கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -முனைவர்.ப.மருதநாயகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் என்பது அவரது சிறப்புத்தகுதியாகும். அமெரிக்க இலக்கியத்தை ஹவாய் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பேராசிரியர் கல்வியாளர், நூலாசிரியர், ஆய்வாளர் மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் பரிணமிப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில போராசிரியராகக் கல்லூரியிலும் பல்கலைகழகங்களிலும் பணியாற்றியவர். தற்போது எண்பது வயதிலும் விடாப்படியாக மிகுந்த அக்கறையோடு உலக அரங்கில் தமிழில் ஆய்வுக்கட்டுரை வழங்கி தமிழின் பெருமையை உயர்த்தி வருகிறார்.

ஆங்கிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களும், தமிழில் பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் குறித்தும் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. புறநானூறு குறித்த மிக விரிவான இவரது ஆய்வு போற்றத்தக்கது. ஏனைய வடமொழி இலக்கியத்திற்கெல்லாம் மூலம் புறநானூறு தான் என்றும் சிற்றிக்கியங்களின் தோற்றத்திற்கும் புறநானூறு அடிப்டையாக அமைவதையும் வெளிப்படுத்தியுள்ளார். சம காலத்து இலக்கியவாணார்களான வள்ளலார், அயோத்திதாசர், பாராதி, பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், குலோத்துங்கன், ஜெயகாந்தன், ம.இல.தங்கப்பா, சிற்பி போன்றோர்களின் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் தனிச்சிறப்பை விளக்கியுள்ளார்.

ஆங்கிலப்போராசிரியர்கள்; தமிழ்மீது அக்கறை கொள்வதில்லை அல்லது ஆங்கில இலக்கியம் முதலியவற்றைக் கற்றவர் தமிழின் மீது அக்கறை கொண்டதே இல்லை. அதேபோல் தமிழ்இலக்கியம் கற்றவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்பதும் இல்லை. இவ்வகை தமிழ் அறிஞர்கள் இடையில் மருதநாயகம் தமிழுக்கு ஒரு கலங்கரை விளக்கமெனத் திகழ்கிறார்(த.நே.இ.43, ப.4).

ஆங்கில இலக்கியம் கற்றவர் எனினும் தாய்மொழிக்கு வளம் சேர்க்கும் ஒரு சிலரில் பேராசிரியர் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில இலக்கியத்தின் மேன்மை குறித்துப் பேசுபவர்களை மறுக்கும் முறையில் ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்தேடல் என்னும் தலைப்பில் 96 பக்க அளவிலான கட்டுரையை தமிழ்நேயம் (43) வது (மே 2011) சிறப்பிதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரையிலிருந்து மருதநாயகத்தின் ஆய்வுகள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.

 

ஆய்வுப்பணி:
1991இல் மருதநாயகம் வெளியிட்ட முதல் நூலாகிய 'கிழக்கும் மேற்கும்' என்பதனுள் மேற்கத்திய ஆங்கிலமொழி இலக்கியத்தோடு தமிழிலக்கியத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் அரசியல் காரணமாக ஆங்கில மொழி செல்வாக்கு பெற்றது. ஷேக்ஸ்;பியர், மில்டன் போன்றவர்கள் உலக கவிஞர்களாகச் சிறப்பு பெற்றனர். சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஆழ்வார் பாடல்கள் போன்றவை தக்கமுறையில் மேற்கத்தியருக்கு அறிமுகமாகி இருப்பின் தமிழ்க்கவிதையின் மேன்மையை உலகம் அறிந்திருக்கக்கூடும். தொல்காப்பியரின் கவிதையியலையும் இதேபோல அறிமுகப்படுத்தியிருக்க முடியுமானால் அரிஸட்hட்டில் முதலியவர்களின் கவிதையியல் போலப் போற்றப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில்  சாமுவேல் பீப்ஸ் என்பவர் எழுதிய நாட்குறிப்புகள் சிறந்த இலக்கியமாகப் போற்றப்படுகிறது. தமிழில் ஆனந்தரங்கனின் நாட்குறிப்புகள் எவ்வகையிலும் பீப்ஸின் நாட்குறிப்புகளுக்கு குறைந்தவையில்லை. ஆங்கிலத்தில் பெரும் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஜாய்க்கு நிகரானவர் புதுமைப்பித்தன். இவ்வகையில் நல்ல தரமான மொழிபெயர்ப்பின் மூலம் தமிழிலக்கியம் மேற்கத்தியத்திற்கு அறிமுகமாகும் தன்மையுடையவை. இவ்வாறு தன் முதல் நூலிலே மருதநாயகம் பின்னால் அவர் எழுதும் பல நூல்களுக்கும் ஒரு முன்னுரை போல 'கிழக்கும் மேற்கும்' என்ற நூல் அமைத்திருக்கிறது (ப.19) என்கிறார்.

