்கள் பூனைக்கண்மூடி.
அந்தரவெளியின் அரவணைப்பில்
குழந்தை யனுபவித்துக்கொண்டிருந்த ஆனந்தப்பரவசம்
அதற்கு மட்டுமே தெரியும்.
யாராலும் பொருள்பெயர்க்கலாகா வாக்கியமொன்றின்மேல்
தன் வாழ்க்கையை நிறுவிக்கொண்டுவிடுவதென்று
காற்றிடமிருந்து கசடறக் கற்றுக்கொண்டுவிட்டது குழந்தை.

நூலேணியில் மேலேறிச் செல்லச் செல்ல
மனதிலூறிய இன்பத்தில்
விண்மீன்களைக் கொய்துவரும் எண்ணம்
அறவே மறந்துபோக
அந்ந்தரத்தில் சுந்தரத்தைக் கண்டுணர்ந்து
கைகொட்டி மகிழ்ந்துகொண்டிருந்தது குழந்தை.
பூரிப்பில் மின்னிக்கொண்டிருந்த அதன் கண்களினூடாய்
வந்துசேர்ந்தன விண்ணின் இரண்டு புதிய நட்சத்திரங்கள்!

அந்தரவெளியில் தொங்கிக்கொண்டிருக்கும் நூலேணி.
ஆரம்பமும் முடிவும் புலப்படவில்லையோ,
அல்லது இல்லையோ …..
சொல்வார் யார் உறுதியாய்.?
இறுதியில் எல்லாமே ஒரு கைத் தட்டலொலி தானோ ஏனோ
மானோ மயிலோ மல்லிகைச்சரமோவெனத்
தானோடிக் கொண்டிருக்கிறது குழந்தை தாவித்தாவி மேலே
வீணான கேள்விகளுக்கு விடையளிக்க நிற்காமல்.

கற்காமல் கைகூடாது அறிவு என்றே
கைகட்டி அமரச் சொன்னார்கள் வகுப்பறைக்குள்.
பொற்காசு பரிசளிப்பதாய் போட்டிவைத்தார்கள் –
சட்டாம்பிள்ளைத்தனமாய் வகுத்துரைத்தார்கள்
இப்படியிப்படி யிருக்கவேண்டும் கவிதை யென்று.
செல்வங் கொழிக்கும் இல்லில் பிறக்கவில்லை யானாலும்
சொல்செழிக்கும் உள் வாய்த்திருந்த குழந்தை
ஆயகவிதையை எழுதலாயிற்று முற்றுப்புள்ளியிலிருந்து.

புள்ளிக்கு முன்னும் பின்னும்
கள்ளச்சிரிப்போடு துள்ளிக்கொண்டிருந்த எண்ணிறந்த வரிகளைக்
காணவியலாதார்
”போட்டிக்கு நீ லாயக்கில்லை போ” என்று பிரம்போடு வந்தனர்.
விருதுக்கல்லவே என் வரிகள் எனச் சொல்லியபடி
தான் எழுதியிருந்த வெல்லும் சொல் ஒன்றை
அவர்களுக்கு அன்பளிப்பாய் விட்டுவைத்து
அங்கிருந்து அகன்றது குழந்தை.
செய்வதறியாமல் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே
அந்தச் சொல்லிலிருந்து பல்கிப் பெருகலாயிற்று
நல்வினைப் பயன்களெல்லாம்!

கோலிகுண்டு, கலைடாஸ்கோப்,
பறவையின் சிறகிழைகள்,
கடற்கரைக் கிளிஞ்சல்கள்,
காற்றின் திருவுருவங்கள்
கானக விலங்கினங்கள்,
கண்ணன் வேய்ங்குழல்,
காற்றாடி, கலர்ச்சட்டை
கார்வண்டி, கப்பல், ராக்கெட்
பாக்கெட் நிறைய சாக்லெட்டுகள்
மண்டை முழுக்க மூளை
பாலையில் சோலை
உறவில் பிரிவு
பிரிவில் உறவு யென்றாங்கு
உறுகி யிறுகிக் குறுகிப் பெருகிப்
பிள்ளைக்கு வல்வினை தீர்த்தும் நல்வினை சேர்த்தும்
எல்லாமாகி நிற்கும் சொல்.

