அ.ந.கந்தசாமியின் 'தாஜ் மகால்'[ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆய்வு, விமரிசனம் , சிறுவர் இலக்கியமென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் கைவண்ணைத்தினைக் காட்டியவர். இவரது 'மதமாற்றம்' நாடகம் வெளிவந்த காலத்தில் பலதடவைகள் மேடையேறி பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அ.ந.க.வின் குறு நாடகங்களிலொன்று 'கடைசி ஆசை'. இது தாஜ்மகால் உதயம் பற்றியதொரு கற்பனை. ஏற்கனவே பதிவுகள் இதழில் வெளியான நாடகம்; ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகிறது.]

காட்சி 1

இடம்: மும்தாஜ் பீகத்தின் அரண்மனை.
காலம்: கி.பி.1629ம் ஆண்டில் ஒரு நாள்.

மும்தாஜ் பீகம்: (இருமிக் கொண்டு) சுபைதா குழந்தை தூங்கி விட்டதா என்று பார்.

சுபைதா: ஆம் பீகம்! இளவரசியார் இப்பொழுது தான் சிறிது கண்ணயர்ந்து தூங்குகிறார்கள்.

(சேமக்கல் நாதம் ஆறுமுறை ஒலிக்கிறது.)

பீகம்! அதற்குள் மணி ஆறாகிவிட்டது. நீங்கள் மருந்து குடிக்க வேண்டுமல்லவா? இதோ கிண்ணத்தில் எடுத்து வருகிறேன்.

மும்தாஜ்: சரி சுபைதா, கொண்டு வா!

சுபைதா: இதோ பீகம் மருந்து.

மும்தாஜ்: அப்பா என்ன கசப்பு! கசப்பு மருந்து தயாரிப்பதிலே எங்கள் அரண்மனை வைத்தியரை யாருமே மிஞ்சி விட முடியாது.

சுபைதா: பீகம்! அதோ பாதுஷா வருகிறார்.

மும்: நல்லதாய்ப் போச்சு. அவரை நானே வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். ஒரு முக்கியமான விஷயம் அவருடன் பேச வேண்டும்.

ஷாஜகான்: மும்தாஜ் என்ன? நான் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்? இப்பொழுது உடம்பு எப்படி இருக்கிறது?

மும்: தங்கள் அன்பால் முன்னை விட இப்பொழுது சுகந்தான் பாதுஷா! ஆனால் இரவு நேரத்தில் நித்திரை என்பது மருந்துக்கும் கிடையாது. உடம்பெல்லாம் ஒரே நடுக்கம். ஆனாலும் நேற்றிரவு மட்டும் கொஞ்சம் நித்திரை வந்தது. அந்த நித்திரையும் ஆனந்த நித்திரைதான். ஒரு அற்புதமான கனவு கண்டேன். இன்பமான அனுபவம்.

ஷாஜஹான்: (கேலியாக) என்ன ? ஆரியவர்க்கத்தின் சக்கரவர்த்தினி ஷாஜெகானின் பட்டத்தரசி தன் வாழ்வில் காணாத இன்பத்தைக் கனவிலே கண்டாளா? ஆச்சர்யமாயிருக்கிறது. ஆனாலும் அந்தக் கனவைச் சொல்லு. நானும் தான் கேட்க விரும்புகிறேன்.

மும்: அதுவா?....ஒரு பெரிய நந்தவனம். எங்கள் அரண்மனை உத்யானத்திலும் அழகானது. இரவு நேரம் பூரணசந்திரன் நீல்வானிலே மந்தை மேய்ந்து வரும் ஒரு இடையன் போல் மேகங்களிடையே வந்து கொண்டிருக்கிறான்.....யமுனை நதிக்கரை, அங்கே திடீரென ஒரு அற்புதமான மாளிகை நிலத்திலிருந்து முளைத்து வளர்ந்த மாதிரிக் கண்டேன். என்ன அழகான மாளிகை! நான் பிரமித்து விட்டேன். அபூர்வமான வேலைப்பாடு. பாலில் கடைந்தெடுத்தது போல் முழுவதும் சலவைக் கல்லால் சமைத்தது. அதை எப்படி வர்ணிப்பது என்றே
தெரியவில்லை. நான் அதற்குள் புகுந்துகொள்ள ஓடினேன். ஆனால் வாயிலில் நின்ற எங்கள் தலைமைக் காவற்காரன் அலிஉஹ¤சேய்ன் என்னைப் பிடித்து வெளியே தள்ளி விட்டான்.

