இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்

உலக இலக்கியம் (மீள்பிரசுரம்)
மேடம் பவாரி - துரோகத்தின் வசீகரம்

- எஸ். ராமகிருஷ்ணன் -


Evil is done without effort, naturally, it is the working of fate; good is always the product of an art.- Charles Baudelaire

வாழ்வின் அர்த்தமற்ற தருணங்களையும் வெறுமையையும் துல்லியமாக வெளிப்படுத்தியதில் மேடம்பவாரியை போல வேறு எந்த நாவலையும் நான் வாசித்தில்லை என்று பிளாபெர்ட்டை சிறப்பித்து கூறுகிறார் ஏ.எஸ்.பையட். அது போலவே மேடம் பவாரி குஸ்தாவ் பிளாபெர்ட்துரோகத்தின் சரித்திரம் மிக விசித்திரமானது. சரித்திரப் புத்தங்களில் நாம் அறிந்திருந்த துரோகங்களை விடவும் அன்றாட வாழ்வில்
துரோகத்தின் பங்கு பற்றி நாம் உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினால் அது வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வை போல யாவரையும் ஊடுருவியிருப்பதை அறிந்து கொள்ள முடியும்.  அரசியல் மற்றும் சமூக தளங்களில் துரோகம் நடைபெறும் போது ஏற்படுத்தும் கவனமும் கொந்தளிப்பும் தனிநபர் வாழ்வில் ஏற்படும் போது பெரிதாக உக்கிரம் அடைவதில்லை. மாறாக அது ஒரு அறஒழுங்கை மீறிய செயல் என்று வகைப்படுத்தபடுவதோடு விதியின் செயலாகவும் அறியப்பட்டுவிடுகிறது.அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடக்கும் அரசியல் துரோகங்களை விடவும் தனிநபர் வாழ்வில் துரோகம் ஏற்படுத்தும் வலியும் வேதனையும் மிக ஆழமானது என்பதையே இலக்கியம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றது.

துரோகத்தை கதையின் மையப்பொருளாக கொண்ட இலக்கியத்திற்கு சிறந்த உதாரணம் ஆயிரத்து ஒரு அற்புத இரவுகள். ஷாரியார் என்ற மன்னன் தனது மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டு அடிமைகளோடு கள்ளஉறவு கொண்டிருக்கிறாள் என்பதற்காக அவளை கொன்றுவிட்டு அதன்பிறகு தினம் ஒரு பெண்ணை மணந்து இரவு அவளை அனுபவித்து விட்டு விடிகாலையில் அவளை கொன்றுவிடுகிறான். அப்படி மணம் செய்விக்கபட்டு முதலிரவு அறைக்கு வந்த ஷெகர்ஷாத் என்ற பெண் மரணத்திலிருந்து தப்புவதற்காக கதை சொல்லத் துவங்குகிறாள். அந்த கதைகளின் தொகுப்பு தான் ஆயிரத்தோரு அற்புத இரவுக்கதைகள்.

காமசூத்ரா போன்ற இந்திய பாலியல் பிரதியும் கூட காமத்தை பற்றிய தனது கவனத்தை விடவும் பெண்களை எவ்வாறு கண்காணித்து ஒழுக்க கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையே முக்கியமாக பேசுகிறது.

பத்தொன்பதாம் நுற்றாண்டு நாவல்கள் தனது பொதுக்களமாக கொண்டிருந்தது இது போன்ற கலாச்சார மீறல்களையும் அதன் விளைவாக சிதைவுறும் குடும்பங்களையும் தான். குடும்ப உறவுகள் குறித்து அதுவரை கொண்டிருந்த புனிதங்களை விலக்கி உண்மையான சிடுக்குகளையும் நெருக்கடிகளையும் இந்த வகை நாவல்கள் வெளிப்படுத்த துவங்கின.

குறிப்பாக பெண்கள் குறித்து அதுவரை புனிதமாக்கபட்டு வந்த கருத்தியல்கள் யாவும் மறுதலிக்கபட்டதோடு இயல்பான விருப்பங்கள் மறுக்கபடும் போது அவர்கள் மேற்கொள்ளும் மீறல்களும் அதன் விளைவுகளும் நாவல்களில் விஸ்தாரமாக பதிவு செய்யப்பட்டன.

நாவல்களை சுவையானதொரு இனிப்பு பண்டம் போல ருசித்து ஏப்பம் விட்டு வந்த கலாச்சாரக் காவலர்களுக்கு இது போன்ற நாவல்கள் அதிர்ச்சி தருவதாகயிருந்தன. நாவல் என்பது கற்பனையின் பள்ளதாக்கு மட்டுமல்ல அது உண்மையின் நீருற்று என்று அவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை. ஆகவே கலாச்சார ஒழுங்கை சீர்குலைப்பதாக கூக்குரலிட்டதோடு இது போன்ற நாவல்களை தடைசெய்ய கோரி எதிர்ப்பும் நீதிவிசாரணைகளும் உருவாகின. அந்த எழுச்சி இந்த நாவல்கள் எழுப்பிய பிரச்சனைகள் மிக நிஜமானவை என்பதை உறுதி செய்வதாகயிருந்தன

பத்தொன்பதாம் நுற்றாண்டின் பிரெஞ்சு இலக்கியமும் ருஷ்ய இலக்கியமும் மதமும் கலாச்சாரமும் எப்படி மனித விருப்பங்களின் மீது தனது கெடுபிடியான ஆளுமை செலுத்தியது என்பதை பற்றிய விசாரணையை சார்ந்தே இயங்கியிருக்கிறது.

குஸ்தாவ் பிளாபெர்டின் மேடம்பவாரி ( Gustave Flaubert - Madame Bovary ) இந்த விசாரணையை மிகவும் உளவியல் பூர்வமாகவும் அதே நேரம் தன் சமகால சமூகத்தின் போலிமைகளுக்கு எதிரானதாகவும் எழுதப்பட்டிருந்தது

லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான மரிய வர்கஸ் லோசா பிளாபெர்டின் நாவலான மேடம் பவாரி பற்றிய தனது அவதானிப்புகளை Perpetual Orgy என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அந்நியமாதல் என்ற உணர்வு இன்றைய நாவல்களின் பிரதான உணர்ச்சி வெளிப்பாடாக இருக்கிறது. ஆனால் இந்த வெளிப்பாட்டை தோற்றுவித்த முதல் நவீன நாவல் மேடம்பவாரி என்று சிறப்பித்து கூறுகிறார்.

வாழ்வின் அர்த்தமற்ற தருணங்களையும் வெறுமையையும் துல்லியமாக வெளிப்படுத்தியதில் மேடம்பவாரியை போல வேறு எந்த நாவலையும் நான் வாசித்தில்லை என்று பிளாபெர்ட்டை சிறப்பித்து கூறுகிறார் ஏ.எஸ்.பையட். அது போலவே மேடம் பவாரி எழுதப்படாமல் போயிருந்தால் ஜேம்ஸ் ஐய்ஸின் யூலிசியஸ் தோன்றியிருக்காது என்று நபகோவ் தனது உரையொன்றில் குறிப்பிடுகிறார்.

இதற்கு மேலாக நாடின் கோடிமர் தனது கட்டுரையில் மார்சல் புரூஸ், ஜாய்ஸ், ஹென்றி மில்லர், டி.ஹெச். லாரன்ஸ் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பிளாபெர்ட்டின் பாதிப்பில் உருவானவர்களே என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்.

பிரெஞ்சு இலக்கியத்தின் மிக முக்கிய நாவலான மேடம்பவாரி வெளியாகி நுற்றியம்பது வருடங்கள் கடந்து விட்டன. 1856ல் வெளியாகி தடைசெய்யப்பட்டு திரும்பவும் 1857ல் வெளியானது முதல் மேடம்பவாரி சந்தித்த சர்ச்சைகளும் வாதபிரதிவாதங்களும் நுட்பமான வாசிப்புமே அதை இன்று வரை தொடர்ந்து செவ்வியல் பிரதியாக தக்கவைத்திருக்கிறது.

மேடம்பவாரி இதுவரை பதிமூன்றுக்கும் மேற்பட்ட முறை படமாக்கபட்டிருக்கிறது. ஆறு முறை தொலைக்காட்சி தொடராக்கபட்டிருக்கிறது. அத்தோடு இருபத்திரெண்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

மேடம்பவாரி ஒரு நாவல் மட்டுமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு அடையாளம். எதிர்ப்புக்குரல். பத்தொன்பதாம் நுற்றாண்டு பிரெஞ்சு பூர்ஷ்வா வாழ்வின் மீதான விமர்சனம்.

**
எனக்கு மேடம் பவாரி பிடித்திருப்பதற்கான காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று அது பகல்நேரங்களை செய்வதறியாமல் கழிக்கும் மனைவியின் தனிமையும் வெறுமையும் பற்றி பேசுகிறது என்பது. பெரும்பான்மை இந்திய குடும்பங்களில் காணமுடிகிற ஆனால் இந்திய நாவல்கள் அதிகம் கவனம் கொள்ளாமல் விட்டுப் போன முக்கிய அம்சமாக இது எனக்கு தோன்றுகிறது.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு வரும் புது மனைவியின் தனிமை மிக விசித்திரமானது. அவளது பகல்பொழுதுகள் வெறுமை நிரம்பியவை. பல நேரங்களில் அது விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்டது.

வீட்டை ஒழுங்கு செய்வதிலும், பழைய பொருட்களை சுத்தம் செய்வதையும் தாண்டி வெறுமை அவள் முன்னால் ஒரு பூதமென எழுப்பி நிற்கும் போது அவள் தன்னை அறியாமல் தனிமையின் பூதத்திடம் தன்னை ஒப்படைத்து கொண்டுவிடுகிறாள். அது அவளை தனக்கு தானே பேசிக் கொள்ள வைக்கிறது. பகல்கனவு கொள்ள செய்கிறது.

அந்த கனவுகள் நிஜமா இல்லை கனவு தானா என்று தெரியாத மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. தெருவை, வீட்டை சுற்றிலும் நடக்கும் சிறு சிறு காரியங்களை, குருவிகளின் சப்தத்தை, மதிய வெயிலின் நிசப்தத்தை கேட்க வைக்கிறது. தனிமையின் பள்ளதாக்கில் வீழ்ந்து கிடந்து கிடந்து அவர்கள் வெளிறிய முகமும் வெளிப்படுத்த முடியாத துக்கமும் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்த உலர்ந்த பொழுதுகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது மேடம் பவாரி .( சத்யஜித்ரேயின் சாருலதா திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் இது போன்ற ஒரு பகல்நேரத்து வெறுமை மிக நுண்மையாக படமாக்கபட்டிருக்கும் )

இரண்டாவது காரணம் பள்ளிவயதில் புத்தகம் படிக்க துவங்கி புத்தங்களின் வழியாக உருவான கற்பனை உலகம் போல ஏன் யதார்த்த உலகம் இல்லை என்று புரியாமல் தடுமாறும் ஒரு வாசக மனப்போக்கினை இந்த நாவல் அழகாக படம் பிடித்து காட்டுகிறது. மேடம்பவாரி எனும் எம்மா தனது பள்ளிவயதிலே ரகசியமாக காதல்கதைகளை வாசிக்க துவங்கிவிடுகிறாள். மதக்கட்டுப்பாடான பள்ளியில் காதல்கதைகளும் பால்உணர்வைத் துண்டும் புத்தங்களும் வாசிப்பது மறுக்கபட்டதால் சலவை செய்யும் பெண்ணின் வழியாக புத்தகங்களை வாங்கி படித்து வாழ்வு குறித்து எண்ணிக்கையற்ற ரகசிய கற்பனைகளை வளர்த்து கொள்கிறாள். அந்த கற்பனை அவளுக்குள் எண்ணிக்கையற்ற பிம்பங்களை உருவாக்குகிறது. அவள் கற்பனையால் பீடிக்கபட்டவளாக தன்னை அடையாளம் கொண்டு கொள்கிறாள்

ஆனால் எல்லா திருமணங்களையும் போலேவே எம்மாவின் திருமணமும் ஏமாற்றம் தருவதாகவே அமைந்துவிடுகிறது. புத்தங்களை போல ஏன் வாழ்க்கை இல்லை என்று நாவலில் ஒரு முறை எம்மா கேட்கிறாள். அந்த சிக்கல் நாவல் முழுவதும் விரிவாக பேசப்படுகிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ள பெண் உலகை புரிந்து கொள்வதில் அடையும் குழப்பங்களும், முடிவுகளும் மேடம் பவாரி நாவல் முழுவதும் விவாதிக்கபடுகின்றது. அதுவும் ஒரு காரணம்

இந்த இரண்டு பிரதான காரணங்களையும் தாண்டி என்னை வியக்க வைத்தது இம்பிரஸனிஷ ஒவியங்களை போல காட்சிகளை துல்லியமாக பிளாபெர்ட் வார்த்தைகளில் உருவாக்கிய இருந்த விந்தையே. பிளாபெர்டின் கதை சொல்லும் தன்மையும் எழுத்து முறையும் பிரெஞ்சு இலக்கியத்திற்கு ஒரு முன்னோடியாக அமைந்திருந்தது. அவர் வாக்கியங்களை அழகாக ஒன்றிணைக்க கூடியவர் .மனநிலையின் கொந்தளிப்பை வார்த்தைகளின் வழியாக உருவாக்கி காட்டும் விந்தையறிந்தவர். அவரது நாவலின் மீது எதிர்கருந்து கொண்டிருந்த பூதலேர் போன்ற பிரெஞ்ச் கவிஞர் கூட அவரது எழுத்து நடையை மிகவும் சிறப்பித்து கூறியிருக்கின்றார்.

செவ்வியல் நாவல்கள் எல்லாவற்றிற்கும் இருக்கும் பொதுகுணம் அது ஒரு கதாபாத்திரத்தின் கதையை மட்டும் கூறுவதில்லை என்பதே. ஒரு இசைக்கோர்வையை போல சிறியதும் பெரியதுமான பல்வேறு கதாபாத்திரங்களின் கூட்டிசைவால் நாவல் உருவாகிறது. பல்வேறு நிலைகளில் நாவல் வாழ்வின் சுகதுக்கங்களை ஆராய்கிறது. மதம் மற்றும் சமுக மாற்றங்கள் தனிநபர்களின் வாழ்வை எந்த அளவு கட்டுபாடு செய்கிறது என்பதை விசாரணை செய்கிறது.

