- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் இரண்டாவது  அத்தியாயம் 'மனோவிருப்பத்தின் மூலாதாரம்' என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -


I

"இலக்கியமும், பட்டாம்பூச்சிகளும் மனிதன் அறிந்த இரண்டு இனிமையான உவர்ச்சிகள்" - விளாடிமிர் நபோகோவ் { Literature and butterflies are the two sweetest passions known to man.  - Vladimir Nabokov }

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்இலக்கியம் மட்டுமே மிகுந்த இணக்கத்துடன் வாழ்வின் துக்கங்களைப் புறந்தள்ள உதவுகிறது.. கனவுப்பிரதேசங்களில் சுதந்திரமாகச் சஞ்சாரம் செய்ய அனுமதிக்கிறது. தேச எல்லைகள் இலக்கியங்களில் கிடையாது. ஆங்கில கவிஞர்களோ, ரஷ்ய எழுத்தாளர்களோ, ஆப்பிரிக்க நூலாசிரியரோ அல்லது உலகின் எந்த பிரதேசத்தின் குடிமகன் ஆனாலும் இலக்கியம் நமக்கு அவர்களை பாஸ்போர்ட் விசா ஏதுமின்றி நமது கரங்களில் சேர்க்கிறது. அவர்களின் உணர்வுகள் நமக்கு புரிகிறது. ஒரு யூலிஸிஸ் - ஹோமரின் கதாநாயகன் ஆனாலும் சரி, உலகையே தன் வசப்படுத்திய ரோமானிய சீசர், ஆன்டனி போன்ற கதாநாயர்கள் ஆனாலும் சரி, உலகின் மிகச் சிறந்த அழகிகள் என வர்ணிக்கப்பட்ட கிளியோபாட்ரா, ஹெலன் போன்ற பெண்களையும் சரி இலக்கியம் அல்லவா நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதுவும் ஆங்கில இலக்கியப்படிப்பு உலக இலக்கியத்தை, இந்த அகிலத்தையே நம் நேத்ரங்கள் முன் பிரதிபலிக்க செய்யும் மாயக்கண்ணாடி என்பதை எந்த இடத்திலும் ஆணித்தரமாக அடித்துக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

. ஆங்கில இலக்கியம் விருப்பப்பாடம் படிக்க எடுத்ததே ஒரு எதிர்பாராத நிகழ்வு. நான் கல்லூரி படித்த காலங்களில் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் பணக்காரக் குடும்பத்தை சார்ந்த பெண்களாக இருக்கும் அல்லது ஒரு பந்தாவுக்காக எடுத்து படிப்பதற்காக இருக்கும். அதுவும் நான் படித்த பெண்கள் கல்லூரி உயர் மட்ட குடும்பத்து பெண்கள் மட்டுமே அதிக அளவில் படிக்கும் இடம் ஆகும். ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருந்த நான், எந்த ஒரு இலக்கையும் தீர்மானிக்க முடியாத அந்த வயதில் வேதியியல் படிப்பு இளங்கலையில் படிக்க என் தகப்பனாரின் விருப்பம். இந்த படிப்புக்கு உடனே வேலை கிடைக்கும் என்பது அந்தக் கால ஐதீகம். இன்று உள்ளது போல் அன்று கணினி அறிவியல் மற்றும் ஐடி படிப்புகள் அப்போது கல்லூரிகளில் இல்லாததால் அறிவியல் பாடங்களுக்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆர்ட்ஸ் வகுப்புகளான ஆங்கில, தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்றவை வேலைவாய்ப்பு கொடுக்காத கல்விப்பிரிவுகள் என்பதும் அன்றைய காலகட்ட சூழ்நிலை. இன்று நிலைமை தலைகீழ்.

