1_kavaloor_rajaduraiமுருகபூபதிஇதுவரையில்     நான்   எழுதிய  திரும்பிப்பார்க்கின்றேன்    தொடர்பத்தியில்  பெரும்பாலும்   மறைந்தவர்களைப் பற்றித்தான்  எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில்  நிலைத்த  நெஞ்சங்கள்  தொடரிலும்   மறைந்த 12 ஆளுமைகளை    பதிவுசெய்துள்ளேன்.    இந்தத் தொடர்  பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது   ஒரு   இலக்கிய   சகோதரி  என்னிடம்   ஒரு  வினாவைத் தொடுத்தார்.   குறிப்பிட்ட   தொடரில்  நான்  மறைந்த  ஆண் படைப்பாளிகளைப்பற்றி   மாத்திரம்   எழுதியதாகவும்   பெண்களைப்பற்றி எழுதவில்லை   என்றும்   புகார்    எழுப்பியிருந்தார். பெண்களுக்கு   ஆயுள்   அதிகம்   என்று   மாத்திரம்   பதில்   சொன்னேன். அந்தத்தொடரில்   இடம்பெற்றவர்கள்   அனைவரும்   மறைந்துவிட்ட ஆண் படைப்பாளிகள்தான். அவுஸ்திரேலியாவுக்கு  நான்   புலம்பெயர்ந்து  27 வருடங்களாகின்றன. கால்நூற்றாண்டுக்கும்  அதிகமான   காலப்பகுதியில்   நான்   நேசித்த - என்னை  நேசித்த   பலரும்   விடைபெற்றுவிட்ட சோகம்   தனிப்பட்ட   ரீதியில் என்னை   தொடர்ந்து    வந்துகொண்டுதானிருக்கிறது. திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில்   தற்சமயம்   எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களைப்பற்றியும்   எழுதவேண்டும்   என்ற  எண்ணம் கடந்த   சில   நாட்களாக   எனது   மனதில்   உருவாகிவருகிறது. காரணம்   சில   நாட்களுக்கு   முன்னர்   அவுஸ்திரேலியா    -  குவின்ஸ்லாந்து மாநிலத்தில்    எமது   தமிழ்   இலக்கிய   கலைச்  சங்கம்  நடத்திய  கலை இலக்கிய    கருத்தரங்கு   நிகழ்ச்சியில்   கலந்துகொண்ட  பின்னர் மெல்பனுக்கு   திரும்பும்    வழியில்    சிட்னியிலும்  சில  நிகழ்ச்சிகள் சந்திப்புகளில்    கலந்துகொண்டேன்.   எனது   பயணத்தில்  நான்  சிட்னியில் சந்திப்பதற்கு   பெரிதும்    விரும்பியிருந்த   ஒருவர்   நண்பர்   எழுத்தாளர் வானொலி - திரைப்படக்   கலைஞர்    காவலூர்  ராசதுரை. சிட்னிக்கு    செல்லும்    சந்தர்ப்பங்களிலெல்லாம்   அவரைப்பார்க்காமல் திரும்புவதும்    இல்லை.   இந்தப்பயணத்தில்   ஒருநாள்   அவரை சந்திக்கச்செல்வதற்கு    முன்னர்   அவரது   வீட்டுக்கு  தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.

அவர்    தற்பொழுது    சிட்னியில்   ஒரு   முதியோர்   பராமரிப்பு   நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக    அவரது   மனைவி  திருமதி  ராசதுரை சொன்னபொழுது    அப்படியா?   என்று    பதில்    சொல்வதற்கு  எனக்கு  சில கணங்கள்    தேவைப்பட்டது. அந்த   மௌனமான   கணங்களில்   நான்   அதிர்ச்சியில்    மூழ்கியிருந்தேன்.

காவலூர்   ராசதுரை  அனுமதிக்கப்பட்டிருக்கும்    முதியோர்   பராமரிப்பு நிலையத்தின்    முகவரியைப்பெற்றுக்கொண்டு   சிட்னியில்   வதியும் ஊடகவியலாளர்    நண்பர்    சுந்தரதாஸையும்    அழைத்துக்கொண்டு விரைந்தேன்.