ஷா: என்ன திமிர்? அலிஹ¤சென்னா தள்ளினான்? உடனே அவனைச் சிரச்சேதம் செய்யக் கட்டளை இடுகிறேன். மும்தாஜ்.

மும்: பாதுஷா! மறந்து விட்டீர்களா? நான் ஒரு கனவைத்தானே வர்ணிக்கிறேன்.

ஷா: (கேலியாக) ஓ! மறந்து போய் விட்டது. ஆனால் கனவானால் என்ன நனவானால் என்ன, என் மும்தாஜ் விரும்பும் ஓர் இடத்தில் அவள் நுழையக் கூடாது என்று சொல்ல அந்த அலிஹ¤செய்னுக்கு என்ன திமிர்! ஆனாலும் இது முதல் தடவைதானே? மன்னித்து விடுவோம். இன்னொரு முறை அவன் கனவிலே தோன்றி அசட்டுப் பிசட்டென்று ஏதாவது செய்தால் உடனே எனக்குச் சொல்லி விடு. தகுந்த தண்டனை கொடுக்கிறேன்.

மும்: (சிரித்துக் கொண்டு) பாதுஷா! உண்மையில் அந்த மாளிகையை என்னால் மறக்கவே முடியவில்லை. அந்த மண்டபத்துக்கு ஏதோ மந்திரசக்தி இருக்கிறது. எந்நேரமும் அந்த நினைவாகவே இருக்கிறது. அந்த மாதிரி சலவைக்கல் மினாராக்கள் அமைந்த கட்டடமொன்றை ஒரு போதும் கண்டதில்லை நான்.

ஷா: அதென்ன பிரமாதம்? அதைவிட அற்புதமான கட்டடமொன்றை நானே எழுப்பத் திட்டமிட்டிருக்கிறேன். உன்னிஷ்டப்படி முழுவதையும் சலவைக் கல்லாலேயே அமைத்து விடுகிறேன். உனக்குத்தான் நன்றாகச் சித்திரம் வரைய வருமே! உடம்பு குணமானதும் நீ கண்ட கனவுக் கட்டடத்தைக் சித்திரமாக வரைந்து கொடு. எகிப்திலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் கலைஞர்களை வரவழைத்து உலகமே அதிசயிக்கும்படியான ஒரு மகாலைச் சமைக்கிறேன் பார். அதற்கு தாஜ்மகால் என்று பெயரிடுவேன். அதுவே என் கண்மணி மும்தாஜின்
அந்தப்புரமாகட்டும்.

மும்: பாதுஷா! இது என்ன திடீரெனத் தலையை சுற்றுகிறது! உலகமே சுழல்கிறது போல் தோன்றுகிறது. ஆ! ஐயோ....பாதுஷா....ஐயோ!

ஷா: மும்தாஜ்....ஒன்ணுமில்லை. உடம்பை அலட்டாமல் படு! கொஞ்ச நேரத்தில் சரியாப் போய்விடும்.

மும்: பாதுஷா, எனக்குப் பயமாயிருக்கிறது. எங்கே ஒளரங்கசீப்....எங்கே குழந்தைகள்.

ஷா: சுபைதா, ஓடிபோய் அரண்மனை வைத்தியரையும் பிள்ளைகளையும் உடனே அழைத்து வா....மும்தாஜ் பயப்படாதே! உனக்கொன்றும்
வராது.

மும்: இல்லை பாதுஷா...நான் இனி இருக்க மாட்டேன். உங்களுக்கு பக்கத்தில் இருந்து இறக்கக் கொடுத்து வைத்தேனே. அதுவே போதும்!

ஷா: என்ன மும்தாஜ்! என்னைப் பிரியப் போகிறாயா? உன்னை விட்டு என்னால் இருக்க முடியுமா? இதோ ஒளரங்கசீப்பும் பிள்ளைகளும் வருகிறார்கள்.

மும்: ஒளரங்கசீப், இதோ இங்கே வா! என் கண்மணிகளே. அம்மாவைக் கட்டி முத்தம் கொடுங்கள்....

ஷா: வாருங்கள் வைத்தியரே! பீகத்தின் நாடியைப் பரிசோதியுங்கள். (பீகம் இருமிக்கொண்டு 'பாதுஷா பாதுஷா' என்று கதறிய வண்ணம்
இறக்கிறாள்).

ஷா: ஐயோ! என் மும்தாஜ்! மும்தாஜ்!.....


காட்சி 2
இடம்: அரண்மனை
காலம்: ஒரு மாதம் கழித்து.


சாதீக்: பாதுஷா, நீங்கள் எந்த நேரத்திலும் இப்படிக் கவலையோடிருந்தால் அரசாங்கக் காரியங்கள் என்னாவது. மும்தாஜ் பீகத்துக்கு ஞாபக மண்டபம் கட்ட வேண்டுமென்று சொன்னீர்களே! அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையாவது செய்தால் சோகம் உங்களை விட்டகன்றுவிடுமே!

ஷா: உண்மைதான். ஆனால் பீகத்துக்கும் கட்டப்படும் ஞாபக மண்டபம் உலகிலேயே ஒப்பற்றதாய் இருக்க வேண்டுமென்று என் ஆசை. இதுவரைக்கும் வந்த மாதிரிக் கட்டடங்கள் எதுவுமே எனக்குத் திருப்தியளிக்கவில்லை. சாதீக்! மும்தாஜூக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமால் இருக்கிறேனே என்று எண்ணும்போது கவலை பிடுங்கித் தின்னாமல் இருக்குமா?

சாதீக்: அதைப்பற்றித்தான் பேச வந்தேன். இன்று பாக்தாத்திலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் சில மாதிரிக் கட்டடங்கள் வந்திருக்கின்றன. பார்க்கிறீர்களா......?

ஷா: கொண்டுவரச் சொல்.....!

சா: யாரங்கே? வெளியறையிலே இருக்கும் சிற்பங்களை எடுத்துக் கொண்டுவா.

சா: பாதுஷா இதோ இந்தச் சிற்பங்களைத்தான் குறிப்பிட்டேன்.

ஷா: இவைகள் தானா? இன்னும் இருக்கின்றனவா?

சா: இவ்வளவுதான் பாதுஷா.

ஷா: (வெறுப்போடும்) ம்! இவை ஒன்றூமே உதவாது சாதீக்! என் மும்தாஜுக்கு இப்படிப்பட்ட சாதாரண மண்டபத்தையா ஞாபகமாக
அமைப்பது? இந்த நாட்டிலே சிறந்த கலை என்பதே அழிந்தொழிந்து போய் விட்டதா? அழகின் உருவமான மும்தாஜ் இறந்தவுடன் அத்துடன் உலகிலிருந்த அழகுணர்ச்சியும் முற்றாக மங்கி மறைந்து போய் விட்டதா?

சா: பாதுஷா, இன்று ஒரு சிற்பக் காண்காட்சியை அரண்மனைச் சித்திரக் கூடத்தில் ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கு காணப்படும் மிகச் சிறந்த சிற்பத்தை நீங்களே பொறுக்கி எடுங்கள். அதை அமைத்த சிற்பியைக் கொண்டு ஒரு மாதிரிக் கட்டடத்தை அமைக்கச் சொல்லலாம். ஒரு வேளை அக்கட்டடம் தங்களுக்குத் திருப்தியளிக்கலாம்.

ஷா: எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. இருந்தாலும் பொழுது போக்காக இருக்கட்டும். சித்திரக் கூடத்துக்குச் செல்லுவோம்....வா.....

(சித்திரக் கூடம்)

ஷா: சாதீக்! இவ்வளவு சிற்பங்களுக்குள் ஒன்றுதான் என் மனதைக் கவர்ந்தது. இதோ, இது மாத்திரம்தான். உயிருள்ள சிற்பம்.. ஆனால் ஒரு ஆச்சரியம்! நமது அரண்மனையில் பாரசீகப் பணிப்பெண் சுபைதாவின் உருவமல்லவா இது! இதையா சமைத்தது? அவனை நான் காணவேண்டும்?

சா: இச்சிற்பத்தை சென்றவாரம் ஆக்ராவுக்கு வந்த ஒரு இரத்தின வியாபாரி எனக்குப் பரிசாகத் தந்தான். அதை உங்கள் பிரஜையான உஸ்தாட் என்னும் ஏழை இளைஞன் செதுக்க்கியதாக அவன் கூறினான். இரத்தின வியாபாரி இன்னும் நகரிலேயே இருப்பதால் உஸ்தாட்டின் இருப்பிடத்தை அறிவது சிரமமல்ல. நாளை அவனை வரவழைத்து விடலாம். ஆனால் எனக்கு ஆச்சரியமாய் இருப்பதென்னவென்றால் தங்கள் அரண்மனையின் பாரசீகப் பணிப்பெண்ணை அவன் எப்படிச் சித்திரித்தான் என்பதுதான். இப்படிப்பட்ட ஒரு பணிப்பெண் தங்கள் அந்தப்புரத்தில் பணி செய்வது எனக்கே தெரியாது? எப்படி அந்த இளைஞன் தெரிந்து கொண்டான் என்பதுதான் விந்தை.....

