அத்தியாயம் மூன்று:

ஆர்.விக்கினேஸ்வரன்அன்றய  இரவுப்பொழுது  விடியும்போது, என்  வாழ்விலும்  விடியல் மகிழ்ச்சி  தெரிந்த்து. பகல்பொழுது  திருமண வைபவத்தோடு  கழிந்தது.  நண்பன்  வீட்டுத் திருமணம் அல்லவா…! ஓடியோடி  வேலைபார்த்துப்  போதும் போதும்  என்று  ஆகிவிட்டது. செமையாக  உழுக்கு எடுத்துவிட்டார்கள். வேலைகளை முடித்து, குளித்துச்  சாப்பிட்டுவிட்டு, லாட்ஜில்  எனக்கென்று  ஒதுக்கிய  ரூமுக்கு சென்று, கட்டிலில்  விழும்போது  பத்துமணி  ஆகிவிட்டது. மாலாவின்  எண்ணுக்குப்  போன்  எடுத்தேன்.  மறுமுனையில் கலாவின்  அப்பா. “கலாவிடம் கொடுங்கள்….” எனச்  சொல்லவும்  முடியவில்லை. அதேவேளை,  என்மீது  அவர்கள்  மனதில்  தப்பான  எண்ணங்கள்  இருக்கும் பட்சத்தில், அதனை  நீக்கும் முகமாக  நான்  பேசவேண்டிய முதல் நபரே  அவர்தான்.  

ராமேஸ்வரத்தில்,  கலா வீட்டிலிருந்து  புறப்பட்டு  எனது  வீடு நோக்கிச்  சென்றது முதல், அங்கு நடந்த பிரச்சினைகள்.. ஹோமா நிலை, அதன் பின் ஓராண்டு கழித்து, ராமேஸ்வரம்  சென்று  அவர்கள் குடும்பம் பற்றி  விசாரித்தமை,  ஏமாற்றத்தோடு திரும்பியமை  அனைத்தையும் விபரமாகக்  கூறிவிட்டு,  பேச்சின்  கோணத்தைத்  திருப்பினேன். முக்கியமாக, மாலாவை இரவுவேளையில்  வியாபாரம் செய்ய விடுவது பற்றிய, மன விசனத்தைக்  கொட்டியபோதுதான், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளுக்குத்  திருமணமான தகவலை  அவர் தெரிவித்தார். உள்ளூர  மகிழ்ந்தேன்…! அதையடுத்து, அவளின் கணவன் இரண்டு  மாதங்களுக்குள்ளாக, இறந்துபோனதையும்…, அவள் விதவையானதையும் தெரிவித்தார். உள்ளத்துள்  நெகிழ்ந்தேன்…!! இறுதியாக, அவளது கணவனை.. “அவளே கொன்றாள்..” என்றும், அதற்குக் காரணம் : அவனது தவறான  நடத்தையின்  உச்சக்கட்டம் என்றும், அதன் பொருட்டு – சிறைவாசத்தையும் அனுபவித்தாள் மாலா என்பதையும் தெரிவித்தார். உண்மையில்  அதிர்ந்து போனேன்…!!! அதைவிடக்  கொடுமையான  சம்பவம்  நான் கொடுத்திருந்த  என்வீட்டு  விலாசத்திற்கு, ஆரம்ப காலத்தில் கலா எழுதிய கடிதங்கள், மூன்று வந்துள்ளன. என்னுடைய  ‘ஹோமா’காலத்தில், வந்த இக் கடிதங்கள் அனைத்தையும் என் பெற்றோர், உறவினர் எல்லோரும் சேர்ந்து மறைத்து விட்டனர். அது மட்டுமன்றி, கலா குடும்பத்தார் யாவரும் ராமேஸ்வரத்திலிருந்து இடம் மாறியமை, மாறிச் சென்ற புது இடத்தின் முகவரி  உள்பட  யாவும் தெரிந்து வைத்துக்கொண்டுதான், என்னோடு  ராமேஸ்வரம் வந்து, கலா குடியிருந்த வீட்டுக்கெல்லாம் அலைந்து…..  அப்பப்பா…. எத்தனை  அழகாக நடித்து முடித்துவிட்டார்கள்.    அது மட்டுமல்ல.!  ‘அக்னி தீர்த்த’த்தில் நீராடி, எனக்காக அர்ச்சனைகள் செய்து…. சே…சே…..  கண்ணை மறைத்துக்கொண்டிருக்கும் மூட கெளரவம்.. கடவுள் முன்னும் ‘கபடநாடகம்’ புரியவைத்துவிட்டதா.. “பாவங்களைத் தொலைத்துவிட்டு, பரிசுத்தமாய்த் திரும்ப வைக்கும்….” இடத்தில்,   எனது ஆத்மாவுக்கே…. பாவம் புரிந்து திரும்பியுள்ளார்கள்.

