- பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) -அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய 'சமஸ்காரா' என்ற புதினம், தமயந்தி எழுதிய 'வாக்குமூலம்' என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது. தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன். பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ  ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான் அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன். சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம். அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.
                      
ஆண்களின் சுயநலம் இழக்காத போலி கட்டமைப்பால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நான் உணர்ந்த உண்மை. அரிதாரம் பூசாமல் கடைவிரித்து ஏமாற்றத்தைத்தருவது இன்றைய ஆண்போலிகளின் ஏதார்த்தமாக நான் பார்க்கிறேன். அப்படியான சூழலில் தமயந்தியின் பெருமுச்சு அக்னியைச்சுமந்திருக்கிறது அல்லது அடைகாக்கிறது என்பதில் அய்யமில்லை. எந்தக்கதையை எடுத்துக்கொண்டாலும் அங்கங்கே கவிதையின் கண்ணடிப்புகள், தீர்க்கமான சொல்வெட்டுகள் பளீச்சிடுவதைப் பார்க்கமுடிகிறது. எடுத்துக்காட்டுக்கு இதோ....

உன்
ஒற்றை ஸ்பரிசம்
இன்னமும் ஈரத்தோடு
மனதின் மூலையில்
ஒட்டியிருக்கிறது

கண்சிமிட்டும்
பறவைகளின் பயணம்
காற்றின் அலைக்கழிப்பால்
ரத்தாகும் தருணங்கள்
காயமானவை

விலகி நிற்கும்
உறவுகளைத்
தனிமைப்பிரதேசத்தில்
கைசுட்ட நெருப்பாய்
ஞாபகப்படுத்துகிறது
  
சந்தர்ப்பங்களின் வலையில்
எல்லோரும் சரிவதுண்டு
அப்படித்தான்
நானும் அவளும்

வெளிச்சம்
ஒரு பறவையைபோல்
பறந்து
அறையெங்கும் பரவிற்று

வெயில்மெல்ல
யானைத் துதிக்கையால்
ஜன்னலுக்குள்
எட்டிப்பார்த்தபடி இருந்தது

ஜன்னல் வழியாக
பளிச்சென்று வெயிலாகும் வானம்
என்னை வெறிக்கிறது

சின்னவயதில்
மழைக்காட்டி எனக்குச்
சோறூட்டின தருணங்கள்
என் ஞாபகத்தில்
அச்சிடப்பட்டிருக்கின்றன

சுயலாபங்களுக்காக
கைகளைவிட்டுச்செல்லும்
யாருக்காகவும் வருத்தப்படக்கூடாது

பயத்திலேயே
ஆண்பெண் உறவு
நிலவுகிறது

மழைநாளில்
எங்கள் வீட்டுவாசல்
விரிக்கும் குடைகள்
எனக்காக அழும்

இதை ஒரு கவிதையென்று நான் சொல்லவேண்டுமா என்ன? சமுகத்தைப்புரட்டிப்போடும் ஆவேசம் தமயந்திடம் குடிகொண்டிருக்கிறது என்பதின் அடையாளமாக " ஆண்களின் பார்வையிலேயே சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய் இந்தக்கட்டமைப்பு மனிதப்பண்புகளின்மேல் மறுகட்டமைப்பு பண்ணப்படுமெனில் அதுவே தீர்வாக இருக்கும்.”  என்ற வாக்குமூலத்தை எடுத்துக்கொள்ளலாம்.
நித்தியானந்தாவைவைத்து ஒரு கருத்தையும் இப்படி " நாம் மறைக்கப்பட்டவற்றையே நிஜமென நம்புகிறோம்.நிர்வாணத்தை மறுக்கும் மனநிலை இருக்கும்வரை இதுபோன்றபோலிகளே உண்மையாகக்கருதப்படுவார்கள்" என்று பதிவுசெய்கிறார்.

எல்லா கதைகளையும் எடுத்துக்கொள்ளாமல் நூலின் தலைப்பாக இருக்கிற 'வாக்குமூலம்' கதையைமட்டும் என் சொற்களால் சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன். தொகுப்பில் எல்லா கதைகளுமே ஒரு வகையில் வாக்குமூலம்தான். பொதுவாக எதையுமே வாக்குமூலமாகத்தானே அறிகிறோம்.. தமயந்தியின் வாக்குமூலம் நேர்மையானது; தூய்மையானது; தாய்மையானது; சோகமானது. சுதந்தரத்தோடு வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால் சுதந்திரம் கைகூடுகிறதோ இல்லையோ சோகம் எஞ்சிவிடுகிறது. அப்படிச்சோகம் சுமந்து சுதந்தரம்கைகூடித் ததும்பும் மனநிலையில்  சொல்லப்பட்டிருக்கிறது வாக்குமூலம்.  தன்மகனைப்பிரிந்து வாழவேண்டிய சூழல் .விவாகரத்துக்காக காலம் கழிக்கும் நிலை. அது கிடைத்துவிடத்தான் போகிறது. அதைமிக மிக நுட்பமாக “ நீதி மன்றங்களில் உறவுகள் பிரிக்கப்படுகின்றன என்றாலும் தொப்புள்கொடிகளும் அறுத்தெறியப்படுகின்றன என்பதையும் உறுதி செய்தாகிவிட்டது. உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன்நினைவுகள் மட்டும்தான்"என தமயந்தி சொல்கிறார். சோகத்தின் தொய்வும் நீதிமன்றத்தீர்ப்பும் ஒருசேர இதயத்துடிப்பாகியிருப்பதை உணரமுடிகிறது. உணர உணர நமக்கும் வலி வலுவாகவே வந்துவிடுகிறது.

