எழுத்தாளர் க.நவம்சண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..போர் பழம்பெரும் உலக மகா காவியங்கள், இதிகாசங்கள் பலவற்றின் பிரதான பேசுபொருளாக இருந்து வந்திருக்கின்றது. இராமாயணம், மகாபாரதம் முதற்கொண்டு, இலியட், ஒடிஸ்ஸி வரை இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளார்களான லியோ ரோல்ஸ்ரோய், ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னெஸ்ற் ஹேர்மிங்வே, ஜோசெஃப் கிப்ளிங் போன்றோர் உட்பட, அண்மைக்காலப் பலஸ்தீனியப் படைப்பாளிகளான சமி அல்-காசிம், ஸியாட் கட்டாஷ் போன்றோர் பலரும் தமது போர்க்கால அனுபவங்களை இலக்கியங்களாக்கிப் புகழ் பெற்றவர்கள். தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, காதலையும் வீரத்தையும் விதந்து பேசும் சங்க இலக்கிய காலத்தில் போர் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அதன் பின்னர்  மிக நீண்ட காலமாகத் தமிழிலக்கியத்தின் ’பிரதான பேசுபொருளாக’ இடம்பெறாதிருந்த போர், கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மாறுபட்ட வடிவத்தில் மீண்டும் தமிழிலக்கியத்தினுள் தடம் பதித்துக்கொண்டது. ஈழத்தமிழரது தமிழ்த் தேசிய விடுதலை எழுச்சியே அதற்கு வழிகோலிக் கொடுத்தது.

ஈழப்போர்க்கால இலக்கியத்தின் புதுவரவாக, சண்முகம் சிவலிங்கம் அவர்களது ‘காண்டாவனம்’ எனும் சிறுகதைத் திரட்டின் முதல் (வட அமெரிக்க) பதிப்பு, அவரது புதல்வர்கள் வித்தியானி, மகரிஷி ஆகியோரது முயற்சியில், கலிஃபோர்னியாவிலுள்ள iPMCG Inc. வெளியீடாக மார்கழி 2014இல் வெளிவந்திருக்கிறது. அண்மையில் பிரதி ஒன்று எனது கையை வந்தடையக் காரணமாயிருந்தவர், பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். ‘சசி’ என்று நண்பர்களாலும், ’ஸ்டீஃபன் மாஸ்ரர்’ என்று மாணவர்களாலும், பெற்றோர்களாலும், உறவினர்களாலும், ஊரவர்களாலும் அழைக்கப்பட்டுவந்த சண்முகம் சிவலிங்கம் எனது நண்பர்; சக ஆசிரியர். இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனை நகரிலுள்ள ஸாஹிரா கல்லுரியில் கடந்த எழுபதுகளில் இருவரும் அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்றினோம். அறிவியல் ஆசிரியர்களாக இருந்தபோதிலும், மாணவர்களுக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தோம். மாணவர் மன்றம் அமைத்து, இலக்கியம் தொடர்பான வாசிப்புக்கள், உரையாடல்கள், சந்திப்புக்களை நிகழ்த்தினோம். நாடகங்களைத் தயாரித்தோம். கலை இலக்கிய நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தினோம். சமூகம், அரசியல், இலக்கியம் உட்பட, பல்வேறு விடயங்கள் குறித்து எமக்குள் விவாதித்தோம், உரையாடினோம்; உடன்பட்டோம், முரண்பட்டோம் - நல்ல நண்பர்களாக.  

