(1)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?  நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும். 

தென்னிந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாட்டில் தான் கர்நாடக சங்கீத உபாசகர்கள் அதிகம். தஞ்சை அத்தகைய வளம் கொண்டது. மற்ற மாநிலத்தவர் சென்னை வந்து தம் வித்வத்தைக் காட்டினால் தான் அங்கீகாரம் பெறுவர் என்று சொல்லப்பட்டது. அது அப்படித் தான் இருந்ததும் கூட. இருந்தும் தஞ்சையில் வாழ்ந்த ஒரு மகத்தான வாக்யேக்காரரை, அவரது சிஷ்ய பரம்பரை இங்கு தான் சுற்றியிருந்த தில்லை ஸ்தானம், உமையாள்புரம் போன்ற கிராமங்களில் வாழ்ந்திருந்தாலும் தியாகராஜருக்கு ஒரு தேவதாசி பங்களூரிலிருந்து வரவேண்டியிருந்தது அவரது நினைவுகளைப் புதுப்பிக்க, அச்சுடர் மீண்டும் கொழுந்து விட்டெரிய, இப்படித்தான் என் மனது சலனித்துக் கொண்டிருக்கும்.  அதிகம் ஆச்சரியப் படத் தேவையில்லை.தியாகராஜர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் மறைந்த இன்னொரு தியாகராஜர் சமாதியை திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் கேட்பாரற்று புதர் மண்டிக்கிடக்கும் புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். இந்த தியாகராஜர் வாக்யேயக்காரர் இல்லை. சினிமா பாடகர் தான். என்றாலும், குரல் கேட்டதுமே நின்று முழுதுமாகக் கேட்கத் தூண்டும் குரல், பாட்டு.  மறைந்து அறுபது வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஆகிறது. காலம் மாறிவிட்டது. “உன்னை எவண்டி பெத்தான், பெத்தான், அவன் என் முன்னாலே வந்தா செத்தான் செத்தான்,”  “கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லே ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா?” வகையறா  கீர்த்தனைகளும், வாக்யேயக்காரர்களும்  மக்கள் மனதில் ஆட்சி செய்யும் காலத்தில். அப்படித்தான் இருக்கும். புதர் தான் மண்டிப் போகும்.  உ.வே.சா வாழ்ந்த இல்லம் உருத்தெரியாது பாழாகிக்கிடக்க அங்கு ”அவர்  தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற ஒரு மண்டபம்” எழுப்பும் சிந்தனைகள் ஆட்சி செய்யும் காலம். நாகரத்தினம்மாவின் ஆரம்பங்கள் அப்படி ஒன்றும் பிரகாசமானதல்ல. அவர் நாம் இன்று கொள்ளும் அர்த்தத்தில், தேவதாசியாக புகழும் செல்வமும் பெறக்கூடியவரும் அல்லர். சிகப்புத்தான். ஆனால் குள்ளமும் பருமனுமான தேகவாகு கொண்டவர். அதெல்லாம் போக குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு இடத்தில் நிலைக்க விடாது விரட்டி அடிக்கப்பட்டவர். 13 வயதில் தாயையும் இழந்தவர். தனித்துவிடப்பட்ட ஒரு குள்ளமும் பருமனுமான ஒரு பெண் பெற்ற வித்வத்தையும், சாதித்த சாதனைகளையும் தனக்காக்கிக் கொள்ள  முடிந்தது என்பது வியப்புதான்.

நாகரத்தினம்மா எந்தக் கோவிலுக்கும் தேவதாசியாக பொட்டுக்கட்டப்பட்டவர் இல்லை. கர்னாடகாவில் நஞ்சன் கூடு கோவிலைச் சார்ந்த தேவதாசி புட்டலக்ஷ்மிக்கு 1878-ம் வருடம் மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம்மா. அப்பா சுப்பண்ணா என்ற ஒரு பிராமணர். ஆனால் ஆதரித்தவர் சுப்பாராவ் என்ற வேறொருவர். அவர் புட்டலக்ஷ்மியின் சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டு விரட்டி அடித்தார் அப்போது ஆதரவளித்தவர் மைசூர் தர்பாரில் சங்கீத வித்வானாகத் திகழ்ந்த கிரிபட்ட திம்மய்யா. அவர் நாகரத்தினத்துக்கு சங்கீத சிக்ஷை மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்திலும் திறமை பெறச் செய்தார். 5 வயதிலேயே நாகரத்தினத்தின் தேர்ச்சி கவனத்தைக் கவர்ந்தது. சங்கீத பயிற்சி தந்தது மைசூர் யக்ஷகான கலைஞரின் மகனும் திம்மய்யாவின் சிஷ்யனுமான பிடாரம் கிருஷ்ணப்பா. இங்கும் திம்மப்பாவுக்கு நாகரத்தினத்தின் வளர்ச்சி வேகம் தனக்கு ஆபத்தாகுமோ என்ற பயத்தில் புட்டலக்ஷ்மியை ”போ, போய் எங்காவது சாணி பொறுக்கிப் பிழை” என்று விரட்டச் செய்திருக்கிறது அப்போது புட்டலக்ஷ்மி தனக்குள் சபதம் செய்துகொள்கிறாள் ” மைசூர் மகாராஜாவே அழைத்து கௌரவிக்கச் செய்கிறேன்” இனி இங்கு யாரையும் அண்டிப் பயனில்லை என் தீர்மானித்து காஞ்சீபுரத்தில் இருக்கும் தன் சினேகிதி தனகோடியைத் தஞ்சம் அடைகிறார். தனகோடியும் அவர் சகோதரி காமாட்சியும் சியாமா சாஸ்திரியின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சங்கீதத்தில் புகழ் பெற்றவர்கள். பல்லவி பாடும் பெண்மணி என்ற சிறப்பு வேறு. ஆனால் தனகோடி அப்போது மிக வறிய நிலையில் இருந்தவர். அதிக நாள் அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாமென திரும்ப மைசூருக்கே திரும்பி அங்கு வயலின் வாசிக்கும்  தன் சகோதரர் வெங்கட சாமப்பாவிடம் தஞ்சம் அடைகிறார். அவர் நாகரத்தினத்துக்கு வயலின் பயிற்சி அளித்துப் பின் முனுசாமப்பா என்னும் வயலின் வித்வானிடம் அனுப்பினார்.  முனுசாமப்பா தியாகராஜ சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். அவரிடம் நாகரத்தினம்மா கற்றது வயலின் அல்ல. வாய்ப்பாட்டு. அங்கும் அவருக்கு முனுசாமப்பாவின் மருமகள் சந்திரவதனா சேர்ந்து பாடத்துணையானாள்.  புட்ட லக்ஷ்மியின் சபதம் ஒன்று உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கிறதே. தன் பெண்ணுக்கு தெலுங்கு, ஆங்கிலம், புராணங்கள் இதிகாசம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். மிகுந்த கண்டிப்பும் பிடிவாதமும் திடமனதும் கொண்டவர் புட்ட லக்ஷ்மி  அவ்வளவும் நாகரத்தினம்மாவுக்கும் பிதிரார்ஜிதமாக வந்தடைகிறது. எந்நிலையிலும் தன்னிரக்கம் கொண்டு தன் சுயகௌரவத்தை விட்டவரில்லை.

