ஶ்ரீராம் விக்னேஷ்அதிகாலை  ஐந்துமணி.  அறையின் கதவு தட்டப்படும் சத்தம்.  எரிச்சலாக இருந்தது.  

சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன்.

அங்கே… அறிமுகமில்லாத  ஒரு  சிறுவன்.

“யாரப்பாநீ…. காலங்காத்தால  வந்து  கதவைத்தட்டி  உசிரைவாங்குறே… எதுக்கு…? ’’

கொட்டாவி விட்டபடி  கேட்டேன்.

தெருவில்  பால்க்காரர்களின்  சைக்கிள் ’பெல்’ ஒலி….  இட்லிக்கடையில்  ஒலிக்கும் பக்திப்பாடல்….. ஆகியன  வைகறையை  வரவேற்றன.

அந்தச்சிறுவன்,  என்னை  ஏறஇறங்க  நோக்கினான். வலக்கரம்  நெற்றிக்குச்சென்றது. ‘’சலாம்’’ போட்டான்.

“வணக்கம்சார்…. எம்பேரு சுப்புறுமணியன்… வயசுபன்னிரண்டு… எல்லாரும்என்னய “சுப்புறு”ண்ணு கூப்பிடுவாங்க… வீடுவீடாய்ப் போயி அவங்கசொல்ற வேலைய செஞ்சு குடுப்பேன்….”

பேச்சினில்  பணிவு. பார்வையில்கம்பீரம்.  “மனக் கேமரா” வில் அவனைக் “கிளிக்” செய்தேன்.

தொடர்ந்து அவனே பேசினான்.

“ நேத்து பகல்பூராவும்  நீங்க வீடுதேடி அலைஞ்சதும்., பூசாரி அருணாசலம்ஐயா  தயவால சாயந்தரம்போல  இந்த “ரூம் “  கெடைச்சதும்… வரையில  எனக்குத்தெரியும்….”

நான்  குறுக்கிட்டேன்.

“சரி..சரி…  இப்பநீ  எதுக்குவந்தே…  சொல்லிட்டுக்  கெழம்பு ”

“தப்பா  நெனைக்காதீங்க….  பஞ்சாயத்துநல்லீல  தண்ணிவருது….  குடமோ, பானையோ இருந்தாக்  குடுங்க…. சத்தே  நேரமானா   கூட்டம்ஜாஸ்தியாகிடும்…. “பணிவாக வந்தது அவன் குரல்.

நேற்று  மதியமே பூசாரி அருணாசலம்  அண்ணாச்சி  கூறியிருந்தார்., “ தண்ணிபுடிக்கக் குடம் ஒண்ணு  வாங்கிக்க….”

அப்போது  வாங்குவதற்கு  மறந்துவிட்டேன். இப்போது இந்தச் சிறுவன் முன்னே தலை சொறிந்தேன்.

“ இல்லைப்பா…. நான்  குடமெதுவும்  வாங்கிக்கல்ல….. இண்ணைக்கு  வாங்கிக்கிறேன்…. நாளையிலயிருந்து  தண்ணிபுடிச்சுக்  குடு……”

பதிலை  எதிர்பாராமல்,  கதவை அடைத்தேன். தூக்கம்  உலுக்கி  எடுத்தது.

“பேப்பர் கப்” தயாரிக்கும் கம்பெனியில் சப் - மேனேஜர்வேலை. ஊர்விட்டு ஊர்வந்துவிட்டேன்.  தங்குவதற்கு “ரூம் “ தேவை.

திருமணமாகாதவருக்கு  கிராமப்புறங்களில், வீடோ  அல்லது  ரூமோ   கிடைப்பது மிகவும் சிரமம். அப்பாவின்  பால்யகால  நண்பரும்,  எங்கள்  கிராமத்தைச்  சேர்ந்தவருமான  பூசாரி அருணாசலம் அண்ணாச்சி  இந்தஊரில்  வெகுநாட்களாக  குடியிருப்பதனால், அவரது  சிபார்சில்தான்  இந்த  “ரூம்” கிடைத்தது.   

ரூமுக்காக  நேற்று  பகல் முழுவதும்  இருவரும்  அலைந்தோம். அலுப்பு இன்னும் மாறவில்லை. படுக்கையில்சாய்ந்துகொண்டேன்.   ஞாயிற்றுக்கிழமைஎன்பதால் கம்பெனிக்கும் போகவேண்டியதில்லை.  ஊருக்குப் புதிது என்பதால் வெளியார் பழக்கங்களும் இல்லை.

மீண்டும் கதவு  தட்டப்படும் சத்தம்.  எழுந்தேன். மணி  பதினொன்று.                                                                                                                                                                                                                                                                                                    
சட்டையை அணிந்துகொண்டு கதவைத்திறந்தேன். மீண்டும் அதே சுப்புறு. தோளில் ஒரு பிளாஸ்ரிக் குடம்.  அது நிறையத் தண்ணீர்.  

“சார்…. குடிதண்ணீர் ஒருகுடம் கொண்ணந்திருக்கேன்…. வெச்சுக்குங்க….”  

என்பதிலை  எதிர்பாராமல்  உள்ளே சென்றான். ஒருமூலையில்  குடத்தை  வைத்தான். அவனது வாயிலிருந்துவரும்  முணுமுணுப்பு  தெளிவாகப் புரிந்தது.

“இண்ணைக்கு  குடம்வாங்கி,  நாளைக்கு  காலையில தண்ணிபுடிச்சு வெக்கிறவரைக்கும் தாகத்தோட  இருக்கிறதா  வேண்டுதல்போல….”

