- முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. சங்ககால மக்களின் வணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கைநிலை எப்படி இருந்தது என்பதையும் அறியவேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலப்பிரிவில் இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பண்டைத் தமிழ்நாட்டின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்திருந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளின் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாக அமைந்திருந்தன. தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாக இடம்பெற்றுள்ளன. நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன இன்றியமையாக் கைத்தொழில்களாக இருந்தன.

அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பண்டமாற்று முறையில் நிகழ்ந்திருக்கிறது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற சந்தைகள் இருந்துள்ளன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி (சிலம்பு.இந்திரவிழாவூரெடுத்த காதை.59) என்றும், இரவு நேரத்தில் செயல்படும் கடைகளை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியும் காணக்கிடைக்கின்றன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டுள்ளனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணமிக்க வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதி பொருட்களில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பண்டைத்தமிழர்களின் பல்வேறு வணிகத்தகவல்கள் குறித்து சங்கஇலக்கியம் நமக்கு சான்றுரைக்கின்றன. இத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பண்டைத்தமிழர் வணிகத்தில் இடம்பெற்ற பண்டமாற்று முறையினையும், அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டமாற்றுப் பொருட்களையும் குறித்து ஆய்கிறது இக்கட்டுரை.

பண்டமாற்று முறை
சங்ககாலத் தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பல்வேறு பொருட்களைக் பணம் கொடுத்து வாங்காமல் பண்டமாற்று முறையிலேயே பெற்றுக்கொண்டனர். ஏனெனில், பண்டாற்று முறையென்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக தனக்குத் தேவையான பிறிதொரு பொருளைப் பெற்றுக்கொள்வதாகும். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் முறை இருந்தபோதிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் பண்டமாற்று முறையே பொது வழக்காக இருந்துள்ளது. பண்டைத்தமிழகத்தில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்ததை அறியமுடிகிறது.

பாலைக் கொடுத்து இடையன் அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக்கொண்டதை ‘பாலொடு வந்த கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று முதுகூத்தனார் குறுந்தொகை 221 ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளார். ஆயர் மகளிர் தயிரையும் மோரையும் கொடுத்து உணவுக்கான தானியத்தைப் பெற்றுக்கொண்டனர் என்பதை,

“நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
ஊறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருந்தி”

என்ற பெரும்பாணாற்றுப்படை (155-163) பாடலில் உருத்திரங் கண்ணனார் பதிவிட்டுள்ளார். ஆனால், இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று முறையில் பயன்படுத்தாமல் காசுக்கு விற்று அதனைச் சேகரித்து பின்னர் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று,

 

“நெய்விலைக் கட்டிப் பசுப்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர்”

என்ற பெரும்பாணாற்றுப்படை (164-166) பாடலின் வழி அறியமுடிகிறது. மேலும், வேட்டுவன் தான் வேட்டையாடிக் கொணர்ந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுக்கொண்டனர் என்ற செய்தியை,

“கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உவந்தனர் பெயரும்
தேன்னம் பொருப்பன் நன்னாடு”

என்ற புறநானூற்று (33:1-8) பாடலில், கோவூர் கிழார் பண்டைத்தமிழரின் வணிகநிலைப்பாடுகளை குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்நாட்டு நீர்நிலைகளில் வலைவீசியும், தூண்டில் இட்டும் மீன் பிடித்து, அதனை பாண்மகளிரிடம் கொடுத்தனிப்பி பயிற்றுக்கும் தானியத்துக்கும் பண்டமாற்றி வரச்செய்தனர் என்ற செய்தியை,

“முள் எயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும்” (ஐங்குறுநூறு மருதத்திணை புலவிப்பத்து.47)

என்ற பாடலில் ஓரம்போகியர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரை உப்பளங்களில் நெய்தல் நிலமக்கள் விளைவித்த உப்பினை உமணப்பெண் மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர்ஊராகச் சென்று உப்பைக் கொடுத்து நெல்லை மாற்றிக்கொண்டதனை,

“கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின்”   

என்று அம்மூவனார் அகநானூற்றில் (140.5-8) குறிப்பிட்டுள்ளார். மேலும், கடலில் கிடைத்த மீனைக் கொடுத்து நெல்லை பண்டமாற்றும் முறை இருந்ததனை,

“மீன்நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனைமறுக்குந்து”   

என்ற பாடலில் புறநானூறு (343.1-2) குறிப்பிடுகிறது. இதனைப்போன்று பரதவ மகளிர் சுறா, இறால் போன்ற கடல்மீனைத் திருவிழா நடக்கிற ஊர்களில் கொண்டுசென்று விரைவில் விற்றுச் சென்றதனைச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் பதிவிட்டுள்ளார். ‘இனிது பெறு பெருமீன் எளிதினிற் மாறி’ (239.3) என நற்றிணையும், ‘பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத், தயிர்மிதி மிதவை யார்த்துவம்’ (340.14-14) என அகநானூறும், ‘உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு’ (60.4) எனக் குடவாயில் கீரத்தனார் அகநானூற்றிலும் மீனையும், உப்பையும் கொடுத்து நெல்லை பரிமாற்றம் செய்ததனையும், அந்நெல்லைப் பெற்றவர்கள் சிறுபடகுகளில் (அம்பி) கழிகளின் வழியே வந்ததனை குன்றியனார், பரணர் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர் என்பதனை சங்கஇலக்கியத்தில் காணமுடிகிறது.

“துய்த்தலை இதம்பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளிரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை யுழவர் தனிமடமகள்”

என்ற நற்றிணைப் (97.6-9) பாடலில், தெருக்களில் பூ விற்கும் பெண்ணானவள் பூவை நெல்லுக்குப் பண்டமாற்ற செய்ததனை குறிப்பிடுகிறது.

“துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதுமலாட்டி”

என்ற நற்றிணைப் (118.8-11) பாடலில், மகளிர் தெருக்களில் பூ விற்றதைப் பாலை பாடிய பெருங்கடுக்கோவும் பதிவுசெய்துள்ளார். எனவே சங்ககாலத்தில் பூக்களும் பண்டமாற்றுப் பொருளாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.

வேடர்கள் ஒன்றுகூடிக் காட்டில் வேட்டையாடிக் கொன்ற யானையின் தந்தங்களை மதுபானக் கடையில் கொடுத்து நெல்லரிசியால் உருவாக்கப்பட்ட மதுவினை வாங்கி அருந்திய செய்தியினை,

“வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளிஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாண் மகிழ் அயரும்”

என்று அகநானூற்றுப் (61.8-10) பாடல் குறிப்பிடுகிறது.

வேடர் தேனையும் கிழங்கையும் கொண்டுவந்து மதுபானக் கடையில் கொடுத்து அதற்கு மாறாக வறுத்த மீனையும் மதுவையும் வாங்கி உண்டனர் என்றும், இதனைப் போன்று உழவர்கள் கரும்பையும் அவலையும் கொடுத்து அதற்குப் பதிலாக மதுவையும் வறுத்தமீன் இறைச்சியையும் பெற்று உண்டனர் என,

“தேனெய்யொடு கிழங்கு மாறியோர்
மீனெய்யொடு நறவு மறுகவும்
தீங்கரும்பொடு அவல் வகுத்தோர்
மான் குறையோடு மது மறுகவும்”

என்ற பொருநராற்றுப்படை (214-271) பாடலில் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

மேலும், கொற்கைக் குடாக்கடலின் கரையோரங்களில் வாழ்ந்த பரதவர்கள் கடலில் கிடைத்த மீன் மற்றும் முத்துச் சிப்பிகளைக் கள்ளுக்கடையில் கொடுத்து மது அருந்தியதனை,

‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசை கொற்கை’

என்னும் அகநானூற்றுப் (296.8-10) பாடல் வழி அறியமுடிகிறது. பாண்டி நாட்டிலிருந்த பெயர் பெற்ற கொற்கைக் குடாக்கடலானது பிற்காலத்தில் மணலால் மூடப்பட்டு மறைந்து போயின என்பர்.

எயினர் மது அருந்துவதற்காக மது விற்கும் இடத்திற்குச் சென்று பண்டமாற்றம் செய்து மது அருந்த எப்பொருளும் இல்லாததால் ‘காட்டில் வேட்டையாடி யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறோம். அதற்குப் பதிலாக இப்போது கள்ளைக் கடனாகக் கொடு’ என்று கேட்ட செய்தியை,

“வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்    10
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து...”

என்ற அகநானூற்றுப் (245.8-13) பாடலில் மருதன் இளநாகனார் பதிவுசெய்துள்ளார். இவையனைத்தும் பண்டைத்தமிழர்கள் மது அருந்தும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்பதனை தெளிவாக குறிப்பிடுகிறது. மேலும், கொல்லி மலைமேல் வாழ்ந்த சிறுகுடி மக்கள், தம் சுற்றம் பசித்திருப்பதனால் தங்களிடமிருந்த யானைத் தந்தங்களை கொடுத்து அதற்குப் பதிலாக உணவிற்கான தானியத்தைப் பெற்று உணவு சமைத்துண்டனர் என,

“காந்தனஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக்
கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரை”

என்ற குறுந்தொகைப் (100.8-13) பாடல் குறிப்பிடுகிறது. சங்கஇலக்கியம் குறிப்பிடுகின்ற பண்டமாற்று முறையின் வழி மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், அக்காலத்தில் நிலஅமைப்பு யாவும் பொதுவுடமையாக இருந்ததால் அந்தந்த நிலத்தின் தன்மையறிந்த அல்லது கைத்தேர்ந்த மனிதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருளைக்கொண்டும், கூடுதல் தேவைக்காகப் பிறிதொரு குழுவைச் சார்ந்தும் வாழ்ந்துள்ளனர். ஏனெனில், அவரவர் நிலத்தில் விளையும் பொருட்களில் மிகுந்தும் சமயத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகமே நானில மக்களின் வாழ்வதாரத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. பண்டமாற்று வணிகம் நடந்த காலத்தில் ரூபாய் என்று சொல்லக்கூடிய காசுகளின் பயன்பாடு இல்லையென்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில், செம்பு, வெள்ளி, பொன் போன்றவற்றாலான காசுகள் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்டமாற்று முறையைப் போலவே காசுகளின் பயன்பாடு குறித்த செய்தியையும் சங்க இலக்கியத்திலிருந்து பெறமுடிகிறது. பாலைநிலத்து வழியிலே இருந்த நெல்லி மரங்களிலிருந்து உதிர்ந்துள்ள நெல்லிக்காய்கள் பொற்காசுகள் உதிர்ந்து கிடப்பதைப் போல காட்சியளிக்கின்றன,

“புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்
கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்
பொலஞ்செய் காசிற் பொற்பத்தாஅம் அத்தம்”
என்று அகநானூற்று (363.6-8) பாடல் உணர்த்துகிறது.

மேற்கண்ட பண்டமாற்று முறையும், பொதுவுடைமைச் சூழலும் இல்லாமல் அல்லது உடைமை வர்க்கமாக மாறியதால்தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வும் வர்க்கவேறுபாடுகளும் தலைவிரித்தாடுகிறது. மேலும், பொருட்களை உருவாக்கும் நேர்த்தியானவர்களின் செய்தொழிலால்தான் சமூகத்தில் இனவேறுபாடுகள் பெருகி சாதிக்கொடுமைகள் காலம்காலமாக வேரூன்றி அழிக்கமுடியாமல் நிற்கிறது.

இன்றைய சூழலில் பொருட்களின் பயன்பாடு பல்வேறு மாறுதலடைந்திருந்தாலும் உப்பிற்கு நெல்லை பண்டமாற்றம் செய்யும் மரபு இன்றும் நடைமுறையில் உள்ளது. இன்றும் இதை பல கிராமப்புறங்களில் காணமுடிகிறது. இது பண்டைத்தமிழர் பண்பாட்டின் நீட்சி என்று சொல்லலாம். அதேநேரத்தில் தான் உருவாக்கிய அல்லது விளைவித்த பொருட்களை தேவைகருதி பிறருக்கு விற்கும் வழக்கமே உலக மக்களின் இயங்குதலுக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்ற மெய்மையை அறியமுடிகிறது. எனவே எந்நிலையிலும் ஈட்டிய செல்வங்களும், உருவாக்கிய பொருட்களும் ஒருவரிடத்தில் மட்டுமே தேக்கமடைந்துவிட்டால் அது வீணற்றது என்று கூறலாம். மேலும், இயற்கை அல்லது செயற்கை முறையில் கிடைத்த எப்பொருளாயினும் மானுட நன்மைக்குப் பயன்தருமாயின் அதனை சுழற்சிமுறையில் யாவரும் பயன்படுத்த வழிவகுத்து இவ்வையகம் வாழ வழி செய்வது அடிப்படை நியதியாகும்.

