கவிஞர் செழியன் ஆஸ்பத்திரியில் அனுமதி!கவிஞர் செழியனின் இறுதிச் சடங்கு குறித்த தகவல். இறுதி மரியாதைக்காக (நன்றி: பா.அ.ஜயகரன்)

Lotus Funeral and Cremation Inc ல்
121 City view Drive, Toronto, M9W 5A8
ஞாயிறு (04-02-2018) மாலை 5:00 - 9:00 மணி வரையும்
திங்கள் (05-02-2018) மாலை 2:00 -5:00 மணி வரையும் வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்

ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' பெப்ருவரி 3, 2018 அன்று அமரராகிய செய்தி துயர் தருவது. மானுட வாழ்வில் இத்தகைய இழப்புகள் தவிர்க்க முடியாதவையெனினும் , ஏற்படுகையில் தரும் துயர் தவிர்க்க முடியாதது. சமூகப் பிரக்ஞை மிக்க படைப்பாளியான கவிஞர் செழியனின் பலவகை எழுத்துகளும் அவரது ஆளுமையினை வெளிப்படுத்துபவை. நாடகம், கதை, கவிதை, கட்டுரையெனப் பன்முகப்பட்ட இலக்கியப்பங்களிப்பை வழங்கிய எழுத்துகள் அவை.அவர் தான் வாழ்ந்த மானுட வாழ்வில் வழங்கிய மானுடப்பங்களிப்புகளினூடு நிலைத்து வாழ்வார். இத்தருணத்தில் அவரது இழப்பால் துயருறும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..' (வானத்தைப் பிளந்த கதை) ...

"விமானம் ஓடு பாதையில் ஓடத்தொடங்கியது. வேகமாக .. ஓடி.. ஓடி..மெல்ல மெல்ல எழுந்து வானவெளியில் மிதந்தது. மலைகளே! கற்களே! மேகக் கூட்டங்களே! என் இனிய தேசமே... சென்று வருகிறேன். கண்ணீர் நிறைந்து வழிந்தது. சென்று வருகிறேன். என் ஜென்ம பூமியே! இங்குதான் பிறந்தேன். இங்குதான் வளர்ந்தேன். இப்போ பிரிய நேர்ந்ததே. வயல்களும், காடுகளும், மலைகளும் நிறைந்தன என் தேசம். தந்தையர் வாழ்ந்த தாய்த்திருநாடு. தந்தையும், தாயும் கூடிக் குலாவி வாழ்ந்த பொன்னாடு. விமானம் உயர உயரப் பறந்தது. என் தேசத்தில் இருந்து வந்த ஒளிக்கீற்றுகள் கண்சிமிட்டி விடை தருவதுபோல இருந்தது. இனிய தேசமே மறுபடியும் நான் வருவேன். மனிதன் எனும் இனம் எழுந்து வரும் நாளில் மறுபடி நான் வருவேன். ஒருவேளை என் முற்றாத கன்வுகளோடு முதிர்ந்த வயதில் ஏதோ ஒரு நாட்டில் ஒரு அகதியாய் அநாதைப் பிணமாய் பனிக்கட்டிகளுக்கு நடுவிலோ, இயந்திரங்களுக்கு அடியிலோ மரணித்துப் போகலாம். காற்றே, மரம், செடி, கொடிகளே என் தலைமுறை மறுபடி இங்குதான் வேர்விட்டு, இருதளிர்கரம் நீட்டி வளரும். என்புதல்வர்கள், அல்லது போனால் என் பேரர்களில் ஒருவர் வருவார்கள். இத்தாய்த் திருநாட்டை முத்தமிட வருவார்கள். இனிய தேசமே தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதும் தவறு செய்திருந்தால் தங்கள் கண்ணிரால் என் பாவங்களை இவர்கள் கழுவுவார்கள். தேசமே என்தலை முறையையாவது இங்கு வாழவிடு. விமானம் மேகக் கூட்டத்தினுள் புகுந்து தொலைந்து போனது."

எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு , புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி. 'ஒரு போராளியின் நாட் குறிப்பு', 'வானத்தைப் பிளந்த கதை', 'குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), 'ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை' (கவிதைத்தொகுப்பு) , 'அதிகாலையைத்தேடி (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது கவிதைகளின் மொழி என்னை மிகவும் கவர்ந்தது. சொற்களைத் தேர்ந்தெடுத்து இவர் செதுக்கும் கவிச்சிற்பங்களின் அழகில் நான் எப்பொழுதும் மனதைப்பறிகொடுப்பவன். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையின் வடுக்களைத்தாங்கிய இவரது எழுத்துகள் இலக்கியச்சிறப்பு மிக்கவை; முக்கிய ஆவணங்களும் கூட.  ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள் பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை 'ஒரு போராளியின் நாட் குறிப்பு' என்னும் 'தாயகம்' பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர்.

தனது 'குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள்' என்னும் கவிதைத்தொகுப்பின் முன்னுரைக்குறிப்பில் பின்வருமாறு எழுதினார்:

"மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல் பதினாறு திசைகளிலும் பரவுகின்றது. சோற்றுப் பானைக்குள் இருக்கும் பருக்கையை எண்ணுவதற்குள் குழந்தை செத்துக் கிடக்கின்றது. இரவையும் பகலையும் திருடிக் கொண்டு போய் விட்டார்கள். காற்று இடம் பெயர்கின்றது, பிண வாசனையை சுமந்து கொண்டு. சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு. வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும், வயல் வரம்புகளுக்குள்ளும் தொலைத்து விட்டு வந்து பனிப்புலங்களுக்கடியிலும் இயந்திரங்களுக்கிடையிலும் தேடியவர்களும் களைத்துப் போனார்கள். ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும் துடித்துக் கொண்டிருக்கின்றது நம்பிக்கை. கண்ணீரிலும், மூச்சிலும் கரைந்து பிரபஞ்சத்தின் முடிவிலி வரை எதிரொலிக்கின்றது. பூவரசம் காற்றைக் குடித்துக் கொண்டு, புழுதியைத் திரட்டிப் பூசிக் கொண்டு வாழ வேண்டுமென்ற ஆசை- மனிதனாக வாழ வேண்டுமென்ற ஆசை - மறுபடியும் மறுபடியும் கொழுந்து விட்டு எரிகின்றது. இறுதி மூச்சின் கடைசிச் சொட்டு காற்றிலும் இந்த நம்பிக்கை துடித்துக் கொண்டு தான் இருக்கும். - அன்புடன் - செழியன்"