அக்கறையை  நினைத்தேன். ஆச்சரியப்பட்டேன். வெளிக்காட்டவில்லை. சிறிது பொய்யான கோபம் தேவைப்பட்டது.        

“இப்ப  ஓங்கிட்ட  தண்ணிகேட்டனா….?  என்னமோ  நீபாட்டில  வந்தே…. தண்ணியெ கொண்டுபோயி வைக்கிறே…. ஓம்மனசில  என்னயப்பத்தி  என்னதான் நெனைச்சுக்கிட்டே....”

என்னை  அளப்பது போல  பார்த்தான். அவனது  பேச்சிலே சிறிது  அனுதாபம்  தெரிந்தது.

“என்னையைப் போலத்தான்  உங்களையும்  நெனைச்சுக்கிட்டிருக்கேன்....”

புரியவில்லை. குழம்பினேன்.

“என்னது…. ஒன்னயைப் போல  நெனைச்சுக்கிட்டிருக்கியா..?”

“ஆமா…. இண்ணிக்கு அதிகாலையில வந்து உங்ககூட பேசும்போதே கவனிச்சேன்….”

“என்ன கவனிச்சே….?”  - என் நெற்றி  சுருங்கியது.

“சார்….நீங்க  இப்பத்தான் சட்டை போட்டிருக்கிய….!  காலையில நான்வந்தப்போ வெத்து                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      பெனியனோடதான்  இருந்தீங்க….!  அந்தபெனியன்ல  மூணுஓட்டை….!  முன்னால ஒண்ணு…, பின்னால ரெண்டு….   கையில வசதியுள்ள பார்ட்டியாயிருந்தா அந்த பெனியனையெல்லாம்  போடுவீயளா…?”

தூக்கிவாரிப் போட்டது எனக்கு.  தொடர்ந்து அவனே பேசினான்.

“எங்கப்பா எங்ககூட இருந்தப்போ, அதுபோட்டிருக்கிற பெனியனும் இப்பிடித்தான் அறுவத்தெட்டு  ஓட்டை  இருக்கும்….  கையிலதான் சில்லரைக்காயின்ஸ் இல்லைன்னாலும், பெனியன்ல  அழகான காயின்ஸ் வட்டவட்டமா  இருக்கும்….”

சற்றேநிறுத்தினான். பெருமூச்சுவிட்டான்.  அவன்பேசுவதைக் கவனித்தபடியே நின்றேன்நான்.

“கையிலஉள்ள  காயின்ஸ்  ஜாஸ்தியாயிருக்கிறப்போ,  “வசதி”  தெரியிறமாதிரி, நம்ம ட்ரெஸ்சில உள்ள  காயின்ஸ்  ஜாஸ்தியாயிருக்கிறப்போ, “வறுமை” தெரியுமில்லியா…! நீங்க வெளிய  பந்தாபண்ணிக்கிட்டாலும்,  உள்ள என்னையப்போல நொந்துபோன ஆளுசாரு….”

எதிர்பார்க்கவில்லை. எதுவும்பேசமுடியவில்லை. கண்களிலேநீர்முட்டியது.

உண்மை…..!  முற்றிலும்உண்மை….!!

வயதானபெற்றோர்….! வாழ்க்கைக்குஏங்கும்சகோதரிகள்….!  வறுமையின் சின்னமாகப் பழையவீடு….!   கனவிலும்  விலகாதவர்களாக  கடன்கொடுத்தோர்  பட்டியல்….!

“சார்…. நீங்க  அவசரப்பட்டு  செலவுபண்ணி,  புதிசா குடம் வாங்கிக்கிட்டிருக்க வேணாம்…. எங்கவூட்ல அஞ்சுகுடம் இருந்திச்சு…. அதில ஒண்ணுதான் இது…. மிச்சக் குடமே எங்களுக்குப் போதும்….”

பேச்சிலேதிருப்தியைக்காட்டினான்.

அவனை  எனக்குப் பிடித்துப்போனது. அருகேசென்று ஆதரவாகப் பேசினேன்.

“உங்கப்பா இப்போ எங்கே இருக்காங்க….?”

“எங்கே எவகூட இருக்கோ  யாருக்குத்   தெரியும்….? ஆனா, நிச்சயமா இன்னும்சாகல்ல…. அதுமட்டும் நல்லாத் தெரியும்….”

அவன் பேச்சிலே வெறுப்பு தெரிந்தது.  மனதுக்குள் கனத்தது.

“கேக்கவே  கஷ்டமாயிருக்கப்பா….”

“இதில கஷ்டம் என்னசார் இருக்கு….  எங்ககூட இருக்கிறவரைக்கும், ஒழைக்கிறதுட்டு பூராத்தையும்  தண்ணிபோட்டு செலவு பண்ணிட்டு வந்து, என்னையும் அம்மாவையும் போட்டு அடிச்சு,  ஒதைச்சு  இம்சைபண்ணும்….!  அம்மா பீடிசுத்தி சேத்து வெச்ச துட்டையும் புடுங்கிட்டுப்  போயிடும்….!  இப்ப  அந்தத் தொல்லையும்  இல்லை….!  எனக்கு ஸ்கூலும் இல்லை….! ”

“அதுக்காக  ஸ்கூலுக்கு போறதை  ஏன்நிறுத்திட்டே….?  கஷ்டம், கஷ்டம்னு  சொல்லி இப்பிடியே  ஒவ்வொரு   பசங்களும்  படிக்காம   இருந்திட்டா,   நாட்டுநெலமை  நாளைக்கு என்னாகும்….? ”

“நீங்க ஒண்ணுசார்…. வீட்டு நெலமையே  பாடையில ஏறுது….!  இந்த லட்சணத்தில, படிச்சு, நாட்டு நெலமையை பல்லக்கில ஏத்தணும்னா…. நடக்கிற சமாச்சாரமா….? எழுதத் தெரியும்…. படிச்சுப் புரிஞ்சுக்கத் தெரியும்…. அது போதும்சார் எனக்கு….”