வேதியியலில் எவ்வித பிடிப்பும் இல்லாத நான் வேண்டா வெறுப்பாக அந்த வகுப்பில் அமர்ந்து மேற்கூரையையும்,, கூட அமர்ந்து இருக்கும் மாணவிகளையும்  'கமெரா'க் கண்கள் சுழல்வது போல் சுற்றி முற்றி பார்த்துக் கொள்வது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செயல். மாணவிகளில் பலர் நல்ல 'பவர்' பொருந்திய கண் கண்ணாடிகளுடன் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். இதில் ஈடுபாடு இருப்பதாக என்னால் நடிக்கக் கூட இயலவில்லை. அந்த ஒரு மாதக் காலப் படிப்பில், பகுதி இரண்டு பொது ஆங்கில வகுப்புக்கு ஆங்கில இலக்கிய மாணவிகள் எங்களுடன் சேர்ந்து படிக்க வருவார்கள். அதில் ஒருத்தி எனக்குப் பள்ளித்தோழி. அவள் அப்பா அவள் ஆங்கில இலக்கியம் படித்து ஒரு 'டிகிரி' வாங்கினால் போதும் என்ற நோக்கத்தில் அவளை அந்தப் பிரிவில் சேர்த்திருந்தார்.

அந்த மாணவிகள் இந்த வேதியியல் வகுப்புக்குள் வரும்போதே வகுப்பு கலகல என்று மாறிவிடும். குறும்பும், கேலிப்பேச்சும், சந்தோச முகங்களும் பார்க்கவே வியப்பாக இருக்கும். என் பள்ளித்தோழிக்கு நான் இட ஒதுக்கீடு செய்து வைப்பதால் என்னுடன் அமர்ந்து ஆசிரியர் வருவதற்குள் தன் வகுப்பு பெருமை பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு பீற்றி விடுவாள். மனதில் மிகுந்த வியப்புடன் அந்த கதைகளை கேட்டுக்கொண்டு என் நிலையை எண்ணி மனம் வெதும்புவேன். ஒரு கட்டத்தில் என் தோழியின் உச்சகட்டப் போதனையாக "நீயும் எங்க வகுப்புக்கு வந்துடு" என்ற கட்டளை என் மனதில் பதிய ஆரம்பித்தது. வீட்டில் திட்டுவார்கள் என்ற பயம் வந்த போது, அது அப்புறம் சொல்லிக்கலாம் என்று தைரியம் கொடுத்த சாணக்கியரும் அவளேதான்.

கடைசியாக, முதல் 'செமஸ்டர்' பரீட்சைக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், வேதியியல் துறைத் தலைவரிடம் போய் தயங்கி நின்று "நான் என் பாடப்பிரிவு மாற்றிக்கொள்கிறேன்" என்ற போது அவர் பார்த்த அக்கினிப்பார்வை இன்றும் என் மனதில் அழியாக்கோலம்தான். "இந்த பாடப்பிரிவு கிடைக்கவில்லை என எத்தனை பேர் அழுது புலம்புகிறார்கள், நீ இதை விட்டு ஆங்கில இலக்கியம் போகிறாயா? நல்லா விளங்குவாய்" என ஒரு மனமார்ந்த ஆசிர்வாதம் வேறு. அங்கே வாங்கிக்கட்டிவிட்டு ஆங்கிலத்துறைக்கு சென்றால், அவர்கள் "பரீட்சைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதே? எப்படி பாஸ் பண்ணுவாய்" என்று அடுத்த ஒரு அணுகுண்டைத் தலையில் இறக்கினார்கள். இத்தனையிலும் என்னைத் தாங்கிப் பிடித்தது என் தோழியின் வலிமை மிகுந்த கரங்களே. ஒரு வெற்றிப் புன்னகையை முகத்தில் தவழ விட்டு , நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்ற பாவனையில் என்னுடன் துணை நின்றாள். கடைசியாக ஆங்கில இலக்கிய வகுப்பில் நான் அமர்ந்தபோது, அது ஒரு வேற்றுக் கிரகம் போல் தோற்றம் அளித்தது. ஆசிரியர் சொல்வது அனைத்தும் ஆங்கிலேயர்களைப் பற்றியும் அவர்களின் சமுதாய அமைப்பு, வாழ்க்கைமுறை போன்ற கருத்துக்களும் எனக்கு ஏதோ கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளை போல் தோன்றின. எல்லாவற்றுக்கும் மேலாக வேதியியல் வகுப்பில் இருந்து ஆங்கில இலக்கியம் வகுப்பு மாறிய விஷயம் முதல் 'செமஸ்டர்' முடிவில் வீட்டில் அறிவித்து அதற்காக மண்டகப்படி வாங்கியது ஒரு தனி கதை

எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் அறிவாளி, படிப்பாளி என பள்ளிக்காலத்தில் பெயர் எடுத்திருந்த நான் அங்கே ஒரு அடி முட்டாளாக, எதையும் புரிந்து கொள்ளத் திராணி அற்றவளாக அமர்ந்து திரும்பவும் அனைவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அதிகம் வேலை என்பது ஆசிரியர் வகுப்பு எடுக்கும் போது குறிப்பு எடுப்பது. நிறைய வார்த்தைகள் உச்சரிப்பு மற்றும் எழுத்து சரியாக புரியாது. இரண்டாம் முறை கேட்க வெட்கம். எழுதுவது போல் நடித்துக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம். வகுப்பு முடிந்து வேறு சில தோழிகளிடம் சரி பார்க்கும் போதுதான் தெரிந்தது என்னைப்போல் பல கைதேர்ந்த நடிகைகள் உள்ளனர் என்று.

என்னை நான் தயார் படுத்திக்கொண்டது இரண்டாம் ஆண்டில்தான். அதே இரண்டாம் ஆண்டில்தான் எனக்கு பல்வேறு விதமான சிந்தனைகள் தோன்ற  ஆரம்பித்தன  வகுப்புப்பாடங்களில் வரும் இலக்கிய ஆசிரியர்கள்  எப்படி வாழ்ந்திருப்பார்கள், எங்கே வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் பார்த்த பல விஷயங்களை, மலர்களை, பறவைகளை, மனிதர்களை நாம் பார்க்க முடிவதில்லையே என்ற எண்ணம் மனதில் அதிக அளவில் தோன்றும். ஆனால், என் வகுப்பு மாணவிகள் என்னவோ ஷெல்லி மற்றும் ஷேஸ்பியர் போன்றோரை நேரில் பார்த்து அளவளாவி வந்தது போல் பீலா விடும் போது எனது இந்த சந்தேகங்கள் வாய் வார்த்தையாக வர மறுத்துவிடும்.

நான் படித்த காலத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவிகள் அதிக அளவில் பணக்கார வீட்டுப் பெண்களாக இருப்பதால், அந்தக் காலத்திலேயே வெளிநாடு பற்றி கொஞ்சம் அவர்கள் வீட்டில் இருந்து வெளிநாடு சென்று வந்திருக்கும் நபர் மூலம் கொஞ்சம் தெரிந்து வைத்து இருப்பார்கள். எனவே, அவர்கள் இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்பது போல் காட்டிக்கொள்வார்கள். லண்டன் பிரிட்ஜ் எனப்படும் மிகப் பிரபலமான பாலம் மேலும், அழகிய தேம்ஸ் நதி,  அதில் இரண்டு  வெண்ணிற அன்னங்களாக லேடி எலிசபெத் மற்றும் லேடி காதரின்சோமர்செட் என்ற இரு ராஜா  வீட்டு இளவரசிகள்  - இங்கிலாந்து நாட்டின் கோமான்களில் ஒருவரின் இரண்டு பெண்களுக்கு ஒரே சமயத்தில் நடந்த இரட்டைத்திருமணம் பற்றி பதினைந்தாம் நூற்றாண்டுக்கவி எட்மண்ட் ஸ்பென்ஸர் தனது திருமண கவிதையான Prothalamion என்ற கவிதையில் வர்ணித்திருப்பது எனக்கு அப்போது மிகவும் புதுசு. அதுவும், ஸ்பென்ஸர் தனது கவிதையில் அந்த நதியில் மிதக்கும் வண்ண மலர்களின் நிறங்களையும் அழகையும் அலசி ஆராய்ந்திருப்பது பற்றி படிக்கும் போது விழிகள் கற்பனையில் மிதக்கும். பார்க்காத ஒன்றைப் பற்றிப் படிக்கும் போது மனம் மிகவும் தந்திரமாக அதை நாம் பார்த்து ரசிப்பது போல் ஒரு பாவனை காட்டும் அல்லவா? அந்த விஷயம் எனக்கு அன்று ஒரு புதுமையான அனுபவம்.

