அன்பு 'பதிவுகள்' வாசகருக்கும் உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம். அச்சில் மற்றும் இணைய வெளியில் வெளியாகும் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை யாவுமே நம் வாசிப்பை வளப்படுத்துபவை. ஒரு விமர்சகராக மற்றும் வாசகராக அவற்றுள் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.வாய்ப்பளித்த வ.ந.கிரிதரன் அவர்கட்கு நன்றிகள். அன்பு சத்யானந்தன்.


மொழிபெயர்ப்பு சிறுகதை அவள் நகரம், அவள் ஆடுகள் ( ஜப்பான் : ஹாருகி முரகாமி; ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம் )
மலைகள் இணைத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் அற்புதமான சிறுகதைக்கான இணைப்பு  இது.  மொழிபெயர்ப்பு நம் தமிழில் எழுதப்பட்ட கதை இது என்னுமளவு நம்மை முரகாமிக்கு அண்மைப்படுத்துகிறது.

கதையின் இந்தப் பகுதி முத்தாய்ப்பானது மட்டுமல்ல நம் சிந்தனையைத் தூண்டுவது:

'சப்போரா விடுதியில் என்னுடைய சிறிய அறைக்கு மீண்டு வந்த நான், அந்தப் பெண்ணின் வாழ்க்கையோடு எனக்கும் தொடர்பு இருப்பதைத் திடீரென்று கண்டுணர்ந்தேன். அவளின் இருத்தலை என்னோடு பொருத்திப் பார்த்தேன். பெரும்பகுதி ஒத்திருந்தாலும் ஏதோ ஒன்று இடறுகிறது. எனக்குச் சரியாகப் பொருந்தாத ஆடையைக் கடன் வாங்கி அணிந்திருப்பதுபோல ஒரு உணர்வு. நான் இயல்பான இருப்பமைதி இல்லாததாக உணர்கிறேன். என் கால்கள் கட்டப்பட்டுள்ளன. முனை மழுங்கிய கைக்கோடாரி போன்ற ஒரு கத்தியால் அந்தக் கயிற்றை அறுப்பது குறித்து நினைக்கிறேன். அப்படி அறுத்துவிட்டால், நான் எப்படித் திரும்பி வருவேன்? அந்த நினைப்பு என்னைக் குலைக்கிறது. எப்படியானாலும் நான் அந்தக் கட்டை அறுத்தேயாகவேண்டும். அதிகமாக பீர் குடித்துவிட்டேன், அதனால் இப்படித் தோன்றலாம். பனியும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் அவ்வளவுதான். மெய்ம்மையின் இருண்ட சிறகுகளுக்கடியில் மீண்டும் நழுவி விழுந்தேன். என் நகரம். அவள் ஆடுகள்.'

இப்போது அவளுடைய ஆடுகளைப் புதிய மருந்தால் கிருமிநீக்கம் செய்ய, அவள் தயார்படுத்த வேண்டும். நானுந்தான். குளிர்காலத்துக்காக என் ஆடுகளைத் தயார்படுத்த வேண்டும். தீவனம் சேகரிக்கவேண்டும். மண்ணெண்ணெய்க் கிடங்கினை நிரப்ப வேண்டும். அந்தச் சாளரம் பழுதுபார்க்க வேண்டும். குளிர்காலம் பக்கத்து மூலைக்கு வந்தே விட்டது.'

யார் இந்தப் பெண்? அவர் ஒரு உள்ளூர் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி அறிவிப்பாளர் போன்றவர். அவர் தொலைக்காட்சியில் தமது ஊர் பற்றி விவரிக்கிறார். அவர்களது ஊரில் ஒரு நதி. அதில் தங்கத் துகள் ஒருகாலத்தில் இருந்தது அதற்கென அமைக்கப்பட்டன சாலைகள். தொழிலாளிகளுக்கென சில குடிசைகள். அவை எல்லாம் பயன்பாடின்றிப் பழுதாகி விட்டன. நகரைத் தேடி இளைஞர்கள் பலர் போய் விட்டார்கள். விவசாயத்துக்குப் புத்துயிர் தரவும் அந்த சிறு நகரிலேயே இருக்கவும் இன்னும் பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த சிறு நகரில் ஆடுகளுக்கான கிருமி நீக்க மருந்து தயாராகிறது. வாங்குவோரின் தேவையைத் தெரிவுக்கும் படி அந்தப் பெண் வேண்டுகிறார். இந்த சிறு நகரம் முரகாமியைத் தன் சிறுவயதில் தான் வாழ்ந்த சிற்றூருக்கே அழைத்துச் சென்று விட்டது. அங்கே உள்ள ஆடுகளைத் தான் தயார் செய்ய வேண்டும் என்று ஒரு கணம் ஒரு மின்னல் எண்ணம் பளிச்சிட்டு அவருக்குள் மறைகிறது. ஆனால் அவர் அவ்வாறு செய்வாரா? மாட்டார். அவரே கதையை இப்படித்தான் முடிக்கிறார் 'அதுபோல எத்தனையோ விஷயங்களைத் தூக்கித் தூர எறிந்திருக்கிறேன், நான். வெளியே இன்னும் பனி பெய்துகொண்டிருக்கிறது. ஒரு நூறு ஆடுகள், இருட்டுக்குள் கண்களை மூடிக்கொண்டன'

நகர வாழ்க்கை நம்மிடமிருந்து பறித்தவை, பெரிய ஆளாகும் வளர்ச்சி நம்மிடமிருந்து பறித்த குழந்தைத்தன்மை இவை போன்ற எத்தனையோ அந்த நூறு ஆடுகள் என்னும் பதிவில் நம்முன் விரிகின்றன.

சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் நம் பயன்பாட்டுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அதைத் தாண்டி அவர் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி நமக்கு அக்கறை இல்லை. சிறு நகரங்களுக்கு மட்டுமல்ல. சகஜீவிகளுக்கும் இதே அணுகுமுறை தான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.