வாசிப்பும், யோசிப்பும் 269 : மாகவி நினைவாக...- வ.ந.கிரிதரன் -மகாகவி பாரதியாரின் நினைவு தினம் டிசம்பர் 11. நான் எங்கு சென்றாலும் நான் எடுத்துச் செல்லும் நூல்களில் நிச்சயம் 'பாரதியாரின் கவிதைகள்' அடங்கிய நூலுமிருக்கும். பாரதியின் அறிவுத் தேடல் மிக்க நெஞ்சு, சமுதாயப் பிரக்ஞை மிக்க நோக்கு எல்லாமே என்னை அவன் ஆகர்சிக்க முக்கிய காரணங்கள். மானுட இருப்பின் சகல கோணங்களைைப்பற்றியும் அவனது சிந்தித்தான். கனவுகள் கண்டான். அவற்றை அவன் எழுத்தில் வடித்தான். அனுபவமும், அறிவுத்தேடலும் அவன் எழுத்துகளெங்கும் நிறைந்திருந்தன. மானுடனொருவருக்குத் தேவையான அனைத்துமே அவனது எழுத்துகளில் நிறைந்திருந்தன. இதனாலேயே அவனது கவிதைகள் அடங்கிய தொகுதியானது வெறும் கவிதை நூலாக மட்டுமின்றி, வாழ்க்கைக்கு வழிகாட்டுமொரு வழிகாட்டியாக, அறிவினைப்போதிக்கும் அறிவு நிலையமாக, நண்பராக, காதலராக, இயற்கையை உபாசிப்பவருக்கு இன்பமளிக்கும் இயற்கை வளங்களாக.. இவ்விதம் பல்வேறு வழிகளில் விளங்கியது. எனக்கு மனம் சோர்ந்திருக்கும் சமயங்களில் அவனது கவிதைகளின் சில வரிகளை வாசிப்பேன். மறுகணமே சோர்வு இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.

எனக்கு முதன் முதலாகப் பாரதியுடனான அறிமுகமும், தொடர்பும் என்னுடைய ஆறாம் வகுப்பில்தான் ஆரம்பமாகியிருந்ததாக நினைவு. பாரதியாரின் கவிதைகள், ராஜாஜியின் 'சக்கரவர்த்தித் திருமகன்' (இராமாயணம்) , 'வியாசர் விருந்து' (மகாபாரதம்) மற்றும் புலியூர்த் தேசிகனின் 'சிலப்பதிகாரம்' , 'நற்றிணை' ஆகிய நூல்களை வாங்கி வந்திருந்தார். ஒருநாள் கூட அப்பா அவற்றை வாசித்துப் பார் என்று கூறியதில்லை. அவ்விதம் வாங்கிப்போட்டிருந்த நூல்களை அவ்வப்போது எடுத்து வாசிக்கத்தொடங்கியபோது எனக்கு அறிமுகமாகி, என்னுள்ளத்தில் வந்து குடியேறியவரே மகாகவி பாரதியா. அன்று வந்து குடியேறியவர் இன்று வரை மட்டுமல்ல நான் இருக்கும்வரை இங்குதான் தங்கியிருக்கப்போகின்றார்.

இவ்விதம் என் அபிமானக் கவி பாரதியின் எனக்குப் பிடித்த கவிதை வரிகள் சிலவற்றை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நான் பெற்ற இன்பம் நீவிரும் பெறுக!

1.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

2.
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

3.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

4.
தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!

5.
மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீயபக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே.

6.
இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!

7.
அச்ச மில்லை அமுங்குத லில்லை.
நடுங்குத லில்லை நாணுத லில்லை,
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்;

கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு;
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்

8.
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே

9.
நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைக்பொழுதுஞ் சோராதிருத்தல்-

10.
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
‘பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக!துன்பமும்,மிடிமையம்,நோவும்.
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம்
இன்புற்று வாழ்க’என்பேன்

11.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

12.
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

13.
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே

14.
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

15.
ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;

16.
அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;

17.
அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;

18.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

19.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ

20.
காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக்

நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்
போயின போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!-என்தன்
சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்

21.
பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;

22.
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

23.
நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்

24.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-

25.
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.

26.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

27.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்..

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
28.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.