வெங்கட் சாமிநாதன்இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பித்ததே 1961- ல் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழ் சமூகம் என்றைக்காவது ஒரு கலை உணர்வு கொண்ட சமூகமாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் என்ற எழுதியிருந்ததையும் அந்த மிகக் கசப்பான ஆரூடம் போன்ற தமிழ் சமூகத்தின் குணச்சித்திரம் அன்று என் மனத்தில் பட்டது இன்று வரை மெய்யாகிக் கொண்டிருக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டிச் சொல்லியே ஆரம்பித்தேன். அறுபது வருடங்கள் கடந்து விட்டன. அது பற்றி இன்று மறுபடியும் யோசிக்கும்போதுகூட அந்த ஆரூடம், இனியாவது என்றாவது பொய்த்துப் போகக்கூடும் என்று சொல்லுவதற்கான சூசகங்கள் ஏதும் அடி வானம் பூமியைத் தொடும் எல்லையில் கூட, ஒரு சிறு கரும்புள்ளியாகக் கூடத் தென்படுவாதாயில்லை. 

இக்கட்டுரைத் தொடருக்கு வரும் எதிர்வினைகள் இரு பெரும் வகைகளில் அடங்கும். ஒன்று, நான் நம் தமிழ் சினிமாவைப் பற்றி ஒரு வெறுப்புணர்வுடன், அசிங்கமாக எழுதுவதாக சொல்லும்  தரப்பு. இத்தரப்பு, என் மீது அடங்காத கோபத்தில், நான் சொலவது எதையும் கருத்தில் கொள்ளாமல், தமிழ் சினிமாவின் கனவுலக மயக்கத்தில், நமது ஸ்டார்களின் - (சூப்பர், சுப்ரீம், மெகா என்றெனப்படும், இன்னும் என்னென்ன ரகங்கள் உண்டோ  எல்லா ரகங்களையும் ‘சார்’ வகையறாக்களையும் சேர்த்துத்தான்) - மாயா ஜால பிரகாசத்தில் கண் கூசி நிற்கும் ரகத்தைச் சேர்ந்தது. இரண்டாவது தரப்பு, நான் இதையெல்லாம் ஏதோ இப்போது தான் எழுதத்தொடங்கி யிருப்பதாகவும், இதை முன்னரே சொல்லியிருந்தால் தமிழ் சினிமா இதற்குள் உருப்பட்டிருக்கும் என்ற என்ணத்தில் எழுதுகிறவர்கள். தமிழ் சமூகத்தைப் பற்றிக் கொண்டுள்ள, இதை விட, உண்மைக்கு முற்றிலும் புறம்பான,  கற்பனையான, தமிழ் சமூகத்தை ஒரு நூற்றாண்டுக் காலம் விடாது பீடித்திருக்கும் நோயைப்  பற்றிய தவறான கணிப்பும் சிகித்சையும் வேறு என்ன இருக்கக்கூடும் என்பது எனக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு நான் சொல்வது பிடித்திருக்கிறது, ஆதலால் இந்த அவல நிலை மாற வேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இத்தகைய ஒரு அசாதரண நம்பிக்கை கொள்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன். நூற்றண்டு காலமாக பீடித்திருக்கும் நோய், காலம் செல்லச் செல்ல முற்றிக்கொண்டுதான்  வருகிறது அந்த நோய், அது பற்றி, அது நோய் என்ற உணர்வு கூட இல்லாது, மாறாக அதைக் கண்டு பெருமையும் கர்வமும் கொள்ளும் சமூகம், தாம் ஏதோ உலகத் தரத்துக்கு உயர்ந்து விட்டதாக எண்ணும் பிரமையில் இருக்கும் சமூகம், இப்படி ஒரு சில கட்டுரைகளால், சினிமாக்த் துறைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் வெளிப்படுத்தும் கருத்துக்களால் மாறி விடும் என்று எப்படி கனவு காணமுடிகிறது?

ஏதோ ஒன்று முதலில் நிகழ வேண்டும். “இதென்னய்யா இது? ஒரே பைத்தாரக் கூத்தாட்டம் இருக்கு? நம்மை என்ன மடையன்னு நெனச்சிட்டிருக்காங்களா இவனுக. இவனுங்களுக்குத் தான் மூளெ பெரண்டு கிடக்குன்னா, நம்ம எல்லாருக்குமில்ல ஒட்டு மொத்தமா மூளை பெரண்டு கிடக்குமன்னு நெனச்சிக்கிட்டானுவ, கபோதிப் பயலுவ ” என்று மக்கள். இந்த தமிழ் சினிமா என்னும் விவஸ்தை கெட்ட ஆட்டத்தை அறவே  ஒதுக்கியிருக்க வேண்டும். அது தான் நியாயமாக, மக்களின் பொத்துப்புத்தி செய்திருக்க வேண்டும்.

அல்லது,  இந்த சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருக்கும், (இருக்கும் என்று தான் நினைக்கிறேன். எல்லா ஜீவன்களுக்கும் கடவுள் அருளால் பொதுப்புத்தியும் இருக்கத் தான் செய்கிறது) தம் வீட்டுப் பரணில் தூக்கி எறியப் பட்டிருக்கும் தங்கள் பொதுப்புத்தியைத் திரும்ப எடுத்து வந்து, பின் தான் ஸ்டுடியோக்குள் நுழைய வேண்டும். அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

1960-61 வருடங்களில் எழுதிய “பாலையும் வாழையும்” கட்டுரையிலா, இல்லை பான்ஸாய் மனிதன் கட்டுரையிலா எதில் என்று சரியாக எனக்கு இப்போது நினைவில் இல்லை. திரைப் படம் என்பது முழுக்க முழுக்க இயக்குனரின் படைப்புத் தான். அதில் மற்ற எல்லாமே அவர் விரல்கள் இயக்கும் கயிற்றசைவுக்கு ஏற்ப ஆடும் பாவைகள் தான் என்று எழுதி யிருந்தேன். அந்தக் கருத்து என்னோடு நின்றது. அந்த வருடக் கட்டுரையோடு நின்றது. சரியாகச் சொல்லப் போனால், “அடக்கம் செய்யப்பட்டு விட்டது.. அது என்னைவிட்டு, எழுதப்பட்ட அச்சிடப்பட்ட பக்கத்தைவிட்டு இன்னொருவருக்கு நகர்ந்ததற்கான சுவடு கூட ஏதும் இல்லை. இதை நான் ஏதோ நான் எழுதி விட்டதால் சினிமா உலகம் திருந்தி விடும் என்று சொல்பவர் களுக்குச் சொல்கிறேன்.

\இது சினிமாத் துறையிலிருந்து எழ வேண்டும். பராசக்தி வசனத்தைப் படித்தும், பீம் சிங் கருணாநிதியிடம், ”;இதென்னங்க உங்க கச்சிக் கூட்டத்திலே பேசற மாதிரி இருக்கு. கோர்ட்டிலே எல்லாம் இப்படி பேசமாட்டாங்கன்னு தெரியாதுங்களா உங்களுக்கு?. இதெல்லாம்  பெரியார் திடல்லே கச்சிக்காரங்க கூட்டத்திலேதான்  எடுக்கும். மொதல்லே ஒண்ணு ரெண்டு கோர்ட்டுக்குப் போய் அங்கே என்ன எப்படி நடக்குதுன்னு பாத்துட்டு, இதையெல்லாம் திருத்தி எழுதிட்டு வாங்க. உங்க இஷடத்துக்கு எதையும் எழுதிட்டு வந்தா ஆச்சா,. இது சினிமாங்க, உங்க கச்சி பொதுக்கூட்டம் இல்லே” என்று அடுத்த நிமிடம் திருப்பிக் கொடுத்திருப்பார், அவருடைய பொதுப் புத்தி  யை பயன்படுத்தி இருந்தால். அது நடக்கவில்லை. மாறாக, அது தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை, புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மைல்கல்லாகிவிட்டது. இன்று வரை அது தொடர்கிறது.

