அண்மையில்  எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவில் கண்ட கேள்வி பதிலொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.  கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் இலக்கணம் பற்றியும், அவ்வப்போது இலக்கணம் மீறப்படுவது பற்றியும், பின்னர் இவ்விதம் மீறப்பட்டவற்றை இலக்கணம் உள் வாங்குவதும் பற்றிய தன் எண்ணங்களை ஜெயமோகன் மிகவும் எளிமையாக ஆனால் தர்க்கச்சிறப்புடன் எடுத்துரைத்திருக்கின்றார. அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


கேள்வி பதில் – 60  
இலக்கணத்தை மீறி இலக்கியம் படைப்பது சரி என்றால் பழங்காலங்களிலும் இன்றைய காலத்திலும் இலக்கணம் மீறாமல் படைக்கப்பட்ட அழியா இலக்கியங்களை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்? -  கேவிஆர். -

ஜெயமோகன்ஜெயமோகனின் பதில்: "ஏற்கனவே இதை ஓரளவு விளக்கிவிட்டேன். ஒன்று இலக்கணம் என்பது மாறாத விதிமுறைகளின் தொகையாக என்றுமே இருந்தது இல்லை. அப்படிச்சொல்பவர்களுக்கு இலக்கிய வரலாறு தெரியாது. இலக்கணத்தை மாற்றும் சக்தி எது? இலக்கிய ஆக்கத்தில் உள்ள புதுமைநாட்ட வேகமேயாகும். அதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் இலக்கணம் வரையறை செய்தது. பண்டைய படைப்புகளைப் பற்றி நாம் ஊகங்களால்தான் விவாதிக்க இயலும். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் சாதாரணமாக ஒப்பிட்டால்கூட தொல்காப்பிய இலக்கணங்களை சங்கப்பாடல்கள் ஒரு பொருட்டாகவே கொண்டிருப்பனவல்ல என்பதையும் சொல்லப்போனால் ஆரம்பகால சங்கப்பாடல்களை ஒட்டியே தொல்காப்பியம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியும். தொல்காப்பியம் கண்டிப்பாக நற்றிணை குறுந்தொகை புறநாநூற்றுப் பாடல்களின் காலத்துக்குப் பிற்பட்டது. உதாரணமாக சங்கப்பாடல்களில் தொல்காப்பியத்தில் உள்ள ஒட்டகம் பற்றிய குறிப்பு இல்லை. தொல்காப்பியத்தைவிட சங்கப்பாடல்களில் வடமொழிச்சொற்கள் மிகக் குறைவு. மேலும் பிறப்பு அடிப்படையினாலான சமூகப் பிரிவினை சங்க காலத்தில் வலுவாக இருந்தது என்றாலும் இழிசினர் என ஒருவகை மக்களை வகுத்த முதல் மூலநூல் தொல்காப்பியமே. பேராசிரியர் ஜேசுதாசன் இதை மிக விரிவாகவே விளக்குவதுண்டு. கைக்கிளையும் பெருந்திணையும் [ஒருதலைக் காமம், பொருந்தாக் காமம்] இழிசினருக்கு [ஏவலர், வினைவலர்] உரியதென தொல்காப்பியர் வகுத்ததை சங்கப்பாடல்கள் ஏற்றிருந்தால் மாற்பித்தியாருக்கும் நக்கண்னையாருக்கும் எப்படி புறநாநூறில் இடம் வந்தது? கொல்லனும் குறவனும் எழுதிய நம் பெருமரபு எப்படி வினைவலனை இழிசினனாகக் கருதியிருக்க முடியும்?