வணிகப் பொருட்களெல்லாம் ஒரே இடத்தில் உற்பத்தியாவதில்லை. அவை வௌ;வேறு இடங்களில் உற்பத்தியானபடியால் அப்பொருட்களையெல்லாம் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு வணிகம் செய்பவர்கள் கால்நடைகளையும், ஊர்திகளையும் பயன்படுத்தியுள்ளனர். இவை இன்றைய காலகட்டத்திலுள்ள விரைவுப் போக்குவரத்து போன்றதல்ல. எருது, கழுதை, வண்டி, படகு, பாய்மரக்கப்பல் போன்ற பொதி இழுக்கும் அல்லது தாங்கும் விலங்குகளும் ஊர்திகளும் ஆகும். எருதுவும் கழுதையும் விவசாயத்தில் ஏர் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிந்து, பாரசீகம், அரபி போன்ற அண்டை நாடுகளுடன் வாணிகத்தொடர்பு கொண்ட பிற்காலத்தில் குதிரைகளின் இறக்குமதியால் தமிழர் வாணிகத்தில் குதிரைகள் வண்டியிழுக்கவும் பிறதேவைகளிலும் இடம்பெற்றன. வீரர்களுக்கும், அரசர்களுக்கும் போர் வாகனமாகவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தமிழர்கள் குதிரைகளைப் பொதி சுமக்க ஈடுபடுத்தவில்லை என்பர். இது பெருவணிகத்தைக் குறிப்பிடுகிறது. மேலும், வாணிகர்கள் பலர் ஒன்றுசேர்ந்து வியாபார நோக்கத்திற்காகச் சென்றால் அவர்களை ‘வாணிகச் சாத்து’ என்றழைப்பர். இவர்கள் தங்களோடு வில்லேந்திய வீரர்களையும் உடன் அழைத்துச்செல்வர். ஏனெனில், ஆரலைக்கள்வர்கள் வாணிகர்களின் பொருட்களைக் கொள்ளையடிப்பதற்காக காட்டுவழியில் தங்கியிருப்பர். அவற்றைக்கடந்து தரைவழி வாணிகத்தைப் பயன்படுத்தினர். அதற்குச் சுங்கச்சாவடிகளில் வணிகர்கள் வரி செலுத்தினர்.

“தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல்
புணர்ப் பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு”

என்ற பெரும்பாணாற்றுப்படைப் (77-82) பாடலில், சிறுசிறு பொதிகளாக கட்டப்பட்ட பலாப்பழம் போன்ற அளவுடைய மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மீதேற்றி வாணிகச்சாத்துக்கள் ஊர்ஊராகச் செல்லும் போது, வில்லேந்திய வீரர்கள் காவல்புரியும் சுங்கச்சாவடிகளில் வரிசெலுத்திச் சென்றனர் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார். ஊர்விட்டு ஊர்செல்லும்பொழுது வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் வரிசெலுத்திப் பயணிக்கும் முறை அன்றும் இன்றும் தமிழர் பண்பாட்டில் தொடரும் மரபாகச் சொல்லலாம்.

தரைவழி வாணிகத்தை விடவும் கடல்வழி வாணிகமே மிகுதியாகவும் சிறப்பானதாகவும் இருந்துள்ளது. இது கள்வர்களிடமிருந்து வாணிகப்பொருட்களை பாதுகாக்கும் அடிப்படையைக் கொண்டது. ஏனெனில் கள்வர்கள் வணிகச்சாத்தரை வென்று அவர்களின் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சான்றுகள் சங்கஇலக்கியத்தில் பரவலாகக் காணமுடிகிறது. மேலும் தரைவழி வாணிகம் செய்வதற்கு ஏற்ற சாலைவசதிகளும் அக்காலத்தில் இல்லாததும் முக்கியக் காரணம் எனலாம். இதனை

“சாத்தெறிந்து
அதர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழில்
வல்வில் இளையர்”

என்ற பெரும்பாணாற்றுப்படைப் (245.5-7) பாடல் வழி கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார்.

எந்தவொரு தொலைத்தொடர்பு சாதனங்களும் இல்லாத அக்காலகட்டத்தில் தரைவழியாகவும் கடல்வழியாகவும் தமிழ்நாட்டு வாணிகர்கள் நாடுபல கடந்து வாணிகம் செய்துள்ளனர் என்பதனை அறியும்பொழுது ‘திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்ற பழஞ்சொல்தான் நினைவில் நிற்கிறது. ஏனெனில், மேற்கே இத்தாலி, கிரேக்கம் (யவனநாடு) முதல் கிழக்கே சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) பர்மா, மலேசியா வரையிலும், தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கங்கைக்கரை வரையிலும் அக்காலத்துத் தமிழர் வாணிகம் பரந்து காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வாணிகர் இலங்கைக்குச் சென்று வாணிகம் செய்ததாகச் சங்கஇலக்கியங்கள் எங்கும் சான்றுரைக்கவி;ல்லை. ஆனால், தமிழ்நாட்டு குதிரை வாணிகர் சேனன், குட்டகன் என்னும் இருவர் இலங்கையைக் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் அரசாண்டதை (சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்று புத்த சகாப்தம் 306 முதல் 328 வரை) இலங்கை நூல்கள் கூறுகின்றன என்று பழங்காலத் தமிழர் வாணிகம் என்னும் நூலில் மயிலை.சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார். (பக்கம்.35)