தமிழ்ப்புதுகவிதை வரலாறு பற்றிய ஆய்வுக்கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சுப்பரமணியம் முதலியவர்கள், டி.எஸ்.எலியட், எஸ்ராபவுண்டு ஆகியோர்களை அறிந்துள்ளார்கள் என்ற போதிலும் அவர்களை ஆழமாகப் பயின்றவர்களாக இல்லை. அவ்வாறு பயின்று இருந்தால் இவர்களது புதுக்கவிதையின் தரம் மேம்பட்டிருக்கும் என்கிறார் (ப.19) மருதநாயகம். இங்கும் அவரது மதீப்பீட்டின் திறனை அறியமுடிகிறது.

மருதநாயகம் எழுதி வெளியிட்ட 'தமிழ் செவ்விலக்கியங்கள்' (1998) என்னும் ஒப்பாய்வு நூலில்  மேற்கத்திய இலக்கியத்தையும்  தமிழிலக்கியத்தையும் ஒப்பிட்டு ஆராய்கிறார். கிரேக்க இலக்கியமாகிய (சாஃபக்ளிஸின்) ஆந்திகொனியிலும் தமிழிலக்கியமாகிய(இளங்கோவின்) சிலப்பதிகாரத்திலும் ஊழின் வலிமை பேசப்படுகிறது. ஆந்திகொனி நாடகத்தின் இறுதியில் கிரையோன் என்னும் மன்னன் ஊழின் வலிமையை தன்னால் மீறமுடியாது என்றும், ஊழ் தனது வாழ்க்கையை மண்ணாக்கிவிட்டது என்றும் புலம்புகிறான். சிலப்பதிகாரத்தின் இறுதியிலும் ஊழே வெற்றியடைகிறது. இவ்விரு இலக்கியங்களிலும் ஒத்தன்மை இருப்பதை எடுத்துக்காட்டும் மருதநாயகம் பெரும்பாலும் பழங்காலச்சூழலில் கிரேக்கத்திற்கும் தமிழகத்திற்கும் இருந்த வணிகத் தொடர்பைச் சுட்டிக்காட்டத் தெளிவான சான்று இல்லை எனினும் கிரேக்கத்திற்கும் தமிழகத்திற்கும் வணிகர் மூலம் இலக்கியத் தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்கிறார்.

'அதேபோல் சாஃபக்ளிஸின் ஈடிப்பஸ் நாடகங்கள் மனிதம் விதியோடு மோதுவதைக் காட்டுகின்றன.     ஆனால் ஈடிப்பஸ் கண்ணகியளவுக்கு விதியை வென்று உயரவில்லை'. அதாவது கண்ணக்p விதியை வென்றாள் என்பது கா.செல்லப்பன் கருத்து(தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும், ப.56)

