முனை 1

 -தேவகாந்தன்-   நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில்  தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம். மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு  காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத  அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன.  யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பதற்கான அச்சொட்டான காலமாகவிருந்தது அது. அதை அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளின் ஆரம்பகாலம் என்கலாம்.  கிடுகு வேலிக் கலாசாரமென்பது மாற்றங்களை உட்புக விடாததும், மரபின் இறுக்கங்களைத் தளர விடாததுமான வாழ்நிலைமையை முப்புற வேலிகளைக்கொண்டு உறுதியாக்கி அங்கே கட்டப்பட்டிருந்தது.

வேலிகள் அச்சறுக்கையாய் இருந்த அளவுக்கு அங்கே வீடுகள் செழிப்பாய் இருந்தன என்பது என் கண்கண்ட நிஜம். வேலிகள் மனங்களைக் குறுக்கிக் கிடந்தன. அதேவேளை வீடுகளின் செல்வங்களைப் பெருக்கி வைத்தன. அடுத்தடுத்த வீடுகளின் ஆடு மாடுகள் மட்டுமில்லை, கோழிகள்கூட தம் வளவுக்குள் வந்துவிடாதபடி பொற்பற்றை அலம்பல் வாங்கி வேலி அடைத்துவைத்தவர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். அடுத்த வீட்டுக் கோழி தன் வளவுக்குள் வந்ததால் ஏச்சும் பேச்சுமாய் பின்னர் சண்டைகளில் முடிந்த சம்பவங்களையும் நான் அறிவேன். வேலிக்கப்புறமாய் நின்றிருந்த அடுத்த வளவுப் பனைமரத்தோலை தன் வளவுக்குள் விழுந்ததால் வழக்குகளே நடந்ததை பெரியவர்களின் கதைகளில் என்னால் கவனமாக முடிந்திருக்கிறது.

இத்தனை இருந்தாலும், வேலிகள் மறுக்க முடியாத ஒரு நன்மையைச் செய்தன என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது. அவை மண்ணரிப்பைத் தடுத்தன. அவ்வவ் வளவுகளின் பசளைகளும், மண்ணின் கனிம வளங்களும் மழையில் அடித்துச் செல்லப்பட்டு ஒழுங்கைகளில் ஓடி, வாய்க்கால்களில் இறங்கி, வயல்களில் பரந்து, சிறுகடலில் சேர்ந்துவிடாது தடுக்கப்பட்டதை ஒரு பெருநன்மையாய் நான் காண்கிறேன்.

மக்கித் தெருவின் கிழக்குப் புறத்தில் மானாவளை வயல். அதனை அணைத்து நெடுங்கிடையாய்க் கிடக்கிறது பருத்தித்துறையிலிருந்து சாவகச்சேரிக்கு பஸ் ஓடத் தொடங்கியிருந்த கல் தெரு. பஸ் ஓடினால் பனையளவு உயரத்துக்கு மக்கி அடித்தெழும்பும். அது அடங்க அரை மணி நேரமாவது ஆகும்.

கிழக்குப் புறத் தரைவையிலிருந்து வலிந்த சோளகம் புரண்டெழுந்து வந்தால் மானாவளை வயல் கடந்து வருகையில் அங்குள்ள புழுதியையும் உள்வாங்கிக்கொண்டு வயல்பாதையூடு வீச்சுடன் வெளிப்படுகையில் எதிர்ப்படுவது மக்கித் தெரு. அடுக்களையில் புகைபோக்கிபோல அது. இருந்தாலும் அங்கிருந்த இரண்டொரு கல்வீடுகளில்கூட புகைபோக்கி இருக்கவில்லை. அத்தனைக்கு அது பழமை. அத்தனைக்கு அது கிராமம்.