அசோக் குமார் என்று ஒரு ஹிந்தி நடிகர். அச்சுத் கன்யா காலத்திலிருந்து அவர் ஒரு ஹீரோ. அதாவது நாற்பது களிலிருந்து. ஐம்பதுகளில், திலீப் குமார், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் ஆகியோரின் சிகரத்தில் இல்லையென்றாலும் அடுத்த படியில் அவரும் ஒருவர். அவரை தமிழ்ப் படம் அழைத்தது. வாசனோ, மெய்யப்ப செட்டியாரோ, யாரென்று நினைவில் இல்லை. முதல் நாளே ஷூட்டிங் போது, அவர் சொன்னாராம். “ பக்கத்திலே தானே இருக்கீங்க பின்னே என்னத்துக்கு இந்தக் கூச்சல் போடறீங்க? ரெண்டு பேரும். மெதுவா எப்போதும் பேசறாப்போல பேசுங்களேன். ஏன் இப்படி உரக்கக் கத்திக் கத்திப் பேசறீங்க?” என்றாராம். பராசக்தி, நடிகர் திலகம் “ஓடினாள், ஓடினாள்… சமாசாரங்க ” எல்லாம் நமக்கு பொரச்சி ஆயிடுச்சே. உணர்ச்சி பொங்க நடிக்கறதுண்ணு அர்த்தமாமே அதுக்கு, நாமும் ஏதாச்சும் ஒரு திலகம் ஆகணுமில்லே, உப்புச்சப்பில்லாமே பேசினா எப்படி? அசோக் குமாருக்கு இருந்தது வெறும் பொதுப் புத்தி. நம்ம சினிமா வரலாறு என்ன, கலாச்சாரம் என்ன, , பண்பாடு என்ன, அது எதினாச்சும் அவருக்கும் தெரியுமா என்ன?  விஷயம் தெரியாம பேசிப்புட்டாரு. எனவே அவர் கேட்டதை  நாம் கண்டுக்கவே இல்லை. பீம் சிங் வாய்மூடி இருந்த அந்த கணம் மு.க.கருணாநிதியின் வசனம் சினிமாவானது. அவரும் கலைஞர் ஆனார். விழுப்புரம் கணேசன் போட்ட கூச்சல் அவரை நடிகர் திலகம் ஆக்கியது..

அதற்கு முன்னால், தியாகராஜ பாகவதர் தான் சினிமாவாக இருந்தார்.. அவர் பாட்டுக்காக அவரையும் பாட்டையும் மையமாகக் கொண்டு சினிமா உருவானது. கேட்க சுகமாக இருக்கலாம் .(அன்று 40-50 களில். ஆனால், இன்று “உயிரணுக்கள் உடம்பில் எத்தனை” என்று கிதாரை வைத்துக்கொண்டு தென் அமெரிக்க பாலைவனத்தில் பாட வேண்டும் “கா. கா. கா…பாட்டு.ஆரம்பித்து வைத்த புரட்சி) அன்று எந்த இயக்குனரும் பாகவதரிடம், “சரிங்க நல்லா பாடறீங்க.அதெல்லாம் சர்த்தான். கேக்க சுகமாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாம் சினிமா இல்லிங்க. இதுக்கு இசை நாடகம்னு சொல்லுவாங்க. பாட்டி லேயே. கதை சொல்ற நாடகம்.” என்று யாரும் நினைக்கவில்லை. சொல்லவில்லை. அப்போது பாட்டாவது கேட்க சுகமாயிருந்தது. போகுது போ,” என்று விடத் தோன்றியது. அது இப்போது, ”நாக்க மூக்க” வில் வந்து நிற்கிறது. ‘பொரச்சி தான். உலகத் தரம் தான்.  இந்த டெக்னிக்கில பாருங்க, நம்ம தமிழ் சினிமா கிட்ட யாரும்  வந்துக்கிட முடியாது பாத்துக்கங்க.” தான்.

இப்படியே யாரும்  ஏதும் கேள்வி கேட்காமலேயே, அழுக்குப் போகக் குளிப்பது போல, பொதுப் புத்திபோக நன்றாகத் தேய்த்து குளித்துவிட்டு தமிழ் சினிமாவில் புரட்சி செய்துகொண்டி ருக்கிறோம். எப்போதும், ஒன்று அது தியாகராஜ பாகவதரோ, இல்லை நடிகர் திலகமோ, இல்லை, மக்கள் திலகமோ, இப்படித்தான்,, வரிசையாக, ஒவ்வொருவரும் தம்மை மையமாக வைத்துக்கொண்டே, தம்மையே சினிமாவாக்கிக்கொண்டு வந்துள்ளனர். இப்போது அது உலக நாயகனையும், சூப்பர் ஸ்டாரையும் சினிமாவாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் ஒரு ஸ்டாரை வைத்து அவருக்கேற்றவாறு கதை எழுதுவது, அந்த ஸ்டார் தன்னையே சினிமா முழுதும் வியாபித்துக்கொள்வது, அதுவும் அவர் விருப்பத்துக்கேற்ப, அல்லது அந்த ஸ்டார், தன் ரசிகர்கள் எப்படித் தன்னைப் பார்க்க விரும்பிறார்கள் என்று நினைக்கிறாரோ அதற்கேற்ப, படம் முழுதும் தன்னை வியாபித்துக் கொள்வார் என்றால், இது கடை வைக்கிற காரியம். வெறும் வெறும் வியாபாரம். அந்த ஸ்டார் நடிகரும் இல்லை. கதை தமிழ் வாழ்க்கையும் இல்லை. அந்த படம், சினிமாவும் இல்லை. வெங்காய வியாபாரம். ஒவ்வொரு ஸ்டாரும் ஒரு ப்ராண்ட்.

இயக்குனர் என்பவர் கடைக்கு வந்து யார் என்ன கேட்கிறார்களோ, புளியோ, பருப்போ, பொட்டலத்தில் மடித்துக் கொடுத்து, கல்லாவில் காசைப் போடுகிறவராயிருக்கிறார் இங்கு. . தயார் செய்தது யாரோ, யார் விருப்பத்திற்கோ. என்று ஒரு இயக்குனர், ‘கமல் சார், ரஜனி சார் என்று ஒரு நடிகனைப் பார்த்துச் சொல்கிறாரோ, அந்த இடத்தில் சினிமா இராது. நடப்பது வெங்காய பஜ்ஜி வியாபாரம். ரஜனிசார் என்றால் வாழைக்காய் பஜ்ஜி, சத்ய ராஜ் என்றால் (பாவம் இவருக்கு ஏன் சார் இல்லை?) கத்தரிக்காய் பஜ்ஜி. கமல் சார் என்றால் வெங்காய பஜ்ஜி. வெங்காயத்தைச் சுற்றி, அதை மையமாகக் கொண்டுதான் மற்றதெல்லாம். ரோல், கதை, துணைநடிகர்கள்,ம் நடிகைகள், ஹீரோயின்கள் பாட்டு, டான்ஸ் இத்யாதி எல்லாம், வெங்காயத்தை மையமாகக் கொண்டு தான், மற்ற, கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் எல்லாம். மற்றதெல்லாம் இல்லாமல் வெங்காயம் மாத்திரம் பஜ்ஜி ஆகாது. அதற்காக, வெங்காய பஜ்ஜி என்ற ப்ராண்ட் மாறாது.

இதில் கூட பஜ்ஜிகள் பெயர் மாறுவது போல, உலக நாயகன் பஜ்ஜி வேறு. சூப்பர் ஸ்டார் பஜ்ஜி வேறு. இரண்டு பேருமே, சந்தைக்கு வரும் சரக்குகள் தாம். இவர்கள் மாத்திரமல்ல, எல்லாருமே, எல்லாமுமே. சுப்ரீம் ஸ்டார் ஆகட்டும்-  (சுப்ரீம் ஸ்டார் என விருது கொடுக்கப்பட்டது நேத்துக்கு முந்தின நாள். இன்று திமுகவை விட்டுப் பிரிந்து வேறு ஒரு முன்னேற்றக் கழகம் தொடங்கிய பின், சுப்ரீம் ஸ்டார் என கலைஞர் அழைப்பாரா என்பது சந்தேகம் தான்) - அது இயக்குனர் சிகரமாகட்டும், இசை ஞானி யாகட்டும், மதராஸ் மொஸார்ட்டே ஆகட்டும், எல்லாம் இந்த பஜ்ஜிகளுக்கு இரண்டாம் பட்ச சாமக்ரியைகள் தான். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசங்கள் உண்டு. இரண்டும் கறிகாய் வகை தான். ஆனாலும், வெங்காயம் வெங்காயம் தான். உருளைக் கிழங்கு உருளைக் கிழங்குதான்.

ரஜனி சார், அதாவது சூப்பர் ஸ்டார் தான் மையம். அவரைச் சுற்றித் தான் மற்ற எல்லாமே..உருவாகியுள்ள தன் இமேஜ், தன் ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை மாத்திரம் இயக்குனர் மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டும். அதற்கேற்ப கதை, அதற்கேற்ப அவருக்கு ரோல், இத்யாதி. இதைத் தவிர இயக்குனரையும் மற்றவர்களையும் அவர் படுத்த மாட்டார். சூப்பா ஸ்டார் என்ற இமேஜைக் கண்டு அவர்கள் தங்களையே படுத்திக் கொண்டால் அது வேறு விஷயம். படுத்திக்கொள்கிறார்கள் தான், பின் அதைப் பற்றிப் பெருமையாக மேடைகளில் பேசிப் புள்காங்கிதமும் அடைவார்கள்.

ஆனால், உலக நாயகன் விஷயமே வேறு. அவர் பெரிய கலைஞர். உலக சினிமால்லாம் பாக்கறவர். ஊர்லே இருக்கற கவிஞர்களுக்கெல்லாம் அவர் தோஸ்த் ஞான குரு. ஜாக்கி சானெல்லாம் அவர் கூப்டா ஓடியாருவாங்க. ஓரோரு படத்திலேயும் அவர் மேக்கப் போடறதே தனி. மேக்கப்பும் போடணும், அது கமல்ஹாஸன் உலக நாயகன்னும் தெரியணும். அதிலே தான் இருக்கு விஷயமே. குள்ளனா வருவாரு. டான்ஸ் ஆடுவாரு. டான்ஸ் ஆடி பெரிய பெரிய பட்டமெல்லாம் வாங்குவாரு. தானே பாடுவாரு. பொம்பிள வேஷம் போடுவாரு. பத்து வேஷம் போட்டு தசாவதாரம் பண்ணுவாரு. சொல்லப்போனா, தன் படத்திலே இருக்கற எல்லா வேஷமும் அவரே போட்டுக்குவாரு. அவர் போடாத வேஷம் ரொம்ப கொஞ்சம் தான்., படத்திலே வர்ற குதிரை நாயி, இந்த வேஷங்க தான் அவர் இன்னும் போடலை. மனோரமா ஆச்சி மாதிரி ஏதாச்சும் இருந்தா, போனாப் போகுது அவங்களே வந்து நடிச்சுக்குடுத்துட்டு போகட்டும், என்று தாராளமாக விட்டுக் கொடுத்து விடுவார். அப்படித்தான் அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி,  சிம்ரன், இப்படி இவங்க வேஷங்களை எல்லாம்  அவர் விட்டுக் கொடுத்துடுவாரு., கவிதை எல்லாம் எழுதுவாரு. தான் நடிக்கிற படத்துக்கு தானே கதையும் வசனமும் எழுதிக்குவாரு. இயக்குனர் வேலை முக்காவாசியையும் அவரே செஞ்சிக்குவாரு. டான்ஸ் ஆடறதுக்கு டோரண்டோ, பிராங்க்ஃபர்ட்ன்னு தான் போவாரு. இங்கே நம்ம ஊரிலே டான்ஸ் பண்றது அவ்வளவா அவருக்கு பிடிக்காது. அவர் ரசிகர்களுக்கும் பிடிக்காது.

இதெல்லாம் ஏன்? அவர் ஏன் பத்து வேஷம் போடணும், ஏன்? ஒவ்வொரு படத்திலேயும் மேக்கப் புதுசு புதுசா போட்டுக்கினே இருக்காருங்கறதுக்கு, அவரது சுய மோகம் தவிர வேறு ஏதாகிலும் கலாரீதியான தேவை, காரணங்கள் இருக்கா என்று யோசித்தால் அவரும் சொல்லவில்லை. நமக்கும் புலப்படவில்லை. சுய மோகம். அத்தோடு தன் புதுப் புது அவதார மகிமைகளுக்கு வேறு யாரும் உதவியதாகக் கூட அவர் மூச்சு விடுவதில்லை. எல்லாச் சிறப்புக்களும் தனக்கே என்று ஆசைப்படுபவர். எல்லாவற்றிலும் இருக்கும் பரம்பொருள் மாதிரி. பாத்த ஆளுங்கள்ளாம் உலக நாயகன் தான். சகலகலா வல்லவன் தெரிமில்லே. அதான். இந்த சுய மோகம் தான் தன் வேஷங்களில் கூட அது கமலஹாஸன் தான், உலக நாயகன் தான் என்று தன்னையே காட்டிக்கொள்வதில் பிரியமுள்ளவர்.  இன்னுமொன்று. நடிப்பிலே மன்னன். அதுக்கு வேண்டிய இடம் படத்தில் தனக்கு வேண்டும் என்பதற்காகவே தான்னையே  படம் முழுதுமாக விஸ்தரித்துக்கொள்வார்.  அந்த வசதிக்குத் தான் கதையை தானே எழுதிக்கறதும். அதுக்கு வசதியாத்தான் இயக்குனரின் பாதி வேலையைத் தானே செய்யறதும். அதிலே அயல் நாட்டு ஷூட்டிங்குக்கும் வழி செய்துக்கணும். தன் இடம் கலை சார்ந்தது. தன் ஒரு காலத்திய சகா ரஜனியோ பாமர ரசனைக்குத் தீனி போடுகிறவர்.

தன்னைப் போல உலகத்துக் கலைப் படங்களையெல்லாம் பார்த்து, அது எல்லாத்தையும் தமிழுக்கு கொணாந்துடனும்னு ஆசப்பட்டுத்தான், (இதை மத்தவங்க காபின்னு சொல்றாங்க) ஒவ்வொரு படமும் விதவிதமா, விதவிதா வேஷம் போட்டு எடுக்கற காரணம். பாரதியாரே சொல்லியிருக்கருல்லே. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரமெல்லாம் தமிழில் மொழி பெயர்த்தல் வேண்டும்”னு. அதைச் சினிமாலே வேறே எப்படி செய்யறதாம். அவர் குரு பாலசந்தரே அதைத் தான் நாளும் செஞ்சிட்டிருந்தார்?


