தமிழகத்திலிருந்து வெளிவரும் கணையாழி இதழ் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகை ஆகியவை கனடாச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் வெளியிட்ட 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பிலும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவை பற்றிப் பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பிது; ஒரு பதிவுக்காக. இவை கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு பார்வையினை வெளிப்படுத்துவன. இவை எழுதப்பட்ட காலங்களில் அதிகம் எழுதாத பல புதிய படைப்பாளிகள் பலர் இன்று எழுதுகின்றார்கள்.  இவர்களைப் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள் எமக்குக் கிடைக்கும்போது அவையும் இங்கு தொகுக்கப்பட்டுப் பதிவு செய்யப்படும். கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ஒரு பதிவுக்காக அவை மிகவும் அவசியம். பதிவுகள் -

'பனியும் பனையும்' தொகுப்பின் கனடியத் தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளிகள் பற்றியதொரு பதிவு!

- வ.ந.கிரிதரன் -

'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பு 1994இல் எஸ்.பொ.வின் மித்ர பதிப்பக வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்து பலரதும் கவனிப்பைப் பெற்ற தொகுதி. மேற்படி தொகுதியில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழப் படைப்பாளிகளின் 39 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மேற்படி தொகுதியிலுள்ள கனடா எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் அவர் பற்றிய விபரங்களைச் சுருக்கமாக பதிவு செய்யும் கட்டுரையிது. மேற்படி தொகுப்பான 'பனியும், பனையும்' தொகுப்பின் இரண்டாவது தொகுப்பு விரைவில் மீண்டும் மித்ர பதிப்பக வெளியீடாக, மேலும் பல சிறுகதைகளைச் சேர்த்து வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்படி தொகுப்பில் வெளிவந்த கனடியத் தமிழ்எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்களையும் மிகவும் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதோடு பதிவு செய்வதும்தான் இப்பதிவின் நோக்கம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளில் ஒருவரான 'பவான்' என்னும் படைப்பாளியைப் பற்றி மேலதிகத் தகவல்களைப் பெற முடியவில்லை. இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்தவர்கள் எமக்கு அவற்றைச் சுருக்கமாக எழுதி அனுப்பினால நல்லது. (எமது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

மேற்படி தொகுப்பில் இடம் பெற்றிருக்க வேண்டிய பல கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினாலோ அல்லது மேற்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப திரு. எஸ்.பொ. அவர்களினால் தொடர்புகொள்ளப்பட்ட கனடியத் தமிழ் எழுத்தாளர்கள் தெரிவு செய்யாத காரணத்தினாலோ வெளிவரவில்லை. அவர்களது சிறுகதைகளையும் வெளிவரவிருக்கின்ற இரண்டாவது 'பனியும் பனையும்' தொகுப்பு கொண்டிருப்பது அவசியமானதென நினைக்கின்றேன். மேற்படி தொகுப்பில் வெளிவந்த எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' என்னும் சிறுகதையைக் கண்டபோது எனக்கு வந்த ஆச்சரியத்தை விட , சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவர்களும் ஆச்சரியப்பட்டுப் போயிருக்கலாம். ஏனெனில் அவர்கள் யாருமே அனுப்பாத வ.ந.கிரிதரனின் சிறுகதையொன்று மேற்படி தொகுப்பில் இடம் பெற்றதுக்குக் காரணம எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியாக இருக்கலாமென்பதென் ஊகம்.

மேற்படி 'பனியும், பனையும்' தொகுதிப்பின் சிறுகதைகள் பலவற்றை 'நூலகம்' இணையத் தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். ஆனால் 'பனியும்,பனையும்' தொகுப்பிலுள்ள வட அமெரிக்கக் கதைகள் (வட அமெரிக்கக் கதைகள் என்று குறிப்பிட்டிருந்தாலும் அவை அனைத்தும் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளே. புதிய பதிப்பில் அமெரிக்காவிலிருந்தும் படைப்பாளிகளிடமிருந்து கதைகளைப் பெற்று வெளியிட்டால் அது சிறப்பாகவிருக்கும் என்பதென் கருத்து) வட அமெரிக்கச் சிறுகதைகள், மற்றும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்ட நோர்வேச் சிறுகதை ஆகியன விடுபட்டுப்போயுள்ளன. தட்டச்சுச் செய்தவர் நேரமின்மை காரணமாக தவிர்த்திருக்கலாம் போலும். சுயவிருப்புத் தொண்டர்களின உதவியால் இயங்கும் நல்லதொரு திட்டமான 'நூலகம்' இணையத்தளத் திட்டத்திற்கு மேற்படி விடுபட்ட கதைகளைத் தட்டச்சுச் செய்து அனுப்ப முடிந்தவர்கள் நேரம் கிடைக்கும்போது அனுப்பினால் அது 'நூலக'க் குழுவினருக்குப் பெரிதும் உதவியாகவிருக்கும். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளை, கலையிலக்கியப் பங்களிப்புகளை இணையத்தில் பதிவேற்றி வரும் நூலகத் திட்டம் இன்று ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு மிகுந்த பயனுள்ள உசாத்துணைத் திட்டங்களினொறாக இருந்து வருவது பாராட்டுதற்குரியது. (நூலகத் திட்ட இணையத்தள முகவரி: http://noolaham.net )

மேற்படி தொகுப்பிலுள்ள வட அமெரிக்கச் சிறுகதைகள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

அளவெட்டி சிறிசுக்கந்தராசா - 'மரபுகளும் உறவுகளும்'
ஆனந்த் பிரசாத் - 'அவர் நாண...'
அ.கந்தசாமி - 'விடிவு தூரத்தில்'
வ.ந.கிரிதரன் - 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'
சக்கரவர்த்தி - 'மனசு'
க.நவம் - 'க.குழம்பும், க.முரண்பாடும்'.
நிலா குகதாசன் - 'பிரசவம்'
பவான் - 'முகமிழந்த மனிதர்கள்'
என்.கே.மகாலிங்கம்- 'வெறுமை'
ஜோர்ஜ் குருஷேவ் - EX - அலைகளில்'

அளவெட்டி சிறிசுக்கந்தராசா: கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் அளவெட்டி சிறிசுக்கந்தராசாவுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த நான்காவது பரிமாணம், தாயகம், செந்தாமரை மற்றும் தமிழர் மஞ்சரி போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரது பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான 'சிறிசுவின் சில கதைகள்' எஸ்.பொ.வின் மித்ர வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்துள்ளது. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவரான அளவெட்டி சிறிசுக்கந்தராசா மரபுகளைத் துணிச்சலுடன் தனக்கேயுரிய மொழி நடையில் தகர்ப்பதில் வல்லவர். இவரது கதைகளைப் பற்றி எழுத்தாளர் க.நவம் அவர்கள் "புகலிட வாழ்வின் வினோத ஆனுபவங்களை இடையிடையே ஊரின் காற்றை அங்கிருந்தும், சில வேளைகளில் இங்கிருந்தும் சுவாசிக்கும் கரிசனை, மனவெளியிலும் மாய விசித்திரங்களிலும் மொய்க்கிற பிரமைகளின் பிரதிபலிப்பு என்கிற சூழ்முழுமை அமசங்கள் யாவற்றையுமே தனக்குரிய மாறுபட்ட பாணியில் குழைத்து, இவரால் அழகாக வரையப்பட்ட சித்திரங்கள்'  என்பார். அத்துடன் அரசியல் சூழல் காரணமாக புலம்பெயர்ந்த ஈழந்த்தமிழர்களின் புலம்பெயர் அனுபவங்களை அனுகூலமாக்கிக் கொண்ட் தமிழ்ப் ப்டைப்பாளிகளில் அளவெட்டி சிறி முக்கியமான ஒருவர் என்றும் குறிப்பிடுவார்.

ஆனந்த் பிரசாத்: 1975இலிருந்து எழுதிவரும் ஆனந்த பிரசாத் தற்போது கனடாவின் மாண்ட்ரியால் நகரில் வசித்து வருகின்றார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பகாலக் கவிதைகள் பலவற்றை இலங்கை இராணுவ்ச் சுற்றிவளைப்பொன்றின்போது எரித்து விட்டதாகத் தெரியவருகிறது. கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கலையிலக்கிய கட்டுரைகள் எழுதுவதில் வல்லவரிவர். புலமை மிக்க மிருதங்க வித்துவானான ஆனந்தபிரசாத் மாண்ட்ரியாலில் 'நிருத்தியா' அமைப்பில் மிருதங்கள் வித்துவானாக இருப்பதோடு மிருதங்க வகுப்புகளையும் நடத்தி வருகின்றார். சிறந்த பாடகரும் கூட. இவரது கவிதைகள் மற்றும் இசை, நாட்டியக் கலை சம்பந்தமான விமர்சனக் கட்டுரைகள் பல தாயகம், காலம், தேடல் போன்ற சஞ்சிகைகள் பலவற்றில் வெளிவந்துள்ளன. 'காலம்' வெளியீடாக இவரது 'ஒரு சுயதரிசனம்' என்றொரு கவிதைத் தொகுதி வெளியாகியுள்ளது. ஒருகாலத்தில் அதிகளவில் கனடாத் தமிழிலக்கிய உலகில் பங்களித்துக் கொண்டிருந்த ஆன்ந்த் பிரசாத் அண்மைக் காலமாக அஞ்ஞாதவாசம் செய்வதும் தான் ஏனோ?

அ.கந்தசாமி:சிறந்ததொரு பெளதிக ஆசிரியராக எழுபதுகளில் யாழ்நகரில் அறியப்பட்ட அ.கந்தசாமி நல்லதொரு எழுத்தாளருமாவார். அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதத்தொடங்கிய இவரொரு பேராதனைப் பல்கலைக் கழகத்து விஞ்ஞான பீடப் பட்டதாரி. கனடாவிற்குப் புலம்பெயர்ந்தபின்னர் கலை, இலக்கிய முயற்சிகளில் மிகவும் தீவிரமாக வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, நாடகமெனச் செயற்பட்டவர். இவர் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், சினிமா விமர்சனமெனப் பன்முக ஆற்றல் வாய்ந்த படைப்பாளிகளிலொருவர். கனடாத் தமிழிலக்கியத்தில் குறுகிய காலமே வெளிவந்தபோதுமே தடம் பதித்த 'ழகரம்' சஞ்சிகையினை வெளியிட்டதோடு அதன் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தவர். இவரது 'கானல்நீர்க கனவுகள்' என்னும் கவிதைத் தொகுதியொன்று .எழுத்தாளர் க.நவத்தின் 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளிவந்துள்ளது. இன்னுமொரு கவிதைத் தொகுதியான 'காலத்தின் பதிவுகள்' என்னும் கவிதைத் தொகுதியில் ரதன் , மலையன்பன் ஆகியோருடன் இவரது கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

வ.ந.கிரிதரன்:இலங்கையிலிருந்த காலகட்டத்தில் 1970களிலிருந்து எழுத்துலகில் காலடி வைத்தவர். இலங்கையிலுள்ள மொறட்டுவைப் பல்கலைக கழகக் கட்டடக்கலைப் பட்டதாரி. இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்நாவல்கள் ஆகியன தாயகம், புரட்சிப்பாதை, தேடல், ழகரம் , சுபமங்களா, கணையாழி, ஆனந்த விகடன், வீரகேசரி, சிரித்திரனுட்படப் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 2000ஆம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்' இணைய சஞ்சிகையினை (http://www.pathivukal.com) வெளியிட்டு அதன் ஆசிரியராகவிருந்து நடாத்தி வருபவர். திண்ணை, பதிவுகளுட்படப் பல்வேறு இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், அறிவியற் கட்டுரைகள் மற்றும், நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான 'அமெரிக்கா', 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' (ஆய்வு) ஆகியன தமிழகத்திலிருந்து சிநேகா பதிப்பக வெளியீடுகளாகவும், 'மண்ணின் குரல்' (நான்கு நாவல்களின் தொகுப்பு) 'குமரன் பபளிஷர்ஸ்' வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. கனடாவிலிருந்து 'மங்கை'  பதிப்பக வெளியீடுகளாக 'எழுக அதிமானுடா' (கவிதைகள்), 'மண்ணின் குரல்' (தொகுப்பு) ஆகியன வெளிவந்துள்ளன. அண்மையில் 'திண்ணை', 'பதிவுகள்' ஆகிய இணைய சஞ்சிகைகளில் இவரது 'அமெரிக்கா' நாவலின் இரண்டாவது பகுதி, நல்லூர் இராஜதானி நகர அமைப்பின் (திருத்தப்பட்ட பதிப்பு) ஆகியன தொடராக வெளிவந்துள்ளன.

சக்கரவர்த்தி:'யுத்த சன்னியாசம்' கவிதைத் தொகுதி , 'யுத்தத்தின் இரண்டாம் பாகம்' (சிறுகதைத் தொகுப்பு) ஆகியவற்றின் மூலம் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சக்கரவர்த்தி ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். 'மஞ்சரி', 'ழகரம்', 'தாயகம்', 'வைகறை' , 'முழக்கம்'  போன்ற பலவேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் ஆகியன வெளிவந்து கவனிப்பைப் பெற்றன. யுத்தத்தைத் தின்போம் என்ற மூன்று கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலும், ஒருவராகப் பங்களிப்புச் செய்துள்ளார். தனக்குச் சரியென்று பட்டதைத் துணிச்சலுடன் முன்வைக்கத் தயங்காதவரிவர்.

க.நவம்:ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரான 'தெணியானின்' சகோதரரான க.நவம் தற்போது கனடாவிலுள்ள 'தொராண்டோ'வில் வசித்து வருகின்றார். கனடாத் தமிழ இலக்கியத்தில் தடம் பதித்த இன்னுமொரு சஞ்சிகையான 'நான்காவது பரிமாணம்' சஞ்சிகையின் ஆசிரியரும், வெளியீட்டாளரும் இவரே. இவரது 'உள்ளும் புறமும்' சிறுகதைத் தொகுதி இலங்கையில் வெளிவந்து 'ஆக்கவுரிமைகள் வியாபாரக் குறிகள் பதிப்பகத்தினரால் நடாத்தப்பட்ட அகில இலங்கைக்கான சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்ற நூல். பின்னர் கனடாவிலும் வெளிவந்தது; கவனத்திற்குரியது.