இலங்கையின் வடபிரதேசத்தில் நான் பிறந்து வளர்ந்த ஊரைத் தவிர, கிழக்கு மாகாணத்தையும், கண்டி, பேராதனை நகரங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்தையுமே எனக்கு மிகவும் பிடித்தமான பிரதேசங்களெனக் குறிப்பிட்டுச் சொல்வேன். கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில், நான் கடமையின் நிமித்தம் சில வருடங்கள் வாழ்ந்துவந்த கல்முனையும் ஒன்று. காண்டாவனம் கதைத் திரட்டினூடாக, சுமார் 40 வருடங்களின் பின்னர், மீண்டும் ஒருமுறை கல்முனை போய்வந்தேன். வங்கக் கடலும், கரைமணலும், வானுலவும் வட்ட நிலவும், வாடிவீடும், வயல்வெளியும், சம்பா அரிசியில் சமைத்த சோறும், கஜுவும், கட்டித் தயிரும், கைத்தறி ஆடைகளும், வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமையாய் வாழும் சனசமூகங்களும் மீண்டும் என் மனக்கண் முன்னே வந்து போயின. எனக்குப் பிடித்தமான, கிழக்கு மாகாணப் பேச்சுமொழி, கலை, பண்பாடு, விருந்தோம்பல், வாழ்க்கைமுறை என்பன மீண்டும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. எனக்குத் தெரிந்தவர்கள், என்னோடு பழகியவர்கள், எனது  நண்பர்கள் சிலர்கூட, காண்டாவனம் கதை மாந்தர்களாக வந்து போயினர்.

ஈழத்தின் மிக முக்கிய கவிஞராக அறியப்படும் சசி, ஐம்பதுகளின் முற்பகுதியில் சிறுகதைகளையே முதலில் எழுதியவர். அறுபதுகளின் நடுப்பகுதியில்தான் அவரது கவனம் கவிதையின் பக்கம் திரும்பியது. சுமார் 30 சிறுகதைகள் வரை அவர் எழுதியிருக்கக்கூடும். அவற்றுள் அநேகமானவை பிரசுரகளம் காணாமலும், நூல்வடிவம் பெறாமலும் இருந்தமைக்கு அவரது இயல்புகள்தான் காரணம். படைப்புக்களைத் தொடர்ந்து திருத்திகொண்டே இருக்கின்றமை, பிரசுரிப்பதில் அக்கறையின்மை, அச்சம் மிகுந்த போர்ச் சூழலில் படைப்புக்கள் பலவற்றைத் தீக்கிரையாக்கியமை, 87 சூறாவளியில் சிலவற்றை அழியவிட்டமை என்பன அவற்றுள் சில. ஆயினும், நண்பர்கள் சிலரது தொடர்ச்சியான தூண்டுதலின் பயனாக, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் எழுதியவற்றுள் 16 கதைகளைத் தொகுத்து, காண்டாவனம் எனப் பெயரும் இட்டு, அவை குறித்த தமது குறிப்பொன்றுடன் பிரசுரத்துக்கெனக் கையளித்திருந்தார். இதுவரை காலமும் வெளிவராமல் கிடப்பிலிருந்த காண்டாவனம், அவரது மறைவுக்குப் பின்னரே இப்போது நூலுருப்பெற்று வெளிவந்திருக்கிறது.

