- ருக்மணி -

செவிக்கும் வாய்க்கும்
பாலமாய்  இருத்திய படி
எக்காளமிட்டுச் சிரித்தனர்
யாரும் பார்க்காமல் அழுதனர்

தூர இருந்து கொஞ்சினர்
அருகில் வைத்து முத்தமிட்டனர்
காதலில்தான் ஆரம்பித்தனர்
காமத்தையே உரைத்தனர்

கொஞ்சமாய் உண்மை விளம்பினர்
நிறையப் பொய்யைப் பரிமாறினர்
அறியாத வண்ணம் ஏமாற்றினர்
அறிந்தும் ஏமாறுவதுபோல் நடித்தனர் 

எண்ணி எண்ணித் தரக் கூறினர்
எண்ணாமலே திட்டித் தீர்த்தனர்
அவ்வப்போது அலறினர்
அடிக்கடி ஆவேசப்பட்டனர்

அறிவுறுத்தினர் வலியுறுத்தினர்
ஆலோசனைகளை அள்ளி வழங்கினர்
வசியம் வைத்தனர் இரகசியம் கசிந்தனர்
விழிபிதுங்கி பழிவாங்கச் சபதமிட்டனர்

வலைவிரித்தனர் விலைகேட்டனர்
வஞ்சம்செய்தனர் இலஞ்சம்வீசினர்
வேவு பார்த்தனர் காவு குறித்தனர்
உலை வைத்தனர் கொலையும் மிரட்டினர்

எல்லோருடனும் எல்லா நேரத்திலும்
மிக நெருக்கமாய் இருந்தாலும்
இதற்குத்தானா படைக்கப்பட்டேன்
என்றே அலறிக் கொண்டிருந்தேன்

அனைவர் கைகளிலும்
ஆறாம் விரலாய் மாறிப்போன
அற்புதக் கண்டுபிடிப்பாம்
அலைபேசி நான் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.