அந்த மக்கித் தெருவில் அது அடித்துவரும் அழகை எப்போதும் எங்கேயும் காணமுடிந்திராது. புழுதி மேகம் போல் அப்போது உருக்கொண்டிருக்கும். பஸ் சென்ற நேரமாக அது இருந்தால் தெரு முகப்பில் வரும் உருவம்கூட மறைந்துபோயிருக்கும். சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்கு காலை, மதியம், மாலையென மூன்று முறை பஸ் வந்துசெல்லும். பஸ் நின்று பின் இரைந்து சென்ற சத்தத்தில், யார் பஸ்ஸைவிட்டு இறங்கிவருவது என்பதை விடுப்புப் பார்ப்பது பலருக்கும் அங்கே ஒரு பொழுதுபோக்கு. அந்த விடுப்புப் பார்க்கும் ஆவல் உந்த வாசலுக்கு ஓடிவந்த நான் மக்கித் தெருவின் கிழக்கு முனையைப் பார்த்தபடி அந்த மதியமணுகும் வேளையில் நின்றுகொண்டிருக்கிறேன்.

வலிந்த சோளகம் புழுதியை அடித்துக்கொண்டு மேற்கு நோக்கி ஓடிவருகிறது. புகார் கீழே கிடந்து அசைவதுபோல ஒரு திரை, அது என்னைக் கடந்துசென்றபின் நான் கண்களைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்வையைக் குவிக்கிறேன்.

யாரோ வருகிறார்கள்தான். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளைச் சால்வையுடன் ஓர் உயரமான மனிதர்.  அவரை எனக்குத் தெரியும். நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வந்து சாத்திராதி வி~யங்களைப் பேசிவிட்டு, அம்மாவின் ஜாதகக் குறிப்பை அல்லது கைரேகையைப் பார்த்து பலன் சொல்லிவிட்டு, இல்லாவிட்டால் ஒரு ஜொக்கு நிறைந்த ஆட்டுப்பால் கோப்பியைக் குடித்துவிட்டுச் செல்கிற சாத்திரிதான் அது.

நான் அம்மாவை அழைத்துச் சொல்கிறேன்: “அம்மா! சாத்திரியார் வாறார்.”

“வரட்டுக்கும், அதுக்கேன் நீ தந்தி குடுக்கிறாய்?”

அம்மாவின் அசட்டை என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

அம்மாவுக்கு சாத்திரிமேல் ஒரு காய்தல் ஏறியிருக்கிறது என நான் எண்ணி முடிக்கையில், “தங்கச்சி அருளுறாப்போல கிடக்கு, ஏணையை வந்து ஆட்டிவிடு” என்கிறாள் அம்மா.

நான் விறாந்தையில் குசினிப் பக்கமாய்த் தொங்கிய ஏணையை சென்று ஆட்டுகிறேன். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்த தங்கச்சி ஏணைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறாள். சில வாரங்களாகத்தான் அம்மா வீட்டு வேலைகளை முழுதாகச் செய்ய ஆரம்பித்ததும். அவளது நொய்த உடம்பு தேற அந்தப் பேற்றில் நீண்டகாலமாகிவிட்டதென்பதை, வயதுபோன பெண்கள் வந்து பேசிவிட்டுப் போகையில் உதிர்க்கும் அனுதாபப் பேச்சுக்களில் நான் கிரகித்திருந்தேன். அந்தக் களைப்புக்கூட அம்மாவிடத்தில் ஒரு எரிச்சல் சாத்திரிமேல் கிளம்ப காரணமாய் இருந்திருக்கலாம்.

“அம்மா!” வாசலில் சாத்திரியின் அழைப்புக் குரல் கேட்கிறது.

குசினிக்குப் பக்கத்தில் வாழை. அதற்குப் பக்கத்தில்தான் அட்டாளை. கழுவிய பாத்திரங்களைக் கவிழ்த்துக் காயவைக்கிற இடம். வாழைக்கு முன்னால் கிணற்றில் அள்ளிவந்திருந்த வாளித் தண்ணீரில் அம்மா சட்டி பானைகளைத் தேய்த்துக்கொண்டிருந்தபடியே வாசலை நிமிர்ந்து பார்க்கிறாள்.