நிலா குகதாசன்:இளம் வயதிலேயே அமரராகிய எழுத்தாளர் நிலா குகதாசன் கனடியத் தமிழ் இலக்கியவுலகில் குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான இன்னுமொரு படைப்பாளி. தனது குறுகியகால வாழ்வில் சிறுகதை, கவிதை, நாடகம், நடிப்பு, விமர்சனமெனப் பல்வேறு துறைகளிலும் கால பதித்தவர். சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலிகளென பல்வேறு வெகுசனத் தொடர்பச் சாதனங்களிலும் தன் கலை, இலக்கிய ஆற்றலை 'நிலா', 'அக்கினிக்குஞ்சு', 'திரிலோகசஞ்சாரி' 'ஆசான்' போன்ற பலவேறு புனைபெயர்களில் வெளிப்படுத்தியவர். ஒளிபரப்புத் துறையிலும் பாண்டித்தியம் பெற்ற இவர், கனடாவில் வெளியான தமிழ் வீடியோ சஞ்சிகையான 'இளையநிலா'வின் ஆசிரியரும், தயாரிப்பாளரும் , வெளியீட்டாளருமாவார். இவரது கவிதைத் தொகுதியான 'இன்னொரு
நாளில் உயிர்ப்பேன்' கனடாவில் ரோஜா சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..

பவான்:மேற்படி 'பனியும் பனையும்' தொகுப்பிலுள்ள 'முகமிழந்த மனிதர்கள்' சிறுகதை அண்மையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் கவனத்தையீர்த்த கதைகளிலொன்று. இவரது சிறுகதைகள் சில 'தாயகம்' சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. இவரைப் பற்றிய விபரங்களை அறிய முயன்றபோது மேலதிகத் தகவல்களையும் பெறமுடியவில்லை. இவரைப் பற்றி, இவரது இலக்கிய முயற்சிகள் பற்றி மேலதிகத் தகவல்களை அறிந்தவர்கள் எமக்கு அனுப்பி வைக்கலாம். பயனுள்ளதாகவிருக்கும்.

என்.கே.மகாலிங்கம்:எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இலங்கையிலிருந்த காலத்திலேயே நன்கறியப்பட்டவர். 'பூரணி' என்னும் இலக்கியச் சஞ்சிகையின் இணையாசிரியர்களிளொருவராக இருந்தவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மற்றும் மொழிபெயர்ப்பென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காலபதித்த இன்னுமொரு முக்கியமான படைப்பாளி. நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தவர். புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளரான சினுவா அசுபேயின் Things Fall Apart என்னும் புகழ்பெற்ற நாவலைத் தமிழில் 'சிதைவுகள்' என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர். மேற்படி நூல் தமிழகத்திலிருந்து காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேற்படி காலச்சுவடு பதிப்பகம் இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுதியொன்றினை 'இரவில் நான் உன் குதிரை' என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது. இவை தவிர ஏற்கனவே இவரது 'தியானம்' என்னும் சிறுகதைத் தொகுதியும், 'உள்ளொளி' என்னும் கவிதைத் தொகுதியும் நூலுருப்பெற்றுள்ளன. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் 'முற்போக்கு' , 'நற்போக்கு' போன்ற இலக்கியக் கோட்பாடுகளுக்கெதிராகப் 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்னும் கோட்பாட்டினை முன்வைத்த எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் மீதும், , அவரது இலக்கியக் கோட்பாடுகள் மீதும் மிகுந்த பற்றுதலும், மதிப்பும் வைத்திருப்பவரிவர்.

ஜோர்ஜ் குருஷேவ்: சிறந்த சிறுகதை ஆசிரியரான ஜோர்ஜ். குருஷேவ் கனடாவில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக வாராவாரம் வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை/பத்திரிகையின் ஆசிரியர். அதன் வெளியீட்டாளரும் கூட. 'தாயகத்தில்' வெளிவந்த இவரது 'கொலைபேசி' சிறுகதை
பலத்த வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்த கதைகளிலொன்று. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனமெனப் பன்முக எழுத்தாற்றல் வாய்ந்த படைப்பாளிகளில் ஜோர்ஜ். குருஷேவ்வும் ஒருவர். இவரது படைப்புகளும் 'தாயகம்', 'தேடல்' உட்படப் பல்வேறு சஞ்சிகை,
பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

நன்றி: பதிவுகள் ஜூலை 2003; இதழ் 103


புலம்பெயர் தமிழ் இலக்கியம்: வளர்ந்து வரும் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிச் சில குறிப்புகள்...

- பண்டிதர் பிரம்மராயர் -

இலக்கிய அமர்வுகள் ஆக்கபூர்வமானவையாக, பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களைக் கொண்டவையாக இருக்க வேண்டுமெனக் கருதுபவன் நான். ஆயினும் 'தொராண்டோ'வில் நடைபெறும்  பெரும்பாலான இந்நிகழ்வுகள் பயனற்ற , அரைத்தமாவையே அரைக்கும் வகையிலான, எந்தவித தீவிர ஆய்வு முயற்சிகளுமற்ற தட்டையான நிகழ்வுகளாகவே இருந்து வருவது ஏமாற்றத்தை அளிப்பதாகவிருக்கிறது.  மேலும் மேற்படி நிகழ்வுகளில் பங்குபற்றும் படைப்பாளிகள் பலருக்கு தம் கருத்துகளைக் கூறுவதிலுள்ள ஆர்வம், அவற்றுக்கெதிரான மாற்றுக் கருத்துகளைக் கேட்பதில் இருப்பதில்லை. ஆயினும் அவ்வப்போது நடைபெறும் ஒரு சில இத்தகைய இலக்கிய அம்ர்வுகளுக்குச் செல்வதுண்டு. அண்மையில் ஸ்கார்பரோ சமூக மண்டப அரங்கொன்றில் நடைபெற்ற, 'கூர் கலை இலக்கியக்' குழுவினரால் வெளியிடப்பட்ட 'நாடோடிகளின் துயர் செறிந்த பாடல்' என்னும் தொகுப்பு மலர் வெளியீட்டு விழாவுக்கும் சென்றிருந்தேன். இந்தக் கட்டுரை அந்நிகழ்வு பற்றிய கட்டுரையல்ல. மாறாக, அந்நிகழ்வில் கேட்ட, வாசித்த ஒரு சில விடயங்களைப் பற்றிய மிகவும் சுருக்கமானதொரு குறிப்பே.

கனடாத் தமிழிலக்கியமா புலம் பெயர் இலக்கியமா!

மேற்படி விழாவில் சில விடயங்களைப் பற்றிக் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. புலம்பெயர் இலக்கியம் பற்றி, புலம் பெயர் மக்கள் பற்றி, புலம்பெயர் இலக்கியம் கூறும் பொருள் பற்றியெல்லாம் அதிகளவில் பங்குபற்றியவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்கள். 'காலம்' செல்வம் 'ஏன் புலம்பெயர் இலக்கியம் என்று கூறுகிறார்கள். கனடா இலக்கியமென்று கூறுகிறார்களில்லை'யென்று கவலைப் பட்டும் கொண்டார். அவர் அவ்விதம் கவலைப் படுவதற்குப் பதிலாக அவ்வப்போது 'கனடாத் தமிழ் இலக்கியம்' என்னும் பிரிவில் ஆக்கங்களை, ஆய்வுக் கட்டுரைகளைக் 'காலம்' சஞ்சிகையில் பிரசுரித்தாலே கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய புரிதல் சற்று அதிகமாகும். அவரது ஆதங்கமும் தீர்ந்து விடும். இதனால்தான் 'பதிவுகள்'  அவ்வப்போது 'கனடாத் தமிழ் இலக்கியம்' பற்றிக் கட்டுரைகளில் குறிப்பிடுகிறது. அவ்வப்போது சு.ரா , ஜெயமோகன் போன்ற பல தமிழகப் படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுத்து வெளிவரும் 'காலம்' இதழுக்கும், தமிழகத்தில் வெளிவரும் சிற்றிதழொன்றுக்கும் பெரியதொரு அளவில் வித்தியாசமில்லை.  மேலும் காலம் குறிப்பிட்ட வட்டத்தினுள்ளேயே வளைய வருகின்றது. சு,ரா, மு.பொ., மு.த, ஜெயமோகன்,. ... இவ்விதம் ஒரு குறிப்பிட்ட படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் காலம் வெளிவந்தாலும் அவ்வப்போது கணேஷ் போன்ற படைப்பாளிகள் பற்றியும் எழுதுகிறது. ஆயினும் 'தேடல்', 'தாயகம்', 'ழகரம்', 'நான்காவது பரிமாணம்' போன்ற> சஞ்சிகைகளை, 'தமிழர் தகவல்' இதழின் ஒரு சில ஆண்டு மலர்களை, பழைய மாணவர் சங்கங்கள் அல்லது ஊர்ச்சங்கங்கள் வெளியிடும் மலர்கள் சிலவற்றை, 'வைகறை', 'ஈழநாடு', 'சுதந்திரன்', 'தமிழோசை', 'மஞ்சரி' போன்ற பத்திரிகைகள் போன்றவற்றை, மற்றும் டி.செ.தமிழன், சும்தி ரூபன் போன்ற படைப்பாளிகள் பலரின் வலைப்பதிவுகளை அத்துடன் இதுவரை வெளிவந்த பல்வேறு நூல்களைப் படிப்பதன் மூலம் இதுவரை காலமும் உருவாகி விரிந்து கிடக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட, விரிவான் , ஏனைய பக்கங்களின் வரலாற்றினை அறிந்து கொள்ளலாம்.

மேற்படி நிகழ்வில் ஒரு சில பேச்சாளர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளிலொன்று புலம்பெயர்ந்த படைப்பாளிகள் இன்னும் தமது சொந்த மண்ணைப் பற்றியே எழுதி வருகின்றார்கள். அவர்கள் புகுந்த நாட்டை உள்வாங்கி எழுத வேண்டும். குறிப்பாகக் கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் இந்த நாட்டின் பூர்வீக குடிகளின் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எழுத வேண்டும். இன்னும் எததனை இலக்கிய அமர்வுகளில் நீங்கள் இதனைக் கூறிக் கொண்டிருக்கப் போகின்றார்கள்? இவ்விதம் கூட்டங்களுக்கு வந்து திருவாய் உதிர்ப்பதற்குப் பதில் கொஞ்ச நேரமாவது இங்குள்ள படைப்பாளிகள் எழுதிய படைப்புகளை வாசித்தார்களென்றாலே அவர்கள் கேள்விக்குரிய பதில் கிடைத்துவிடும். இங்குள்ள படைப்பாளிகள் பலரின் படைப்புகள் பலவற்றில் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் எதிர்ப்படும் பிரச்சினைகள் பற்றியெல்லாம் விரிவாகவே ஆராயப்பட்டிருக்கின்றன. இவ்விதமான படைப்புகளின் இல்க்கியச் சிறப்பு பற்றி இங்கு நான் குறிப்பிட வரவில்லை. அதனைக் காலம் தீர்மானிக்கும். நான் கூறுவது இப்படைப்புகள் கூறும் பொருள் பற்றியதே. ஆனால் நிச்சயம் பெருமைப்படத்தக்க படைப்புகள் அவை. அ.முத்துலிங்கம்,  தேவகாந்தன்,  'அசை' சிவதாசன், குமார் மூர்த்தி, பவான், மைக்கல், அளவெட்டி சிறீஸ்கந்தராசா, ஜோர்ஜ் குருஷேவ், சுமதி ரூபன், கடல்புத்திரன், டானியல் ஜீவா, குரு அரவிந்தன், வ.ந.கிரிதரன், ஆனந்த பிரசாத், சக்கரவர்த்தி, அ.கந்தசாமி, க.நவம், என்.கே.மகாலிங்கம், குறமகள், செழியன், மொனிக்கா ..... எனப் பலரின் படைப்புகளில் அவர்கள் வாழும் மண்ணின் பலவேறு அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன. இணையத்தில் வெளிவந்த கனடாத் தமிழ் இலக்கியப் படைப்புகளை மையமாக வைத்தே சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒருவர் M.Phil ஆய்வுக் கட்டுரையொன்றினைச் சமர்ப்பித்துள்ளார். அதில் அவர் எவ்விதம் மேற்படி படைப்புகள் புலம்பெயர் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதுபற்றிய அவரது ஆய்வுக் கருத்துகளைக் குறிப்பிட்டிருப்பார். கனடாவிலிருந்து வெளிவரும் 'பதிவுகள்' இணையச் சஞ்சிகையில் வெளிவரும் படைப்புகளை வைத்தெல்லாம் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் ஆய்வுகள் ஆற்றுகின்றார்கள். [ இது இணையச் சஞ்சிகைகளின் முக்கியத்துவத்தைக் காட்டும். அச்சு ஊடகங்களுக்கீடாக இணைய ஊடகங்களையும் இன்றைய இலக்கிய மற்றும் அறிவுலகம் ஏற்றுக் கொண்டுவிட்டதென்பதையே இது காட்டுகின்றது.]

கனடாத் தமிழ் இலக்கியம் கவிதையிலும் சாதித்துள்ளது. செழியன், சேரன், திருமாவளவன், பா.அ.ஜயகரன், தில்லைநாதன் சகோதரிகள், இளங்கோ, கலைவாணி ராஜகுமாரன்.. என கவிஞர் பட்டாளமேயுண்டு. கனடாத் தமிழ் நாடக உலகிலும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் (செழியன், பா.அ.ஜயகரன் போன்ற ) பலருள்ளனர். என்னைப் போன்ற பலரும் பல கவிதைகளை எழுதியுள்ளனர். நிச்சயமாக என்னால் மிக்த் திறமையான தொகுப்பொன்றுக்கான தமிழ் இலக்கிய உலகு பெருமைப்படத்தக்க ஆக்கங்களை (சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை, ஆய்வுக் கட்டுரைகளை) கனடாத் தமிழ் இலக்கிய உலகிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும். மொழிபெயர்ப்பிலும் என்.கே.மகாலிங்கம் போன்றவர்கள் தங்களது பங்களிப்பினை நல்கியுள்ளார்கள்.