“இருக்கட்டும்….  இருக்கட்டும்…. கலாவுக்கும் எனக்கும் திருமணம் நடக்கட்டும்…. அந்த பங்சனை போட்டோவும், வீடியோவும் எடுத்து  இவர்களுக்கு அனுப்பி வைக்கணும்….’’

திருநெல்வேலியில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் நண்பனின் நினைவும்  வந்துசென்றது.                                                                                                                                                                
என்னுள்ளம் இப்போது, மாலாவுக்காக இரங்கியது.  “வலுவான காரணம்  ஏதுமில்லாமல், அந்தப் பொண்ணு  கொலையை செய்யத் துணியமாட்டா…. கலாவைக்  கல்யாணம் பண்ணின கையோட, மாலாவுக்கும் ஒரு மாப்பிள்ளை பாத்து, செய்து வச்சிடணும்….” 

நேரம் கடந்துகொண்டிருந்தது.   மீண்டும் செல்போன் அழைத்தது.   எடுத்தேன்.  கலா வீட்டிலிருந்துதான்  வருகின்றது. காரணம் புரியவில்லை. சரி….பேசலாம்….!                              
“ஹலோ….”

“……………..”

“ஹலோ…. நான்  லைனிலதான் இருக்கேன்…. பேசுங்க……”

மறுமுனையிலிருந்து குரல் மெதுவாக வந்தது.

“என்னங்க….  நல்லா இருக்கீங்களா….”

தேனாகப் பாய்ந்தது அந்தக் குரல்.

“கலா….  கலா செல்லம்……” என் குரல் விம்மியது.

“பேசுங்க… ஒங்க பேச்சைக் கேட்டு எவ்வளவு நாளாச்சுங்க….”

“என்ன செல்லம்…. உன் குரல் மெதுவாயிருக்கு…. கொஞ்சம் சத்தமா பேசலாமில்லியா….”

“நல்லாயிருக்குங்க  உங்க  பேச்சு….. இப்ப மணி என்ன ஆகுது பாருங்க…. எல்லாரும் தூங்கும் வரைக்கும்  காத்திருந்து யாருக்கும் தெரியாமல்   எடுத்துப்  பேசிகிட்டிருக்கேன்….இதில சத்தம்போட்டுப் பேசினா, தூங்குறவங்க கதி என்னாகும் …. அவங்க எந்திரிச்சா என் நெலமை என்னாகும்….. சொல்லுங்க….”

“ஓகே…. ஒகே…என்மேல உனக்கு கோவமில்லியே…. நடந்தது எல்லாத்தையும் உங்க அப்பாகிட்ட சொல்லிட்டேன்…. ”

“நீங்க சொன்னாத்தான் நான் உங்களை நம்பணுமா….? என்னங்க இது…. உங்களை யாரு நம்பாமல் இருந்தாலும், நான் நம்பாமல் இருக்கலாமுங்களா….”

“ரொம்ப பெருமையா இருக்கு  கலா…. எங்க வீட்டு ஆளுகளையெல்லாம் கூட்டிவந்து, சிறப்பா செய்யணும்னு  நெனைச்சது எவ்வளவு தப்பாப் போச்சு…. பாத்தியா செல்லம்…..”

“கவலைப்படாதீங்க…. நீங்க  என்மேலயும், நானு  உங்கமேலயும்... வெச்சுகிட்டிருக்கிற  நம்பிக்கை உறுதியா இருக்கிறவரையில யாரு எதிர்த்தாலும், ‘தெய்வ உதவி’ கடைசிவரையில இருக்குமுங்க…. இப்ப நம்மை ஒதுக்கித் தள்ளுறவங்க, ஒரு நேரத்தில நம்மை தேடிவருவாங்க…”

“நெசந்தான் செல்லம்…. பக்கத்தில  நீ துணையாயிருக்கிறப்போ நான் கண்டிப்பா ஜெயிப்பேன்…..  நீ எம்மேல வச்சிருக்கிற நம்பிக்கைய கடசிவரயில காப்பாத்துவேன்….’’

“ நான் உங்கமேல வெச்ச நம்பிக்கை இருக்கட்டுங்க…. அதை நீங்க காப்பாத்துவீங்கண்ணு  யாருமே எனக்கு சொல்லவேண்டியதில்லைங்க.. நான் எப்பவும், எந்த
சூழ்நெலையிலும் ஒங்க பக்கத்தில,ஒங்க கூட,ஒங்களுக்குள்ள இருப்பேனுங்க….  ஆனா, எங்கப்பா உங்கமேல வெச்ச நம்பிக்கைய நீங்க காப்பாத்தணும்..”

“புரியல்லியே கலா…” குழம்பினேன்.

மறுமுனையில் கலா சிரிக்கின்ற ஒலி கேட்டது.

“எங்கப்பாகிட்ட என்ன சொல்லிட்டு புறப்பட்டீங்க..”

“மறந்திட்டேன்னு நெனைச்சியா., மணமாலை கொண்டு : மறக்காமல் வருவேன்.. மகளின் கரம்பற்றி, மருமகனாய் ஆவேன்னு சொன்னேன்..”

சொன்னபடி செய்வீங்கல்ல….”

“உனக்கென்ன லூசா.. கலா…. நல்ல முடிவோட நாளைக்கு வந்திடுவேன் செல்லம்…புராமிஸ்ட்….”

“என்னங்க…. புராமிஸ்ட்…. அது இதுன்னு எங்கிட்டயே பேசுறீங்க…. இந்த புராமிஸ்ட்டை எங்கப்பாகிட்ட சொன்ன சொல்லுமேல பண்ணுங்க.”

“செல்லம்…. தெளிவா குழப்புறதிண்ணு சொல்லுவாங்க இல்லியா… அதைத்தான் இப்ப நீ  பண்ணுறே….”

“இது குழப்பமில்லீங்க…. குழப்பம் எதுவும் வரக்கூடாது…. உங்க வார்த்தைமேல யாரானாலும், அது எங்கப்பாவானாலும்,கொறை சொல்லக் கூடாது…. நான் ஒங்க நன்மைய மட்டுந்தான் விரும்புறேன்னு ஒங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லியா….”

“என்ன செல்லம்…. இப்பிடிப் பேசிறே….”

“அப்பிடீன்னா..எதுவும் பேசாமெ புராமிஸ்ட் பண்ணுங்க….”

“ஓகே….புராமிஸ்ட்….  நீ கேட்டமாதிரியே பண்ணிட்டேன்…. அண்ணைக்கும் இப்பிடித்தான், மோதிரத்தை வச்சுகிட்டு…. ‘இது மோதிரம் இல்ல…. தாலி’ ன்னு குழப்பினே….”

“சந்தேகமே வேண்டாம்…. அது தாலிதான்…. தாலியா மாத்திச் செஞ்சாச்சுங்க….  நாளைக்கு சென்னையிலயிருந்து கிளம்பி,  இங்கை வர்ரீங்கதானே….மாலாகிட்டவேணும்னாலும்  கேட்டுப் பாருங்க…. பாதுகாப்பா வெச்சுக்கன்னு அவகிட்டதான் குடுத்துவச்சிருக்கேன்…அவளும் அதை ஒரு மஞ்சள் துணியில முடிச்சுப்போட்டு அவ சூட்கேசில வெச்சிருக்கா.”

“ஏன்….  அதை நீ  உன் சூட்கேசில வைக்கவேண்டியதுதானே…”

“அது, அவள்கிட்ட இருக்கிறதுதான் கரெக்ட்டு….”

“என்னமோ செய் செல்லம்…. உன் பேச்செல்லாம்  இன்னும் எனக்குப் புரியல்ல…. உனக்கு என்னமோ ஆகிரிச்சு….”

“நெசந்தாங்க…. எனக்கு ஏதோ ஒண்ணு ஆகிரிச்சு…. நாளைக்கு வீட்டுக்கு வந்து என்ன ஆகிரிச்சுன்னு பாத்துக்குங்க…. சரிங்க….காலையில நேரத்துக்கு  எந்திரிக்கணுமில்லியா…. தூங்குங்க….”


அத்தியாயம் நான்கு!

ஆர்.விக்கினேஸ்வரன்காலையில்  புறப்படும்போது  எனக்குப்  பிடித்தமான  வகையில் இரண்டு  மலர்  மாலைகள்  வாங்கிக் கொண்டேன்.பழங்கள்,பட்சணங்கள்,
பார்சல்களுடன், பேரூந்தில்  என் பயணம்  ஆரம்பித்தது.

இரவு, கலாவுடன் போனில் பேசிய இனிய நினைவுகள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன.

அவளின் தந்தையாரிடம் சொல்லிவிட்டு வந்த வார்த்தையைக் காப்பாற்றும்படி எதற்காகச் சத்தியம் கேட்டாள்?