“அப்ப  என்னதான்  பண்ணப்போறே….? ”

“புதுசா  என்னசார்  பண்ணப்போறேன்…. அதுதான்  இப்ப  பண்றனே….  காலங் காத்தால எந்திரிக்க வேண்டியது…. வீடுகளுக்கு  தண்ணி  புடிச்சுக் குடுக்கவேண்டியது…  . கடையில் மளிகைச்  சாமான்,  ரேசன் சாமான்  வாங்கிக் குடுக்கவேண்டியது….  தண்ணி பில்லு, கரண்டு பில்லு  கட்டிட்டு  வரவேண்டியது….   இன்னும்  எத்தினையோ  இலாகாக்கள்  கையில இருக்கு….  அப்பப்போ  எல்லாத்துக்கும்  துட்டுக்    குடுப்பாங்க……”

“அந்தத்  துட்டெல்லாம்   என்னபண்ணுவே….  பேங்கில  ஏதும்   போட்டுவெச்சிருக்கியா?’’   கேட்டேன்  நான்.

அவனின்  பார்வை  தரையை நோக்கியது.  சலிப்பாகப்  பேசினான்.

“….ம்….. ஆசைதான்….. என்ன பண்றது….. அம்மாவுக்கு  முன்னயமாதிரி   ஜாஸ்தியா பீடிசுத்த   முடியல்ல…. ஆஸ்துமா  கோளாறு  வேற…. கையில  வர்ரதுட்டு மருந்துமாத்திரைக்கே         போயிடுது…. அவசரத்துக்கு  அக்கம்பக்கத்தில  கடனா வாங்கிற துட்டுக்கும்…., ரொம்பரொம்ப  நெருக்கடியில  கந்துவட்டிக்கு  வாங்கிற   துட்டுக்கும்…..  வட்டிவேற…..”

கேட்கும் போதே  நெஞ்சு  பலமாக  வலித்தது. அதை  அனுபவித்துக் கொண்டிருக்கும் அவனது  வலி  எப்படியிருக்கும்  என்பதை  என்னால்  நினைக்கவே  பயமாக இருந்தது.

வலியையும்,  அதனால் பிறக்கும் வேதனையையும், அவற்றைத்  தாங்கிக்கொள்ளும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                   மனப்பக்குவத்தையும்,   ஒருமனிதனுக்கு,  அள்ளி வழங்குவதில் – முக்கிய  பங்களிப்பை அவனின்   கடந்தகாலத்துக்   கசப்பான  அனுபவங்களே  பெறுகின்றன.

அந்த   அனுபவங்களின்   காலஎல்லையை,   இந்தப்பையன்  சுப்புறுமீது  திணித்துப் பார்த்தால்,  அவன்  பிறந்ததிலிருந்தே  அனுபவங்களைத்  தேடத்தொடங்கிவிட்டான்  என்ற முடிவுக்குத்தானே  வரவேண்டியுள்ளது.

“உனக்கும்கீழே.. உள்ளவர்கோடி..நினைத்துப்பார்த்து.. நிம்மதிநாடு…..”

படத்துக்காக   எழுதினாலும்,   பாடமாக  எழுதப்பட்ட “கவியரசு” வின்  பாடல்வரிகள்   என் நெஞ்சுக்குள்  நிழலாடின.

“ அப்பிடீன்னா….  உனக்கு  கூடப்பொறந்த  அண்ணன்  தம்பி, அக்கா, தங்கச்சி……..”

“நான்   ஒருத்தன்மட்டுந்தான்   சார்…..போன  சென்மத்துப்   புண்ணியம்ணு  சொல்லுவாங்களே,   அந்தப்    புண்ணியத்தை   எங்கம்மா   பண்ணியிருக்காங்கண்ணு என்னால  பீல்பண்ண  முடியுதுங்க….    பாவம்எங்கம்மா….    அஞ்சுபுள்ளைங்களை அடுத்தடுத்துப் பெத்து,   ஆண்டவங்கிட்ட   குடுத்துப்புட்டு,   ஆறாவதா   என்னயபெத்து…. எனக்காக   ஆவியை அமுக்கிப்புடிச்சு   வெச்சிக்கிட்டிருக்காங்க….”

இதற்குமேல்   அவனைத்  தாமதித்துவைக்க  விரும்பவில்லை. பேச்சைமாற்றினேன். என் மணிபர்சிலிருந்து  ஐம்பதுரூபா  நோட்டு  ஒன்றை  எடுத்து அவனிடம்  நீட்டினேன்.

“ தண்ணி  கொண்ணந்திருக்கே…. குடம் வேறை  தந்திருக்கே….. இதை வெச்சுக்க….கொண்டு போயி  உங்கம்மாகிட்ட  குடுத்து ஒருகுடம்  வாங்கிக்க….”

அவன்  வாங்கவில்லை.