(15) - மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

வெங்கட் சாமிநாதன்தமிழ் சினிமாவில் நான் காணும் பாமரத்தனமும் அருவருக்கத் தக்கதுமான விஷயங்களே தமிழ் சினிமாவின் குணத்தை நிர்ணயிக்கும் அளவு முழுமையாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த பாமரத்தனத்துக்கும் அருவருப்புக்கும் உருவம் தந்து உலவும் சில பெரிய தலைகளைப் பற்றிப் பேசவேண்டும். இப்படிச் சிலரை மாத்திரம் தனித்துச் சொல்லி, அதுவே தமிழ் சினிமா மொத்தத்தையும் சொல்வதாகும் என்று சொல்வது நியாயமற்ற காரியமாகத் தெரியலாம். ஆனால், இந்த பெரிய தலைகள் என்ன செய்கின்றனவோ அதைத்தான் மற்றவர் அனைவரும் தம் இயல்புக்கும், பலத்துக்கும் ஏற்ப செய்துவருகிறார்கள். அவர்களின் ஒட்டு மொத்த செயல்பாடும் ஆளுமையும் தான் தமிழ் சினிமாவின் குணமாகின்றது. ஆனால் இந்த குணத்திற்கு உதாரணமாக அதைப் பெருமளவில் தன்னுள் கொண்டுள்ள அந்த பெரிய தலைகளைப் பற்றித் தான் பேசமுடியும். தமிழ் சினிமாவில் இந்த வகையில் உள்ள ஆயிரக்கணக்கான நடிகர்கள்/நடிகைகளை, இயக்குனர்களை, தொழில் நுட்பம் சார்ந்தவர்களை ஒவ்வொருவராக எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது சாத்தியமல்ல.

முதலில் உலக நாயகன். முதலில் ஒன்றை மறு பேச்சுக்கிடமில்லாமல் ஒப்புக்கொள்ளவேண்டும். இது வரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்த பெரிய பெரிய நக்ஷத்திரங்கள் அனைவரிலும், நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்தவர், அத்திறன் கைவரப் பெற்றவர் கமலஹாஸன் தான். சந்தேகமே இல்லை. இதை நான் அனேக தருணங்களில் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். கவனிக்கவும். தருணங்கள் என்று சொன்னேன். படங்கள் என்று சொல்லவில்லை. அவருக்கு ஈடான மற்றொரு திறனை நான் கண்டதில்லை. இருக்கக் கூடும் தான். ஆனால் அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக, தேவயானி, பாரதி படத்தில் செல்லம்மாளாக நடித்திருந்தது. தன் கனவுக் கன்னி இமேஜை முன்னிருத்தாது, மிக அமைதியாக பயந்து ஒடுங்கும், ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக செல்லம்மாளை நம் முன்னிருத்தியது, நம் சினிமா ஒரு கலைசார்ந்த மரபாக இருந்திருக்குமானால், தேவயானி, பாரதிக்கு முன்னும் பின்னும் டான்ஸ் ஆடி, கவர்ச்சிக்கன்னியாகவே தன் சினிமா வாழ்வை முடித்திருக்க மாட்டார். இது போல் தான் அர்ச்சனாவா, பாலு மகேந்திராவின் வீடு படத்தில் நடித்திருந்தது?

இப்படி தேவயானி, அர்ச்சனா பற்றி ஒரு முழு படத்தையும் அவர்கள் நடித்து உயிர் கொடுத்து உலாவ வைத்த பாத்திரங்கள் பற்றியும் பேசமுடிகிறதே, அப்படி நான் சிறந்த நடிப்புத் திறன் கைவரப் பெற்ற கமலஹாஸனின் ஒரு படத்தைக் கூட, ஒரு பாத்திரத்தைக் கூட என்னால் உதாரணத்துக்குக் கூட முன் வைக்க முடியவில்லை. அனேக படங்களில் அவரை முழுமையாக ஒதுக்கிவிட முடிகிறது. அனேகமாக அவை யெல்லாம் அவர் மற்றவர்களுக்காக நடித்துக் கொடுத்தது அவையெல்லவற்றிலும் அவர் ஒரு சினிமா காதலன். சினிமா காதலன் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்னவெல்லாம் பேசவேண்டும் என்னென்ன ஸ்டைலெல்லாம் காட்டவேண்டுமோ அதெல்லாம் காட்டவேண்டும். இது எல்லா தமிழ் சினிமா நடிகர்களுக்கும் பொருந்தும் சமாசாரம். ஆனால் கமலஹாஸனே தனக்கென தன்னை மையப்படுத்தி உருவாக்கிக் கொள்கிறாரே, தான் உலக நாயகனாக பவனி வருவதற்கு வேண்டிய கதை, கதை சம்பவங்கள், சுற்றித் தன்னை வலம் வர குட்டி தேவதைகளை உபரிகளை எல்லாம் யோசித்து யோசித்து கதையும் வசனமும் உட்கார்ந்து எழுதி தானே உருவாக்கிக் கொள்கிறாரே அம்மாதிரியான படங்களில், சில சம்பவத் துணுக்குகளில் சில சம்பாஷணைகளில், அந்தச் சில நிமிஷங்களில், அவரது நடிப்புத் திறனைக் காணமுடிகிறது. இத்துண்டுக் காட்சிகளோடு நம் பாராட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். முழு படத்தையும் நாம் மறந்துவிடவேண்டும். அவற்றையெல்லாம் நாம் நினைவு படுத்திக் கொண்டால்,  உலக நாயகனாகும் ஆசையில் அந்த மயக்கத்தில் ஒரு மனிதன் என்னென்ன கூத்தாட்டமெல்லாம் ஆடுகிறான், என்ற பரிதாபமும் பித்தலாட்டமும் நிறைந்த ஒரு உலகுக்குத் தள்ளப்பட்டு விடு வோம்.

படம் முழுதும் ஒரு பாத்திரம் வியாபித்திருக்கும் கதைகளும் இருக்கக் கூடும் தான். ஆனால், அந்த மாதிரி பாத்திரங்களில், தானே எங்கும் நிறைந்த நாயகனாக இருக்கும் ஆசை கொண்ட உலக நாயகன் நடிக்க விரும்புவாரா என்பது கேள்வி. மாட்டார். ஏனெனெனில் அந்த பாத்திரமாகும் விருப்பத்தை உடையவரல்ல நமது கமலஹாஸன். அவரை மாத்திரம் குறை கூறிப் பயனில்லை. தமிழ் சினிமாவின் எந்த ஹீரோவும் ஒரு பாத்திரத்தில் தன்னை அழித்துக்கொள்வது என்பது நினைத்தும் பார்க்க இயலாத ஒன்று. எல்லாவற்றிலும் தன் ரசிகர்கள் தன்னைக் காணவேண்டும், தானே உலக அழகனாக, உலக சாகஸ்வீரனாக, அதே சமயம் தானுமாக (அதாவது சிம்புவாக, சரத்குமாராக, சூர்யாவாக) ரசிகர்கள் அடையாளம் காண வேண்டும். அந்த இமேஜை, எல்லாக் கதைகளிலும் எல்லா சம்பவங்களிலும், எல்லா பாத்திரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும். என்பது தமிழ் சினிமாவின் கல்லில் பொறிக்கப் பட்ட விதி. அதை யாரும் மீறுவது கிடையாது. அப்படியிருக்க, ஒரு சிம்பு அப்படி நினைக்கும்போது உலக நாயகன் கமலஹாஸன் ஏன் நினைக்க மாட்டார். உண்மையில் இன்று வந்த சிம்புக்க்ள் இந்த விதியைக் கற்றுக்கொண்டது, உலக நாயகனிடமிருந்தும் சூப்பர் ஸ்டாரிடமிருந்தும் அதற்கு முன்னால் மக்கள் திலகம் சிவாஜியிடமிருந்தும் தானே. இந்த விதி வழி வழியாக, பரம்பரை பரம்பரையாக பேணப்படும் விதி. ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதில் கமல் ஸாரின் தனித்துவம் அவர் புரட்சி செய்த காரியம் பத்து வேடங்களைச் சுமப்பது. தானே எல்லாவற்றிலும் வியாபித்திருக்க வேண்டும் என்ற ஆசை. இது கலை சார்ந்த சிந்தனை அல்ல. ஒரு திறனும் ( CRAFT வெற்று CRAFT  } வியாபாரமும், சுயமோகமும் எல்லாம் சேர்ந்த கலவை