கொண்டுசெல்லும் மணமாலையை அவளின் கழுத்திலே சூடும்போது, இயல்பாகவே அவள் தந்தைக்கு மருமகன் ஆகிவிடுவேன் அல்லவா.  பின், எதற்காக சத்தியமும்,சாட்சியும்.

மோதிரத்தை ‘தாலி’ ஆக்கிட்டேங்குறா….. ‘ஏதோ ஆகிரிச்சு போல’ன்னு கடிஞ்சுகிட்டா, ‘ஆமா…ஆகிரிச்சு….என்ன ஆச்சுண்ணு வீட்டுக்கு வந்து தெரிஞ்சுக்குங்க..’ங்கிறா.

‘எதுக்காக இப்பிடியெல்லாம் பேசணும்.? உண்மையிலே கலாவுக்கு என்னதான் ஆச்சு.?

‘அடக் கடவுளே…. இப்பவே இந்தக் குழப்பு குழப்புறாளே….’  நினைக்கும்போது லேசான ‘தலை வலி’ தெரிந்தது.

அந்தத் தலைவலியில் கூட, ஒருவித ‘சுகம்’ இருந்தது.

அன்புக் காதலியால்.., அருமை மனைவியால் வருகின்ற ‘தலை வலி’யில்கூட, ‘சுகம்’ கிடைக்குமென்றால், சிலருக்கு காதலியோ, அல்லது மனைவியோ ‘தலைவலி’யாக அமைந்தால், அந்த  ஆண்மகன் கொடுத்து வைத்தவனா..?

நினக்கும்போதே சிரிப்பு வந்தது. வாயை அழுத்தினேன். சத்தம் வெளியே வராவிட்டாலும் உடம்பு குலுங்குவது சிரிப்பை வெளியே காட்டிக்கொடுத்தது.

“டிக்கட்டை  வாங்கி வெச்சுக்கிட்டு சிரிங்க சார்….செக்கிங் வந்திட்டா எம் பொழைப்பு சிரிப்பாயிடும்….”

நடத்துநரின் குரல் கேட்டபோதுதான் சுயநிலைக்கு மீண்டேன்.

எல்லோரும், என்னையே திரும்பிப் பார்த்தார்கள். என் நிலைமை ரொம்ப கன்ராவியாய் இருந்தது. முன் சீட்டின் முதுகுப்புற கம்பியைப் பற்றிப் பிடித்தபடியே தலையைக் குனிந்தவன்தான்.                   

இறங்கவேண்டிய  இடத்தில்  மாலா  காத்திருந்தாள். வேடிக்கையாய் கேட்டேன்  நான்.

“என்ன…. இண்ணிக்கு  இட்லி, பொங்கல்  ஒண்ணுமே  இல்லியா..”

நேற்றுக்  காணாத  நாணம்  இன்று  தெரிந்தது.  ஒருவேளை  உறவு முறைக்குக்  கொடுக்கின்ற  மரியாதையாகக்கூட  இருக்கலாம்.

வானம் லேசாகக்  கறுத்திருந்தது. ‘மழை  வரலாம்’ என்று எண்ணிய படியே  அவளோடு  நடந்தேன்.

அவர்களது வீட்டுக்குள் நுளைந்தபோது, அங்கே புதிதாய் மலர்ந்த ரோஜாப் பூவாக, பூவோடு பூவாக….,

“கலா…………………..”

அன்பின்  ஆற்றிலே  மிதக்கவேண்டியவனான நான், அதிர்ச்சிக்  கடலிலே  மூழ்கிப் போனேன்.

“கலா…………….”

நான் தேடிவந்த கலா  அங்கில்லை.

ரோஜா மாலையும், சந்தன – குங்குமப் பொட்டுமிட்ட புகைப்படமாக காட்சிதந்தாள்.

“அப்படியானால், நேற்று என்னோடு போனில் பேசியது….” மனதுக்குள் நினைத்தபடி, போனை எடுத்துப் பார்த்தேன். ‘ரிசீவ்ட் கால்’’ லில், கடைசியாக வந்திருந்தது, மாலாவின் அப்பா இலக்கந்தான்.

“அப்படியானால், என் கனவில் வந்து, சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டும்,செய்யவேண்டியதை உணர்த்திவிட்டும் போனாயா கலா….”

வெளியே இடி, மின்னலோடு மழை கொட்ட ஆரம்பித்தது.

“கலா….எதுக்கம்மா இப்பிடி…. இனி நான் வரவே மாட்டேன்….” னு முடிவுபண்ணிட்டியா…..”