மின்மினியின் ஒளிர்வில் தட்டுப்படும் பாதையில்
தன்னந்தனியாய் தளர்நடை பழகிக்கொண்டிருந்த
குழந்தையின்
கன்னத்தில் முத்தமிட
அந்தரத்திலிருந்து மிதந்திறங்கிவந்த தேவதை
நெருங்கக் கண்டு புன்னகைக்கும் பிள்ளையின் கனிவில்
வாயெங்கும் பரவிய இதுவரை யறியாத தித்திப்பு
தெவிட்டத் தெவிட்ட
வந்தவழி திரும்பமாட்டாமல்
திக்குத் தெரியாத காட்டில்
இன்னுமின்னும் குழந்தையை உச்சிமோந்தவாறு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



முனைவர் இர. மணிமேகலை கவிதைகள்!

1. சமச்சீர்

- முனைவர் இர. மணிமேகலை , பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., கோவை.,தமிழகம்.,இந்தியா. -

முனைவர் இர. மணிமேகலை கவிதைகள்!

இருவருக்கும் இடையிலான சிறு இடைவெளியும்
நிரப்பப்பட்டுவிடுகிறது அவனால்
உலக உருண்டையின் மேடுபள்ளங்களை அறிவுறுத்தும் அறைகளில்
சமச்சீரற்ற கல்வி
மழைதழுவிய சிறு செடியில் பூத்திருக்கும் வெண்மலரென
இளங்குருத்துக்கள் வரக்காத்திருந்த தருணத்தில்
உறவுக்காக நிமிடங்களைச் சேகரித்திருக்கும்
கைதியைப்போல உணர்கிறேன்
வெளியே வந்த என்மழலைப் பயணத்தின்போது
இருட்டு எங்க போச்சு என இதழ் மலர்கிறது.
இரங்கற்பா
கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது பூத உடலொன்று
அதன் உயிர் வேற்று வெளி நாடிக் கிளம்பிவிட்டது
சுற்றி அமர்ந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்
உடலுடன் தாம் கடந்த பாதைக்காய்
மணம் நிறைந்ததோ
முட்கள் நெருடியதோ
அவரவர் சந்தர்ப்பங்கள்
காவியைக் கோடியாக்கிப்போர்த்தப்பட்ட உடலில்
காமத்தின் நெடி கலந்தேயிருக்கிறது
எவரோ அல்லது எதுவோ நலன் குறித்து
அடைக்கலமானவர்களின்
இரங்கற்பா ஒலியில்
கறைபடிந்த காற்று திகைத்து நிற்கிறது.

2. அகம்

தெருவோரங்களில் சுருண்டுகிடக்கும்
அவர்களின் இதழ்களில்
மதுவின் சுவை வழிகிறது
மயக்கத்தில் திரிபவர்களிடமிருந்து
வினாக்கள் எழும்பியவண்ணமிருக்கின்றன
குழந்தைமைகளின் கொலுசொலிகளும்
விரலின் வண்ணங்களும் குழைந்துகிடக்கிறது அகம்
வாயிலில்
குரலொன்று அதிகார தொனிகொள்கிறது
சுரண்டல்களின் கூடாரத்தில்
அன்பின் களியாட்டம்
உவந்து உவந்து தோற்கின்றன உள்ளங்கள்.

3. நானேயாகிப்போனவள்

புத்தகங்களின் புதுமணமென
நட்பின் சந்திப்பு நிகழ்ந்தது
என் பின்னவனின் முகத்தைப்பிரதிகொள்ளும் வதனம்
கண்களில் புலியின் சீற்றமிருந்தது
இதழ் குவிந்து விரிந்த ஒலியில் மயில் தோகைவிரித்தது
கவிதை மொழியின் லாவகம் குறித்த சொல்லாடல்கள்
மேகக் குமிழ்களின் தண்மையென
நாற்காலியில் உறைந்து நிற்கின்றன
இறுதியாய்
நுரைத்துப்பொங்கும் நதியின் பிரவாகம்
கால்கொள்ளாத நாற்றுக்களை மையமிட்டது
நெற்றிப்பொட்டில் பாய்ந்த மின்னல்களில்
சாம்பலாகிப்போனேன்
வாயில்கடந்து அகம் நுழைந்த அவளும்
நானேயாகிப்போனாள்.

