வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்புஇன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சிறுகதைகள் பற்றி திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் தனதுரையில் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்:  'ரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார்'.

இவரது சிறுகதைகள் மலையகம், முஸ்லிம் சமூகம், பெண்ணியம் போன்ற வௌ;வேறான தளங்களில் நின்று நோக்கத்தக்கவை. மூன்று தளங்களிலும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதைகளையும் எதிர்பாராத முடிவினைத் தந்து இவர் யாத்திருப்பது சிறப்பம்சமாகும்.

தான் சிறுகதைகளை எழுவதற்குரிய காரணத்தையும் நூலாசிரியர் தனதுரையில் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறார்: 'அன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மனதைக்  குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்'.

பின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் ரிஸ்னாவின் சிறுகதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: 'பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தக்க வைத்து இரைமீட்டு, அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுக்கு மலையகம், நகர்புற வாழ்வு, முஸ்லிம் சமூகப் பின்னணி என முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே வாய்த்துள்ளது. இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். நூலாசிரியர் அலங்கார வார்த்தைகளால் வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசுதமிழை வசப்படுத்தி உருவேற்றி வாசகனுடன் உறவாடுவதில் கைதேர்ந்தவர்'.

அழகன் என்ற முதல் கதை. இரண்டு பக்கங்களில் அமைந்திருக்கிறது. சந்தியாவின் கற்பனையோட்டத்தால் கதை நகர்கிறது. பஸ்ஸில் தான் பார்த்த அந்த அழகனின் நினைவுகளை முதலில் வாசிக்கும்போது சந்தியா அவனை காதலிக்கப் போகிறாளா என்ற ஆர்வம் வாசகருக்கு ஏற்படுகிறது. எனினும் இறுதியில் நூலாசிரியர் வாசகர்களை அழகாக ஏமாற்றுகிறார். அதாவது சந்தியா அத்தனை நேரமும் மூன்று வயதுகூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையைப் பற்றியே எண்ணியிருக்கிறாள். கதையின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிவுறுகிறது 'எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை'!!!

பெண்பிள்ளை பெற்றால் உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற பிற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்க்கிறார்கள். இறைவனின் தீர்ப்பை மாற்ற முயன்றால் முடிகிற காரியமா? காதல் கல்வெட்டு என்ற ரிஸ்னா எழுதிய சிறுகதை தன் காதலியின் கருப்பப்பை பிரச்சினை பற்றி அறிந்தும் அவளை மணக்க விரும்புகின்ற வசீகரன் பற்றியது. வசீகரனின் கீழுள்ள கூற்றை வாசிக்கையில் வாசகருக்கும் இதயம் கனத்துவிடுகின்றது. 'நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்'.

மலையக தோட்டத் தொழிலாளிகள் தேயிலைக் காடுகளில் காலங் காலமாக கஷ்டப்படுகிறார்கள். போதாக் குறைக்கு தமது ஆண், பெண் பிள்ளைகளை தலைநகருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்ட வனிதாவின் நிலையை விதி என்ற கதை சித்தரிக்கிறது. தனது வீட்டாருக்காக தனக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளையும் வனிதா தாங்கிக்கொள்வதாக கதை முடிவுறுகிறது. அந்த வனிதாவின் சோகக்குரல் இதோ.. 'விடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக் குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்'.

இறைவன் சிலருக்கு வசதியையும், பலருக்கு வறுமையையும் கொடுத்திருக்கிறான். பணமிருப்பவர்களிடம் ஏழைகளுக்கு கொடுத்துதவுமாறும் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் ஏழைகளின் கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிப்பதற்கே பலர் முதலைகளாய் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு மனிதர்தான் உஸ்மான் ஹாஜி. தனது ஏழைச் சகோதரனை வாழ விடாதவர். இறுதியில் உஸ்மான் ஹாஜி விபத்தில் சிக்க அவரது சகோதரர் அக்பர் இரத்தம் கொடுத்து உதுவுகிறார். அதைக் கேள்விப்பட்டு திருந்திய உஸ்மானின் ஆதங்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது. 'நான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக'.

தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே பிள்ளைகள் வெறுத்தொதுக்கும் கலிகாலம் இது. பாசம் யாவும் பணத்தால் மதிக்கப்படும் நிலை இன்று. அப்படியிருக்க தனது பாட்டி, பாட்டனை அன்பாக பார்க்க யாருக்கு மனது விசாலமாயிருக்கிறது? அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? வேதனை என்ற சிறுகதையை ரிஸ்னா தனது பாட்டி, பாட்டனை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். அவர்கள் மேல் தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். 01. 'நான் மௌத்தாகின காலத்துக்கு என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்' என்றார். (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. 02. 'உம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப் போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப் போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை'.

சிட்டுக்குருவி என்ற கதையில் தனது ஒன்றுவிட்ட தங்கை ஷியாவை, அதாவது சிற்றன்னையின் (தாயின் சகோதரி) மகளை தன் வீட்டில் தங்கியிருந்து படிக்கும்படி சொல்கிறார் அபி டீச்சர். எனினும் அவரது சுயரூபம் ஓரிரு கிழமைகளில் தெரிகிறது. நம்பியோர் கழுத்தறுக்கப்படுவர் என்ற புதுக் கூற்றுக்கமைய அபி டீச்சர் தன் வீட்டிலிருந்து ஷியாவை தீடீரென போகச் சொல்கிறார். படிக்க வந்த ஷியா ஒன்றுவிட்ட சகோதரியின் வார்த்தைகளால் துடிக்கிறாள்.

இவ்வாறு கற்பனை, பாசம், பெண்ணியம், மலையகம், சமூகம் என்ற பல்வேறு தளங்களில் நின்று சிறுகதைகளை படைத்திருக்கும் ரிஸ்னா, இன்னும் பல இலக்கியத் துறைகளில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வைகறை (சிறுகதை)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0775009222
விலை - 300 ரூபாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.