மக்கள் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி: அ.ந.க! (அ.ந.க நினைவு தினம் பெப்ருவரி 14)

Thursday, 15 February 2018 21:43 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

அறிஞர் அ.ந.கந்தசாமி

அறிஞர் அ.ந.க என்று அழைக்கப்பெறும் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. தனது நாற்பத்து நான்காவது வயதில் மறைந்து விட்ட அ.ந.க தனது குறுகிய கால வாழ்வினுள் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிய இலக்கியப்பங்களிப்பு ஈழத்தமிழர்தம் இலக்கிய வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்த அ.ந.க இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று எழுத்தே மூச்சாக வாழ்ந்து மறைந்த படைப்பாளி. இவரது படைப்புகள் கூறப்படும் மொழியினால், சமுதாயப் பிரக்ஞை மிக்க பொருளினால், படைப்புகள் வெளிப்படுத்தும் தகவல்களினால் முக்கியத்துவம் பெறுபவை. சிந்தனையைத்தூண்டும் இவரது எழுத்தின் வீச்சு வாசகர்களின் உள்ளங்களைச் சுண்டி ஈர்க்கும் தன்மை மிக்கது.

அ.ந.க வெறும் இலக்கியவாதி மட்டுமல்லர். இலக்கியத்தைத் தான் நம்பிய சிந்தனைகளுக்கமைய வடித்த சிந்தனைச் சிற்பி. செயல்வீரர். தொழிற்சங்கங்கள் பலவற்றில் இணைந்து தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியவர். வீரகேசரி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான தொழ்ற்சங்கம் அமைய அ.ந.க.வே காரணம் என்பர். மார்க்சியவாதியான இவரது எழுத்துகள் பிரச்சார வாடையற்றவை. அதனாலேயே அனைவரையும் கவர்பவை. இவரது புகழ்பெற்ற 'மனக்கண்' நாவல் தினகரனில் வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் இவரது நெருங்கிய நண்பரும் , எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலி சேவையில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது. மேடையேற்றப்பட்டபோது மிகுந்த வரவேற்பைப்பெற்ற பல தடவைகள் மீள மேடையேற்றப்பட்ட 'மதமாற்றம்' நாடகம் மதம் என்னும் கருத்தாடலை அங்கதச்சுவையுடன் விபரிக்கும் ஈழத்தமிழ் இலக்கியத்தில் மேடையேற்றப்பட்ட சிறந்த நாடகங்களிலொன்று. இந்நாடகத்தைப்பற்றிப் பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறுவார்:

"சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார், நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில். இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது" -  (  'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக 'மதமாற்றம்' வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரையிலிருந்து).

கலாநிதி கைலாசபதியும் தான் பார்த்த தமிழ் நாடகங்களில் வெளிவந்த மிகச்சிறந்த தமிழ் நாடகமாக இதனைக்குறிப்பிடுவார். இந்நாடகம் கொழும்பில் பல தடவைகள் மேடையேற்றப்போது பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

'மதமாற்றம்' தவிர 'தாஜ்மஹால்' என்னும் நாடகமொன்றினையும் அ.ந.க. எழுதியுள்ளார். வேறு நாடகங்களையும் எழுதியுள்ளாரா என்பது ஆய்வுக்குரியது. 'மதமாற்றம்' 1967இல் கொழும்பில் லும்பினி அரங்கில் நான்கு தடவைகள் மேடையேறி மிகுந்த வரவேற்பினைப்பெற்ற நாடகம். எழுத்தாளர் காவலூர் இராசதுரையின் தயாரிப்பில், நடிகவேள் லடீஸ் வீரமணியின் நெறியாள்கையில் கொழும்பில் அரங்கேறிய நாடகமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகத்தில் ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன், வீ.எஸ்.இரத்தினம், சங்கரசிகாமணி, சிவபாதசுந்தரம், மஞ்சுளாதேவி, கிறிஸ்டி இரத்தினம், முத்தையா இரத்தினம், சுரேஷ் சுவாமிநாதன், லடீஸ் வீரமணி, மஞ்சுளாதேவி, பத்மநாதன் மற்றும் சங்கர வேலுப்பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர். எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் வெளியான மேற்படி நாடகத்தை விமர்சித்து அ.ந.க.வே நல்லதொரு விமர்சனமொன்றை எழுதியிருக்கின்றார். 3-7-1967 வெளிவந்த 'செய்தி' பத்திரிகையில் அவ்விமர்சனம் வெளியாகியுள்ளது.

'- எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக 'மதமாற்றம்' வெளியிடப்பட்டது. -

சிறந்த மரபுக்கவிஞரான அ.ந.க 'கவீந்திரன்' என்னும் பெயரில் சிறந்த மரபுக்கவிதைகளையும் எழுதியவர். குறிப்பாகத்  'துறவியும், குஷ்ட்டரோகியும்', 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'சிந்தனையும் மின்னொளியும்', 'வில்லூன்றி மயானம்' போன்ற கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த கவிதைகள். சாகித்திய விழாவொன்றில் இவர் பாடிய 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் கவிதை பற்றி பண்டிதர் தென்புலோலியூர் கணபதிப்பிள்ளை அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் இவ்விதக் கவிதை தோன்றும் என்று குறிப்பிட்டுள்ளதாக எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் தினகரன் பத்திரிகையில் அ.ந.க பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் குறிப்பிட்டுள்ளார். அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க.மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள எழுத்தாளர். அ.ந.க பற்றித் தனது கட்டுரைகளில் குறிப்பிடுபவர். அ.ந.க பற்றிய தனது தொடரை நூலாகவும் 'அ.ந.க. ஒரு சகாப்தம்' என்னும் தலைப்பில் வெளியிட்டவர். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களும் அ.ந.க. பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்து கட்டுரைகளை மல்லிகை சஞ்சிகையில் வெளியிட்டுள்ளார். கேள்வி-பதிலொன்றில் தான் படித்த பல்கலைக்கழகங்களாக அ.ந.க.வையும் அவர் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். அ.ந.க.வின் 'எதிர்காலச்சித்தன் பாடல்' நவீனத்தமிழிலக்கியத்தில் வெளியான முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுவேன். காலம் தாண்டி எதிர்காலச்சித்தன் வாழும் உலகுக்குச் செல்லும் நிகழ்கால மனிதன் , பேதங்கள் எவையுமற்ற எதிர்காலச்சித்தன் வாழும் சமுதாய  அமைப்பு பற்றிப் பிரமித்து மீண்டும் நிகழ்காலம் திரும்புவதை விபரிக்கும் கவிதை எனக்கு  மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று. இக்கவிதையினைச் சிறுகதையாகவும் நான் எழுதியுள்ளேன். இவரது 'வில்லூன்றி மயானம்' கவிதை வில்லூன்றி மயானத்தில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் பற்றி எழுதப்பட்ட முதலாவது கவிதையாகும். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க  எழுத்தாளர் கீதத்தை இயற்றியவரும் அ.ந.க.வே என்பதும் குறிப்பிடத்தக்கது.  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது.  'புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலரிலும் (1956-1981) வெளியாகியுள்ளது.

ஈழத்தமிழ் இலக்கியத்தில் தமிழ்ச்சிறுகதைகளிலும் அ.ந.க.வின் சிறுகதைகள் பல தடம் பதித்தவை. குறிப்பாக 'இரத்த உறவு', 'நாயினும் கடையர்' , 'நள்ளிரவு' போன்ற கதைகள் விமர்சகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தவை. சுமார் 40-60 வரையிலான கதைகளை இவர் எழுதியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. ஆனால் அவையெல்லாம் தேடி எடுக்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த 'மறுமலர்ச்சி அமைப்'பின் மூலவர்களிலொருவர் இவர் என்பதும் நினைவு கூரத்தக்கது.