ஷா: எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது....எதற்கும் அப்பணிப்பெண்ணை நான் இங்கே வரவழைக்கிறேன். நீயே அவள் உருவத்துக்கும் இச்சிற்பத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்துக் கொள். யாரங்கே......

பணி: வணக்கம்...பதூஷா!

ஷா: அந்தப்புரம் சென்று சுபைதாவை அழைத்து வா..சாதீக், நீ சொன்ன மாதிரியே செய்யலாம். இந்த உஸ்தாட்டிடமே ஒரு கட்டடத்தை அமைக்கச் சொல்வோம். அவன் ஒரு அபூர்வ்மான கலைஞனாகத்தான் தோன்றுகிறான்.....நாளையே அவனை ராஜ சமூகத்துக்குக் கொண்டு வா.

சா: அப்படியேயாகட்டும் பாதுஷா.

சுபைதா: பாதுஷாவின் பாதங்களுக்கு ஏழை சுபைதாவின் வணக்கம்.

ஷா: இவள்தான் சுபைதா! நான் கூறிய பாரசீகப் பணிப்பெண். பார்த்தீர்களா இப்பொழுது?

சா: ஆம் பாதுஷா, தடையேயில்லை. உஸ்தாட் இவளைத்தான் சித்திரித்திருக்கிறான். அதுவும் நேராவே பார்த்துச் சித்திரித்தது போல் தோன்றுகிறது.

ஷா: என்ன சுபைதா, மிரண்டு போய்ப் பார்க்கிறாய்? இந்தச் சிற்பத்தைச் செதுக்கிய உஸ்தாட்டை உனக்குத் தெரியுமா உண்மையைச் சொல்லு.

சுபைதா: பாதுஷா! உஸ்தாட்டா? ஆம் அவரை நான் அறிவேன். மூன்று வருடங்களின் முன்னர் பாரசீகத்திலிருந்து இங்குவரும் வழியில் எங்களை இங்கு கொணர்ந்த ஷேயிக் அமானுல்லாவும் நாங்களும் , யமுனையில் குளிக்கும்போது நான் எக்கச்சக்கமாக வெள்ளத்தில் மாட்டிக் கொண்டேன். தண்ணீர் அடித்துக் கொண்டு போக ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஒருவர் வந்து என்னைக் காப்பாற்றினார். அவர்தான் இவர் (பிரதியின் இப்பகுதியில் சில வசனங்கள் எமக்குக் கிடைக்கவில்லை. அறிந்தவர்கள் அறியத் தரவும்.. ஆ-ர்)


இடம்: அரண்மனை
காலம்: அடுத்த நாள்

காட்சி -3

சாதீக்: பாதுஷா....உஸ்தாட் வந்திருக்கிறான். தாங்கள் விரும்பும் மண்டபம் எவ்விதம் அமைய வேண்டும் என்பதை அவனிடம் நன்கு விளக்கிக் கூறுங்கள். நிச்சயம் அவன் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வான். அவனைப் போன்ற ஒரு சிற்பி இந்த பாரத நாட்டில் வேறெங்கும் கிடையாது பாதுஷா,

ஷா: அவனுடைய திறமையில் எனக்கும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. எதற்கும் பார்ப்போம் வரச் சொல்.

ஷா: யாரங்கே? வெளியே உட்கார்ந்திருக்கும் சிற்பாசரியாரை வரச் சொல்.

உஸ்: பாதுஷா.. ஏழை உஸ்தாட் வணங்குகிறேன்.

ஷா: உஸ்தாட்; நீ செதுக்கிய பெண்ணின் உருவமொன்றை நமது நண்பர் சாதீக்கு ஒரு இரத்தின வியாபாரி பரிசளித்தார். அதோ,
அச்சிற்பம். நீ ஒளியாமல் சொல்ல வேண்டும். அபூர்வமான அழகுடன் விளங்கும் அப்பெண் யார்?

