பொ.ஐங்கரநேசன்

வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பற்றிச் சில நினைவுகள்.....

அண்மைக்காலமாக இலங்கையின் வட மாகாணசபையில் இடம் பெற்று வந்த கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான இழுபறியினைத்தொடர்ந்து, மாகாண சபை அமைச்சர்களிருவர் மீதான ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரையின்பேரில் அமைச்சர்களிலொருவரான இலங்கை, வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதுவரையில் இந்த இழுபறி பற்றித் தமிழ் ஊடகங்களில் ஆய்வாளர்கள் (?) ஆளுக்காள் தமது கருத்துகளைத்தெரிவித்துக்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அளித்த விளக்கங்களுக்கான காணொளிகளையும், வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற அவரது தன்னிலை விளக்கத்துக்கான காணொளியினையும் பார்த்தேன்: கேட்டேன்.

இவற்றிலிருந்து நான் புரிந்தவை எவையென்றால்... அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீருபிக்காத விசாரணக்குழு அவர் பதவி விலக வேண்டுமென்று முடிவு செய்திருக்கின்றது. இது அமைச்சரின் குற்றச்சாட்டு. அடுத்தது அவர் முதல்வர் விக்கினேஸ்வரன் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையையும் வைத்திருப்பதையும் அறிய முடிகின்றது. இலங்கை மத்திய அரசால் அதன் எண்ணங்களுக்கேற்ப ஆடுவாரென்று ஆரம்பத்தில் கருதப்பட்ட முதல்வர் பின்னர் மக்களின் துயரங்களை நேரில் கேட்டுப்பின்னர் சுதந்திரமாகத் தமிழ் மக்களுக்காகச் செயற்படத்தொடங்கிவிட்டாரென்றும், அதனால் அதிருப்தியுற்ற இலங்கை மத்திய அரசின் சதியே கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான பிளவுகளுக்குக் காரணமென்றும், முதல்வரை நீக்குவதே இலங்கை மத்திய அரசின் நோக்கமென்றும் அமைச்சர் ஐங்கரநேசனின் உரையிலிருந்து ஊகிக்க முடிகின்றது. ஏற்கனவே இவ்வகையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் சிலரைக்கொண்டுள்ள விசாரணக்குழுவின் மீது அமைச்சர் சந்தேகம் மிக்கவராக இருப்பதையும் ஊகிக்க முடிகின்றது. மேலும் தன்னைச்சந்தித்த முதல்வர் வடக்கு மாகாண சபையினைக்காப்பதற்குப் பதவி விலகித்தியாகம் செய்யுமாறு கேட்டதன அடிப்படையிலேயே தான் பதவி விலக முன்வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது அமைச்சர் ஐங்கரநேசன் யாரோ சிலரின் நோக்கங்களுக்காகக் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளாரோ என்று ஐயப்படத்தான் முடிகின்றது. குற்றச்சாட்டுகள நிரூபிக்கப்படாத நிலையில் அமைச்சர் பதவி விலகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் முதல்வரின் 'தியாகம் செய்யும்' வேண்டுகோளினை ஏற்றுத் தியாகம் செய்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. அதே சமயம் அவர் தன் மேல் ஏற்பட்டுள்ள கறைகளைத் துடைக்கவும் தீர்மானித்திருக்கின்றார். அதனையே அவர் செய்யத்தீர்மானித்திருப்பதையே அவரது பத்திரிகையாளர் சந்திப்பும், தன்னிலை விளக்கமும், மக்களுடனான சந்திப்பும் விளக்கி நிற்கின்றன.

அமைச்சர் ஐங்கரநேசன் பற்றி எண்ணியதும் எனக்கு என் மாணவப்பருவத்து நினைவுகள் சில ஏற்படுவதைத்தவிர்கக முடியாது. என்னுடன யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பில் படித்த சக மாணவர்களிலொருவரே பொ.ஐங்கரநேசன். அப்பொழுதும் வகுப்பு வருகை தந்திருக்கும் மாணவர்களை அழைக்கும்போது வகுப்பாசிரியார் பொ.ஐங்கரநேசன் என்றே அழைத்ததாக ஞாபகம். அதனால் என் நினைவில் பொ.ஐங்கரநேசன் என்றே எப்பொழுதும் அவரது பெயர் நினைவுக்கு வரும். பின்னர் நாங்கள் ஆளுக்காள் வேறு வேறு திசைகளில் காலத்தின் ஓட்டத்தில் அள்ளுப்பட்டுச் சென்று விட்டோம். ஆனால் அவர் கந்தர்மடத்தில் டியூசன் வகுப்புகளை நடாத்திய காலகட்டத்தில் அவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். புகழ்பெற்ற டியூசன் மாஸ்டர்களிலிலொருவராக அவர் விளங்கினார்.

