நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!

Monday, 22 January 2018 20:46 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!'பொப்' இசைப்பாடகர் ஏ.ஈ.மனோஹரன் மறைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்திசையில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இலங்கையின் பல்லின மக்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட தமிழ்ப்பாடகராக இவரைக் குறிப்பிடலாம். இலங்கையில் அரசியல்வாதிகளால் ஊதி வளர்க்கப்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஓரளவுக்காவது தணிக்க உதவின ஏ.ஈ.மனோஹரன் ., எம்.எஸ்.பெர்ணாண்டோ, சுஜாதா அத்தனாயக்க, நந்தா மாலினி போன்ற கலைஞர்களின் பங்களிப்பு.  கலைஞர்களும் மானுடப் பிரிவினைகளைக் கடந்தவர்கள். கலையும், இசையும் எல்லைகளைக் கடந்தவை.

ஏ.ஈ.மனோஹரனைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகமொன்று தோன்றுவது வழக்கம். அப்பொழுது காற்சட்டையும், சேர்ட்டுமாகத்திரிந்து கொண்டிருந்த பருவம். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற திருமணக் களியாட்டமொன்றில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் கலந்துகொண்டிருந்தார். எழுபதுகளிலொருநாள். திருமண நிகழ்வினையொட்டி நடைபெற்ற ஊர்வலமொன்றில் அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாழ் கே.கே.எஸ் வீதிவழியாக வந்து கொண்டிருந்தவர்களில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் ஒருவர். ஊர்வலம் எம்மைக் கடந்துகொண்டிருந்தபோது நண்பர்களிலொருவன் விரிந்த சுருட்டைத் தலைமயிர் குடை போல் கவிந்திருக்க வந்துகொண்டிருந்த ஏ.ஈ.மனோஹரனைக் கண்டு விட்டு 'இங்கே பாரடா ஏ.ஈ.மனோஹரன்' என்று கத்தி விட்டான். அந்த ஊர்வலத்தின் இரைச்சலிலும் நண்பனின் குரலினைச் செவிமடுத்த ஏ.ஈ.மனோஹரனின் முகத்தில் தன்னை இரசிகனொருவன் கண்டு விட்டதாலேற்பட்ட பெருமிதம் படர்ந்தது. அப்பெருமிதத்தோடு எம்மை நோக்கித் திரும்பிக் கைகளை அசைத்தவாறு சென்றார். அக்கணம் என் நெஞ்சில் அழியாத கோலங்களிலொன்றாகப் படிந்து விட்டது. பாடகர் ஏ.ஈ.மனோஹரனைப்பற்றிய நினைவுகளுடன் கலந்து விட்ட ஞாபகப்படிவம் அது.

இங்கு நடைபெற்ற இசை நிகழ்வொன்றின் இறுதியில் 'தாராரே தாரைப் போடுடா' என்று பாடும்போது லங்காவிலை பீஸ் ((peace) போடுடா, சிறிலங்காவிலை பீஸ் போடுடா என்று முடிப்பார். இவரைப்போன்ற இன, மத, மொழிகளைக் கடந்த கலைஞர்களின் ஆசை இந்த மண்ணில் பூரணமாக நிறைவேறட்டுமென்று எதிர்பார்ப்போமாக. அவ்விதமானதொரு சூழலில் இவரைப்போன்ற பாடகர்களின், கலைஞர்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக நன்றியுடன் நினைவு கூரப்படும். ஈழத்து இசையில், குறிப்பாக ஈழத்துத் தமிழ் 'பொப் இசையில் ஏ.ஈ.மனோஹரனின் பங்களிப்பு மறக்க முடியாதது. அத்துடன் தமிழகச் சினிமாவுக்கும் இலங்கைப் பொப் இசையினை அறிமுகப்படுத்தியவராகவும் இவரை இனங்காணலாம். இருந்தவரைப்பாடி எம்மை மகிழ்வித்தீர்கள். உங்களுக்கு நன்றி ஏ.ஈ.மனோஹரன் அவர்களே!

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 22 January 2018 20:51