துடித்தேன்…. துவண்டேன்…. யாரிடம் கேட்பது…? யார்தான் பதில் சொல்ல…?  எல்லோரும் கதறி அழுதுகொண்டிருந்தார்கள்.

தலை கிறுகிறுத்தது. கீழே விழுந்து, மீண்டும்  ஒரு  “ஹோமா”வை ஏற்படுத்திவிட வேண்டாம் என்னும் எச்சரிக்கை உணர்வோடு, அருகேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன்.

மாலா  ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, தெளிவுக்கு வந்தாள்.

“அக்கா எண்ணைக்குமே  உங்கமேல சந்தேகப்பட்டதில்லை…. ஒண்ணுக்கு மூணு கடதாசி போட்டும் உங்ககிட்டயிருந்து பதில் வராம இருக்கிறதைப் பாத்து, நாங்க எல்லாம் டென்சன் ஆனோம்…. ஆனா, அக்கா  என்ன சொன்னா தெரியுமா….  கடிதம் அவங்க கைக்குக் கிடைக்காமல் , வேற யாரோ அமுக்கிட்டாங்க போல…. அப்பிடீன்னுதான் சொன்னாங்க…. நிச்சயமா.. மாலையும், கையுமா தேடி வருவீங்கன்னு நம்பிக்கையோட்தான் இருந்தாங்க…. அந்த நம்பிக்கைய இண்ணைக்கு நீங்க காப்பாத்திட்டீங்க….”

“அப்பிடி நம்பிக்கையோட இருந்தவள்.., எதனால  இந்த முடிவுக்கு வந்தாள்….”  என் கண்ணில்  அனல் பறந்தது.

மாலா  ஒருகணம் தயங்கினாள்.

“அக்கா  உங்கமேல  அசையாத  நம்பிக்கை  வெச்சுக்கிட்டிருந்த்தால, யாரு அவளைப்  பொண்ணுகேட்டு வந்தாலும், மறுத்துப் பேசிகிட்டேயிருந்தா.. அந்த நேரத்தில,என்னய பொண்ணுகேட்டு வந்தாங்க…. அதை அக்காளே முன் நிண்ணு நடத்திவெச்சா….

ஆரம்பத்தில நல்லாயிருந்தவன், கொஞ்ச நாளில  அக்காகிட்ட  சின்னச்சின்ன சேட்டைங்க பண்ண ஆரம்பிச்சான்…. என் வாழ்க்கை  கெட்டுப்போயிடக்கூடாதுங்கிற காரணத்தால இதை யாருக்குமே சொல்லாமல் மறைச்சுப்புட்டா அவ….

சம்பவம் நடந்த அண்ணிக்கு, எங்கம்மா,அப்பாவும் ஊர்ல  இல்ல…. நானும் வெளிய கடைத்தெருவுக்குப் போயிருந்தேன்…. அந்த  டயிம்பாத்து வீட்டுக்கு  வந்த  அந்தப்பாவி, அக்காகிட்ட சேட்டைபண்ணி, எல்லை மீறி  நடக்க  முயற்சி பண்ணியிருக்கான்…. வேண்டாத வார்த்தைகளை விட்டிருக்கான்…. ‘உன் தங்கச்சி நல்லபடியா வாழணும்னா நீ என்னய அனுசரிச்சுப் போகணும்…. இல்லன்னா,தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்லி, உன் தங்கச்சிய சித்ரவதை பண்ணிக் கொன்னுபுடுவேன்’ னு  மெரட்டினான்…

அவளுக்கு வேறவழி தெரியல்ல…. என்னையும் யோசிச்சா…. தன்னையும் யோசிச்சா…. கத்தியை எடுத்து, தன்னைத்தானே குத்திக்கிட்டா….

அக்கா  பண்ணினதப்  பாத்து, அவன் பயந்து ஓடிப்போயிட்டான்.!

நான்  வீட்டுக்கு  வந்தப்ப அக்காளைப் பாத்து துடிச்சுப்போய்ட்டேன்.. பாதி உசிரில  துடிச்சுக்கிட்டிருந்த அக்கா.., நடந்த எல்லாத்தையும்  சொல்லிப்புட்டா….
கடைசியா உசிரு போற நேரத்திலயும் என்ன சொன்னா தெரியுமா…”
மாலா  பேசி  நிறுத்தியபோது, அவளின்  முகத்தைக்  கேள்விக் குறியொடு  நோக்கினேன்.

தொடர்ந்தாள்  அவள்.