3. காலம்

மேசையில்
உறைந்து கிடக்கின்றன வார்த்தைகள்
சுற்றிலும் தவளைகள்
உனக்கான வார்த்தைகள்
என்னுள் தேர்வாகின்றன
மனம் துளைபட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன்
கடந்து செல்லும் சாலையெங்கும்
சிரிப்பு சலங்கைகட்டுகிறது
கட்டிடங்கள் நிறைந்த சாலை
எந்த நேரத்திலும் முடிந்துவிடும்
அச்சத்துடனேயே கடக்கிறது
காலம்
நீயோ
நாம் காலம் கடந்தவர்களென்கிறாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நேதாஜிதாசன் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!1. இப்போதெல்லாம்

கிளிகளும் மயில்களும்
கனவில் வருவதில்லை
இப்பொழுதெல்லாம் ஆந்தைகள் தான்

நிறங்களும் இறக்கைகளும் என்
ரசனைக்குரியவை
இப்பொழுதோ கண்கள்
அதுவும் ஆந்தையின் பெரிய கண்கள்

கனவிலும் இதையே தேடுகிறது இந்த மனிதனின் கண்கள்
கனவில்லா சமயங்களில்
கண்ணாடியின் முன்னால் நான்

இப்போதைய இயற்கை காட்சிகள்
இவை எனக்கு


2. நாம் காந்தியவாதிகள்

எதிர்கால கனவுகளை பற்றி பேசாதே
எதிர்த்து தான் நிற்கும் எதிர்காலம்
இது காந்தியின் தேசம்
எனவே நாம் பயிற்றுவிக்கப்பட்ட காந்தியவாதிகள்
நாம் காந்தியவாதிகள்
அடியை தாங்கி கொள்வோம்
திருப்பி அடிக்க மாட்டோம்
நாம் காந்தியவாதிகள்
எதையும் பிச்சை கேட்டுப் பெறுவோம் சுதந்திரம் ஆனாலும்
நாம் காந்தியவாதிகள்
எப்போதும் எளிய ஆடைகளையே அணிவோம் ஒற்றைத்துணி எனினும்
நாம் இப்போது தீவிர காந்தியவாதிகள்
காந்தி சிரிக்கும் காகிதத்திற்காக
கொல்கிறோம்
ஏமாற்றுகிறோம்
கற்பழிக்கிறோம்
குழி பறிக்கிறோம்
ஏனெனில் நாம் காந்தியவாதிகள்
எதிர்த்து நிற்கும் எதிர்காலத்திடம்
அடி வாங்கவே பழக்கப்பட்டுள்ளோம்
இப்போது நாம் காந்தியவாதிகள்
எனவே எதிர்த்து வரும் எதிர்காலத்தை
தாக்கும் கனவுகளை பற்றி பேசாதே
பேசி விடாதே
நாம் காந்தியவாதிகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



உதவாத உறவுகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!*மெய்யன் நடராஜ்

அண்ணனென்றும் தம்பியென்றும் ஆயிரம்பேர் வாழ்வினிலே
அடுக்கடுக்காய் சொந்தமென இருப்பார். – நெஞ்சம்
புண்பட்டு அவர்வாசல் போயிருக்கும் நேரத்திலே
பின்கதவால் வெளியேறி இருப்பார்.

காய்த்திருக்கும் உன்மரத்தில் கல்லடித்துக் காய்ப்பரித்து
கடைவிற்றுக் காசாக்கிப் பார்ப்பார் – நீதான்
வேய்ந்திருந்த போதினிலும் வேலிதாண்டி பயிர்மேய்ந்து
விருப்புடனே தனக்கென்று சேர்ப்பார்

நேற்றுவரை உன்தயவில் நின்றிருந்த உறவெல்லாம்
நிலைமாற்றம் கொண்டுவிடும் தன்மை – அதிர்ஷ்டக்
காற்றடிக்கக் கண்டுவிட்டக் காசாலே பழசெல்லாம்
கைகழுவி விட்டுவிடும் உண்மை.