“இருக்கட்டும்  சார்….. குடத்துக்கெல்லாம்  துட்டு  வேணாம்…. பழைய  குடந்தானே….. உங்களைப்  பத்தி  சொன்னபோ, நம்ம குடத்தில ஒண்ணை எடுத்திட்டுப் போய் குடுண்ணு எங்கம்மா தான்  சொன்னிச்சு…. இப்போ இந்த  துட்டைக் கொண்டுபோயி குடுத்தா ரொம்ப வருத்தப்படும்….. எம்மேல  தப்பாநெனைச்சுக்  கோவிச்சுக்கும்…..”

நேரிலே  பாராதபோதிலும்,   அவனது  தாயார்மீது  மதிப்பும், மரியாதையும் எனக்குள் பிறப்பதை உணரமுடிந்தது.

இரண்டு  மாதங்களுக்குள்  சுப்புறுவும், நானும்  நண்பர்களாகிவிட்டோம்.

கம்பெனிக்கு   லீவான     ஞாயிற்றுக்கிழமை,   மற்றும்  விடுமுறை  நாட்களிலெல்லாம் கூடுதலான நேரத்தை  எனது  ரூமில்தான்  கழிப்பான்  சுப்புறு.

நான் சொல்லாமலே  எனக்கான வேலைகளை  இழுத்துப் போட்டுக்கொண்டு  செய்வான். அப்பப்போ   வாங்கிவைக்கின்ற   பத்திரிகைகள்,   சஞ்சிகைகள்   எல்லாவற்றையும்   எடுத்து வைத்துக்கொண்டு,  அனைத்தையும்  படிப்பான்.   அவனுக்குப்பிடித்த,   ரசிக்கின்ற   பகுதிகள் வரும்போது  என்னிடம்  மினைக்கெட்டுச்  சொல்லுவான். புரியாத  வார்த்தைகள்   கண்ணில் படும்போது  என்னிடம் கேட்டு   சந்தேகத்தைப்   போக்கிக் கொள்வான்.
அப்பப்போ  தனது  வீட்டுக்  கஷ்டங்களைப்பற்றிக்   கூறுவான்.   ஆறுதல் சொல்வேன். அமைதி பெற்றுச்   செல்வான்.



“சார்….  இதில  நூறுரூவா இருக்கு…. கவனமா  வெச்சு  அடுத்தவாரம்  குடுங்க….”

சில்லறையும்,   நோட்டுமாக  பொட்டலம்  ஒன்றை  அவன் நீட்டியபோது,   நான்  திடுக்குற்றேன்.

“எதுக்கு   ஏங்கிட்ட    தர்ரே….. உங்கம்மாகிட்ட   குடுத்துவெச்சுட்டு  அப்புறமா  வாங்கிக்க வேண்டியதுதானே….”    மறுத்தேன்நான்.

“எங்கம்மாகிட்டயெல்லாம்   இந்தவேலை  சரிப்படாதுசார்….” சலிப்பாகப்  பேசினான் அவன்.

“என்னது…. சரிப்படாதா….. என்ன சொல்றே……?  ’’

“ஆமாசார்…. இன்னும்  பத்துநாள்ல  எங்ககோயில்ல  கொடைவருது…. எங்கப்பன்  எங்ககூட இருந்தநாள்ல கூட,  எங்கம்மா  நல்லசேலை  கட்டிட்டு   கோயிலுக்குப்  போனதை  நான் பாக்கல்ல….    அதனால,   நல்ல    சேலையா    ஒண்ணு     எடுத்து    எங்கம்மாகிட்ட குடுத்துக் கட்டவெச்சு,  கோயிலுக்கு  கூட்டிட்டுப்  போயி   சந்தோசமா  சாமி  கும்பிட்டு   வரணும்ணு ஆசையா இருக்கு…..   இதை  அம்மாகிட்ட  சொன்னா  அவ்வளவுதான்…. சேலையொண்ணும் வாங்கவேணாம்…. உனக்கு  நல்லடவுசர்   வாங்கிக்க,  சட்டை  வாங்கிக்கண்ணு  சொல்லி மறுத்துப்புடும்… ..   அதையும் மீறி  சேலைவாங்கிட்டா,  என்பேச்சை   தட்டி  சேலைய வாங்கிட்டியெல்ல….   நான்  கட்டவே  மாட்டேன்னு  சாதிச்சுப்புடும்….   அதனால, அம்மாகிட்ட  சொல்லாம  வாங்கிகிட்டு  வந்திட்டா  ஒண்ணும்  பேசாம  இருந்திடும்… நூத்தம்பது  ரூவாக்கெல்லாம்  நல்லசேலை  கிடைக்கும்ணு,   ஜவுளிக்கடைக்காரங்க பிட்டுநோட்டீசு  அடிச்சு  வீடுவீடா  குடுத்திருக்காங்க….  இந்த   நூறுரூவாவை ஓரமாவெச்சிட்டு,  பல்லைக்கடிச்சிட்டு  ஒருவாரத்துக்கு  சேமிச்சா அம்பது ரூவா  வந்திடும்…. கொண்டுபோயி  நூத்தம்பது  ரூவாக்கு   டவுணில  நல்லசேலையா  ஒண்ணு   வாங்கிகிட்டு வந்திடுவேன்….’’

நான்  குறுக்கிட்டுப்  பேசினேன்.

“ சேலையப்பத்தி  உனக்கு  என்ன  தெரியும்….  அக்கம் பக்கத்தில இருக்கிற  பொம்பிளைங்க யாரையாச்சும்  கூட்டிக்கிட்டுப் போயி  பாத்து எடுத்துக்கலாமில்லியா…..”

பலமாகச்  சிரித்துவிட்டான்  அவன்.