என் பிற்காலப் பயணங்களின் முதல் விதை அங்கேதான் என்பது எனக்கு அப்போது தெரியாது. பயண அனுபவங்களுக்கு முன்னே இந்தப் பீடிகை அல்லது தேவையற்ற தகவல் தேவையா என்ற எண்ணம் படிப்பவர்கள் மனதில் எழுவது புரிகிறது.  ஆனால்  என் வாழ்வின் மிகச்சிறந்த தருணங்களுக்கு ஒரு உந்துதலாக, செயலாக இருந்தது இந்தச் செயலே. வேதியியல் படித்து இருந்தால் என்ன ஆகி இருப்பேனோ தெரியாது. ஆனால் இந்த மாதிரி பயணங்கள் செய்வதில் காதல் ஏற்பட்டு இருக்காது என்பது மட்டும் திண்ணம். ஆங்கில இலக்கியப்படிப்பு வேலைவாய்ப்பு மட்டும் கொடுப்பதுடன் நில்லாமல் பல்வேறு தாக்கங்களை என் மனதில் உருவாக்கியது என்பது எனக்கு இன்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆங்கிலம் பேச, படிக்க ஒரு வழி உருவானதுடன், ஆங்கிலேயர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்கள், ஆங்கிலக்கவிகளின் வர்ணனையில் அவர்கள் பார்த்த இடங்கள் இவை அனைத்தும் நான் காண வேண்டும் என்ற தாகம் என் மனதில் இருப்பது எனக்கு மட்டுமே தெரிந்ததொன்று.

அன்றைய காலகட்டங்களில் வெளி நாடு செல்வது என்பது தலை சிறந்த பணக்காரர்களால் மட்டுமே முடியும் செயல் என்பதும், அதைப்பற்றிக் கனவு காணும் உரிமை கூட நடுத்தர வர்க்கத்துக்குக் கிடையாது என்பதும் அந்த இளம் வயதிலேயே எனக்கு புரிந்தும் இருந்தது. அந்தக்காலத்தில் நான்  லண்டன் போக  ஆசைப்படுகிறேன் என்று சொன்னால் அனைவரும் கொல் எனச் சிரிப்பார்கள் என்பதும் தெரிந்த விஷயமே.. அடுத்த பிறவியில் இதே போல் ஆங்கில இலக்கியம் படித்து லண்டன் சென்று அந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில் கற்பனை வளர்த்து அத்துடன் அந்த ஆசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டதும் நிஜம். ஆனால் உளவியல் வல்லுநர் சிக்மாண்ட் பிராய்ட் அவர்களின் கருத்துப்படி மனிதனின்  எந்த ஆசையும் முற்றுப்புள்ளிகளையும் தாண்டி ஆழ்மனதில் அழுத்தமாக பதியும் என்பதும் அந்த ஆசைகளை நிறைவேற்ற ஆழ்மனம் கடும் பிரயத்தனம் புரியும் என்பது அப்போது எனக்கு விளங்கவில்லை. இதனால்தான் அப்துல் கலாம் ஐயா அவர்கள் கனவு காணுங்கள் 2020  நோக்கி என்றார். நேர்மறையான நல்ல சிந்தனைகள், கொள்கைகள், கனவுகள் ஆழ்மனதில் பதியும் போது அவை நனவாக மாறுவது உறுதி என்பது யாரும் மறுக்கவியலாத உளவியல் உண்மை.

படித்து முடித்து ஆங்கில இலக்கியம் போதிக்கும் ஆசிரியராக பணியில் அமர்ந்ததும் ஆழ்மனதின் தாகம் அதிகம் ஆனது. ரொமான்டிக் கவிஞனான வொர்ட்ஸ்வொர்த்தின் டாபோடில்ஸ் கவிதையை வகுப்பில்  விவரிக்கும் போது, மனதில் சொல்லவொணா தாகம் எழும்பும். பத்தாயிரம் மலர்கள் கண்டேன் ஒருங்கே, பொன்னிற  டாபோடில் குவியல் எரிக்கரையின் அருகே, மரத்தின் கீழே என அந்த கவிஞன் கவிதையில் வர்ணிப்பதை நான் விவரிக்கும் போது பலமுறை திக்குமுக்காடியிருக்கிறேன். என் வாழ்வில் நான் காணாத மலர், அந்த கவிஞன் கண்டு வியந்த அந்த பொன்னிற மலர். நான் காணாத ஒன்றை நான் எப்படி வகுப்பில் என் மாணவ மாணவிகளுக்கு விவரிப்பது? என் மனதில் நமது சூர்ய காந்தி மலரின் ரூபம் மட்டுமே பொன்னிற மஞ்சளின் எடுத்துக்காட்டாக உதிக்கும். அதே பூவை என் மாணவிகளுக்கும் கூறி "இது  போன்ற ஒரு மலரே டாபோடில்" என கூறி முடித்துவிடுவேன். எனினும் என் மனதில் ஒரு வருத்தமே மிஞ்சும். நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊரு வேறு வேறு மலர்கள் வைத்து படைத்த படைப்பாளி யார்? உலகில் ஏன் இந்த வேற்றுமை? அவன் கண்ட மலர்களை நான் காண முடியாதா? அவன் ரசித்த அழகு நான் ரசிக்க முடியாதா?  சரமாரியான கேள்விகள். விடை இல்லா வினாக்கள்.

இதைப்போலவே ஷெல்லி பார்த்த மேற்குக்காற்று  - அழித்து, ஒழித்து, அழிச்சாட்டியம் செய்து பின் மழையை அளிக்கும் அந்த காற்று,! ஸ்காட்லாந்து நாட்டின் மேட்டு நிலம், அங்கே விளையும் மரங்கள், கீட்ஸ் கேட்ட கிள்ளைக்குரல் - நைட்டிங்கேல் - அனைத்தும் மனமேடையில் என்றும் உலா வரும் இனிமையான ஏக்கங்கள். இன்னும் பட்டியல் இட்டால் நீண்டு கொண்டே செல்லும். ஆங்கிலக் கவிகளின் சூரியனான ஷேஸ்பியர் பிறந்த இடம், மாபெரும் ஆங்கில கவிகளை இறப்புக்குப்பின் கல்லறைகளாக வாழ இடம் கொடுத்த வெஸ்ட் மினிஸ்டர் அபே என பல்வேறு இடங்களை என் வாழ்நாளில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் யாரும் அறியாவண்ணம் மனதில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்தது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையதளம், கணினி மற்றும் இன்றைய ஸ்மார்ட் போன் இல்லாத காலகட்டங்களில் இந்த இடங்களை  நூலகங்கள் சேமித்து வைத்திருக்கும் பழைய புத்தகங்களின் பக்கங்களிலேயே காண முடியும். அதுவும் மங்கியதோர் பதிப்பிலேதான்.  

ஆங்கில பேராசிரியராக அரசுக் கலைக்கல்லூரியில் பணிக்கு அமர்ந்ததும் இந்த ஆசைகள் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தன. இதற்கு முன்பே 2007 -ம் வருடம் என் சகோதரனின் அழைப்பால் அமெரிக்கா நாட்டின் கிழக்கு கரை மியாமியில் தொடங்கி நயாகரா வரை நாப்பது நாட்கள் காரில் பிரயாணம் செய்து கழித்தது வாழ்வின் சிறப்பு நாட்கள். என் சகோதரனின் பலகால சேமிப்பு கணிசமான அளவு கடலில் இட்ட பெருங்காயம் போல் கரைந்தது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு முன்னரே என் தந்தையின் ஏற்பாட்டின் பேரில் இலங்கை சுற்றுப்பிராயணம், பின் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான டான்சானியா மற்றும் கென்யா என பல நாடுகள் பார்த்தாகி விட்டது. ஒவ்வொரு முறையும் ஓர் அனுபவம் இருக்கும். இந்த பிரயாணங்களில் ஆகும் செலவுகள் சிறிது அச்சப்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். லட்சங்களில் விமானப் பயணம், சுற்றிப்பார்க்க செலவு, உணவு, தங்குமிடம், நுழைவுக்கட்டணம் என அனுமார் வால் போல் செலவு நீண்டுகொண்டுதான் செல்லும். நடுத்தர குடும்பத்தினருக்கு இவ்வாறு செலவு செய்வது மிகுந்த சிரமம். ஆனால் என் அப்பாவிற்கு சேமிப்பு பற்றி எந்த அக்கறையும் கிடையாது. அவருக்கு பல நாடுகள் பல மனிதர்கள் பார்க்க ஆசை. பலமுறை எனக்கும் என் மகனுக்கும் அவர் செலவு செய்து இவ்வாறு வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றுள்ளார். என் சகோதரனும் எங்கள் பிரயாணங்களுக்கு தேவையான விமான டிக்கெட், செல்லும் இடத்தில் தங்க விடுதி என ஆன்லைன் மூலம் பதிவு செய்து எங்களுக்கு  உறுதுணையாக இருப்பார்.

உலகின் எல்லா நாடுகளையும் விட  அதிக அளவில் செலவு செய்து சுற்றுப்பிராயணம் மேற்கொள்ள வேண்டிய நாடுகள் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் யுனைடெட் கிங்டோம். இந்த நாடுகளின் பணம் அதாவது கரன்சி மதிப்பு நம்முடைய ரூபாய் மதிப்பை விட பல மடங்கு அதிகம். உதாரணமாக, அமெரிக்க  ஒரு டாலரின் மதிப்பு தோராயமாக 65 ரூபாயிற்கு சமம் ஆகும். அதே போல் லண்டனில் ஒரு பவுண்ட் மதிப்பு 84  இந்திய ரூபாயாகும். ஐரோப்பாவின்  ஒரு யூரோ நமது 73 ரூபாய் ஆகும். இந்த மதிப்புகள் ஒவ்வொரு நாளும் கூட குறைய இருக்கும். குறைவது கொஞ்சம்தான். அதிகம் ஆவது அதிகம். எனவே இந்த நாடுகளில் சுற்றுப்பிராயணம் மேற்கொள்ள பணம் கணிசமான அளவில் தேவைப்படுவது நிஜம். 2007 -ம் வருடம் அமெரிக்க சுற்றுப்பிரயாணம் என் சகோதரனின் செலவில் கண்டு களித்த போதே இந்த நிஜத்தை நன்கு அறிந்து கொண்டேன். எனவே, என் கனவுப்பிரதேசங்களான லண்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு செல்ல பணம் அதிக அளவில் சேமிக்க வேண்டும் என்பதும் எனக்கு ஏற்பட்ட அடுத்த ஒரு தடை ஆனது.  