இதற்கு ஹிந்தி சினிமாவிலிருந்து ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஒரு படத்தில் திலீப் குமாரும் நாஸருதீன் ஷாவும் சேர்ந்து நடிக்கிறார்கள். அதில் இடத்தில் இருவரும் வாக்கு வாதத்தில் மோதிக்கொள்ளும் காட்சி ஒன்று. திலீப் குமார் இயக்குனரிடம் சொன்னாராம். முதலில் நாஸருதீன் ஷாவை வைத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமெடுத்து வாருங்கள். அதைப் பார்த்து நான் சம்பந்தப் பட்ட பகுதியை நடிக்கிறேன். நீங்கள் படமெடுத்துக்கொள்ளலாம். முதலில் நாஸருதீன் ஷாவிடம் போங்கள் “ என்றாராம். இதில் விளையாடியிருப்பது திலீப் குமாரின் (Ego) இந்தக் காட்சியில் நாஸருதீன் ஷா தன்னை மீறி நடித்துவிடக்கூடாது என்ற எண்ணம் தான் செயல் பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அவசியமே இல்லை. நாஸருதீன் ஷா திலீப் குமாரை தன் முந்திய தலைமுறையின் மிகச் சிறந்த நடிகர் என்று எப்பவும் ஒப்புக்கொள்வார். தன் ஓய்ந்த காலத்தில் இந்தக் கவலைகள் அவருக்கு அவசியமில்லை.

வேடிக்கை என்னவென்றால், உலக நாயகனான கமல் ஸார், திலிப் குமாரை சிறந்த நடிகர் என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். இங்கு தான் சிக்கல்கள் எல்லாம் பிறக்கின்றன. திலீப் குமார் சிறந்த நடிகர் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளும்போது, அது உண்மையானால், அத்தோடு வித்தியாசமான பார்வைகளும், ரசனைகளும், மதிப்பீடுகளும் கொண்ட ஒர் உலகத்தை கேட்பவர் முன் வைத்தாய் விட்டது. அந்த உலகத்துக்கும், கலைஞரின் முன்னோக்கிய சினிமா கலைத்துவம் பராசக்தி வசனத்தில் தான் பார்த்து இப்போதும் வியப்பதாகச் சொல்வதும், இயக்குனர் சிகரத்தைப் போற்றுவதும், ரஜனி சார் சினிமாவில் இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்வதும், தான் நடிக்க பத்து வேடங்களை வலிய உருவாக்கிக் கதை எழுதிப் பெருமைப்படுவதும், மொத்தத்தில் தான் உலக நாயகனான தமிழ் சினிமாவுமே முற்றிலும் வேறு உலகத்தைச் சேர்ந்தது தான். இரண்டையும் ஒரு மனிதனின் சிந்தனையில் இருக்க முடியாது. சேமியாவைத் தரம் பார்த்து வாங்குகிறவன், வைக்கோல் போரை மாங்கு மாங்கு என்று தின்றுகொண்டிருக்க முடியாது இல்லையா? இரண்டையும் ஒரே இடத்தில் ரசனையில் பார்க்க முடியுமோ?.

உலகத்தின் சிறந்த கலைப் படங்களையெல்லாம் பார்க்கும் ஆசை கொண்ட ஒரு சினிமா நடிகன் இருப்பது சந்தோஷமான விஷயம். அது கலைப் பசியின் காரணமா இல்லை, எதைக் காபி அடித்து இங்கு தன் மூக்கை ஆகாயத்துக்கு உயர்த்திக்காட்டவா என்பதைப் பிறகு ஆராயலாம். இப்போதைக்கு அது கலைப் பசி என்றே கொள்வோம். அந்தக் கலைப் பசி கொண்டவன் திலீப் குமாரை சிறந்த நடிகனாகக் கண்டால் அது புரிகிறது.  ஆனால் அந்த மனிதனுக்கு சுயமோகம் உலக நாயகனிடம் காண்பது போல் இருக்குமோ?. என்றாவது இந்த சீரழிந்த தமிழ் சினிமாவிலாவது, ஒரு நல்ல படத்தை தமிழ் வாழ்க்கையை அதன் வாழும் வண்ணத்தில் காட்டும் படத்தில், அதில் தன்னை ஒரு நம்பத்தகுந்த வாழும் பாத்திரத்தில் தன்னை அழித்துக்கொண்டு உருவாக்கிக் காட்டவேண்டும் என்ற ஆசை எழாதா, அவ்வளவு உலகத்தின் சிறந்த படங்களையும் பார்க்கும் ஒரு தமிழ் சினிமா நடிகனுக்கு.? நடிப்பு என்ற தொழில் திறனை தன் சிந்தனையில் தன் நீண்ட கால பயிற்சியில் வளர்த்துக்கொண்ட நடிகனுக்கு அந்த ஆசை எழாதா என்ன? அப்போது தானே நடிப்பு என்னும் தொழில் திறனைக் கொண்டவன் ஒரு கலைஞனும் ஆவான். தனக்கென ஒரு பார்வை, ஒரு தவம், ஒரு அர்ப்பணிப்பு இல்லாத வெற்றுத் திறன் மாத்திரம் ஒரு கலைஞனை உருவாக்காது.

அந்தக் கலைஞன் தன் கலையில், மக்கள் வாழ்க்கையில், சுற்றியுள்ள உலகில் ஆழ்ந்திருப்பான். அவன் தான் சுற்றியுள்ள சூழலைப்பாதிப்பான். அதைத் தான் ஷாப்னா அஸ்மியிடம், நாசருதீன் ஷாவிடம், அக்கால கே.பி.சுந்தராம்பாளிடம், என்.எஸ் கிருஷ்ணனிடம் வெள்ளை ஆட்சியை எதிர்த்து நாடகம் போடு சிறை சென்ற நாடக மேடையிலேயே உயிரை விட்ட அக்கால நாடக நடிகர்களிடம் காண்கிறோம். அதிகார நாற்காலி கண்டவிடமெல்லாம் காலில் விழுபவனிடம் அதைக் காணமுடியாது. அவன் வெறும் கூத்தாடி. சுய மோகம் எவ்வளவு இருந்தாலும் அது அதிகாரத்தைக் கண்டதும் காலில் விழத் தயாராகிறது. தன் பலத்தை அறிந்தவனின் தலை நிமிர்வு அல்ல அது.

உலக நாயகன் என்று தன்னைக் கண்ணாடியில் பார்த்து மகிழும் மனம் தான் இயக்குனர் சிகரம் மக்கள் திலகம் நாமம் கேட்கும் போதெல்லாம் பொது மேடைகளில் லக்ஷார்ச்சனை செய்யத் நிர்பந்திக்கிறது. அது தான் மனதார நம்பும் உண்மை அல்ல என்பது தெரியும்,. நான் முன்னர் சொன்ன சிறந்த நடிப்புத் திறன் வெளிப்படும் தருணங்கள் என்று முன்னே சொன்னேனே, அந்தத் திறன் கொண்ட நடிகன், உலகில் சிறந்த திரைப்படங்களை யெல்லாம் பார்த்து மகிழும் ஒரு நடிகன், திலீப் குமாரை சிறந்த நடிகனாகக் காண்பவன், கலைஞரிடம் தான் தான் தமிழ் கற்றதாகச் சொல்ல மாட்டான். பராசக்தியில் காலத்தை முந்திய சினிமா கலை நுட்பங்களைக் கண்டு வியப்பதாகச் சொல்ல மாட்டான். 