“ நல்லாச்  சொன்னீங்க  போங்க சாரு…. நான்  என்ன  கல்யாணத்துக்குப்  பொண்ணு பாத்து, அதுக்கு  முகூர்த்தப்பட்டு  வாங்கவா போறேன்….? பொம்பிளைங்களை  டவுனுக்கு  கூட்டிகிட்டு  போய் வர்ர  அளவுக்கு  துட்டு  இருந்தா, அதுக்கு  இன்னுமொரு  சேலை  வாங்கிப்புடுவேனே….”

சற்று நிறுத்திவிட்டு ஒருகணம்  கண்களை  மூடித்திறந்து, அமைதியாகப் பேசினான்.

“எங்க  தெருக்காரங்க  ரொம்பப்பேரு அவுங்க  அழுக்குத்  துணியயெல்லாம், லாண்ரில குடுத்து வெளுக்கப்போட  எங்கிட்டதான்  குடுப்பாங்க…. அதையெல்லாம்  நான் எடுத்திட்டுப்போயி, குடுக்கிறப்போ ஒவ்வொரு சேலையா  பாத்துப் பாத்துதான்  குடுப்பேன்…. இதில  எந்தமாதிரி  சேலை  எங்கம்மாக்கு  பொருத்தமாயிருக்கும்னு  மனசுக்குள்ளையே  ஒரு கணக்கைப்  போட்டு, கூட்டிப்பெருக்கி  வெச்சிருக்கேன்….  அதனால  இதெல்லாம்  ஒரு பிரச்சினையே  இல்லை….. பாத்துக்கலாம்…..” 
கஷ்டத்திலும்  அவனது  பாசம் துலங்கியதைக்  கண்டபோது, என் கண்கள்  கலங்கின.

“அதுக்கு,  பத்துநாள்  வரைக்கும்  டிலே  பண்ணணுமா….?  இன்னும்  அம்பது ரூவாதானே…. அதை  நான் குடுக்கிறேன்…. இண்ணிக்கே  காலையில  பத்தரைமணி  பஸ்சைப்  புடிச்சு டவுணுக்குப்  போய் நல்லசேலையா  ஒண்ணு  வாங்கிகிட்டு  வந்திடு…. சாயந்திரம்  மூணு மணிக்குள்ள  வந்து  சேந்திடலாமில்லியா….”    ஆலோசனை  கொடுத்தேன் நான்.

ஒருகணம்  நின்று  யோசித்தான்.  மனதில், “சரி”என்று  பட்டிருக்க வேண்டும்  போலும். தலையை அசைத்தான்.

“ சார்…. நீங்க சொல்றமாதிரியே செஞ்சுபுடுறேன்…. ஆனா,  இந்த  அம்பதுரூவா கழியிறவரைக்கும்   உங்ககிட்ட  வேலை  பாத்திட்டுத்தான்  அப்புறமா  துட்டுவாங்குவேன்….”

அவனுக்குள்  தன்மானம்.  அதுவே  அவனின்  ஆதாரம்.  வியந்துபோற்றினேன்.  எனினும், விட்டுக்கொடாது  பேசினேன்.     

“ இந்த   அம்பது ரூவாக்கு  இம்புட்டுக்  கண்டிசனா….? ’’

“அம்பது ரூவாயா  இருந்தா என்ன…. அம்பதுலட்ச  ரூவாயா  இருந்தா  என்னசார்…. எங்கம்மா  ஒரேயொரு  வெசயத்தை மட்டும்  ரொம்ப  ஸ்ராங்கா  சொல்லிக்   குடுத்திருக்கு….

“அடிமைப்பட்டு  வாழ்ந்தாலும்,   கடமைப்பட்டுவாழாதே….”   ன்னுதான் அது…. மத்தவங்க எல்லாருமே  என்னய  ஒருவேலைக்காரனாப்  பாக்கிறப்ப,  நீங்கமட்டும்  உங்க கூடப்பொறந்தவன் போல பாக்கிறீங்க, பழகுறீங்க….  இதே பெரிய கடன்தான் சார்…. ஆனா ஒதுக்கவோ, இல்லே ஒதுங்கவோ முடியல்ல…. இது மட்டுமே  போதும்சார்…. நான் அம்மாபுள்ளை….. எந்த  நெலமையிலும்  எங்கம்மா சொல்லைத்  தட்டமாட்டேன்  சார்….”

அவன்  புறப்பட்டுச்  சென்றுவிட்டான். எனக்குள்  ஒரு  முடிவெடுத்தேன்.

“இந்த,  கோவில் கொடையை  முன்னிட்டு  வெளியூரிலிருந்து  நண்பர்களும், உறவினர்களும்  சுவாமிதரிசனம் செய்யவும்,  தமதுநட்பு – உறவுகளைச்   சந்திக்கவும் வருவார்கள்.  இந்தச்  சந்தர்ப்பத்தில்தான்,  நானும்  சுப்புறு வீட்டுக்குப்  போவது  சரியாயிருக்கும்…. கோவிலில்  சுவாமிதரிசனம்  செய்துவிட்டு,  அப்படியேசென்று  சுப்புறுவின்  தாயாருக்கு  எனது  வணக்கத்தைத்  தெரிவித்துவிட்டு,  நலத்தையும்  விசாரித்துவிட்டு  வரவேண்டும்…. அதிலும்   முக்கியமாக,  சுப்புறுவை  மகனாகப்  பெத்ததுக்கு  நீங்க  ரொம்பவும்   புண்ணியம் பண்ணியிருக்கணும்….   என்று  அவர்களது  காதும், மனதும் குளிர  நேரிலே சொல்லிவிட்டு வரவேண்டும்….”