பிள்ளைகளைப்பிரிதல் கொடுமை. பிரித்தல் அதனினும் கொடுமை. பிள்ளையைப்பிரிந்து எப்படியான வாழ்க்கை அமைந்தாலும் பிரிந்த பிள்ளையை நினைத்தால் எல்லாம் கரைந்த மணல்வீடாகும் என்பது உண்மை. அதற்காக ஒரு நரகத்தைச் சகிக்கவும் முடியாது. நரகத்தில் வாழ்ந்துகொண்டு பிள்ளையை வளர்க்கமுடியாது என்ற தெளிவான முடிவாக இருக்கலாம். பெற்றப்பிள்ளைகளை நினைத்து வாழவும்முடியாமல் சாகவும்முடியாமல் எத்துணைத் தாய்மார்கள் நரகத்தில் தம்மை அழித்துக்கொண்டிருப்பார்கள் என்பதை ஒருகணம் அசைபோடமுடிகிறது. மகனைப்பிரிந்ததாயின் வலி வலுவாகவும் சுயத்தின் துணையோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

" உன்கண்கள்
  மழைவரும் வானம் மாதிரி
  இருட்டுவது
  நீ பிறந்ததிலிருந்தே
  எனக்குப்பொறுக்காது.”

 “ என்னன்னாலும் உங்கூடதாம்மா இருப்பேன். என்றும் உன்னை நான் பார்த்த ஒரு வாரத்துக்கு முன் நீ என்மடியில் படுத்தபடியாய்சொன்னாய்" “ பால்கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன.

" அதிகாலையில் தூக்கமும் கரகரப்பும் கூடின குரலோடு 'ம்மா' என்று பாலுக்காக நீ அழைப்பது என் காலை நேரங்களை நிறைத்திருக்கிறது.”

"உனக்காக இடது கையில் நான் ஹோம்வொர்க்க எழுத, அவித்த கடலை சப்பிட்டபடி என் வாயிலும் ஒன்றிரண்டைத்திணிக்கும் உன் கைவிரல்களின் சூடு என் மனதை நிரப்புகிறது" “ அவ்வப்போது ரப்பரைவைத்து அழிக்கும்போது நெற்றிப்புருவத்தைத் தூக்கி என் உயிரை உருக்குவதுபோலொரு பார்வை பார்ப்பாய்.உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன் நினைவுகள்மட்டும்தான்"
"உன் உள்ளங்கையில் என்னைப்பற்றின ரேகைகள் பதிந்திருக்கும்.என் மூச்சுக்காற்றின் சூடு உன்னை உஷ்ணப்படுத்திகொண்டே இருக்கும். உலகிலேயே மரணத்தண்டனையைக்காட்டிலும்கொடிய தண்டனை பிள்ளைகளைப்பிரிவதுதான்" என்ற வாக்குமூலங்களிலிருந்து எத்துணைச்சோகமானது என்பதை விளக்க என்னால் முடியவில்லை. " எந்தக்குழைந்தையையும் பத்து விநாடிகளுக்குமேல் இப்போது என்னால் பார்க்கமுடியவில்லை" என்ற தமயந்தியின் கூற்று ரணமாக்கிவிடுகிறது என்னை. இது மட்டுமா?....இல்லை....இதோ " ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்போடு நீ என்னிருந்து விடுபட்டு சிணுங்கும் அழுகையோடு பிறந்ததும் உன்னை என் வயிற்றுமேட்டில் சிரித்தமுகத்தோடு டாக்டரம்மா போட்டபோது எழுந்த உணர்வை சாகும் நேரமும் என் அடி வயிறு நினைத்திருக்கும்.” எப்படி நித்திரையைக்கலைக்கும் வரிகளைத்த ந்திருக்கிறார் தமயந்தி! இப்படித் தாய்மையின் வருத்தத்தைப்பிழிந்து தந்திருக்கும் தமயந்தி திருமணமுறிவுக்கான காரணத்தை எங்கேயும் சொன்னதாகப்படவில்லை. ஆனாலும் ஓரிடத்தில் வரும் வாக்குமூலம் நமக்கு வழிகாட்டுகிறது. அதாவது " நீ வளர்ந்தபிறகு உன்னிடம் சொல்லவேண்டுமென நான் சேமித்தவைத்த உண்மைகள் சில உண்டு. கவிதை எழுதியதற்காக ஒடிக்கப்பட்ட என் வலதுகை நடுவிரல், தனித்தன்மைகளற்று மறத்திருந்த என் சுயம்" . கவிதை எழுதியும் சுயத்தோடு பேசியும் குடும்பவாழ்வில் ஈடுபட்டவருக்கு தனித்தன்மைகளென கருதியவைகளே கணவனுக்கு ஒவ்வாத தன்மைகளாகமாறி இல்லறத்தை இழக்க கரணங்களாகிவிட்டன என முடிவுசெய்யமுடிகிறது.