 (16) -  மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

வெங்கட் சாமிநாதன்இப்படியே நான் தமிழ் சினிமாவில் கமல் சாரின் பாத்திரத்தை, அவர் விரும்பி முயன்று விடாது வெளிக்காட்டிக்கொள்ளும் பாத்திரத்தின் குண விசேஷங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே போனால், எனக்குத் தான் ஏதோ அவர் மீது தனிப்பட்ட வன்மம் இருப்பதால், அவரை இப்படி விமர்சித்துக் கொண்டு போவதாகத் தோன்றும். அது அவருக்கு தனி மனிதராக பெருத்த அநியாயம் செய்வதாகவும் தோன்றக்கூடும். கமல் சாரின் ரசிகர்களுக்கு எல்லாம் அப்படித்தான் மிக எளிதாக என் மீது குற்றம் சாட்டத் தோன்றும். அது தான் அவர்களது சிந்தனையும் சுய உணர்வுமற்ற பரிதாபத்திலிருந்து கமல் சாரையும் அவர்களையும் காப்பாற்றிக் கொள்ளும் வழியுமாகும். திடீரென்று அவருடைய 87-ம் வயதில் கருணாநிதியை, “இவ்வளவெல்லாம் ஏன் கஷ்டபட்றீங்க, பேசாம சாமி கும்பிட்டிட்டு வந்துடுங்களேன். நிம்மதியா இருக்கும்” என்று சொன்னால் அவரால் ஒப்புக்கொள்ள முடியுமா? இவ்வளவு நீண்ட காலம் பாதுகாத்த இமேஜை மிஞ்சி இருக்கிற காலத்துக்காவது  காப்பாத்த வேண்டாமா? மேலும் அது பெரும் மன உளைச்சலில் வேறு ஆழ்த்திவிடும். ஆக, அவர்களுக்கு வேறு ஒரு ”சாரோ” “நாயகனோ” கிடைக்கும் வரை இந்த அவஸ்தை தொடரத்தான் செய்யும். போகட்டும்.

எனக்கு கமல் சார் ஒரு சௌகரியமான பெயர் தான். அது தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ள பல போக்குகளில் ஒரு போக்கை உருவகப் படுத்தக் கிடைத்த அந்த போக்கின் வெற்றிகரமான உதாரணமே. உண்மையில் எல்லாமே கொள்ளை கொள்ளையாக காசு எப்படி சம்பாரிக்கிறதுங்கற சமாசாரம் தான். ஆனால் கலைக்காகத் தவம் கிடப்பதான, தான் ஈடுபட்டிருப்பது ஒரு கலை என்று சொல்லிக்கொள்ள அப்படி தமிழ் ரசிகர் உலகை நம்ப வைக்க, ஒரு தனி பாதை. ஒரு காலத்தில் இந்தத் துறையில் இருப்போர் அத்தனை பேரும் கூத்தாடிகள் என்று தான் பேசப்பட்டார்கள். அறியப்பட்டார்கள். அவர்கள் தொழில், நடிப்பு, வாழ்க்கை எல்லாம் என்னவாக இருந்தாலும், அக் கூத்தாடிகளில் சிலர் கலையைப் பேணியவர்கள். சிறந்த சங்கீத கலைஞர்கள் இருந்தாலும் அவர்கள் உலகம் கூத்தாடிகள் உலகமாகத் தான் இழிந்து பேசப்பட்டது. அவர்களில் சம்பாத்தியம் எப்படி இருந்தாலும் சமூகப் பொறுப்பு என்ற பிரக்ஞையோடு செயல் பட்டவர்கள். தம் வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள். தம்மை இழந்தவர்கள். அது ஒரு கால கட்டம். அக்கால கட்ட பொது தர்மம். “அது சரிய்யா, பணம் வருதுங்கறதுக்காக என்ன வேணாலும் செய்யறதா?” என்று படிப்பறிவற்ற ஏழை கூட சொல்லக்கூடிய ஒரு பொது தர்மம் பரவலாக இருந்த காலம். .

ஆனால் கூத்தாடிகள் கலைஞராகிவிட்ட இந்த காலத்தில் தான் சினிமா உலகம் அதன் ஆத்மார்த்தத்தில் கூத்தாடிகள் உலகமாகியிருக்கிறது. கலைஞர்கள் கூத்தாடிகளாக இழிந்து பேசப்பட்ட காலம் போய் கூத்தாடிகள் கலைஞர்களாக கோஷிக்கப் படும் காலம் இது. இவர்கள் தம் வளத்துக்காக எதையும் பணயம் வைப்பார்கள். தம் சுய கௌரவத்தையும் இழக்கத் தயாராவர்கள். குத்தாட்டம் ஆடுபவரகளும் ஆட்டுவிக்கிறவர்களும், அதற்கு இசை அமைப்பவர்களும், பாடுபவர்களும் கலைஞர்கள் தாம் அவரகள் அரசியல் அதிகார மேடைகளில் கௌரவிக்கப் படுவார்கள்.  இவர்களில் பெரும்பாலோர் ஆட்டுவிக்கப்படும் பாவைகள் என்பதுதான் உண்மை. அரசியல் அதிகாரம் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போது பாவைகள் அங்கும் வீற்றிருப்பதை நாம் குறை சொல்ல முடியாது.

இரண்டு பெரும் பிரிவுகளை இங்கு நாம் காணலாம். உத்தேசமான இரு பெரும் பிரிவுகள். ஒரு சில குணங்கள் இரண்டிலும் காணப்படலாம். சில குணங்கள் மங்கலாக மாறி மாறிக் காணலாம். முற்றிலும் ஒன்றை ஒன்று மாறிக் காணும் ஒன்றுக்கொன்று எதிரான பிரிவகள் அல்ல. எல்லாமே வியாபாரம் தான். பணம் சம்பாதிக்கத் தான். புகழ் விரும்பித்தான். இதில் எதைக் குறை கூற முடியும்? ஆனால், புகழோ, பணமோ, விளம்பரமோ, இவை எதற்கும் எவ்வளவு தூரம் ஒரு மனிதன் செல்லத் தயாராக இருக்கிறான், எதையெல்லாம் விலையாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறான், எதையெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதில் தான் நாம் ஒருவனை கலைஞன் என்றும் மற்றவன் பணத்துக்காக எதையும் செய்பவன் என்றும் பிரித்துக் காண்கிறோம். இன்னொன்று, ஒரு தனி மனிதனின் ஆளுமை. எந்த செயலிலும் அவன் தன் ஆளுமையை எடுத்துச் செல்பவன். தன் செயல்களில், சிந்தனையில், தன் ஆளுமையை பிரதிபலிக்கச் செய்பவன்.

அப்போது தான் தனக்கு இருக்கும் நடிப்புத் திறனை, கமல ஹாஸன் ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் சேஷ்டை களுக்குத்தான் செலவிடுகிறாரே தவிர ஒரு கலைஞ்னின் மனமோ பார்வையோ இருப்பதாகத் தெரியவில்லை. இது காறும் அவரிடமிருந்து அப்படி ஏதும் வந்துவிடவில்லை. அவருடைய ஆளுமை அப்படிப்பட்டது. உலகத்தின் சிறந்த படங்களை யெல்லாம் அவர் பார்த்துத் தெரிந்து கொள்வது தன் கலை உணர்வுகளை விசாலப் படுத்திக்கொள்வதற்கோ தன் புரிதலை ஆழப்படுத்திக்கொள்வதற்கோ இல்லை. எதை எதையெல்லாம் எங்கேயிருந்து எடுத்தாண்டு தான் வித்தியாசமாகச் சிந்திப்பவன் என்ற செயற்கையான இமேஜை பெரிதாக்கிக்கொள்ளத் தான் என்பது வாதம் புரிந்து நிலை நிறுத்த வேண்டிய விஷயம் இல்லை. .    . 
 