அன்பென்னும் மந்திரத்தை அனுதினமும் ஓதாமல்
அதிசயமாய் பணம்பொருளைத் தேடும் – ஆசைத்
துன்பத்தில் உழல்வதனால் தொய்வுற்று உறவெல்லாம்
தொணதொணத்து இதயத்தை மூடும் .

இல்லாத நிலைமையுனை ஏறெடுத்துப் பார்க்கையிலே
ஏளனமாய் சிரித்திருக்கும் உறவு – உன்னை
சொல்லாலே சுடுகின்ற சுயநலத்து வார்த்தையிலே
சூசகமாய் நிகழ்ந்துவிடும் பிரிவு.

ஒப்புக்கு ஊரார்முன் உறவென்று விரலோடு
உட்கார்ந்து கொண்டிருக்கும் நகங்கள்  – சோற்றுக்
குப்பில்லை எனக்கேட்கும் ஒருநாளில் உணர்த்திவிடும்
உதவாத உறவுகளின் முகங்கள்

பதவியென நாற்காலிப் பிடித்தமர்ந்து உட்கார்ந்து
பார்க்கின்ற வேளையிலே உறவை – அங்கே
கதவிடுக்கின் வழிநோக்கி கணக்கெடுக்கா  துதவிகளின்
கதவடைக்கும் கல்மனது பறவை .

உதவாத உறவெல்லாம் உலகத்தில் நமக்காக
உணர்த்திவிடும் நாடகத்து வேடம் – பார்த்து
கதவொன்று மனசுக்கு கச்சிதமாய்ப் போட்டுவிடக்
கற்றுத்தரும் வாழ்க்கையதன் பாடம்

உதவாத உறவுகளை உயிராக நேசித்து
உளமுடையக் கொள்ளாதே அன்பு –வாழ்வில் 
மிதவாதங் கொண்டொழுகி மேலாக வாழ்ந்திருக்க 
மிடுக்கோடு நில்லவரின் முன்பு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



புரியாத மனிதர்கள்....

கவிதை வாசிப்போம் வாருங்கள்!- வாணமதி (சுவிஸ்) -

கொடியநோயில்
கொடுரமான மரணத்தை
மனமார இரசித்தேன்

இறப்பென்பது உன்றெண்டு
உணர்த்திய நிமிடம்
உறவென்ற உயிர்கள்
எட்டவே எட்டிப்போக
எப்படிச்சொல்வேன்
எந்தன்வலியை?

நிஜமென்ற யாவும்
நிஜமல்லவென்று நிமிடங்கள்
நிஜமாக்கியபோது...

உதிர்ந்த முடியும்
ஒட்டியகண்ணமும்
கறுத்ததேகமும்
எலும்போடியைந்த தசையும்
மருந்தின் நெடியும்
இரத்தமும் சதையுமான
வலியும்

எங்கேயோ இருக்கும்
எமனை என்னருகில்
காவல்வைத்த நொடியும்
கண்களில் நிழலாடுது

மனதுக்குள் மகுடமாக
நான்வளர்த்த உறுதி
எட்டவே செய்தது
எட்டியவந்த எமனையும்

அறுத்த சதைகளை
அஞ்சாது பார்த்து
ஆடியோடிய வாழ்வை
அசைக்கவைத்த சதியோ!

அஞ்சாதபெண்ணாய்
ஆயுளுக்கும் வாழ்வேனென
ஆத்மாவின்ஒலியால் அறைகூவினேன்

காலவோட்டத்தில்
காலனையும் வென்ற காரிகையாக
கண்விழித்தேன்

சினிமாப்பாணியில்
நான்சொன்ன செய்தி
சிலபுரியாத மனிதர்களுக்கு
கதை!

புரிந்தவர்களுக்கு புரியும்
அதுதான் புற்றுநோய்!



ராஜகவி ராகில் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!1

எங்கோ தொலைந்துபோன
அனாதைச் சிறுமி
தொலைந்து போனதைத் தேடித் தேடி
இறுதியாக
ஒரு சனக்கூட்டத்தினுள் நுழைகிறாள்
இப்போது
ஓர் அம்மாவின் சேலை முந்தானை சிறுமியின் கைக்குள்
முற்றுப் பெறுகிறது
அவள் தேடல் தற்காலிகமாய் .