காவலூர்   என்று    ஈழத்து    இலக்கிய   உலகிலும்    இலங்கை   வானொலி வட்டாரத்திலும்    நன்கு    அறியப்பட்ட   நண்பர்   ராசதுரைக்கும்   எனக்கும் இடையே   நீடித்த    நட்புறவுக்கு   நான்கு   தசாப்த   காலம்.   கடந்துவிட்ட நாற்பது  (1974 - 2014)   ஆண்டுகளில்   எம்முடன்   உரையாடி   உறவாடி இணைந்து    பயணித்த   அவர்    தற்பொழுது   எதுவும்   பேச   இயலாமல் ஏகாந்தமான    மௌனப் பார்வையுடன்   சலனங்கள்    ஏதும்  அற்று  நாம் பேசுவதை    மாத்திரம்     கிரகித்துக்கொண்டு    அதற்கு   பதில்   ஏதும்   சொல்ல முடியாத   இயலாமையுடன்    முகத்தை   மலரவைத்தும்    துயரம்  நெஞ்சில் கப்பியபொழுது    இடதுகரத்தால்    நெற்றியையும்   கண்களையும் மறைத்தவாறு   அமைதியாக   மூச்சுவிடுகிறார்.

ஆடி  அடங்கும்   வாழ்க்கை   உண்மையிலேயே    புதிரானதுதான்.   ஆனால் அர்த்தமுடன்   வாழ்ந்து    இயங்கியவர்களின்   வாழ்க்கை முன்னுதாரணமானது.

காவலூர் ராசதுரை   1974   ஆம்   ஆண்டில்  நான்  இலங்கை   முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தில்   இணைந்த    காலப்பகுதியில் எனக்கு   நண்பரானவர்.    அச்சமயம்  அவர்  இலங்கை   வானொலியில் பணியிலிருந்தார்.

கொள்ளுப்பிட்டி  ஹட்சன்   வீதியில்  அமைந்த  அவரது  இல்லத்தின் முகவரிதான்   அப்பொழுது   சங்கத்தின்   முகவரியாகவும்   இருந்தது. அதனால்    அவரது    இல்லத்தில்    அடிக்கடி   நடக்கும் செயற்குழுக்கூட்டங்களில்    சந்திப்பேன். தேசிய  ஒருமைப்பாட்டு மாநாட்டில்   இரவு   கலை   நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர்  காவலூர்.

சங்கத்தின்   எழுத்தாளர்   கூட்டுறவுப்பதிப்பகம்  1976   இல்   காவலூரின் ஒருவகை  உறவு   சிறுகதைத்தொகுதியை    வெளியிட்டது.   அந்த  நூல் சாவகச்சேரி   மட்டுவிலில்    திருக்கணித    அச்சகத்தில்   அச்சிடப்பட்டது.   தனது    சிறுகதைகளின்  மூலப்பிரதிகளை    சங்கத்தின்    செயலாளர்    பிரேம்ஜி ஞானசுந்தரனிடம்    ஒப்படைத்துவிட்டு    தனது  பொன்மணி   திரைப்பட தயாரிப்பு    பணிகளில்    அவர்    மூழ்கிவிட்டார்.

அச்சிட்டப்பட்ட   அவரது    சிறுகதைத்தொகுதியை    பெற்றுக்கொள்வதற்காக நண்பர்   மேமன்கவியுடன்    மட்டுவிலுக்குச்சென்றேன்.  அப்பொழுது   மேமன்    கவியின்    யுகராகங்களும்   (புதுக்கவிதை)    செ.யோகநாதனின் சிறுகதைத்தொகுதியும்    வெளியீட்டுக்கு   தயார்   நிலையிலிருந்தன.

இந்நூல்களுக்கான   முகப்பு    ஓவியங்களை   வரைந்தவர்   எழுத்தாளர் சாந்தன்.

மல்லிகை   ஜீவா   யாழ்ப்பாணம்     வீரசிங்கம்    மண்டபத்தில்   மூவருடைய நூல்களினதும்    வெளியீட்டு  விழாவுக்கான   அனைத்து    ஏற்பாடுகளையும் செய்தார்.   ஆனால்    காவலூர்   அந்த    மண்டபத்தின்   பக்கமே   அன்று வரவில்லை.  பொன்மணி   படத்தின்     இயக்குநர்    தர்மசேன  பத்திராஜா  மற்றும்   அதில் நடித்த   டொக்டர் நந்தி  -  பொறியிலாளர்    திருநாவுக்கரசு  -  திருமதி சர்வமங்களம்   கைலாசபதி  -  மௌனகுரு  -  சித்திரலேக   மௌனகுரு  - கமலா தம்பிராஜா   - சுபாஷினி   ( திரைப்பட நடிகை)  முதலானோருடனும்   ஒளிப்பதிவாளருடனும்   யாழ்  குடாநாட்டில்     படப்பிடிப்பு   வேலைகளில் மூழ்கியிருந்தார்.