உஸ்: அது என் காதலியின் உருவம் பாதுஷா! அது போன்ற உருவங்கள் இரண்டை அமைத்தேன். அவற்றில் மிகச் சிறந்ததை என்னுடன் வைத்துக் கொண்டு மற்றதை அந்த இரத்தின வியாபாரிக்கு விற்றேன். என் காதலியின் பாதங்கள் அதிசயமான பேரழகு கொண்டவை. இந்தச் சிற்பத்தில் வெகு சாதாரணமாகவே அப்பாதங்கள் அமைந்து விட்டன.

ஷா: உஸ்தாட், முதலில் அப்பெண் யாரென்பதை சொல்லு. மற்ற விசயங்களை அப்புறம் பேசுவோம்.

உஸ்: பாதுஷா வற்புறுத்துவதனால் எல்லா விஷயங்களையும் சொல்லி விடுகிறேன். என்மீது தவறேதுமிருந்தால் மன்னித்து விடுங்கள்.

ஷா: பீடிகை பலமாயிருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டியதில்லை, சொல்லு.  உ

உஸ்: தங்கள் அரண்மனையில் வேலை செய்வதற்காக மூன்று வருடங்களின் முன்னால் பாரசீகத்திலிருந்து 12 பணிப்பெண்கள் வந்ததை பாதுஷா மறந்துபோயிருக்கமாட்டீர்கள். அவர்களில் ஒருத்தி சுபைதா. அவளுக்கும் எனக்கும் யமுனைக் கரையிலே பரிச்சயமேற்பட்டுக் காதலரானோம். ஆனால் இக்காதல் வாழ்வு 12 நாட்கள்தான் நீடித்தது. இந்தக் காதல் விவகாரம் தெரியவந்த பணிப்பெண்கள் முகாமை அதிகாரி, தன்னாட்களை ஏவி ஈவிரக்கமில்லாமல் என்னைப் பலமாக அடித்துப் போட்டுவிட்டான். சில நாளில் அக்கோஷ்டியினர் எல்லோரும் யமுனைக் கரையிலிருந்து போய் விட்டார்கள்... அந்த சுபைதா இப்பொழுது உங்கள் அரண்மனையிலே பணி செய்து கொண்டிருக்கிறாளென எண்ணுகிறேன்... அவளைத்தான் இவ்வுருவத்தில் செதுக்கி இருக்கிறேன்...பாதுஷா....

ஷா: உஸ்தாட், உன் சோகமயமான கதை என்னை முற்றிலும் உருக்கி விட்டது. காதலின் பெருமையை உணராதிருந்த எனக்கு மும்தாஜ் பீகத்தின் பரிவுதான் அதனை உணர்த்தியது. நிஜாமிதன் லைலா மஜ்னு கதையும், உறிரின்பெராட் கதையும், இந்துக்கள் கூறும் பல்வேறு காதற் கதைகளும் எனக்கு அர்த்தமற்ற கேலிக்கூத்துக்களாக இருந்தன. இப்பொழுதுதான் எனக்கு அவற்றின் பொருள் விளங்கியது....  ஆனாலும் உஸ்தாட்... என் காதல் சாதாரமான காதல்தான். உன் காதலோ அற்புதமானது. லைலா மஜ்னு காதல் போல் உஸ்தாட் சுபைதா காதலும் சிரஞ்சீவியான காதலாகும். ஆனால் உஸ்தாட் நீ ஒன்றை அறிய மாட்டாய். துக்ககரமான அச்செய்தியை நான் உனக்குக் கூற விரும்பவில்லை. அதைக் கேட்டால் உன் உள்ளம் சுக்குநூறாக உடைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

உஸ்: பாதுஷா... ஏழை உஸ்தாட்டுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் நீங்கள் எதையோ என்னிடம் ஒளிக்கிறீர்கள். ஒளிக்காமல் உண்மையைக் கூறும்படி நான் மன்றாடிக் கேட்கிறேன் பாதுஷா.

ஷா: எப்படிச் சொல்வேன் உஸ்தாட், உன் சுபைதா...

உஸ்: சுபைதாவா? ... சுபைதாவுக்கு என்ன நேர்ந்து விட்டது பாதுஷா?

ஷா: வானத்து மின்னல் நிரந்தரமானதல்லவே? அதுபோல்தான் மக்கள் வாழ்வும். மும்தாஜ் மறைந்தாள். அவளைச் சாவென்னும் கொடியோன் துரத்திப் பிடித்தான். ஆனால் சுபைதா விஷயம் வேறு. உஸ்தாட் இல்லாத வாழ்வெதற்கென்று தானே அரண்மனைத் தடாகத்தில் மூழ்கித் தற்கொலை புரிந்து கொண்டாள் அவள்.