எனவே இவ்விதமான இலக்கிய அமர்வுகளில் புலம்பெயர் இலக்கியம் இன்னும் கடந்த காலக் கழிவிரக்கத்தை மட்டுமே கக்கிக் கொண்டிருக்கின்றதெனக் கூற வருமொருவர் அவ்விதம் கூறுவதற்கு முன்னர் அது பற்றிய பூரணமானதொரு ஆய்வினை நடாத்தட்டும். அந்த ஆய்வின் அடிப்படையில் அக்கருத்தினைக் கூறட்டும். எந்தவிதப் படைப்புகளையும் ஆழ்ந்து படிக்காமல் எழுந்தமானத்திற்குக் கருத்துகளைக் கூறுவதைத் தவிர்ப்பது கனடாத் தமிழ் இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு உதவுமொரு அம்சமாக அமையும். இவ்விதமாக ஒருவர் இத்தகைய அமர்வொன்றில் அடுத்தமுறை குறிப்பிடும்பொழுது அவரிடம் கீழுள்ள வினாக்களைத் தொடுக்கவும்:

1. இத்தகையதொரு முடிவுக்குத் தாங்கள் வரக் காரணம்? அவற்றைத் தர்க்க அடிப்படையில் விளக்குவீர்களா?
2. இவை பற்றிய விமர்சனங்கள் தமிழகத்திலுள்ள உங்கள் அபிமானத்துக்குரிய படைப்பாளிகளால் வெளிவரவில்லையென்பது ஒரு காரணமா?
3. வாசிப்பின் அடிப்படையில் நீங்கள் இம்முடிவுக்கு வந்திருந்தால் நீங்கள் வாசித்த படைப்பாளிகளின் பெயர்களை அவர்களது படைப்புகள் பற்றிய விபரங்களை அறியத்தர முடியுமா?

மேலும் புலம்பெயர் படைப்பாளிகள் தமது இழந்த மண்ணைப் பொருளாகத் தமது படைப்புகளில் கையாள்வதில் தவறேதுமிருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. பலவேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய சமூகத்தினரான நைபால், வாசஞ்சி, சல்மான் ருஷ்டி, ரொஹின்ஸ்டன் மிஸ்ரி போன்றவர்களின் முக்கியமான படைப்புகள் பல அவர்களது பிறந்த மண்ணின் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு விளங்குவதை யாரும் மறந்து விடக்கூடாது. அமெரிக்காவுக்குப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த போலந்து யூதரான ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' ('The Painted Birds') இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஐரோப்பாவில் சிறுவனாக அலைந்து திரிந்த அனுபவத்தை விபரிக்கும். எனவே புலம்பெயர்ந்த படைப்பாளிகள் இதைத்தான் எழுத வேண்டுமென வற்புறுத்துவதில் நியாயமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. படைப்பொன்றின் பொருள் எதுவாகவிருப்பினும் அதன் சிறப்பு அதில் மட்டும்தான் தங்கியிருப்பதென்பதில்லை. அவை கூறும்பொருளை வைத்து மட்டும் அவற்றை விமர்சிக்க முனைவது ஆரோக்கியமான விமர்சன முறையல்ல. விமர்சகர்கள் ஒரு படைப்பினை விருப்பு, வெறுப்பின்றி அணுக வேண்டும்.

கனடாச் சிறுகதைகள் பற்றி தேவகாந்தன்...

இதனையொத்த இன்னுமொரு கூற்றினை மேற்படி நிகழ்வில் வெளியான 'நாடோடிகளின் துயர் செறிந்த பாடல்' என்னும் மலரில் வெளியான , தொகுப்பாளர்களிலொருவரான எழுத்தாளர் தேவகாந்தனின் கட்டுரையிலும் காணமுடிகிறது. மேற்படி மலர் அறிமுகக் கட்டுரையில் அவர் இவ்விதம் கூறுவார்: ' ஏன் கனடாத் தமிழ்ப் பரப்பில் சிறுகதையின் வீறார்ந்த படைப்புகள் மேலெழவில்லையென்பது நிதானமான யோசிப்புகளில் நமக்கும் புரிதலானதுதான். ஆனாலும் அதையெல்லாம் இங்கே எடுத்துரைக்கும் முயற்சியை நாம் செய்யப்போவதில்லை. ஒன்றை மட்டும் சொல்லி மேலே செல்கின்றோம். படைப்பின் அதிமுக்கியமான அம்சம் நிகழ்வு அல்ல. அதை எடுத்துரைப்பதற்கான படைப்பின் உத்வேகமும், பரிச்சயமும் தன் சமகால ஏனைய படைப்புகளை வாசித்துக் கொள்ளும் அனுபவமும் என்ற அம்சங்களை அது படைப்பாளியிடமிருந்து யாசித்துக் கொண்டிருக்கின்றது'

பிரச்சினையென்னவென்றால் இவ்விதமான பொதுவான கூற்றுகளை எத்தனையொ இலக்கிய அமர்வுகளில் கேட்டுக் கேட்டுக் காதுகள் சலித்து விட்டன. 'ஏன் கனடாத் தமிழ்ப் பரப்பில் சிறுகதையின் வீறார்ந்த படைப்புகள் மேலெழவில்லையென்பது நிதானமான யோசிப்புகளில் நமக்கும் புரிதலானதுதான்' என்று பொதுவாக முடிவொன்றினைக் கூறிவிட்டு 'ஆனாலும் அதையெல்லாம் இங்கே எடுத்துரைக்கும் முயற்சியை நாம் செய்யப்போவதில்லை' என்று கூறுவது ஏற்புடையதாகவில்லை. அந்த முடிவுக்குக் கட்டுரையாளர் ஏன் வந்தார் என்பதற்குரிய காரணங்களை உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரையொன்றினை இத்தகைய இலக்கிய மலர்கள் வேண்டி நிற்கின்றன. அவ்விதமான ஆய்வுகளின் அடிப்படையில் அவர் அந்தக் கருத்தினைக் கூறியிருக்க வேண்டும். தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியதொரு படைப்பாளியாகத் தனது ஆளுமையினைப் பதித்த அவரிடமிருந்து இவ்விதமானதொரு பொதுவான முடிவினையுள்ளடக்கிய கூற்றொன்று வெளிவருவது கவலையளிப்பது. கூர் அமைப்பினரின் அடுத்து வரும் மலர்களில் கனடாத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகள் பற்றிய ஆய்வுக கட்டுரைகள் பல வெளிவருமென எதிர்பார்க்கின்றோம். அவ்விதம் வெளிவருவது அவர்களது நோக்கத்திற்கு மேலும் சிறப்பளிப்பதாகவேயிருக்குமென்பது என் எண்ணம்.

என்னைப் பொறுத்தவரையில் கனடாத் தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்பட்டத்தக்க வகையில் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இதற்காக இதுவரை காலமும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பங்காற்றிய (இப்பொழுதும் ஆற்றிக் கொண்டிருக்கின்ற) கலை, இலக்கிய கர்த்தாக்கள், இலக்கிய அமைப்புகள், சங்கங்கள், என அனைவரும் பாராட்டப் படவேண்டியவர்களே. என்னைப் பொறுத்த் அள்வில் நான் கனடாத் த்மிழ் இலக்கிய உலகின் முக்கிய குறைப்பாடுகளாக நான் கருதும் அம்சங்கள் வருமாறு:

1. சக படைப்பாளிகளின் படைப்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆயினும் வாசிக்காமலே கருத்துகள் கூற விளைவது அல்லது முடிவுகளையெடுப்பது.
2. பிரபலமான படைப்பாளியொருவரின் அல்லது விமர்சகர் ஒருவரின் விதந்துரைக்காக அல்லது அங்கீகாரத்திற்காக அலைவது; அதன் அடிப்படையில் படைப்புகளின் தரத்தை அடையாளம் காண விளைவது.

மேற்படி இரு விடயங்களிலும் இங்குள்ள படைப்பாளிகள் கவனம் செலுத்த வேண்டும். யாருடைய அங்கீகாரமும் நமக்குத் தேவையில்லை. வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் இயலுமானவரையில் (ஏனெனில் எல்லாப் படைப்புகளும் கிடைப்பதில் சிரமமுண்டு) மனம் திறந்து வாசியுங்கள். இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஆய்வுகளை ஆற்றுங்கள். உதாரணமாகக் 'கனடாத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும், வளர்ச்சியும்', 'கனடாத் தமிழ்க் கவிதைகள் கூறும் பொருள்', 'கனடாவில் தமிழ் நாடகம்'.. இவ்விதமான பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை இலக்கிய மலர்களை வெளியிடுபவர்கள் அம்மலர்களில் வெளியிடட்டும். அல்லது இலக்கிய அமர்வுகளில் மேற்படி தலைப்புகளில் கலந்துரையாடுங்கள். இவற்றைச் செய்ய விளைவீர்களானால் இதுவரை காலமும் கனடாத் தமிழ் இலக்கிய உலகின் தோற்றம் பற்றியும், வளர்ச்சி பற்றியும் நிச்சயமாகவே பெருமைப்படுவீர்களென்பது மட்டும் நிச்சயம். என்னைப் பொறுத்தவரையில் இதுவரை காலமுமான கனடாத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பெருமைப்படத்தக்கது. சிறுகதை, கவிதை, மற்றும் நாடகம், மொழிபெயர்ப்பு.. என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் அதன் பங்களிப்பு பாராட்டுதற்குரியது. வெளிவந்த பல தொகுப்புகள் தொகுப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கனடாத் தமிழ் இலக்கியத்தின் உண்மையான தோற்றத்தினைப் போதிய அளவில் பிரதிபலிக்காமல் வெளிவந்திருக்கின்றன என்பதே எனது கருத்து. எதிர்காலத்தில் கனடாத் தமிழ் இலக்கியம்  மற்றும் ஏனைய புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்குரிய தமிழ் இலக்கியம்  பற்றிய போதிய நூல்கள் , ஆய்வுகள் வெளிவருமென்று நம்புகின்றேன். அப்போழுது தமிழ் இலக்கிய உலகு கனடாத் தமிழ் இலக்கியத்தின் உண்மையான வளர்ச்சியினைப் புரிந்து கொள்ளும். அத்துடன் புலம்பெயர் தமிழ் இலக்கியமென்பது கனடாத் தமிழ் இலக்கியம், பிரான்சுத் தமிழ் இலக்கியம், சுவிஸ் தமிழ் இலக்கியம், ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம், மலேசியத்தமிழ் இலக்கியம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்... என நாட்டுக்கு நாடு அவற்றுக்கேயுரிய தனித்தன்மைகளுடன் சிறப்புடன் வளர்ந்து வருவதை அறிந்து கொள்ளும்.

நன்றி: பதிவுகள் ஜனவரி 2009 இதழ் 109 

 


 கனடாத் தமிழ் இலக்கியம்

-பண்டிதர் பிரம்மராயர்-
 
புலம்பெயர்ந்த இலக்கியச்  சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு.  கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில் செய்திருக்கின்றார்கள். எங்குமிருப்பது போல் இங்கும் நிறையத் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. பெரும்பாலானவை  தமிழக அல்லது ஈழத்துப் பத்திரிகைகளின் நகல்களாகயிருக்கின்றன அல்லது  பிரச்சாரம் செய்கின்றன. வியாபாரமே இவற்றின் முக்கிய குறிக்கோள். இணையத்தின் வளர்ச்சி இவர்களிற்குப் பெரிதும் உதவுகின்றதென்றே கூற வேண்டும்.

தமிழிலக்கியம் , வளர்ச்சியென்று பார்த்தால் இங்கும்  சில சிற்றிதழ்கள், சில தனி மனிதர்களே நினைவிற்கு வருகின்றார்கள். 'காலம்', 'தேடல்',  'தாயகம்', 'நுட்பம்' , 'ழகரம்', 'மறுமொழி' , 'நான்காவது பரிமாணம்'. ..இப்படிச் சில இதழ்கள்.  செல்வம், ஐயகரன், ஜோர்ஜ்  குருஷேவ் , வ.ந.கிரிதரன், ஞானம் லம்பேட், அ.கந்தசாமி, க.நவம், திருமாவளவன்,குமார் மூர்த்தி,  சேரன்,  சிவதாசன், ஆனந்தப் பிரசாத், செழியன், குறமகள், மொனிக்கா , கவிஞர் கந்தவனம், அளவெட்டி ஸ்ரீஸ்கந்தராஜா..  இப்படிச் சிலரே ஞாபகத்தில் வருகின்றார்கள். 'காலம்' காலம்  தப்பியாவது வெளி வந்துகொண்டிருக்கின்றது. 'தேடலை'த் தேட வேண்டியிருக்கின்றது. 'தாயகத்'தின் முகவரியையே காணவில்லை. தற்போது இணையத்தில் 'பதிவுகள்'  தொடங்கியிருக்கின்றது. 'தாயகம்' 'தேடல்' போன்றவற்றை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களே அதிகம்.  அவற்றையும் மீறி அவை கனேடியத் தமிழ் இலக்கியத்திற்காற்றிய பங்களிப்பு  பாராட்டப்  பட வேண்டியதொன்று. 'காலம்' அடிக்கடி  'வளரும் தமிழ்' என்று புத்தகக் கண்காட்சிகளை நடாத்துகின்றது (செல்வம் நூல் விலைகள் விடயத்தில் சிறிது தாராளம் காட்டுவாரா?). பாரதி மோகனும் (இவர் கரவை கந்தசாமியின் மகன்) தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத்  தட்டிக்கொண்டவரிவர். 