“எம் மனசுக்குப்  புடிச்சவரு  நிச்சயமா  ஏமாத்தமாட்டாரு…. கண்டிப்பா வருவாரு…. அதுவரைக்கும்  நான் செத்துப்போன  தகவலை  யாரும் அவருக்குச்  சொல்லிப்புடாதீங்க…. அப்பிடீன்னா….  மனசு கேக்காம உங்க  அட்ரசுக்கு “தந்தி” குடுத்தோம்….”

சற்று  நிறுத்தினாள்.

எனக்கு  அதிர்ச்சிமேல்..அதிர்ச்சி.

எல்லாவற்றையும்  மறைத்து, மறைத்து என் வீட்டு ஆட்களெல்லாம்  என்னைப்  பழிவாங்கிவிட்டார்களே.! நினைக்க, நினைக்க  இரத்தம் கொதித்தது.

ஒரு சில   நிமிடம்  கழித்து, மாலா தனது வாக்குமூலத்தைத்  தொடர்ந்தாள்.

“கடைசியா  ரண்டு நாள் கழிச்சு,  உள்ளூர்க் காரங்க அந்தப் பாவி இருக்கிற  எடத்தை கண்டுபிடிச்சு, நல்லா ஒதைச்சு, இழுத்துகிட்டு வந்து மரத்தோட மரமா  கட்டிவெச்சுப்பிட்டு  எங்களுக்குத்  தகவல் சொன்னாங்க...!

“என்னால  எங்கக்காவ  பிரிஞ்ச வேதனையத் தாங்க முடியல்ல…. எந்தக் கத்தியால எங்கக்கா  குத்திக்கிட்டு  செத்தாளோ.., அதே  கத்திய மறைச்சு எடுத்துக்கிட்டுப் போனேன்…. எங்கோவம்  தீருவரைக்கும் சதக்கு.. சதக்கு  ன்னு குத்திக் கொன்னே போட்டேன்…

ஜெயில் தண்டனையும் அனுபவிச்சிட்டு  வந்திட்டேன்…. என்ன ஆகித்தான் என்ன….  எங்கக்கா  திரும்ப வரப்போறாளா…. இல்லியே…”

பெருமூச்சு விட்டாள்.

குழம்பிப்போயிருந்த நான்,  நேற்றிரவு கலா என் கனவிலே வந்து பேசியதையெல்லாம் நினைத்துப் பார்த்தேன்.

‘கனவு’களைப் பொறுத்தவரையில் அதை வைத்து, உண்மை,பொய் அது,இது என்று பல கோணங்களில் ஆராய்ச்சி செய்வோர் மத்தியில், “எனது கலா  என் நெஞ்சில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றாள் என்பது எத்தனை உண்மையோ…. அதேயளவுக்கு நெஞ்சில் எழும் கனவும், அதிலே அவள் தந்துகொண்டிருக்கும் தகவலும் பற்றி , நான் சிந்திப்பது தவறல்ல”

ஆனால், அந்தக் கனவுபற்றி மூன்றாம் நபருடன், கருத்துரையாடுவது எனக்கும் எனது  கலாவுக்குமிடையிலான  அந்தரங்கப்  பேச்சைக் கொச்சைப்படுத்துவது போலவும், கேலிக்கூத்தாக்குவது போலவும் எண்ணத்  தோன்றுகிறது.

கலா எனக்குக் கனவிலே வந்து சொன்ன சமாச்சாரங்களில் முக்கிய அம்சம், அவளின் அப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கின்படி, அவரின் மகளுக்கு மாலையிட்டு மருமகனாய் ஆவது.

இதிலே, நான் ‘மகள்’ என ‘கலா’வை அப்போது குறிப்பிட்டாலும், இப்போது அவள், வெளியுலகில் வாழாதிருக்கும் பட்சத்தில், வீட்டில் வாழும் மகள்    ‘மாலா’என்பதுவும்  அவளைத்தான் கலா அடையாளம் காட்டினாள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

“எனக்கு ஏதோ ஆகிரிச்சு…. வீட்டுக்கு வந்து  தெரிஞ்சுக்குங்க….” என்றாளே. வீட்டுக்கு வந்ததும்தான், அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிரிச்சே…!

எழுந்து, கலாவின் புகைப்படத்தினருகே சென்றேன். கொண்டுவந்த மாலையில் ஒன்றினை அவளுக்கு சூட்டினேன். சிறிதுகணம் அவள் முகத்தையே உற்று நோக்கினேன்.

