ராஜு அங்கிள்என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் 'ராஜு அங்கிள்' என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி.  அவருக்கும் அம்மாவுக்குமிடையில்  பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு  மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது 'நாஷ்' காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.

இவர் சிவாஜியின் 'புதிய பறவை', 'ஆலயமணி' திரைப்படங்கள் வெளியான காலகட்டத்து இளைஞர்களிலொருவர் என்பதால் சிகரட் பிடிப்பதிலிருந்து, தோள்களைக் குலுக்கிச் சிரித்துக் கதைப்பதிலிருந்து அன்றிலிருந்து இன்று வரை அதே சிவாஜி 'ஸ்டைலை'ப் பின்பற்றி வருபவர். 1970இலேயே கனடாவுக்கு வந்து விட்டார். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: அக்காலகட்டத்தில்தான் அம்மப்பாவின் மறைவும் நிகழ்ந்தது. அம்மப்பாவின் சகோதரர் ஒருவருக்கும் இவர் மீது மிகுந்த பிரியம் இருந்தது. அவர் சிறிது காலம் புளியங்குளத்தில் இருந்த தனது பண்ணையொன்றை இவரது பொறுப்பில் விட்டுப் பார்த்தார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லையென்றே கூறுவேன். எப்பொழுதும் நண்பர்களுடன் 'ஜாலி'யாக நகரத்தில் திரிந்த இவருக்கு வன்னிக்காட்டுப் பகுதி ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வாரமும் அடிக்கடி அம்மாவிடம் , அப்பொழுது அம்மா வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார், 'அக்கா, அக்கா' என்று ஓடி வந்து விடுவார்.
அப்பொழுதுதான் நான் அப்பா வீட்டில் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் தமிழக வார, சஞ்சிகைகளில் என்னை மறந்து வாசிப்பதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தேன். ஒருமுறை அம்மாவிடம் வரும்போது அழகாக 'பைண்டு' செய்யப்பட்டிருந்த , கல்கியில் தொடராக வெளியான அகிலனின்  'வேங்கையின் மைந்தன்' நாவலைக் கொண்டு வந்திருந்தார். அதன் மூலமே எனக்கு எழுத்தாளர் அகிலன் அறிமுகமானார்.

இவர்  அடிக்கடி அவ்விதம் வவுனியா வருகிறாரென்றால் குழந்தைகளான எமக்கெல்லாம் கொண்டாட்டமாகவிருக்கும். முக்கிய காரணங்களிலொன்று நிச்சயம் இவர்  எங்களைச் சினிமாவுக்குக் கூட்டிச்செல்வார் என்பதால் தான். 'துலாபாரம்' 'செம்மீன்' போன்ற திரைப்படங்களெல்லாம் அவ்விதம் பார்த்த திரைப்படங்கள்தாம். காட்சி முடிந்து வீடு திரும்புகையில் எம்மை வீட்டு ஓடிச்சென்று சில சமயங்களில் எம்மையெல்லாம் பயப்படுத்துவதில் இவருக்கு மிகவும் பிரியமுண்டு. அச்சமயங்களில் அச்சத்தில் நாம் இவரைத்துரத்திச் செல்லுவோம். அவ்விதம் வந்து பண்ணைக்குத் திரும்பும் சமயங்களில் சில தடவைகள் நானும் இவருடன் புளியங்குளம் பண்ணைக்குச் சென்றிருக்கின்றேன். இயற்கை வளம் கொழிக்கும், கானகச்சூழலில், ஏ-9 பாதையில் அமைந்திருந்த அப்பண்ணைக்குச் சில தடவைகளே சென்றிருந்தபோதும் எனக்கு மிகவும் பிடித்த கானகப்பிரதேசங்களில் ஒன்றாகவும் அப்பிரதேசம் அமைந்து விட்டது. அதன் காரணமாகவே அழியாத கோலங்களிலொன்றாகவும் நெஞ்சில் பதிந்து விட்டது.