இன்றைய தமிழ் சினிமாவில் எல்லோரும் பணம் சம்பாதித்து தம் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். யாரும் பணத்தைக் கொட்டி இழக்க வரவில்லை. அவரவர்க்குத் தெரிந்த தொழிலைச் செய்து பணம் சம்பாதிப்பதிலோ, பிராபல்யம் அடைவதிலோ, யாருக்கும் ஆக்ஷேபணை இருக்க முடியாது. அத்தோடு  பிராபல்யம் எங்கு புகழாக பரிமளிக்கிறதோ, தொழில் எங்கு  கலையாகப் பரிணாமம் பெறுகிறதோ அதையும் உணரும் திறனும்,  புரிந்து கொள்ளும் பிரக்ஞையும் நமக்கு இருந்தால் நல்லது. இருக்க வேண்டும். பால் முனி வாங் லங்காக நடித்த காலத்தில் உலகத் திரைப்படக் கலை என்ற சமாசாரம் எல்லாம் ஏதும் கிடையாது. Good Earth–ம் ஒரு கமர்ஸியல் படமாகத் தான் பணம் போட்டு பணம் சம்பாதிக்கத் தான் எடுக்கப்பட்டது. பணம் சம்பாதிப்பது என்பது அபத்த்மான அசிங்கமான அதர்மமான எல்லை வரைக்கும் அர்த்தப்படுத்தப்பட்டு வாழும் தர்மமாகி விடாத காலம்.

ஆனால் பணம் பண்றது என்பது ஒரு மாதிரியாக அர்த்தப் படுத்தப்பட்டு, அதுவே சினிமாவாகி வளர்ந்து விட்ட இன்றைய கால கட்டத்தில், அந்த சினிமா தர்மத்தை, வியாபாரம் பண்ணும் உத்திகளை ஒன்று விடாமல் கடைப்பிடித்துக்கொண்டே தான் ஒரு பெரிய கலைஞனாக்கும் என்ற தானே வருவித்துக்கொள்ளும் மயக்கத்தில், மிதப்பில் ஒருவன் ஆழ்ந்து விடும் போது தான் சிக்கல்கள் எழுகின்றன.
இன்னொரு முனையைப் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார், ரஜனி சார் இருக்காரே, இருபத்தைந்து கோடி ஒரு படத்துக்குப் பெறுவதாகச் சொல்கிறார்கள். அது இன்றைய ரேட். முதலில் நடிக்க வந்த போது கொஞ்சமாகத் தான் ரொம்பவும் கொஞ்சமாகத் தான் இருந்திருக்கும். தமிழ் சினிமாவை விட பலமடங்கு அதிக சந்தையுள்ள ஹிந்தி சூப்பர் ஸ்டார்களே அவ்வளவு பணம் பெறுகிறார்களா என்பது சந்தேகம். அவர்களில் எவரையும் வைத்து 150 கோடி ரூபாய் ஒரு பத்துக்கு செலவழிப்பார்களா என்பதும் சந்தேகம் தான். வயது அறுபதாகப்போகிறதா? ஏதோ அப்படித்தான் கிட்டத் தட்ட. அதை மறைப்பதும் இல்லை. ஒரு சூப்பர் ஸ்டாரின் முகமோ, அழகோ, பந்தாவோ எதுவும் இல்லை. சந்தைக்குப் போகும் இமேஜ் அவ்வளவும், நிஜ வாழ்க்கையில் பார்க்கும் இமேஜுக்கு முற்றிலும் வேறான அந்த இமேஜ் சினிமாவில் தோன்ற ரசிகர்கள் எதிர்பார்க்கும் சந்தோஷத்து க்காகத் தயாரிக்கப் படுகிறது. அது தான் அல்ல. ஸ்ரீரங்கம் சன்னதித் தெருக்களில் கோஷா விற்கமுடியாது. ஜெட்டாவில் காஞ்சீபுரம் பட்டுப் புடவை கடை வைக்க முடியாது. தவறிப் போய், சந்தையில் ஆகிவந்த ஃபார்முலாக்களோடு தன் ஆசையையும் கொஞ்சம் கலந்து தயாரித்த பாபா படம் “தலீவா, ஏமாத்திப் புட்டியே தலீவா” என்ற ரசிகர்களின் புலம்பலைக் கேட்ட பிறகு அந்த சிந்தனையையே சினிமாவிலிருந்து ஒதுக்கியாயிற்று.

தனக்குப் பிடித்த தான்  நடித்த படங்களைச் சொல்லக் கேட்ட குரு பாலசந்தரிடம் ரஜனி (அங்கு குருவின் முன்னால் ரஜனியாகத் தான் அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்திருந்தார்) சொன்னது. ராகவேந்திரா, படையப்பா. தன் இயக்கத்தில் நடித்த படம் எதையும் சொல்லலையே நீ” என்று குரு கேட்க, அவர் குருவைச் சந்தோஷப்படுத்த பொய்யாக எதுவும் சொல்லவில்லை. சிரித்து மௌனமானதைத் தான் நான் பார்த்தேன். குரு தான் இயக்குனர் சிகரமாயிற்றே. உலகத் தரம், என்று ஏதோ குரு கேட்க, ரஜனி, “மிகவும் வெளிப்படையாக, பந்தா ஏதும் இன்றி, தன் உலகம் கமர்ஸியல் உலகம் தான் என்றும் தன்க்கு கலை, அது இது என்று எல்லாம் ஏதும் தனக்கு தெரியாது என்றோ என்னவோ சொல்லி குருவுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு, “அப்பா, இந்த வேஷங்கள் போடும் உலகில் ஒரு நேர்மையான மனிதனைச் சந்தித்தோம் என்ற சந்தோஷம் ஏற்பட்டது.

உலக நாயகன், கமல் ஸார் தான் இருப்பது கமர்ஸியல் உலகம் என்று தன் குருவுக்கு உலகம் முழுதும் பார்க்கும் ஒரு சன் தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருக்க மாட்டார் என்று தான் நினைக்கிறேன், அவரை நான் சரியாக புரிந்து கொண்டி ருக்கிறேன் என்றால்; அவர் தான் 1952 பராசக்தியிலேயே எதிர் காலத்தில் வரவிருக்கும் சினிமா கலை நுணுக்கங்களை யெல்லாம் ”கலைஞர்” வசனத்திலேயே கண்டு மகிழ்ந்தவர் ஆயிற்றே. கலைஞர் சினிமா வசனங்கள் தான் அவருக்கு தமிழே கற்றுக்கொடுத்ததாமே. ஆனால் அந்த ஆரம்ப காலங்களில் குமுதத்தில் இயக்குனர் சிகரத்தைப் பற்றி ஏதோ எழுதப் போக, குருவுக்கு கோபம் வர, தகராறு முற்றி, அந்தத் தொடரையே குமுதம் நிறுத்தியது. கமல்ஸாரும் வருத்தம் தெரிவித்து அதற்குப் பிறகு அம்மாதிரி தவறுகளேதும் நேராத வாறு ஜாக்கிரதையாகவே இருப்பது மட்டுமல்லாமல், தன் குருவின் பாதையிலேயே யாரும் தன்னைப் பற்றியும் புகழுரைகள் தவிர வேறு ஏதும் மூச்சுக் கூட விடாதவாறு பார்த்துக்கொள்கிறார் என்று தோன்றுகிறது. சமீபத்தில்கூட ஜெயா தொலைக் காட்சியில் யாரோ அவரைப் ப்ற்றி ஏதோ சொல்லப் போக, அது உலக நாயகனுக்குத் தெரிய வர, அவர் உடனே தானே ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் சென்று அந்த ஆக்ஷேபகரமான கருத்துக்கள் வெளிவராதவாறு தணிக்கை செய்துவிட்டுத் தான் திரும்பினார் என்று தினகரன் இணைப்பு ஒன்றில் படித்தேன் தன் கருத்துக்களைச் சொல்லவே கூட பயப்பட வேண்டிய நிலை. தன் குருவை மீறி தன் வழிச் சென்ற ராமானுஜர் பற்றி நாம் படித்திருக்கிறோம். மகாத்மாவையே எதிர்த்து நின்று காங்கிரஸின் தலைமையை திரிபுரா காங்கிரஸில் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் மூத்த தலைமுறையினருக்குத் தெரியும். இத்தலைமுறை சரித்திரத்தில் படித்திருப்பார்கள். சென்ற தலைமுறையினருக்குத் தெரியும் அண்ணாதுரை தன் குருவைத் தொடர்ந்து இனி செல்ல இயலாது என தனிக்கட்சி தொடங்கி குருவின் சாபங்களை தான் முதன் மந்திரியாகும் வரை கேட்கும் நிலை வந்தது. கணக்குக் காட்டு என்று திமுக தலைவரைக் கேட்டு அவரது பகைமையைச் சம்பாதித்துக்கொண்ட எம்ஜிஆர் பற்றி தெரியாத தமிழன் இருக்க முடியாது. எதிர்த்துத் தன் வழிச்சென்ற யாரும் அதற்காகச் சிறுமைப் பட்டதில்லை. ஒரு கட்டத்தில் தன் கருத்தை வெளியிட்டுத் தம் தனித்துவத்தை ஸ்தாபித்துக்கொண்டவர்கள் இவர்கள். அத்தகைய கட்டம் யாருக்கும் வரும். தனித்துவமும் சுயமான ஆளுமையும் வாய்க்கப்பட்டவர்கள் தலைமையே கதி என்றிருப்பது கடினமான காரியம். அது வாய்க்கப் பெறாதவர்கள் பற்றிப் பேச்சில்லை..