உஸ்: என்ன சொல்கிறீர்கள் பாதுஷா? என் சுபைதா இறந்து விட்டாளா? என் சுபைதா இறந்தாள்...? சுபைதா...சுபைதா...

ஷா: உஸ்தாட் உன்னை நிதானப்படுத்திக்கொள். சாகாதவர் உலகில் யாரிக்கிறார்கள்? உன் சுபைதா என்ன, என் மும்தாஜும்தான் இறந்தாள்.... பாதுஷாக்களில் பெரியவர்களான அக்பரும், ஜகாங்கீரும் எங்கே? சாவு! அதன் கரங்களில் சிக்காதவர் யார்?

உஸ்: பாதுஷா! சுபைதாவுடன் சேர்ந்து வாழாத வாழ்வு இருள் சூழ் வாழ்வாகத்தான் இருந்தது. எனினும் அந்த நிசியிருளில் அவள் எங்கோ வாழ்கிறாள் என்ற நினைவு ஒரு நட்சத்திரம்போல் எனக்கு நம்பிக்கை ஊட்டிவந்தது. அவள் வாழும் உலகம் எனக்கு அவசியமான உலகமாகவே பட்டது... ஆனால் இன்று என் நிலைவேறு... சுபைதா இல்லாத இந்த வாழ்வு முற்றிலும் கார்மேகங் கவிந்த கூதிர்கால இரவாகும். ஒற்றை நட்சத்திரமும் மறைந்து போய்விட்டது.

ஷா: உஸ்தாட் உன் கலையை நீ உன் காதல் தேவிக்கே அர்ப்பணித்துவிடு. சுபைதாவை இன்னும் பல சிற்பங்களாகச் செதுக்கு. இனிய ஞாபகச் சின்னங்களை அமை. பேரெழில் நிரம்பிய மாளிகை ஒன்றை அவள் நினைவாக நீ எழுப்பு. இவ்விதப் பணிகளிலே நீ ஈடுபட்டுக் கிடந்து விட்டாயானால் சோகம் மறைந்துவிடும். அவளுக்குச் சேவை செய்யும் பொழுது சுபைதா சாகவில்லை என்ற உணர்வினை நீ பெறுவாய்...

உஸ்: பாதுஷா..முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? ஞாபகச் சின்னம் அமைக்க என்னைப் போன்ற ஏழை என்ன செய்ய முடியும்? எது பணம் படைத்தவர்களுக்குத்தான் சாத்தியம்.

ஷா: கவலைப்படாதே உஸ்தாட். லைலா-மஜ்னு காதலை நிஜாமிதன் கவிதையில் மூலம் சிரஞ்சீவியாக்கினான். உஸ்தாட் - சுபைதா காதலை நிரந்தரமாக்க நானே முன் வருகிறேன். உஸ்தாட்! உறுதியாகக் கூறுகிறேன். உன் சுபைதாவின் ஞாபகமாக முற்றிலும் சலவைக் கல்லால் ஆன ஒரு மகாலை அமைக்க என் பொக்கிஷம் முழுவதையும் திறந்துவிடுகிறேன் உனக்கு, சீக்கிரம் ஒரு மாதிரிக் கட்டடத்தை அமைத்து வா. பார்ப்போம்.

உஸ்: தாங்கள் சொல்லுவது உண்மைதானா பாதுஷா?

ஷா: சந்தேகமா? இன்றே உன் கட்டட மாதிரியை அமைக்க ஆரம்பித்துவிடு. வானுறவோங்கிய மினாராக்களுடன் கல்லில் செய்த காவியம்போல் அது ஜொலிக்கட்டும். காதலின் பெருமையையும் , எழிலையும் உலகுக்குக் காட்டுவதாக அமையட்டும்... உஸ்தாட் உன் மாதிரியை எப்போது என் கைவசம் ஒப்புவிப்பாய்?

உஸ்: ஒரு வாரத்தில் அதை உங்கள் காலடியில் வைக்க உறுதி கூறுகிறேன் பாதுஷா.

ஷா: சரி நீ போய் வரலாம்! உன் சுபைதா சாகமாட்டாள்.. என்றும் வாழுவாள் அவள்.

உஸ்: ஏழை உஸ்தாட் விடை பெற்றுக் கொள்கிறேன்.

(உஸ்தாட் போனபின்)

சாதீ: (இருமிக்கொண்டு) பாதுஷா!