அவளது முகத்திலிருந்த கோபம் அல்லது அசட்டை எதுவோ கொஞ்சம் மாறியிருக்கிறது. கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு குமிழ்ந்துகொண்டிருக்கிறது. “வாரும், சாத்திரியார்” என்கிறாள். “ராசா, பாயை எடுத்து திண்ணையில போட்டுவிடு.”

நான் அம்மாவைப் பார்க்கிறேன். எப்படி அவளது அசட்டை அந்தளவு சீக்கிரம் மாறியது என்ற ஆச்சரியம் எனக்கு. இருந்தும் எதுவும் விளங்காமலே விருந்தினர் வந்தால் அமர்வதற்கென வாங்கிவைத்திருந்த மட்டக்கிளப்புப் பன்பாயை எடுத்து வந்து நடுக்கொள்ள விரித்துவிடுகிறேன் விறாந்தையில்.

விறாந்தையில் ஏறிய சாத்திரி முதலில் ஏணையைத் திறந்து குழந்தையைப் பார்த்துவிட்டு, பாயை விறாந்தை ஒட்டுவரை நகர்த்திப்போட்டு அம்மாவைப் பார்த்தபடி அமர்கிறார்.

அம்மா தன் கை வேலையை அப்போது முடித்துக்கொண்டு அவருடன் வந்து பேசமாட்டாளென்பதை எப்படியோ அவர் புரிந்திருக்கிறார். சாத்திரி ஏணையை விரித்து குழந்தையைப் பார்த்த பின்னால் அம்மாவின் முகம் முன்னரைவிட பிரகாசமாக, ஒரு கேலியை உள்ளடக்கிக்கொண்டு, விகசித்திருக்கிறது.

சாத்திரிக்கு அந்தக் கேலி தெரிந்திருக்க முடியும். காரணமும் புரிந்திருக்கலாம். ஆயினும் அந்த மலர்ந்த முகத்தில் ஒரு கீற்றளவு மாற்றமில்லை. எவரையும் வசியவைக்கும் பேச்சுண்டு சாத்திரிக்கு. தோற்றமும்தான். உயர்ந்த சிவந்த உருவம். நன்கு எண்ணெய் பூசி பின்னால் படிய வாரிவிடப்பட்ட தலைமயிர். ஏறு நெற்றியில் கீற்றுகளாக இழுத்த திருநீறு. நெற்றி மையத்தில் சந்தனப் பொட்டு. அதன் நடுவில் ஒரு குங்குமப் புள்ளி. எப்போதும் வெற்றிலை அதக்கிய வாய். அதனால் என்றும் சிவந்த சொண்டுகள். அகன்ற கரையுள்ள இந்திய வேட்டி. அதே நிறத்தில் முழுக்கைச் சட்டை. தோளில் சால்வை.

“கொழந்தை பொறந்து எத்தினை நாளாச்சும்மா?” சாத்திரி அம்மாவைக் கேட்கிறார்.

அம்மா தன் கவனம் மாறாமலே சட்டி, பானை, பேணி, கேத்தில்களை சாம்பல்போட்டு விளக்கிக்கொண்டிருக்கிறாள். பின் ஒரு கணத்தில் நிறுத்திவிட்டு நிமிர்ந்து சாத்திரியை நேருக்குநேர் பார்க்கிறாள். அவளது கண்களில் இன்னும் கேந்தி ஒளிர்கிறது. பிறகு சொல்கிறாள்: “பிள்ளை பிறந்து இப்ப ரண்டு மாசம் முடியுது. ஆனால் நீர் சொன்ன மாதிரி ஆம்பிளப்பிள்ளையில்லை, சாத்திரியார், பொம்பிளைப்பிள்ளைதான்.”

சாத்திரியிடமிருந்து பேச்சில்லை சிறிதுநேரம். ஒருவாறு பின்னர் சமாளித்துக்கொண்டு, “அதனால என்ன, அம்மா? பொண்ணாப் பொறந்தாலும் அது ஆண்மூச்சோடதான் பொறந்திருக்கும். இருந்து பாருங்க, புள்ள உங்களுக்கு இன்னொரு ஆம்பிளப் புள்ளயாத்தான் இருப்பா” என்கிறார்.

“எல்லா இடத்திலயும் சொல்லுறமாதிரி எனக்கும் கதை விடாதயும். இந்த வி~யத்தில நீர் சொன்ன சாத்திரம் பிழைச்சுப் போச்சு” என்று அம்மா திட்டவட்டமாய்ச் சொல்லிச் சிரிக்கிறாள்.

பக்கென்று மறைந்தது சாத்திரியின் முகத்தில் கழற்றாத கர்ண கவசமாய் இருந்த புன்னகை.

தன் வேலையில் கவனமான அம்மா, மறுபடி நிமிர்ந்து சாத்திரியைப் பார்த்துவிட்டு அந்த அவரது சிதைவில் சிறிது அதிர்கிறாள். அந்த வித்துவ கர்வத்தின் பங்கத்தை ஐந்தாம் வகுப்புவரையே படித்த அந்த மனிதியினால் எப்படி அந்தளவு சுளுவாகப் புரிந்திருக்க முடியுமோ? சிறிதுநேரத்தில், “எனக்குச் சந்தோ~ம்தான் பொம்பிளப்பிள்ளை பிறந்தது. பொம்பிளயாப் பிறக்கவேணுமெண்டுதான் நானும் கல்லெடுத்த கோயிலெல்லாம் கையெடுத்து நிண்டனான். வயித்து அசைவிலயே என்ன பிள்ளையெண்டு எனக்குத் தெரிஞ்சிட்டுது. எண்டாலும் உம்மையும் கேட்டு நிச்சயப்படுவமேயெண்டுதான் நீர் போன முறை வந்திருக்கேக்க என்ன பிள்ளை பிறக்குமெண்டு கேட்டன். நீரும் ஆம்பிளப் பிள்ளைதானெண்டு நிச்சயமாய்ச் சொல்லியிட்டீர். எனக்கு உள்ளுக்க கொஞ்சம் மனவருத்தமாய் இருந்துது. சரி, கன நாளில்லைத்தானே, பிறந்தாப் பிறகு பாப்பமெண்டிருந்தன். ஆஸ்பத்திரியிலதான் பிள்ளை பிறந்தது. உவர் கூடநிண்டவர். நான் கண் முழிச்சவுடனை என்ன பிள்ளை எண்டதைத்தான் முதல் கேட்டது. பொம்பிளப்பிள்ளையெண்டு  சொன்னார். உடனடியாய் உம்மைத்தான் நினைச்சன். சரி, விடும். இப்ப ஆர் வெண்டது, ஆர் தோற்றது எண்ட கதை என்னத்துக்கு? என்ரை ஆசை நிறைவேறியிட்டுது, அதுதான் எனக்கு முக்கியம். அது ஆண் மூச்சாயிருந்தாலும் சரி, பெண் மூச்சாயிருந்தாலும் சரி” என்று நிலைமையைச் சமாளித்தாள். சாத்திரி கொஞ்சம் தெளிந்தார்.

சாத்திரி வீட்டுக்கு வந்தால் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் பாதியில் விட்டுவிட்டு ஓடிவருகிறவள் அம்மா. அன்றைக்கு முடித்துவிட்டுத்தான் வந்தாள். அப்படியிருந்தும் அவள்தான் கோப்பி போட்டுக் கொடுத்தது. அதில் சாத்திரி கொஞ்சம் மனச் சமாதானம் அடைந்திருக்க முடியும்.

சிறிதுநேரத்தில் சாத்திரி கேட்கிறார்: “மகன் இன்னிக்கு பள்ளிக்கு போகலியோ?”

