கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. இயேசுவின் முகத்தில்  பயத்தின் சாயல்

மூக்கைத் துளைத்து
நினைவில் வடுவான
ரத்த வாசனை!

எப்பொழுது  தோட்டாக்களின்
உறக்கம் களையுமோவென்று
உறங்காமல் இருந்த
பொழுதுகள் அதிகம்!

மனித ஓலங்களின் ஓசை
அடங்க மறுத்து தூங்கி
சிவந்த கண்களோடு பகல்!

பேருந்துகளில் பயணம் செய்ய
கால்கள் நடுங்காமல்
மனம் கலங்காமல்
பயணித்த நாட்கள்...?

வசந்தத்தின் வருகையில்
சில கால அமைதியில்
பூத்திருந்த பூக்களின் வாசனையில்
மீண்டும் மரணத்தின் நெடி!

வஹாபிஸக் கந்தகத்தில்
யாா் யாா் முகமோ
பலிக்கேட்டுக் காத்திருக்கும்
முகவரி இல்லா வன்மம்!

2. காற்றோடு கடந்த வாழ்வு

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

வீசியக் காற்றில்
தூக்கி எறியப்பட்டது
குப்பைகளோடு என் வாழ்வும்!

உணவைத் தேடியதில்
இத்துப்போன உடம்பில்
ஒட்டிக்கொண்ட உயிர்!

நிறைவேறா ஆசையின்
எச்சங்களும்
தேவையின் விழைவின்
மிச்சங்களும்
பிடுங்கி எறியப்பட்ட மரமாக
நான்!

சுரண்டப்பட்ட வாழ்க்கையில்
புயலாய் நீ
கலைந்த கோலமாக நான்!

3. திசைமாறிய பறவையின் குரல்

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

காலை உணவைச் சாப்பிட்டுவிட
முடியும் என்ற நம்பிக்கையில்
ஏந்திய கைகளோடு கருணைக்
கண்களைத் தேடி!

கண்கள் குளமாக முதல் பிச்சையில்
இரவெல்லாம் தூங்காமல்
அறுபது ஆண்டுகளின் மேடுபள்ளங்கள்!

இரத்த உறவுகள் குளிர் அறையில்
கிரிகெட் பாா்த்துக்கொண்டிருக்க
தன்மானத்தின் பெரும் பசியில்
வயிற்றுப்பசி மறந்து ஆண்டுகள் சில!

எறும்புகளோடு பேசி பறவைகளோடு உறவாடி
அன்பாகக் கிடைக்கும் ஒருபிடி சோற்றில்
வாழ்தலின் உச்சம்
நிறைந்து வலியும்!

4. மனிதனாகிய நான்

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

பேயாய் நடனம் ஆடிய
காமத்தின் எச்சங்களையெல்லாம்
எட்டி உதைத்தது
அவள் போட்ட ஒருகரண்டி
சோறும் உட்கலந்த அன்பும்!

கண்களில் நீர் வழிய
தொண்டைக்குழி அடைத்துக்கொள்ள
வெளிக்காட்ட மறுக்கும்
ஆணவத்தோடும்
காட்டிக் கொடுத்தக் கண்களோடும்
யுகம் யுகமாய் கடந்துவந்த
பாதையின் அடிச்சுவட்டில்
அவளின் புன்னகை!

Ramachandran M <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>