இப்போது மனத்தில் ஒரு தெளிவும், அடுத்த செயலுக்கான முடிவும் எனக்குள் உறுதியானது. அருகே வரும்படி, மாலாவையும் அவள் பெற்றோரையும் கையசைத்தேன். வந்தார்கள்.

“இங்க பாருங்க….நடந்து முடிஞ்சதை இனியொரு தடவை,பேசவோ,    கேக்கவோ என் மனசில தெம்பு இல்லை…. அதே டயிம்ல உங்க குடும்பத்துக்குள்ள இந்தளவு பிரச்சினை  நடக்க  நானும்  ஒரு காரணம்…

இண்ணிக்கு காலைல  இங்க வர்ரத்துக்குப் புறப்படுறப்போ, நான் எடுத்த முடிவை நாலுவருசத்துக்கு முன்னாடி எடுத்திருந்தா, கலா சாவும் நடந்திருக்காது….  மாலா  வாழ்க்கையும்  இப்பிடி  ஆகியிருக்காது….என்னோட  ஆளுக அந்த நேரம் சண்டை போட்டுகிட்டு,  ஒத்துழைப்பு குடுக்காததால, இம்புட்டு லேட் ஆனது….”

அவர்கள் எதுவுமே பேசவில்லை. என்னையே  நோக்கினர். தொடர்ந்து பேசினேன் நான்.

“அதனால,  என் சொந்த பந்தம், சுக துக்கம்  எல்லாமே  நீங்கதான்…. இனி  உங்க கூடத்தான் இருக்கப்போறேன்…. கலா என்மேல வெச்ச நம்பிக்கைக்கு துரோகம் பண்ணாம  அவள் வீட்டில  குடியிருக்கப்போறேன்….”

கலாவின்  அப்பா  குறுக்கிட்டார். அவர் முகத்திலே  கேள்விகுறி.

“நீங்க சொல்றது எனக்குப்  புரியல்ல….”

தயக்கமாகப் பேசினார் அவர். தலை நிமிர்ந்து பதில் சொன்னேன் நான்.

“நான் சொல்றது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்… ஆனா, நீங்க நினைக்கிறது எனக்குப் புரியிது….”

ஒருகணம்  நிறுத்தினேன்…. அவரோ என் முகத்தை பாராமல் தரையை நோக்கினார்.

என் பேச்சு தொடர்ந்தது.

“கலாவைக் கட்டுவானுண்ணு நெனைச்ச இவன், கலா சாவை அறிஞ்சிட்டு, தன்னோட வீட்டைப் பாக்கப் போகாமெ, இங்கேயே

நிரந்தரமா குடியிருந்திட்டா, புருசன் இல்லாமல் வாழ்ந்துகிட்டிருக்கிற மாலாமேல  வீண்பழி வந்திடுமேன்னு யோசிக்கிறீங்க…. உங்க யோசனை நியாயமானதுதான்…. அதனாலதான் நான் ஒரு முடிவுக்கு  வந்திருக்கேன்.”

பேசி முடித்ததும், அவர்களது பதிலை எதிர்பாராமல், இரண்டாவது மாலையை எடுத்து, மாலாவின் கழுத்திலே சூட்டினேன்.

அதிர்ந்துபோய் நின்றனர் அனைவரும். அசராமல் பேசினேன் நான்.

“இந்தா பாரு  மாலா….இது, நான் ஒண்ணும் திட்டம் போட்டு வந்து பண்ணல்ல…. இண்ணைக்கு நீ உன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறதுக்கு காரணம், என் கலாவுக்காகத்தான்…. அவள் உனக்கு அக்காவா இருக்கலாம்…. ஆனா,  கலா  விசயத்தில நீ உன் புருசனுக்குக் குடுத்த தண்டணை என்னால  குடுக்கப்பட வேண்டியது…. அந்தத்  தண்டணையைக் குடுக்கவேண்டியவனும், அதுக்காக ஜெயிலுக்குப் போகவேண்டியவனும் நான்தான்….

எனக்காக உங்க குடும்பம் பட்டது போதும்…. உங்கப்பாவுக்கு நான்  நாலு வருசத்துக்கு முன்னாடி சொல்லிட்டுக் கிளம்பின வார்த்தைப்படி, ‘மணமாலை கொண்டு மறக்காமல் வருவேன்….உங்கள் மகளின் கரம் பற்றி.., மருமகன் ஆவேன்’ ங்கிறதை நிரூபிச்சிட்டேன்…. உன் அக்கா தெய்வமாக இருந்து, ஆசீர்வாதம் பண்ணுவாங்கிற நம்பிக்கை இருக்கு. உங்க அம்மா,அப்பா ஆசீர்வாதமும் கிடைக்கும்னு  நம்புறேன்…. உனக்கு என்மேல நம்பிக்கை இருந்தா, உன் கழுத்தில இருக்கிற மாலையைக் கழட்டி என் கழுத்தில போடு…. இல்லேன்னா என்னய மன்னிச்சிட்டு, அதை எடுத்துத் தூரப் போடு….”

