முனைவர் இ.பாலசுந்தரம்முனைவர் இ.பாலசுந்தரத்தின் 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்' நூல் முனைவர் இ.பாலசுந்தரத்தின் 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்' நூல் வெளியீடு இன்று, ஜூலை 16, 2017, பெரிய சிவன் ஆலயக் கலாச்சார மண்டபத்தில் ,  சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம் (ரொறன்ரோ) ஆதரவில் நடைபெற்றது.  மண்டபம் நிறைந்து வழிந்த நூல் வெளியீடு எனலாம். கனடா எழுத்தாளர் இணையத்தலைவர் சின்னையா சிவனேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் அடிகள், கனடாத்தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் இளையபாரதி, இளமாறன் பாலசுந்ததரம், குமரகுரு, முன்னாள் யாழ் பல்கலைக்கழகப்பெண் விரிவுரையாளர் (பெயர் சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை) எனப் பலர் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள். அதனைத்தொடர்ந்து மேடையிலிருந்து நூலாசிரியரான பேராசிரியர் பாலசுந்தரத்திடமிருந்து ஒவ்வொருவரும் வரிசையில் நின்று , சென்று நூலைப்பெற்றுக்கொண்டார்கள்.

இது வித்தியாசமான நடைமுறை. வழக்கமாக நூலின் சிறப்புப் பிரதிகளைக் குறிப்பிட்ட சிலர் (பொதுவாக வர்த்தகர்கள் போன்ற சிலர்) பெற்றுக்கொள்வார்கள். அதனைத்தொடர்ந்து சபையோர் நூலை அரங்கின் முன்னாள் அமர்ந்திருக்கும் ஒருவரிடமிருந்து  வாங்கிக்கொள்வார்கள்.  நூலைப்பெற்றுக்கொண்ட ஒவ்வொருவருடனும் நூலாசிரியரும், மனைவியாரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இவ்விதமானதொரு நடைமுறையினை எதிர்பார்த்துப் பலர் சென்றிருக்கவில்லை. நானும்தான். அங்கிருந்த ஒருவரிடமிருந்து தபால் உறை வாங்கி, இன்னுமொருவரிடம் பேனா கடன் வாங்கி , உறையினுள் பணத்தை வைத்துக்கொடுத்தேன். இவ்விதமான நடைமுறையில் நூல்கள் விற்கப்படுவதாக இருந்தால், நிகழ்வு பற்றிய அறிவித்தலிலேயே இது பற்றி அறிவித்தால் அது நிகழ்வுக்கு வருபவர்கள் போதிய ஆயத்தங்களுடன் வருவதை இலகுவாக்கும். இருந்தாலும் இவ்விதமான நடைமுறையிலுள்ள நன்மைகளிலொன்று நூலாசிரியருடன் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுக்க முடிகின்றது என்பதுதான்.

நிகழ்வில் பேசிய அனைவருமே நூலின் முக்கியத்துவம் பற்றியும், இதற்காகப் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் மேற்கொண்ட கடும் உழைப்புப் பற்றியும் போற்றிப்பேசினர். நிகழ்வுக்குத்தலைமை வகித்த எழுத்தாளர் சின்னையா சிவனேசன் அவர்கள் நூலின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டதுடன், பல்துறைகளையும் பல்லூடகங்களையும் சார்ந்த பலர் நிகழ்வுக்கு வந்திருப்பதையும், அரங்கு நிறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி இதுவும் வரலாற்றில் இடம் பெறப்போகின்றது என்றார். நிகழ்வில் உரையாற்றிய பெண்மணி இந்நூலை அனைவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களது குழந்தைகளுக்கும் வாசித்துக்காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். 24 மணி நேர வானொலி புகழ் இளையபாரதி தனதுரையில் ஒவ்வொரு துறைசார்ந்தவர்களையெல்லாம் சந்தித்து நூலாசிரியர் தகவல்களைத்திரட்டியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார். மருத்துவர் யோசப் என்பவர் மட்டும், சபையில் பேச வேண்டிய பொருளை விட்டுவிட்டு , சபையோரைச் சந்தோசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிவியல்ரீதியில் கனடாவில் இருக்கக் கூடிய தமிழ்ச்சமுதாயம் பற்றி நிறையவே கனவுகள் கண்டார். அவர் தன் உரைக்குத் துணையாக அறுபதுகளில் எழுத்தாளர் சுஜாதா எதிர்வு கூறித் தற்போது நடைபெற்றுள்ளதாக சில விடயங்களையும் மேற்கோள் காட்டினார்.

நூலைபொறுத்தவரையில் மேலோட்டமாகப்பார்த்தபொழுது  நூல் உள்ளடக்கிய விடயங்கள் நூலின் சிறப்பை எடுத்துரைத்தன.  கனடாத்தமிழர் வருகை - ஒரு வரலாற்று நோக்கு, கனடாவிற் புதிய குடிவரவாளருக்கான கல்வி, கனடாவிலே தமிழ் மொழியின் நிலை, கனடாவில் தமிழ்ப்பண்பாடும் பண்பாட்டுப் பேணலும்..., கனடாத் தமிழ் இலக்கியமும் தமிழியல் ஆய்வுகளும், கனடாத் தமிழர் அறிவியல், பொருண்மிய மேம்பாடு.., கனடாத் தமிழ் ஊடகங்களின் இயங்குநிலை, கனடாத் தமிழர் அரசியற் செயற்பாடுகள், முதியோர் வாழ்வியலும் தலைமுறை இடைவெளியும், கனடாவிற் கலை , இலக்கிய பண்பாட்டு மன்றங்கள் மற்றும் நிறைவுறை , பின்னிணைப்புகள் என நூல் பதினொரு அத்தியாயங்களையும், பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.