சமூககட்டுமானங்களை உன்னிப்பாக ஆராய்ந்து அதன் பலவீனமான இடங்களை சுட்டிக்காட்டுகிறது. முடிவற்ற திருப்பங்களும் மன எழுச்சியும், காலமாற்றங்களும், அதன் விளைவால் உருவான அகபுற மாறுதல்களும் நிரம்பியதாக எழுதப்பட்டிருக்கிறது. அவ்வகையில் மேடம்பவாரி நாவல் தனித்துவமானதாகவேயிருக்கிறது.

மேடம்பவாரி நாவல் சார்லஸ் பவாரி என்ற மருத்துவரின் வாழ்வை விவரிக்கிறது. அவரது பள்ளிவயதில் நாவல் துவங்குகிறது. சார்லஸ் பவாரி ஒரு மருத்துவரின் மகன். ராணுவ மருத்துவராக பணியாற்றிய அவரது அப்பா கண்டிப்பானவர். அதன் காரணமாக சார்லஸிற்கு அம்மாவின் மீது மிகுந்த நெருக்கம் உருவாகிறது. எல்லா விஷயங்களையும் அம்மாவோடு மட்டுமே பகிர்ந்து கொள்கிறார். பள்ளி அவருக்கு விருப்பதானதாகயில்லை. ஆனாலும் வீட்டின் கட்டாயத்திற்காக படிக்கிறார்.

பள்ளி படிப்பை முடித்து அப்பாவை போலவே மருத்துவமும் படிக்கிறார். பிரான்சின் நார்மண்டி பகுதியில் உள்ள ருவான் என்ற தனது சிறிய ஊரில் மருத்துவராக பணியாற்ற துவங்குகிறார். பணம் படைத்த ஒரு பெண்ணை அவருக்கு மனைவியாக திருமணம் செய்து
வைக்கிறாள் அம்மா. ஆனால் புதிய மனைவியோ அவரை தன் கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதற்காக சிடுசிடுப்பும் அதிகாரத்தை செலுத்துபவளாகயிருக்கிறாள். அதனால் சார்லஸ் எப்போதுமே மன நெருக்கடியுடன் வாழ்ந்து கொண்டி ருப்பவராகயிருக்கிறார்

இந்த சூழலில் ஒரு நாள் கால்முறிவு ஏற்பட்டுள்ள ஒரு நோயாளியை காண்பதற்காக அருகில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு இரவில் அழைக்கபடுகிறார். அந்த வீட்டில் முதன் முறையாக எம்மா ருலெத் என்ற இளம்பெண்ணை சார்லஸ் சந்திக்கிறார். அவள் மருத்துவரை தனது அப்பாவின் அறைக்கு அழைத்து செல்கிறாள். அங்கே கால்முறிவு கொண்டு படுத்திருப்பவரை பரிசோதித்து மருந்து தருகிறார் சார்லஸ். எம்மா வாசல்வரை வந்து விடை தருகிறாள். எம்மாவின் பேச்சும் அழகும் அவரை மயக்குகிறது.

அதன் பிறகு நோயாளியை காண்பதற்காக அடிக்கடி எம்மாவின் வீட்டிற்கு வரத்துவங்குகிறார் சார்லஸ். அவரது வருகை எம்மாவிற்கு சந்தோஷத்தை உருவாக்குகிறது. அவள் மருத்துவருடன் நட்பாக பழகுகிறாள். சார்லஸ் பவாரி ஏதோ ஒரு காரணத்தால் அடிக்கடி அந்த பண்ணை வீட்டிற்கு செல்கிறார் என்று அவரது மனைவி சந்தேகபட்டு அங்கே போக கூடாது என்று தடுக்கிறாள். வேறு வழியில்லாமல் அந்த வீட்டிற்கு போவதை நிறுத்தி கொள்கிறார் சார்லஸ்.

சில நாட்களுக்கு பிறகு சார்லஸின் மனைவி தனக்கு அதிக சொத்து இருப்பதாக சொன்னது பொய் என்று தெரியவருகிறது. அந்த ஏமாற்றத்தை சார்லஸின் தாயால் தாங்கி கொள்ள முடியவில்லை. மருமகளுக்கும் மாமியாருக்கும் சண்டை நடக்கிறது. இதனால் சார்லஸ் பவாரியின் மனைவி நோயுறுகிறாள். சில வாரங்களில் அவள் இறந்தும் விடுகிறாள். இப்போது சார்லஸ் எம்மாவை தனது இரண்டாவது மனைவியாக தேர்வு செய்கிறார். அவர்களது திருமணம் நடக்கிறது. எம்மா சார்லஸின் வீட்டிற்கு வந்து சேர்கிறாள்

ஆனால் திருமணவாழ்வு அவளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவேயிருக்கிறது. அவள் புத்தகங்களில் வாசித்து கற்பனை செய்து வைத்திருந்ததிற்கும் நிஜமான திருமண வாழ்விற்கும் கொஞ்சமும் தொடர்பில்லாமல் இருப்பதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. அத்தோடு எந்த ரசனையும் இல்லாமல் சார்லஸ் பவாரி தனது மருத்துவமனயை மட்டுமே கவனித்து கொண்டிருப்பது அவளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.