பொன்மணி    காவலூரின்   கதை .  அதற்கு   திரைக்கதை   வசனமும்   அவரே    எழுதியிருந்தார்.   அத்துடன்   தயாரிப்பு    நிருவாகியாகவும்   பல  பொறுப்புகளை   சுமந்தார்.

தனது    சிறுகதைத் தொகுதியை  நாம்  எப்படியும்  அச்சிட்டு வெளியிட்டுவைப்போம்   என்ற   திடமான   நம்பிக்கை   அவரிடம் இருந்தமையால்தான்   அவர்   வீரசிங்கம்   மண்டபத்தின்   பக்கமே வரவில்லை   என்றும்   பொன்மணி   திரைப்படம் -  தான்  உடனிருந்தால்தான்    இயக்குநருக்கும்    நடித்தவர்களுக்கும்   உற்சாகத்தை தரும்   என்றும்   பிறிதொரு  சந்தர்ப்பத்தில்   சொன்னார்

பிறந்த   ஊருக்கு   பெருமை  சேர்த்த   ராசதுரை    ஈழத்து  நவீன  தமிழ் இலக்கிய   வளர்ச்சியில்   மட்டுமன்றி  வானொலி  -   தொலைக்காட்சி - சினிமா -  மேடை நாடகம் -  விளம்பரக்கலைத்துறை    முதலானவற்றிலும் கணிசமான   பங்களிப்புகளை    வழங்கியவர்.

இலங்கையில்   சப்ததீவுகள்   என   அழைக்கப்படும்   பிரதேசத்தில் ஊர்காவற்றுறையில்   கரம்பன்   ஊரில்    பிறந்த   ராசதுரையின்    தேவ கிருபையை    முன்னிட்டு   வாழும்   - என்ற   சிறுகதை   இலங்கையில் தமிழ்க்கல்விப்  பாடத்திட்டத்தில்  10   ஆம்  வருட  இலக்கியப் பாடப் புத்தகத்தில்    சேர்க்கப் பட்டிருக்கிறது.     குறிப்பிடத்தகுந்த    இந்த   சிறுகதை இந்தி   மொழியில்   பெயர்க்கப்பட்டு  தர்மயுக்   என்ற   சஞ்சிகையில் வெளியாகியது.    தர்மயுக்-     - TIMES OF INDIA    பிரசுரமாகும். மேற்சொன்ன   சிறுகதையும்  காவலூர்   ராசதுரையின்   இதர    ஆரம்பகால சிறுகதைகளும்   கொண்ட   முதற்  கதைத் தொகுப்பு  குழந்தை  ஒரு தெய்வம் - தமிழ்நாட்டில்   வெளிவந்தது.   நவீன   தமிழ்   இலக்கியத்தில் மிகுந்த   கவனத்தைப் பெற்ற   பிரபல   விமர்சகர்   க.நா.சுப்பிரமணியம் (க.நா.சு)   இந்நூலை   இந்து   ஆங்கில   இதழில்    சிலாகித்து  விமர்சித்துள்ளார். முதற் கதைத்  தொகுப்பிலிருந்து   ஈழத்து   இலக்கிய  உலகின்  கவனத்தை ஈர்த்துக் கொண்ட   காவலூர்  ராசதுரை  -  இலங்கையில்   சுதந்திரன் - வீரகேசரி -  தினகரன்  ஆகிய    பத்திரிகைகளில்   தொடர்ந்து   எழுதி - தமது ஆற்றல்களை   விரிவுபடுத்திக் கொண்டார்.

தொழில்  நிமித்தம்  பல பணிகளில்  இவர்  ஈடுபட்டிருந்த  போதிலும் - தீவிரமான   வாசிப்புப் பழக்கத்தினால்   ஆங்கில   இலக்கியத்திலும்  புலமை பெற்றிருந்தார்.

இலக்கியத்  தேடல்  இயல்பு  கொண்டிருந்த   இவர் - வானொலி ஊடகத்தினுள்ளும் - விளம்பரத்துறையினுள்ளும்   பிரவேசிக்கும் வல்லமையும்    பெற்றிருந்தார்.

இலங்கையில்   பல  முன்னணிப் படைப்பாளிகள்  -  பத்திரிகையாளர்களுடன் நெருக்கமான  உறவைப் பேணி   வந்த  காவலூர்  - இலங்கை முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தின்  வளர்ச்சியிலும்  முக்கிய  பங்காற்றினார்.