மருதநாயகம் பல நூல்களிலும் ஒப்பியல் ஆய்வுமுறையை பயன்படுத்துகிறார். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும் போது புதிய உள்ளொளியைக் காணமுடியும் என்கிறார். சான்றாக சல்மான் ருஷ்டியின் 'நள்ளிரவுக்; குழந்தைகள்' நாவலையும் தோப்பில் முகமது மீரானின் 'சாய்வு நாற்காலி' என்ற நாவலையும் ஒப்பிடுகிறார். காஷ்மீரில் வாழ்ந்த இசுலாமிய குடும்பம் ஒன்று அடுத்தடுத்து வந்த மூன்று தலைமுறைகளிலும் சிதைந்ததை 'நள்ளிவுக்; குழந்தைகள்' நாவல் வெளிப்படுத்துகிறது. தோப்பில் முகமது மீரானின் நாவலும் இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு இசுலாமிய குடும்பம் மூன்று தலைமுறைகளில் சிதைந்ததை எடுத்துரைக்கிறது. ருஷ்டி, மிக விரிந்த உலகனுபவம் பெற்றவர். இத்தகைய வாய்ப்பு மீரானுக்கு இல்லை என்றாலும் ருஷ்டியின் படைப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய இயல்பான படைப்பாற்றலை மீரான் வெளிப்படுத்துகிறார் (ப.39). சல்மான் ருஷ்டி இஸ்லாம் பற்றிய திறனாய்வு கருத்துகளையும் கொண்டவர். இஸ்லாம் பற்றி இத்தகைய திறனாய்வு கருத்து தனக்கு இல்லை என்று சொல்லிக்கொள்கிறார் மீரான். 'பொருளாதார பலம்கொண்ட ஆதிக்கக்காரர்களையும் அவர்களின் அதிகாரங்களுக்கு ஆட்பட்டு அவ்வதிகாரமெ தனக்கான நீதி என்று ஆழமாக நம்பிக்கை கொள்கிற மக்களையும் மற்றும் அதற்கெதிரான கலகக்குரல் எழுப்பும் கதாபாத்திரங்களையும் இஸ்லாமியச் சமூகத்தில் நிலவிய பழமைவாத அடிப்படையிலான மூடநம்பிக்கைகளையும் அதற்கு எதிர்ப்பாக வந்த அடிப்படைவாதத்தின் விரைப்புத் தன்மையையும் வட்டாரமொழிச் சொற்களோடும் மீன்வாடையோடும் எடுத்துரைக்கின்றன மீரானின் புதினங்கள்' (பெயல் அக்'15 - மார்'16 - ப.44).  என்ற நசீமாவின் கூற்றில் மீரானின் இசுலாமிய திறனாய்வு பார்வையைப் புரிந்து கொள்ளமுடியும்.

மேலும் ஒரு சான்று அமெரிக்க நாவலாசிரியராகிய சால்பெல்லோ எழுதிய 'ஹெர்ஸாக்' நாவலையும் நீலபத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவலையும் ஒரு கட்டுரையில் ஒப்பிடுகிறார். கணவனை ஏமாற்றியதோடு, குழந்தைகளைத் தவிக்கவிட்டு ஒரு பணக்காரனைத் தேடி மணந்து கொள்கிற பெண்ணைப்பற்றியது இவ்விரண்டு நாவல்களும். சால்பெல்போ ஒரு பெரிய படிப்பாளி. அவருக்கு நிகரான கல்வித்தகுதி இல்லாதவர் நீலபத்மநாபன் என்றாலும் மனித வாழ்வின் அவலங்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் இருவரும் ஒத்தத் தன்மையுடையவர்கள் (ப.27)என்கிறார் மருதநாயகம். வெகுநுட்பமாக எழுதிய அமெரிக்க நாவலோடு ஒப்பிடும்போது தமிழ் நாவல் மோசமில்லை என்ற கருத்தே நமக்கு ஏற்படுகிறது.

திறனாய்வுப்பணி:

ஜெயகாந்தன் எழுதிய 'பாரிசுக்குப் போ' நாவலை இதே நூலில் திறனாய்வு செய்கிறார் மருதநாயகம். புகழ்பெற்ற பாரிசின் கலை உலகத்தோடு பத்தாண்டுகள் தொடர்பு கொண்ட சாரங்கன் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறான். வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற இவன் மேற்கத்திய இசையைப் பெரிதும் மதிக்கிறான். அவனது தந்தையார் கர்நாடக சங்கீதத்தில் வல்லவர், வீணை வாசிப்பவர். இருவருக்கும் இடையில் நிறைய உரையாடல்கள். மேற்கத்திய இசையைக் கர்நாடக சங்கீதத்தோடு இணைத்து இசையை மேம்படுத்த வேண்டும் என்று கருதுபவன் சாரங்கன். கர்நாடக சங்கீதம் பக்தி உணர்வாகிய ஒன்றில் மட்டும் ஆழ்ந்துள்ளது. மனிதவாழ்வின் பல்வேறு அனுபவங்களோடு, மேற்கத்திய இசையைப் போல கர்நாடக சங்கீதத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறான் சாரங்கன். இரண்டு இசையையும் இணைப்பதில் அவன் வெற்றியடைந்தானா? அல்லது தோல்வியுற்றானா? என்ற பாணியில் நாவல் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும். இப்படி இயங்கியிருந்தால் நாவலின் கலைத்திறன் மேம்;பட்டிருக்கும். இதற்கு மாறாக, ஒரு நாட்டியக்காரியின் காதலுக்கு வசப்படுகிறான். கதையின் கலை தர்க்கம் சிதைகிறது. இறுதியில் வேறு வழியில்லாமல் சாரங்கன் கல்கத்தாவுக்கு மேலை இசை கற்றுக்கொடுக்கச் செல்கிறான். இவ்வாறு 'பாரிசுக்குப் போ' நாவல் சிறப்பாக தொடங்கினாலும் இறுதியில் சிதைவதை மருதநாயகம் எடுத்துக்காட்டுகிறார்.