சிலர் தனிப்பட்ட  ரீதியில் அவ்வப்போது  காத்திரமான இலக்கிய அமர்வுகளை நடாத்துகின்றார்கள்.  'ரூபவானி' புகழ்  விக்கினேஸ்வரன் மற்றும்  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முன்னால் தமிழ்ப் பிரிவின் தலைவரான ராஐசுந்தரம்  போன்றோர் 'முரசம்' எனற ஊடகம் சம்பந்தமான பல அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார்கள். மிகவும் பயனுள்ள அமர்வுகள் அவை.   பல புகழ் பெற்ற திரைப் படங்கள் , சைக்கிள் திருடன் (Cycle Thief ) போன்றன,  இவ் அமர்வுகளில் திரையிடப்பட்டு விவாதிக்கப் பட்டன. தமிழர் வகை துறை வள நிலையமும்  பல இலக்கிய  அமர்வுகளை நடாத்தியிருகின்றது.  அண்மைக் காலமாக   ஞானம் லம்பேட்  , மகரந்தன் போன்றோர்  இத்தகைய அமர்வுகளை   ஆரம்பித்து நடாத்தி வருகின்றார்கள். இது தவிர  பல  சங்கங்கள்  அமைப்புக்கள்(பட்டியலிட முடியாதவளவிற்கு)  பல்வேறு விதமான களியாட்ட விழாக்களை நடாத்தி த் தாமும்  பங்களிப்புச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து 'பிரபலங்க'ளை அழைத்துச் சம்பாதிப்பதை சேவையென்று கூட இவைகள் கூறிக் கொள்கின்றன.

சிறுகதைத் துறையினைப் பொறுத்தவரையில்    நிறையவே பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.  அமரர் நிலா குகதாசன்,  ஜோர்ஜ் குருஷேவ்,  வ.ந.கிரிதரன், சக்கரவர்த்தி, சம்பந்தன், குமார் மூர்த்தி, அ.கந்தசாமி, மொனிக்கா போன்றோர்  குறிப்பிடத் தக்கவர்கள்.  நூல்களாக குமார் மூர்த்தியின்  'முகம் தேடும் மனிதன்' (தமிழகத்தில் 'காலம்' வெளியீடாக வெளி வந்தது), வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (தமிழகத்தில் 'சிநேகா' பதிப்பக வெளியீடாக வெளி வந்தது) ,  சம்பந்தனின் 'வித்தும் நிலமும்' , கடல் புத்திரனின் 'வேலிகள்' போன்றன வெளி வந்திருக்கின்றன. கவிதைத் துறையினைப் பொறுத்த வரையில்  ஐயகரன்,  சேரன், அ.கந்தசாமி, திருமாவளவன், நிலா குகதாசன்,  வ.ந.கிரிதரன்,கெளரி, சக்கரவர்த்தி , கவிஞர் கந்தவனம், மொனிக்கா, செழியன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.  நூல்களாக சேரனின் 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்', சக்கரவர்த்தியின் 'யுத்த சன்னியாசம்', அ.கந்தசாமியின்  'கானல் நீர்க் கனவுகள்',  வ.ந.கிரிதரனின் 'எழுக அதிமானுடா' , நிலா குகதாசனின் 'இன்னொரு நாளில் உயிர்ப்பேன்', செழியனின் 'அதிகாலையினிலே' கெளரியின் 'அகதி'   ,மற்றும்  'காலத்தின் பதிவுகள்' போன்றன வெளிவந்திருக்கின்றன.   நாவல் துறையினைப் பொறுத்தவரையில்   'தாயகம்' சஞ்சிகையில் தொடராக வெளிவந்த  வ.ந.கிரிதரனின்  நாவல்களின் தொகுப்பாக தமிழகத்திலிருந்து 'மண்ணின் குரல்' குமரன் பப்ளிஷர்ஸ்  வெளியீடாக வெளிவந்திருக்கின்றது.  செழியனின் 'ஒரு போராளி¢யின் நாட்குறிப்பு' இதுவும் 'தாயகத்'தில்  தொடராக வெளிவந்தது,  அண்மையில் தமிழகத்தில் நூலாக வெளிவந்திருக்கின்றது. இது தவிர ரவீந்திரநாதன்,  வீணைமைந்தன்  , இரா தணி  போன்றோர் இங்கு வெளிவரும்  வெட்டி ஒட்டும் (cut & paste) பத்திரிகைகளில்  அண்மைக் காலமாகத் தொடர் கதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.  நாடகத் துறையினப் பொறுத்தவரையில் 'மனவெளி' அமைப்பினர் கனடாத் தமிழ் நாடகத் துறையினை நவீனமயப்படுத்துவதில்  முக்கிய பங்காற்றியுள்ளனர். கவிஞராக இனங் காணப்பட்ட ஐயகரன்   நல்லதொரு  நாடகாசிரியராகவும்  மலர்ந்திருக்கின்றார். இது தவிர  N.K.மகாலிங்கத்தின்  'சிதைவுகள்'  நல்லதொரு மொழி பெயர்ப்பு நூல்.  நோபல் பரிசு பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான Cinua Achebe' யின் 'Things Fall Apart'  இன் தமிழாக்கமிது. 'காலம்' வெளியீடாகத்  தமிழகத்திலிருந்து வெளி வந்தது. வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஐதானி:  நகர அமைப்பு' (நல்லூர் நகர அமைப்பு பற்றிய ஆய்வு நூல்), 'தாயக'தில் தொடராக  வெளி வந்தது, அண்மையில் தமிழகத்தில் 'சிநேகா'  பதிப்பக   வெளியீடாக வெளி வந்திருக்கின்றது.  அதே சமயம்  குழு மனப் பான்மை இங்கும் இருக்கின்றது. முரண்பாடுகளை  ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் இலக்கியவாதிகளிடத்தில் இன்னும் இல்லைதான். முரண்பாடுகள் தான் வளர்ச்சியின் அறிகுறி  என்பதை விளங்கிக் கொண்டால் , புரிந்து  கொண்டால்,  முரண்பாடுகளிற்கிடையில் ஒருவித இணக்கம் காணப் பக்குவம்  அடைந்து விட்டால் அது ஆரோக்கியமானதொரு இலக்கியச் சூழலை உருவாக்குமென்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது. மொத்தத்தில்  புலம் பெயர் தமிழ் இலக்கியத்திற்கு தாங்கள் அளித்த  பங்களிப்பினையிட்டுக்  கனடாத் தமிழ் எழுத்தாளர்கள்  நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளர்ந்து வரும்    புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் பாதையில் இவையெல்லாம்  மைல் கற்களே.

பதிவுகள் மே 2000 இதழ்-5 

 


 குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி…..( குறுநாவல் தொகுதி)

- முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன் -

(07-11-2009 அன்று Canada, Toronto,25 Slan Ave கேட்போர் கூடத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுரையின் செப்ப முற்ற வடிவம்.)

கனடியத் தமிழ்ச் சூழலில் இலக்கியத் துறையில் முனைப்பாகச் செயற்பட்டு வருபவரில் ஒருவர் குருஅரவிந்தன அவர்கள். ஒரு படைப்பாளி என்ற நிலையில் அவர் புனைகதை, நாடகம், திரைக்கதைவசனம், சிறுவர் இலக்கியம் முதலான பல்துறைகளிலும் கவனம் செலுத்தி வருபவர். அவரது அண்மைக்கால ஆக்கமாக நீர் மூழ்கி நீரில் மூழ்கி… என்ற தலைப்பிலான குறுநாவல் தொகுதி வெளிவந்துளது. இலங்கை தெல்லிப்பழை மகாஜனா கல்லுரியின் மழையமாணவரான இவர் ‘நூறாண்டுகாணும் மகாஜனா மாதா’விற்குச் சமர்ப்பணமாக இவ்வாக்கத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூலாக்கம் பற்றிய ஒரு திறனாய்வுக்குறிப்பாக இச்சிறு கட்டுரை அமைகிறது.

இந்தத் தொகுதியில் இரு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக அமைந்த நீர்மூழ்கி நீரில் மூழ்கி… என்ற ஆனந்தவிகடனில் வெளிவந்த புனைகதை ஆழ்கடலில் விபத்துக்குள்ளாகிய நீர்மூழ்கிக் கப்பலில் உயிராபத்தை எதிர்நோக்கியிருந்தவர்கள் பற்றியது. இரண்டாவது புனைகதையான உறைபனியில் உயிர்துடித்தபோது… என்பது கனடா, உதயன் பத்திரிகையில் வெளிவந்த பனிநிறைந்த வடதுருவத்திற்குச் சென்ற ஆராய்ச்சிக்குழு ஒன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டதாகும்.

நீர்மூழ்கி நீரில் மூழ்கி… என்ற குறுநாவலின் கதையம்சமானது, ‘நீர்மூழ்கி’ சம்பந்தமான இராணுவஇரகசியங்கள் வெளிப்படாதிருப்பதற்காக அதிகாரமட்டத்திலிருப்பவர்கள் மேற்கொண்ட சில அணுகுமுறைகள் தொடர்பானதாகும். இத்தொடர்பில,; நடுநிசி 12மணி ஒருநிமிடத்திலிருந்து மறுநாள் பின்நேரம் 6மணிவரை, அதாவது 18மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற சம்பவங்களையும் எண்ண ஓட்டங்களையும் மையப்படுத்தி இதன் கதையம்சம் விரிகிறது.(இவ்வாறான இந்நாவலின் கதையம்சமானது. சில ஆண்டுகளின் முன்னர் ரஷ்யாவின் கடற்பரப்பில் நிழ்ந்த நீர்மூழ்கி தொடர்பான சோக நிகழ்வொன்றை இங்கு நினைவிற்கு இட்டுவருகிறது.)

உறைபனியில் உயிர்துடித்தபோது…என்ற இரண்டாவது கதையானது வடதுருவத்திற்கு விஞ்ஞான ஆராய்ச்சிக்குச் சென்ற 12பேர் கொண்ட குழுவினர் தொடர்பானது. அவர்கள் பனிப்புயலில் சிக்கித்தவித்ததான – முன்னைய நாவலில் சுட்டப்பட்டது போன்ற ஒரு உயிராபத்தான - சூழலை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது. அவர்களில் இருவர் எங்குதேடியும் கிடைக்காத சூழ்நிலையில் 10பேர் மட்டுமே மீட்கப்படுகின்றனர். ஆனால் 12பேரும் மீட்கப்பட்டதாகவே ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதற்கான காரணம் மேலிடத்தின் அதிகாரநிலை சார்ந்ததே. ஆய்வுக்குப்போனவர்களில் இருவர் உயிர் துறந்தனர் என்ற செய்தி வெளிப்படுமானால் இத்தகு ஆய்வுச்செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட ஆய்வுநிபூணர்கள் தயங்குவார்கள். இவர்களின் ஆய்வுபற்றி நாட்டுமக்களும் சர்வதேசமும் நம்பிக்கையிழந்துவிடும். இத்தகுகாரணங்களால் மேலிடம் இதனை மூடிமறைக்கின்றது. மீட்கப்படாத இருவரில் ஒருவரின் மனைவி தன்னுடைய கணவன் உயிராபத்திலிருந்து மீண்டு விட்டான் என்ற நம்பிக்மையோடு இருந்த வேளையிலே அதிகார வர்க்கம் அவளுக்கு உண்மைநிலையை – அவன் இறந்துவிட்டான் என்ற உண்மையைக் கூறுகின்றது. அதே வேளை அந்த ‘உண்மைநிலையினை வெளிப்படுத்த வேண்டாம்’ என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கின்றது. அதற்காக பெருந்தொகைப்பணத்தையும் சலுகைகளையும் வழங்குவதாக ஆசையும் காட்டுகிறது. இச்சலுகைகள் ஒன்றும் அவளது கணவனுக்கு ஈடாகமாட்டாது என்பதை உணர்ந்த அவள் தனது வாரிசுக்காக உயிர்வாழ நினைக்கிறாள். இதுதான் இரண்டாவது குறுநாவலின் சாராம்சமாகும்.

குறிப்பாக, ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு மக்களின் உயிரைவிட தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதே மிக முக்கியமான கடமையாகிவிடுகின்றது. சராசரி மனிதர்களின் ஆசாபாசங்களும் துன்ப துயரங்களும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதே இந்த இரண்டு கதைகளிலும் தொனிப்பொருள்களாக அமைகின்றன. இனம், மொழி, நாடு என்பவற்றைக் கடந்தநிலையில் எல்லாவகையான அதிகார வர்க்கங்களும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இவ்வாறான குரூர மனப்பாங்குடனேயே செயற்பட்டுவந்துள்ளன - செயற்பட்டுவருகின்றன. இவ்வாறான அதிகாரவர்க்க மனப்பாங்குகளை, குறித்த இரு சூழ்நிலைகளை மையப்படுத்தி குறுநாவல்களின் வடிவில் எடுத்துப்பேச முற்பட்டுள்ளார், குரு அரவிந்தன் அவர்கள். இவ்வாறான அதிகாரவர்க்க நிலைப்பாடுகளால் பாதிக்கப்படும் சராசரி சமூகமாந்தரின் அவலநிலையை வாசகர்களுக்கு உணர்த்துவதே குருஅரவிந்தனுடைய நோக்கமென்பதை மேற்படி இரு ஆக்கங்களிலிருந்தும் உய்த்துணரமுடிகிறது. இதற்கு ஏற்றவகையில் இருகதைகளினதும் கதையம்சங்களையும் கதாபாத்திரங்களின் உணர்வுநிலைகளையும் அவர் ஒரு திட்டப்பாங்குடன் உருவாக்கி வளர்த்துச் சென்றுள்ளமை தெரிகிறது.

நீர்;மூழ்கி… குறுநாவலிலே உயிராபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உயிர்துறந்த மைக்கேலை ஒரு தியாக உணர்வுடைய பாத்திரமாகக் காட்டும்வகையில் அவனுடைய காதலுணர்வுசார் பின்புலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தன்னால் காதலிக்கப்பட்ட, அதேசமயம் திருமணம் செய்யமுடியாது போன ஒரு பெண்ணின் கணவனை உயிராபத்திலிருந்து மீட்கவேண்டுமென்ற உள்ளுணர்வால் தூண்டப்பட்டவனாக அவனைச் சித்தரித்துள்ள முறைமை கதையம்சத்திற்குச் சுவை சேர்ப்பதாகும்.

