சி.யுவராஜ்முன்னுரை
பண்டைய தமிழ் நாகரிகம் மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாகவும்  செய்தி ஊற்றாகவும் அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூலில் ஒன்று அகநானூற்றுப்பாடல்களில் மூலம் பார்த்தால் சிறந்த சிந்தனைகள் மலர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தைப் பிரதிபலிப்பதையும் காணலாம். காதல். களவு, இயற்கை, விலங்கு, பண்பாடு, திருவிழா, சடங்குமுறை முதலியன செய்திகள் இருப்பினும், பல்வேறு உயிரினங்கள் பற்றி செய்திகளை புலவர்கள் பாடல்கள மூலம் அறியமுடிகின்றன. இக்கட்டுரை வாயிலாக அகநானூற்றுப்பாடல்களில் இருவாழ் உயிரினங்கள் ( நிலம், நீர்) பற்றி ஆய்ந்து நோக்கில் கொடுக்க முற்படுகின்றன.

தேரை
தேரை என்ற உயிரியைப்பற்றி உயிரியலார் கூறுவது, தகவல்கள், தவளையினத்தில் ஒன்றாகிய தேரைப்பார்ப்பதற்கு தவளை போன்று இருக்கும். இவை இரண்டுமே அருநிலை வாழ்வியல் வகுப்பைச் சேர்ந்தவை. இரவு இரைதேடும் தேரைகள் நிலத்தில் வாசிப்பவை. எனினும் இவை இருப்பிடம் சதுப்புநிலப்பகுதி அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் தான் அமைந்திருக்கும். தேரை ஊர்ந்தும்  நகர்ந்தும் செல்லும். பொதுவாக  இவை பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருக்கும் அத்துடன் கறுப்பான வட்டங்கள் புள்ளிகள் காணப்படும். சங்க இலக்கிய நூல் அகநானூற்றில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. தேரையின் ஒலிப்பு முறைகள் ‘நீர்மிசைத்தெவுட்டும் தேரை ஒலியின்’ (அகம்.301:18) எனவும், ‘அவல்தோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க’ (அகம்.364:3) எனவும் அகநானூற்றில் பாடல்கள் மூலம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன.

முல்லை நிலத்தில் மிகுதியாக மழைப்பொழிந்து ஆழமாகிய நீரினையுடைய பள்ளங்கள் இருக்கும் அதில் வாழும் திறந்த வாயினையுடைய தேரைகள் மகிழ்ந்து சிறிய பலவாகிய இசைக்கருவிகளைப்போல் ஒலிக்கும். இதனை,
படுமழை பொழிந்த பயமிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்க     (அகம்.154:1-3)
என்று பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் காட்டுகிறார்.

கூத்தாடுபவர்கள் முரசினைத்தட்டித் தாளம் அமைப்பதும் நீரில் ஒலிக்கும் தேரை ஒலியினைப்போன்று தோன்றிய தம் என்று அதியன் விண்ணத்தனார் படுகின்றார். இதனை,
.  .  .  .  .  .நீர்மிசைத் தெவுட்டும்
தேரை யொலியின் மானச் சீரமைத்துச்;
சில்லரி கறங்குந் சிறுபல் லியம்           (அகம்.301:18-20)
எனும் பாடலடிகள் தெளிப்படுகின்றன.

மழைக்காலத்தில் ஆடுகளம் தோறும் ஒலிகின்ற பறையினைப்போல் பள்ளம் தோறும் தேரை ஒலிகின்றது. இதனை,
ஏறுடைப் பெருமழை பொழிந்தென அவறோறு
ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க    (அகம்.364:2-3)
எனும் வரிகளின் மூலம் தேரையைப்பற்றி அறிலாம்.

நண்டு
நண்டுகள் அவற்றின் வாழிடங்களுக்கு ஏற்ப கடல் நண்டுகள், கழிநண்டுகள் நன்னீர் நண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. சில வகை நண்டுகள் நிலவாழ்வன ஆகும்.
இருவாழ் உயிரினகளுள் நண்டு குறித்து மிகநுட்பமான தகவல்களை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. “சங்க இலக்கியத்தில் அலவன், களவன். நெண்டு என்னும் பெயர் வழக்குகளே பெருமளவில் பயின்று வருகின்றன” என்பர். ‘இருஞ்சேற்றீரளை அலவன்’ (அகம்.350:4), எனும் கடல் நண்டு, சிவந்த நிறமுடைய வாயலில் வாழும் ‘செக்கர் நெண்டு’ (அகம்.204) ஆகியன பற்றி சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர். நண்டுகளின் கண்கள் சிறிய மலர் மொட்டுகள் போன்றிருந்தன. என்பதை,

வேப்புநனை யன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு  (அகம்.176:8)

என்ற பாடலடிகள் மூலம் காணலாம். நண்டுக்குப் பக்கவாட்டில் அமைந்திருக்கும் கால்கனையும், அதன் முன்பக்க கால்களில் அமைந்திருக்கும் இடுக்கி போன்ற கொடுக்கினையும் ‘மாக்கவை மருப்பு’ என்றும் குறிப்பிடுவதை.