தனது பகல்நேர வெறுமையை போக்கி கொள்ள அவள் வீட்டை சுத்தம் செய்கிறாள். பழைய பொருட்களை துசி தட்டி வைக்கிறாள். திரைச்சீலைகளை மாற்றுகிறாள். தனக்கு தானே பேசிக் கொள்கிறாள். ஆனாலும் அவள் மனது வெறுமையில் உழன்று கொண்டேயிருக்கிறது. திருமண வாழ்வு காதலும் சாகசமும் நிரம்பியது. அதில் எண்ணிக்கையற்ற ரகசிய விஷயங்கள் நிரம்பியிருக்கின்றன என்று நினைத்திருந்தவளுக்கு இப்படி வீட்டில் அடைபட்டு கிடப்பது வேதனை தருவதாக மாறுகிறது.

அவள் தான் போர்டிங் பள்ளியில் படித்த நாட்களை நினைவுபடுத்தி பார்க்கிறாள். அங்கே அவள் பூத்தையல் வேலை செய்யவும் பியானோ வாசிக்கவும் திறமையாக கற்று கொண்டிருக்கிறாள். அதைவிடவும் நிறைய காதல் கதைகளை வாசித்திருந்தாள். அந்த கதைகளில் காதலர்கள் ஒருவரோடு ஒருவர் மனதாலும் உடலாலும் கொண்ட ஈர்ப்பு போல தங்களது வாழ்வு அமையவில்லை என்பது அவளுக்குத் தெளிவாக புரிய துவங்குகிறது.

ஒரு நாள் சார்லஸ் பவாரி அவளை ஒரு நடன விருந்திற்கு அழைத்து செல்கிறார். தான் இது வரை கனவு கண்ட உலகம் அங்கே கண்முன்னே விரிந்திருப்பதை எம்மா உணர துவங்குகிறாள். நடனம், கேளிக்கை, உல்லாசம் என ஒரு மாயஉலகம் இதுவரை தனது கண்ணிலிருந்து மறைந்திருக்கிறது என்று அவளுக்கு புரிகிறது. அதை நோக்கி செல்ல வேண்டும் என்ற வேட்கை கொள்கிறாள். ஆனால் அதற்கான வழியில்லாமல் தடுமாறுகிறாள். அந்த நாட்களில் எம்மா கர்ப்பிணியாகிறாள்.

குழந்தை பிறந்தால் தனது வாழ்க்கை மாறிவிடும் என்ற புதுகற்பனை அவளுக்குள் உருவாகிறது. அவளது விருப்பத்திற்கு இணைந்து சார்லஸ் பவாரி வேறு ஊருக்கு மாறி செல்லலாம் என்று ஒத்துக் கொள்கிறான். அவர்கள் யான்வில்லா என்ற சிறிய நகரை நோக்கி செல்கிறார்கள்.

யான்வில்லாவில் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அவளோ தனக்கு ஆண்குழந்தை பிறக்கும் என்று கனவு கொண்டிருந்தாள். ஆனால் பெண் பிறக்கவே அந்த ஏமாற்றம் அவளை அதிகம் மனவெறுமை கொள்ள செய்கிறது. சதா தனிமையால் பீடிக்கபட்டவளாகிறாள். அப்போது ஒரு நண்பரின் வீட்டில் லியோன் டுபியஸ் என்ற இளைஞனை சந்திக்கிறாள். அவன் ஒரு வழக்கறிஞரின் உதவியாளராக வேலை செய்கிறான்.

முதல் சந்திப்பிலே மேற்கத்திய இசை மற்றும் பிடித்த புத்தகங்கள் பற்றி அவன் பேச துவங்கியது எம்மாவிற்கு பிடித்து போய்விடவே அவன் மீது காதல் கொண்டுவிடுகிறாள் அவனும் எம்மாவின் அழகில் மயங்கி காதலிக்கிறான். இருவரும் ரகசியமாக சந்தித்து கொள்கிறார்கள். ஆனால் சில மாதங்களில் அவன் எம்மாவின் மீது கொண்டிருந்த மோகம் தீர்ந்தபிறகு அவளை விட்டுவிலகி பாரீஸிற்கு சட்டம் படிக்க சென்றுவிடுகிறான். இது அவளை திரும்பவும் நோய்மை கொள்ள செய்கிறது.

அந்த நாட்களில் ருடால்ப் என்ற பிரபுவை அவள் விழாவில் சந்திக்கிறாள். அவன் பெண்களை வசியம் செய்வதில் கில்லாடி. எளிதாக அவன் எம்மாவின் மனதை வசீகரித்து அவனை காதலிக்க செய்கிறான். அந்த காதல் வெறிக்கொண்டது போலாகிறது. அவனோடு வீட்டை விட்டு ஒடிவிட முயற்சிக்கிறாள். ஆனால் அவன் ஒத்துக் கொள்ள மறுக்கவே ஏமாற்றத்தில் எம்மா தற்கொலை முயற்சி செய்கிறாள். ஆனால் பிழைத்து கொள்கிறாள். இனி இந்த நகரிலும் இருக்க முடியாது என்று அவர்கள் பாரீஸிற்கு செல்கிறார்கள்.

