அம்மா: நவரத்தினம் டீச்சர்.அம்மாவை ('நவரத்தினம் டீச்சர்') நினைத்ததும் நினைவுக்கு முதலில் வருவது குடும்பத்துக்கான அவரது அர்ப்பணிப்புத்தான். வவுனியாவில் அவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றிய சமயம் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த அந்தக்காலம்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். சமையல் அனைத்தையும் (காலை, மதியம்) சலிக்காமல் செய்வார். எங்கள் எல்லாருக்கும் மதிய உணவை வாழை இலையில் வைத்துக்கட்டி எடுத்து வருவார். சில நாள்களில் வெள்ளிப்பாத்திரங்களாலான உணவுத்தூக்கியில் மதிய உணவை எடுத்து வருவார். மதிய உணவைப் பாடசாலையில் ஒன்றாக இருந்துதான் உண்போம். மறக்க முடியாத பசுமையான நினைவுகள் அவை.

ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல , ஆண்டுக்கணக்காய் , காலையில் உதிக்கும் சூரியனைப்போல் அலுக்காமல், சலிக்காமல் இவ்விதமே அதிகாலையில் எழுந்து , நீராடி, உணவு சமைத்து, எல்லாருக்கும் உணவை வாழையிலைப் பொதிகளாக அல்லது வெள்ளியாலான உணவுத்தூக்கியில் எடுத்து வருவதை எப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பும், அவரது அர்ப்பணிப்பு மிக்க அன்பினை எண்ணிப் பெருமிதமும் ஏற்படும்.

அதிகாலைகளில் அப்பொழுதெல்லாம் அவருடன் கூடத்தான் செல்வோம். வயல்களும், வனங்களும், குளங்களும் மலிந்த வவுனியாவின் தெருக்களினூடு அதிகாலைகளில் அவ்விதம் நடந்து செல்வதே நெஞ்சில் பசுமரத்தாணியாகப்பதிந்து விட்ட அனுபவம்.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாக எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி செல்வார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் 'என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்' என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் 'இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்' என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் 'வாயெல்லாம் பல்'. :-) இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

என் பதின்ம வயதுகளில் சில வேளைகளில் எனக்கு உடல் பலவீனமடைந்துவிடும் சமயங்களில் கால் மூட்டுகளில் நெறி பிடித்து நடக்க முடியாமல் வருவதுண்டு. அப்பொழுதெல்லாம் விட்டமின் 'பி'யும், அஸ்பிரினும் எடுத்ததும் உடல் நிலை சீராகி விடும். ஆனால் வெளிநாடு வந்தபிறகு இதுவரை அவ்விதமான நிலை வரவேயில்லை. அதற்குக் காரணம் நாள்தோறும் நான் 'மல்ட்டி விட்டமின்' எடுப்பது காரணமாகவிருக்கலாம். அப்பொழுதெல்லாம் கால்களைப் பிடித்து விடுவார். இப்பொழுது நினைத்தாலும் சிறிது நேரம் கலங்காத நெஞ்சமும் கலங்கி விடுவதுண்டு.

இன்னுமொரு விடயமும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. பல்கலைக்கழக நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் வீடு திரும்புவேன். அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்த காலம். அம்மா அராலி இந்துக்கல்லூரியில் படிப்பித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராமல் நான் வந்ததைக்கண்டதும் அவர் அடையும் மகிழ்ச்சியைப்பார்க்க வேண்டுமே.. அங்கிருக்கும் அடுத்த சில தினங்களும் எனக்குப்பிடித்த இட்லி, தோசையென்று ஆக்கிப்போட்டுத் திக்கு முக்காட வைத்து விடுவார். பின்னர் மீண்டும் அதிகாலையொன்றில் காலை யாழ்தேவியை எடுப்பதற்காக மீண்டும் பல்கலைக்கழகம் திரும்புவேன். அன்றும் அதிகாலை நேரத்துடன் எழுந்து வழியில் உண்பதற்காக உணவு வகைகளை ஆக்கிக் கட்டித்தருவார். வீட்டை விட்டு வெளியில் கால் வைக்கும்போது, பின்னால் கலங்கிய கண்களுடன் விடை தரும் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் செல்வேன். எனக்குத்துணையாக பஸ் தரிப்பு வரை போடும் உணவுக்கு நன்றியாக வீட்டை அண்டி வாழும் ஞமலி (நாய்) துணைக்கு வரும். அந்த அதிகாலைக்கருக்கிருளில் தலை விரித்தாடிக்கொண்டிருப்பர் பனைப்பெண்கள். அந்த அதிகாலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.