தன் போராட்டங்களும் மன அழுத்தங்களும், தன் மகளுக்காக பட்ட கஷ்டங்களும் விலை கோரின. காசநோய் பீடித்து தன் அந்திம நாள் நெருங்கியதை உணர்ந்த புட்ட லக்ஷ்மிக்கு, தன் மகளை எல்லா கலைகளிலும் கல்வியிலும் தேர்ச்சி பெற்று தன் சபதத்தை  நிறைவேற்றும் தகுதி பெற்றவளாக்கியதில் திருப்தி. முனுசாமப்பாவிடம் தன் மறைவிற்குப் பிறகு தன் சபதம் நிறைவேற உதவும்படி கேட்டுக்கொள்கிறாள்.  அவரும் வெங்கடஸாமப்பாவின் பிரத்யேகத் திட்டங்களை உணர்ந்தவர் போல, நாகரத்தினத்தை வீணை சேஷண்ணாவிடம் அனுப்புகிறார். வீணை தான் என்றில்லை. சகலகலா வல்லவர், ஐரோப்பிய வாத்தியங்களையும் சேர்த்து. சேஷண்ணா தன் வீட்டிலேயே நாகரத்தினத்தின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறார். அது நாகரத்தினம்மாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். சேஷண்ணா மாத்திரம் அல்ல, பிடாரம் கிருஷ்ணப்பா, மைசூர் வாசுதேவாச்சாரியார், சுப்பண்ணா போன்ற பெரிய திக்கஜங்களின் பார்வையும் பாராட்டும் பெறுகிறது. மைசூர் அரண்மனையிலிருந்தும் அழைப்பு வருகிறது.

இந்த சமயத்தில் தான் கோவில்களிலும் அரண்மனையிலும் தேவதாசிகளுக்கு தரப்பட்ட ஆதரவு படிப்படியாக குறைகிறது. ஆனாலும் மைசூரில் நீதிபதியாக இருந்த நரஹரி ராவின் ஆதரவு கிடைக்கிறது. நரஹரி ராவின் மனைவிக்கும் நாகரத்தினம்மா ஆப்த சினேகிதியாகி, குடும்பத்திலேயே ஒன்றாகிறாள். நரஹரி ராவ் அவளுக்காக ஒரு தனி மாளிகையே ஒரு குன்றின் மேல் கட்டிக் கொடுக்கிறார். அந்த இடம் பல சங்கீத வினிகைகளுக்கும் பல வித்வான்கள் அவ்வப்போது கூடும் இடமாகவும் ஆகிறது. இந்த மகிழ்ச்சிகர நாட்கள் அதிகம் நீடிக்கவில்லை. 1902-ல் நரஹரி ராவ் இறந்துவிடவே அடுத்த வருடம் நாகரத்தினம்மா தன் 25- வயதில் சென்னைக்கு குடிபெயர்கிறார்.

சென்னை அப்போது பெரிய செல்வந்தர்களும் சங்கீத வித்வான்களும் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த வித்வாம்சினிகளும் குழுமியிருந்த நகரம். இன்று நாம் போற்றிக் கொண்டாடும் நக்ஷத்திரங்கள், மைலாப்பூர் கௌரி அம்மாள், வீணை தனம், அடிக்கடி வந்து போகும் தனகோடி சகோதரிகள் என அந்த பட்டியல் வெகுவாக நீளும். பெரும்பாலும் ஜார்ஜ் டவுனின் அடுக்கடுக்கான நீண்ட தெருக்களில். வீணை தனத்தின்  அபிமானம் பெற்று அவர் குடும்பத்தில் ஒருவராகிறார் நாகரத்தினம்மா. இருந்தாலும் இப்பெரிய ஆகிருதிகளிடையே புதிதாக வந்த இளம்பெண் நாகரத்தினம்மாவும் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவேண்டுமே. நெருப்புக் குண்டத்தில் குதித்தெழுவது போல என்று சொல்கிறார்  இவ்வரலாற்றை எழுதிய ஸ்ரீராம். பல வித்வான்களின் அறிமுகத்தால் நிறைய கற்றுக்கொள்ளவும் முடிகிறது. பல கச்சேரி வாய்ப்புக்களும் கிட்டுகின்றன். நடனம், பாட்டு, இரண்டும் தான் பின்னர் ஹரி கதாவும் சேரவிருக்கிறது.  முன்னார் சேஷன்ணா வீட்டில் நடந்த கச்சேரியில் வாசுதேவாச்சாரியார் போன்ற பெருந்தலைகள் பாராட்டி எழுதியிருக்கின்றனர். ஆனாலும் கர்நாடக சங்கீத பரிச்சயம் இல்லாத ஹிந்துஸ்தானி பாடகர் விஷ்ணுநாராயண் பட்கண்டே ஏதோ நடக்கிறதே என்று  அழையா விருந்தினராக நுழைந்து ஒர் ஒரத்தில் நின்று கேட்டவரை விரும்பிக் கேட்கச் செய்தது அதுபற்றி பாராட்டி எழுதவும் செய்தது என்றால் நாகரத்தினம்மா எத்தகைய சங்கீதத்தை தன்னுள் வளர்த்திருக்கிறார், அம்மாவின் கண்டிப்பில், அது எத்தகைய பிரகாசம் நிறைந்த எதிர்காலத்தை அவருக்கு தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பட்கண்டே விரிவாகவே எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக ஒரு வரி “ பம்பாய் தாசிகளைப் போல அல்லாமல் இவர் மிகவும் கண்ணியமாக இருந்ததைக் காண முடிந்தது. பாடிய பாடல்கள் எல்லாம் தெய்வஙளைப் பற்றியவை போலும்.” மற்றபடி அவரது இனிமையான குரல், பாவபூர்வமான சங்கீதம் பற்றி யெல்லாம் பாராட்டுகிறார்.

வெகு சீக்கிரம் அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறார். சங்கீத வாய்ப்புகள் குவிகின்றன. ஜார்ஜ் டவுனில் வீடு வாங்குகிறார்.  நகைகளில் ஆடையணிகளில் விருப்பம் வங்கிக் கணக்குகள் பத்திர சேமிப்பு என அவர் செல்வம் விரிகிறது. தன் உரிமைகளை விட்டுக் கொடாதவர். பிடிவாதம் கொண்டவர் என்றும் பெயர் பெறுகிறார். குறவஞ்சி நாட்டியம் கோவிலில் ஆடக்கூடாதென்றால் முற்றத்தில் ஆடுவேன் என்று காவலர் படையோடு தயாராகிறார். இப்படி எத்தனையோ வழக்காடுதலும் உரிமை நிலை நாட்டலுமாக நிறைந்த வாழ்க்கை இன்னும் பல பிரசித்த வழக்காடல் களுக்கும் இட்டுச் செல்கிறது. அவை அவர் வாழ்க்கையில் மாத்திரம் அல்ல. தென்னிந்திய கலை வரலாற்றிலும் தம் சுவடுகளை, தன் தரப்பை, மக்கள் மனதில் பதியாத இன்னொரு கோணத்தை பதிவு செய்தவை.

விஷ்ணு பட்கண்டே இந்த சமூகத்துக்கும் மொழிக்கும், சங்கீதத்துக்கும் அன்னியர். அழையா விருந்தினராக ஏதோ பாட்டு என்று கேட்க வந்தவருக்கு பம்பாய் தேவதாசிகளைப் போல் அல்லாது கண்ணியமானவர், பாட்டின் அர்த்தமும் மொழியும் ராகமும் எதுவென்று தெரியாது, பாட்டின் சப்த ரூபத்தை மாத்திரம் கொண்டே அது பாவரூபம் பெற்றது என்று உணரக் கூடுமானால் வேறு என்ன சொல்லவேண்டும். நாம் நாகரத்தினம்மாவை தேவதாசியாகத் தான் அறிவோம். நமக்குத்தெரிந்த அர்த்தத்தில்.