உறைபனி…குறுநாவலிலே உயிராபத்திலிருந்த ஒருவனின் (டெனிஸ்) மனைவியின் காதல்சார் உணர்வுநிலைகளை மையப்படுத்திக் கதையம்சம் வளர்த்தெடுக்கப்படுகிறது. காதலனாகிய கணவன் ஆய்வுநிமித்தம் பிரிந்து சென்ற நிலையில் அப்பிரிவுத்துயரில் தவித்த அவளுக்கு அவன் உயிராபத்தில் இருக்கிறான் என்ற செய்தி கிடைத்தபொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது. பின்னர் அவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவிட்டான் என்ற செய்தி கிடைத்த பொழுது அவளுக்கேற்பட்டநிம்மதி நீடிக்கவில்லை. அதிகாரியானவர் உண்மைநிலையைக் கூறியபொழுது திடுக்கிட்ட அவள் சோகத்தின் விழிம்பிற்குச் செல்கிறாள். பின்னர் அரசு தரும் சலுகைகளை மறுத்த அவள் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக தனது வாழ்வைத் தொடர்கிறாள் என்றவகையில் இந்தக்கதை அமைகிறது. இப்பாத்திரத்தின் உணர்வுகளினூடாக அதிகாரவர்க்கத்தின் மேற்படி குரூர குணாம்சம் விமர்சனத்துக்குள்ளாகிறது.

இவ்விரு குறுநாவல்களின் கதையம்சங்களும் முறையே ஆழ்கடல் மற்றும் பனிச்சூழல் என்பவற்றோடு தொடர்புடையவை. அச்சூழல் சார்ந்த அறிவியல் அம்சங்களும் இக்குறுநாவல்களில் பரந்துபட்டுக்காணப்படுகின்றன. முதலாவது குறுநாவலில் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டமைப்பு மற்றும் பொறியியல் நுட்பம் என்பவற்றை ஆசிரியர் விளக்குகிறார். அக்கப்பல் விபத்துக்குள்ளாகும் நிலையில் அதிலிருப்பவர்களைக் காப்பாற்ற முயல்பவர்கள் எத்தகைய தொழில்நுட்பச் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதான அறிவியல்சார் பார்வை அரவிந்தனின் எழுத்தில் தெரிகிறது. அதுபோலவே பனிப்புயல் தொடர்பான கதையிலும் அப்புயல்சார்ந்த பல்வேறு அறிவியல் சார்ந்த செய்திகளையும் நாவல்களில் அவர் பதிவுசெய்துள்ளார். இவ்வாறான அறிவியல்; மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளையும் உள்ளடக்கிய படைப்புக்கள் என்ற வகையில் இவ்விரு குறுநாவல்களும் ‘அறிவியல்சார் புனைகதைகள்’ என்ற வகைமைக்குரிய அடையாளங்களையும் இவை பெற்றுள்ளன. இத்தகைய எழுத்து முறைமைக்குத் தமிழகத்தில் ‘சுஜாதா’ போன்ற சிலர் முன்னோடியாக அமைந்துள்ளனர் என்பது இங்கு நினைவிற் கொள்ளப்படவேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.

இவ்விரு குறுநாவல்களின் தகுதிப்பாடு பற்றிச் சிந்திக்கும்வேளையில் குருஅரவிந்தன் அவர்களுடைய படைப்பாளுமையில் புலப்படும் வளர்ச்சிநிலை யொன்றை இங்கு சுட்டுவது அவசியமாகிறது.

குருஅரவிந்தன் அவர்கள் ஏற்கெனவே இருநாவல்களையும் ஒரு குறுநாவலையும் எழுதியவர். இவற்றில் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்?’(2004) என்ற முதல் நாவல் ஈழத்தின் விடுதலைப்போராட்டச் சூழலின்; பின்புலத்திலான சமூக அவலங்களையும் நம்பிக்கைத்துரோகம் விளைவிப்பவர்களின் செயற்பாடுகளையும் கூறுவது. போராட்டச்சூழலில் பாதிப்புற்ற பெண்களின் பிரச்சனைகளையும் மையப்படுத்தி யமைந்த கதையம்சங்கொண்டது இது.

‘உன்னருகே நான் இருந்தால்’(2004) என்ற நாவலும் ‘எங்கே அந்த வெண்ணிலா?’(2006) என்ற குறுநாவலும் புலம்பெயர் சூழலில் குறிப்பாக வடஅமெரிக்க – கனடியச்சூழ்களில் வாழும் ஈழத்தமிழ்ச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுப் பிரச்சனைகளை மையப்படுத்தியவையாகும். காதல், குடும்ப உறவுகளில் திருமணம்முடித்தல் என்பன தொடர்பாக எழும் பண்பாட்டுப் பிரச்சினைகள் இவற்றில் கதையம்சங்களாக விரிகின்றன. உணர்ச்சிகளை மோதவிட்டு அவற்றின் முரண்பாடுகளுக்கிடையிலே கதையம்சங்களைச் சுவைபட வளர்த்துச் செல்லும் ஒரு எழுத்தாக்க முறைமையை இவற்றில் நாம் காண்கிறோம். குருஅரவிந்தன் அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட கதையம்சத்தைச் சுவைபட வளர்த்துச் சென்று எதிர்பாராத முடிவுகளோடு நிறைவு செய்யக் கூடியவர் என்பதை மேற்படி நாவல்கள் குறுநாவல் என்பன உணர்த்தி நிற்கின்றன. அவருடைய இந்த ஆளுமையே அவருக்கு பரந்ததொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் எம்மால் உணரமுடிகிறது.

இங்கே விமர்சனத்திற்குரிய அம்சம் என்பது குருஅரவிந்தனது மேற்சுட்டிய இரு நாவல்கள் மற்றும் குறுநாவல் என்பவற்றின் உள்ளடக்கங்கள் பற்றியதாகும். இவ் உள்ளடக்கங்கள் எல்லாமே சமூகத்தின் குறித்த சில மாந்தர்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சியம்சங்கள் என்பவற்றை மையப்படுத்தி அமைகின்றன என்பதே நமது கவனத்துக்கு வரும் அம்சமாகும். இவ்வாக்கங்களின் கதைமாந்தர்கள் பெரும்பாலானோர் சமூகத்தின் தனித்தனி மாந்தர்களாகவே காட்சிக்கு வருகின்றவர்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.

பொதுவாகப் புனைகதை என்ற இலக்கியவகையின் (சிறுகதை, நாவல், குறுநாவல்) உயிரான அம்சம் அதன் சமூக யதார்த்தமாகும். அதாவது சமூகப்பிரச்சனைகள் அதன் வகைமாதிரியான கதைமாந்தருக்கூடாக எடுத்துப்பேசப்படவேண்டும். அப்படிப்பேசினால்தான் படைப்புகள் சமூகயதார்த்தப் படைப்புகளாக அமையமுடியம். அவ்வாறு அமையாதவிடத்து அவை சராசரி கதைகளாக மட்டுமே கணிப்பெய்திவிட நேர்கிறது. குரு அரவிந்தன் அவர்களின் மேற்படி முன்னைய ஆக்கங்கள்;; சமூகப் பிரச்சினைகளை எடுத்துப்பேசினாலும் கதையம்சம் மற்றும் பாத்திர உருவாக்கம் என்பவற்றில் சராசரி ஜனரஞ்சக நிலைப்பட்ட ஆக்கங்கங்களாகவே கணிப்பெய்துவனவாகும.;

நீர்மூழ்கி நீரில் மூழ்கி …. மற்றும் ;உறைபனியில் உயர் துடிக்தபோது…’ ஆகிய இந்த இரு நாவல்களிலும் மேலேசுட்டப்பட்ட நாவல்களிலிருந்து ஓரளவு வேறுபட்ட படைப்புமுறைமையை இனங்காண முடிகிறது. இவற்றில் சமூகத்தின் அதிகாரமட்டம் சார்ந்த வகைமாதிரியான பாத்திரங்கள் நமது காட்சிக்கு வருகின்றன. நீர்மூழ்கி… குறநாவலில் வரும் இராணுவ அதிகாரியும் மற்றக் குறுநாவலில் வருகின்ற அதிகாரியும் இவ்வகையான பாத்திரங்களாகக் கணிக்கத்தக்கவர்கள். இவ்வாறான ஆட்சியதிகாரத்தால் பாதிக்கப்படும் சராசரி மனித சமூகத்தின் பிரதிநிதிகளாக அல்லது வகைமாதிரிகளாகவே ‘மைக்கேல்’மற்றும் ‘டெனிஸ்’, ‘கிறிஸ்டினா’, ‘லாரிஸா’ முதலிய பாத்திரங்கள் நமது கவனத்திற்கு வருகின்றனர். இதனால் இவ்விரு நாவல்களிலும் சமூக யதார்த்தப்பாங்கான படைப்பாக்க முறைமையை ஓரளவு இனம் காணமுடிகிறது. இது குருஅரவிந்தனுடைய புனைகதைப் படைப்பாளுமையின் ஒரு வளர்ச்சிநிலையாகக்; கணிக்கத்தக்கது என நான் கருதுகிறேன்.

படைப்புகளுக்கான கதையம்சங்கள் மற்றும் கதைநிகழ் களங்கள் என்பவற்றைத் தேர்ந்துகொள்வதிலும் குரு அரவிந்தன் அவர்கள் தமது பார்வைகளை அகலப்படுத்திவருவதனை இவ்விரு குறநாவல்களும் தெளிவாக உணர்த்திநிற்கின்றன. மேலும், அறிவியல் மற்றும் தெழில்நுட்பம்சார்ந்த வளர்ச்சிநிலைகளை உள்ளடக்கியும் சூழல்மாசடைதல் போன்ற உலகளாவிய பிரச்சினைகளைக் கவனத்துட் கொண்டும் படைப்புகளை அவர் உருவாக்க முயன்றுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு வளர்ச்சி நிலையாகும.;

இவ்வாறாக வளர்ச்சியும் விரிவும் எய்திவரும் அவருடைய படைப்பாளுமையானது எதிர்காலத்தில் தமிழின்புனைகதைத்துறைக்கு மேலும் வளம்சேர்க்கும் என்ற நம்பிக்கையை முன்வைத்து, இத்திறாய்வுரையை நிறைவுசெய்கிறேன்.

நன்றி: பதிவுகள் பெப்ருவரி 2010 இதழ் 122 


'காலம்': பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா மற்றும் ஏ.சி.தாசீசியஸ் இயல்விருதுச் சிறப்பிதழ்!

- ஊருலாத்தி -

செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'காலம்' சஞ்சிகையின் ஜூன் 2007 இதழ் ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை அடித்தபடி வெளிவந்திருக்கிறது. வழக்கமான அம்சங்களுடன் வெளிவந்திருக்குமிதழ் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பவளவிழச் சிறப்பிதழாகவும், ஏ.சி.தாசீசியஸ் இயல்விருதுச் சிறப்பிதழாகவும் வெளிவந்திருக்கிறது. பார்வைக்கு அன்றைய 'காலச்சுவடு'  இதழின் அமைப்பினை நினைவூட்டுகிறது. 'காலத்'தின் வழக்கமான பகுதியில் அ.முத்துலிங்கத்தின இலக்கியக் குறிப்புகள், ஷோபாசக்தி, இளங்கோ, அம்பை மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைகள், சேரன், நாவாந்துறை டானியல்ஜீவா, மனுஷ்யபுத்திரன், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைகள், வெங்கட் சாமிநாதன், வெங்கட் ரமணன், மணி வேலுப்பிள்ளை, மு.பொன்னம்பலம், என்.கே.மகாலிங்கம் மற்றும் இளைய அப்துல்லாஹ் போன்றோரின் கட்டுரைகள், மற்றும் 'பருத்திவீரன்' இயக்குநர் அமீருடனான அய்யப்பமாதவனின் நேர்காணல் , 'டொராண்டோ' ஓவியர் 'டொன்னி ஹறிஸி'னுடனான மனுவல் ஜேசுதாசனின் நேர்காணல் ஆகியன இடம்பெற்றுள்ளன.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பவளவிழாச் சிறப்புப் பகுதியில் பேராசிரியருடனான பா.துவாரகனின் நேர்காணல், பேராசிரியர்கள் வீ.அரசு, சி.மெளனகுரு, மற்றும் செல்வா கனகநாயகம், ஜெயமோகன் போன்றோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பா.துவாரகனின் நேர்காணல் நல்லதொரு நீண்ட நேர்காணல் பேராசிரியரின் மற்றும் அவரது துணைவியாரின் அபூர்வமான இளமைக்காலப் புகைப்படங்களுடன் விரிந்து கிடக்கின்றது. மேற்படி நேர்காணலில் பேராசிரியர் சங்ககாலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலான தமிழ் இலக்கியப் படைப்புகள் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்தளத்தில் அவருக்குரிய நிலை என்பவை பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பேராசிரியர் வீ.அரசு தனது 'அச்சுப் பண்பாடு: புனைகதை: பேரா. கா.சிவத்தம்பி' என்னும் கட்டுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி புனைகதையின் பண்புகளின் தன்மையினைக் குறிக்கப் பயன்படுத்திய 'அச்சுப் பண்பாடு' என்னும் சொல்லாடல் பற்றிய தன் பார்வையினை இருபதாம் நூற்றாண்டின் புனைகதை மரபைப் பற்றிப் பேச வந்தவர்கள் பாவித்த சொல்லாடல்களை நினைவுபடுத்துவதன் மூலம் முன்வைக்கின்றார். 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.. 'கட்டுரையில் பேராசிரியர் மெளனகுரு பேராசிரியர் கா.சிவத்தம்பின் பேராதனைப் பல்கலைக்கழக அனுபவங்களைத் தனது அவருடனான அனுபவங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்கின்றார். பேராசிரியர் கா.சிவத்தம்பியை மார்க்சிய இலக்கியக் கோட்பாளராகக் காணுகின்றார். அத்துடன் பேராசியரின் படைப்புகளை, இலக்கிய நோக்கின் பலம் , பலவீனங்களை ஓர் எழுத்தாளனாகவும் , இலக்கிய மாணவனாகவும் நின்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் ஆராய்கின்றார்.