2

மகனைப் பிரிந்த அம்மா
இரவெல்லாம் உறங்காது புரண்டு புரண்டு
படுக்கிறாள்
இரவு மிக நீளமாய்
ஆழமான நதியாய் நகர்ந்து கொண்டிருக்கிறது
பிரிவின் வேதனை முள்
அவளின் உறக்கத்தினைக் கிழித்துக் கொல்கிறது
ஏதோ ஒரு புள்ளியில் அவளை அறியாமல்
தீண்டுகிறது உறக்கம்
காலை வேளை வந்தும்
தொடர்கிறது அவளுடைய நிரந்தர உறக்கம் .

3

அப்பாவோடு அவன் வயலில் வேலை செய்த
அந்த நாட்களின் வியர்வை
இன்னும் அவன் மனசில் சுரக்கத்தான் செய்தது
அறுவடையின் போது அப்பாவின் மகிழ்ச்சியை நினைக்கின்ற போதும்
அவனுடைய உயிரில் இப்போதும்
அப்பாவின் உழைப்பு வாசம் பரவத்தான் செய்தது
அப்பாவின் காதல் நெற்கதிர்களாய் விளைந்து தொங்கும் போது
ஓர் உழவன் மகன் தான் என்பதில்
ஒரு மன்னனை விட மேலான பெருமை அவனுக்கு .


4. நீயெனும் பலூனும் நானெனும் மூச்சும்


நான்
மேகமாக மிதக்கிறேன்
உன் பார்வை வானத்தில்

ஒரு புல்லாக வளர்ந்து நிற்கிறேன்
உனது பனித்துளிகள்
ஏந்தவேண்டுமென்று

ஓர்
இரவுநேர ஆகாயமாகக் காத்திருக்கிறேன்
உன் முகம் உதிக்கும் என

காதல் தண்டவாளம்
உனது புகையிரதம் வேண்டும்
நான் பயணிக்க

என் இதயவெளியில்
என்னை நீ மேய்கின்ற மந்தைதான்

நான் நூலாக இருக்கிறேன்
உன் உயிர்த் தறியில்
காதலாடையாகுவதற்கு

ஒரு கரை ஆறு நான்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
உனது கரைதேடி

நான் சிற்பியில்லை
என்றாலும்
உன்னைச் செதுக்குவேன்
காதல் பொல்லாத உளியல்லவா

குலுங்குகிறது உன் கொலுசு
என் நரம்பிலிருந்து பரவுகிறது
உனது ஓசை

நீ சுவாசிக்கும் நாள் முதலாய்
என் பிரார்த்தனை
நான் தென்றலாக வேண்டுமென்பதுதான்

காதல் கையில்
நான் புல்லாங் குழல்
உன்னை நினைக்கத் தொடங்கிய புள்ளியில் இருந்து

உன் கண்கள் விரல்கள்
என்னை வீணையாக்கி மீட்டுகிறாய்
தொடாமல்

சகி
என் இருளை ரொம்ப அழகாக்கும் நிலா
நீ மட்டுந்தான்

என் அறைக் கண்ணாடியில்
வசிக்கிறது
உனது பெண்பால்

வெளியே
அறிகுறி அடையாளம் தெரியாத உடைதல்தான்
காதல்

சகி
உன்னைக் காண்கின்ற நேரம்
என்னை பலூனாக ஊதி
காற்றில் மிதக்கவிடுகிறது காதல் .

- ராஜகவி ராகில் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



தமிழினி!

