“சாயத்திரை“ சுப்ரபாரதிமணியனின் நாவல் :திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறி வகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும். இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில்.
 
தகுதிக்கேற்ற வேலையின்றி வாழ்வில் ஒட்டுதல் இன்றி சாயச்சாக்கடை மீது மிதக்கும் பாலிதின் கிண்ணம் போல் மிதப்பவன் பக்தவத்சலம். நொய்யலைக் காணவரும் வெளிநாட்டுக்காரி ரோசாவுடன் நொய்யல் நதியின் சீரழிவை நுணுகிப் பார்ப்பதில் தொடங்கும் நாவல். வாழ்வில் முன்னேற முடியாமல் குழந்தையோடு ஒரு விதவையைக் காசுக்காகத் திருமணம் செய்து, அவள் கொண்டு வந்த பணத்தில் வீடுகட்டி, அந்த வீட்டின் சுவர்களில் அடர்ந்த காடுகளின் படங்களை அலங்காரமாக ஒட்டி அதில் நிறைவு தேடும் பொய்மையை கேலி செயும் குழந்தையின் சிரிப்போடு முடிகிறது. எல்லையற்ற அழகும், செல்வமும் குவிந்து கிடக்கும் இந்திய இயற்கையை, பேராசையால் அழித்து விஷமாக்கி அந்த விஷச்சூழலில் இழந்த அழகின் சித்திரங்களைச் சுற்றித் தொங்கவிட்டுத் திருப்தி அடையும் நம் பேடித்தனத்தை கேலி செய்கிறது நாவல்.
 
ஜோதிமணி அற்புதமான பெண். ரசனை மிக்கவள். பக்தவத்சலத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லாமல் சேர்ந்து வாழ்பவள். அதையும் வெளிப்படையாக வாழ இயலாமல், எல்லாவிதமான அதிகாரங்களுக்குள்ளும் நசுங்கிக் கொண்டிருப்பவள்.
 
இந்த நாவலில் வரும் நாகன் தன் கீழ்சாதி அடையாளம் என்னும் இழிவான கறையைக் கழுவிப் போக்க முடியாமல் காலம் முழுவதும் திண்டாடுபவன். கூத்தில் அளவற்ற ஆர்வம் உள்ள அவன் அந்தக்கூத்து ஆர்வத்தினாலேயே அடிக்கடி வேலையிழப்புக்கு உள்ளாகிறான். அவன் உட்கார்ந்திருக்கும் நாற்காலி-அது என்ன? அவனுடைய வாழ்வின் நுட்பமான படிமம் அது.
 
செட்டியார் ஒருவர் நாவலின் பல பக்கங்களில் நகர்ந்து கொண்டிருக்கிறார். கால்கள் விளங்காமல் புட்டத்தை நகர்த்தி இயங்கும் அவர் திருப்பூர் சூதாட்ட வாழ்வில் தோற்றுப்போன இன்னொரு மனிதர். அழுக்கும் துர்நாற்றமும் அவரின் நிரந்தரச் சூழல். அவரை ஒட்டாமல் எட்டி நின்று பார்க்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள். இவருக்கு உதவி செய்பவர்கள் மற்றும் எல்லாருக்குமே இவரோடு சலிப்புற்று கடைசியில் அவர் தூக்குப் போட்டுச் செத்துப் போகிறார்.
 
வேலுச்சாமியின் உடம்பைப் புண்ணாக்கி அழுக வைத்த சாயப்பட்டறைக் கழிவுகள் தான் திருப்பூரை விஷமாக்கி, நொய்யலாற்றைச் சாகடித்து அதன் குறுக்கே கட்டப்பட்ட அணையில் சிறைபட்டுச் சுருண்டு கிடக்கும் அந்த ஆலகால விஷ கரும்பையும், இளநீரையும் கூட விட்டுவைக்கவில்லை. இந்த விஷத்தின் கொடுமை புரியாமல் குழந்தைகள் உடம்பில் பூசி விளையாடுகிறார்கள். நக்கிப்பார்த்த நாய் ஒன்று செத்துப் போகிறது.
 
