சிற்பியின் 'கலைச்செல்வி''கலைச்செல்வி' சஞ்சிகை ஈழத்தில் வெளிவந்த தமிழ்ச்சஞ்சிகைகளில் முக்கியமானதொரு சஞ்சிகை. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்னும் தாரக மந்திரத்துடன் , சிற்பி சரவணபவனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சஞ்சிகை அது. கலைச்செல்வி சஞ்சிகையை நினைத்தால் எனக்கு ஞாபகம் வரும் விடயம் என் மாணவப்பருவத்தில் அச்சஞ்சிகையின் ஓரிதழொன்றினை வாசித்த சம்பவம்தான். கூடவே அவ்விதழில் வெளியான சொக்கன் அவர்களின் சிறுகதையொன்றும் ஞாபகத்துக்கு வரும்.

அச்சிறுகதையின் கரு இதுதான்: தமிழ் ஆசிரியர் ஒருவரின் மகளுக்கு , அவரின் மாணவனொருவன் காதல் கடிதம் எழுதி விடுகின்றான். ஆனால் அந்தக் காதல் கடிதத்தை எழுதியவன் தன் மாணவனே என்பதை அவ்வாசிரியர் கண்டு பிடித்து விடுகின்றார். எப்படி? வழக்கமாக அவன் தமிழில் எழுதும் போது விடும் எழுத்துப்பிழையொன்றினை அந்தக் காதல் கடிதத்திலும் விட்டிருப்பான். அதிலிருந்து அந்த மாணவனை அத்தமிழாசிரியர் கண்டு பிடித்து விடுகின்றார்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் வாசித்த எழுத்தாளர் சொக்கனின் அச்சிறுகதையினை, இப்பொழுது நினைத்தாலும் இதழ்க்கோடியில் இலேசாக முறுவலொன்று ஓடி மறையும். காதல் கடிதம் பற்றிய தமிழ் வாத்தியாரான சொக்கனின் தமிழ் வாத்தியார் பற்றிய சிறுகதையை நினைக்குந்தருணங்களில் அது வெளியான 'கலைச்செல்வி' சஞ்சிகையும் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றது.

'கலைச்செல்வி' சஞ்சிகையின் சில இதழ்களை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்க முடிகிறது.

இவ்விதழ்களில் அறிந்து கொண்ட விடயங்கள் சில வருமாறு: இவ்விதழ்களில் புதுமைப்பிரியை (பத்மா சோமகாந்தன்), , எஸ்.பொ., வ.அ.இராசரத்தினம், சிற்பி சரவணபவன், மு.தளையசிங்கம், கவிஞர் நீலவாணன், கவிஞர் பரமஹம்சதாசன், தேவன் (யாழ்ப்பாணம்), ஆதவன், அ.க.சர்மா எனப்பலர் எழுதியுள்ளார்கள். [ஆதவன் என்னும் பெயரிலும் அக்காலகட்டத்திலும் ஒருவர் எழுதிக்கொண்டிருந்திருக்கின்றார்.]

'உனக்காகக் கண்ணே' என்னும் தலைப்பில் நாவலோன்றினைச் சிற்பி என்னும் பெயரில் சரவணபவன் அவர்கள் எழுதியுள்ளார். அ.க.சர்மா 'அணுவுள் ஓர் அதிசயம்' என்னும் தலைப்பில் அறிவியற் கட்டுரைத்தொடரொன்றினை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர்கள் 'எழுத்துலகில் நான்' என்னும் தலைப்பில் தம் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதையும் அறிய முடிகின்றது.

ஏப்ரில் / மே 1959 கலைச்செல்வி இதழில் 'வளரும் எழுத்தாளர் மலர்' என்னும் பகுதியில் இளம் எழுத்தாளர் சிலரை புகைப்படங்களுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளார்கள். 'யாழ்நங்கை' என்னும் பெயரில் எழுதும் அன்னலட்சுமி இராசையா அவர்கள் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி மாணவியாக இருக்கும் தோற்றத்திலுள்ள புகைப்படத்துடன் சிறு அறிமுகக்குறிப்பும் வெளியாகியுள்ளது. அதிலவர் கலைச்செல்வி இதழில் 'அன்னையின் ஆவல்' கவிதை, 'பெரியவன்' சிறுகதை எழுதிய விபரமும், தினகரனில் 'இசை இணைத்தது' சிறுகதை எழுதிய விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆசிரியையாகப் பணிபுரியும் செல்வி இராஜகுலதேவியின் 'சோமுவின் செய்மதி' என்னும் கதை கலைச்செல்வி சஞ்சிகையின் இரண்டாம் இதழில் வெளியான விபரம் அவர் பற்றிய அறிமுகக்குறிப்பில் வெளியாகியுள்ளது. மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவியான கெளரிசிவம் சிவசம்பு 'உமா' என்னும் பெயரில் 'உறுதி பிறந்தது' என்னும் சிறுகதையினைக் கலைச்செல்வி இதழில் எழுதிய விபரம் அவர் பற்றிய அறிமுகக்குறிப்பிலுள்ளது. யாழ்ப்பாணம் எவர்சில்வர் மாளிகையில் கடமையாற்றும் க.சுப்பிரமணியம் 'மணியம்' என்னும் பெயரில் 'பாடிக்களிப்பதெப்போ?' என்னும் கவிதையைக் கலைச்செல்வியில் எழுதியிருக்கின்றார். 'சுதந்திர'னில் இவர் பெயரை அடிக்கடி காணலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இணுவிலைச்சேர்ந்த பஞ்சாட்சரம் க்லைச்செல்வியில் 'காதலர்க்கு' என்றொரு கவிதையினை எழுதியிருக்கின்றார். வீரகேசரியிலும் சில கவிதைகளை எழுதியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் பின்னாளில் புகழ்பெற்ற கவிஞராக விளங்கிய ச.வே.பஞ்சாட்சரம் ஆக இருக்க வேண்டும்.கலைச்செல்வி போல் ஈழத்தில் வெளியான பல சஞ்சிகைகளை நூலகம் தளத்தில் வாசிக்க முடிகின்றது. சஞ்சிகைகளின் முழு இதழ்களையும் காண முடியாவிட்டாலும் சில இதழ்களையாவது காண முடிகிறது. இவ்விதமான கிடைக்கும் இதழ்களையாவது , இவ்விதழ்களில் எழுதியவர்களின்  படைப்புகளையாவது ஆய்வு மாணவர்கள் ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது ஆரோக்கியமான ஆவணப்படுத்தலாகவும், பதிவுகளாகவுமிருக்குமென்பேன். இவ்விதழ்கள் மூலம் அச்சஞ்சிகைகளில் எழுதிய ஆண்/பெண் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை, பல்வேறு வகையான புனைகதைகளை (நகைச்சுவை, மர்ம, அறிவியல் , வரலாறு மற்றும் சமூகப்புனைவுகள் பற்றி), கவிதைகள் பற்றியென்றெல்லாம் ஆய்வுகள் அமைவது நல்லதே.

கலைச்செல்வி இதழினை நீங்களும் வாசித்துப்பாருங்கள். முகவரி:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF