கவிதை: அ.ந.க

Thursday, 28 March 2013 01:27 - கவிஞர் ஏ.இக்பால் - அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
Print

[ ஏ.இக்பாலின் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய கவிதையொன்று அ.ந.க என்ற தலைப்பில் மல்லிகை சஞ்சிகையின் ஆகஸ்ட் 1969 இதழில் வெளிவந்திருந்தது. அதனை எமக்கு அனுப்பிய எழுத்தாளர் மேமன்கவி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி. - பதிவுகள்]

அறிஞர் அ.ந.கந்தசாமி
இன்று இலங்கையி லேறிப் பொலிந்திடும்
இலக்கியம் யாவினுக்கும்
நன்று தெளிவினை நாட்டிலாக்கிடும்
நற்றமிழ்ப் பத்திரிகைத்
தொண்டுட னேறிய தீரபுருஷராய்த்
திகழ்ந்து தமிழ் வளர்த்த
பண்டிதனல்லன்; பட்டமே பெற்றிடாப்
படித்தவன் கந்தசாமி.

சுயமுடன் சிந்தனை செய்துயர் சிருஷ்டிகள்
சோர்விலா தெழுதியவளி
நயமுடன் கவி, கதை, நாவல், விமர்சனம்
நாடகமாகியவை
வியனுறு புதுவித வொப்பியல் செய்வதில்
விண்ணனெனும் பெயரைப்
பயமிலாப் பெற்றவன்; புதுயுகமாக்கிய
பொற்புயர் கந்தசாமி.

எத்துறையாகினும் ஆழ்ந்துமே அறிந்தவன்
அளவொடு கூறுவதில்
உத்தம னென்பதால் ஈழத்தி லெங்கணும்
உயர்பெரும் புதுமையெல்லாம்
நித்த மெமக்குடன் நின்று வழங்கிய
நீண்ட விலக்கியங்கள்
அத்தனையு மின்று அச்சில் பதித்திட
ஆர்வமே காட்டிடுவீர்!

"அறிவு பெருகிய ஆண்மை யிலக்கியம்
அளித்திடும் கொடையுடையோர்
செறிவுடன் பல்துறை உருவமமைத்திடும்
செல்வமுடையவராய்
நெறிப்படுத்தி நின்று நிகழ்த்துதல் வேண்டுமாய்"
நிகழ்த்திய வல்லமையன்
நிறைவுடைச் சிருஷ்டிகள் நிறையவெழுதிய
நேர்மையன் கந்தசாமி.

நன்றி: மல்லிகை - ஆகஸ்ட் 1969

Last Updated on Tuesday, 02 April 2013 03:39