1. சிறக்க வாழ்ந்திட !

கவிதை கேட்போம் வாருங்கள்!மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போயிடுவாய்
மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும்
சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால்
சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய் !

ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு
எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே
சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா இருந்துவிடின்
சாதனையின் நாயகனாய் தலைநிமிர நின்றிடுவாய் !

அறத்தினைநினை அன்பையணை
சிரத்தையுடன்நீ சிறந்தனதேர்ந்திடு
இறப்பினைப்பற்றி எண்ணாதிருந்திடு
சிறக்கவாழ்ந்திட சிந்தனைசெய்திடு !

அரக்ககுணத்தை அடியோடழித்திடு
உரக்கவுண்மையை வாழ்வினிலுரைத்திடு
குறைக்குள்சென்றிடா மனத்தைத்தடுத்திடு
சிறக்கவாழ்ந்திடச் சிந்தையைசெலுத்திடு !

தாழ்வுமனப்பான்மையினை தானழித்துநில்லு
வீழ்கின்றஎண்ணம்வரின் விரட்டியேகொல்லு
ஆர்வந்துஎதிர்த்தாலும் அன்புவழிநில்லு
அகிலமதிலுன்வாழ்வு அர்த்தமுடனமையும் !


2. அவர் இரங்க வேண்டுவமே !

கவிதை கேட்போம் வாருங்கள்!கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத்
தமிழ்நாடு வந்தாராம்
தமிழர் வெறியாய் ஓடித்திரிவதைத்
தெரிவினில் கண்டாராம்
காரணம் புரியா நிலையில் கடவுள்
கைகட்டி நின்றாராம் !

தோரணம் கட்டித் தமிழர்கள் எல்லாம்
துடிப்புடன் நின்றாரும்
ஆரது ஆட்சியைப் பிடிக்கிற  தென்று
அடிபட்டுக் கொண்டாராம்
வாயிலே வந்ததை வார்த்தைகள் கொட்டி
வாக்குகள் கேட்டனராம் !

தோழமை என்றவர் சொல்லிலே சொல்லி
சொத்தெலாம் குவித்தனராம்
நாளைய வளர்ச்சி எதனையும் எண்ணா
நல்லதைச் சுருட்டினராம்
வேரொடு களைவோம் ஊழலை என்றவர்
விண்ணென உயர்ந்தனராம்
வியர்வையில் நின்றவர் அத்தனை பேருமே
விக்கித்து நின்றனராம் !

மதுவினை ஒழிப்போம் என்றுமே சொன்னவர்
மதுக்கடை திறந்தனராம்
மதியினை இழந்து மற்றவர் நின்றிட
மரமென இருந்தனராம்
நீதியைக் கையில் எடுத்துமே நின்று
நிட்டூரம் செய்தனராம்
சாதியைக் காட்டி சமயத்தைக் காட்டிய
சரித்திரம் படைத்தனராம் !

வேதனையில் மக்கள் வாழ
விதம்விதமாய் வீடு கட்டி
காதலுடன் கார் வாங்கி
கணக்கின்றிப் பணம் பதுக்கி
உலக வங்கி அனைத்திலுமே
உழைப்பின்றி வந்த பணம்
உபயோகப் படும் என்று
ஒதுக்கி வைப்பார் பக்குவமாய் !

படிப்பறியார் உடுப்பறியார் படுத்திருக்க இடமறியார்
பசியாற வழியின்றி பரிதவிக்கும் நிலையினிலே
துடித்தெழுந்து ஓடிவந்து துயர்துடைக்கும்  மனமின்றி
அடித்தெழுந்து பேசுகின்றார் ஆட்சியிலே அமர்வதற்கு !

காந்திபோட்டி போடவில்லை கவிதாகூர் விரும்பவில்லை
சாந்திமனம் கொண்டவர்கள் சண்டைதனை விரும்பவில்லை
சரியான தேர்தலெனின் சண்டைக்கே இடமில்லை
சனநாயகம் தளைக்கச் சரியான வழிசமைப்போம் !

குத்து வெட்டு அத்தனையும்
சுத்தி வந்து பார்த்துவிட்டு
சத்தியமாய் தமிழ் நாட்டை
தான் நினைப்ப தில்லையென
உத்தமராம் எம் கடவுள்
உடனடியாய்ச் சென்று விட்டார்
அத்தனைபேர் மனம் மாற
அவர் இரங்க வேண்டுவமே !


3. நூற்றுக்கு நூறு !

கவிதை கேட்போம் வாருங்கள்!மாதவத்தார் வள்ளுவனார்
வகைவகையாய் குறள்சொல்லி
மாநிலத்து மாந்தரெலாம்
நூற்றுக்கு நூறுவாழ
நுட்பமெலாம் தந்தனரே
நூற்றுக் நூறதனை
காற்றிலே பறக்கவிட்டால்
சாற்றிநின்ற குறளனைத்தும்
சகித்திடுமா மாநிடரே !

புத்தரொடு ராமகிருஷ்ணர்
புனிதர்பலர் அவதரித்து
சத்தியத்தை போதித்து
சன்மார்க்கம் காட்டினரே
அவர்சொன்ன அத்தனையும்
நூற்றுக்கு நூறெமக்கு
ஆற்றல்நிறை மருந்தாக
அமைந்ததனை மறந்துவிட்டோம் !

காவியங்கள் பலவெமக்கு
கருத்தாகப் பலசொல்லி
ஓவியமாய் எம்முன்னே
உட்கார்ந்து இருக்கிறது
நாமதனைக் கடைப்பிடித்தால்
நம்வாழ்வு நூற்றுக்குநூறாக
நலம்விளைக்கும் என்பதனை
நாம்நினைக்க வேண்டாமா !

நூற்றுக்கு நூறுநீ வாழுஎனச் சொல்லி
நாற்றாக நின்றபல நன்மக்கள் பலரிருந்தார்
சேற்றுக்குள் நாம்விழுந்து சிதைக்கின்றோம் வாழ்வதனை
ஆற்றல்பெற்ற அவருரைத்த அத்தனையும் வீணாச்சே !

மாற்றான மனமெல்லாம் மாறிநின்று விட்டாலே
நூற்றுக்கு நூறாகப்  போற்றிநிற்க வாழ்ந்திடலாம்
ஆற்றலுடை அத்தனையும் அக்கறையாய் கடைப்பிடித்தால்
நூற்றுக்கு நூறுபெற்று நூறாண்டே வாழ்ந்திடலாம் !

நூறாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றோம்
நோயின்றி வாழ்கவென வாழ்த்துகின்றோம்
பாராள  வேண்டுமென வாழ்த்துகின்றோம்
பக்குவத்தை தொலைத்துவிட்டுப் பதறுகிறோம்
நேரான வழியிருந்தும் பார்த்திடாமல்
நித்தமுமே தீயதையே செய்கின்றோம்
ஆராய்ந்து அத்தனையும் பார்ப்போமாகில்
அனைவருமே நூற்றுக்குநூறை அடைவோமன்றோ !

நூற்றுக்கு நூறு வாழ்ந்திடு
நோய்நொடி இன்றி  வாழ்ந்திடு
போற்றுதல் பெற்றிட  வாழ்ந்திடு
புகழுனைச் சேர்ந்திட வாழ்ந்திடு
ஆற்றிடும் யாவுமே நல்லதாய்
அமைந்திட வாழ்ந்துமே நின்றிடின்
நூற்றுக் நூறினைக் காணலாம்
நோவெலாம் எமைவிட்டே ஓடிடும் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.