- மட்டுவில் ஞானக்குமாரன் -


கவிதை வாசிப்போம் வாருங்கள்!பட்டதெல்லாம் போதுமினி என்று
போய்விட்டாள் தமிழினி
வரலாற்றை நினைத்தால்
புரியாமலே இருக்கிறது
கொள்ளைக்காரியையே மந்திரியாக்கிய மனிதர்கள்
தீவிர கொள்கைக்காரி உனை
தீராப்பெரும் தொல்லைக்காரியாக
நினைத்திருக்கிறார்கள் என்பதால்

உனக்காக சிலர் எழுதாமல் கிடக்கிறார்
அவை அடக்கமா அல்லது
பயமெனும் புலன் அடக்கமாவெனத்
தெரியாமலிருக்கிறது

சீன வெடி வெடிச்சாலே
சிச்சா அடிப்பவர்கள்
யானை வெடிக்கு மத்தியிலே நின்று
சேவையாற்றிய உனைப்பற்றி அவதூறாய்
எழுதுகிறார்கள்

அவள் செய்த அரசியலென்பது
மேடை போட்டு செய்யும் ஊத்தை
அரசியல் அல்ல
சாக்கடையைக்கூட சந்தனமாய்
மாத்தும் நேர்த்தி அரசியல்

அவள் கை சுத்தமானதென்பதை
கடலை விற்று வாழ்க்கை நடாத்தும்
அவள் தாயின்
வறுமை சொல்லுகிறது

எண்பதுக்கு முன்னரே
நாட்டை விட்டு ஓடிபோனவர்கள்தாம்  
இப்போ வந்து
அவள் கண்களே கழன்று விழுமளவிற்கு
எரிச்சல் விமர்சனத்தை
எழுதி தள்ளுகிறார்கள்

ஏசி அறையிலிருந்து
அவளை தூசிக்கும் பரிமேலழகர்கள்
பூச்செண்டேந்தியவள் கையில்
வெடிகுண்டு வந்ததன் காரணத்தை
ஏனோ மறந்துவிடுகிறார்கள்

எந்த வேர்வைக்கும்
வெற்றிகள் வேர்வைக்குமெனும் நம்பிக்கை
பொய்யாகிப்போக
உண்மையை எழுதியதால்
கண்களில் நீர்வைக்கும் நிலைக்கு
ஆளானது அவள் பெண்மை                 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


கிரிகாசன் கவிதைகள்!


கவிதை வாசிப்போம் வாருங்கள்!1. சிரித்திரு மகளே

நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ

பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ

கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து - எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ

வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ

அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே


2. தாகம்

ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வா  ழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும்
சுற்றி மனங்கொண்ட செந்தீ  எழுந்துயிர்
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப்
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் திவர்போலும் - பல
கற்றிடும் மாணவர் உள்ளம் கண்டதீயும்
காற்றினிலே பெரிதாகும் - தீயைப்
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம்
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக்
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும்
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர்
சந்தண மார்பெடு தீரம்   கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது
புத்தொளி காணுமோர் தாகம்

3. புகழ்போதை

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
அடங்குமென் றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற திரையேறி அவன் நீந்தினான்
அழகென்று அலைகண்டு அதனுற் புகுந்தான்
தலைமூழ்க அலையோங்கி வரும்போதினில்
தனதுயிரின் நிலைகண்டு கரைவேண்டினான்
நிலைகெட்டுத் தடுமாறி அதில்நீந்தவே
நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதெண்ணிக் குறைவாக்குமோ
கொடிதெண்ணித் தடையிட்டு உயிர்நீக்குமோ

கதியும்பிழைத் துயிர்கொள்ளப் புயல்வீசுமோ
கைதந்து உயிர்காத்துக் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
பொழுதென்ப இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா

(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் இடுவாய்

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டெனச்சொல் மதுவார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணொடுமண் ணாகஎனை மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையிவன் உடலீந்து பிச்சையென உயிர்வைத்துப்
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யுனைப்
பாடிவலம் வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?

4. காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!


5. அரசனா? ஆண்டியா?