அங்கே அவள் திரும்பவும் லியோனை சந்திக்கிறாள். அவனோடு பழக துவங்குகிறாள். இந்த நாட்களில் அவள் தனது உடை மற்றும் ஆடம்பரமான வாழ்விற்காக நிறைய கடன் வாங்குகிறாள். அந்த கடன் சுமை அவளை ஒரு கட்டத்தில் அமுக்கத் துவங்குகிறது. கடனை கட்ட முடியாதநிலை ஏற்படுகிறது. வீடு சொத்து யாவும் ஜப்தி செய்யபட போகும் நிலையில் தனது காதலர்களான லியோன் மற்றும் ருடால்பிடம் உதவி கேட்கிறாள். இருவரும் கை விட்டு விடுகிறார்கள்.

அவமானத்தை சந்திக்க பயந்த எம்மா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுவிடுகிறாள். அவளது மரணத்தின் பிறகு உண்மை அறிந்த சார்லஸ் பவாரி தனது சொத்தை விற்று அவளது கடனை அடைத்துவிட்டு தானும் இறந்து போய்விடுகிறான். எம்மாவின் பெண் குழந்தை வறுமையில் யாருமற்ற அனாதையாக ஒரு காப்பகத்திற்கு அனுப்பபடுவதோடு நாவல் நிறைவு பெறுகிறது

**
நாவல் வாசிப்பில் மிக சுவையான அனுபவம் தரும் மேடம்பவாரி கனவுகள் சிதறடிக்கப்படும் ஒரு பெண்ணின் மனத்துயரையே வெளிப்படுத்துகிறது. மேடம்பவாரி ஏமாற்றபடுவது சார்லஸால் மட்டுமல்ல. அது வரை நாவல்கள் உருவாக்கியிருந்த உலகத்தாலும் தான்.

அவளால் இலக்கியம் உருவாக்கிய வாழ்விற்கும் நிஜமான வாழ்விற்கும் இடையில் சமன் காண முடியவில்லை. அவள் கற்பனையை தனது வாழ்வின் அடித்தளமாக மாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறாள். தேடித்தேடி படித்து கற்பனையாகவே வாழத்துவங்குகிறாள். நாவல்கள் அவளை ஏமாற்றுகின்றன. வாக்கியங்கள் அவளை யதார்த்த உலகிற்குள் பிரவேசிக்க விடாமல் காலை கட்டிக் கொள்கின்றன. வார்த்தைகளை அணைத்து கொண்டு ஏன் வாழ்ந்து விட முடிவதில்லை என்று பிதற்றுகிறாள்.

நாவலில் மெல்லிய வெளிச்சம் போல ஒளிரும் இடங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக அலுப்பும் ஏமாற்றமும் நிறைந்த ஊரை விட்டு வேறு நகரத்திற்கு புறப்படும் நாளில் எம்மா தனது திருமணப்பரிசாக பாதுகாத்து வைத்திருந்த பூங்கொத்தை நெருப்பில் இட்டு எரிக்கின்றாள். அப்போது இந்த பூக்கள் அது மலர்ந்த நாளில் எவ்வளவு வசீகரமாக இருந்தன. இன்று இருப்பது அந்த பூவை நினைவுபடுத்தும் அதன் மங்கிய நிறம் மட்டும் தானே என் வாழ்வும் இது போல உலர்ந்து வாசனையற்று போய்விடுவதை என்னால் சகித்து கொள்ள முடியாது என்று நினைவு கொண்டபடியே ஆவேசத்துடன் பூவை நெருப்பில் போட்டு எரிக்கின்றாள்.

இன்றும் எத்தனையோ வீடுகளில் பாதுகாத்து வைக்கபட்டிருக்கும் கல்யாண மாலைகளுக்கு பின்னால் இது போல மனவெறுமை ஒளிந்திருக்கிறது என்பதை இந்த ஒரு பத்தி முகத்தில் அறைவது போல வெளிப்படுத்துகிறது

அது போலவே தாய்மையடைதல் பற்றியும் பெண் கொண்டிருக்கும் எண்ணங்கள் பெரிதும் கற்பனையானவை. குழந்தை பிறந்தவுடன் உலகம் மாறிவிடும் என்று பெரும்பான்மையான பெண்கள் நினைத்திருக்கிறார்கள். அது வேதனையும் வலியும் நிரம்பிய ஒரு நிகழ்வு என்பதை தவிர வேறில்லை. குழந்தையின் மீது பரிவும் பாசமும் உருவாகிறது ஆனால் வாழ்வு எந்த மாற்றமும் கொள்வதில்லை என்பதை எம்மா உணர்வதும் இத்தகையதே.