மோடியின் இலங்கைப் பயணமும், முள்ளிவாய்க்கால் படுகொலையும், மே மாதமும், மகிந்த பற்றிச் சில சிந்தனைகள்...

வ.ந.கிரிதரன்இந்தியப்பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் நாட்டு அரசியல் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புகளிலொன்றுதான். ஆனால் அந்தச்சந்திப்புக்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கின்ற காலம்தான் துரதிருஷ்ட்டமானது. தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த மே மாதத்தை அவர் தேர்ந்தெடுத்ததுதான் துரதிருஷ்ட்டமானது. மோடியின் இலங்கைப் பயணம் தமிழர்களின் மன உணர்வுகளைக் கவனத்திலெடுத்துக்கொள்ளவில்லையென்பதையே இது காட்டுகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குக் காரணமான முன்னாள் ஜனாதிபதியையும் அவர் சந்திக்க இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசு புரிந்து கொள்வதேயில்லை. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்றோர் ஆட்சியில் இருந்தபோது இலங்கைத்தமிழர்கள் சார்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் ராஜிவ் படுகொலையின் பின்னர் அந்த நிலையும் மாறியது.

இந்தியத்தலைவர்களில் ஈழத்தமிழர்களின் நியாயமான உணர்வுகளுக்காகக் குரல் கொடுத்ததுடன், செயற்பட்டவர்களில் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் முதன்மையானவர்கள் என்பது என் கருத்து. ஆனால் ராஜிவ் காந்தி காலத்தில் இந்தியப்படையினருக்கும், விடுதலைப்புல்களுக்குமிடையிலான மோதல்கள் துரதிருஷ்ட்டமானவை. பின்னர் அம்மோதல்களின் எதிர்விளைவுகளே ஈழத்தமிழர்களின் தலைவிதியை மாற்றக் காரணங்களாக அமைந்தன.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னால் நின்ற சர்வதேசச் சக்திகளில் இந்தியாவும் முக்கியமானது.

இன்று இந்தியாவில் மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கட்டிலிருக்கிறது. மோடியைப் பொறுத்தவரையில் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் போன்றே கருதிச் செயற்படுவதாகத் தெரிகிறது. யுத்த முடிவுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்சவின் அரசு சீனச்சார்பு நிலை எடுத்து இந்திய மத்திய அரசைப் பணிய வைத்துக் காரியமாற்றும் நிலையை எடுத்திருந்தது. அதற்கு விலையாக அனைத்துச் சர்வதேசச்சக்திகளும் ஒன்றிணைந்து ( சீனா தவிர்ந்த) மகிந்த ராஜபக்சவின் அரசையே இல்லாதொழித்து விட்டன. இன்று இன்றைய அரசின் ஆட்சியில் இந்தியாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இலங்கை இருக்கின்றது. சீன ஆதிக்கம் என்ற பேச்சே இல்லை.

ரஜனி இலங்கைக்குப் புறப்பட முனைந்தபோது எதிர்க்குரல் கொடுத்துத் தம் அரசியலில் ஆதாயம் பெற முனைந்த தமிழகத்துப் பச்சோந்தி அரசியல்வாதிகள் மோடியின் பயணத்தைக் கண்டும் காணாமல் ஓடி ஒளிந்து விட்டார்கள்.
எதிர்ப்புக்குரல் பலமாகக்கொடுத்துப் பலமான எதிர்ப்பினைக் காட்டியிருந்தால் ஒருவேளை மோடியைத் தமிழர் பிரச்சினை பற்றி அழுத்தமாக இலங்கை அரசுடன் பேச வழி வகுத்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

கோடிக்கணக்கில் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தும் தமிழர்களின் நியாயமான உணர்வுகள் தொடர்ந்தும் இந்திய அரசினால் புறக்கணிக்கப்பட்டே வருவதையே அவதானிக்க முடிகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.