திறனாய்வாளர் தெ.பொ.மீ:

மேலைநாட்டு இலக்கியவாதிகளும், திறனாய்வாளர்களும் தமிழ்ப்படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்களைக் காட்டிலும் அறிவிலும் படைப்புத்திறனிலும் மேம்பட்டவராக இருப்பதை மருதநாயகம் சுட்டிக்காட்டாமல் இல்லை. இவ்வாறு சுட்டிக்காட்டும் மருதநாயகம் தெபொ.மீயை மேற்கத்திய திறனாய்வாளருக்கு நிகரானவர் என்று தன்  முனைவர்பட்டத்திற்கான ஆய்வு நூலில் ('திறனாய்வாளர் தெ.பா.மீ')எடுத்துரைக்கிறார். டி.எஸ்.எலியட்டைப்போல தெ.பொ.மீயும் படைப்புகளை மதிப்பிடும் பொழுது இலக்கிய தன்மைக்கு முதன்மை தரும் போக்கைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறார். அரவிந்தர் படைப்புகளில் ஆன்மீகம் கலந்திருப்பதைப் போலத் தெ.பொ.மீயின் கட்டுரைகளிலும் அவரது ஆன்மீகப்பண்பு ஒளிறுகிறது என்பதை மருதநாயகம் தெளிவுபடுத்துகிறார். வடமொழியும் தமிழும் ஒன்றுக்கொன்று கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மொழிகள். இந்தியாவில் வழங்கும் பல்வேறு மொழி இலக்கியங்களிலிருந்து இந்திய இலக்கியம் என ஒன்றை வகுத்துக்கொள்ளமுடியும் என்பதும் தெ.பொ.மீயின் கருத்து.

தமிழறிஞர் பாவாணர்:
மருதநாயகத்தின் கட்டுரைகளில் பெரிதும் வித்தியாசமான சில கட்டுரைகளை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். மேலை மொழியியலாளர்களின் ஆய்வுகள் அறிவியல் தன்மையோடு இருப்பதாகவும் பாவாணரின் ஆய்வுகள் அறிவியலுக்கு ஒத்ததாக இல்லை என்றும் தமிழர் பண்பாடு பற்றிய அவரது கருத்துக்கள் வெற்று கற்பனை என்றும் மேலை இலக்கியத் திறனாய்வாளர்களைப் பின்பற்றும் தமிழ்மொழியிலாளர்கள் கருதினர். மேலைமொழியியலும் கீழைமொழியியலும் வௌ;வேறு சார்புடையவை. இரண்டையும் ஒப்பிடுவதற்கில்லை. கீழை மொழியியலுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. இவ்வகையில் பாவாணரின் ஆய்வுகள் அமைந்திருக்கின்றன என்கிறார் மருதநாயகம்.

பாவலர் பெருஞ்சித்திரனார்:
இருபதாம் நூற்றாண்டு தமிழ்க்கவிதை வரலாற்றில் பெருஞ்சித்திரனாருக்குரிய இடத்தைத் தமிழ்திறனாய்வாளர்கள் தரமறுக்கின்றனர். தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப் பண்பாடு ஆகிய மூன்று கருத்துக்களை முதன்மைப்படுத்தி கவிதை எழுதினார் பெருஞ்சித்திரனார். நூற்றுக்கணக்கான அவரது கவிதைகளில் ஒன்று மற்றதைப்போல இல்லை. பல்வேறு யாப்புகளில் பல்வேறு சுவை நயங்களில் பல்வேறு உத்திகளையும் வைத்துப் பாடியவர் பெருஞ்சித்திரனார். மருதநாயகம் இவரது கவிதைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 'தமிழின் பெருமையும், தொன்மையும் இவர் சொல்லும் போது பேருவகையும், தமிழின் நிலை இவ்வாறு உள்ளது என்று இவர் உரைக்கும் போது அவலமும் ஆறாத்;துயரமும், தமிழின் புறப்பகைவரை இவர் சாடும்போது அறச்சினமும், உட்பகைவரைச் சுட்டும்போது நகையும் எள்ளலும், தமிழுக்கு உழைப்போரைப் போற்றும்போது பெருமிதமும், தமிழைக் காட்டிக் கொடுத்தோரை ஏசும் போது இளிவரலும் அருவருப்பும் தூண்டப்படும்' (ப.86). இவ்வாறு தம் கவிதைகளை அழகுற யாத்தவர் பெருஞ்சித்திரனார் என்கிறார் மருதநாயகம்.