“ செல்லும்போது  பழங்கள்,  பண்டங்கள்  வாங்கவேண்டும்…  அப்போது  பணத்துக்கு முழிக்காமல்.,  முன்னேற்பாடாக  எடுத்து வைக்கலாம்…..”        

இருநூறுரூபா  பணத்தை  எடுத்துத்  தனியே  வைத்தேன்.


 


அதிகாலை   தண்ணீர்  பிடித்துவைக்க  சுப்புறுவரவில்லை.  நானும் அலட்டவில்லை.

“என்னவேலையிருக்கோ…. சரி..சரி.. சாயங்காலம்பாத்துக்கலாம்…..”

பூசாரி அருணாசலம்அண்ணாச்சி  பரபரப்பாக  வந்தார்.

“ நம்ம  சுப்புறு  பயலோட  அம்மா   தவறிப்போச்சு…..”

விறைத்துப் போய்விட்டேன்  நான்.   சிலநிமிடங்கள்  எதுவுமே  செய்ய   முடியவில்லை.

சட்டைப்   பையிலிருந்து  அலைபேசியை  எடுத்து, கம்பெனியின்  பகல்நேர  “வாச்மேனிடம் விபரத்தைச்  சொல்லி, பெரிய மேனேஜர் வந்ததும்    நான் லீவு  சொன்னதாக  சொல்லும்படி பேச  நினைத்தேன். வாச்மேனின் போன்  “சுவிட்ச் ஆப்” ஆக இருந்தது.

வேறு  வழியில்லை.  ஒன்பது  மணிபோல்  கம்பெனிக்குப்  போய்  ஒழுங்காக  லீவுலெட்டர் கொடுத்துவிட்டுத்தான்  வரணும். அலைபேசியில்  சொல்வது  பெரிய மேனேஜருக்குப்  பிடிக்காது.

அருணாசலம்  அண்ணாச்சியை  நோக்கினேன்.

“அண்ணாச்சி….. நீங்க   முன்கூட்டியே  போயிடுங்க…. நான்  கம்பெனிக்கு  போய்  லீவு சொல்லிட்டு  வந்திடுறேன்…..”

“ஆகட்டும்பா…. ரொம்ப நேரம்  லேட் பண்ணிடாத…. அப்புறம்  தூக்கிட்டாங்கண்ணா பின்னாடி  வருத்தப்பட்டு  பிரயோஜனம்  இல்ல….”

கம்பெனி  மேனேஜர்  வரும்போது  மணி  பத்தரை  ஆகிவிட்டது. விபரத்தைச்  சொல்லி, வெளியே  வரும்போது,  மணி பதினொன்று.

அலைபேசி அலறியது. அதிலே அருணாசலம் அண்ணாச்சி.

“என்னப்பா இம்புட்டு லேட் பண்ணிக்கிட்டிருக்கே….   நீர்மாலை  எடுக்கக்  கெழம்பிட்டாங்க….  ஒரு மணிக்குள்ள   தூக்கிடுவாங்கண்ணு  பேசிக்கிராங்க….”

எனது  பதிலை  எதிர்பாராமல்  பேச்சைத்  துண்டித்துவிட்டார்.

ரூமுக்கு  வந்துவிட்டேன்.  ஏற்கனவே  ஒதுக்கிவைத்திருந்த  இருநூறுரூபா  பணம்  என்னை  ஏளனம் செய்தது.

“என்போன்ற  பணம் மட்டும்  நிலையானதல்ல   என்று நினைக்காதே… .  எங்களை வைத்து அதைச்செய்யலாம், இதைச்செய்யலாம்  என  நினைத்துப் போடும்  திட்டங்களும் நிலையானதல்ல…. ”

பழமும், பண்டமும்  வாங்க வைத்திருந்த   அந்தப் பணத்திற்கு  அழகான  ரோஜாப்பூமாலை வாங்கினேன்.

கண்டதும்  ஓடிவந்தான்சுப்புறு. கட்டிப்பிடித்துக்  கதறினான்.

அவனது  இழப்புக்கிடங்கு  மிகவும்  ஆழமானது. அதை  ஆறுதல் வார்த்தைகளால் நிரப்ப நினைப்பது அர்த்தமற்றது.

ரோஜாப்பூ மாலையை  அந்த அம்மையாரின்  பூதவுடல்மீது  சாத்தினேன்.

வாழும்  காலத்தில்  பார்த்து,    வாழ்த்துப்பெற  நினைத்தவன்,   இப்போ  வாழ்க்கையை முடித்தபின்,  வழியனுப்ப வந்திருக்கின்றேன்.  வணக்கத்தைத்தெரிவித்துச்செல்லஎண்ணியிருந்தவன்., இப்போ  அஞ்சலியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றேன்.
முன்பின்  பார்த்த்தில்லை.  பழகியதில்லை.  ஆனால், பதறிக்கொண்டிருக்கும் இதயத்தை எண்ணி,  வியக்காமலிருக்கவும் முடியவில்லையே.

குடம் நிறைத்துக்,  குடிநீர் கொடுத்துவிட்ட தெய்வத்திற்கு,  துளித்துளியாய் கண்ணீர்க் காணிக்கை  கொடுத்துக்கொண்டிருந்தேன். 

அழுதழுது காய்ந்துபோன  கண்களைத் துடைத்தபடி, என்னை அழைத்த சுப்புறு இலேசாகச் சிரிப்பதற்கு  முயற்சித்துக்கொண்டிருந்தான்.