பிரவமாகி சில மாதங்களுக்கு பிறகு அவள் லியோனை சந்திக்கும் போது நடக்க முடியாத வலியும் காதல் ஏற்படுத்தும் பிதற்றலுமாக அவனது தோளில் சாய்ந்து கொண்டு தான் காதல்வசப்பட்டிருப்பதாக சொல்லியபடியே அவள் நடக்கும் காட்சியும் நாவலின் அதி உன்னத கணங்கள். ஒவ்வொரு முறை எம்மா தனது காதலர்களுடன் உறவாடி விட்டு வீடு திரும்பும் போது அவளை பின்தொடரும் குருட்டு பிச்சைகாரனும் அவனது பாடலும் நாவலில் இருந்து தனித்து பிரிக்க முடியாத ஊடு இழை.

எம்மாவின் தற்கொலையும் அதை தொடர்ந்து நாவல் செல்லும் உயரங்களும் மிக நுட்பமானவை. எம்மாவின் தற்கொலை அதுவரையான அவளது செயல்களை புரிந்து கொள்ள வைக்கிறது. கடனுக்காக வீட்டில் உள்ள எல்லாவற்றையும் விற்கும் சார்லஸ் தனது மனைவியின் உடமைகள் எதையும் விற்க மறுக்கிறான். அவளது திருமண உடையை, படுக்கையை, பார்த்து பார்த்து மனம் விட்டு புலம்புகிறான். ஒரு நாள் எம்மாவிற்கு காதலர்கள் எழுதியிருந்த கடிதங்களை தற்செயலாக கண்டெடுத்து படித்து பார்க்கிறான். அப்போது கூட எம்மாவின் மீது அவனுக்கு கோபம் வருவதில்லை. மாறாக எம்மாவை தான் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கபடுகிறான்.

இதன் தொடர்ச்சியாக எம்மாவின் காதலர்களில் ஒருவனான லியோன் பணக்கார பெண் ஒருத்தியை திருமணம் செய்வதாக அறிந்து அந்த நற்செய்தி தன் மனைவிக்கு தெரிந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பாள் என்று வாழ்த்து செய்தி அனுப்புகிறான்.

அது போலவே ரூடால்பை ஒரு நாள் சந்தித்து அவனோடு ஒன்றாக மது அருந்தி தனக்கு அவர்கள் காதல் பற்றி தெரியும் என்று சொல்லி இருவரும் அவளது பிரிவிற்காக மனம்வருந்த வேண்டும் என்கிறான். முடிவில் சார்லஸ் பவாரியும் துக்கத்திலிருந்து மீள முடியாமல் இறந்து போகிறான். அவனது சொத்து யாவும் பறிபோய்விடுகிறது

மிஞ்சியிருப்பது மேடம்பவாரியின் மகள் பெர்த் மட்டுமே. தாயின் நிறைவேறாத ஆசைகளையும் துக்கத்தையும் காலம் அவள் மீது சுமத்திவிடுகிறது. அவள் வறுமையின் காரணமாக ஒரு காப்பகத்திற்கு அனுப்படுகிறாள். பவாரியின் கதை காற்றில் கரைந்து போகிறது.

**
குஸ்தாவ் பிளாபெர்டிடம் மேடம்பவாரி நாவல் பற்றி ஒரு விமர்சகர் கேட்ட போது அவர் மேடம்பவாரியில் வரும் எம்மா நான் தான் என்று பதில் சொன்னார். அது உண்மையே. பிளாபெர்டின் சுயசரிதை போல சாயல் கொண்ட இந்த நாவல் அவரது வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை கொண்டிருக்கிறது.

1821ல் பிரான்சின் ருவென் என்ற ஊரில் பிளாபெர்ட் பிறந்தார். இவரது அப்பா ஒரு மருத்துவர். பிளாபெர்டும் சார்லஸ் பவாரியை போல மிக கண்டிப்பான பள்ளியில் படிக்க அனுப்பட்டவர். லியோன் கதாபாத்திரம் போலவே பிளாபெர்டும் சட்டம் பயின்றவர். சிறுவயது முதல் அம்மாவின் நெருக்கத்தில் வளர்ந்தவர். திருமணம் செய்து கொள்ளாமலே கடைசி வரை வாழ்ந்தவர். ஆனால் அவருக்கு நிறைய
பெண்களோடு தொடர்பு இருந்தது.

குறிப்பாக அவரது காலத்தில் புகழ்பெற்றிருந்த கவிஞரான லுயிசா குளோட் என்ற பெண்ணோடு அவருக்கு நெருக்கமான உறவு இருந்தது. மேடம் பவாரி நாவல் எழுதப்படுவதற்கு அவளும் ஒரு காரணமாக இருந்தாள் என்கிறார்கள் விமர்சகர்கள்.

பிளாபெர்ட் இந்த நாவலை ஐந்து வருடகாலம் எழுதினார். தனிமையாகவும் ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்களுக்கு குறைவாகவும் இதை தான் எழுதியதாக ஒரு கடிதத்தில் தெரிவிக்கிறார். இந்த நாவல் எழுதப்படுவதற்கு ஒரு பத்திரிக்கை செய்தி காரணமாக இருந்தது.