புதுக்கவிதையாளர் பலரும் பெருஞ்சித்திரனார் முதலியவர்களைப் பாராட்டுவதில்லை. அவர் கவிதைகளை மிகைஉணர்வு என்று ஒதுக்கினார். இவர்களுக்கு மாறாக, கவிதை பற்றிய இலக்கண அறிவும் தமிழ் உணர்வும் மிகுந்த மருதநாயகம் பெருஞ்சித்திரனாரை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர் என்று பாராட்டுகிறார். இவ்வாறே ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகளையும் விரித்துரைக்கிறார் மருதநாயகம். தனித்தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் இவர்கள் நம் காலத்திற்குரியவர்கள், தமிழிலக்கிய வரலாற்றில் இவர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு என்ற முறையில் எழுதியுள்ளார்.

மருதநாயகம் பழந்தமிழின் பெருமையை உயர்த்திப்பிடிக்கும் அதேவேளையில் இக்கால இலக்கியவாதிகளின் நிறைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டுவதில் தவறவில்லை. இக்காலச்சூழலில் தமிழில் பேசுவதும், படிப்பதும் பெரும்பாலாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பிற துறையினரும் ஆங்கில இலக்கியம் படித்தவர்களும் ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக நினைப்பவர்களுக்கு மத்தியில் பதிலடி கொடுப்பதுபோல் மருதநாயகம்; திகழ்ந்து வருகிறார். ஆங்கிலப்பேராசிரியராகப் பணிபுரிந்து அதே சமயத்தில் பழந்தமிழிலக்கியத்தை மேலைநாட்டினர் கவனத்திற்குக் கொண்டு சென்றதோடு மேற்கத்திய இலக்கியங்களுக்கு நிகரான இலக்கியங்கள் தமிழிலும் இருக்கின்றன என்பதை நிறுவியும் உள்ளார்;

மருதநாயகம் குறித்து ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் கூறுவதாவது:  'மருதநாயகம் போல் ஒவ்வொரு பேராசியரும் தம் ஆற்றலை, அறிவை, புலமைக்கொண்டு, தாய்மொழிக்கு வளம் சேர்க்கப் புறப்படும் நாளே பாவேந்தர் சொல்வது போல உலகின் பல்துறை அறிவு நலமும் செந்தமிழைச் சேர்ந்து, செந்தமிழைச் செழுந்தமிழாக்கும் நன்னாளாகும்' (பாரதி ஆறு பாரதிதாசன் பத்து, பதிப்புரை) என்கிறார்.

செம்மொழி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, தமிழ்ப்பற்றின் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் கருத்தரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் கலந்து கொண்டு, தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றி வருகின்றார் மருதநாயகம். உலகளவில் நடைபெற்ற இருபத்து இரண்டிற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தமிழிலக்கியங்கள் குறித்து உரையாற்றி வருகின்றார்.  எத்தகையை ஆரவாரமும் இன்றி  உலகை வளம் வரும் இவர் பல்வேறு உலகத் தமிழறிஞர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தமிழின் பெருமையைஃ தேமதுர தமிழோசையை  தற்காலத்தில் உலகறிய பறைசாற்றுவதில் ஒயாது முனைப்புடன் இயங்கி வருகிறார். மருதநாயகத்தின் பல்வேறு பணிகளைப்பற்றி ஆராயும்பொழுது ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். இவரைப்போல இன்னொரு ஆங்கிலப்பேராசிரியரும் இல்லை. அதே சமயம் இன்னொரு தமிழ்பேராசிரியரும் இல்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R