(2)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -புட்ட லக்ஷ்மி அம்மாள் தன் மகளுக்கு,  எவ்வளவு வெறி என்றே சொல்லக் கூடிய தீவிரத்தில், சங்கீதம், நடனம், இதிகாச புராணங்கள், சமஸ்கிருதம், உட்பட பல மொழிகளிலும் வித்வத்தை ஊட்ட முயற்சித்திருந்தாலும், அதில் ஏதும் குறை இருந்ததில்லை, தன் மரண தருவாயில் தன் சபதத்தை நிறைவேற்றும் தகுதி பெற்றுவிட்டாள் என மனம் நிறைவு பெற்றாலும், நாகரத்தினத்தினுள்ளும் அதே தீவிரமும் கற்கும் உற்சாகமும் இயல்பாகவே இருந்திராவிடில் அவர் பின்னர் சந்திக்க நேர்ந்த சவால்களைச் சந்தித்திருப்பாரா, தேவதாசி குலத்தில் பிறந்து விட்ட காரணத்தால் சமூகத்திலும் தன் ஆணவம் கொண்ட ஆளுமைக்கு கௌரவமும், சங்கீதத்திலும், இலக்கியத்திலும் வித்வத் பெற்றவர்களின் அங்கீகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும், அவர்களை எதிர்க்க நேர்ந்தால் எதிர்த்து நின்று தன் நிலைப்பாட்டை ஸ்தாபித்து வெற்றிப் பெருமிதத்துடன் உலவ முடிந்திருக்குமா என்பது சந்தேகம் தான். புட்ட லக்ஷ்மி தன் மகள் அந்த வித்வத் சபைகளில் பாராட்டு பெறவேண்டும் என்று தான் விரும்பியிருந்தால், அது மட்டுமல்ல, அதற்கும் மேல் தன் மகள் தன்னை ஸ்தாபித்துக்கொள்வாள் என்று கனவு கூட கண்டிருக்க முடியாது.

கன்னடம் தான் நாகரத்தினம்மாளின் தாய் மொழி.  சங்கீதத்தில் தேர்ச்சி பெறும் முயற்சியில், தியாகராஜர் பெற்றுள்ள ஸ்தானத்தின் காரணமாகவும் தான் அதில் பெற்றிருந்த தேர்ச்சி காரணமாகவும் தெலுங்கு மொழியில் பெற்ற தேர்ச்சி, சரி.  ஆனால், அதே தியாகராஜ பக்தி கொண்ட தமிழ் சங்கீத விற்பன்னர்களுக்கு தெலுங்கு அர்த்தம் தெரிந்து தான்  பாடுகிறார்களா, பாடினார்களா?. நாகரத்தினம்மாளே சென்னை வந்து பெற்ற அனுபவத்தில், தமிழ் வித்வான்களிடம் சிக்கிய தியாகராஜர் படும் அவஸ்தையைக் கேலி செய்வாராம். அவர்கள் செய்யும் அங்க சேஷ்டைகள் (ஆண் பாடகர்களுக்கே உரிய சிறப்பு இது) மாத்திரம் அல்ல. இந்த புத்தகத்தில் உள்ள ஒரு உதாரணம், தேசிக தோடியில் உள்ள ஒரு கீர்த்தனை, “நே பொகடகுண்டே நீகேமி கொதவோ” (நான் உன்னைப் புகழாவிட்டால் உனக்கென்ன குறை?) என்று ராமனைக் கேட்கிறார், தியாகராஜர். இதைப் பாடிப் பின் தமிழ் வித்வான் பாடினால், அவரது தெலுங்கு, என்னாகும். தியாகராஜர் ராமனைக் கேட்பார்,  “நான் பகோடா தின்றால் உனக்கென்ன வந்தது? என்று கேட்கும் தெலுங்காக அந்த கீர்த்தனை உருமாறும். தமிழ் வித்வானின் தெலுங்கிலும் பாடி சபையை கலகலப்பாக்குவார் நாகரத்தினம்மாள். 

இன்னுமொன்று. நாகரத்தினம்மா சென்னை வந்து வாழவந்தது கடந்த நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் இருபதுகளில். சென்னையே கர்நாடக சங்கீதத்தின் மெக்காவாக வித்வான்கள் நிறைந்த நகரமாக இருந்த காலத்தில். ஒரு ஆராய்ச்சி குறிப்பு என்று ஸ்ரீராம் சொல்கிறார்: “இந்த இருபத்தாறு வருடங்களில் நாகரத்தினம்மா 146 நகரங்களில் கச்சேரி செய்துள்ளார். மொத்தத்தில் தமிழ்கூறு நல்லுலகில் அவர் செய்துள்ள கச்சேரிகள் 1235. சென்னை மாகாணத்தில் மாத்திரம்  அவர் 849 கச்சேரிகள் செய்துள்ளார்.” அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் எது பற்றியும் இந்த மாதிரியான புள்ளி விவரம் தரமுடியும் என்பது ஆச்சரியகர மான விஷயம்.  நமக்கு எது பற்றியும் ஏது புள்ளி விவரம்?. அம்மாதிரியான சிந்தனைகள் நம்மிடம் அரிது. இருப்பினும் இந்த எண்ணிக்கையைக் குறைந்த பட்சம்  அல்லது குத்து மதிப்பாக என்று தான் கொள்ள வேண்டும். மேலும் அந்தக் காலத்தில் இன்று போல போக்கு வரத்து சாதனங்கள் அதிக அளவிலோ வசதியுடனோ இல்லாத காலம். நம்மவர் இது பற்றியெல்லாம் குத்துமதிப்பாகவே சொல்லும், பத்தாயிரம், இருபதாயிரம் என்றே சொல்லும் பண்பு கொண்டவர் நாம். ஆகவே,  1235, 849 என்றெல்லாம் ஏதோ ஒரு தீர்மானமான ருசுக்கள்கொண்ட அடிப்படையில் தான் சொல்வதாகக் கொள்ளவேண்டும். அது என்னவென்று நமக்குத் தெரியாத போதிலும்.