“எங்க, சாத்திரியார்? போன கிழமை முழுக்க படுத்த படுக்கை. நெருப்புக் காச்சல்மாதிரி சரியான காச்சல். அவரும் ரண்டுநாள் வேலைக்குப் போகாமல் பக்கத்திலயே நிண்டார். சின்னாஸ்பத்திரியில ஏலாதெண்டு பிறகு யாழ்ப்பாணத்துக்கு பியேசு டாக்குத்தரிட்ட கொண்டுபோய்க் காட்டித்தான் சுகமாச்சு. அதுவும் ஒரு மாயம்போலதான் நடந்துது. இதைப்பற்றி உம்மிட்டத்தான் கேக்கவேணுமிண்டு இருந்தனான். பாரும், பிள்ளை இன்னும் காச்சல் மாறாமல் உழத்திக்கொண்டு கிடக்கிது. போட்ட ஊசிக்கு கொஞ்சம்கூட சுகத்தைக் காணேல்ல. நான் பக்கத்தில படுத்திருக்கிறன். நடுச்சாமமிருக்கும். அப்பதான் கண்ணயந்திருக்கிறன்போல. அப்ப ஒரு கனவு. ராசா எங்கயோ நிண்டு விளையாடுறான். எதோ கனக்க மிருகங்கள் பிள்ளையை மிதிச்சு மோதியிடுறமெண்டு ஓடிவருகுதுகள். ‘ஐயோ, என்ர பிள்ளை!’யெண்டு  நான் கத்துறன். அப்ப திடுமன ஒரு ஆனை வந்து தும்பிக்கையிலை ஒரு கம்பை வைச்சு ஆட்டி ஆட்டி அந்த மிருகங்களைக் கலைக்குது. நான் டக்கெண்டு கண்முழிச்சுப் பாத்தா, பிள்ளை உழத்திறதெல்லாம் நிண்டு பேசாமல் கிடக்கு. மூச்சு சீராய் வந்துகொண்டிருக்கு. முகமெல்லாம் வேர்வை. நான் நிமிந்து சீலைத் தலைப்பாலை வேர்வையைத் துடைச்சுவிடவெண்டு நெத்தியைத் தொட்டா… நெத்தி பச்சைத் தண்ணிமாதிரிக் குளிராய்க் கிடக்கு. நான் நெஞ்சு, கமக்கட்டு, கழுத்து எண்டு எல்லா இடமும்; தொட்டுத் தொட்டுத் பாக்கிறன். காச்சல் இல்லை.”

சாத்திரி வாய் நிறைய அட்டகாசமாய்ச் சிரிக்கிறார். “நான் உங்களுக்கு சொல்லலியா, உங்களுக்கு வாலாயமான சாமி கணபதிதான்னு. அந்தச் சாமிதான் ஆனை உருவத்தில வந்து இப்ப உங்க மகனைக் காப்பாத்தியிருக்கு.”

“மெய்தான் இருக்கும், சாத்திரியார்” என்று அம்மா பரவசப்பட்டு கண்கலங்குகிறாள்.

முருகா…. முருகாவென்று வாய் நிறையச் சொல்லுகிறவள் அம்மா. எந்த இட்டல் இடைஞ்சலுக்கும் அவளுக்கு ‘அப்பனே முருகா!’ என்றுதான் வரும். அன்றைக்கு அவள் பிள்ளையாரப்பா என்றும் சொல்லத் தொடங்கினாள்.

அந்த உரையாடற் கணத்தில் நான் எங்கிருந்தேன் என்பது எனக்கு இப்போது ஞாபகத்திலில்லை. அங்கனதான் எங்ஙனயோ ஏதாவது செய்துகொண்டு நின்றிருப்பேன். ஆனால் அந்த உரையாடல் ஒரு சொற்சித்திரமாயும், அம்மா யானை கம்பை ஆட்டிய விதத்தைக் காட்டியமை ஒரு அழியாச் சித்திரமாயும் இன்றும் இருந்துகொண்டிருக்கின்றன.