'ஏ.சி.தாசீசியஸ் இயலவிருது'ச் சிறப்பிதழில் குழந்தை ம.சண்முகலிங்கன், முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ.கனகசபாபதி, பேராசிரியர் மெளனகுரு போன்றோரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சிறப்பிதழின் முக்கிய பகுதியாக ஈழத்து நாடக உலகில் தன் பங்களிப்பை விபரிக்கும் 'உயிரோட்டமான நாடக உறவுப் பாலத்தில் என் பங்கு' என்ற கட்டுரை முக்கியமானது.

நன்றி: பதிவுகள் பெப்ருவரி 2008 இதழ் 98 


கணையாழியின்  கனடாச் சிறப்பிதழ்!

- -திருமூலர்-

கணையாழியின் டிசம்பர் இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. இதுவரை காலமும் இலைமறை காயாக அறியப்பட்டிருந்த 'கனடாத் தமிழ் இலக்கியம்' பற்றி நல்லதொரு அறிமுகமாக சிறப்பிதழ் வெளிவந்திருக்கிறது. இதழ்த் தயாரிப்பாளர்களான அளவெட்டி சிறீசுக் கந்தராசா மற்றும் க.நவம் ஆகியோர் கூறுவது போல் 'இச்சிறப்பிதழ் கனடாவிலுள்ள பல்வேறு பட்ட தமிழ் எழுத்தாளர்களினதும் படைப்புகளின் முழுமையான ஒரு தொகுப்பு அன்று. ஆயினும் சில முக்கிய போக்குகளையும் படைப்புகளையும் இனம் காட்டும் ஒன்றாக' அமைந்திருக்கின்றது. இதனைக் குறை கூறுவதற்கில்லை. வெளிவரவிருக்கும் 'வீடும் வெளியும்' சிறுகதைத் தொகுதி இயலுமானமட்டும் முழுமையாக வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்போம்.

சிறப்பிதழில் கட்டுரைகளை ஜோர்ஜ்.குருசேவ், சேரன், என்.கே.மகாலிங்கம், டி.பி.ஸ்.ஜெயராஜ், ப.ஸ்ரீஸ்கந்தன். மைக்கல் ஆகியோரும், கவிதைகளை செழியன், ஜயகரன்,செல்வம், தான்யா தில்லைநாதன், கலைவாணி இராஜகுமாரன், பிரதீபா தில்லைநாதன், சுமதி ரூபன், திருமாவளவன் ஆகியோரும், சிறுகதைகளை குமார் மூர்த்தி, வ.ந.கிரிதரன். அசை சிவதாசன், அ.முத்துலிங்கம் ஆகியோரும் எழுதியுள்ளனர். ஓவியர் கருணாவின் கைவண்ணம் இதழ் முழுவதும் மின்னுகிறது. 

கனடா இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் தகவல்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ்.குருசேவின் கட்டுரையான 'புத்தி ஜீவிதம்' நல்லதொரு கட்டுரை. கட்டுரை முழுக்க அவரிற்கேயுரிய நகைச்சுவையுணர்வு இழையோடிக் கிடக்கிறது. புத்தி ஜீவிகள், விமர்சகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பற்றியெல்லாம் கட்டுரை வெளுத்து வாங்குகிறது. மைக்கலின் 'சில ஏமாற்றங்களூம், எதிர்பார்ப்புகளூம்..' கனடாத் தமிழ் இலக்கிய போக்குகளையும், அடைந்த ஏமாற்றங்களையும், நம்பிக்கைகளையும் சுருக்கமாகக் கூறி நிற்கிறது. ப.ஸ்ரீஸ்கந்தனின் கட்டுரை கனடாவில் வெளிவந்த , கனடாத் தமிழ் இலக்கிய சஞ்சிகைகளைப் பற்றிக்  கூறும். டி.பி.ஸ்.ஜெயராஜின் 'பேரதிர்சி: பெயரும் பெயர்வும்' புலம் பெயர்ந்த தமிழர்களை மேலைத்தேய பெயர் மரபு எவ்விதம் பாதிக்கிறதென்பதை விபரிக்கும். சேரனின் 'புலம் பெயர்ந்தோர் எழுத்து மூன்று முகங்கள்' கனடா ஆங்கில இலக்கியத்தில் கால் பதித்துள்ள மூன்று இலங்கையர்களான மைக்கல் ஒந்தாச்சி, ஷியாம் செல்வதுரை, இறிஸாந்த் சிறி பாக்யத்தா ஆகியோரை அறிமுகப்படுத்தும். மைக்கல் ஒந்தாச்சியே பிரிட்டனின் 'புக்கர்' பரிசினைப் பெற்ற பிரபல நாவலான ஆங்கில நோயாளியினைப் (English Patient) படைத்தவரென்பதும் , இந்நாவலே பின்னர் திரைப்படமாக வெளிவந்து ஒன்பது அகாடமி பரிசுகளை வென்றமை என்பதும் குறிப்பிடத் தக்கது. 

சிறுகதைகளில் குமார் மூர்த்தியின் 'சப்பாத்து' வாசித்து முடிக்கையில் இதழ்களில் புன்னகையினை வரவழைக்கும். 'சப்பாத்'தினூடு கனடாத் தமிழரின் வாழ்க்கை கோடிட்டுக் காட்டப்படுகிறது. வ.ந.கிரிதரனின் 'சொந்தக்காரன்' கனடாத் தமிழனொருவரின் வாழ்க்கையினை, கனடாவின் பூர்வீக குடியினரின் நிலமைகளையிட்டுக் கேள்விகளை எழுப்பும். சிவதாசனின் 'சுயம்வரம்' நல்லதொரு சிறுகதையாக வந்திருக்க வேண்டியதைக் கதாசிரியர் கோட்டை விட்டிருக்கின்றார். இறுதி வரை நன்றாக போய்க் கொண்டிருந்த சிறுகதையில் 'தமயந்தி'யின் பாத்திரத்தின் மனமாற்றமே கதையின் முக்கியமான கூறு. ஆனால் அந்த மனமாற்றம் தாக்கத்தினை ஏற்படுத்துமளவிற்கு படைக்கப் பட்டிருக்கவில்லை. உண்மையில் இச்சிறுகதை இரு சிறுகதைகளிற்கான கருக்களைக் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது. அன்னாவைக் காதலித்த கோபி திருமணம் செய்யும்  போது தமிழ்ப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்வதை விமர்சிப்பதுடன் கதையினை முடித்திருக்கலாம். கதையினைப் வாசிப்பவர்கள் மனதில் நிற்கும் பாத்திரம் அன்னாவே. இறுதியில் தேவையில்லாமல் தமயந்தி என்ற பாத்திரத்தை அரைகுறையாகப் படைத்துக் கதையின் போக்கினைத் திசை திருப்பி விட்டிருக்கத் தேவையில்லை. 

கவிதைகளில் செல்வம் அருளானந்தத்தின் கவிதை 'கட்டுவோர் விலக்கிய கல்' இழந்த மண்ணை நினைத்து ஆற்றாமையுடன் அசை போடுகிறது. செல்வத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் காலம் இதழில் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இழந்ததையே எண்ணியெண்ணி அசை போடுவதை விமர்சித்துக் கட்டுரைகள் வருவது வழக்கம். அதனையே ஆசிரியரின் கவிதையும் செய்திருப்பது நல்ல வேடிக்கை. பொதுவாகக் கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கின்றன. நன்கு அறியப்பட்ட கவிஞர்கள்.

மொத்தத்தில் கணையாழியின் கனடா மலர் நன்கு வெளிவந்திருக்கின்றது. வெளிவரவிருக்கும் 'வீடும் வெளியும்' சிறுகதைத் தொகுப்பிற்கு நல்லதொரு அறிமுகமாக இதனைக் கொள்ளவும் முடியும். மலர் நன்கு வெளிவரக் காரணமாகவிருந்த திரு. எஸ்.பொ., கணையாழி இதழ்க் குழு, அளவெட்டி சிறீசுக்கந்தராசா, க.நவம் அனைவருமே பாராட்டிற்குரியவர்கள். 

நன்றி: பதிவுகள் தை 2001 இதழ்-13 


கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு!

-ஊர்க்குருவி-
 
ஜெயமோகனின் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு எதிர்பார்த்த படியே 'அகவி'யின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமையன்று (மே 19, 2001) Scarborough Village Community centerஇல் நடைபெற்றது. ஜெயமோகனின் விரிவான நாவல்களை விவாதிப்பதற்கு ஒரு நாளாவாது குறைந்தது வேண்டும். அதனை மூன்று மணித்தியாலங்களிற்குள் செய்தாலெப்படி? அதற்கான விளைவினை அமர்வினில் அவதானிக்க முடிந்தது. முதலில் 'பூரணி' மகாலிங்கம் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி மிகவும்  விரிவானதொரு உரையினை நிகழ்த்தினார். நாவல்களின் மூன்று பாகங்களையும் விரிவாக விளக்கினார்.ஜெயமோகனின் மொழிநடை, அறிவுத் தேடல் மிக்க அவரது ஞானம், நாவல் கூறும் பொருள் பற்றியெல்லாம் விரிவாக விளக்குமொரு உரையாக அவரது உரை அமைந்திருந்தது. பாத்திரங்களிற்கு முக்கியமற்று நாவல் படைக்கப் பட்டிருப்பதாலோ என்னவோ பலரால் நாவலைப் முழுமையாகப் படிக்க முடியவில்லையோ எனக் குறிப்பிட்டார். அமர்வில் பங்கு பற்றிய அன்பரொருவர் தான் தனது நண்பரொருவரிடம், நண்பர் தமிழில் B.A யாம், நாவலைக் கொடுத்த போது இரு வாரங்களாகப் படித்த பின்பே முதலாவது பாத்திரத்தைக் கண்டு பிடித்த விடயத்தை மகிழ்ச்சியுடன் கூறிய கூத்தினைக் குறிப்பிட்டார். வ.ந.கிரிதரன் நாவல் பற்றிக் குறிப்பிடும் போது தன்னால் நாவலில் ஜெயமோகனின் தேடல் மிக்க நெஞ்சினையும், புலமையையும் நாவல் முழுக்க உணர முடிந்த அதே வேளை தகழியின் 'தோட்டியின் மகன்' அல்லது அதீன் பந்த்யோபாத்யாயவின் 'நீல கண்ட பறவை', சிவராம் காரந்தின் 'மண்ணும் மனிதரும்' டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' போன்ற நாவல்களைப் படிக்கும் போது ஏற்பட்ட நாவலுடனான பிணைப்பு இந் நாவலில் ஏற்படவில்லை' என்று குறிப்பிட்டார். கவிஞர் திருமாவளவனும் இதே போன்ற கருத்தினைக் கூறினார். பெண் எழுத்தாளரான வசந்தி ராஜா நாவலைப் படிக்கும் போது அம்புலிமாமாக் கதைகளைப் போல் நாவலில் விரியும் பல்வேறு சூழல்களிற்குள் மெய்மறக்க முடிந்தததாகவும் ஆனால் தனக்கு சுந்தர ராமாசுவாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' போன்ற நாவல்களையே பிடிக்குமெனத் தெரிவித்தார்.'காலம்' செல்வம் இது போன்ற குற்றச்சாட்டுகள் பொதுவாக இத்தகைய படைப்புகளிற்கு எழுவது வழக்கம்தான். சு.ரா.வின் ஜே.ஜே.குறிப்புகளிற்கும் நடந்தது தானென்றார். 

இதன் பின்னர் எழுத்தாளர் ரதன் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலைப் பற்றிய தனது உரையினை ஆற்றினார். இது பூரணி மகாலிங்கத்தின் உரையினைப் போல் மிகவும் விரிவாக அல்லாது சுருக்கமாக அமைந்திருந்தது. ரதன் தனதுரையில் இந் நாவலில் விஷ்ணுபுரத்திற்கு மாறாகப் பாத்திரங்கள் அதிகமாக உள்ளதைக் குறிப்பிட்டு பாத்திரங்கள் மூலம்  நாவல் ஒழுக்க நெறிகளைக் கேள்விக்குறியாக்குவதாகக் குறிப்பிட்டார். இது பற்றிக் கருத்துத்தெரிவித்த நாடகக் கலைஞர் ஞானம் லம்பேட் பாத்திரங்கள் மூலம் கதையினை நகர்த்திச்செல்வதும் கூட ஒருவகை யுக்தியேயென்றார். 