நாகரத்தினம்மா அந்த சங்கீத வித்வ நக்ஷத்திரங்கள் தமிழ் நாட்டில் கொட்டிக்கிடந்த காலத்திலும் ஒரு பெண்ணாக, தேவதாசியாக நிறைய புகழும் சம்பாத்தியமும் கொண்டவராகத் தான் இருந்திருக்கிறார். அது பற்றி டாக்டர் கேசரி என்பவர் தன் சிறுவயதுக் காட்சிகளை நினைவு கொள்கிறார்: அவரை ஆதரித்த ஜமீந்தார்களும், செல்வந்தர்களும், அவரை அம்மா என்று தான் அழைத்தனர். அவர் சென்னைநகரத்துக்குள் எந்த இடத்துக்கும் கிளம்பிச் செல்வது ஒரு பந்தாவுடன் தான். குதிரை பூட்டிய கோச்சு வண்டியில் வேலைக்காரர்கள் புடை சூழ. அது சென்னை நகர மக்கள் ஓடோடிவந்து காணும் ஒரு விழாக் காட்சியாகத் தான் இருக்கும்.  பணிப்பெண் பரிவாரங்கள் சூழ, ஒருத்தி வெள்ளிக்கூஜா நிறைய காபியுடன், இன்னொருத்தி வெந்நீர் பாத்திரத்துடன், இன்னொருத்தி கையில் வெத்திலைப் பெட்டி, இன்னொருத்தி கையில் விசிறி, இப்படி ஒவ்வொருத்தியும் பட்டுடை உடுத்தி வைர நகைகள் பளபளக்க சர்வ அலங்கார பூஷிதைகளாக……… தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களுக்கு பட்டுடையும் வைரநகைகளும் கொடுத்த போஷித்தவர் நாகரத்தினம்மா. ஏதோ ஒரு உலகில் இருப்பதான பிரமை நமக்கு ஏற்படும் தான்.  பின் 1235 கச்சேரிகள் என்ன, ஆயிரக்கணக்கில் என்று தான் சொல்ல வேண்டும். அவர் யாரென்று சிறுவனான கேசரி கேட்க, வந்த பதில், ”அவர் மிகவும் படித்தவர், பண்டிதை” என்று பதில் வருகிறது. பண்டிதை தான், மிகுந்த தாராள மனம் படைத்தவர் தான். சம்பாதிப் பதிலும் தன் உரிமையை நாட்டுவதிலும் தன் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதிலும்,  தான தர்மங்கள் செய்வதிலும் தாராள மனம் படைத்தவர் தான்.

சமீப காலம் வரையில் சங்கீதத்தின் உறைவிடமாக இருந்த தமிழ் நாட்டில் கூட பெண்கள் கச்சேரி செய்வது இழிவாகப் பார்க்கப்பட்டது. மேலும், பெண் பாடகிகளுக்கு பக்க வாத்தியம் செய்வதும் தாழ்வான செயலாகக் கருதப்பட்டது.  பாலக்காடு மணி ஐயர் தன் கடைசிக்காலம் வரை அந்த உயரத்திலிருந்து கீழிறங்க மறுத்தவர் என்று ஒரு செய்தி சொல்லப் படுகிறது.  அப்படியிருக்க நாகரத்தினம்மாளின் கதி? ஆரம்ப காலங்கள் பற்றி செய்தி இல்லை. ஆனால் பிறகாலத்தில் நாகரத்தினமாளுக்கு வயலின் வாசித்தவர் சிவ சுப்பிரமணிய அய்யர். அவரும் நாகரத்தினம்மாள் போல எதையும் மூடி மறைக்காமல், வெளிப்படையாகப் பேசுபவராம். ஆகவே செட் நன்றாகச் சேர்ந்துள்ளதாகத் தான் சொல்லவேண்டும். மிருதங்கம் வாசித்தவர் ராமாமிர்தம் அய்யர் என்பவர். பெண்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதே அகௌரவம். அதிலும் தேவதாசிக்கு? அதையும் மீறிய வாத்தியக்காரர்கள் இருந்தார்கள் என்பதா? இல்லை, நாகரத்தினம்மாவின் ஆளுமை வேறென்பதா?

பல்லவி பாடுவது என்பது இப்போது மிக அரிதாகிவரும் சமாசாரம். நான் கும்பகோணத்தில் கல்யாண வீட்டுப் பந்தல்களில் சங்கீதம் ஓசியில் கேட்க ஆரம்பித்த நாற்பதுக்களிலேயே கூட குழுமியிருக்கும் ரசிகப் பெருமக்களிடையே துக்கடாக்கள் பாடும் சமயத்தில் தான் முகம் மலர்ந்து உயிர்த்தெழும். இன்ன பாட்டு வேண்டும் என்று சீட்டுக்கள் மேடைக்குப் போகும். இந்த பிராந்தியத்தில் பல்லவிக்கு எங்கே இடம்? பல்லவி பாடுகிறவர் என்றால் அவர் ஒரு துர்லபமாகி வரும் பிராணிகளில் ஒருவர். (fast nearing extinction) அப்படியிருக்க நாகரத்தினம் பல்லவி பாடுவதில் திறமை கொண்டவர். விரும்பி அதில் தன் திறமையை வளர்த்துக்கொண்டவர். பாடும் உரிமைக்கே போராட வேண்டிய காலத்தில் நான் பல்லவி பாடுகிறேன் என்று ஒரு பெண், அதிலும் ஒரு தேவதாசி கிளம்பினால்…? 

அவர் காலத்தில், ஒரு பெண் விதூஷி. ரயிலில் தூர தேச பிரயாணங்களில் தம் பரிவாரங்களோடும் தம்பூராவையும் எடுத்துச் செல்வது கஷ்டமாக இருக்க, சுலபமாக தம்பூராவை எடுத்துச் செல்ல அதன் தண்டையும் பிருடைகளையும் தனியாக பிரித்தெடுக்கவும் பின் சேர்க்கவும் வசதி செய்துகொண்டார். மைசூர் வாசுதேவாசாரியார் ஒரு முறை நாகரத்தினம்மாள் வீட்டுக்கு வந்த போது, ஒரு மூலையில் சார்த்தியிருந்த தம்பூராவைக் கண்டு விசித்திரமாகப் பார்க்க நாகரத்தினம்மா அவருக்கு அதைப் பிரித்துப் பின் சேர்த்துக்கொள்ளும் வசதியை விளக்கினாராம். இதைவிட வாசுதேவாச்சாரியாரையும் நாகரத்தனம்மாளையும் அவ்விருவர் ஆளுமைகளின் பெருமையைப் பற்றிச் சொல்ல, அல்லது, சொல்லாமல் விளக்க வேறு ஒரு சம்பவம் தேவையா?

திரும்பவும், தாய் மொழி கன்னடத்தில் தேர்ச்சியும் பாசமும் உண்டு. எந்தக் கச்சேரியிலும் தேவர்நாமா பாடாமல் இருக்கமாட்டார். என்றாலும், தியாகராஜ பக்தியின் காரணமாகவும் ஒரு சங்கீத விதூஷியாக தெலுங்கில் அதிக பாண்டித்யமும் பிரேமையும் அவருக்கு இருந்தது. தெலுங்கு பண்டிதர்களிடையே அவருக்கு ஒரு இடமும் மரியாதையும் கூட சம்பாதித்துக் கொண்டிருந்தார். அவர்கள் சமூகத்துடன் ஒட்டுறவு இவருக்குப் பிடித்தமாக இருந்தது. அக்கால கவியரங்கங்களில் இவர் பங்கு கொண்டதும் உண்டு. ஒரு முறை ராஜமுந்திரியில் (1910-ல்) நடந்த கண்ட பெண்டேரம் என்ற கவியரங்கத்தில் இவர் பங்கு கொண்டு உரையாற்றியது பற்றியும் அவருக்கு அங்கு கிடைத்த அட்டஹாசமான வரவேற்பு, மரியாதைகள் பற்றியும் ஸ்ரீராம் விரிவாக எழுதியிருக்கிறார்.