பிள்ளையாரையும் யானையையும் அன்று மிக அணுக்கமாக என் மனம் வரித்திருந்தது. புத்தகங்களில் யானையை மிகவும் விருப்போடு பார்க்க ஆரம்பித்தேன்.

யானையும், கடவுளும் என் மனத்தில் பின்னமற இணைந்திருந்தன.

அதனால்தான்போலும் சாத்திரி கடைசியாக எங்கள் வீடு வந்துசென்ற மூன்று நான்கு மாதங்களின் பின்னால் தோன்றிய என் கனவிலும் ஒரு யானை வந்திருந்தது. அந்த யானையும் தும்பிக்கையில் ஒரு தடியை வைத்துச் சுழற்றியபடி நின்றிருந்தது. இது கனவுதானா அல்லது அம்மாவின் சொற்சித்திரத்தின் மீள் நினைப்பா என்று இப்போது எனக்கு ஐயமுண்டு. இது கனவெனில் இதுவே என் முதல் கனவு.

இதையே நான் மறுநாள் காலை அம்மாவிடம் இவ்வண்ணம் சொல்லியிருந்தேன்: ‘ராத்திரிக் கனவில பிள்ளையாரப்பாவைக் கண்டனம்மா.’

‘என்னடா, பிள்ளையாரப்பாவைக் கண்டியோ?’ அம்மா வியந்தாள்.

‘ஓமம்மா. தும்பிக்கையில தடியை வைச்சு ஆட்டிக்கொண்டு நிண்டாரம்மா.’

நானுமே ஒரு கடவுள்க் கனவைக் கண்டதாய் அம்மா அப்போது பக்தி பரவசமாகியிருக்க முடியும். தான் சொன்னதே எனக்கு கனவாகியதென்பதை அவள் யோசித்திருக்க முடியாது.

அவள் அன்றிலிருந்து பிள்ளையார் சதுர்த்திபோன்ற விரதங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்.

பற்றைகளைத் தவிர சிறுகாடுகூட கண்டிராதிருந்த எனக்கு யானையைக் காண்பதற்காகவே காடு பார்க்கிற ஆசை உருவாகியிருக்க வேண்டும். யானை ஒரு காட்டு மிருகம் என்பதைத் தவிர வேறு விபரம் தெரிந்திருக்க முடியாத வயதுதான் அப்போது எனக்கு.   முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முந்திய வரு~ம் அரிவரி படித்துக்கொண்டிருந்தபோதுதான் நான் பால் குடியை நிறுத்தியதும். ‘இதென்ன, வெக்கங்கெட்ட வேலை? இந்த இளந்தாரி வயசில போய்ப் பால் குடிச்சுக்கொண்டு’ என்று பார்த்தவர்கள் கேலி செய்யச்செய்ய பள்ளி முடிந்து மதியத்தில் ஓடி வந்து அம்மாவை இழுத்துப்போய் இருத்தி நான் தாய் முலை உண்டிருக்கிறேன்.

ஓளவையார் சினிமாவில்தான் நான் முதன்முதலாக அசையும் யானை பார்த்தது. அப்போதும் அந்தப் பெருமிருகம் எனக்கு ‘ஆனை’தான். நான் பெரியவனாக வளர்ந்து மிருகக் காட்சி சாலையில் பார்க்கும்வரை எனக்கு யானை அசையும் படமாகவே இருந்தது. அப்போது ‘ஆனை’ என்பது ‘யானை’ ஆகியிருந்தது.

மிகப் பின்னாலேதான் காட்டானையொன்றை நான் நேரில் கண்டேன்.

ஒருவகையில் சொல் ஒன்று என்னில் ஏறிநின்று செய்த மிகப்பெரும் விளையாட்டுகளில் ஒன்றாக, முதலாவதாக, இதைக் கொள்ள முடியும்.

(முனை 2 தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R