ராஜு அங்கிளுடன்இவர் என் வாசிப்பனுபவத்தில் இன்னுமொரு வகையிலும் முக்கியமானவர். என் பால்ய காலத்தில் ஒரு சமயத்தில் நான் மர்மக்கதைகள், காமிக்ஸ் என்று வாசித்துக் குவித்தேன். அதற்கு முக்கிய காரணம் இவர்தான். விடுமுறைகளில் நாங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சி வீடு செல்வோம். அப்பொழுதெல்லாம் நண்பர்களுடன் சுற்றித்திரிந்து விட்டு வீடு திரும்பும் சமயங்களிலெல்லாம் இவர் மறக்காம இந்திரஜால் காமிக்ஸ் புத்தகங்கள், பிரேமா பிரசுர மர்ம நாவல்களையெல்லாம் அள்ளிக்கொண்டு வருவார் எனக்காக. மர்மக்கதை மன்னர்களாக அக்காலகட்டத்தில் விளங்கிய மேதாவியின் 'மாயச் சமாதியில் மர்மப் புதையல்' , சிரஞ்சீவி, சந்திரமோகன் போன்றோரின் திகிலூட்டும் மர்ம, பேய்க்கதைகளையெல்லாம் வாசித்துக் குவித்தது அப்போதுதான்.

இவரைப்பற்றி நினைத்தால் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் எனது முதலாவது கொழும்புப் பயணம். இவர் கனடா செல்வதற்காகக் கொழும்பு சென்றிருந்த சமயம். அவரை வழியனுப்புவதற்காக அம்மா கொழும்பு சென்றார். அது ஒரு காலை நேரம். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் காலை யாழ்தேவி வவுனியாவுக்கு எட்டரை மணியளவில் வரும். அதில்தான் அம்மா கொழும்பு செல்வதாகத் திட்டம். அம்மாவுடன் பாடசாலை சென்று கொண்டிருந்த என் மனத்திலோ வேறொரு திட்டம் இருந்தது. அம்மாவைப் புகையிரத நிலையத்தில் விட்டு விட்டு நான் பாடசாலை செல்வதுதான் அம்மாவின் திட்டம். ஆனால் என் திட்டமோ வேறானதாகவிருந்தது. அம்மா கவுண்டரில் கொழும்புக்கோட்டைக்கு ஒரு ஃபுள் டிக்கற் ஃபோர்ட்டுக்கு என்று வாங்குவதைப்பார்த்த நான் , அம்மா அப்பால் சென்றதும் என்னிடமிருந்த ஐந்து ரூபாயினைப்பாவிக்க முடிவு செய்தேன். அம்மாவின் full டிக்கற் ஐந்து ரூபாய் என்பதை ஏற்கனவே அவதானித்திருந்தேன். டிக்கற் கவுண்டருக்குச் சென்று ஃபோர்ட்டுக்குக் 'ஹாஃப்' (half) என்றேன். இரண்டரை ரூபாய்தான் அரை டிக்கற். அதன் பிறகு அம்மா புகையிரதத்தில் ஏறியதும் அவருக்குத் தெரியாமல் அடுத்த பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டேன். கொழும்புக்கோட்டையை யாழ்தேவி அடைந்ததும் , மெல்ல இறங்கி அம்மா பின்னால் போய் 'அம்மா ' என்றபோது அம்மா அதிர்ந்தே போய் விட்டா. மறக்க முடியாத என் பால்ய காலத்து அனுபவங்களிலொன்று.

அம்மாவின் கடைசித்தங்கை ஏற்கனவே அறுபதுகளில் கனடாவுக்கு வந்திருந்தார். அவர்தான் 'ராஜு அங்கிளை'க் கனடாவுக்கு அழைத்தது. கனடாவில் நீண்ட காலம் மத்திய அரசின் தபால் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கி (இவர் மோட்டார் சைக்கிள் பிரியர்களிலொருவர் கூட) தற்போது சிறிது உடல் நலம் குன்றியிருந்தாலும், இன்னும் அதே துடிப்புடன் மகிழ்ச்சியாக இருப்பினை எதிர்நோக்கி வாழ்பவர். வயது எழுபதைக் கடந்தாலும் சுருக்கம் விழாத இவரது முகவாகு என்னை வியக்க வைப்பதுண்டு. எவ்வளவு இக்கட்டான சமயங்களிலும் வாழ்க்கையினை இன்பமுடன் எதிர்கொள்ளும் இவர் தேவையற்ற விடயங்களையெல்லாம் மனத்தில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதவர். மற்றவர்களின் திறமையினை எப்பொழுதும் மதிப்பவர்.

என் வாசிப்பனுவத்தில் இவரது பங்களிப்பும், இவருடன் கழித்த வன்னி அனுபவங்களும் மறக்க முடியாத அழியாத கோலங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R