கவிதை வாசிப்போம் வாருங்கள்!

1.உத்தரிக்கும் இரவு.

அசமந்தமாக நகரும்

சரக்கு ரயிலாக

எரிச்சலூட்டியபடி

நீளுகின்றது இரவு.

கடைசிக் கையிருப்பும்

முடிந்து போன

அந்தரிப்பில்

முழித்துக் கிடக்கிறது

உறக்கமற்ற விழிகள்.

தீர்ந்து போன

சக்கரை டப்பாவில்

மீதமிருக்கும்

கனவுகளை சேகரிக்கிறது

தவித்துப் போன மனது.

 

மக்கிப் போகாத

குப்பையில் நெளியும்

நினைவுப் புழுக்கள்

மொய்த்துக் கிடந்து

மூளையை தின்னுகின்றன.

தெருவோரக் குடிகாரனை

அப்புறப்படுத்தும்

காவலாளியின்

தீவிரத்துடன்

கண்களில் குத்துகிறது

காலைச் சூரியன்.

ஓ....

ஒரு இரவைக் கடப்பதற்குள்

ஒரு மாமாங்கத்தின்

உத்தரிப்பு.


 

2.ஒரு தேவதையின் கனவு.

எண்ண இழைகளை

வானவில்லின்

நிறங்களில் தோய்த்து

கனவு நெய்கிறாள்.

சூரியனைப் பொடியாக்கி

தங்க ஜிகினாத்

துகள்களால் பட்டாடையின்

பூக்களை

வரைகிறாள்.

விண் மீன்களைப்

பொறுக்கியெடுத்து

முந்தானையின் முத்துக் குஞ்சரமும்

அகலச் சரிகையும்

ஆசையுடனே

இழைக்கிறாள்.

முகில்களின் முதுகுகளின்

இந்தத் தேவதையின்

வஸ்த்திரமும் இணையாக

உலருவதை

மிதப்போடு ரசிக்கிறாள்.

மானத்தைப் பொத்தி

மறைத்திருக்கும்

கிழிசல் தாவணியை

கலைத்துப் புணருகின்றன

நரத்தைப் புசிக்கும்

காமத்து முள்ளுகள்.

தனது நிர்வாணத்தையே

காணச் சகிக்காத

சமூகம்

தலையிலடித்துக்

கதறுகிறது.

அவளோ

முடிவுறாத தனது

கனவுகளுக்கு

நிறம் தீட்டுவதற்காக

அடிவானத்திலிருக்கும்

வண்ணங்களை

எப்போதும் போலவே

சேகரித்துக் கொண்டிருக்கிறாள்.

31-05-2015.


 

3. துளி - 04

சிவப்புச் சேறாகி

காலைப் புதைத்தது

சுதந்திரபுரத்து வீதி.

காய்ந்து விழுந்த

தென்னம் மட்டைகளாக

கவனிப்பாரற்றுக் கிடந்தன

மனிதத் துண்டங்கள்.

வரண்ட முலை

பருகிக் கிடந்த

குழந்தையின்

தலையைத் தேடினாள்

தாய்.

புதைக்கவும்

இடமின்றி

பொலித்தீன் பையில்

மணத்துக் கிடந்தாள்

தோழி.

இண்டைக்கு இரவு

தண்ணியைக்

கடக்க வேணும்

கடைசியாக

சொல்லிக் கொண்டனர்

சனங்கள்.

முள்ளந்தண்டை

நிமிர்த்தி நான்

முதுகில்

சுமந்த

துப்பாக்கி

வெற்றிரும்பாகி - என்

கைகளில்

கனத்தது


 

4. துளி - 03

நள்ளிரவு.

அலைகளை விஞ்சிய

ஊதற்காற்று மூசிக் கொண்டிருந்தது

அலம்பில் கடற்கரையில்.

நட்சத்திரங்களும் பூக்க மறந்திருந்த

அமாவாசை வானத்தில்

எங்கிருந்தோ ஒருவெள்ளி

எரிந்து விழுந்தது.

குப்புறக் கிடந்த

கட்டு மரத்தடியில்

நானும் அவளும்

குந்தியிருந்தோம்.

பக்கத்து மணல் மேட்டிலே

குத்திச் சிதறியது

எறிகணைத் துண்டு.

இறுதிப் போர்ப்பயணத்தின்

விடை பெறும் கணங்கள்

காது கிழிபடும்

பேரோசையோடு

கடிகார முட்கள் - என்

இதயத்தில் துடித்தன.

ஆழக்கடல் மீது

நீளும் இரவுகளில்,

கந்தகப்படகோடு ‘இலக்கு‘ தேடி

காவலிருந்த

பொழுதுகளில்,

பால வயதுக் கனவுகளும்

பள்ளிக் காதலும் கூட

நெஞ்சில் தாளமிட்ட

நுாறு கதைகளை

என் காதோடு சொல்லிச் சிரித்த

தோழியின் நேரம்

நெருங்கிக் கொண்டிருந்தது.

பேசிப் பேசியே

வார்த்தைகள்

முடிந்து போயின

முடிவுறாத உணர்வலைகளை

வெப்பப் பெருமூச்சுகளாக

வெளித்தள்ளிக் கொண்டிருந்தோம்.

புதிதாகக் கருத்தரித்த

சொற்களும் கூட

முதிராத சிசுப்போல

தொண்டைக் குழியோடு

கலைந்து போயின.

நட்பின் ஸ்பர்சத்தோடு

கோர்த்துக்கிடந்த

கரங்கள்

சொல்லிக் கொண்ட

செய்திகளாயிரமாயிரம்.

உலர்ந்து போயிருந்த

உதடுகளைப் பிளந்து

பிறை நிலவுப் புன்னகை

ஒன்றைப்

பிரசவித்திருந்தாள்.

இருளின்

கொடூரத்தைக்

கரைத்தவாறு

குளிர்ந்த ஒளி

இதமாகப் பரவியது.

இரண்டு மின்மினிப்

பூச்சிகளாக

பட படத்துச் சிரித்தது

அவளின் விழிகள்.

வெளியே சிந்தப்படாத - அந்த

கண்ணீர்த் துளிகளின்

பிரவாகம்

எனது ஆத்துமாவை

மூழ்கடித்தது.

மீளாத பயணம்

போனவளின்

பாதச் சுவடுகள்

ஈர மணல் பரப்பில்

எழுதிச் சென்ற

கவிதைகள்.