ஆண்டுபோய் ஆண்டொன்று சேரும் - இந்த
ஆனந்த வான் வண்ணமாகும்
மூண்டு தீ வானிடைஓடும் - அது
மூவர்ணமாய் ஒளிபூக்கும்
ஆண்டவன் ஆளுவன் யாரும் - என்ன
ஆனாலும்ஆணவம் மங்கா
தீண்டும் வாள் தேகங்கள் கேட்கும் - அது
தித்திப்பை இரத்தத்தில் காணும்

ஆண்டிகள் போல்மொழி மேன்மை - இனம்
அங்கென்றும் இங்கொன்றும் ஓடும்
வேண்டிப் பிழைப்பதை நாடும் - ராஜ
வீரம் சலித்த தென்றோடும்
ஆண்ட பரம்பரை மீண்டும் - ஆளும்
ஆசைகுன்றிச் சோம்பல் கொள்ளும்
வேண்டா மென்றெதள்ளி ஓடும் - என்ன
வேதனையில் இன்பங் கொள்ளும்

ஆண்டவன் என்செய்யக் கூடும் - அந்த
ஆறாம் எண்ணம் கெட்டதாகும்
மீண்டுமிவர் சக்தி மேன்மை - பெற
மேதினியில் வாழ்வுமிஞ்சும்
தீண்டாது புத்தியை மூடி - இது
தேவை யில்லை என்றுவீசி
வேண்டா தென்றே கூனிநின்றால் - என்ன
வேதனைதான் மீதியன்றோ

தோண்டப் பொருள்வரு மென்றும் - பொன்
தோட்டதில் காய்கொள்ளும் என்றும்
நோண்டிக் கூரைதனைப் பிய்த்தே - ஒரு
நாளில் கொட்டும்பணம் என்றும்
ஆண்டாண்டு எண்ணிக் களித்து ஆவர்
ஆயுள் முடியும் வரைக்கும்
பூண்டாகிப் புல்லாகி தேய்ந்தும் இவர்
புத்தி கெட்ட வாழ்வே மிஞ்சும்


6. காதல் வெறுப்பு

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
நீந்துகயல் நெளியலையும் உருவாக்கினாள்
பார் செய்து பரந்தவெண் பனிமலைகளும்,
பட்ட கதிரா லுருகி வீழும்நதி
நேர் நிற்க வெயிலோடு நிழல் மரங்களும்
நீள் வானம் நீந்துமெழில் மேகங்களும்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமாந்தரும்
செய்தவரை வாழென்றே சிரித்துநின்றாள்

யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
ஆணாக்கிப் பெண்ணாக்கி அவர்சேரவும
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்
பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வீந்தவள்
குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்

விண்ணாக்கி விண்ணிறைந்த கோள்களாக்கி
விளையாடி அசைக்கின்ற \சக்தி தேவி
ஆண்காணப் பெண்ணழகு, அன்பினோடு
அறிவீந்தும் அதைமீற உணர்வு தந்து
கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
கருவாக்கிப் பொருளாக்கிக் கனவாக்கியும்
மண்ணாகப் போகுமுடல் மதன் வீசிடும்
மலர்க்கணைபட் டுள்ளமும் மயங்கவைத்தாள்

வானாக்கி வெளியாக்கி விண்மீன்களும்
வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில் சுவையாக்கியும்
செய்தபின்னே தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
தனையாக்கி குலமாக்க விதியும் செய்தாள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை யீர்ப்பை
இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ

இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
இளைமைதனும் தாய்மையின் ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதானும் குறைசெய்யுமோ
குற்றமவள் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
நீயென்று தீயள்ளி பொசுக்கிடாதோ

ஆதலினால் காதலினைச் செய்வீரென
அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலென்ப குற்றமெனக் கருதவேண்டாம்
கருணையுடன் நோக்குங்கள் காதலர்களை
பாதகமே யில்லாது பறந்து வானில்
பறவைபோ லிருவரையும் மிதக்கவைத்து
நாதயிசை மாலையணி தோளாராக்கி
நல்லதொரு வாழ்வீந்து மகிழுவீரே!

7. வாழும் வாழ்வு !

நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்

கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே -  இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன  எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு  - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு

அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே

தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு -  இவை
அல்லதென்றாகியும் மற்றவர்  போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு

8. சோர்வு வேண்டாம்
(வேலைதேடிக் களைத்துச் சோர்ந்த மகனுக்கு தந்தை கூறுவதாக...)


