மே 8  - அன்னையர் தினம்!

'அன்னையர் தினக்கவிதை': அகத்தில் வைத்துப் பூசிப்போம்

பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார்   !

தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
ஊனுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

உச்சிமுகர்ந்திடுவாள் ஊரார் கண்படா  வண்ணம்
குட்டியாப் பொட்டுவைப்பாள் குளிவிழும் அக்கன்னமதில்
கட்டியணைத் தணைத்து கற்கண்டே  எனவிழித்து
தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !

ஏங்கித்  தவிக்கும்தாய்  இதையெல்லாம் எண்ணுகின்றாள்
எதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை
தூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்
துரையாக வாழ்ந்துகொண்டு தூரவைத்தான் தாயவளை !

தாயவளோ  காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்
தாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது
தவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்
தாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ !

அன்னைதனை அரவணையார் அகமகிழ வாழார்கள்
அன்னையவள் அடிதொழுவார் அனைத்துமே பெற்றிடுவார்
அன்னையது கண்ணீரால் அனைத்துமே அற்றுவிடும்
அன்னையவள் தினமதனில் அவளாசி பெற்றுநிற்போம் !

ஆர்மனதும் நோகாமல் வாழ்ந்துவந்த அன்னையவள்
ஆருமற்ற வெறுமையிலே அழவிடுதல் முறையாமோ?
அன்னைதினம் கொண்டாடும் அனைவருமே கேளுங்கள்
அன்னையது மனம்மகிழ அகத்தில்வைத்துப் பூசிப்போம் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.