‘இவைகள் என்னையும் என் அனுபவத்தையும் சார்ந்தவை’ என, காண்டாவனம் கதைகள் பற்றிய தமது குறிப்பில் குறிப்பிடும் சசி, இக்கதைகளுக்கான காலங்களை இந்திய அமைதிப் படைகளின் காலம் பிரதான காலமாகவும், அதற்கு முன், பின்னான காலங்கள் கிளைக் காலங்களாகவும் அமையும் வகையில் கிரமப்படுத்தியிருக்கிறார். இந்திய அமைதிப் படைகளுக்கு முன்னரான கிளைக் காலத்தை இலங்கையில் வன்முறையுடன் கூடிய ஆயுதப் போராட்டத்திற்குக் கட்டியம் கூறிய அபாய அறிவிப்புக் காலமாகவும், ஆயுதப் போராட்டத்திற்கான தேவையை வலுப்படுத்திய இனக்கலவரக் காலமாகவும், விடுதலை காணப் புறப்பட்ட ஆயுதக் குழுக்கள் தமக்குள் மல்லுக்கட்டி மாண்டழிந்த, கனல்வெப்பக் காண்டாவனக் காலமாகவும் என மூன்று சிறுகிளைக் காலங்களாக, முறையே வரிசைப்படுத்தியிருக்கிறார். இரண்டாவது ஈழப்போரின் பின்னர், இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கிய கிழக்கிலங்கை மக்கள் பட்ட அவலங்களின் காலத்தை இந்திய அமைதிப் படைகளுக்குப் பின்னரான கிளைக் காலமாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக எதிர்கொண்டுவரும் இனப்பிரச்சினைக்கு, சமஷ்டி முறைமையே உகந்த தீர்வாகும் என, சசி தமது இளமைக் காலத்தில் எண்ணியிருந்தவர். தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு ஒரு மார்க்சிய விசுவாசியாக ஊர் திரும்பிய பின்னர், சோஷலிசப் புரட்சி இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத் தரும் என நம்பினார். ஆனால் ஜேவிபியின் 1971 புரட்சிக் கலவரத்தை ஒரு சிங்கள தேசிய ஜனநாயகப் புரட்சியாக இனங்கண்ட அவரது மனதில், ’வடகிழக்கில் உள்ளவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைக் கேட்டால், அது வகுப்புவாதம்; தெற்கில் உள்ள இனத் துவேஷத்துக்குப் பெயர் தேசியமா?’ எனக் கேள்வி எழுந்தது. அதன் விளைவுகளே, 1975 பண்டாரநாயகா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய, ’தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிங்கள-தமிழ் எழுத்தாளர்’ மாநாட்டின் இறுதிநாளன்று, சசி படித்த கவிதையும், அதனால் சபையில் ஏற்பட்ட சலசலப்புக்களுமாகும். இச்சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதே, காண்டாவனம் கதைத் திரட்டில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் - இலங்கையில் வன்முறையுடன் கூடிய ஆயுதப் போராட்டத்திற்குக் கட்டியம் கூறிய - ’திசைமாற்றம்’ (1975) எனும் சிறுகதை. இக்காலகட்டத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற தமிழ் ஆயுதக் குழுக்களின் எழுச்சியும், நாட்டில் நடைபெற்ற இனக்கலவரங்களும், அவற்றிற்கு எண்ணெயூற்றி, எரியூட்டிய அந்நாளைய ஜனாதிபதியின் துவேஷப் பிரகடனங்களும், சசியை முற்றுமுழுதாக ஒரு தமிழ்த் தேசிய விடுதலை விசுவாசியாக மாற்றிக்கொண்டன. இந்த அருட்டுணர்வில் எழுதப்பட்டதுதான் இரண்டாவது சிறுகதையான ‘மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்’ (1980).

இவ்விதமாக, அப்போதைய நாட்டு நடப்பு நிலைமைகளுக்கேற்ப, சசி தமது அரசியல் பார்வைகளையும் அவ்வப்போது மாற்றியமைத்து வந்திருக்கிறார். இதனை எண்பிக்கும் வகையில், ‘என்னைப் போன்று ஒவ்வொரு கட்டத்திலும் செட்டை கழற்றிப் புதிய புதிய உருமாற்றத்திற்கு உள்ளாகி, தனது ஆன்மீகப் பார்வையையும், சமூக-பொருளாதார-அரசியல் பார்வைகளையும் விஸ்தரித்துக்கொண்டு போனவனல்ல முருகவேள். இளைமையில் பூண்ட தேசிய உடையை என் போல் பல்கலைக்கழகத்திற்குப் போய் மாற்றிக்கொண்டவனல்ல ……’ (பக்.51) என சசி, அரசியல் நிலைப்பாடுகளில் தாம் மேற்கொண்ட மாற்றங்கள் பற்றி ஒளிவுமறைவின்றிக் கூறுகிறார். மாறிக்கொண்டே இருக்கும் வாழ்வியலின் யதார்த்தங்களைச் சந்திக்கச் சித்தம் கொண்ட எந்த எழுத்தாளனுக்கும் ஏற்படக்கூடிய இயல்பான உருமாற்றங்களே இவை எனக் கொள்ளவேண்டியுள்ளது. இனப்படுகொலைகளும், ஒடுக்குமுறைகளும் இலங்கையில் தலைவிரித்தாடிய தருணத்தில் அவற்றின் எதிர்வினையாகத் தமிழர் தரப்பில் ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் தோற்றம் பெற்றன. அவற்றுள் ஒன்றுடன் இணைந்த இளைஞர்களுள் ஒருவரான சசியின் மகன், தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கதை ’போருக்குப் போனவர்கள்’ (1984). இயக்கங்கள் ஒன்றுடனொன்று பொருதுமோதி அழித்தமையை ஒரு குறியீட்டுப் படிமத்தில் ‘காண்டாவனம்’ (1985) என்னும் கதை சொல்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய அமைதிப்படைக் காலச் சம்பவங்களே இத்திரட்டின் அநேகமான கதைகளில் பேசப்படுகின்றன. ’உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’ (1987), ’காட்டுத்தோடை’ (1987), ’காலடி’ (1987), ’வாலி வதையும் வானரச் சேனையும்’ (1988), ’மரணப்பூட்டு’ (1989), ’பிரகஷ்தம்’ (1989) ஆகிய கதைகள் ’ஆயுதங்களைக் களைந்து, அமைதி காப்போம்’ எனும் சுலோகத்துடன் வந்துசேர்ந்த இந்திய அமைதிப் படைகளது மூர்க்கத்தின் வாசற் கதவுகள் திறந்துகொண்டபோது, கிழக்கிலங்கை மக்களுக்கு நேர்ந்த இடர்பாடுகளையும், அவை சார்ந்த சோக நினைவுகளையும் சித்திரிக்கின்றன.

இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்தின் பின்னர் இரண்டாவது ஈழப்போர் வெடிக்கிறது. அந்நேரம் இலங்கை இராணுவத்தினர் கிழக்கிலங்கையைத் தமது கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதற்கென மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற தாக்குதல்கள், இடப்பெயர்வுகள், அகதிவாழ்வுகள், மரண பயங்கள், துன்ப-துயரங்கள், துரோகங்கள், கைவிரிப்புக்களை ஏனைய கதைகளான ’வெளியேற்றம்’ (1990), ’பிரமாண்டம் நோக்கி’ (1990), ’படைகள் நகர்ந்தபோது’ (1990), ’தொலைந்து போன கிரகவாசி’ (1992) ஆகியன பேசுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து, பல்வேறு காலகட்டங்களில், போர் தம்மீதும், தமது பிரதேசத்து மக்கள் மீதும் திணித்த அவலம் தோய்ந்த அனுபவங்களையே சசி பெரும்பாலும் இக்கதைகளூடாகப் பதிவு செய்திருக்கிறார்.

போரிலக்கியங்களைச் சித்திரிப்பதற்கு யதார்த்தவாதம் ஓர் உகந்த வழிமுறையல்ல என்பது அனுபவம். உருவகமும் கற்பனைப் படிமமும் கொண்ட, மாயயதார்த்தவாதம் போன்ற மிகைக் கற்பனையுடன்கூடிய உத்திமுறைகளே அதற்குப் பொருத்தமானவை. மிக இறுக்கமான அரசியல், இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் யதார்த்தமான படைப்புக்களைப் படைப்பதில் ஏற்படக்கூடிய இச்சிக்கல்கள், ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லாத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் பொதுவானவை. இதனால்தான் அவர்களுள் அநேகமானோர் பயன்படுத்திவரும் மொழியும், உத்திகளும் பூடகமானவையாகவும் நேரடித் தன்மை அற்றவையாகவும் காணப்படுகின்றன. இத்திரட்டிலுள்ள ‘காண்டாவனம்,’ ‘வாலி வதையும் வானரச் சேனையும்,’ ‘காலடி’ ஆகிய கதைகள் அத்தகைய மொழியாலும் உத்திகளாலும் முன்னகர்த்திச் செல்லப்படுவதற்கும் இதுவே காரணமாகும். ‘வாலி வதையும் வானரச் சேனையும்,’ ‘காலடி’ ஆகிய கதைகளில் தனித்துவமான மொழியும் கற்பனைப் படிமங்களும் கையாளப்பட்டுள்ளன. சிறுகதை இலக்கணங்களை மீறி, குறுநாவல்கள் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்விரு கதைகளை விளங்கிக்கொள்வதற்கும் இரசிப்பதற்கும் அனைத்துலக அரசியல் வரலாற்று முன்னறிவும், பரந்த வாசிப்பு அனுபவமும், கற்பனை வளமும் வாசகனுக்குப் பெரிதும் உதவும். இல்லாவிடத்து, இப்படைப்புக்களினுள் ‘வாசகர் நுனைவின்மை’ எனும் அபாயம் இடம்பெற வாய்ப்புண்டு.