மருங்கிற்  போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற் றீரனை அவலன்            (அகம்.350:3-4)

என்ற பாடலடிகள் மூலம் காணலாம். மகளிர், செந்நிற நண்டுகளின் வளைகளைத்தோண்டி உள்ளிருக்கும் நண்டுகளைப் பிடித்து விளையாடும் செய்தியை,
செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி
.  .  .  .  .  .  .  .  .  .  .  .
வெண்டலைப் புணரி ஆயமொ டாடி       (அகம்.20:4-8) 
என்று உலேச்சனார் சுட்டுகிறார்.

மேலும், நண்டுகளை விரட்டி விளையாடுவதும் சங்க கால மகளிரின் விளையாட்டுகளுள் ஒன்றாக இருந்தது.

இதனை,
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள் (அகம்.280:3-4)
எனும் தொடரால் அறியலாம். 

தாழையின் வேரில் வளையமைத்து வாழும் நண்டுக்குடும்பத்தை,
தாழை வேரனை வீழ்துணைக் கிடூஉம்
அலவற் காட்டி நற்பாற் றிதுவென        (அகம்.380:6-7)
என்று மதுரை மருதனிளநாகனர் காட்டுகிறார். நண்டின் எறைவிடம் மண்வனை என்பதை,
களவன் மண்ணனைச் செறிய           (அகம்.235:11)
எனும் பாடல்களில் மூலமாக அறிய முடிகின்றன.

ஆமை
ஆமையினத்தைக் குறித்து விலங்கியலாளர் கூறுகையில், ஊர்வன உயிரினத்தில் மேலோடு உள்ள ஒரே உயிரினம் ஆமைகள் தான். இவற்றில் கடலில் வாழ்பவை. நன்னீர் நிலைகளில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை எனப் பல வகைகள் உள்ளன. இவை உடல் முழுவதும் கடினமான ஓட்டினால் மூடியிருக்கும்;. தலை, கால், வால் மட்டுமே வெளியே தெரியும். ஆபத்தென்றால் இந்த உறுப்புகளை உடலினுள் இழுத்துக் கொள்ளும். இவற்றிற்கு பற்கள் கிடையாது என்று விலங்கிலார் மொழிவர். கடலாமை, நன்னீர் ஆமை, சருகாமை அல்லது வயலாமை போன்ற ஆமைகள் பற்றிய செய்திகள் அகநானூறு நூலில் இடம்பெற்றுள்ளன. ‘ஆமை’ என்பதற்கு ‘அம்’ என்ற சொல்லே வேராகும். ‘அம்;’ எனும் வேரிலிருந்து தோன்றிதே ஆமை என்பர்.

தன்னை பாதுகாத்துக்கொள்ள மேலோட்டின் கால்களையும், தலையையும் உள்ளே இழுத்துக்கொள்வது இதன் குணச்சிறப்பாகும். ஆமைகளுக்கு நீண்டு வளர்ந்த கூரிய நகங்கள் இருப்பாதக அகநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன. பின்னி தூறுகளையுடைய வள்ளைக்கொடியின் நீண்ட இலைச்செறிவில், மடிந்து கிடக்கும் துயிலை வெறத்த வலிய நகத்தினையுடைய  ஆமையை,

பிணங்கரில் வள்ளை நீடிலைப் பொதும்பின்
மடிதுயின் முனைஇய வள்ளுகிர் யாமை    (அகம்.256:1-2)

என்று மதுரைத்தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் வருணிக்கின்றார்.

ஆமை வளைந்த காலிளையுடையது என்பதை, ‘கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்’ (அகம்.117:16) எனும் தொடரிலும் அறியலாம். நிறைவான கருப்பம் அடைந்த ஆமையானது அடும்புக்கொடி சிதையுமாறு அதை இழுத்து வளைந்த கழியின் வெம்மையான மணல்மேட்டின் பக்கத்தே சேர்ந்து,  இதில் மறைய ஈன்று, புதைத்த யானைக்கொம்பினால் செய்தவட்டுப் போன்ற வடிவம் உடைய புலால் நாறும் மூட்டைய மறைத்து வைக்கும். அதைத்திறந்த வாயையுடைய ஆண் ஆமை முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படும் வரை பாதுகாக்கும் என்று விலங்கியல் ஆய்வாளர் நோக்கில் அகநானூற்றுப்புலவர்கள் பாடியுள்ளனர். இதனை,

நிறைக்சூல் யாமை மறைத்தீன்று புதைத்த
கோட்டுவட் டுருவின் புலவுநாறு முட்டைப்
பார்ப்பிட னாகும் அளவைப் பகுவாய்க்
கணவ னோம்புங் கானலஞ் சேர்ப்பன்      (அகம்.160:5-8)

என்ற குமழிஞாழலார் நப்பசலையார் பாடல்வழி அறியலாம். இப்படிப்பட்ட கானலுக்குத் தலைவன் என்பது புலவர் உணர்த்தச் செய்தியாகும்;.