பின்னர் சுமதி ரூபன் 'ரப்பர்' நாவலைப் பற்றிச்  சுருக்கமான உரையினை நிகழ்த்தியதைத் தொடர்ந்து 'மனிதன்' சிவம் ஜெயமோகனின் 'பின்தொடரும் நிழலின் குரல்' நாவல் பற்றி தனது உரையினை நிகழ்த்தினார். இந் நாவல் சமகால நிகழ்வுகளைச் சித்திரிப்பதால் பல காரசாரமான விவாதங்களை எழுப்பியது. சிவம் தனதுரையில் நாவலில் வரும் சம்பவங்களை எவ்வளவு இயல்பாக ஜெயமோகன் படைத்திருகின்றார் என்ப்தை விளக்கினார். ஆனால் முடிவில் ஜெயமோகன் தனது தீர்வினைத் திணிப்பதைத் தன்னால் ஏற்க முடியவில்லையென்றார். இது பற்றிக் கருத்துக் கூறிய வ.ந.கிரிதரன் 'டால்ஸ்டாய்' தனது புத்துயிர்ப்பில் இறுதியில் தனது மதம் பற்றிய கருத்தினைத் தீர்வாகத் தருகின்றார். 'ததாவ்ஸ்கி'யும் இது போலவே தனது 'குற்றமும் தண்டனையும்' நாவலின் முடிவில் மதத்தையே தீர்வாகத் தருகின்றார். அதற்காக அப்படைப்புகளின் சிறப்பினை ஒதுக்க முடியாதென்றார்.அதே சமயம் தான் ஜெயமோகனின் மேற்படி நாவலை இன்னும் படிக்கவில்லையென்றும் ஆனால் முடிவு ஒன்றை மட்டும் வைத்து நாவலை மதிப்பிடுவது சரியல்லவென்றார். 'காந்தியம்' சண்முகலிங்கம் தனது கருத்தில் நாவலின் பெரும்பாலான சம்பவங்கள் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படைக்கப் பட்டிருக்கின்ற விடயம் தனக்குத் தெரியாதென்றார். ஏனென்றால் அவை மிகைப்படுத்தப் பட்டுப் படைக்கப் பட்டிருக்கின்றனவென்றார். தான் மீண்டுமொருமுறை வாசிக்கவேண்டுமென்றார். விமரிசனத்தின் கூர்மையினைத் தாங்க மாட்டாத சுமதி ரூபன் 'இவ்வளவு நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின்' படைப்புகளை இங்கிருந்து கொண்டு ஒரு சில சிறுகதைகளை மட்டுமே எழுதிக் கொண்டுள்ள சிலர் இவ்விதம் காரமாக விமர்சிப்பதாவென்று முட்டாளதனமாக ஆவேசப்பட்டார். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பதென்பது இதனைத்தான். விமரிசனமென்றால் இப்படித்தானிருக்கும்.இதனை இவ்விதம் கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்விதம் பலர் விமரிசனம் என்னவென்று புரியாமலே விமரிசனம் செய்ய வந்து விடுகின்றார்கள். இறுதியாக ஜெயமோகனின் 'நாவல்' பற்றி உரையாற்றவிருந்த 'காலம்' செல்வம் தவிர்க்க முடியாத் காரணங்களினால் நேரத்துடனேயே சென்று விட்டதால்  அந்நிகழ்வு நடைபெறவில்லை. அமர்வில் கவிஞர் செழியன், 'தேடல்' தேவன், அ.முத்துலிங்கம் போன்றவர்களையும் காண முடிந்தது. மொத்தத்தில் பயனுள்ள அமர்வாக ,ஜெயமோகனின், ஜெயமோகனின் நாவல்களின் பல்வேறு பக்கங்களை அறியுமொரு நிகழ்வாக அமர்வு அமைந்திருந்தது.

நன்றி: பதிவுகள் ஜூன் 2001 இதழ்-18


எஸ்.பொ.வுடன் கலந்துரையாடல்...

- ஊர்க்குருவி... -
 
எஸ்.பொ.வுடனான கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் இன்று - ஆவணி 27,2000- எனக்குக் கிடைத்தது. 'டொராண்டோவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களில் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்களையும் ஒன்றாகக் காணக் கூடிய முதலாவது நிகழ்வு' என்று நம்நாடு பத்திரிகையின் ஆசிரியர் தீவகம் இராஜலிங்கம் கூறியது உண்மைதான். கவிஞர் கந்தவனம், குறமகள், 'சிந்தனைப் பூக்கள்' பத்மநாதன், காலம் செல்வம், வ.ந.கிரிதரன், வசந்தி ராஜா, காவலூர் மூர்த்தி, 'நான்காவது பரிமாணம்' நவம், ரதன், அசை சிவதாசன், குமார் மூர்த்தி, என்.கே.மகாலிங்கம், செல்வா இலங்கையன், சுமதி ரூபன், திருமாவளவன், குரு அரவிந்தன்,சிவா சின்னத்தம்பி, பொ.சபேசன், அளவெட்டி சிறிஸ்கந்தராஜா, ப.ஸ்ரீஸ்கந்தன், 'உதயன்' லோகேந்திரலிங்கம், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், 'தேடல்' சிவகுமார், ஈழத்துச் சிவானந்தன், கவிஞர் செழியன், தமிழன் வழிகாட்டி 'செந்தி', எழுத்தாளர் அ.முத்துலிங்கம், நடிகர் இரா.பாலசந்திரன், நாடகங்கள் பலவற்றைத் தந்த சொர்ணலிங்கம், முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபர் பொ.கனகசபாபதி, 'கலகலப்பு' தீசன்..... இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். இதுதான் இவ்விதம் அனைத்து முகாம்களையும் சேர்ந்த எழுத்தாளர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் நான் முதன் முறையாகக் காண்பது. இதற்காக இலங்கை வானொலி புகழ் பி.விக்கினேஸ்வரனைத் தான் பாராட்ட வேண்டும். சுகயீனமான நிலையிலும் வந்திருந்து மாலை அமர்வினைத் தலைமை வகித்து நடாத்திய குறமகளினைப் (வள்ளிநாயகி ராமலிங்கம்) பாராட்டிடத்தான் வேண்டும். கனடாவில் 'நாடக வளர்ச்சி' பற்றிய நல்லதொரு ஆய்வுக் கட்டுரையினைத் தந்த ஞானம் லம்பேட் மிகவும் சிரமப் பட்டுத் தகவல்களைத் திரட்டித்தந்திருகின்றார். இவரது உரை 'நாடகம்' 'நாட்டிய நாடகம்' பற்றிப் பல கேள்விகளைச் சபையினரிடமெழுப்பியது. கனடாவில் சிறுகதைகள்' பற்றி பேசிய 'உதயன்' பத்திரிகை ஆசிரியர் தன் கோணத்தில் தகவல்கள் சிலவற்றைத் தந்தார். 'கனடாவில் பெண் எழுத்தாளர்கள்' பற்றி கலைவாணி ராஜகுமாரன் பயனுள்ள தானறிந்த குறிப்புகளை வழங்கினார். 'கனடாவில் நூல் வெளியீடு' பற்றிப் பேச வந்த ரதன் பேச வந்த தலைப்பினை விட்டு நூல் வெளியீடு பற்றிய தனது அனுபவத்தினைக் கூறினார். தமிழகத்தில் 'மணிமேகலை' பிரசுரம் வெளியிட்ட இவரது திரைப்படங்கள் சம்பந்தமான நூலில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள் இவரை எவ்வளவு தூரம் பாதித்திருக்கின்றதென்பதை உணர முடிகின்றது. கவிஞர் கந்தவனம் காலை அமர்வினை திறமையாக நடத்தினார்.

இவ் அமர்வில் எஸ்.பொ.வின் 'சடங்கு', 'அப்பாவும் மகனும்' 'நீலாவணன்', 'தீ' மற்றும் தமிழகத்தில் அண்மையில் வெளிவந்த 'இனி' என்னும் நூல்களடங்கிய தொகுதி வெளியிடப்பட்டது. முக்கியமான நிகழ்வாக இறுதியாக உரையாற்றிய எஸ்.பொ.வின் உரையும், தொடர்ந்து அது பற்றி நிகழ்ந்த கலந்துரையாடலும் அமைந்திருந்தன. எஸ்.பொ.வின் ஆணித்தரமான ஆளுமை மிக்க உரை அனைவரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. கேள்விக் கணைகளிற்கெல்லாம் சளைக்காது களைக்காது எஸ்.பொ.பதிலளித்த பாங்கு அவரது ஆளூமையினை அறிந்தவர்களிற்கு புதிதானதொன்றல்ல. 'புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆற்ற வேண்டிய பணிகள்' 'தமிழகத்தில் நிறுவப்பட்ட உலகப் படைப்பிலக்கிய மையம் வெற்றி பெற புலம் பெயர்ந்த தமிழர்கள்' ஆற்றக் கூடிய ஒத்துழைப்பு', 'தனித்தமிழ் மயப்படுத்தலை தீவிரமாகக் கையாள்வதாலேற்படும் அபாயம்', 'புலம் பெயர்ந்த தலைமுறையின் எதிர்காலத்தலைமுறை தமிழ் மொழியினைக் காப்பாற்றும் சாத்தியமுண்டா' ' சி.வை.தாமோதரம் பிள்ளை, நாவலர், விபுலானந்தர் போன்றோர் தமிழகத்தில் ஆற்றிய இலக்கியப் பணிகள்' ...இது பற்றியெல்லாம் விளக்குமொரு உரையாக அவரது நீண்ட உரை அமைந்திருந்தது. தர்க்கம் செய்யும் திறனற்ற ஒருசிலர் குதர்க்கம் செய்யவும் முயன்றார்கள். அத்தகைய சமயங்களிலெல்லாம் இரா.பாலச்சந்திரனும், ஈழத்துச் சிவானந்தனும் தலையிட்டு எஸ்.பொ.வைக் காப்பாற்றினார்கள். மொத்தத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்திக்கக் கூடியதாகவும், எஸ்.பொ.என்ற மாபெரும் படைப்பிலக்கியவாதியினை தரிசிக்கக் கூடியதாகவும் அமைந்திருந்த கருத்தரங்கு கனடாத் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றியதொரு நம்பிக்கைக் கீற்றினைத் தருகின்றது. 


நன்றி: பதிவுகள் புரட்டாதி 2000   இதழ்-9


ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழ்

- வ.ந.கிரிதரன் -

கலாமணி பரணீதரனை ஆசிரியராக, 'அறிஞர் தம் இதய ஓடை, ஆழ நீர் தன்னை மொண்டு, செறி தரும் மக்கள் எண்ணம் , செழித்திட ஊற்றி ஊற்றி, புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாரதிதாசனின் பாடல் வரிகளைத் தாரகமந்திரமாக் கொண்டு அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழான புரட்டாதி 2012 இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. இது பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் 'ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழும் முழுமையாகக் கனடா வாழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மாத்திரமே தாங்கி வருகின்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய, கனேடியச் சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்ததன்மூலம் ஜீவநதி மேற்படி நாடுகளிலுள்ள படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், ஈழ மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு மேற்படி நாடுகளின் கலை, இலக்கிய முயற்சிகளையும் அறிமுகம் செய்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேற்படி ஆசிரியத் தலையங்கத்தில்2011 வருட சிறந்த சஞ்சிகைக்கான கு.சின்னப்பபாரதி விருது கிடைத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

மேற்படி கனடாச்சிறப்பிதழ் கட்டுரை, கவிதை, சிறுகதை, நேர்காணல் ஆகியவற்றைத் தாங்கி வெளிவந்துள்ளது. அ.முத்துலிங்கம், வீரகேசரி மூர்த்தி, மணி வேலுப்பிள்ளையுட்பட எழுவரின் கட்டுரைகளையும், தேவகாந்தன், ஸ்ரீரஞ்சனி, மெலிஞ்சி முத்தன், த.மைதிலி, வ.ந.கிரிதரன் ஆகியோரின் சிறுகதைகளையும், திருமாவளவ்ன், தமிழ்நதி, மயூ மனோ, சேரன், டிசெதமிழன் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்), ஆனந்த பிரசாத், கறுப்பி, நிவேதா ஆகியோரின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது 'ஜீவநதி' கனடாச்சிறப்பிதழ். முதலாவது கட்டுரையான 'கனேடியத் தமிழர்களின் கலை இலக்கிய வாழ்வியல்' என்னும் சுல்பிகாவின் கட்டுரை ஆழமானது. ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூறும் பொருள்பற்றி ஆராய்கிறது. மணி வேலுப்பிள்ளையின் 'நொறுங்குண்ட இதயம் ஓர் அரிய நாவல்' என்னும் கட்டுரை மங்களநாயகம் தம்பையாவினால் எழுதப்பட்டு 1914இல் வெளிவந்த 'நொறுங்குண்ட இருதயம் ஓர் அரிய நாவல்' என்னும் தேடி எடுத்த நாவல் பற்றி பதிவு செய்கின்றது. பொருளாசையினால் துட்டர்கள் கையில் தம் பெண் பிள்ளைகளைக் கொடுக்கும் பொருளாசையெனும் கொடிய நோய்க்காளாகியுள்ள தந்தையர்மேல் பரிதாபப்பட்டு அதற்குத் தீர்வாக அரிய சற்போதமென்னும் (நற்போதனையென்னும்) மருந்தினை வழங்குவதே நாவலின் கரு என்பதைக் கட்டுரையாளர் நாவலின் பாத்திரமொன்றின் உரையாடலினூடு எடுத்துக் காட்டுகின்றார். நாவலின் பிரதான பாத்திரங்களெல்லாம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றார்கள். சந்தோசமாக வாழ்கின்றார்கள். 'நாவலாசிரியர் கூறும் பரிகாரம் வேறானதாகவிருந்தபோதும்  மனச்சாட்சியே இந்நாவலின் பிரதானமான மையக்கரு. அதுவே நாவலின் மாந்தர் அனைவரையும் கொண்டு நடத்துன்றது. பரிகாரம் எதுவாயினும் இது அரியதொரு நாவலெ'ன்ற தனது கருத்தினையும் முன் வைக்கின்றார் கட்டுரையாசிரியர். அத்துடன் நாவலாசிரியரின் ஆங்கிலப் புலமை காரணமாக அவர் பல ஆங்கில மொழியில் கையாளப்படும் கூற்றுகளைத் தமிழ் மயப்படுத்தி ஆங்காங்கே பாவித்துள்ளதையும், பாத்திரங்கள் நல்ல தமிழில் உரையாடும் பண்பினையும் அவதானித்துக் கட்டுரையாளர் பதிவு செய்துள்ளார். இக்கட்டுரையின் முக்கியமான பயன்களிலொன்று இந்த நாவல் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிவித்ததுதான். இக்கட்டுரைவாயிலாகத்தான் நானே இந்த நாவல் பற்றி அறிந்துகொண்டேன்.