ஒரு கட்டத்தில் பின்நவீனத்துவப் பல்பரிமாணக் கோட்பாடுகளால் கவரப்பட்டிருந்த சசி, குறிப்பாக ‘காலடி’ கதை பற்றி - ‘கனவுக்குள் கனவான அந்தக் கதை அமைப்பின் புனைவுத் தருக்கத்தையும் அதன் கட்புல படிம ஊடகத்தையும் பல வாசகர்களும் விமர்சகர்களும் தவற விட்டிருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளமை கவனிப்புக்குரியது. ஆயினும், இவ்வாறாகத் தன்னை ஒரு பின்நவீனத்துவவாதியாகப் பிற்காலத்தில் பிரகடனப்படுத்திக்கொண்ட போதிலும், உண்மையில் அவர் மார்க்சியத்திலிருந்து எழுந்தவர்; அடிப்படையில் ஒரு மார்க்சியவாதியாக - தளைகளைந்த மார்க்சியவாதியாக வாழ்ந்தவர்; ’உலகம் மீண்டும் மார்க்சியத்தை, விட்ட இடத்திலிருந்து தொடரவிருக்கிறது’ என நம்பியவர்; சோஷலிசப் புரட்சிக்கு முன்நிபந்தனையாக, தேசிய ஜனநாயகப் புரட்சி இடம்பெற வேண்டும் என நம்பியவர் (ப. 12). அவற்றிற்கான ஆதார விதைகளை அவரே இத்திரட்டினுள் ஆங்காங்கே விதைத்துச் சென்றிருக்கிறார்.

சசி ஈழத்து நவீன கவிதை வரலாற்றில் தனக்கேயான ஒரு தனியான தடம் பதித்த கவிஞர். இயற்கையைப் பார்த்து மனம் நெகிழ்ந்து நெக்குருகும் கவிதா மனோநிலை மிக்க கலைஞர். அவரது உரைநடையிலும் அதே தனித்துவமும் கவித்துவமும் கற்பனைகளும் படிமங்களும் சிந்தனைகளும் மேலோங்கி நிற்பதை, காண்டாவனம் கதைகளூடாகக் காணலாம். நுட்பமும் அழகும் எளிமையும் மிக்க மொழிநடை; மனதில் சுமையை ஏற்றும் சுகமான மொழிநடை; அவலங்களுக்கு நடுவிலான அனுபவ வார்ப்புகளுக்கு உகந்த மொழிநடை. வாழ்வின் மிகவும் நெருக்கடியான தருணங்களிலிருந்து அவர் எழுதிய கதைகள் அனைத்துமே, அலைவைப் படம் பிடிக்கும் உருக்கமான கதைகள்தான். ஆயினும் ‘கொடுமைகளின் சில கதைகள், என் வலுவற்ற பேனா முனையிலிருந்து ஒழுகி இருக்கின்றன’ என்றும் – ’இந்திய அமைதிகாக்கும் படையின் தேடுதல்களுக்கும் சாடுதல்களுக்கும் தீவினைக்கும் சாவினைக்கும் இலக்கான ஒரு போராளிக் கதாபாத்திரத்தினது இருப்பும் இழப்பும் இதில் உள்ள பல கதைகளில் ஊடுபாவாக இருக்கிறது’ (பக். -14) என்றும் எழுதும் அவர் – மனதை அலைக்கழிக்கும் அனுபவங்களையும் அழகிய, கலையம்சம் மிக்க கதைகளாக்கும் இரசவாதம் கைவரப் பெற்றவர். ’எச்சிறிய புல்லும் அதனளவில் முழுமை; இடுகாட்டில் முளைக்கிற கனிகளும் அருமை’ என முன்னொருமுறை கவிபாடிய கவிஞரல்லவா, அவர்! 