காலமோடிச் செல்லும்போது
.....காணும் வாழ்வில் மாற்றமுண்டு
.....கண்ணில்நீரும் கொண்டதேனோ மகனே
நீலவானிற் தேயுஞ் சந்திரன்
.....நேரம்வந்த போதுமீண்டும்
.....நேர்வளர்ந்து வட்டமாகும் முகமே
கோலமுந்தன் சின்ன உள்ளம்
.....கொண்டதென்ன? பூவும்வாடிக்
.....கீழ்விழுந்தபோது காணும்சோர்வும்
நாலும் நன்மை தீமை என்று
.....நாமும் கொண்டவாழ்விலின்று
.....நீயுமெண்ணிக்  கீழ்கிடப்பதேது

காகம் ஓடும் மேகமீதில்
.....காலைவேலை செய்வென்று
.....காததூரம் செல்வதுண்டோ கூறு
தாகமென்று  கீழிறங்கித்
.....தாவென்றெங்கும் காசுகொண்டு
.....தண்ணீர்கேட்டுத் திரிவதுண்டோகூறு
ஆக இந்தமனிதன்வாழ
.....ஆனசட்டம் நீதியேதும்
.....ஆண்டவன் வகுத்தல்லப் பாரு
தேகம்சாக வெட்டிகொல்லும்
.....தீய நெஞ்ச மாந்தர்தானே
.....தேவைஎன்று சட்டம் போட்டதுண்டு

தான்சுழன்றே ஓடும்பூமி
.....தன்னில் வாழ்வு பொய்யின்போர்வை
.....நீயும்கொண்ட துக்கம்விட்டுநில்லு
ஏன் பயந்து கைகள்கட்டி
.....இங்கும் அங்கும் ஓடியாடி
.....இம்சை கொள்ளும் வாழ்வை விட்டுதள்ளு
நான் என்றெண்ணி ஏர்பிடித்து
.....நல்லபூமி நெல்விதைத்து
.....நாட்டில் ஏற்றம் கொள்ளும் வேலைபாரு

9. புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில் வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் கனவுகள் என இவை
இருந்திடும் வாழ்வெனிலும்
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும் உணர்வுகள் பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நிலவெனும் குளிர் சுகமே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறயுத விடுமிதில்
உருகிடும் மனம்பெரிதே
துளையிடு குழலிடை நுழைவளி இசைஇடும்
நிகரென வரும் புகழோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

என்நாடு போல வருமா?

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

10. கவிதைச் சோலை

பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெனப் புனைகவி
மிகுமிட மிதுவெனவோ

கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் விழுதென
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ

மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ

அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



ஸ்ரீரங்கம்

- ஆர்.பாலகிருஷ்ணன் -


கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அனல் தெறிக்கும் வளி ஏகும்
வாகனங்களைத் தேற்றி ஓடி
வரும் பசுந்    திரள்  காவிரி
தலை நிமிர்ந்தால் அரங்கன் அருள் பாலிக்கக் கோபுரம்
வெடித்த நில மீறி  உயர்ந்த பனைகள்
ஒரு நூறேனின் முறிந்த பனைகளில்
முன் நகர்ந்து குழம்பும் அணில்
எட்டா இலக்கு பனையேறும்
எழுதிய பாம்புகள்
உச்சி வெயில் உலோக முருக
ஒளிரும் காவிரிப் பாலம்
வெடித்த இளமாவின்
முதல் நறுமணம் நாசியில் ஏறும்  
நுழை வாயில்
முன் காலெடுத்து பிச்சை கேட்கும் கோயில் யானை
சிர மேல் கரம் தொட்டு வாழ்த்த
உடல் விரைக்க ஒடுங்கும் சிறுவன்
கற்குவியலில் காணும் சிறு பாம்பு
அடித்துக் கொல்லும் இளம் பட்டர்
ஆயிரம் தலை தூக்கிய சேடன்
பரிவினால் அரங்கன் பள்ளி
ஆண்டுகள் சில நகருமுன்
உறவுகள் தழுவி நின்ற காற்று
நுரையீரல்   நனைக்கும்
முறிந்த பனை போலச் சரிந்து விட்ட சொந்தங்கள்
அரங்கா துயில் நீ எனும் பட்டர் இசைக்க
செவி ஏறும் பண்
உயர் சாளரம் வழி விழி காண
நலுங்கும் கோவிலின் பொற்கலசம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R