“சார்…. நீங்ககுடுத்த  துட்டும் சேத்து  நேத்து மதியமே அம்மாக்கு  சேலைவாங்கிட்டேன்…. கொண்ணந்து காட்டினப்போ ரொம்ப நல்லாயிருக்கிண்ணு சந்தோசப்பட்டிச்சு…. வாங்கின கடனை மிச்சம்வைக்காமை  வேலைபாத்து  அடைச்சிடுன்னு  சொல்லிச்சு…. நைட்டு ஏழுமணிக்கு மேலதான் ஆஸ்துமா  கோளாறே ஆரம்பிச்சிச்சு…. மூச்சுவிடமுடியாம  ரொம்பவும் கஷ்டப்பட்டிரிச்சு….  ஆஸ்பிட்டலுக்கு  கூட்டிப்போகலாம்னா, ஆட்டோ பிடிக்கக்கூட கையில துட்டில்லை…..”                                                                                                      கடுப்பாகினேன்நான்.  ஓங்கி அறையவேண்டும் போல  கோபம் வந்தது.

“துட்டில்லைன்னா…. ஏங்கிட்ட  வந்திருக்க வேண்டியதுதானே….  நான் என்ன  எங்கயாச்சும் தொலைஞ்சா  போயிட்டேன்….”

என்பேச்சிலே  காட்டம். அவன்முகத்திலோ   வாட்டம்.

என்பேச்சை  மறுக்கும் பாணியில்,   அவனது    தலையசைப்பு.

“இல்லைசார்…. நீங்க  எவ்வளவோ  ஹெல்ப்பு  பண்ணியிருக்கீங்க…. இதுக்கு  மேலையும் தொந்தரவு   பண்ண   மனசுவரல்ல….  அதனால,  நான்  வேலைபாக்கிற   வீட்டுக்கெல்லாம் போய்  கெஞ்சினேன்…..”

“அப்புறம்….”


ஜீவனற்றுக்  கேட்டேன்  நான்.    விரக்தியோடு   தொடர்ந்தான்  அவன்.


“அப்புறம்என்ன….   கோயில்  கொடைக்கு  குடுக்கவே  துட்டு இல்லை…. இதில நீவேறை….   போப்பா…. போயி  பக்கத்து  வூட்டுப்பக்கம்  கேட்டுப்பாருன்னு  காப்பியடிச்ச மாதிரியே  எல்லாரும்  சொல்லிப்புட்டாங்க…. எல்லாசாமியையும்  வேண்டிகிட்டு வூட்டுக்கு வந்தேன்….  நான்  வர்ரத்துக்குள்ள   அந்த  சாமியெல்லாம்  வந்து  அம்மாவைக்  கூட்டிகிட்டுப் போய்ட்டாங்க….”
வெளியூரிலிருந்து அவனது  உறவினர் சிலர்  வந்திருந்தனர். ஆகவேண்டியதை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்.


ஒரு  ஓரமாக    நிறைபோதையில்,  என்னதான்  நடக்கிறதென்று தெரியாத நிலையில் உட்கார்ந்திருந்த   ஒருவரைக்  காட்டியபடி  “இறந்தவ  புரிசன்  இவன்தான் ’’ என  சிலர் பேசியதைக்கவனித்தேன்.  ஆனால்,  அவரை பற்றி சுப்புறு என்னிடம் எதுவுமே பேசாததாலும், ஏற்கனவே  ஆரம்பத்தில்  பேசிவிட்ட்தாலும்  நானும்  எதுவும்  கேட்கவில்லை.


சுப்புறு  நேற்று வாங்கிவந்த  சேலையைத்தான்,  தாயார் சடலத்துக்கு உடுத்திருந்தனர்.


என்னருகே  நெருங்கிவந்த சுப்புறு, காதுக்குள் இரகசியம் போல பேசினான்.


“சார்…. இந்த செகப்புசேலை எங்கம்மாக்கு  எம்புட்டு  அழகாயிருக்கிண்ணு  பாத்தீங்களா…. அதுக்கு  ஏத்தாப்போல  குங்குமப்பொட்டு….  அப்புறம்  பூவு, மாலை…. எல்லாமே  சேந்து மதுரை மீனாச்சி மாதிரியே  இருக்கில்லியா…..”
என்ன  பதிலைச்  சொல்வதென்று  தெரியாமல், வாயடைத்து  நின்றேன்.


இறுதியாத்திரை  புறப்படத்  தயாரானபோது, வெள்ளைத்துணி  கொண்டுவந்து, கழுத்துக்குக் கீழ்,  சடலத்தை  மூடினார்கள்.


பிணத்தின்மீது  கணிசமானஅளவு  சில்லரை நாணயங்களும்,  ரூபா  நோட்டுக்களுமாகப் போட்டனர்.  கண்ணீரும் சிந்தினர்.


அவர்களின்  கண்ணீரைக்   கண்டபோது  ஆச்சரியமும், காசைக்கண்டபோது, அருவருப்பும்   தனக்குள்  ஏற்படுவதைத்  தன்னுடைய  முகக்குறிப்பிலே  காட்டினான்  சுப்புறு.
மறுகணம் –
யாருமே   எதிர்பாரா விதமாக   அங்கேவந்த  சுப்புறு, அத்தனை  காசினையும் வழித்து அள்ளியெடுத்தான்.  நேராக   பூசாரிஅருணாசலம் அண்ணாச்சியிடம் சென்றான். அவரது கையிலே  திணித்தான்.
“ பூசாரிஐயா…. நேத்தைக்கு நான் எங்கம்மா  உசிரைக் காப்பாத்த  துட்டுக்கு    அலைஞ்சப்போ,  இதே ஆளுங்க  கோயில்கொடைக்கு குடுக்கவே  துட்டு இல்லைன்னு                   சொல்லி வெரட்டினாங்க…. அதனால இந்தத்துட்ட  கோயில்கொடைக்கே  எடுத்துக்குங்க….”