என் கனவுகள் ஆழ்மனதில் அப்படியே இருந்தாலும், பல முறை என் மனதில் தோன்றுவது நாம் எப்படி இந்த நாடுகளுக்கு செல்வது. என்ற ஒரு நிராசையே.  2007 - ம் வருடம் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியில் பார்த்த பால் வெள்ளை அருவி மட்டும் அல்லாது நீர்வீழ்ச்சியை ஒட்டி இருந்த பூங்காவில் மலர்ந்து இருந்த பல வண்ண துலிப் மலர்கள் என் மனதில் அடிக்கடி  தலை காட்டி என்னை தொந்தரவு செய்யும். துலிப் மலர்கள் உடன் வேற்று சில அழகிய மலர்கள் மட்டுமே  நிறைந்த ஒரு  மிக அழகான பூங்கா நெதர்லாண்ட்ஸ் நாட்டில் உள்ளது என்று படித்த போது உடனே அங்கே சென்று அவற்றை காணவேண்டும் என மனம் பேராசை கொண்டது. சினிமாவிலும், இந்த மலர்களின் கூட்டத்தை ஏதாவது பாடல் காட்சிகளில் காண்பிக்கும் பொழுது, கண்கள் அப்பூக்களின் அழகையே சுற்றி வட்டமிடும். எங்கோ இருக்கும் அழகை நம் கண்களுக்கு விருந்தளிக்கும் சினிமா துறைக்கு  இங்கே நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

என் கனவுகள் நிறைவேறும் கட்டத்தில் முதல்படியாக 2015 -ம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரன் குடும்பம், என் குடும்பம் மற்றும் என் பெற்றோர்கள் என எட்டு பேர் கொண்ட குழு லண்டனில் ஆரம்பித்து ஷேஸ்பியர் பிறந்த இடம் முதல் வொர்ட்ஸ்வொர்த் அவரின் கல்லறை வழியாக ஸ்காட்லான்ட் சென்று பின் அயர்லாந்து வந்து டப்ளின் நகரில் உள்ள மிகசிறந்த டிரினிட்டி காலேஜ் பார்த்து வேல்ஸ் வழியாக லண்டன் சேர்ந்து பின் ஊர் திரும்பினோம். எட்டு நாட்கள் சுற்றுப்பிரயாணம் முன்பே பணம் காட்டும் முறையில் ட்ரபால்கர் என்ற ஒரு வெளிநாட்டு பிரயாண அமைப்பாளர் மூலம் ஏற்பாடு செய்து கொண்டோம். நல்ல முறையில் எல்லா இடங்களையும் ரசிக்க முடிந்தாலும் சில குறைகள் இருக்கவே செய்தன. உணவு முழுக்க வெளிநாட்டு முறை. மேலும் லண்டனில் இருந்து புறப்பட்டோமே தவிர லண்டன் முழுக்க சுற்றிப்பார்க்க அந்த அமைப்பில் ஏற்பாடு இல்லை. மேலும் ஒரு நாள் கூட இருந்து ஒரு சில இடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. சந்தோசமாக குடும்பத்துடன் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்ட அனுபவத்துடன் என் ஆங்கில இலக்கியத்திற்கு தொடர்பான இடங்களை பார்த்த களிப்பும் இருந்தது. எனினும் லண்டன் முழுதும் பார்க்க முடியவில்லை என்ற குறையும் இருந்தது.