டெல்மார் என்ற இளம்பெண் ஒரு மருத்துவரின் மனைவி. அவள் பலரோடும் கொண்டிருந்த கள்ளஉறவின் காரணமாக அளவுக்கு மீறிய கடன் சுமை ஏற்படவே அதிலிருந்து விடுபட வழியின்றி தனது கணவரையும் குழந்தைகளையும் கொலை செய்துவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தி தனது சமகாலத்தைய பகட்டான வாழ்வின் மீதான விமர்சனம் என்று உணர்ந்த பிளாபெர்ட் அதை மனதில் கொண்டே மேடம்பவாரி நாவலை எழுதியிருக்கிறார். அது போலவே பிளாபெர்டின் பெண்தோழிகளில் ஒருத்தியாக இருந்த ஜார்ஜ் சாந்த் என்ற பெண்எழுத்தாளரின் நாவல் ஒன்றில் வரும் அன்டோனியா என்ற கதாபாத்திரத்தின் பாதிப்பில் மேடம் பவாரி எழுதப்பட்டதாகவும் விமர்சகர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

பிளாபெர்ட் இந்த நாவலை ரிவே என்ற இதழில் தொடர்கதையாக வெளியிட்டார். நாவல் புத்தகமாக வெளியான போது அது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கிறது ஆகவே அதை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் கலாச்சார காவலர்கள் வழக்கு தொடுத்தார்கள். இதற்காக ஒரு சிறப்பு நீதி விசாரணை குழு அமைக்கபட்டது. இதே காலகட்டத்தில் பிரெஞ்ச் கவிஞரான பூதலேர் எழுதிய தீவினையின் பூக்கள் என்ற கவிதை தொகுப்பு மிக ஆபாசமானது என்று அவர் நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டு அபராதம் விதிக்கபட்டார். ஆகவே இந்த நாவலும் தடை செய்யப்பட்டு விடும் என்று மதவாதிகள் நம்பினார்கள்.

பிளாபெர்ட், அவரது பதிப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளர் மூவரும் குற்றவாளிகளாக அறிவிக்கபட்டார்கள். விசாரணயின் போது நீதிமன்றத்தில் இந்த நாவலின் சில பகுதிகளை வாசித்து காட்டுவது கூட அவமானமானது என்று வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் குற்றம் நிரூபிக்கபடவில்லை என்று நீதிமன்றம் இந்த நாவலின் மீதான தடையை நீக்கியது. அதன்பிறகு மேடம்பவாரி வெளியாகி பரவலான வாசகர்களின் கவனத்தை பெற்றது.

பிளாபெர்ட் தனது காலத்தைய முக்கிய படைப்பாளிகள் பலரோடும் நேரடியான உறவு கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் பட்டியல் மிகவும் பெரியது. அதில் துர்கனேவ் துவங்கி பூதலேர் வரை பலரும் இடம் பெற்றிருந்தார்கள். இந்த நாவல் அடைந்த வெற்றி பிளாபெர்ட்டிற்கு பிரெஞ்ச் இலக்கியத்தில் தனியிடத்தை உருவாக்கி தந்தது. எபிலெப்சி என்ற நரம்பியல் நோயால் பாதிக்கபட்ட பிளாபெர்ட் 1880 ஆண்டு காலமானார்.

மேடம் பவாரி பலமுறை படமாக்கட்ட போதும் இதன் மூன்று திரை வடிவங்கள் மிக முக்கியமானவை. ஒன்று 1949ல் ஜெனிபர் ஜோன்ஸ் கதாநாயகியாக நடித்து வின்சென்ட் மின்னலி இயக்கிய மேடம் பவாரி. இப்படம் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் உடை அலங்காரத்திற்காக சிறப்பாக பேசப்பட்டது. அது போலவே ழான் ரெனார் இயக்கி 1933ல் வெளியான மேடம்பவாரி. இதன் பிறகு 1991ல் பிரபல பிரெஞ்சு இயக்குனரான கிளாடே சார்போல் இயக்கி இசபெல் ஹெபெர்ட் நடித்த மேடம்பவாரி திரைப்படம் பிளாபெர்டின் நாவலுக்கு மிக நெருக்கமாகயிருந்தது. இந்தியாவிலும் சேகர் கபூர் மாயாமேம்சாப் என்ற பெயரில் மேடம் பவாரியை திரைப்படமாக்கியிருக்கிறார்.

**

நுற்றாண்டை கடந்து வந்த செவ்வியல் நாவல் என்று மட்டுமில்லாது இன்றைய வாழ்வின் அகசிக்கல்களுக்கும் மிக நெருக்கமாக இருக்கிறது மேடம் பவாரி. அவ்வகையில் இந்த நாவல் திரும்பத் திரும்ப வாசிக்கவும் கொண்டாடவும் வேண்டிய பிரதியாகவே
இருக்கிறது

நன்றி: http://www.sramakrishnan.com/madam_bhavari.asp


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்