விறைத்து நின்றார்  பூசாரி. வேதனையுடன் தொடர்ந்தான்

சுப்புறு.


“இந்த  ஊர்க்காரங்களுக்காக  நாயா   ஒழைச்சேன்…. அவசரத்துக்கு யாரும்  உதவல்லை…. இப்போ பிச்சை போட்டிருக்காங்க…..”

”    அருணாசலம்அண்ணாச்சி  தனது   வார்த்தையில் சிறிதுகாட்டத்தைஏற்றியபடி,  அவனை நோக்கினார்.
“சுப்புறு…. நீபேசிறது  கொஞ்சமும்  நல்லாயில்லைப்பா…. வயசுக்கு  ஏத்தாப்பல  பேசணும்…. உங்கம்மா  எறந்தது  எங்களுக்கும்  வருத்தந்தாம்பா…. ஆனா, நீ  இப்போ பேசினியே., நாயா  ஒழைச்சேன்னு…. ஒத்துக்கிறேன்…..”


சற்று  நிறுத்திவிட்டு, நிதானித்து  அமைதியாகப் பேசினார்.

“ இந்த  இடத்தில பேசக்கூடாது தான்…. ஆனா நீபேசின  பேச்சுக்காக சொல்றேன்…. தப்பா நெனைச்சுக்காதை…. நீ  சும்மாவா ஒழைச்சே…. சொல்லு…. யார்யார் ஓங்கிட்டை வேலை சொல்றாங்களோ,  அவங்க  எல்லாருமே  வேலை முடிஞ்சகையோட  கையில துட்டுக் குடுத்துத் தானே  அனுப்புவாங்க….   எவராச்சும்  கடன் சொல்லியோ,  இல்லை  ஏமாத்தியோ, விட்டது  உண்டா  சொல்லு…..”

பூசாரியாரின்  முகத்தை  ஒருகணம்  உற்றுப்  பார்த்தான்  சுப்புறு.  அதன்பின்  அவன்  பேச்சும் அமைதியாகத்தான்  வந்தது.

“ நெசந்தான்  பூசாரிஐயா….   நான்  பாத்த வேலைக்கெல்லாம்  கூலி  குடுத்தாங்க…. ஆனா, காட்டின  விசுவாசத்துக்காக   கடனாயாச்சும்   குடுத்து    ஒதவியிருக்கலாமே…. மனிதாபிமானம்ணு   சொல்லுவாங்களே….  அதை,    இந்த  டயிம்லயாவது காட்டியிருக்கலா மில்லியா….  நான் இந்த ஊர்லதானே  குடியிருக்கேன்…. ஒதவியா குடுத்த பணத்த  ஓடியாடி வேல  பாத்துக்  கழிச்சு விட்டிருப்பேனில்லியா….”

கூட்டமே  தலை  குனிந்து நின்றது. அடுத்து, அவனின் பார்வை  என்மீது  விழுந்தது.

“ சார்…. எங்கம்மாவுக்கு    சேலைவாங்கிறதுக்கு   துட்டுப்போதாமே  உங்ககிட்ட   கைநீட்டி வாங்கியிருக்கேன்…. இப்ப  இந்தத்  துட்டில  அதைக்  குடுத்தா,  அது  எனக்கு   மட்டுமில்லை,   எங்கம்மாவுக்கும்  கேவலம்…. அதனால,  ரொம்பசீக்கிரமா  என்கையால  சம்பாத்தியம்  பண்ணி,   அந்தத்  துட்டைக் குடுத்திடுவேன்….”

குறுக்கிட்டேன்நான். வேகமாகப்பேசஎன்னால்முடியவில்லை.

“ அதுதான்  நேத்தைக்கே  பேசிட்டியே….   இப்ப  எதுக்கு  அந்தக்     கதையெல்லாம்  பேசிறே….”

“ சார்….  இதை  உங்களுக்காகவோ  இல்லை  எனக்காகவோ  பேசல்லை…. இப்ப                                                                                                                                                     இந்த  எடத்தில  வெச்சு  இதை  நான் பேசல்லைன்னா,  நான் நன்றி  கெட்டவனாப் போயிடுவேன்….. எங்கம்மா  சொன்னபடி, நான்  எங்கேயாச்சும்  அடிமைப்பட்டு  வாழ்ந்தாலும்,  கடமைப்பட்டு  வாழமாட்டேன்…. நான் எத்தனை  தடவைன்னாலும் சொல்லுவேன்  சார்…. எங்கம்மா  சொல்லை  தட்டவே  மாட்டேன்…. நான் அம்மா புள்ளை.” 

கூறியபடி,   தாயின் முகத்தை   நெருங்கி   உற்றுநோக்கினான் .கண்களை  மூடினான். அவனது   கண்ணீர்த்   துளிகளால்  தாயாரின்   முகம்நனைந்தது. அந்தஈரத்தில், அவர்களது  ஆத்மாகுளிர்ச்சி  பெறுவதை  என்னால்  உள்ளூர   உணரமுடிந்தது.

தெளிவு   பெற்றவனாக   எழுந்தான்  சுப்புறு.

அவனது   முகத்திலே  சோகம் தெரியவில்லை.    சுடர்  தெரிந்தது.

கண்ணிலே   நீர்  தெரியவில்லை.   நம்பிக்கையின்   வேர் தெரிந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R