இன்றைய தமிழ் நாட்டில் தனக்கு தெய்வ பக்தி உண்டு, தான் நாஸ்திகன் இல்லை என்று பொது மேடையில் சொல்லி அதைச் செயலில் காட்டித் தன் வழி செல்லக் கூட ஒரு தைரியம் வேண்டும். இதில் ஏதும் வீரம் வேண்டும் விஷயம் இல்லை. ஆனால் அரசியல் சமூகச் சூழல், அவனை மூடன் என்றும், பகுத்தறிவு அற்றவன் என்றும் சொல்லுமோ என்ற பயம் சமூகத்தில் பிரபலங்களாகி விட்டவர்களை யெல்லாம் வாட்டி வதைக்கிறது. வேடிக்கை என்னவென்றால் தான் நாஸ்திகன் என்று சொல்வதில் ஒரு போலிப் பெருமை இருப்பதாக, தான் மிக அறிவாளி போலவும் பந்தா செய்துகொள்ள நாஸ்திகன் என்ற பிரகடனம் தேவை என்று அப்பிரபலங்களுக்கு என்ணம்
இர்ண்டிலுமே போலித்தனங்கள் பரவலாகக் காண்கிறது என்றாலும் நாஸ்திகத்தில் அறிவாளி பந்தா சேர்ந்துகொள்கிறது இந்த பந்தா உலக நாயகனிடம் இருப்பது பட்டவர்த்தனம். அதோடு கலைஞராக அறியப்படும் திமுக தலைவரிடம் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களை இழிவாகப் பேசுவது ஒரு பழக்கமாகக் காண்பது போல, அவரைத் திருப்திப் படுத்தும் சிந்தனையிலேயே இருக்கும் உலக நாயகன் தன் நாஸ்திகத்தைப் கர்வத்தோடு பிரகடனம் செய்து கொள்வதோடு ஆஸ்திக நம்பிக்கைகளை ஆபாசப் படுத்துவதும் அவருக்கு விருப்பமான விளையாட்டு. . மன்மதன் அம்புக்காக அவர் கவிதை என்று சொல்லி படிக்கப் போக, அதன் புண்படுத்தும் எண்ணம் பலத்த எதிர்ப்பை விளைவிக்க பின் அந்த கவிதை எனப்பட்டது நீக்கப் பட்டது.

நான் ஒருவரது தெய்வ நம்பிக்கை பற்ற்யோ அது இன்மையைப் பற்றியோ எதுவும் சொல்வதற்கில்லை. அது அவரவரது சிந்தனையைச் சார்ந்த சுதந்திரம். தெய்வ நம்பிக்கை தனி மனித சிந்தனைச் சுதந்திரம் போல. அது மரியாதைக்குரியது. மதிக்க வேண்டுவது. அது பற்றிப் பேசலாம். கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளலாம்.  ஆனால் மற்றவர் சிந்தனையைக் கேவலப் படுத்தக் கூடாது. மனம் புண்படுத்தக் கூடாது. அதற்கு எந்த உரிமையும் மற்றவர்க்கு இல்லை. வேத காலத்திலிருந்து நாஸ்திக சிந்தனைகள் இருந்துள்ளன. அவர்கள் தத்துவ தரிசிகளாக, கலைஞர்களாக இருந்துள்ளனர். அவர்கள் மனித சிந்தனைக்கும் வாழ்வுக்கும் வளம் சேர்த்தவர்கள். ஆனால் தமிழ் நாட்டில் காணப்படுவது போல, அது ஒரு தரப்பினரிடம் கொண்ட பகைமையால அவர்களை இழிவு படுத்த மேற்கொண்ட அரசியல் கொள்கையானால் அது ஒரு இழிந்த மனதையே வெளிக்காட்டும். அப்படி இழிந்து பேசுகிறவன் கலைஞனாக மாட்டான். அவன் மரியாதைக்குரிய மனிதன் கூட இல்லை.  அவன் ஒரு கடைத்தர மனிதன். அரசியல்வாதி.

தன் தெய்வ நம்பிக்கையை, தான் நம்பும் ஆசாரங்களை ரஜனி காந்த் பிரசாரப் படுத்துவதுமில்லை. அது தனக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாகவும் பிரகடனப் படுத்துவதில்லை. அந்த நம்பிக்கை அற்றவரை இழிவு படுத்துவதுமில்லை. தன்னளவில் அது தன் நம்பிக்கை சார்ந்தது. தான் வாழும் வழி அது என்பதை அவர் மறைப்பதும் இல்லை. பொதுவில் வைக்கத் தயங்குவதும் இல்லை. தன் மகள் திருமணத்தை அவர் வைதீக சடங்குகளோடு உலகம் பார்க்க நடத்தியது, ’பாபா’வை ரசிக்காத தன் ரசிகர்கள் கூட்டம் என்ன சொல்லுமோ, தன் சினிமா வியாபாரம் இதனால் கெடுமோ என்றும் அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அவர் மனத் திடத்தையும் தன் நம்பிக்கைகளின் பலத்தையும் சொல்லாமல் சொல்லும். ஒரு சினிமா சூப்பர் ஸ்டார், நாஸ்திகத்தைப் பெருமையாகக் கருதும் அரசியல் சூழலில். அத்தகைய அதிகார மையங்களின் நெருக்கத்தில் இருக்கும் ஒருவரின் இத்தகைய செயல் இது என் வழி, இது தான் நான் என்றும், தன் சூப்பர் ஸ்டார் இமேஜ் இமேஜ் தானே ஒழிய அது தான் அல்ல, என்றும் உலகின் முன் வைத்தது, ரஜனி காந்தை மரியாதைக்குரிய மனிதனாக, நாம் மதிக்க வேண்டிய மனிதனாகக் காட்டுகிறது. அவர் சினிமாவில் ஒன்று கூட எனக்குப் பிடித்த தில்லை. அவர் சினிமாவை சினிமாவாக நான் ஏற்பதில்லை. அவர் சினிமாவில் ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு தன் நடிப்புத் திறனைக் காட்டும் வாய்ப்பைத் தராமல் போயிருக்கலாம். இது தமிழ் சினிமாவில் உள்ள எல்லாரையும் சாரும் குற்றச் சாட்டுத் தான். அவர்கள் பாத்திரங்கள், அவர்கள் கதைகள், அவர்கள் பேச்சுக்கள் என் எதுவும் எனக்கு அவற்றை நம்ப்கத் தன்மையைக் கொடுக்காமல் தான் இருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் மிக வெற்றிகர்கமாக ஒரு சந்தையை உருவாக்கிக் கொண்டுள்ளவர் ரஜனி காந்த். ஒரு சூப்பர் ஸ்டாராகவும் ஆக்கியுள்ளது அந்த வெற்றி. ஆனால் அவர் என்னளவில் ஒரு தனி மனிதராக மரியாதைக்குரியவர்.    ..  .   
    . 
Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R