ஷா: என்ன சாதீக்...!

சா: ஒன்றுமில்லை பாதுஷா. ஆனால் தாங்கள் பொய்தானே உரைத்தீர்கள். சுபைதாவை நேற்றுத்தானே உயிரோடு கண்டேன்.

ஷா: உண்மைதான் சாதீக். பொய்தான் உரைத்தேன். மும்தாஜுக்கு ஏற்ற கட்டட மாதிரியைப் பெற்றுக் கொள்ளக் குறுக்குவழி இது. சுபைதாவுக்காக உஸ்தாட்டின் ஆவியே உருகி அவன் கையால் அமையும் கட்டட மாதிரியாகும். காதலின் பூரணத்துவத்தை நாம் அதிலே காணலாம். அதுவே என் காதல் கிளிக்கு ஏற்ற காணிக்கையாகும்.

சா: பாதுஷா1 தங்கள் மனதில் இரக்கமென்பதே கிடையாது. இல்லாவிட்டால் அவன் உள்ளத்தைக் கசக்கிப்பிழிந்து இக்கட்டடத்தை அமைக்கப் பார்ப்பீர்களா?

ஷா: அவ்வளவு அவசரமான முடிவு கட்டிவிடாதே சாதிக். கட்டடமாதிரி பூர்த்தியானதும் சுபைதாவை உஸ்தாட்டுக்கே மணமுடித்து வைக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல அரசாங்க சிற்பியாகவும் அவனை நியமிப்பதற்கு உத்தேசித்திருக்கிறேன்.

சா: அது நல்ல யோசனைதான் பாதுஷா! (மோதின் 'அல்லாஹூ அக்பர்' எனக் கூவுதல் கேட்கிறது).

ஷா: தொழுகைக்கு நேரமாகிறது சாதீக்! வா போவோம். (மோதின் மீண்டும் கூவுகிறான் - 'அல்லாஹூ அக்பர்')


காட்சி 4.

இடம்: அரண்மனை.
காலம்: ஒரு வாரம் கழித்து.

சாதீ: பாதுஷா வணக்கம். இன்று காலை உஸ்தாட் தங்களிடம் தனது மாதிரிக் கட்டடத்தை சமர்ப்பித்ததாக என்னிடம் தெரிவித்தான். உண்மைதானா? பாதுஷாவுக்கு அது பிடித்திருக்கிறதா?

ஷா: அது எப்படியிருக்கிறதென்பதை இதோ நீயே பார்த்துகொள். அற்புதமான கட்டடம். சாதீக்! இப்போது சொல்லி நான் அந்த உபாயத்தை அனுஷ்டித்திருக்காபவிட்டால் இந்தக் கட்டட மாதிரி கிடைத்திருக்குமா?

சாதீக்: ஆம் பாதுஷா! அவன் இவ்வளவு தூரம் சிறந்த சிற்பி என்று நான் எதிர்பார்க்கவில்லை. இக்கட்டடத்தின் தோற்றம் இனிமையான ஒரு கனவு போல் இருக்கிறது. தாங்கள் திட்டமிட்டுள்ளபடி வெண்மை நிறமான சலவைக்கல்லில் இக்கட்டடத்தை அமைத்துவிட்டால் , அது கல்லில் மலர்ந்த ஒரு கவின் மலர் போல் தோன்றும். பாதுஷா! ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும். அழகைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தில் எங்கும் இதைபோன்ற கட்டடத்தை நான் கண்டது கிடையாது. எகிப்திலும் கிரீசிலும் கூட நான் இப்படிப்பட்ட ஒரு கட்டடத்தைக் காணவில்லை என்று திட்டமாகக் கூறுவேன்.

ஷா: உலகெங்கும் சென்று வந்த சாதீக்கே இப்படிக் கூறுவதைக் கேட்க உண்மையிலேயே நான் ஆனந்தப்படுகிறேன். சாதீக்! சுபைதாவை இன்று வரச் சொல்லியிருக்கிறேன். இப்போது வருவாள்... அதோ வந்து கொண்டிருக்கிறாள்.

சுபைதா: பாதுஷா ஏழை சுபைதா தங்கள் பாதங்களை வணங்குகிறேன்.

ஷா: சுபைதா, வா, நாளையே உனது திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.

சுபைதா: என்ன... திருமணமா.. எனக்கா...? தாங்கள் கூறுவதொன்றும் விளங்கவில்லை பாதுஹ்சா.