இதை இத்தோடு விட்டு விட்டு Lady Chatterley’s Lover புத்தகமும் அது போன்று முன்னும் பின்னும் பாலியல் சர்ச்சையைக் கிளப்பியது போல நாகரத்தினம்மாளின் புத்தகம் ஒன்று கிளப்பிய பெரும் வாத விவாதங்கள் சர்ச்சைகள் பற்றி விரிவாகச் சொல்லவேண்டும். தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசன் பிரதாப சிம்ஹனின் ஆசை நாயகியாக இருந்த ராஜநர்த்தகி, முத்துப் பழனி ஒரு கவி, பாண்டித்யம் நிறைந்தவரும் கூட. இது 18-ம் நூற்றாண்டு சமாசாரம். பெயர் தமிழ்ப் பெயராகத் தோன்றுகிறது. அவர் ஆண்டாளின் திருப்பாவையை தெலுங்கில் மொழிபெயர்த்தோடு மட்டுமல்லாமல் அத்தோடு ஸப்த பாடலு வகையைச் சேர்ந்த தன் பாடல்களையும் சேர்த்திருந்தார். ராதிகா ஸாந்த்வனமு என்ற தலைப்பில் ராதைக்கு கிருஷ்ணனிடம் இருந்த பிரேமையை ஆத்மா பரமாத்மா என்றெல்லாம் பேசாமல், காமச் சுவை பொங்கித் ததும்ப ஒரு காவியமும் படைத்தார். அது இலா தேவியமு என்றும் பெயர் கொண்டது. ராதை தான் வளர்த்து வந்த பெண் இலாவை கிருஷ்ணனுக்கு அளித்து அவள் கிருஷ்ணனிடம் எப்படியெல்லாம் சல்லாபம் செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறாளாம். எல்லாமே முத்துப் பழனிக்கு பெரும் செல்வாக்கையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்த காவியங்கள்.

ராஜமுந்திரியில் நடந்த கவியரங்கில், கவிராஜ சார்வபௌம என்ற பட்டம் பெற்ற ஸ்ரீபாத கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, ஆண்டாளின் திருப்பாவையை தெலுங்கில் மொழிபெயர்த்தவர் முத்துப் பழனி என்னும் ஆண் கவிஞர் என்று சொல்லிவிட்டார். நாகரத்தினம்மாவின் துடுக்குத் தனம் தான் பெயர் பெற்றதாயிற்றே. கவிராஜருக்கு முத்துப் பழனி ஒரு பெண் கவிஞர், தன்னைப் போல ஒரு தாசி என்பது கூடத் தெரியவில்லையே என்று சொல்லிவிட்டார். அத்தோடு அப்போது வெளிவந்திருந்த ராதிகா சாந்த்வனமுவின் புதிய பதிப்பில் தன்னிடமிருந்த பழைய பதிப்பில் இருந்த முத்து பழனி தன் முன்னோர்களையும் அவர்களது பெருமைகளையும் பற்றி எழுதியிருந்த நீண்ட முன்னுரை விடுபட்டிருப்பதையும் பிழைகள் நிறைந்திருப்பதையும் கண்டு திரும்ப ஒரு பூரணமான நல்ல பதிப்பைக் கொண்டு வர தீர்மானித்து தானுணர்ந்த அதன் அவசியத்தையும் பற்றி ஒரு நீண்ட முன்னுரையும் நாகரத்தினம்மா எழுதினார்.  அதில் முத்துப் பழனியின் முன்னோர்களின் வம்சாவளி, பெருமைகள் கொண்ட முன்னுரை விடுபட்டிருப்பதையும் மற்ற தவறுகளையும் எடுத்துரைத்து,  முத்தியாலு முத்துப் பழனியின் தந்தையார், தாயார் அல்ல, முத்துப் பழனி ஒரு பெண், தேவதாசி, என்றும், வீரேசலிங்கம் அவர்கள் முத்துப் பழனி ஒரு விலைமாது, அதனால் ஒழுக்கம் கெட்டவர், சாதாரண பெண்ணுக்கு இருக்க வேண்டிய அடக்கம் அற்று உடலுறவு பற்றி விரசமாக எழுதியிருக்கிறாரென்று சொல்லிருப்பதை மறுத்து கடவுளின் அடிமையாக தனக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கத்தோடு இருப்பவள் ஒழுக்கம் கெட்டவள் அல்ல, அக்னி சாட்சியாக மணம் புரிந்து வேறு ஆணுடன் உறவு கொள்வது தான் ஒழுக்கம் கெட்ட செயல் என்றும், முத்துப் பழனியைக் கண்டிக்கும் வீரேசலிங்கம் அதை விட விரசமான லீலைகளை காட்சி பூர்வமாக சித்தரிக்கும் ஆண்கள் எழுதிய புத்தகங்களை பதிப்பித்து பாடபுத்தகமாக பல்கலைக் கழகங்களுக்கு சிபாரிசும் செய்துள்ளதைச் சுட்டி, ஒழுக்கம் என்ன பெண்களுக்கு மாத்திரமா, ஆண்கள் என்ன இதற்கு விதிவிலக்கானவர்களா என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.  அதோடு நிற்கவில்லை. முத்துப் பழனியின் சங்கீதம், இலக்கியம், கவிதை எல்லாவற்றிலும் உள்ள திறமையைப் பாராட்டும் வீரேசலிங்கம் அவர்கள் அதே சமயத்தில், முத்துப் பழனி ஒரு விலை மாது என்று சொல்லி அவரை ஒரு மனித ஜன்மமாகவே அங்கீகரிக்க மறுத்து, ஒரு அஃறிணையாக, ‘இதி’, ‘தானி” என்ற சொற்களிலேயே குறிப்பிடுவது என்ன நியாயம்?. இவ்வளவு குற்றச்சாட்டுக்களோடு வீரேசலிங்கத்தையே விசாரணைக் கூண்டில் நிறுத்தும் நாகரத்தினம்மாவின் தைரியம் கண்டு ஒரு பெரும் சலசலப்பு. இதன்  விளைவாக, வீரேசலிங்கம் காவல் துறைக்கும், அரசின் பிரதம காரியதரிசிக்கும் தன் குற்றச்சாட்டை எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட பிரசுரகர்த்தர்களும் இன்ன பினல் கோடின் பிரிவின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எழுதியவரும் பதிப்பித்தவரும் விலைமாதுகள் என்று சொல்ல, கடைசியில் அந்தப் பிரசுரகர்த்தர் பதிப்பித்த புத்தகங்களில் முத்துப் பழனியினது மாத்திரமல்ல வீரேசலிங்கமே எழுதிய ரசிக ஜன மனோரஞ்சனம் புத்தகமும் உள்ளது என்றும் அது பழனிமுத்துவின் புத்தகத்தில் உள்ளது போலவே காமரச வர்ணனைகள் கொண்டதுதான் என்றும் வேறு கூடுதல் தகவல்களும் வெளிவந்தன. குற்றம் சாட்டிய வீரேசலிங்கம் நிலமையே இன்றைய பாமர பாஷையில் “படு பேஜாராக” த் தான். போயிற்று இதற்கும் மேல் அரசு இது பற்றி விசாரணை செய்து தடை செய்யப்பட வேண்டிய புத்தகங்கள் இன்னின்ன என்று சிபாரிசு செய்ய நியமிக்கப்பட்டவர் கடைசியில் வீரேசலிங்கம் அவர்களின் சிஷ்யகோடிகளில் ஒருவர், அவர், தன் ஆப்தர் வீரேசலிங்கம் சம்பந்தபட்ட புத்தகங்கள் தடைசெய்ய சிபாரிசு செய்யும் பட்டியலில் இல்லாது பார்த்துக்கொண்டார். இது ஆங்கில அரசின் நடைமுறை 1910-20 களில். ஆக, இன்றைய பெரிய மனிதர்கள், அரசு அதிகாரிகள் அவலங்களுக்கு முன்னோடிகளை ஒரு நூற்றாண்டு முன்னரே காணலாம் போலும். பின்னர் என்ன, பெரிய சர்ச்சைகள் வெகுகாலமாக தொடர்ந்தன. சம்பந்தப்பட்ட புத்தகமோ 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது போன்ற வர்ணணைகள் ஜெயதேவரிடம், காளிதாஸனிடம் ஷேக்ஸ்பியரிடம், எத்தனையோ ஐரோப்பிய இலக்கியங்களில் மட்டுமல்ல, பைபிளில் கூட காணலாம். செவ்வியல் இலக்கியங்களை இன்றைய சட்ட திட்டங்கள் சமூக நியதிகள் நோக்கில் ஆராயக் கூடாது என்று பல தரப்பு வாதங்கள் பல தரப்புகளில் எழுந்தன. மைலாப்பூர் ரானடே ஹாலில் ஒரு கூட்டமும் நிகழ்ந்தது. பெரிய பெரிய தலைகள் வீ கிருஷ்ணஸ்வாமி அய்யர், அன்றைய தெலுங்கு சமஸ்கிருத பண்டிதர்கள்.ஸ்ரீனிவாச அய்யங்கார், நாகபூஷணம் இத்யாதி, இத்யாதி கலந்து கொண்ட அது ஒரு பெரிய இலக்கண, இலக்கிய வல்லுனர்கள் சட்டமன்ற வல்லுனர்கள் கொண்ட கூட்டம். கடைசியில் அது ஒன்றுமில்லாமல் போயிற்று. வாத பிரதி வாதங்கள் நடந்தது பிரசுரகர்த்தர்கள், அதிகாரிகள், மொழி பண்டிதர்கள் இடையே தான். இதற்கெல்லாம் காரணமான நாகரத்தினம்மாள் சர்ச்சைக்கு வெகு தூரம் பின்னால் போய்விட்டார்.