உடனடியாக இன்னுமொரு பயணம் என்பது நானே எதிர்பார்க்காத ஒன்று. அதுவும் அதிக அளவில்  பொருள் செலவு தரும்  ஐரோப்பிய நாடுகளுக்கு, எனது கனவு பிரதேசங்களுக்கு என்பது என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஒரு ஜாக்பாட் அல்லது கடவுள் நேரில் தோன்றி அளித்த வரம் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2015 - ம் வருடம் யுனைடெட் கிங்டோம் சென்று வந்த பிறகு இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று பல பல்கலைக்கழகங்களில் அதுவும் வட இந்திய நகரங்களில் பல ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி, ஹிமாச்சலப்பிரதேசம் பல்கலைக்கழகம் சிம்லாவில் இருபத்தி ஒரு நாள் புத்தாக்கப்பயிற்சி, குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஒரு ஆய்வுக்கட்டுரை, மஹாராஸ்ட்ரா மாநிலம் புனித ஸ்தலம் ஷீர்டி அமைந்துள்ள இடத்தில உள்ள கோபர்கான் என்ற ஊரில் உள்ள கல்லூரியில் சிறப்பு பேச்சாளர், இதன் இடையே கல்லூரி அலுவல்கள், வகுப்பில் பாடங்களை முடிப்பது, குடும்பத்தை கவனிப்பது என மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் எந்த சிந்தனையும் இல்லாது நதிநீரின் வேக ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த போது, 2017   ஜனவரி மாதம்  வாக்கில் ஸ்விட்ஸ்ர்லாண்ட்  நாட்டில் உள்ள ஜெனீவா ஏரிக்கரையில் அமைந்துள்ள லாசன் பல்கலைக்கழகத்தில் "இடம் பெயர்தல், மொழி மற்றும் தனித்துவ அடையாளங்கள் பற்றிய அணுகுமுறை"  என்ற ரீதியில் ஒரு மாநாடு மே மாதம் 4 - 6 தேதிகளில் நிகழவிருக்கும் தகவல் வலைத்தளம் மூலம் எனக்கு எட்டியது. ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம் உடனடியாக அனுப்பி வைத்த பிறகு அங்கே எவ்வாறு செல்வது என்ற தவகல்கள் திரட்ட முற்பட்டேன்.

அந்த நாட்டுக்கு செல்ல என்ன விஷயங்கள் தேவைப்படும் என ஆராய்ந்து பார்த்ததில், மிகுந்த குழப்பமே மிஞ்சியது. பிரயாணம், தங்குமிடம் அங்கிருந்து பல்கலைக்கழகம் செல்ல 'ரயில்' பயணக்குறிப்புகள் அனைத்தும் வலைதளத்தில் கிடைத்தாலும், மனதில் தயக்கம் இருந்தது. இந்தியாவில் எங்கு  செல்லவேண்டுமானாலும் உடனடியாக IRCTC மூலம் ரயில் பயணம்  அல்லது விமான பயணத்திற்கு உடனடியாக பதிவு செய்வது போல் வெளிநாடு தனியாக செல்ல தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்ய  ஒரு சிறு பயம் மனதில் ஏற்பட்டது உண்மை.

அதன் காரணமாக போன முறை ட்ரபால்கர் அமைப்பாளருடன் பயண ஏற்பாடுகள் செய்து கொடுத்த Club7 holidays என்ற சென்னையை சேர்ந்த பிரயாண ஏற்பாட்டாளர்களை அணுகினேன். ஸ்விட்ஸ்ர்லாண்ட் சென்று அங்கே தங்கி என் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து, பின் அங்கே சுற்றிபிரயாணம் செய்துவர ஏற்பாடு செய்து தரமுடியுமா என வினவியபோது, அவர்கள் அனுப்பிய பல வித பிரயாணத்திட்டங்கள் அடங்கிய மின்னஞ்சல் என் மொத்த திட்டத்தையே மாற்றியமைத்து இந்த பயணம் செல்ல வழிவகுத்தது. கடைசியில் சுற்றுலா செல்லும் ஏற்பட்டால் லாசன் பல்கலைக்கழகத்தில் என்னால் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இயலாமல் போனது கொஞ்சம் குறைதான்.

 

[தொடரும்]

ஐரோப்பியப்பயணத்தொடர் (1) :  எல்லைகளை வெல்லவே…. ---  -மனமும்  மனம் சார்ந்த  அயல்திணையும்.. வாசிக்க

* முனைவர் ஆர்.தாரணிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.