பாண்டிய நாட்டிலிருந்து சாவகநாட்டுக்கு நெடும்பயணம் செய்து வாணிகம் செய்தததை மணிமேகலைக் காப்பியமானது,

“மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறத்தலின்
ஊனுயிர் மடிந்தது உரவோய் என்றலும்
........................................................................
அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலிதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள்”

என்ற மணிமேகலை பாத்திர மரபு கூறிய காதையில், வேறெங்கும் கிடைக்காத வணிகப் பொருட்களை வாங்கிவருவதற்காக தமிழகத்திலிருந்து சாவகநாட்டிற்குக் கப்பலில் நெடும்பயணம் செய்த தமிழ்நாட்டு வணிகரின் குறிப்பினை அறியமுடிகிறது.

பண்டைத்தமிழர் தரைவழியாகவும், கடல்வழியாகவும் செய்த வாணிகத் தொழிலில் பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் நாடுபல கடந்து தொழில்தொடர்பு செய்ததை பண்டைத் தமிழிலக்கியங்கள் நன்குணர்த்துகின்றன. மேலும், வாணிகத்தொழிலில் கைத்தேர்ந்த செல்வந்தர்களுக்கு ‘எட்டி’ என்ற பட்டமும், பொன்னால் செய்யப்பட்ட எட்டிப்பூவும் வழங்கி அன்றைய அரசு சிறப்பித்துள்ளது. இவ்வாறு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்குச் சென்று வணிகம்செய்து பெரும்பொருளைச் சேர்த்த தருமதத்தன் என்னும் வணிகனுக்கு எட்டிப்பட்டமும், எட்டிப்பூவும் வழங்கி அன்றைய பாண்டிநாட்டு அரசன் சிறப்பித்தான் என்பதனை,

“வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
நீள் நிதிச் செல்வனாய் நீணில வேந்தனில்
எட்டிப் பூப் பெற்று இருமுப்பதிற் றியாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினான்”

என்ற மணிமேகலை நான்காவது காதை (22:111-114) குறிப்பிடுகிறது. இவ்வாறு தமிழக வாணிகர்கள் பிறநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்ததைப் போல, அயல்நாட்டு வாணிகர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து வாணிகம் செய்தனர் என்பதனை,

“பயனற வறியா யவணர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்”

என்று சிலப்பதிகாரப் (5:10-12) பாடல் குறிப்பிடுகிறது. மேலும், அயல்நாடுகளிலிருந்து வாணிகத்திற்காகத் தமிழகத்திற்கு வந்தவர்கள் வேற்றுமொழி பேசுபவர்களாக இருந்தார்கள் என்பதனை,

“மொழிபல பெருகிய பழதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்”

என்ற பட்டினப்பாலைப் (216-218) பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன. தமிழிலக்கத்திலிருந்து பெறப்பட்ட இத்தரவுகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டில் வணிகத்தொழிலானது சிறந்து விளங்கியதையும், உலக உயிரினங்களின் இயங்குதலுக்கு உற்பத்தியாளர்;களும், உற்பத்திப் பொருட்களும் வாணிகத்தொழிலில் ஈடுபட்டிருப்பதே இன்றியமையாக் காரணம் என்பதனையும் தெளிவாக்குகிறது.

பார்வை நூல்கள்
1. கு.வெ.பாலசுப்பிரமணியம்    - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு (சங்கஇலக்கியம்)
ஆ.பரிமணம் (ப.ஆ) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு,
சென்னை 600 098. முதற்பதிப்பு - 2004.

2. மயிலை.சீனி.வேங்கடசாமி    - பழங்காலத் தமிழர் வாணிகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு,
சென்னை 600 098. ஏழாம்பதிப்பு - 2014.

3. சிலம்பொலி.சு.செல்லப்பன்    (உ.ஆ) - சிலப்பதிகாரம் மூலமும் உரையும்
பாரதி பதிப்பகம், சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் : - முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R