ராதிகா சாந்த்வனமு புத்தகம் ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கி பிரசுரம் செய்யலாம் என்று கடைசி ஆணை பிறப்பிக்கப்பட்டது. பக்கங்கள் எல்லாவற்றிலும் விரவியிருப்பதை எப்படி நீக்குவது?. பின் எது மிஞ்சம்? செலவுக்கு அஞ்சி, புத்தகமும் நாகரத்தினம்மாவும் முத்துப் பழனியும் பெற்ற பிராபல்யமே நிகர லாபம் என்ற நிலையில் புத்தகம் சந்தையிலிருந்து மறைந்தது. என்னிலையிலும் தன் கௌரவத்தை, தன் குல கௌரவத்தை விட்டுக்கொடுக்காத, அதற்காக வீரேசலிங்கம் போன்ற புகழும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பண்டிதர்களையும் எதிர்த்து நின்று போராடும் தைரியமும் அதோடு பாண்டித்யமும் கொண்டவர் நாகரத்தினம்மாள் என்பதை உலகமறியச் செய்த பல நிகழ்வுகளில் இது முக்கியமானது. இதைச் சாதித்தவர் விலைமாது என்று பழிக்கப்பட்ட ஒரு தேவதாசி. சுயகௌரவம் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்னமும் இப்போது படிக்கும் போது கூட, ஆமாம், தேவதாசி தான். ஆனால் ஒழுக்கம் கெட்டவள் அல்ல, ஒழுக்கம் ஆணுக்குக் கிடையாதோ? என்று ஒரு தேவதாசி அன்று குரல் எழுப்பியது பரவசம் தருகிறது.

சுயகௌரவத்திற்கு இன்னொரு ரூபமும் உண்டு போலும். அந்நாட்களில் தான், 1910-களில், கிராமபோன் தட்டுகள் வரத் தொடங்கின. கல்கத்தா விலிருந்து அந்நாட்களில் பெரும் புகழ் பெற்ற கௌஹர் ஜான் சென்னை வந்தார்.  இசைத்தட்டுகள் மூலம் கல்கத்தா குயில் என்று அவரது புகழ் சென்னை வரை பரவியிருந்தது. தெற்கிலும் கர்நாடக சங்கீதம் பதிவாகத் தொடங்கின. நாகரத்தினம்மாளின் இசையும் கிராமபோன் தட்டுகளாயின. அலஹாபாத் ஜானகிபாய் ஒரு பதிவிற்கு ரூ 3000 பெற்றாராம். நாகரத்தினம்மாளின் பதிவுகள் பல, இருந்தாலும் பின்னர் அவருக்கு இதில் விருப்பமில்லாமல் போயிற்று. மூன்று நிமிடத்துக்குள் முடிக்கவேண்டும். சமிக்ஞை கிடைத்ததும் ஆரம்பிக்க வேண்டும். சமிக்ஞை தெரிந்து உடனே முடிக்கவேண்டும் போன்ற கெடுபிடிகள் அவருக்குப் பிடிக்காதவை. மேலும், கண்ட இடங்களில் டீக் கடைகளில், முடிவெட்டும் இடங்களில் தன் இசை கேட்டால் அது நன்றாகவா இருக்கும்? என்ற எண்ணம் பரவலாகவே இருந்தது. எந்த மாற்றத்தின் ஆரம்பங்களும் ஒரு கலாசார மோதலாக, பண்பாட்டுத் தடையாகவே இருந்துள்ளது. புரிகிறது. ஆனால் இப்போது வாசுதேவாச்சாரியார், பிடாரம் க்ருஷ்ணப்பா, பட்கண்டே போன்றோர் கேட்டு ரசித்த குரலை நாம் இன்று கேட்க முடியாது. அது பற்றிய புகழுரைகளைப் படிக்கத் தான் இயலும். ஒரு சங்கீத கலைஞருக்கும், ரசிகனுக்கும் இதைவிட சோகம் வேறு என்ன இருக்க இயலும்?. அக்கால கட்டத்தில் வாழ்ந்த கான் அப்துல் கரீம் கான் பாடிய தியாகராஜ கிருதி, ”ராமா நீ சமானமெவரு…...” இசைத்தட்டுப் பதிவை யூட்யூபில் யாரும் இப்போது கேட்கமுடிகிறதென்றால் அது தரும் மகிழ்ச்சியும் மெய்சிலிர்ப்பும் வேறு தான்.

நாகரத்தினம்மாவை தியாகராஜ சமாதியொடும் உற்சவத்தோடும் சம்பந்தப்படுத்தும் அத்தியாயத்தின் தொடக்கம் ஸ்ரீராமின் புத்தகத்தில் இப்படி ஆரம்பிக்கிறது. நாகரத்தினம்மா ஒரு நாள் தன் வீட்டில் தனியாக இருக்கும் வேளையில் கண்ணயர்ந்துவிட்டார். தியாகராஜர் தன் கைகளை உயர்த்தி அவரை ஆசீர்வதிப்பது போல் ஒரு பிரமை. திடுக்கிட்டு கண்விழிக்கிறார். மறு நாள் காலையில் அவரது குரு பிடாரம் கிருஷ்ணப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் அவர் தான் திருவையாறு சென்றிருந்ததாகவும் தியாகராஜ சமாதி பாழடைந்து, சுற்றுப்புறம் எங்கும் அசிங்கமாக சுகாதாரமற்று இருப்பது கண்டு தான் மிகவும் மனவேதனைப் அடைந்துள்ளதாகவும் அதைப் புதிப்பித்து நல்ல முறையில் பாதுகாக்க ஏதாவது நாகரத்தினம்மாதான் செய்யமுடியும் என்று எழுதியிருந்தார்.