இலங்கை   ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில்   நிகழ்ச்சித்  தயாரிப்பாளராகப் பணியாற்றி    பின்னாளில்   சொந்தமாக   வசீகரா   என்ற   விளம்பர நிறுவனத்தையும்   கொழும்பில்   நிறுவினார்.   அந்நிறுவனம்   இன்றும் கொழும்பில்   இயங்கி   வருகிறது. இலங்கை   வானொலி   கலையகத்தில்   இவரால்   அறிமுகப்படுத்தப்பட்ட சிலர் -  இன்று   தமிழர்  புலம் பெயர்ந்த   நாடுகளில்   வானொலி   ஊடகங்களில்  சிறப்பாக   பணியாற்றி   வருகின்றனர்.

யுனிசெப்    நிறுவனத்திலும்   பணியாற்றியுள்ள   காவலூர்  ராசதுரையின் படைப்புக்கள் - நாடகமாக - தொலைக்காட்சி   நாடகமாக - சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளன.

கலங்கல்    என்ற   தொலைக்காட்சி   நாடகம்  -  இலங்கை   மலையக தோட்டத்    தொழிலாளர்களின்   வாழ்வைப்   பின்னணியாகக் கொண்டது.

வீடு  யாருக்கு?  - என்ற   நாவல்   மேடை நாடகமாகியுள்ளது.

யாழ்ப்பாண      கலாசாரத்தை    பிரதிபலித்த    பொன்மணி    திரைப்படம்   பல விமர்சகர்களால் - மும்மொழிகளிலும்    விமர்சிக்கப்பட்டிருக்கிறது.   சர்வதேச ரீதியாக   நடைபெற்ற   பல   திரைப்பட  விழாக்களில்    திரையிடப்பட்ட   ஒரே ஒரு   ஈழத்தமிழ்ப்படம்   பொன்மணி  என்பது   குறிப்பிடத்தகுந்தது.

SCRIPT NET எனப்படும்  பிரித்தானிய  தொண்டு  நிறுவனத்தால்   வளர்முக நாடுகளில்  குறுந்திரைப்படத்   தயாரிப்புத்துறைக்கு   ஊக்கமும்   ஆதரவும் அளிக்கப்பட்ட    வேளையில் - சிறந்த   திரைக்கதைச்   சுவடிகளை   தேர்வு செய்யும்   குழுவில்   காவலூர்   ராசதுரை   அங்கம்   வகித்தார்.   மேற்படி  SCRIPT NET  இன்  உதவியுடன்   தயாரிக்கப்பட்ட    சில  குறும்படங்கள் -    2006 ஆம்   ஆண்டு    மெல்பனில்   நடந்த    எழுத்தாளர்   விழாவில் காண்பிக்கப்பட்டது.

இலங்கை   கலாசார   அமைச்சின்   கீழ்  இயங்கிய   கலாசாரப்பேரவையில் - சிறந்த   நாடகங்களை -   சிறந்த  நாடகப்பிரதிகளை  தேர்வு  செய்யும் குழுவிலும்   காவலூர் ராசதுரை   அங்கம்   வகித்துள்ளார்.

பல்துறை   ஆற்றல்   மிக்க  இவர் - குழந்தை  ஒரு  தெய்வம் -   ஒரு  வகை உறவு   ஆகிய   கதைத்   தொகுதிகளையும்   வீடு  யாருக்கு?  என்ற குறுநாவலையும் -   விளம்பரத்துறை  தோற்றம் -  வளர்ச்சி -  வீச்சு - ஆதிக்கம்   என்னும்   நூலையும்   வெளியிட்டுள்ளார்.

காவலூரின்   மகன்   நவீனன்   ராசதுரை   தந்தையின்  சில  கதைகளை  A Prophet Unhonoured  என்னும்  பெயரில்   ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து வெளியிட்டார்.

2007 ஆம்   ஆண்டு   காவலூர்  ராசதுரைக்கு  75  வயது  பிறந்ததும்  அவரது பணிகளை   பாராட்டி    கௌரவிப்பதற்காக   மெல்பனில்   அந்த   ஆண்டு   நடந்த எழுத்தாளர்   விழாவுக்கு   அழைத்திருந்தோம்.