திறந்த வாயினையுடைய ஆமை ‘பகுவாய் யாமை’(அகம்.356:2) எனக் குறிப்பிடப்படுகிறது. தேவர்களின் உணவுப்பொருளாக ஆமை இடம்பெற்ற செய்தினை அகநானூற்றுப்பாலைத்திணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர். வாடாத மலர்களைச் சூடியுள்ள தேவர் உண்பதற்காகச் செந்தீ ஓங்கிய வேள்விக்குண்டத்தில் இடம்பெற்ற ஆமைதான் முன்பிருந்த நிழல் பொருந்திய பொய்கைக்குச்செல்ல விரும்பியதைப் போல என்ற உவடையாகியுள்ள திறத்தை,

கரியாப் பூவிற் பெரியோர் ஆல
அழலெழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு  (அகம்.361:19-12)

என்ற எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல் மூலம் அறியலாம்.

நத்தை
நத்தை இனத்தின் செயல்பாடினை விலங்கியலாளர் கூறுவது, நத்தை மெல்லுயிரிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினம். இது ஒரு விந்தை உயிரினம் . இதன் உடலைப் பாதுகாக்க சுருள் வடிவ ஓடு ஒன்றிருக்கும். கடல்களில் தரைப்பகுதியில் வாழ்வது. இது கடல்களிலும், மலையுச்சிகளிலும், பாலைவனத்திலும் தரைக்கடியிலும் வளர்கின்றது. நன்னீர் நிலைகளில் வாழும் நத்தைகளும் உள்ளன.

நத்தை எனத் தற்காலத்தே வழங்கப்படுவது சங்க இலக்கியத்தில் ‘நந்து’, ‘நொள்ளை’  எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. கள்ளி மரங்கள் சூழ்ந்த காட்டில் வற்றிய வாகை மரத்தின் அடிப்பகுதியில் உள்ளிருக்கும் ஊன் வாடிய நிலையில், கரிந்த மூக்கினையுடைய சிறுநத்தைகள் பொருக்குடைய அடிமரத்தில் பற்றிக் கொண்டிருக்கும்.
இதனை,

கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளுள் வாடிய கரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின் (அகம்.53:7-9)
என்று சீத்தலைச் சாத்தனார் வருணிக்கின்றார்.

உயிரினங்கள தம் சூழ்நிலைக்கேற்ற தகவலமைப்புகள் உடையனவாகக் காணப்படுகின்றன. இத்தகவலமைப்புகள் அவற்றைப் பிற உயிரினங்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கின்றன. மூக்கில் கரியுடைய நத்தையானது பொருக்குடைய அடிடரத்தைப் போன்ங நிலையோடு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நிலை இப்படலில் காட்டப்படுகின்றன.

முடிவுரை
இக்கட்டுரையின் வாயிலாக அகநானூற்றுப்பாடல்களின் இருவாழ் உயிரினம் பற்றி ஆய்வு. நிலம், நீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள் தேரை, நண்டு, ஆமை, நத்தை போன்றவை மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வுயிரினங்கள் வகைபாடுகள், மற்றப்பெயர்கள், திணை வாழ்விடம், புலவர் தான் கண்ட கேட்டச் செய்திகளை பாடல்கள் மூலமாக வெளிக் கொணர்ந்துள்ளன. உயிரினங்கள் உடல் வடிவமைப்பு, வருணனைகள், குணம் சிறப்பைப் பாடல்களில் கையாண்ட முறையைப் பார்க்கையில் உயிரினங்கள் மீது அளவற்ற  சங்ககால மக்கள் வாழ்ந்து வந்தமையை சுட்டிக்காட்டப்படுகின்றன. இக்கட்டுரை மூலமாக அகநானூற்றில் இருவாழ் உயிரினங்கள் பற்றி செய்திக்கொணர முற்பட்டு இருப்பதைக் காணப்படுகின்றன. 

துணைநூற்பாட்டியல்
1.சைவசித்தாந்த நூற்பதிப்பக்கழகம்          - ந.மு. வேங்கடசாமி நாட்டார்
ரா. வேங்கடாசலம் பிள்ளை
2.    விந்தை உயிரினங்கள்                      - என். ஸ்ரீநிவாஸன்
3.    பழந்தமிழர் நூல்களில் நீர்வாழ் உயிரினங்கள்  - ச. பரிமளா
4.    சொல்லாராய்ச்சி அமுதம்              - சு. சௌந்தரபாண்டியன்

- சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,    திருச்சிராப்பள்ளி --
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.