தனித்தன்மையோடு வாழவிரும்பும் பலரின் வாழ்க்கை இப்படித்தடுமாறி சிதறும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இவர்களே துணையைத்தேடுகிறார்கள்.பின் இவர்களே முரண்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். துணையைத்தேடும்போழுது சிலவற்றை மறந்திவிட்டார்களா!. அல்லது விருப்பம்போல் நடந்து பின் ஆண்கள் ஏமாற்றி விட்டார்களா? என நினைக்க நிறைய இடமிருக்கிறது. ஆனாலும் தாய்க்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆசிரியர் " கரன்சி நோட்டுக்களின் வாடை புழங்கும் இடங்கள் உன்னைத்தீண்டாதென்பதில் நான் திடமாக இருக்கிறேன்" என்ற வாக்குமூலத்தை ஓரிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். கதை முழுவதும் மகனைப்பிரிந்ததாயின் துயர், தன்னிடமிருக்கும் சுயத்தின் துணையோடு வெளிப்படும் வெறுமையை ஆசிரியர் தமயந்தி சொல்லுவதில் வெற்றிபெற்றிருந்தாலும் மகனைப்பிரிந்த தோல்வியை அவர் அடைந்திருக்கிறார் என்பதில் நமக்கும் வலி. கதையின் வெற்றியை, கதாசிரியரின் வெற்றியை சமூகத்தின் தோல்வியாக கருதவேண்டியிருக்கிறது. சொல்லும் திறனாலும் சொல்வதிலுள்ள உண்மையாலும் சமூகத்தை உணரவைத்தலில், வாசிப்போரின் இதயத்தைக் கனக்கவைத்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்.

பிள்ளையைப்பிரியும் மனமுறிவு கூடாதென்பதை தானடைந்த மனமுறிவின்வழி வலியைக்கொடுத்து நம்மை உணர வைத்திருக்கிறார் தமயந்தி. ஒருமுறை தாயின் உடல்நலம் மோசமானபோதுமகனை பார்க்க விருபியபோது மகனைக்கடத்த தாய் தீர்மானித்ததாக எச்சரிக்கை நோட்டிசு அனுப்பப்படுகிறது. அப்போது தாய் சொல்லுகிறாள்.. "பெற்ற மகனைக்கடத்த விரும்பும் தாயாகப்பார்க்கப்பட்டவள் உலகத்தில் நான் மட்டுமே இருக்கக்கூடும்" என்று. தாய் பேருந்துகளில் வேலைக்குச்சென்றுவந்த பயணச்சீட்டுகளை மகன் சேகரித்து வைத்திருந்ததை நினைவுப்படுத்தித் தாய் கூறுகிறாள்  "இப்போது நினைவுகளின் சேகரிப்பில் திளைத்திருக்கிறோம் இருவரும்". "நினைவின் அடையாளங்கள் துருப்பிடிக்காதென்று நினைக்கிறேன்" திடீரென்று கனவு வருகிறது.கனவில் மரணம் வாவா என்றழைப்பதாகக்கூறும் தாய், “நீ பிறந்தபோது என்னை முதலில் பார்த்ததுபோல நான் இறக்கையில் உன்னைக்கடைசியாய் பார்க்கவேண்டும்" என உருக்கமாக,ஏக்கமிகு வாக்குமூலத்தை வழங்குகிறார். அன்புள்ள மகனுக்கு என்று தொடங்கி, கடிதத்தை முடிக்கும் கடைசிவரியில்  " உன் முகம்தேடிவழியும் கண்ணோரத்துத்துளிகளுடன் அம்மா". கண்ணீர் துளியின்றி கடந்துபோகமுடியாத கதை வாக்குமூலம் என்ற தமயந்தியின் கருத்தை முன்மொழிந்து முடிக்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.