கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

Saturday, 13 January 2018 22:32 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

மானுடர்தம் திருநாளிந்தப் பொங்கல் திருநாள்.
இரவியின் குழந்தைகள்  நாம். 
இரவிதன் கதிர் இல்லையேல் நாமில்லை.
இவ்வுலகில்லை.
இரவியின் சிறப்பை உணர்ந்தன்றோ
இளங்கோ பாடினான் அன்று
'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'

இத்திருநாளில் நாம் இருப்பறிவோம்!
இருப்பின் அடியான கதிர் அறிவோம்.
கதிர் வழங்கும் கருணை அறிவோம்.
உலகுக்கு உணவு தரும் இரவி மற்றும்
உழவர்தம் உழைப்பறிவோம்; சிறப்பறிவோம்.
உழவருக்குதவும் எருதறிவோம்.  ஆதலினால்
ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

பல்லினம், பல்லுயிர்  வாழும் பாரிது!
நல்லெண்ணம் நானிலத்தில் பரவட்டும்!
போர்க்குணமிழந்து பொங்கட்டும்
இன்பப்பேராறு! பொங்கட்டும்
அன்புப்பேரூற்று!

ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!
ஞாலத்தில் நாம் வாழத் தாங்கும்
ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

'காலவெளி'யிலெமைத் தாலாட்டும்
கதிரம்மா உன் கருணைக்கு நன்றி!
கார் தந்தாய்; ககன மழை தந்தாய்.
பாரில் வளம் பெருக இன்னும்
பல தந்தாய்!
பகல் தந்தாய் பகலம்மா!
நீ வாழி!
கதிர் தந்தாய்! கதிரால் கதிர் வளர்த்தாய்!
கதிரம்மா! நீ வாழி!
ஆதலினாலின்று நாம்

ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!
ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

Last Updated on Tuesday, 16 January 2018 00:29