இந்த விஷத்தில் மூழ்கடிக்கப்படுவதற்காக இளைய தலைமுறைகள் பெற்றோர்களாலேயே இழுத்து வரப்படுகின்றன. கைகள் நிறம் இழந்து, முடி உதிர்ந்து, அழிவின் விளிம்பில் தள்ளப்படும் இளைய சமூகத்தின் சாட்சியாக குமார் வந்து போகிறான்.
 
சுற்றுச்சூழல் சிதைவுகளில் சிதைந்து கொண்டிருக்கும் இந்த நகரைவலம் வரும் கோபக்கார தெய்வம் சவுண்டி அம்மன் ஊரின் சமூகத்தின் சிதைவில் அவள் கோபம் கொப்பளிக்கிறது.
 
இப்படியாகவும், இன்னும் சிறிய சிறிய செய்திகளாகவும், உவமைகளாகவும், சாட்சிகளாகவும், வண்ணச் சாயத்திரை போர்த்திய திருப்பூர் நகரத்தின் உண்மையைக் காட்டுகிறார் சுப்ரபாரதிமணியன். நிஜமும் மாயமுமாக, வாழ்வும் சாவுமாக, அழுக்கும் அழுகலுமாக எல்லாவற்றையும் பக்கத்துக்குப் பக்கம் அடுக்கி, சாயத்திரையைக் கிழித்து சோகத்தினைக் காட்டுகிறார். நொய்யலின் பழமையும், புதுமையும் சொல்லப்படுகிறது. சொல்லும் முறை வித்தியாசமானது. உண்ணுவதும் உண்ணாததும், வாழுவதும் வீழுவதும், காதலிப்பதும் கருகிப்போவதும், சிரிப்பதும் அழுவதும் ஒரே தொனியில், ஒரே குரலில்-ஒரே உணர்வில் சொல்லப்படுகின்றது.சுப்ரபாரதிமணியனின் கலை மன அதிர்வு நிரம்பவும் பக்குவப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிறது.
 
மையமில்லாத, அழுத்தமில்லாத, கதாநாயகன் இல்லாத-விளிம்பு மனிதரைப் பற்றிப் பேசுகின்ற இதைப் பின் நவீனத்துவ நாவல் என்று வகைப்படுத்தலாம். ஆனால் ஐம்புலனாலும் உணரத்தக்க நுட்பத்துடனும் தெளிவுடனும் ஒவ்வொன்றையும் நேர்த்தியாகச் சொல்லுகின்றார் ஆசிரியர். மொழிபெயர்ப்புத்தனமோ அன்னியத்தனமோ இல்லாத அசல் கலை இது. நவீனத்துவத்தையும், எதார்த்தத்தையும் குழைத்துப் பிசைந்து இழையாக்கி, அதில் பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் இருண்மையோ, மயக்கமோ, ஓலமோ எதுவும் இல்லை.
 
சமூகம் பல அடுக்குகளைக் கொண்டது. வெங்காயத்தைப் போல கலைஞர்கள் தங்களின் ரசனைக்கேற்ப இந்தத் தோல்களில் ஏதாவது ஒன்றை கவனமாக உரித்துத் தம் படைப்புகளின் பக்கங்களாக மாற்றலாம். அல்லது ஓட்டுப் போடலாம். குறுக்கு வெட்டாக, அல்லது நெடுக்கு வெட்டாக, அல்லது சாய்வு வெட்டாகக் காட்டுபவர்களும் உண்டு. அடித்தளத்துக்கு மேலாக, மேல் தோலுக்கு உள்ளாக, ஏகதேசம் உரித்து, உருப்பெருக்கி, வண்ணமழித்து காட்சிக்கு வைத்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன் ஒரு நேர்த்தியான கலைப்படைப்பு.

( சாயத்திரை – சுப்ரபாரதிமணியனின் “ நாவல் “ மறு பதிப்பு     விலை ரூ 195 , வெளியீடு  :  எதிர் பதிப்பகம்,  பைபாஸ் சாலை  பொள்ளாச்சி   98650 05084 )

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.