நூலுக்கு மதிப்புரையினைப் பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் அவர்களும், முகவுரையினை நூலாசிரியர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களும் எழுதியிருக்கின்றார்கள். நூலினைச் சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம் (ரொறன்ரோ) வெளியிட்டுள்ளது.

- முனைவர் இ.பாலசுந்தரத்தின் 'கனடாத்தமிழர் வாழ்வும், வரலாறும்' நூல் வெளியீட்டில்.. -

வரலாறுகள் எப்பொழுதும் பக்கச்சார்பின்றிப் பதிவு செய்யப்பட வேண்டியவை. ஈழத்தமிழர்களின் வரலாறு முறையாகப் பதிவு செய்யப்படாமையால் ஏற்பட்டுள்ள நிலைமையை யாவரும் அறிவர். கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் முதன் முறையாக மாதகல் மயில்வாகனப்புலவர் அவர்களால் 'யாழ்ப்பாண வைபவமாலை' என்னும் நூல் எழுதப்பட்டுள்ளது. அதிலும் கூட பல தவறான வரலாற்றுத்தகவல்கள் (கால மற்றும் பெயர் மயக்கங்களுடன் கூடிய) இருப்பதைக் காண்கின்றோம். ஆனால் அந்த நிலை இன்று ஓரளவு மாறி வருவதைக் காண முடிகின்றது. ஈழத்தமிழர்தம் அண்மைக்கால வரலாறு பல்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டு வருவது பாராட்டத்தக்கது. அந்த வகையிலேயே கனடாத்தமிழர் வாழ்வு பற்றிய இந்த வரலாற்று நூலையும் பார்க்கின்றேன்; வரவேற்கின்றேன். இது போல் புகலிடம் நாடிப் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ள தமிழர்கள் தம் வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் பேராசிரியர் இ.பாலசுந்தரத்தின் இந்த நூல் ஒர் அரிய வரலாற்றுப் பங்களிப்பு என்பேன். வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்ற , வரலாறு பற்றிய ஆவணப்பெட்டகம் இது. அதனைத்தான் நூலின் உள்ளடக்கம் எடுத்தியம்புகின்றது.

நூலை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாகத்தான் பார்த்தேன். முழுமையாக , விரிவாக வாசித்தபின் இந்நூல் பற்றிய விரிவான என் பார்வையினைப் பின்னர் 'பதிவுகளில்' எழுதுவேன். நூலில் சிறு தவறுகள் இருக்கலாம். சிலர் , சில விடயங்கள் விடுபட்டுப்போயிருக்கலாம். அவையெல்லாம் எதிர்காலப்பதிப்புகளில் அல்லது இந்நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் கனடாத் தமிழர் வரலாறு பற்றிய நூல்களில் திருத்தப்படலாம். ஆனால் அவற்றுக்காக இந்நூலின் முக்கியத்துவம் குறைந்து விடப்போவதில்லை. கனடாத் தமிழர் வாழ்வு பற்றிப் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. எனது கட்டுரையொன்று கூட , ஆழி பப்ளிஷர் (தமிழகம்) வெளியிட்ட 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரில் 'கனடாத் தமிழரின் வாழ்வும் , வளமும்' என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவே முதன் முறையாக . விரிவாக, வெளிவந்த கனடாத் தமிழர் வரலாறு பற்றிய வரலாற்று நூல். அந்த வகையில் இது ஒரு முதனூல் கூட.

அத்துடன் நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக நூலாக வெளிவரும் அளவுக்கு ஆய்வுச்சிறப்பையும், பக்கங்களையும் கொண்டவை. உதாரணத்துக்கு கனடாத்தமிழர் இலக்கியம் பற்றிய பகுதி மட்டும் தொண்ணூறு பக்கங்கள் வரையில் நீண்டது குறிப்பிடத்தக்கது.

நூலின் அட்டை பற்றி.. அட்டையில் தமிழர் அடையாளங்களை முதன்மைப்படுத்தியும், கனடா அடையாளங்களையும் உள்ளடக்கியதாகவும் ஓவியம் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். தற்போதுள்ள அட்டை கனடாவைப்பற்றி மட்டுமே வெளிப்படுத்துகின்றது. அதனால் முதற்பார்வையில் கனடா பற்றிய நூலாகவே இதனைப் பார்ப்பவர்கள் கருதுவர். இதற்குப் பதிலாகத் தமிழர் அடையாளங்களையும், கனடிய அடையாளங்களையும் உள்ளடக்கியதாக அட்டைப்பட ஓவியம் அமைந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரை குரு அரவிந்தன் தம்பதியினர், தமிழன் வழிகாட்டி செந்தில், 'உதயன்' லோகேந்திரலிங்கம் மற்றும் எழுத்தாளர் அகில், கவிஞர் தீவம இராஜலிங்கம், கவிஞர் வி.கந்தவனம்.'கரம்பன்.காம்' மோகன்  என்று பலரைக் காண முடிந்தது. எழுத்தாளர் குரு அரவிந்தன் அண்மையில் 'சொப்கா' வெளியிட்ட பெண் எழுத்தாளர்கள் சிலரின் சிறுகதைத்தொகுதியான 'நீங்காத நினைவுகள்' நூலினைத்தந்தார். நன்றி குரு அரவிந்தன்.


மொத்தத்தில் சிறப்பாக நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வுகளிலொன்று இந்நூல் வெளியீட்டு நிகழ்வு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.