பதிலுக்காகக்  காத்திருந்தேன்.
கலாவின் படத்தினைக் கைகூப்பி வணங்கியபடி நின்றாள் மாலா. கண்ணிலிருந்து ‘பொலுபொலு’என்று கண்ணீர் வழிந்தது.

மறுகணம்  தனது கழுத்திலிருந்த மாலையைக் கழற்றினாள். நொடிப்பொழுதுக்குள் அதைக் கலாவின் படத்துக்குக் கீழிருந்த பலகைப் பீடத்தில் வைத்தாள்.

“ஒரு நிமிசம் ..இருங்க வந்திடுறேன்….’’

சொல்லிவிட்டுப் பதிலை எதிர்பாராமல் உள்ளறைக்குச் சென்றாள்.

உள்ளே, சூட்கேஸ் திறந்து மூடும் சத்தம் கேட்டது. புரிந்தது எனக்கு.

இருகரத்தையும் குவித்துப் பொற்றியபடி வந்தாள்.

வற்றிப்போன குரலோடு கேட்டேன்.

“கைக்குள்ள என்னது மாலா…. மஞ்சள் துணியில சுத்தி, சூட்கேஸ்  அடியில வெச்ச தாலியா…? ”
திகைத்துப்போய் நின்றாள் மாலா. தொடர்ந்தேன் நான்.

“என்ன யோசிக்கிறே …. மனிசியா வாழுறப்போ உங்கிட்ட குடுத்தவ இப்போ தெய்வமா ஆனதுக்கு அப்புறம் எங்கிட்ட சொல்லிப்புட்டா….”  

“என்ன சொல்றீங்க…. நீங்க குடுத்த மோதிரத்தை தாலியா மாத்தி எங்கையில குடுத்துவெச்ச சமாச்சாரம் என்னய பெத்தவங்களுக்கே  தெரியாது…. ஆனா, உங்ககிட்ட  சொல்லியிருக்கான்னா…”

“நேத்து நைட்டு என் கனவில வந்தா…. மோதிரத்தை தாலியாக்கி மஞ்சள் துணியில சுத்தி, உங்கிட்ட குடுத்ததையும் அதை நீ உன் சூட்கேசிலை வெச்சதையும் தெளிவா சொல்லிப்புட்டா….”

நான்  பேசிமுடிப்பதற்குள், மாலாவின் அப்பா பதறியபடி அருகே வந்தார். அவரது கரங்கள் என் கரங்களைப் பற்றின.

மாப்பிள்ளை… தெய்வமாப் போன எங்க பொண்ணு உங்க பக்கத்தில, உங்க கூட, உங்களுக்குள்ளை இருக்காங்கிறதில சந்தேகமேயில்லைப்பா..  எங்க ஆசீர்வாதம் என்ன சுண்டக்காய்…. அவ ஆசீர்வாதம் ஒண்ணே போதும்பா…. நீங்க நல்லாயிருப்பீங்க…. உங்களை ஒதுக்கின உங்கம்மா, அப்பா எல்லாம் நிச்சயமா தேடிவந்து… ஆசீர்வாதம் பண்ணுவாங்க… எம்பொண்ணு கலா அவங்களை வர வெப்பா…. மாலா….  குடும்மா பொட்டலத்த…..”

மாலா கையிலிருந்த மஞ்சள் துணிப் பொட்டலத்தை வாங்கிப் பிரித்தார். உள்ளே மஞ்சள்கயிறு கோர்க்கப்பட்டு கட்டுவதற்குத் தயார் நிலையில் தங்கத்தாலி. எடுத்து என் கைகளில் தந்தார்.

“கட்டுங்க மாப்பிள்ளை…. நீங்க ரண்டுபேரும் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழணும்…”

மாலாவின் கழுத்தில் நான்  தாலியைக் கட்டியபோது நம் அனைவரது கண்ணிலிருந்தும் வழிந்த கண்ணீர் கலாவுக்குக் காணிக்கையானது. அந்தக் கண்ணீருடன் போட்டியிட முடியாமல் தோற்றுப்போன மழை, இருந்த இடம் தெரியாமல் போக, வானம் தெளிவானது.

- முற்றும் -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R