அ.ந.க.வின் கட்டுரைகள் பல அவரது ஆய்வுச்சிறப்பினை வெளிப்படுத்துவன. கலாநிதி கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கணம்' நூலினை அ.ந.க.வுக்கே சமர்ப்பித்திருப்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது. ஆங்கிலத்தில் இவர் திருக்குறள், அர்த்தசாத்திரம் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் பல 'டிரிபியூன்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.

'சுதந்திரன்', 'ஶ்ரீலங்கா' (இலங்கைத்தகவற்திணைக்களம்  வெளியிட்ட சஞ்சிகை) மற்றும் 'தேசாபிமானி' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரிய பீடங்களை அலங்கரித்தவர் அ.ந.க. 'சுதந்திர'னில் பணியாற்றிய காலகட்டத்தில் தனக்குப் பிடித்த பிரெஞ்சு எழுத்தாளரான எமிலி சோலாவின் 'நானா' நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மிகுந்த வரவேற்பினைப்பெற்ற மொழிபெயர்ப்பு அது.

அ.ந.க சிறந்த பேச்சாளரும் கூட. அத்துடன் சிறந்த கவியரங்கக் கவிஞரும் கூட. அன்னை கஸ்தூரிபா மற்றும் வள்ளுவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள அ.ந.க வள்ளுவர் பற்றி வேலணையில் நடைபெற்ற கவியரங்கில் நல்லதொரு நீண்ட  கவிதையினையும் பாடியுள்ளார்.

மனக்கண் நாவலில் ஒரு காட்சி

- மனக்கண் நாவலில் ...

நாவல்களைப்பொறுத்தவரையில் 'மனக்கண்' ஒன்றே தினகரனில் தொடராக வெளியான ஒரே நாவல். மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்றொரு நாவலையும் அ.ந.க தனது இறுதிக்காலத்தில் எழுதியுள்ளதாகவும், அதன் கையெழுத்துப் பிரதி எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறிகின்றோம்.

வாழ்கைக்கு வெற்றியைப்போதிக்கும் உளவியல் நூலான அ.ந.க.வினது 'வெற்றியின் இரகசியங்கள்' தமிழில் இத்துறையில் வெளியான சிறந்த நூல்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான இந்நூலை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

அ.ந.க.வின் ஆளுமையினைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது படைப்புகள் பல தொகுக்கப்பட்டு நூலுருப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். படைப்புகளைத் தேடும் பணியில் 'பதிவுகள்' ஈடுபட்டுள்ளது. நிச்சயம் வெற்றி கிட்டும் என்னும் நம்பிக்கையுள்ளது. அ.ந.க.வின் படைப்புகள் பலவற்றை (நாவல் - 'மனக்கண்', கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் மொழிபயர்ப்பு நாவல் 'நாநா'வின் சில அத்தியாயங்கள் போன்ற) பதிவுகள் இணையத்தளத்திலுள்ள 'அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்' பகுதியில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=25&Itemid=47   'நூலகம்' இணையத்தளத்தில் அ.ந.க.வின் வெளிவந்த நூல்களான 'வெற்றியின் இரகசியங்கள்', 'மதமாற்றம்' ஆகியவற்றை வாசிக்கலாம்.

மக்களுக்காகத் தன் பேனாவைப்பாவித்த அ.ந.க மக்களுக்காக  மக்கள் இலக்கியம் படைத்த மகத்தான படைப்பாளியாக வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படுவார்.

அ.ந.க.வின் புகழ்பெற்ற கட்டுரைகளிலொன்றான , தேசாபிமானியில் வெளியான 'நான் ஏன் எழுதுகின்றேன்' கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

"இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன். "


ngiri2704"rogers.com

Last Updated on Friday, 16 February 2018 12:35