சிறுகதைகளில் தேவகாந்தனின் 'ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்' சிறுகதையின் பெயர் வித்தியாசமாகவிருந்தது. ஸரமகோ (José de Sousa Saramago) உலகபுகழ்பெற்ற போர்த்துகேய எழுத்தாளர். இவரொரு நாவலாசிரியர்; கவிஞர்; நாடகாசிரியர்; பத்திரிகையாசிரியர். 1998ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல்பரிசு பெற்றவர். இவரது எழுத்துநடை புகழ்பெற்றது. நீண்ட வசனங்கள் (சிலவேளைகளில் ஒரு பக்கத்துக்கும் அதிகமாக) இவரது அதன் தனிச்சிறப்பு. பின்நவீனத்துவப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். ஆனால் இவர் போர்த்துக்கல்லின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இறுதிவரை (1969இலிருந்து) இருந்தவர். ஸரமகோதாசன் என்று கதையின்  தலைப்பு இருந்ததும் கதையும் ஸ்ரமகோவின் பாணியில் அமைந்திருக்குமோ என்று எண்ணியபடியே வாசிக்க ஆரம்பித்தேன். ஸ்ரமகோதாசன் கூட வித்தியாசமாக இருக்குமே என்றதொரு காரணத்திற்காகத்தான் அந்தப்பெயரை வைத்திருப்பதாக ஆசிரியர் கூறுகின்றார். கதை தேவகாந்தனின் வழக்கமான எழுத்து நடையில் நகர்கிறது. பத்திரிகையாளனான ஸரமகோதாசன் அடிக்கடி தனது புத்தகமூட்டைகளுடன் வீடு மாறுபவன். வழக்கம்போல் இம்முறையும் வீடுமாறுகிறான். அவனது வீட்டுக்காரியான சிங்களப் பெண்மணியிடமிருந்து வாடகை முன்பணமாகக் கொடுத்த பணத்தை மிகவும் இலகுவாக மீளப்பெற்று கதைசொல்லியை ஆச்சரியப்பட வைக்கின்றான். அதற்குத்தான் கரப்பான் பூச்சிகள் அவனுக்கு உதவுகின்றன. வீட்டுக்காரியின் கரப்பான் பூச்சிகள் மீதான அருவருப்பு/வெறுப்பினைக் காரணமாக வைத்து ஸரமகோதாசன் எவ்விதம் தனது வாடகை முன்பணத்தை மீளப்பெற்றுக்கொள்கின்றான் என்பதுதான் கதை. சுவைக்கிறது. கூடவே மெல்லியதொரு புன்னைகையினையும் வரவழைக்கின்றது.

ஸ்ரீரஞ்சனியின் சிறுகதையான 'மனசே மனசே'யில் வரும் தம்பதிக்கிடையில் ஒருவிதமான திருப்தியின்மை நிலவுகின்றது. ஆளுமைச் சிக்கல்களும், சமுதாயத்தில் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனைகளும் அடிப்படைக்காரணங்கள். மனைவி வாகன விபத்தொன்றில் சிக்கிக்கொள்கின்றாள். அதற்குக்காரணமானவன் நாயகனின் விருப்பத்திற்குரிய பிரபல எழுத்தாளன். அவனை நாயகன் சந்திக்கச் செல்கின்றான். எழுத்தாளன் காரைத்திருத்திக்கொடுக்கச் சம்மதிக்கின்றான். அவனுடனான உரையாடலின்போது கதை நாயகனுக்கு அவனது விருப்பத்திற்குரிய எழுத்தாளன் மனைவியைப் பிரிந்து வாழ்வது தெரிகின்றது. அவனுடன் தன் நிலையினை ஒப்பிட்டுக்கொள்கின்றான். தன் மனைவியின் மீதான மதிப்பு பெருகுகின்றது. அதன் விளைவாக அவனது மனம் ஒருவித அமைதியில் சாந்தமடைகின்றது. கதையும் முடிவுக்கு வருகின்றது.

மெலிஞ்சிமுத்தனின் சிறுகதையான 'காலத்தைக் கடக்கும் படகு' வித்தியாசமான முறையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றினூடு அன்றைய, இன்றைய ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறு, அப்போராட்டத்தின் உபவிளைவாக மீறப்பட்ட மானுட உரிமைகள் பற்றி, இன்னும் யாழ் சமுதாயத்தில் நிலவும் தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள் பற்றி விமர்சனத்தை முன்வைக்கின்றது.

த.மைதிலியின் அபஸ்வரங்கள் நல்லதொரு சிறுகதை. கமலாவும் அவள் கணவன் சுரேஷும் தொடர்மாடியொன்றில் வசிக்கும் சுரேஷின் நண்பனான ராஜனின் இருப்பிடத்திற்கு, ராஜனின் அண்ணன் ஊரில இறந்ததன் காரணமாகத் துக்கம் விசாரிப்பதற்காகச் செல்கின்றனர். கமலாவின் உடல்நிலை சரியில்லாதபோதிலும் அவள் நாகரிகம் கருதி, ஊர்ப்பேச்சுக்கஞ்சிக் கணவனுடன் செல்கின்றாள். ராஜனின் மனைவி புஷ்பாவுக்கு வாங்கிய புது வீட்டுக்குத் துடக்குக் காரணமாக பால காய்ச்ச முடியாதென்ற கவலை. அங்கு துக்கம் விசாரிக்க வந்த பாக்கியம் கொழும்பில் இருக்கும் தனது இரு வீடுகள் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்கின்றாள். ராஜன் தம்பதியினர் வீடு வாங்கியது பெரிய அதிசயமாகவும் அவளுக்கும் அவளது கணவன் சாமிநாதனுக்கும் பெரியதொரு மன உலைச்சலை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இதனை மையமாக வைத்துப் பின்னப்பட்ட சிறுகதை. மனித பலவீனங்களை, வீண்பெருமை பேசும் பண்பினை, 'இழவு' வீட்டிலும் ' 'உலையும்' மனதின் போக்குகளை விபரிக்கின்றது 'அபஸ்வரங்கள்'.

வ.ந.கிரிதரனின் 'வீட்டைக் கட்டிப்பார்' வீடு வாங்கி, அதனைத் தக்க வைப்பதற்காகப் போராடிச் சோர்ந்து, ஒதுங்கிவிடும் குடும்பமொன்றின் கதையினை விபரிக்கின்றது. அத்துடன் வீடு வாங்குதல், கடன் சுமை தீர்த்தல் போன்ற துறைகளில் பணிபுரியும் ஆலோசகர்களின் செயற்பாடுகளையும் விபரிக்கிறது. 'வாழ்வதற்காக வீடு!  வீட்டிற்காக வாழ்வு அல்ல' என்று சித்திரிக்கும் இச்சிறுகதை பலருக்கு நல்லதொரு பாடமாகவும் இருக்கக் கூடும். காலத்தின் அவசியமானதொரு பதிவு.

கவிதைகளில் தமிழ்நதியின் கவிதையான 'கப்பற் பறவைகள்' 'பனிப்பாலையில் இருபது கூதிர்களைக் கழித்த பின்னும் தணியாத ஞாபகத்தின் தகிப்பினைக் கூறுகிறது. விளைவு: 'அங்கேயுமில்லை; எங்கேயுமில்லை; எங்கேயுமில்லை'. திருமாவளவனின் 'கனாவரவம்' 'முள்ளிவாய்காற் பெருந்துயர் கடந்த' பெருந்துயர் பற்றிக் கூறும். 'போர் தவிர்த்து நீள நடந்து இருபது ஆண்டுகள் கழிந்தும்' கவிஞரை தப்பிப்பிழைத்த நினைவு கண் கொத்திப் பாம்பெனப் பின்தொடர்ந்து கனவுகளில் துரத்துகின்றது. இது போல் முள்ளிவாய்க்காலில் நிக்ழ்ந்த இறுதிப் போரில் தப்பிப்பிழைத்த குழந்தைகளையும் அவர்களது கனவுகளில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தக் 'கொடுங்கனவுப் பாம்புகள்' துரத்தப்போகின்றனவோ என்று கவிஞரின் மனம் வலி கொள்கிறது. கறுப்பியின் 'சூர்ப்பனகை' ஆவேசம் மிக்க பெண் விடுதலைக் குரலாக ஒலிக்கிறது. 'கவனம்! தீயாய்த் தகிக்குமுன் சொற்களில் என்னிரத்தம் கொதித்திருக்குமொருநாளில் சூர்ப்பனகையாகி என் விரல் கொண்டுனதுதலை கொய்தெறிவேன்' என்று எச்சரிக்கை விடுக்கிறது. 'புலம் இழந்த பூர்வீக குடிகளும், நானும் எனது முதலாளிகளும்' இவரது பணி அனுபவத்தை மையமாக வைத்து அவரது உணர்வுகளைக் கூறுகிறதென்று புரிந்து கொள்கின்றேன். 'இருத்தலுக்காய் வாழுமெனக்குள், இறந்து கிடந்தன வெஞ்சொற்கள்' என்ற அவரது வரிகளுக்கு அவ்விதமே அர்த்தம் கொள்கின்றேன்.

வீரகேசரி மூர்த்தியின் 'பிரசவவேதனைப் புதினம்' வாசித்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன். இவரது அங்கதம் கலந்த நடை மிகவும் சிலாகிக்கத்தக்கது. கனடாவில் இலவசப் பத்திரிகையாசிரியர்கள் சிலரைப்பற்றிய தனது அனுபவத்தை இக்கட்டுரையாகப் பிரசவித்துள்ளார் காவலூர் மூர்த்தி.  'அவர்கள் வெளியிடும் பத்திரிகைகளில் ஆணித்தரமான ஆசிரியத் தலையங்கம் இருக்காது. அறிவு பூர்வமான கட்டுரைகள் இருக்காது.  இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் அவர்களது அறிவுக்கு ஏற்ற வகையில் கடத்தல், கற்பழிப்பு, கொலை சம்பந்தமான செய்திகளையும் கொப்பி அடித்து வெளியிடுவார்கள். அத்துடன் தாம் கலந்து கொள்ளும் வைபவங்களில் சில பிரமுகர்களுடன் நின்று எடுத்துக்கொள்ளூம் தமது படங்களையும் முன்பக்த்தில் பெரிதாகப் பிரசுரிப்பார்கள்' என்று சாடும் வீரகேசரி மூர்த்தியின் கூற்று சிந்திக்கத்தக்கது. மேலும் 'மரண விளம்பரங்களை எடுப்பதற்காக மையப் பெட்டிக்கடைக்காரனைப் போன்று யாராவது சாகமாட்டார்களா என ஒரு பிரதம ஆசிரியர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்' என்றும் சாடுகின்றார்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் 'எட்டாவது சிகரம்' அமர்நாத் குகைக்குப் ப்யணித்த அமெரிக்கப் பெண் ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையில் அங்கு பயணிக்கும் பயணிகளால் பாவிக்கப்பட்ட பிளாஸ்டிக் குடுவைகளால் குப்பையாக வீசப்படும் மில்லியன் கணக்கான குடுவைகள் குவிந்து பல்தலைமுறை கடந்து இமயமலைத்தொடரின் எட்டாவது சிகரமாக மாறக்கூடுமென்று சூழல் பாதிப்பு பற்றி எச்சரிக்கை விடுக்கிறது. அத்துடன் போதிய கழிப்பிட வசதிகளற்ற நிலையினையும் விமர்சிக்கின்றது.

மேற்படி ஜீவநாதி: கனடாச் சிறப்பிதழின் முக்கியமான அம்சமாக எழுத்தாளர் க.நவத்தினுடனான நீண்டதொரு நேர்காணல் விளங்குகின்றது. மேற்படி நேர்காணலில் தனது இலக்கியப் பிரவேசம், தனது படைப்பாக்க முயற்சிக்கு ஊக்குவித்தவர்கள், ஈழத்திலும் கனடாவிலும் அவரது கலை, இலக்கியப் பங்களிப்பு, அவரை ஆசிரியராகக் கொண்டு, அவரே வெளியிட்ட 'நான்காவது பரிமாணம்' சஞ்சிகை பற்றிய அவரது அனுபவங்கள், புலம்பெயர் இலக்கியம் பற்றிய, அதன் எதிர்காலம் பற்றிய அவரது கருத்துகள், கனடாத் தமிழர்களின் ஒன்று கூடல்கள் பற்றி, கனடாத் தமிழ்ச் சமுதாயத்தினர் மத்தியில் நிலவும் சாதிய உணர்வுகள் பற்றி, நாடக மற்றும் திரைப்படங்களுக்கான அவரது பங்களிப்பு பற்றி, இவ்விதம் பல்வேறு விடயங்களைப் பற்றியும் மிகவும் சிந்திக்கத்தக்க, காத்திரமான பதில்களை அவரளிக்கின்றார். 'இப்பொழுதெல்லாம் கலை இலக்கிய விமர்சனங்களிலும், கட்டுரைகளிலும் கூடுதலான கவனம் செலுத்தி வருவதாக'க் குறிப்பிடும் நவம்   'கனடாவில் உள்ள குறிப்பான தமிழ் இலக்கிய ஆளுமைகள்' பற்றிக் குறிப்பிடும்போது 'கனடாவிலுள்ள அத்தனை படைப்பாளிகளும் ஏதோவொரு வகையில் தத்தமக்குள்ளே தமிழ் இலக்கிய ஆளுமைகளே' என்று தடடிக் கழிப்பது ஆச்சரியத்தினைத் தருகின்றது.

மொத்தத்தில் ஜீவநதி சஞ்சிகைக் குழுவினரின் மேற்படி 'கனடாச் சிறப்பிதழ்' முயற்சி பாராட்டுதற்குரியது. இது போன்று பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் இலக்கிய முயற்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையிலான மேலும் பல சிறப்பிதழ்களை அவர்கள் வெளியிட வாழ்த்துகள். மேற்படி கனடாச் சிறப்பிதழ் குறுகிய காலத் தயாரிப்பாக வெளிவந்ததால் பல இலக்கிய ஆளுமைகள் விடுபட்டுப் போயிருக்கின்றார்கள். இருந்தாலும் குறுகிய காலத்திற்குள் இவ்வளவு படைப்புகளைச் சேகரித்து இவ்விதமானதொரு சிறப்பிதழினை வெளிக்கொண்டுவந்தது பாராட்டுதற்குரியது. இதற்காக ஆசிரியர் கலாமணி பரணீதரனையும் , ஆசிரியர் மற்றும் ஆலோசனைக் குழுவினரையும் பாராட்டலாம்.

நன்றி: பதிவுகள் செப்டம்பர் 22, 2012