ஷா: பயப்படாதே. உஸ்தாட்டுக்கே உன்னைக் கொடுக்கப் போகிறேன் சுபைதா!

சுபைதா: உண்மையாகவா? நம்ப முடியவில்லை... என் உஸ்தாட்டை எங்கே கண்டு பிடித்தீர்கள்... பாதுஷா...

சவா: பாதுஷா சமூகத்திற்கு... உஸ்தாட் வந்திருக்கிறார்.

ஷா: வரச் சொல்... சுபைதா அந்தத் திரைக்குப்பின் நீ ஒளிந்துகொள். உஸ்தாட் வருகிறான்.

உஸ்: பாதுஷா ஏழை உஸ்தாட் வணங்குகிறேன்.

ஷா: உஸ்தாட் , மிகவும் மெலிந்து களைத்துப் போயிருக்கிறாய். இச்சிற்பத்தை இவ்வளவு அவசரமாக அமைப்பதென்றால் இலேசா என்ன? ஆனால் ஒன்று சொல்வேன். உனது கஷ்டம் வீண்போகவில்லை. எகிப்திலும் கிரீசிலும் கூட இப்படிப்பட்ட ஒரு கட்டடம் இல்லை என்று பாராட்டுகிறார் எனது நண்பர் சாதீக். ஆனால் இந்த அற்புதமான சிற்பத்தைப் பார்ப்பதற்கு உன் சுபைதா மட்டும் இப்போதிருந்தால்.....

உஸ்: அது முடியும் காரியமா, பாதுஷா!

ஷா: உஸ்தாட், ஒரு வேளை அது முடியுமென்று வைத்துக்கொண்டு யோசித்துப் பார். ஒரு மந்திரவாதி உன்முன் தோன்றுகிறார். இதோ இந்த மாதிரிச் சிற்பத்தை எனக்குத் தந்துவிடு, நான் சுபைதாவை வரவழைக்கிறேன் என்கிறார். நீ என்ன சொல்வாய்?

உஸ்: என்னைச் சூழ்ந்துள்ள சோகத்திலும் இந்த ஹாஸ்யம் எனக்குச் சிரிப்பை ஊட்டும் பாதுஷா.

ஷா: உஸ்தாட், அதைக் கேட்கவில்லை. உண்மையாகவே அம் மந்திரவாதிக்கு அச்சக்தி இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அப்போது நீ என்ன செய்வாய்?

உஸ்: என்னுயிரையே அவளுக்குத் தரச் சித்தமாயிருக்கும் நான், என்னையே எடுத்துக் கொள், அவளைத்தான் என்று கேட்பேன். இந்த மாதிரிக் கட்டடம் என்ன் பிரமாதம் எடுத்துக்கொள் என்பேன்.

ஷா: உண்மையாகவா.. உஸ்தாட்...?

உஸ்: சந்தேகமென்ன பாதுஷா...

ஷா: அப்படியானால் அந்த மஹாலை என் மனைவி மும்தாஜுக்குத் தந்துவிடு! அதற்குப் பதிலாகா சுபைதாவை உனக்குத் தருவேன் உஸ்தாட்.... சாதீக், திரையா விலக்கு. சுபைதா ! இதோ உன் உஸ்தாட், நாளையே உங்களுக்குத் திருமணம் நடக்கும்.

சாதீக்: உஸ்தாட்! என்ன் மிரண்டுபோய் நிற்கிறாய்? ஆம்.... இது கனவல்ல. உண்மைதான். பாதுஷா உன்னை ஏமாற்றிவிட்டார். சுபைதா சாகவில்லை. மும்தாஜ் ஞாபகமாக சீனம் அமைக்க உன் சோகத்தைத் தூண்டித் தன் காரியத்தைச் சாதித்தார்.

ஷா: ஆம்.. உஸ்தாட்! என்னை மன்னித்துவிடு. உன் உள்ளத்தைக் கசக்கிப்பிழிந்து விட்டேன்.

உஸ்: பாதுஷா! தாங்களா என்னிடம் மன்னிப்புக் கேட்பது? என் சுபைதாவை என்னிடம் சேர்த்தீர்களே, அது போதாதா? அப்பெரும் நன்றியை ஏழை உஸ்தாட் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

ஷா: நானும் உன் நன்றியை மறவேன் உஸ்தாட்.

[திரை விழுகிறது.]


பதிவுகள் ஆக்ஸ்ட் 2007 இதழ் 92


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R