தியாகராஜ பக்தி, குரு விஸ்வாசம் இரண்டும் சேர்ந்த இந்த ஆக்கிணை நாகரத்தினம்மாவை அந்தக் கணமே செயல்பட வைத்தது.  அது  ஐம்பதுக்களில் அவரது மரணம் வரை தொடர்ந்தது. இத்தனை அர்ப்பண உணர்வு வித்வான் வீரேசலிங்கம் பாஷையில், ஒரு “இதி” “தானிக்கி”யிடம் இருந்திருக்கிறது! அப்போதே அந்த ‘இதி’ தன் அருகிலேயே தங்கசாலைத் தெருவில் இருந்த ஒரு கதாபிரசங்கி, தியாகராஜ ஆராதனைக்கு வழக்கமாக நிதி திரட்டும் முனிசாமி நாயுடுவிடமும் தற்செயலாக அங்கிருந்த தஞ்சாவூர் நாகராஜ பாகவதரிடமும் தியாகராஜ சமாதி பற்றியும் அங்கு நடத்தப்படும் ஆராதனை பற்றியும் முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  

ஆரம்பத்தில் தியாகராஜர் சமாதியில் (சன்னியாசம் வாங்கிக்கொண்டவர், தகனம் செய்யப்படுவதில்லை,  புதைக்கப்பட்டு சமாதி எழுப்பப்படும்) ஏதோ பூஜைகள் செய்து, வழக்கப்படி ஆசார மந்திர உச்சாடனங்களோடு சிராத்தம் செய்தவர் தியாகராஜரின் பேரன் பஞ்சாபகேசய்யா. அவரும் சந்ததியின்றி இறந்த 1855-லிருந்து அதுவும் நின்றது.  பின்னர் 1903-ல் தான் தியாகராஜ சிஷ்ய பரம்பரையில் பிரசித்தமானவர்களான சுந்தர பாகவதர் கிருஷ்ணபாகவதர் என்று அறியப்பட்ட உமையாள்புரம் சகோதரர்கள் தியாகராஜர் சமாதி அடைந்துள்ள துர்நாற்றமும் புதர் மண்டியும் கிடந்த இடத்தை சுத்தப் படுத்தி கருங்கல் பாளங்கள் கொண்டு கட்டிடம் எழுப்பி சமாதி புனரமைக்கப்பட்ட விவரங்களைப் பொறித்து, அந்த இடத்தை ஒழுங்காக பராமரிக்க தோட்டக்காரரையும், சமாதியில் தினம் பூஜை செய்ய ஒரு அர்ச்சகரையும் அமர்த்தி, வருடாந்திர சிராத்தம் செய்ய தம் சிஷ்யர் பஞ்சாப கேச பாகவதரையும் நியமித்தார்கள். தில்லைஸ்தானத்தைச் சேர்ந்த இன்னொரு சிஷ்யகோடியான நரசிமம பாகவதர், பஞ்சு பாகவதர் இருவரும் இதில் சேர்ந்து கொண்டு ஹரிகதை, சங்கீதம் உஞ்சவிருத்தி என சிராத்தத்தோடு தியாகராஜ அஞ்சலி விரிவு பெற்றது.

1909 லிருந்து இது ஐந்து நாடகள் நிகழ்வாக, சிராத்தம், போஜனம் ஆராதனை, சங்கீதம், ஹரிகதா, பூப்பல்லக்கு ஊர்வலம் என்  விரிவானது. இதற்கான நன்கொடைகள் பெறப்பட்டன. சங்கீதமும் போஜனமும் ஐந்து நாட்களுக்கு என விரிவு பெற்றால், கூட்டம் சேர்வதற்கு அதுவும் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து சிஷ்ய கோடிகள் விரவியிருக்கும் தஞ்சையில் கேட்க வேண்டாம். அத்தோடு கட்டுப்பாடுகளும் பிறந்தன. உஞ்சவிருத்திக்கும், பெண்கள், நாதஸ்வர வித்வானகள் பங்கு பெறக்கூடாது, புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், என இப்படி பல. பின்னர் அபிப்ராய பேதங்கள், கட்சி பிரிவது எல்லாம் உடன் வந்தன.  பெரிய கட்சி சின்ன கட்சி என. இரண்டு கட்சிகள் என்றால், சங்கீதம் கேட்கவும் போஜனத்துக்கும் வாய்ப்புகள் இருமடங்காகி கூட்டமும் பெருகியது. இந்தப் பெருக்கமும் வெற்றியும் 1909 வருடத்தியது. 1910-ம் வருடம் தில்லைஸ்தான சகோதரர்களிடையே மனஸ்தாபத்தை உருவாக்கி அது கட்சிப் பிளவாக குணமும் உரவமும் பெற்று, ஒருவர் நான் கும்பகோணத்திலேயே ஆராதனை நடத்திக்கொள்கிறேன் என்று சொல்லி விலகி எல்லோருக்கும் நன்கொடையாளருக்கு சேர்த்து தெரிவித்தும் விட்டார். இந்த ஆராதனையும் அஞ்சலியும் ஒரு பெரும் விழாவாக உருவெடுக்காத காலத்தில் சிஷ்யர்கள் எல்லாம் தம் ஊரிலேயே தம் அளவிலே ஆராதனையும் சிராத்தமும் செய்து அமைதி அடைந்தார்கள் இது 1903 லிருந்து 1953 வரை உலகறியும் செய்தியாக வில்லை. கூட்டம் சேரவில்லை. விழாக்கோலம் கொள்ளவில்லை
ஆனால் அதன் ரூபமும் வியாகபமும் குணமும் மாறிவிட்டால், சச்சரவும் பிளவும் தொடர்ந்து விடுகின்றன. நரசிம்ம பாகவதரது பெரிய கட்சி அவர் அண்ணனாதலால். பஞ்சு பாகவதரது சின்ன கட்சி. தம்பியுடையது.  இரு கட்சிகளிலும் போட்டி.  இரண்டிலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள். சங்கீதத்திலும் போட்டி. அன்னதானத்திலும் போட்டி. இரண்டு வகை ரசிகர்களுக்கும் இரட்டிப்பு ஆனந்தம். அவர்களுக்குள் ஆராதனையை எப்படி நடத்துவது?, சமாதியில் எந்தக் கட்சி எப்போது முடித்து அடுத்த கட்சிக்கு வழிவிடுவது? என்று போட்டிகள், சமாதானங்கள் என அவ்வப்போது எல்லாம் மாற்றம் பெறும். எல்லோரும் தியாகராஜ  பக்தர்கள் தான். ஆனால் தம் பிராபல்யத்தையும் செல்வாக்கையும் காட்டுவதில் போட்டி. ஆனால், நாதஸ்வர வித்வான்கள் பந்தலுக்குள் வரக்கூடாது. மேடையேறக் கூடாது, நின்று கொண்டே தான் வாசிக்க வேண்டும். வித்வான்கள் உஞ்ச விருத்தியில் ஆராதனையில் மேலாடை அணியக்கூடாது.  பெண்களுக்கு இடமில்லை என்பதில் இரு கட்சியினரும் ஒத்துப் போயினர்.  பாவம், பெண்களும், நாதஸ்வர வித்வான்களும் அன்றைய சமூக ஏற்பாட்டினாலும், எதிர்ப்பாளர் ஒற்றுமையாலும் எல்லா விதிகளுக்கும் அடங்கினர். எல்லாம் சரி ஆனால், தியாகராஜர் சமாதி பழைய நிலையில் தான். புதிதாக கட்டிடம் எழுப்ப இரு கட்சிகளும் பேசினார்களே தவிர பணம் திரட்ட முடியவில்லை. சுற்றி மண்டிக்கிடந்த புதரையும் ஏதும் செய்ய முடியவில்லை.  1903-லிருந்து 1923-க்குள் தியாகராஜர் சமாதி மறுபடியும் கேட்பாரற்று, முட்புதரும் பாம்பும் பல மோசமான செயல்களுக்கு உகந்த இடமுமாயிற்று. பிடாரம் கிருஷ்ணப்பாவின் ஆக்கினையை ஏற்று  நாகரத்தினம்மா விசாரித்த போது முனிசாமி நாயுடுவும் நாகராஜ பாகவதரும் தந்த சித்திரம் இது. நாகரத்தினம்மாவுக்கு வயது இப்போது 43. திருவையாறு வந்து பார்வையிட்டவர் 1923-ல் கண்ட காட்சி பற்றி எழுதுகிறார்:

”அந்த பிருந்தாவனம், ஒரு பெரிய மகானின் மீதங்கள் தன்னுள் உறைந்து கிடப்பதைத் தன் தீனமான குரலில் உலகத்திற்குப் பறைசாற்றும்  ஒரு சிறிய கல்மட்டும் கொண்டதாக இருந்தது. முட்புதர்கள், மூங்கில் கொத்துகள், விஷப் பாம்புகள் ஆகியவற்றால் அந்த சமாதி சூழப் பட்டிருந்தது. பகலில் கூட அங்கு நடமாடுவது மிகச் சிரமமாக இருந்தது.”

நாகரத்தினம்மா தேவதாசிக்குப் பிறந்தவரே ஒழிய எந்த கோவிலுக்கும் பொட்டுக் கட்டிக்கொண்டவர் இல்லை. ஆனால் இப்போது,  தன்னை அந்தக் கணமே தியாகராஜரையே தன் தெய்வம், புரவலர், எஜமான் என அர்ப்பணித்துக் கொண்டு தியாகராஜ தாசி என்றே தன்னைக் கூறிக் கொள்வாராம்.
அந்த இடத்தை வாங்கி தன் காரியங்களைச் செய்யவேண்டும். அந்த இடம், அறப்பணிக்கான பொதுச் சொத்தாக மராத்தியர் காலத்திலிருந்து சூர்வேக்கள் வசம் இருந்ததால், அவர்கள் விற்கத் தயாராக இருந்தாலும், அது நடவாது. சட்டம் இடம் கொடுக்காது. ஆனால் அதற்கு ஈடாக வேறு நிலம் கொடுத்து அதை தன் வசப்படுத்தி பட்டா பெறலாம் என்று ஒரு வசதி இருந்ததாம். வேறு இடத்தில் தனக்கு இருந்த விலைமிகுந்த விளை நிலத்தை அதற்கு பதிலாக கொடுத்து புதர் மண்டிப் பாம்பு உறையும்  இடத்தைப் பெற்றுக்கொள்கிறார். பின் அந்த இடத்தை சீர்படுத்த வேண்டும். நடந்தது எல்லாம் ஒரு வாரத்தில். 27.10.1921 அன்று சமாதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கின என்ற குறிப்புவருகிறது.

நாகரத்தினம்மா சம்பந்தப்பட்டு தியாகராஜ சமாதியில் ஏதோ நடக்கிறது என்று தம்முள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் இரு கட்சிகளுக்கும் தெரிந்திருந்தாலும் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாடக்கூடாது தானே ஒழிய தியாகராஜருக்கு கோவில் கட்டிடம் கட்டலாமே. இரு கட்சித் தலைமைகளையும் நாகரத்தினம்மா சந்தித்து ஆசி வேண்டினார். மலைக்கோட்டை கோவிந்த சாமிப் பிள்ளையும் வீணைதனத்திடம் விசேஷ அபிமானம் கொண்டவர் அவரும் சரி, சின்ன கட்சியின் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும் சரி ஆசி வழங்கினார்கள்.

தியாக ராஜரின் பெரியன்ணா வம்சாவளியில் வந்த ராமுடு பாகவதரை தியாகராஜ சமாதி காரியங்களுக்கு பொறுப்பாக்கி, இந்த புண்ணிய காரியத்துக்கு வேண்டிய நிதி திரட்ட நாகரத்தினம்மா மும்முரமாக கச்சேரி வாய்ப்புகள் ஒன்று விடாமல் ஒப்புக்கொண்டு வரும் பணம் அத்தனையும் தியாகராஜருக்கு என்றாகவே, 1824-க்குள் சமாதியைச் சுற்றி ஒரு கூடம், அதன் மேல் ஒரு கோபுரம் எழுந்தது. இடையே தன் வளர்ப்புப் பெண் பன்னியின் ஹரிகதா காலட்சேப அரங்கேற்றமும் நடந்தது, 1925-க்குள் தியாகராஜ சமாதியின் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டதை எல்லோரும் காணமுடிந்தது. முன்னர் இருந்த வேலிக்கு பதிலாக சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்தது. எங்கும் மணல் பரப்பி மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டிருந்தன. வாசலில் இரும்புக் கிராதிகள் கொண்ட கதவுகள். இரவு அக்கதவுகள் பூட்டப்பட்டுவிடும். காவலுக்கு ஒரு காவல்காரன் எப்போதும். மூல சந்நதிக்கு இரு புறமும் இரு புதிய சந்நதிகள். வினாயகரும் ஆஞ்சனேயரும் எழுந்தருள. அந்த பிருந்தாவனத்தில் முன்னர் இருந்த வேறு பல சன்னியாசிகளின் பிருந்தாவனம் எதுவும் அகற்றப்படவில்லை. அவற்றுக்கும் அங்கு இடம் இருந்தது. கர்ப்பக் கிரஹத்தில் கரும் பளிங்குக் கல்லால் ஆன தியாகராஜ சிலை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை அறிமுகப்படுத்திய ஸ்தபதியிடம் நாகரத்தினம்மாள் தான் கனவில் கண்ட தியாகராஜரை வர்ணிக்க அதையொட்டி வடிக்கப்பட்ட சிலை.  அதைப் பெரும்பாலோர் ரசிக்கவில்லை. அதை கருப்பணசாமி என்று சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் சொல்வாராம். எப்படியோ அந்த இடம் கோவில், பிரகாரம் ஆயிற்று. மேலும், சொல்லப் போனால் பிருந்தாவனம் முழுக்க நாகரத்தினம்மாளுக்குச் சொந்தம். எனவே அதில் யாரும் தடை சொல்லவில்லை. அது மாத்திரமல்ல, இப்போது  அது கோவிலாகி விட்டதால், கும்பாபிஷேகமும் பிராமணர்களாலும் செல்வந்தர்களாலும் நடத்தப்பட்டு, தினம் இரண்டு வேளை பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. தியாகராஜர் மேல் 108 நாமங்கள் கொண்ட நாமாவளி ஒன்றை நாகரத்தினம்மாள் இயற்றி அது அர்ச்சனையின் போது ஜபிக்கப்பட வேண்டும் என்றும் ராமுடு பாகவதரைக் கேட்டுக்கொண்டார்.
கர்நாடக சங்கீத உலகமே மதித்த மஹான் ஒருவருக்கு இத்துணை சிறப்பாக ஒரு கோவில் எழுப்பப்பட்டு அதற்கான நித்திய பூஜைக்கும் இன்னம் பிறவிற்கும் காரணமான நாகரத்தினம்மாவுக்கு  பெரிய இடங்களிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. பத்திரிகைகள் கொண்டாடின. பலர் கவிதை யாத்தனர். [தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R