சங்க இலக்கியங்களின் திணை, துறை பகுப்பு மட்டுமல்ல அகம், புறம் பகுப்புகூட மிகவும் ‘குத்துமதிப்பாகவே’ செய்யப்பட்டுள்லது. உதாரணமாக புறநாநூறில்வரும் மாற்பித்தியாரின் பாடல்களை மருதம் திணையில் குறுந்தொகையில் சேர்த்தால் என்ன இலக்கணப்பிழை வரும்? பல பாடல்கலை வரிகளை மட்டும்வைத்துப் பார்த்தால் திணை மாற்றத்தை எளிதாகச் செய்துவிடலாம். திணையை வகுத்த உடனேயே திணைமயக்கம் என்று ஒரு விதிமீறலை நம் மரபு அனுமதித்தது. இலக்கணத்தை வகுத்ததுமே ‘வழூஉ‘ என அதற்கு மாறானதையும் அங்கீகரித்தது. ‘பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுளான’ சிலப்பதிகாரத்தின் வடிவம் அதற்கு முன் இல்லை. சிலப்பதிகாரமே அதை நம் மரபில் உருவாக்கியளித்தது. கம்பனின் சொற்புணர்ச்சி முறைகளின் பல்லாயிரக்கணக்கான புதியவழிகளை அதற்கு முந்தைய நூல்களில் காண முடியாது. ஒட்டக்கூத்தர் அதனாலேயே கம்பரைக் கவிஞராக ஏற்க மறுத்தார்.

அண்ணாமலைரெட்டியாரின் காவடிச் சிந்தையோ கோபால கிருஷ்ண பாரதியாரின் இசைப்பாடல்களையோ அக்காலப் பண்டிதர்கள் இலக்கியமாகவே கருதியதில்லை என்பதை உ.வே.சாமிநாதய்யரின் தன்வரலாறு காட்டுகிறது. அக்காலத்தில் இலக்கண சுத்தமான நூல்களாகக் கருதப்பட்டவை புராணங்களும் கலம்பகங்களும் அந்தாதிகளும்தான். அவற்றை இன்று நூலகங்களில்கூட காணமுடியாது. பாரதி எழுதியபோது அவர் அண்ணாமலை ரெட்டியாரையும் கோபாலகிருஷ்ண பாரதியையும் முன்னுதாரணமாகக் கொண்டார். பாரதி இலக்கணமறியாதவர் என்ற கடுமையான குற்றச்சாட்டு அக்காலத்திலிருந்தது. உ.வே.சாமி நாதய்யரே அக்கருத்தைக் கொண்டிருந்தார் என கி.வ.ஜகன்னாதன் ‘எனது ஆசிரியர்பிரான்’ நூலில் சொல்கிறார். இவர்களையெல்லாம் இன்று இலக்கணம் மீறாது எழுதியவர்கள் என்பீர்கள். காரணம் இன்று இலக்கணம் அவர்களையும் தழுவும்படி விரிந்துவிட்டது. இலக்கியம் கண்டதை இலக்கணம் ஏற்றுவிட்டது. இன்று எழுதுபவர்களை இலக்கணம் மீறுவதாகக் குற்றமும் சாட்டுவீர்கள்.

இரு கதைகளை நினைவூட்டுகிறேன். ஒன்று நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் கதை. திருவிளையாடல் படம் மூலம் ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய சித்தரமே இன்று நம் மேடைப் பேச்சாளர் மனதில் உள்ளது. ஆனால் நக்கீரனின் மூடத்தனத்தை தெளியவைக்கவே இறையனார் அகப்பொருளுரையை இயற்றினார் என்பதே உண்மையான கதை. காதலில் கனிந்த மனத்தைப் பொருத்தவரை கூந்தலுக்கு மட்டுமல்ல இப்பூமிக்கே இயற்கை நறுமணம் வந்துவிடும் என்ற தெளிவை அதன்மூலம் வரட்டு இலக்கணவாதியாகிய நக்கீரனுக்கு தென்னாடுடைய தமிழ்முதல்வன் சொல்லிக் கொடுக்கவேண்டியிருந்தது. அந்த பரவசநிலையை கவிதை பறந்து சென்று தொடும்போது மெல்ல நகர்ந்தாவது இலக்கணம் அங்கே வந்துசேர்ந்தாக வேண்டும் என்பதே அகப்பொருள்கண்டவனின் கட்டளை.

