'ஈழகேசரி' (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் 7.11.1943 பதிப்பில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'கனல்' என்னும் கவிதையானது 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளியாகியுள்ளது. 1924இல் பிறந்த அ.ந.க.வுக்கு அப்பொழுது வயது  19. தனது பதின்ம வயதினிலேயே அவர் கவீந்திரன் என்னும் புனைபெயரைப் பாவித்துள்ளதை அறிய முடிகின்றது. ஈழகேசரி பத்திரிகைப் பிரதிகளை 'நூலகம்' அறக்கட்டளை நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

பின்னாளில் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் பரிணமித்த அ.ந.க.வின் பதின்ம வயதுக்கவிதையான 'கனல்' என்னும் இக்கவிதையிலேயே அதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண முடிகின்றது.

சண்டமாருதம் எழுந்ததாம். சகமெல்லாம் சூறையில் சுழன்றதாம். அச்சண்டமாருதத்தால் அண்டங்கள் யாவும் நடுங்கியதாம். மேலே ஆகாய மேகமும் அதனால் அலையும் நிலை ஏற்பட்டதாம். தொடர்ந்து எங்கும் கனல் தோன்றி மூடியதாம். எட்டுத் திசையும் எரியும் வகையிலான கனலது. யாவற்றையும் பொசுங்கிடச் செய்யும் பெரு நெருப்பு அது.

அச்சண்டமாருதத்துக்கு எது காரணம் என்று கவிஞர் எங்ஙணும் சென்று பார்க்கின்றார். அதற்கான காரணம் எது?:

"அங்கொரு பாட்டாளி மூச்சுவிட்டான்! - பெரு
மூச்சினில் தோன்றிய சூறையடா!".

எங்கிருந்து அப்பெருந் தீ எழுந்ததென்று கவிஞர் திக்குகளெட்டும் சென்று பார்க்கின்றார். அதற்குக் காரணம்?:

"பேயிது என்றிடப் பாட்டாளி ஓர்மகன்
பெருநகை செய்திடக் கண்டனடா!"

பாட்டாளி ஒருவனின் பெருமூச்சே அச்சூறையாகவும், சண்டமாருதமாகவும் உருவெடுக்கின்றது. பாட்டாளி ஒருவனின் பெருநகையே கனல் மிக்க பெருந்தீயாக உருவெடுக்கின்றது.

பாட்டாளி ஒருவனின் பெருமூச்சும், பெருநகையும் அகிலத்தையே நடுங்க வைக்கின்றன. பாட்டாளியின் மகத்தான சக்தியைப் பாடும் பதின்ம வயதுச் சிறுவனொருவனின் மகத்தான கவிதை 'கனல்'

முழுக்கவிதை வரிகளும் கீழே:

"சண்டமாருதம் எழுந்ததடா! - இந்த
சகமெல்லாம் சூறையில் சுழன்றதடா!
அண்டங்கள் யாவும் நடுங்குதடா! - மேலே
ஆகாய மேகமும் அலையுதடா!

எங்குங் கனல்தோன்றி மூடியதே! - காணும்
எட்டுத் திசையும் எரியுதடா!
பொங்கும் நெருப்பெங்கும் பாய்ந்ததடா! - யாவும்
பொசுங்கிப் பொசுங்கியே மாயுதடா!

எங்கிருந்தோ இதெ ழுந்ததடா! - என்று
ஏங்கிநான் எங்ஙணும் பார்த்துச் சென்றேன்.
அங்கொரு பாட்டாளி மூச்சுவிட்டான்! - பெரு
மூச்சினில் தோன்றிய சூறையடா!

'தீயிது எங்கிருந் தோங்குதடா! - என்று
திக்குகள் எட்டுமே பார்த்துச் சென்றேன்.
பேயிது என்றிடப் பாட்டாளி ஓர்மகன்
பெருநகை செய்திடக் கண்டனடா!"

- நன்றி : ஈழகேசரி ஞாயிறு 7.11.43
நன்றி   நூலகம் அறக்கட்டளை -