கவிதை வாசிப்போம் வாருங்கள்!

என்னுள்
கனன்ற நெருப்பு -
பதின்ம வயதில்
எழுந்து நின்று
கொழுந்து விட்டெரிகையில்
தோன்றியது வினா -
நான் 'நானாக' வாழ்வதா
அன்றி
ஆணாகவே வாழ்வதா? ஆணும் பெண்ணுமாகி நிற்கும்
ஆண்டவனை
அர்த்தநாரி என வழிபடும்
அதே உலகம்தான்
அவன்
'அவள்'
ஆகும் தருணங்களை
அவல் என மெல்கின்றது
அணுவணுவாய்க் கொல்கின்றது!
அன்னை தந்தை
அழகிய சுற்றம்
அன்பான நட்பு
இனிமை வளமை - என
யாதுமாகி நின்றவனை
ஏதிலியாய் நிறுத்துவது
அவன் 'அவள்' ஆகிய தருணங்கள்தாம்!
அத்தைக்கு மீசை முளைத்தால்
சித்தப்பா - என்று
பழமொழி பேசிய உலகமும்
பல மொழிகள் பேசும் உலகமும்
மீசை துறந்து
சித்தப்பா
அத்தை
ஆகும் தருணங்களில்
சிரிக்கவும்
வெறுக்கவும்தானே செய்கின்றது?
யாம் செய்த பாவத்தால்
ஒன்பது கூட ஒதுக்கப்படுகின்றதே?
எண்ணிலும் பேதம் பார்க்கும்
இப்பேதை சமூகமா
என்னில் பேதம் பார்ப்பதை
விட்டொழிக்கும்?
நாய்க்கும் பூனைக்கும்
நல்மொழி பேசும்
கிள்ளைக்கும்
செல்லப்பிராணி என
இல்லத்துள் இடமளிக்கும்
மனிதர்கள்தாம் -
ஆணுருவில் அவதரித்த
அழகிய பெண்மையை
தொப்புள்கொடி உறவெனினும்
துடைத்தெறிய தயங்கிலர்!
ஆண்டவனின் படைப்பில் - நாங்கள்
அவதாரப் பிழைகள்தாம்!
ஆனால்
எங்களுக்கும்
ஊனுயிர் உண்டு
உணர்வுண்டு
வாடிய பயிரைக் கண்டு
வாடிடும் மனம் உண்டு
கவரிமான் அன்ன
மானமும் உண்டு
நல்மதியும் உண்டு
சொல்வலிவும் உண்டு
ஆனாலும்
அகங்காரச் சமூகம்
எங்களுக்குத் தரவில்லை
மனிதர் எனும்
அங்கீகாரம்!
எம் வாழ்க்கைப் பிழையானதால்
எம் பிழைப்பு வறுமையானதால்
பிழைத்திருக்க - எம்மை
பிழை செய்யத் தூண்டியது
எமது பிழையா?
அன்றி
உமது பிழையா?
அகக் குருடர்களே
நன்றாகக் கேளுங்கள் -
இத்தனை காலமாய்
நீங்கள் சிதைத்தவர்களுள்
ஆயிரமாயிரம்
அறிவியலாளர்களும்
பொறியியல் வல்லுநர்களும்
மருத்துவ மாமேதைகளும்
கவிக்குயில்களும்
காலத்தால் அழியாத
கலைஞர்களும் கூத்தர்களும்
இருந்திருக்கலாம்!
அத்தனை பேரையும்
அழித்தெறிந்து
உங்களை நீங்களே
முடமாக்கிக் கொண்ட
உண்மையை
இன்றேனும் உணருங்கள்!
உமது ஊனக்கண்கள்
இனியேனும்
நல்லொளி பெறட்டும்!
ஆண்பால் பெண்பால் விடுத்து
அன்பால் ஒன்றுபடுங்கள்!
முப்பால் குடித்த
தமிழ்கூறும் நல்லுலகிலிருந்து
தொடங்கட்டும் - இந்த
மூன்றாவது பாலினரும்
நம்மில் சரிநிகர் சமானர் - என்ற
நல் அங்கீகாரம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.