விழாவின்   காலை   அமர்வில்   நடந்த   இலக்கிய   கருத்தரங்கில் ஆர்வமுடன்   கலந்துகொண்டார்.  மாலையில்   நாம்  இரவு  நிகழ்ச்சிக்கு தயாரான வேளையில்   எதிர்பாராதவிதமாக  சுகவீனமுற்றார்.

சங்கத்தின்    செயற்குழுவிலிருந்த    நண்பர்  அல்லமதேவன்   மெல்பன் ஓஸ்டின்   மருத்துவமனையில்   பணியாற்றுபவர்.   உடனடியாக   அவருடைய   உதவியுடன்   காவலூரை    மருத்துவமனையில் அனுமதித்தோம்.

இரவு   நிகழ்ச்சியில்  அவருக்குரிய   விருதுக்கான   உரையை   சட்டத்தரணி ரவீந்திரன்  சமர்ப்பித்தார்.   மருத்துவர்   ஈஸ்வரன்   கணபதிப்பிள்ளை குறிப்பிட்ட    விருதை   காவலூரின்  சார்பில்  பெற்றுக்கொண்டார்.

காவலூர்   மறுநாள்   மருத்துவமனையிலிருந்து   அழைத்துவரப்பட்டார்.   அன்று   மாலையில்   அவரை  எழுத்தாளர்    எஸ்.பொன்னுத்துரையுடன் சிட்னிக்கு     ரயிலேற்றிவிட்டேன்.

சில  நாட்களின்   பின்னர்   சிட்னிக்குச்சென்று   காவலூரின்   மனைவி மக்கள்   மருமக்கள்  மற்றும்  பேரப்பிள்ளைகள்  ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள்   கலைஞர்கள்   கலந்துகொண்ட   ஒன்று  கூடல்   நிகழ்ச்சியை   ஒழுங்குசெய்து   மீண்டும்   காவலூரை   பாரட்டி கௌரவித்தோம்.

கவிஞர்   அம்பி   காவலூருக்கு   குறிப்பிட்ட  விருதினை   வழங்கினார். இந்தத்தகவல்களை   இங்கு   பதிவுசெய்வதற்கு   அடிப்படையாகவிருக்கும் காரணம்   தெளிவானது.

முன்னுதாரணமான  பயனுள்ள   வாழ்வை   வாழ்ந்த   ஒருவரை   அவர் வாழும்    காலத்திலேயே   இனம்  கண்டு   நாம்  கொண்டாடவேண்டும்.

அவ்வாறு   எம்மால்   கொண்டாடப்பட்ட   காவலூர்  ராசதுரை  தற்பொழுது  ஒரு  முதியோர்   பராமரிப்பு   நிலையத்தில்  -  தனது  முகத்திலே எந்தச்சலனத்தையும்   காண்பிக்காமல்   எனது   முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருடன்   சற்று   உரத்த   குரலில்   பேசினேன்.   எனது  கரத்தை இறுகப்பற்றியவாறு    முகம்மலர்ந்தார்.  சில   செய்திகளை   சொன்னபொழுது தனது   இடது   கரத்தினால்   நெற்றியையும்   கண்களையும்   மூடிக்கொண்டார்.

நண்பர்   சுந்தரதாஸ்   அருகே   தலைகுனிந்தவாறு  எனது  பேச்சை செவிமடுத்தவாறு  காவலூரையே   வைத்த   கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு   நின்றார்.

நாம்தான்   வந்து   பார்த்துவிட்டுச்சென்றோம்   என்பதற்கு   அடையாளமாக ஒரு   காகிதத்தில்   காவலூர்   சுகம்பெறுவதற்கு   பிரார்த்திப்பதாக    எழுதி  சுவரிலிருந்த    வெண்பலகையில்   ஒட்டிவிட்டு    விடைபெற்றோம்.

அந்த   முதியோர்   பராமரிப்பு  நிலையத்தை   விட்டு  வெளியே  வந்தபொழுது  மனதில்  இனம்புரியாத  பாரம்  ஏறியிருந்தது.   சில நிமிடங்கள் எதுவும்   பேசாமல்   மௌனமாக   கார்   தரிப்பிடத்தை  நோக்கி   நடந்தேன்.  எனது   ஆழ்ந்த   மௌனத்தை   கலைப்பதற்காக   எனது   தோள் மீது  கரம்வைத்து   நாமெல்லாம்   இனிமேல்   செல்லவிருக்கும்    பாதையைத்தான்   காவலூர்    கடந்து  செல்கிறார்    எனச்சொன்னார்  சுந்தரதாஸ்.
                         
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R