மதுபாஷினி பாலசண்முகன்- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் செல்வி மதுபாஷினி பாலசண்முகன் நிகழ்த்திய உரை. இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்றவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பயிலும் இவர், மெல்பனில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மதுபாஷினி பாலசண்முகன், தமிழ் இலக்கியத்திலும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். -முருகபூபதி -


"நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"


பாரதியார் எழுதிய புதுமைப்பெண் பாடலில் இருந்து சில வரிகள் இவை. சுப்ரமணிய பாரதி 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் புரட்சிக் கவிதை  எழுதிய கவிஞர் மற்றும் சுதந்திர வீரர் ஆவார். பண்டைத் தமிழ் வரலாற்றையும் பாரதப் பண்பாட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதி, நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார், வேதனைப் பட்டார். பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களை பாடினார்.

பாரதியார் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளை அவருக்கே உரித்தான கவியழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின் மற்றும் கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதினார்.

நான்  உங்களுடன் உரையாடவிருப்பது பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துகளைப் பற்றி. உப தலைப்புகளாக, பாரதியார் சமூக சீர்திருத்த வாதத்தை, முக்கியமாக பெண் விடுதலையை ஆதரித்த காரணம், அவரது பெண் விடுதலை வாதம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கு உதாரணமான பாடல்கள் என்பன பற்றிக் கலந்துரையாட உள்ளேன்.

அக்காலகட்டத்தில் பாரதியார் மட்டுமன்றி வேறு சில பெரியோர்களும் சமூக சீர்திருத்த வாதத்தையும் பெண் விடுதலை வாதத்தையும் ஆதரித்தனர். மகாத்மா காந்தி, இராஜா ராம் மோகன்ராய், சுவாமி விவேகானந்தர் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்க சிலர்.

இதற்கான காரணங்கள் சில :
1) பிரித்தானியரின் கீழிருந்து மீள முயன்ற இந்தியாவில் மெல்லத் தோன்றின புதிய கருத்துக்களும் புரட்சி கரமான சிந்தனைகளும்.
2) பெண்ணுரிமை வாதம், தேசிய வாதம், இந்தியா கலாச்சார மறுமலர்ச்சி, ஏகாதி பத்திய எதிர்ப்பு என்பன தீயைப் போல பரவின.
3) ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சி யுகத்திற்கான சிந்தனைகள் இந்தியாவின் கல்வி கற்ற அறிவு ஜீவிகளிடம் பரவியது.

இந்த நவீன யுகத்தின் கவிஞன் ஆன  பாரதியும் இந்தியாவில் தோன்றிய புதிய சிந்தனைகளால் பெரிதும் கவரப் பட்டார். அவருடைய  கவிதைகள் மனித உள்ளங்களின் விழிப்புணர்வை ஊட்டும் வண்ணம் அமைந்தன.

பாரதியின் சமூக சீர்திருத்தக் கருத்துகளில் முன்னுரிமை பெற்றுத் திகழ்ந்தது பெண்ணுரிமை வாதம். பெண்களுக்கு உரிமைகள் கொடுக்காத சமுதாயம் முன்னேற வழியில்லை என அவர் அழுத்தமாக வாதிடுகிறார்.  "பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமையற்றிடும் காணீர்" எனப் பாடுகின்றார்.

பெண்ணுரிமை வாதத்தை பாரதியார் மிகவும் ஆதரித்ததற்கு காரணங்கள் சில உண்டு. அக்காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த சிறு பிள்ளைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல், விதவைகளின் இழி நிலை, பெண்களுக்கு கல்வி உரிமை கொடாமை போன்ற சமுதாய வழக்கங்களை ஐரோப்பியர் இந்தியரின் மூடத்தனத்திற்கு சான்றிதழ் எனக் கூறி வந்தனர். ஆனால் இது தற்காலிகமான ஒரு இருள், பண்டைக் கால இந்தியாவில் பெண்னின் நிலை இழிவானது அல்ல என பாரதி வாதிட்டார். "புதுமை பெண் இவள் சொற்களும் செய்கையும், பொய்மை கொண்ட கலிக்கு புதிதன்றி, சதுர்மறைப்படி மாந்தர் வாழ்ந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்" என வாதிடுகிறார். பாரதியார் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அடிமைப்பட்டு இருளில் மூழ்கி இருந்த இந்தியாவையும் உரிமையின்றி வாழும் இந்தியப் பெண் இனத்தையும் அவர் ஒன்றாகவே காண்கின்றார்.

தாம் பிறந்த நாட்டையும், தனது மொழியையும் தாயாகவே வணங்கி "போற்றி போற்றி" எனப் பாடுகின்றார். விவேகானந்தருடைய ஞானப் புதல்வி ஆகிய நிவேதிதா தேவியை ஞான குருவாக கொண்டவர் பாரதியார். பாரதியாரிடம் இயல்பாகவே காணப்பட்ட சுதந்திர எண்ணம், சமூக சீர்திருத்தம், அரசியல் மறுமலர்ச்சி, பெண் விடுதலை சார்ந்த ஆர்வம் யாவும் நிவேதிதா தேவியை சந்தித்த பின் தீவிரமடைந்தன. பெண்ணுக்கு சமூக விடுதலை கிடைக்காமல் நாடு அரசியல் விடுதலை அடைவதில் பயனில்லை என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர் நிவேதிதா தேவி.  "அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோயிலாய், அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய்' என நிவேதிதா தேவியை போற்றுகிறார் பாரதி. பெண் விடுதலையை பற்றி அவர் பாடிய பாடல்களில் முதன்மையான பாடல்கள் "புதுமைப் பெண்", பெண்கள் விடுதலைக் கும்மி, பெண்மை, பாஞ்சாலி சபதம் என்பன. பாரதியாரின் புதுமை பெண் பாடலில் அவர் பெண்ணுக்கு புது இலக்கணமே உருவாக்குகிறார். அஞ்சியும் அடங்கியும் தலை குனிந்தும் நடப்பவளே பெண் எனும் பழமை வாய்ந்த கருத்துக்களை வீராவேசத்துடன் எதிர்க்கிறார். "நானமும் அச்சமும் நாய்கற்கு வேண்டுமாம்" என முழங்குகிறார்.