காண்டாவனம் சிறுகதைத் தொகுதியின் ஆரம்பம் முதல் இறுதி வரை, ஒரு நாவலுக்குரிய பண்பும் தொடர்ச்சியும் சம்பவக் கோர்வையும் பாத்திர வார்ப்புப் ஊடறுத்துச் செல்கிறன. எல்லாக் கதைகளிலும் ஏக்கம், இரக்கம், இழப்பு, இயலாமை, துக்கம், கோபம், பாசம், பரிதவிப்பு என்பவற்றினது கூட்டு இழையொன்று கோடு கீறிச் செல்கிறது. ’போருக்குப் போனவர்கள் தோற்றதும் இல்லை; அவர்கள் வீடு திரும்புவதும் இல்லை’ என்றும் – ’மரணத்தை வெல்வது, மரணத்துள் வாழத் தீர்மானிப்பதுதான்’ என்றும், இயக்கத்துக்குப்போன தன் மகன் எழுதிய கடித வரிகளுக்குள் மனம் கரைந்து பரிதவிக்கும் தந்தையாகவும் (பக். 99), - ஆயுதங்களுடன் பறந்துவரும் பருந்துகளிடமிருந்து தன் கோழிக் குஞ்சுகளைக் காக்கத் துடிக்கும் தாய்ப் பறவையாகவும் (பக். 126, 142, 155, 164) சசி படும் அல்லல்கள் வாசகன் மனதை அல்லாட வைக்கின்றன.

அதேவேளை, ’மரணத்துக்குச் சமீபமாகும்போது அதைத் துணிவுடன் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்றும், ‘உயிர் வெல்லந்தான்; ஆனால் அதை உயர்ந்த நோக்கத்துக்கென அர்ப்பணிக்கும்போது பிரமாண்டத்துவம் கிடைக்கும்’ என்றும், ’மரணத்தை எதிர்கொண்டு, என் மக்களைப்போல் பிரமாண்டம் ஆகிவிடலாம்’ என்றும் (பக். 162) எண்ணி, தன் மகனை இழந்த மனதுக்கு ஒத்தடம் கொடுத்து, அமைதிகாணும் ஓர்மம் இருக்கின்றதே, அது அவருக்கே உரிய தனிப்பண்பு!

நண்பர் சசி துல்லியமான பார்வைகொண்ட ஒரு சிறந்த கவிஞர். கனமான சிந்தனை வலுவும் கற்பனைத் திறனும் மிக்க அறிவியல் அணுகுமுறையாளர். அவர் தம்மிடம் அபரிமிதமாகக் காணப்பட்ட இவ்வாற்றல்களைப் பயன்படுத்தி, கடந்த நூற்றாண்டின் கடைசிக் காற்பகுதிக்கான கிழக்கிலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்றை காண்டாவனம் எனும் உணர்ச்சிச்செறிவு மிக்கதொரு நவீனமாக்கித் தந்திருக்கிறார். அரசியலையும் அழகியலையும் செவ்வனே சரிவரச் சேர்த்தெடுத்து, ஈழத்துப் போர்க்காலச் சிறுகதைகளுக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு யுத்தத்திலிருந்து எந்த நல்லதும் வெளிவராமல் போனாலும், நிச்சயம் நல்ல கதைகள் வரும் என்பதைக் காண்டாவனம் மூலம் நிறுவியிருக்கிறார். ’பரவசப்படுத்தத் தவறும் எந்தவொரு படைப்பையும் பாதியில் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடும் பழக்கம் என்னிடமுண்டு. மாறாக,  எனது அன்புக்குரிய நண்பர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களது முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘காண்டாவனம்’ அண்மையில் எனது கையில் கிட்டியது. 249 பக்கங்கள் கொண்ட நூலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். காரணங்கள் பலவுண்டு….’ என எனது முகநூலில் நான் எழுதியமைக்கு, இவற்றைவிட வேறென்ன காரணங்கள் வேண்டிக் கிடக்கின்றன?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.