அதன் பின்னர் நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டது அவரது புகழ்பெற்ற சூழற்பாதுகாப்பு பற்றிய நூலான 'ஏழாவது ஊழி' என்னும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோதுதான். தமிழில் வெளியான மிகச்சிறந்த சூழற்பாதுகாப்பு பற்றிய நூல்களிலோன்றாகவும், இலங்கையில் வெளியான மிகச்சிறந்த சூழற்பாதுகாப்பு பற்றிய தமிழ் நூலாகவும் அந்நூலை நான் கணிப்பிடுவேன் (என் அறிவுக்கேற்ப). அந்நூல் பற்றிப் 'பதிவுகள்' இணைய இதழில் விரிவான விமர்சனமொன்றும் எழுதியிருக்கின்றேன் 'ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி' என்னும் தலைப்பில். அதனைப்பின்வரும் இணைய இணைப்பில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1645:-25-&catid=7:2011-02-25-17-30-18&Itemid=28

அதன் பின்னர் அவரைப்பற்றி அறிந்தது வடக்கு மாகாண சபைக்கு அவர் போட்டியிட்டபோதுதான். 'ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்' பரிந்துரையின்பேரில் அவர் போட்டியிடுவதாக அறிந்தேன். அக்காலகட்டத்தில் என்னுடன் யாழ் இந்துவில் என் வகுப்பில் படித்த பலர் பல்வேறு விடுதலை அமைப்புகளில் இணைந்து பின்னாளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கின்றார்கள். இவ்விதம் நண்பர்கள், என்னுடன் படித்த சக மாணவர்கள் பலர் பல்வேறு விடுதலை அமைப்புகளில் செயற்பட்டிருக்கின்றார்கள். இதனால் எப்பொழுதுமே என்னால் அமைப்புகள் தமக்கிடையிலான முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக்கி, ஆயுதங்கள் மூலம் தீர்க்க முனைந்ததை ஆதரிக்க முடிந்ததில்லை. நட்புரீதியிலான முரண்பாடுகளாக அவை கையாண்டிருக்கப்பட வேண்டுமென்பதே என் ஒரே முடிவான எண்ணமாக எப்பொழுதும் இருந்தது. அதனால் எப்பொழுதுமே பல்வேறு தத்துவ முரண்பாடுகளைக்கொண்ட அமைப்புகளின் தோழர்களுடன் மோதலற்றுப் பழக , விவாதிக்க முடிந்திருக்கின்றது.

இதன் பின்னர் அவர் என்னுடன் முகநூல் நண்பர்களிலொருவராக இணைந்தபோது அவரது முகநூற் பதிவுகள் மூலம் மேலும் பல அவரது செயற்பாடுகளை அறிந்து கொண்டேன்.

பின்னர் பொ.ஐங்கரநேசன் வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது உண்மையிலேயே சூழலியலாளரான , பொருத்தமான ஒருவருக்கு அப்பதவி கிடைத்திருக்கின்றது என்று கருதினேன். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இன்றைய நிலை சிறிது ஏமாற்றத்தைத்தந்தாலும் அவர் தன் நிலை விளக்கத் தமிழ் மக்களுடன், தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்புகள், அச்சந்திப்புகளில் அவர் ஆற்றிய தெளிவான உரைகள் , பிரச்சினைகளைக் கண்டு பணிந்து, ஓடி , ஒளிந்து விடாது அவற்றைத் துணிவாக எதிர்கொள்ளும் அவரது செயற்பாடுகள் ஆரோக்கியமானவை என்பதென் கருத்து. இவற்றின் மூலம் தன் மீது படிந்துள்ள கறைகளை நீக்கி, எதிர்காலத்தில் மக்கள் ஆதரவுடன் தமிழர்தம் அரசியலில் முன்னுக்கு வருவாரென்று கருதுகின்றேன்.

அவரது 'ஏழாவது ஊழி' நூல் பற்றிய எனது விமர்சனத்தில் நான் எழுதியிருந்த பின்வரும் 'பந்தி'யினை மீண்டுமொருமுறை இங்கு பதிவு செய்கின்றேன்:

"தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய 'ஏழாவது ஊழி' நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

சூழலியலை வெறும் அறிவியற் துறையாக மட்டும் ஐங்கரநேசன் கருதவில்லை. அதனை 'இயற்கையில் தோய்ந்து அதனொரு அங்கமாக, அனுபவித்து வாழுமொரு வாழ்க்கையாகவே' கருதுகின்றாரென்பதை நூலின் முன்னுரையிலுள்ள அவரது பின்வரும் கூற்று புலப்படுத்துகின்றது:

" சூழலியல் வெறுமனே கல்வி அல்ல. அது வாழ்க்கை. இரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஒரு அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல். சூழலியல் குறித்து இவ்வாறுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் அபிவிருத்தியின் பெயரால் காடுகள் அழிக்கப்படும்போது, எனக்கு வலிக்கிறது. காற்றில் குவியும் கரிப்புகை எனக்குச் சுடுகிறது. உயிர்ப்பல் வகைமையில் அழியும் ஒவ்வொரு உயிரினமும் என்னை அழ வைக்கிறது. உடையில் , உணவில், அருந்தும் பானத்தில், மொழியில் பல்லினத்துவத்தை நிராகரிக்கும் உலகமயமாக்கலின் போக்கு என்னைக் கோபப்படுத்துகிறது. பெரும்பான்மையின் பெயரால் எனது நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை."


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.