இப்பாடலின் முக்கிய சிறம்பம்சம் யாதெனில், இன்றும் சமுதாய வழமைகளாக இருக்கும் சில பெண்ணடிமைச்சிந்தனைகளையும் பாரதி அன்றே கண்டித்திருக்கிறார். உதாரணமாக,"சிறிய தொண்டுகள் தாதடிமைச் சுருள் தீயிலிட்டு பொசுக்கிட வேண்டுமாம்" எனும் வரிகள். சிறிய தொண்டுகளுக்கு பெண்களை ஏவும் இன்றைய சமுதாய வழமையை பாரதி அக்காலகட்டத்திலேயே பிழையென அறிந்து கொண்டு, எதிர்த்திருக்கின்றார்.

பெண்களை அடிமை கொள்ள எண்ணும் அறிவற்றவர்களை "அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம்". ஆணுக்கு நிகராக கல்வி கற்று தொழில் செய்து, சமூகத்தில் சம உரிமை பெற்று வாழ முற்படும் நவீன யுகப் பெண்ணை பாடுகின்றார். "விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்" என்று எதிர்வு கூறுகின்றார்.

"சாத்திரங்கள் பல கற்பராம், சவுரியங்கள் பல பல செய்வாராம், மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பாராம், மூடக் கட்டுக்கள் யாவும் அவிழ்ப்பாராம்" பாரதியின் புதுமை பெண்ணின் இயல்புகள் இவை.

பாரதியின் பெண்மை பாடலோ பெண்ணை சகல சக்திகளிலும் திரும்பிய அன்னை பராசக்தியாகவே நினைத்துக் கூத்திடுகிறது
.
“உயிரைக் காக்கும்
உயிரினைச் சேர்ந்திடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா “
எனக் களி கொண்டு கூத்தாடுகிறான்.
"போற்றி தாய்
போற்றி தாய் "
எனப் போற்றுகிறான் .
பெண்கள் விடுதலைக் கும்மியோ "விடுதலை பெறுவர் பெண்கள்" என உற்சாக கும்மி அடிக்கிறது.
“பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்று முரசொலிக்கிறான் எங்கள் பாரதி.
அது மட்டுமா...?
“கற்பு நிலையென்று சொல்ல வந்தால்
இரு கட்சிக்கும்
அது பொதுவில் வைப்போம் “
என மிகப் புதுமையான கருத்துக்களையும் முன்வைக்கிறான்.

பாஞ்சாலி சபதத்திலோ , சபையில் அவமானப்படுத்தப்பட்ட பாஞ்சாலியை அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரத மாதாவாகவும் பெண் இனத்தின் பிரதி நிதியாகவுமே  அவர் பார்க்கிறார்.

திரௌபதி துகிலுரிதல் என மகாபாரதத்தின் பகுதியாக இருந்த காட்சியை பாஞ்சாலி சபதம் எனப் பெயரிட்டு மிகச் சிறந்த காவியம் ஒன்றைப் படைத்தார்.
அக்காலத்தில் இருந்த பெண்களின் அவல நிலையை பீஷ்மர் வாயிலாக சொல்கிறார்.

“ஆடவருக்கு ஒப்பில்லை மாதர்
ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம் “
இவையெல்லாம் விலங்கு முறைகள் என இழிவாக உரைக்கிறார்
“பெண்ணரசு கேட்கின்றார் 
பெண்மை வாயால் “
என நீதி கேட்கிறார்.
புதுமையிலும் புதுமையாக தான் இயற்றிய காவியத்தை
“ஓம் ஓம் என்று உறுமிற்று வானம் “

என சபதத்தின் உச்சியில் முடிக்கின்றார். அடிமைப் பெண் இனம் உரிமை பெறுவாள் என உறுதி கூறியே முடிக்கின்றார் தன் பாடலை .
தான் வாழும் காலத்தைப் பாடுபவன் கவிஞன் .காலத்திற்கும் அப்பாலும் நிலைத்து நிற்கும் கருத்தைப் பாடுபவன் மகா கவி .

“சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள்
தீயிலிட்டுப் பொசுக்க வேண்டுமாம் “

என இன்றும் மாறவேண்டிய நிலையைப் பாடியவர் எங்கள் கவி. தமிழ் தாயின் தவத்தில் உதித்தவரரு பெண் அடிமைத் தனத்திற்கு எதிராக உரத்துப் பாடிய எங்கள் பாரதியை நான் மகாகவி என வணங்குகிறேன்.

“பெண்மை வாழ்கவென்று
கூத்திடுவோமடா”
“ஓமென்றுரைத்தனர் தேவர்
ஓம் ஓமென்று உறுமிற்று வானம்”


* இக்கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர்: எழுத்தாளர் முருகபூபதி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.