இன்னொரு கதை கம்பனைப் பற்றியது. துமி என்ற சொல்லை தன் கவிதையில் கம்பன் கையாண்டிருப்பதை ஒட்டக்கூத்தர் கண்டிக்கிறார். அப்படியொரு சொல்லே தமிழில் இல்லை என்கிறார். உண்டு, அது மக்கள்மொழி என்கிறான் கம்பன். எங்குமே அப்படி ஒரு சொல் இல்லை என்று ஒட்டக்கூத்தர் மீண்டும் சாதிக்கிறார். உண்மையில் கம்பனின் நா அறியாமல் சொன்ன புதிய சொல் அது. அன்றுமாலை சோழன் மாறுவேடத்தில் நகருலா செல்லும்போது சாலையோரத்தில் ஒரு இடைச்சி வெண்ணை கடையும்போது அருகே அமர்ந்த குழந்தையிடம் ‘தள்ளிப்போ துமி தெறிக்கும்’ என்று சொன்னதை சோழன் கேட்டான். அச்சொல் மக்கள் சொல்லே என உணர்ந்து காவியத்துக்கு அனுமதி கொடுத்தான். உண்மையில் தன் புதல்வனின் சொல் பிழைக்கலாகாது என கலைமகளே முதற்சொல்லெழுதிய யானைமுக மருகன் துணையுடன் வந்து அப்படிச் சொன்னதாகக் கதை.

இக்கதை இரு பாடங்களை அளிக்கிறது.

அ] மாகாவியத்துக்குக்கூட இலக்கணமே இல்லையென்றாலும் மக்கள்மொழி போதும்.

ஆ] கவிஞன் படைப்பூக்க நிலையில் சொல்லிவிட்டால் கலைமகளே அதை ஏற்றாக வேண்டும்.

இவ்விரு கதைகளையும் நான் பல சம்ஸ்கிருத அறிஞர்களிடம் சொல்லியிருக்கிறேன். சம்ஸ்கிருத அறிஞர் ஏ.பி.சங்குண்ணி நாயர் சொன்னார், சம்ஸ்கிருதத்தில் குணாத்யனுக்கும் காளிதாசனுக்கும் பிறகு காவியத்தில் கலைமகள் தலையீடு மிகவும் குறைந்துவிட்டது; அவள் வந்திருந்தால் மண்டையில் குட்டி, காவியத்தை மண்ணிலும் மனதிலும் தேடு, ஏட்டிலும் இலக்கணத்திலும் தேடாதே என்று சொல்லியிருப்பாள் என்று.

இலக்கணம் எழுதியவற்றால் ஆன விதி. எழுதப்படும் ஆக்கத்தை அது ஒருபோதும் முற்றாகக் கட்டுப்படுத்தாது. கட்டுக்கு உட்பட்டு எழுதப்படுவது இலக்கியமேயல்ல. நேற்றின் தொடர்ச்சியே இன்று, ஆனால் நாளையின் ஒளி கொண்டதும் கூட. பேரிலக்கியம் இலக்கணத்தை உருவாக்கக் கூடியதே ஒழிய இலக்கணத்தால் ஆளப்படுவதல்ல. இன்றைய இலக்கணவாதிகளை வெண்கலைமகளும் செம்பொன்மேனியனும் கைவிட்டுவிட்டார்கள் போலும். இல்லையேல் கனவிலாவது வந்து சொல்லியிருப்பார்கள், முழக்கோல் கொண்டு இலக்கியத்தை அளக்கமுடியாதென."


நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!

நான் இரசித்த புனைவுக் காட்சியொன்று!


ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் தொடர்நாவலில் சம்பவங்களுக்கு உயிர்த்துடிப்புடன் ஓவியர் கோபுலு சித்திரங்கள் வரைந்திருப்பார்.  ஆனந்த விகடனில் நாவல் தொடராக வெளிவந்தபோதே நாவலில் வரும் ஒரு காட்சியும், அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியமும் பசுமரத்தாணி போல் ஆழ்மனத்தில் சென்று படிந்துவிட்டது. மானுட உளவியலைப் பிரதிபலிக்கும் ஜெயகாந்தனின் வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் கோபுலு. காலச்சுவடு பதிப்பகத்தினர்ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை வெளியிட்டபோது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அந்நூல் என்னிடமுள்ளது. அவ்வப்போது அந்நாவலில் அப்பக்கத்தைப்புரட்டிப் பார்ப்பேன். மனத்தின் இறுக்கம் நெகிழ்ந்து இன்பத்திலாழ்ந்துவிடும். ஜெயகாந்தனின் வசனங்களையும், கோபுலுவின் அவ்வோவியத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இதழ்களில் தொடர்களாக வெளிவந்த நாவல்களை வெளியிடும் பதிப்பகங்கள் அத்தொடர்களில் வெளிவந்த ஓவியங்களையும் உள்ளடக்கி வெளியிடுவது சிறப்பு  மிக்கதென்பதென் எண்ணம். இதுபோல் முல்லை பதிப்பகத்தினர் வெளியிட்ட விந்தனின் பாலும் பாவையும் நாவலிலும் அந்நாவல் தொடராக வெளிவந்த ஓவியங்களுடன் வெளியிட்டிருக்கின்றார்கள். அந்நூலும் என்னிடமுள்ளது. ஆனந்தவிகட வெளியிட்ட பொன்னியின் செல்வன் நாவலிலும் ஓவியர் மணியத்தின் ஓவியங்களையும் உள்ளடக்கியிருந்தார்கள் என்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

- - " மண்ணாங்கட்டி மாடிக்கு வந்தபோது தேவராஜனும் ஹென்றியும் எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்க்க மண்ணாங்கட்டிக்குச் சிரிப்பு வந்தது. என்ன விஷ்யம் என்று தெரிந்து கொள்ளாமலேயே  அவன் சிரிப்பதைப் பார்த்து இவர்களுக்கு இன்னும் சிரிப்ப்பு வந்தது. தேவராஜன் சிரிப்புக்கிடையே ஹென்றியிடம் ஆங்கிலத்தில் கூறினான்: அந்த டான்ஸைக் கொஞ்சம் ஆடிக் காண்பிங்க. அவனும் பார்க்கட்டும்.

சற்றும் தயக்கமில்லாமல் ஹென்றி எழுந்து நின்று மண்ணாங்கட்டியை  கமான், லிஸன் என்று அருகில் அழைத்து, நாட்டியம் சொல்லிக்கொடுக்கிற பாவனையில் ... ஒரு கையை முன்னாலும், இன்னொரு கையைப் பின்னாலும் வைத்து உள்ளங் கைகளைப் பூ விரிக்கிற மாதிரி விரித்து ஒன்..டூ, ஒன்.. டூ எம்கிற தாளலயத்தோடு சோப்பெங்கப்பா, சோபெங்கப்பா என்று முன்னும் பின்னுமாய் வளைந்தும் நிமிர்ந்தும் குதிக்க ஆரம்பித்தான்.

சோப்பெங்கப்பா, சோபெங்கப்பா சோப்பெங்கப்பா என்று சொல்லிக்கொண்டே அதே தாளத்தில் தட்டாமாலை சுற்றினான். ஒரு சுற்றுச் சுற்றிப் பழைய பொஸிஷனுக்கு வந்து மண்ணாங்கட்டிக்கெதிரில் நின்று மண்ணாங்கட்டியின் முகத்துக்கெதிரே பா-பா-பா என்று ஆவர்த்தனம் முடிப்பது மாதிரி முடித்துத் தானே கைதட்டிச் சிரித்துக்கொண்டான்.

இதற்கிடையில் தேவராஜன் சிரித்துச் சிரித்து மூர்ச்சயாகிறவன் மாதிரிக் கட்டிலில் விழுந்து  வயிற்றைப் பிடித்துக்கொண்டு புரண்டான்.  மண்ணாங்கட்டிக்குப் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. அவனும் கூடச்சிரித்தான்." - -


இவ்விதமானதொரு காட்சியைச் சித்திரிக்கும் எழுத்தாளனுக்கு மானுட உளவியல் புரிந்திருக்க வேண்டும். அவன் மானுடர் வாழ்வை நன்கு அவதானித்திருக்க  வேண்டும்.